RSS

Category Archives: ‘மேலும்’சிவசு நிகழ்வுகள்

வண்ணதாசனும் வாசக தாசன்களும்

அசின் சார், கழுகுமலை.

எழுத்தாளர் வண்ணதாசன்

ரு பள்ளியின் வகுப்பறைக்குள் அமர்ந்திருக்கும் குழந்தை – அந்த வகுப்பின் நீட்சி, ஆசிரியருக்குத் தர வேண்டிய பணிவு, கவனிக்க வேண்டிய பாடம், உடுத்தும் உடை, சிகை அலங்காரம், அமர வேண்டிய விதம், சக நண்பர்களிடம் பேசுவதிலும் சிரிப்பதிலும் உள்ள கட்டுப்பாடு – இப்படி அந்தப் பள்ளி நிர்ணயித்திருக்கும் அத்தனை விதிகளுக்குள்ளும் தன்னைத் திணித்துக் கொண்டு, சிறிதும் துருத்திக் கொண்டு விடாமல், அக்குழந்தை மிகுந்த சிரத்தையுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்!

அப்படியொரு குழந்தை, ஒரு கணப்பொழுது வகுப்பறை ஜன்னலுக்கு வெளியே தெரியும் செடிகளுக்கிடையே சிறகடித்துத் திரியும் சின்னச்சிறு வண்ணத்துப் பூச்சியைப் பார்க்கும் போது, தன்னை இறுகக் கட்டியிருக்கும் அத்தனை நிர்மாணங்களும் ஒரு நொடிப் பொழுதில் நீர்த்துப் போனது போல உணர்ந்து மகிழும். அப்படியொரு நிகழ்வை அண்மையில் பார்த்தேன்.

சென்ற ஆகஸ்ட் 22-ஆம் தேதி எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் எழுபதாவது பிறந்த தினம். அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக அவரியற்றிய சிறுகதைகளை “வாசிக்கலாம் வாங்க” என்றோர் நிகழ்வாக, பேரா.சிவசு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். பாளை தூய சவேரியார் கல்லூரியில் உள்ள கௌசானல் அரங்கில் விழா. “மேலும்” நடத்தும் மாலை நிகழ்வுகள் பொதுவாக மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு முடிந்துவிடும். இதுதான் எப்போதும் உள்ள திட்ட வரைவு. இந்த நிகழ்வின் முதன்மை விருந்தாளி வண்ணதாசன் அவர்கள். வந்திருந்தார்.

அவருடைய சிறுகதைகளில் ஐந்தினை மட்டும் அவர் முன்னிலையில் வாசக தாசன்களாக ஐந்து பேர் விமர்சனப் பார்வையுடன் பகிர்ந்து கொண்டனர். அதில், வாசகனுக்குரிய வினாக்களும் இருந்தன. இறுதி நாற்பது நிமிடங்கள் வண்ணதாசனுக்குரிய நேரம். எப்பொழுதுமே சுதந்திர வெளியில் பிரவேசித்து, படைப்புகளைச் சுதந்திரமாகப் பிரசவிக்கும் ஒரு படைப்பாளியான அவர், கட்டமைக்கப்பட்ட இந்நிகழ்வுக்குள் வரும்போது அவருக்கு ஏற்பட்ட மன ஏக்கங்களை என்னால் காண முடிந்தது. இந்நிகழ்வுக்குள் நின்று கொண்டு தன் படைப்புகள் குறித்த வெளிகளுக்குச் செல்லும் போதெல்லாம், வண்ணதாசன் அவர்களின் மனம் ஜன்னலுக்கு வெளியே வண்ணத்துப் பூச்சியைப் பின்தொடரும் குழந்தையின் மனமொத்தது போலவே உணர்ந்தேன்.

இந்நிகழ்வில் அவர் ஆற்றிய வெளிப்படையான பேச்சு, ஒரு படைப்பாளியின் உள்ளார்ந்த மனதை அறிய வாய்ப்பாக இருந்தது. என்னுடைய குறிப்புப் பதிவுகளிலிருந்து அவருடைய உரையைக் கூடியவரை சிதையாமல் தர முயற்சித்திருக்கிறேன். நீங்கள் இதை வாசிக்க வாசிக்க அவரை சுவாசிக்கலாம். இனி, அன்னாரின் உரை:

“இப்படியொரு பிறந்தநாள், இப்படியொரு மாலை. எல்லாம் பொதுவாக ஒரு கலைஞனுக்குத்தான் கிடைக்கும். அல்லது ஓர் ஓவியனுக்குத்தான் கிடைக்கும். அல்லது என்னைப் போன்ற ஒரு படைப்பாளிக்குத்தான் கிடைக்கும். ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தையே மாறுவேடம் இட்டதுபோல “கதை வாசிக்கலாம் வாங்க” என்று ஒரு நிகழ்வாக நடத்திக் கொண்டிருக்கும் “மேலும்” அமைப்பிற்கு நன்றி.

நீங்கள் ஐந்து கதைகளைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். தலா 15 நிமிடமாக 1.15 மணிநேரம் ஆகி இருக்கிறது. ஆனால், கதை எழுதிய படைப்பாளிக்கு நாற்பது நிமிடங்கள் கொடுத்திருக்கிறீர்கள். என் சிறகுகளை நீங்கள் கத்தரிக்கவில்லையா? அல்லது என்னுடைய சிறகுகளை ஒடுக்கி இதற்குள் உட்கார் என்கிறீர்களா? நான் இந்தக் கதைகளைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டுமா? கதைகளுக்கு வெளியே நான் செல்லக் கூடாதா? நான் நிறைய என்னைத் திரட்டிக் கொண்டு வந்துவிட்டேன். என் சிறகுகளை நானே கத்தரிப்பது போல என் அழகான தயாரிப்புகளை விட்டுவிட்டு சிலவற்றை மட்டும் பேசலாம் என்று நினைக்கிறேன். எட்டு மணிக்கு இந்த அரங்கின் கதவுகள் பூட்டப்படும் என்றார் சிவசு ஐயா. அறையைப் பூட்டிவிடலாம். ஒரு படைப்பாளியின் திறந்த மனதை எவ்வாறு பூட்ட முடியும். நான் எவ்வாறு என் கதவுகளைப் பூட்டிக் கொள்வேன். அலாரம் வைத்தது போல் கூறினால் ஒரு படைப்பாளி எவ்வாறு பூட்டுவான். ஆனால், கீழ்ப்படிகிறேன் பேராசிரியருக்கு. 7.59-க்கு என்னுடைய உரையை முடிக்கிறேன்.

இந்த வளாகத்தில் நான் பயின்றவனில்லை. ஆனால், இந்த வளாகத்தில் அழகிய கனவுகள் உண்டு. ஒரு சமயம் ஓர் அமைப்பு சார்பான பரிசளிப்பு விழாவிற்கு இங்கு வந்திருந்தேன். வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசளிப்பவனாய் நான் அழைக்கப்பட்டிருந்தேன். உங்களுக்குத்தான் தெரியுமே! ஒரேயொரு நற்சான்றிதழுக்காக இந்தச் சிறுவர்களெல்லாம் மூன்று மணிநேரம் காத்திருப்பார்கள். முதற் பேச்சாளரிலிருந்து சிறப்புப் பேச்சாளர் வரை எல்லாரும் பேசி முடித்தபின்தான், அந்தச் சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படும். அன்றும் இது நிகழ்ந்தது.

ஒரு சிறுவன் தனக்கான நற்சான்றிதழை வாங்கி முடித்தவுடன் அவசர அவசரமாக கால் சட்டைப் பித்தான்களைக் கழற்றிக் கொண்டு ஓடுகிறான். நான் கிளம்புவதற்காக சைக்கிள் நிறுத்தமருகே நிற்கிறேன். என் பக்கத்தில் அமர்கிறான். அவ்விடத்தில் பன்னீர் மரம் இருக்கிறது. அந்த மரத்தடியிலே பன்னீர்ப் பூக்கள் சொரிந்து கிடக்கின்றன. அது பன்னீர்ப் பூக்கள் உதிர்கிற இடம் என்று அவனுக்குத் தெரிகிறது. அந்த இடத்தை; அந்தத் தரையை ஈரப்படுத்த மனமின்றி, உடனடியாக இன்னொரு இருட்டைத் தேடிச் சென்றான். அன்பர்களே! அந்தச் சிறுவனுக்கு அந்தப் பன்னீர்ப் பூக்களை ஈரப்படுத்தக் கூடாது என்ற அழகியல் இருக்கிறதே, அந்த அழகியல்தான் என்னிடம் இருக்கிறது. அந்த அழகியலோடுதான் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

என் கதைகளைப் பற்றிப் பேசும்போது, சட்டங்கள் பற்றி, கோட்பாடுகள் பற்றி, வெளியைப் பற்றி அவரவர் கோணத்தில் பார்த்தனர். நான் அந்தக் கோணத்தில் பேசப் போவதில்லை. ஏனெனில், அவை என்னுடைய வெளி அல்ல. நான் கதை எழுதுகிறவன். என் கதைகளைப் பற்றி உங்களோடும்; என் கதைகளைப் பற்றி நீங்கள் சொல்வதையும் வாங்கிக் கொள்ளவும்தான் வந்திருக்கிறேன்.

என்னுடைய கதைகளைப் பத்திரிகையாளர்கள் எடிட் செய்ய நான் விடுவதில்லை. ஆனால், என்னை நானே எடிட் செய்யக் கூடிய மிகவும் நுட்பமான இடத்தில் இந்தக் கூட்டம் என்னை நிறுத்தி இருக்கிறது. இன்று பேராசிரியர் அவர்கள் அழைத்துச் செல்கிற தளத்திலேயே என்னுடைய பேச்சை நான் நிரப்பலாம் என்று நினைக்கிறேன் – கதை கதையாக!

பொதுவாகவே திரும்பிப் பார்ப்பது பிடிக்காது. நீங்கள் திரும்பிப் பார்ப்பதுகூட எனக்குப் பிடிக்காது. ஏனென்றால், நாம் முன்னால் பார்க்க வேண்டியவர்கள். ஒரு படைப்பாளி அவனுடைய படைப்பு சார்ந்த கூட்டத்திற்காக தன்னுடைய கதைகளைத் திரும்பிப் பார்ப்பது என்பது ஒரு வலி நிறைந்ததாகவே இருக்கும். நான் எழுபது வயது வரைத் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. கழுத்து வலிக்காது. ஆனால், மனம் வலிக்காதா? ஒரு மாலைக்குள் என் எழுபது வயது வரை உள்ள எழுத்துக்களைத் திரும்பிப் பார்க்க முடியுமா? ஆனாலும், திரும்பிப் பார்க்கிறேன்.

பேரா.சிவசு அவர்கள்

முதலில் சிவசு ஐயா பேசின “சுவர்” கதை பற்றி.

சுவர் கதையில் நான் யாராக இருக்கிறேன் என்று கேட்டார்கள். நாராயணனாக, சில சமயம் கணேசனாக, பெரும்பாலும் நான் சுந்தரனாக இருப்பேன். இந்தக் கதையில் நீலா – நாராயணன் இடையே நுட்பமான விஷயத்தை நான் அதிகம் பேசியிருக்கிறேன். எல்லாம் சுவர்களுக்கிடையேதான் நிகழ்கின்றன. பழுப்படைந்த அடுக்களை சுவர்களுக்கு மத்தியில்தான். ஆனால், இப்போது நாம் நம் காரை வீடுகளை எல்லாம் இழந்து விட்டோம்.

நான் இந்தக் கதையில் எழுதிய அடுப்படி சுவர்களை எல்லாம் இழந்து விட்டோம். காணாமல் போன காரை வீடுகள், பழுப்பு சுவர்கள், வெள்ளையடிப்புக்கு முதல் நாள் சடங்குகள் இவற்றையெல்லாம்விட, நம்மிடையே இருந்த நாராயணனை இழந்து விட்டோம். பரங்குகளை ஒதுங்க வைக்கும் போது நிச்சயம் நீங்களும் பார்த்திருப்பீர்கள். வெள்ளை நிறத்தில் கண் விழிக்காத மெல்லிய தோலுள்ள எலிக்குஞ்சுகளை நாம் இழந்து விட்டோம்.

கவிதையைப் போலவே கடைசி அடி கதைக்கும் முக்கியம்தான். மிகத் துல்லியமாகக் கடைசி வரி எழுதுபவனாக படைப்பாளி இருக்கிறான். இந்தக் கதை இப்படி முடியும்.

“கண்டிப்பாக வந்துவிடுவதாக அப்பாவிடம் நாராயணன் சொல்லிவிட்டுப் போனான்”

இதற்கு அவன் வரவில்லை என்றுதான் அர்த்தம்.

நாறும்பூநாதன்

நாறும்பூநாதன் அவர்கள் விமர்சனம் செய்த “நிலை”க் கதை.

என்னுடைய கதைகளில் அதிகம் பேசப்பட்டதும், அதிகம்  மொழிபெயர்க்கப்பட்டதும் இதுதான். இந்தக் கதையை அதிகம் பேச வைத்தவர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள். அவர் இந்தக் கதையைப் போகிற இடமெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவருக்கு அப்படியொரு நல்ல பழக்கம். அவர் அப்படி சொல்லியிருக்கிற இடங்களில் எல்லாம் நம் நெல்லையப்பர் ஆனித் தேர்த் திருவிழா நடந்து கொண்டிருந்தது. தேரும் ஓடிக்கொண்டிருந்தது.

இக்கதையில் கோமு என்கிற வேலைக்காரச் சிறுமி தேர்ப் பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். “நீ தேர்ப் பார்க்கலையா? ஐயோ பாவம். நீயும் பச்சப் பிள்ளைதானே போகணும் வரணும்னு தோணத்தானே செய்யும். போயிட்டு வா, போய்ப் பார்த்துட்டு வா” என்று ஆச்சி சொல்லிக் கொண்டேதான் இருந்தாள். கோமு பொரிகடலையும் தேங்காயும் வாங்கின கையுடன் தேரையே பார்த்து கொண்டு நின்றாள்.

“தேர் நிலையத்துக்குள் இருந்து கோமுவையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது.” என்று நான் நிலைக் கதையின் கடைசி வரியை எழுதினேன்.

“நிலை” என்பது தேரின் நிலை மட்டுமல்ல; கோமு போன்ற சிறுமிகளின் நிலையும்தான்.

நான் அந்தக் கோமுவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தேன். படைப்பாளி அவன் படைப்பில் உள்ள ஒரு சிறுமியை இப்போது பார்ப்பது எத்தனை அற்புதமானது. “என்னய்யா நல்லாருக்கியளா?” என்கிற கோமுவை நான் பார்க்க முடிந்தது. நண்பர்களே ஒரு படைப்பாளிக்கு இப்படி முப்பது நாற்பது வாசகர்களைப் பார்ப்பது எவ்வளவு சந்தோசமாகத் தெரிகிறதோ அதே போலத்தான், தன் படைப்பில் நடமாடிய ஒரு கதாபாத்திரத்தைப் பார்ப்பதும். இந்த அபூர்வங்களை எல்லாம் நான் அடைந்து கொண்டிருக்கிறேன்.

இப்போது கோமு எந்தத் தெருவில் இருக்கிறாள்? என்று கேட்டார். இப்போதும் கோமு எல்லாத் தெருவிலும்தான் இருக்கிறாள். தேரில் நான்கு குதிரைகள் இருக்கும்போது, கோமு ஏன் வெள்ளைக் குதிரையைத் தேர்ந்தெடுத்தாள்? என்றார். எனக்கும் தெரியாது. ஆனால், பூடகமாக ஒன்று சொல்கிறாள். கோமு சுடச்சுட சோறு சாப்பிடுகிறவள் அல்லள். அவள் பழைய சோறு மட்டுமே சாப்பிட்டு இருப்பவள். பழைய சோறு வெள்ளையாகத்தானே இருக்கும். அல்லது இப்படியும் சொல்வேன். அவள் இரவில் வானவில் கனவு கண்டால், பழைய சோற்றைப் போல வெள்ளை வானவில்லைத்தான் அவள் கண்டிருப்பாள். நம்முடைய கோமுவுக்கு எல்லாம் வெள்ளை வானவில்லை மட்டும்தான் நம்முடைய வாழ்க்கை அனுமதிக்கிறது.

பேரா.சௌந்தர மகாதேவன்

பேரா.சௌந்தர மகாதேவன் அவர்கள் “கூறல்” கதையை ஆய்வு செய்தார்.

படைப்பாளிக்குப் பிடித்த கதை வாசகனுக்குப் போய்ச் சேர்ந்ததா என்பது தெரிவதே இல்லை. எனக்குச் சில கதைகள் பிடித்திருக்கும். அதைப் பற்றி நீங்கள் பேசுவதே இல்லை. அப்படிப் பேசப்படாத கதைகள் நிறைய இருக்கின்றன. அதிலொரு கதைதான் இந்தக் “கூறல்” கதை.

நான் கதையை இப்படித்தான் துவங்கி இருக்கிறேன்.

“ஒரு துண்டு தோசை வாயில் இருக்கிற நிலையிலே தாத்தா அழுவதைப் பார்த்துச் சகித்துக் கொள்ள முடியவில்லை.”

நண்பர்களே! நீங்கள் முதியவர்கள் சிரிப்பதைப் பார்க்கலாம். குழந்தையைப் போல சிரிப்பார்கள். நாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அழுவதை நாம் பார்த்து சகிக்கவே முடியாது. அந்த முகம் கிழிந்து தொங்கும். ஒரு முதியவன் அழும் போது, ஒரு பெரிய நாடகமேடையின் திரைச்சீலை எரிந்து கிழிந்து சாம்பலாவதைப் போல அவனது முகம் கிழிந்து தொங்கும். என் அம்மாவினுடைய தாத்தாவின் அழுகையை அவருடைய கடைசி பருவத்திலே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல, என் குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த முதுமையில் அவருக்கு கேட்கிற திறனும் கிடையாது; பார்க்கிற திறனும் கிடையாது. நான் வந்திருக்கிறேன் என்றால் அவர் உள்ளங்கையில் எழுதுவேன். உடனே அடையாளம் காண்பார். கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டுதான் சாப்பிடுவார்.

முதியவர்கள் தொடுகைக்கு ஏங்குகிறார்கள். அவர் படுத்திருக்கிற அறையிலிருந்து தோளைப் பிடித்து, சுவரோடு சுவராக கைத்தாங்கலாக நடத்திக் கூட்டிவந்து அவர் முகச்சவரம் செய்கிற நாற்காலியில் உட்கார்கிற வரை என்னுடைய தாத்தாவும் கிருஷ்ணனும் கை நெருக்கமான தோழர்களாக இருந்தனர். எனக்குத் திரைப்பட ஊடகம் பிடிபட்டிருக்குமானால், நான் இந்தக் காட்சியை ஒரு பெங்காலியப் படம் போல எடுத்திருக்க முடியும். அந்த அளவுக்கு இந்தக் காட்சி சுகமானது.

நான் இந்தக் கதையில் என்னவாக இருந்தேன் என்று மகாதேவன் கேட்டார். எழுதுகிறவனைப் பார்த்துதான் எத்தனை கேள்விகள்? எதெற்கெல்லாம் பதில் சொல்வான்? என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கூறல் கதையிலே எழுதுகிறவன் யாராக இருப்பான்? எழுதுகிறவன் அந்தத் தாத்தாவாக இருப்பான். சரி! எழுதுகிறவன் தாத்தாவாக இருப்பானா? இல்லை. எழுதுகிறவன் கிருஷ்ணனாகவும் இருப்பான். எழுதுகிறவன் கிருஷ்ணனாக இருந்து தாத்தாவோடு வருவான்; எழுதுகிறவன் தாத்தாவாக இருந்து கிருஷ்ணனோடு வருவான். எழுதுகிறவன் தாத்தாவாக இருந்து கிருஷ்ணனைத் தொடும் போது; அல்லது கிருஷ்ணனாக இருந்து தாத்தாவைத் தொடும் போது அவன் கூறனாக இருப்பான்.

தட்சிணாமூர்த்தி அவர்கள்

அடுத்ததாக, தட்சிணாமூர்த்தி அவர்கள் விமர்சித்த “அப்பாவைக் கொன்றவன்” கதை.

இந்தக் கதை ஒரு முக்கியமான கதை. அப்பாவைக் கொன்றவன் என்கிற மலையாளத்திலுள்ள ஒற்றைக் கவிதை வரியைக் கொண்டு இந்தக் கதையை நான் திட்டமிட்டுக் கொண்டேன். ஒரு சொல் அல்லது ஒரு வரி போதும் நீங்கள் நல்ல படைப்பை எழுதுவதற்கு. அப்போது நெல்லை மாவட்டத்தில் சாதிக் கலவரங்கள் நிறைய இருந்த காலம். இக்கதையில் அப்பாவைக் கொன்றவன் சிவனுப் பாண்டி. அவன் கனிந்து விடுகிறான். மனிதன் கனிந்து கொண்டிருக்கிறான் என்கிற செய்தியைக் கொண்ட இக்கதை விகடன் வாசகர்களிடம் மிகப்பெரிய நெருக்கத்தை உண்டாக்கியது.

ரமேஷ்

இறுதியாக, ரமேஷ் அவர்கள், “தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்” எனும் சிறுகதையை ஆய்வு செய்து பேசினார்.

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள். இதில் வெளியிலும் என்பதிலுள்ள “உம்”தான் இந்தக் கதை. தோட்டத்திற்கு வெளியிலும் இருக்கிற பூவாக இந்தக் கதையில் ரிட்டையர்டு ஏட்டையாவைக் கூறுவேன். என் கதையில் உள்ள மனிதர்கள் எல்லாம் என் உடன் பயணிகளாக இருந்தவர்கள்தான்; என் தோளைத் தொட்டவர்கள்தான்; என் அருகில் இருந்து உண்டவர்கள்தான்; என்னைக் காதலித்தவர்கள்தான். இந்தக் கதையில் காதில் சிவப்புத் தோடு அணித்து வரும் ஏட்டையாவும் அப்படிப்பட்டவர்தான்.

குழந்தை அழுகிறது.

பக்கத்தில் இருந்த அவர், குழந்தையை மடியில் வாங்கிக் கொள்கிறார். “எங்க அம்மை அழக்கூடாது, எங்கம்மை சிரிப்பா, எங்கம்மை சோறு பொங்குவா, எங்கம்மை ‘ஆ’ கொடுப்பா, எங்க அம்மையில்லா, எங்க அம்மையில்லா” என்று அவர் சொல்வார்.

இந்த “அம்மையில்லா” என்ற சொல்தான், இந்தக் கதையை எழுத வைத்தது. இன்றுவரை எந்தவொரு பெண் குழந்தையை என் மடியில் வைக்கிறோனோ, அப்போதெல்லாம் இந்த “அம்மையில்லா” என்ற சொல்லைச் சொல்லாத கணமே கிடையாது.

அப்படி நான் சொல்லும் போது, தோட்டத்திற்கு உள்ளே மட்டுமா பூத்திருக்கும்? ஊரெல்லாம் பூத்திருக்கும். அப்படிப் பூத்த ஒரு பூதான் “தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்”

நேரம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். கூட்டத்தின் தொடக்கத்தில் மகாதேவன் வாசித்த என்னுடைய கவிதையை மீண்டுமொருமுறை நான் வாசித்து நிறைவு செய்கிறேன்.

             “ஒரு நொடி கூட ஆகாது

              என் மணிக்கட்டில் ஊரும் பூச்சியைச்

              சுலபமாகக் கொன்றுவிடலாம்

              கொல்லும் அந்த ஒரு நொடியற்ற

              காலத்துடன் அல்லவா

             ஓடிக்கொண்டு இருக்கிறது என் கடிகாரம்

              கருணையின் பாடலைப் பாடி அல்லவா

              குதித்துக் குதித்துச் செல்கிறது

              அந்த மூன்றாவது முள்.”

எழுத்தாளர் வண்ணதாசன்

நண்பர்களே!

குதித்துக் குதித்துச் செல்லும் மூன்றாவது முள்ளாகத்தான் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். நன்றி.”

விழா சரியாக இரவு எட்டு மணிக்கு முடிந்தது. கிட்டத்தட்ட நாற்பது பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். கல்விப் புலத்தைச் சார்ந்தவர்கள் அதிகம் வந்ததாகத் தெரியவில்லை. நான் படித்த கல்லூரி என்பதால் எனக்குப் பரிட்சயமான யாரேனும் வந்திருப்பர் என்று விழா நிறைவின் போது துலாவிப் பார்த்தேன். ஒருவரும் இல்லை. இருந்தாலும், இந்நிகழ்வு குறித்து முகநூலில் பார்த்து பொள்ளாச்சியிலிருந்து வந்ததாக ஒருவர் கூறினார். மகிழ்ச்சியாய் இருந்தது. அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அரங்கின் வெளியே வந்தேன்.

ஒரே கும்மிருட்டு.

கொஞ்சம் தள்ளி மிதமான வெளிச்சத்தைக் கக்கிக்கொண்டு வரிசையாக நின்றிருந்தன விளக்குக் கம்பங்கள். அவைகளைப் பார்த்துதான் பாதையின் போக்கைத் தெரிந்து கொண்டேன். அதன் வழியாக மெயின் கேட்டிற்குச் செல்ல அவ்வளாகத்தில் தனியாக நடையைக் கட்டினேன்.

நாராயணன், கணேசன், நீலா, சுந்தரன், கோமு, தாத்தா, கிருஷ்ணன், சிவனுப் பாண்டி, ரிட்டையர்டு ஏட்டையா என்று பலரும் என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

* * *

Advertisements