RSS

Category Archives: நோக்கு

மெய்ப் பொருள் காண்பதறிவு

கலை செய்யும் கலகம்

அசின் சார், கழுகுமலை.

கலை செய்யும் கலகம்

ள்ளிக்கூட நாட்களில் எனக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார் ஒருவர் சொன்ன நிகழ்வொன்றை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

“உலக வரைபடத்தில் குட்டி நாடாக இருக்கும் ஜப்பான், உழைப்பில் முன்னோடியாக இருக்கிறது. ஏனென்றால், அங்குள்ள மக்கள் ஏதாவது போராட்டம் செய்தால் கூட, தங்களின் உழைப்பை முடக்கிப் போராடுவதில்லை. மாறாக, தங்கள் கோரிக்கைகளை, கண்டனத்தைத் தெரிவிக்கக் கருப்பு நிற பேட்ஜ் ஒன்றினைத் தம் சட்டையில் அணிந்து கொண்டு, தங்களுக்குரிய அன்றாட வேலைகளைத் தொய்வின்றி செய்வார்கள். இதனால் அவர்களின் உழைப்பும், தொழிற்சாலையின் உற்பத்தியும் வீணாவதில்லை.

இன்னோர் விதமாகவும் அவர்கள் தங்கள் போராட்டத்தைக் கையில் எடுப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்திப் போராடும் போது, ஏதாவது ஒரு காலுக்குரிய ஷூவை மட்டும் தயாரித்து உற்பத்தியைப் பெருக்கி, விற்பனையை முடக்கி விடுவார்கள். இப்படியாக உழைப்பு, உற்பத்தி இரண்டும் தடைபடாமல், காலத்தை வீணடிக்காமல், தங்களுக்குரிய போராட்டக் குணத்தை வெளிப்படுத்தும் மக்கள் – ஜப்பானிய மக்கள்! இதனாலேயே ஜப்பான் உழைப்பில் உயர்ந்ததாக இருக்கிறது” என்று கூறினார்.

கலை செய்யும் கலகம்

அந்த நாட்களில், அவ்வப்போது நம் நாட்டிற்குள் எழுந்த பற்பல மோதல்களால், எதற்கெடுத்தாலும் கோஷம், கடையடைப்பு, கல்வீச்சு, கையடி வாயடியால் விளையும் கலகலப்பு, கண்ணீர்ப்புகை, 144 தடை! இதனால், பதறிப் பதறி கூண்டுக்குள் அடைபட்ட புள்ளினம் போல மக்கள் தங்களைத் தாங்களே சொந்த வீட்டிற்குள் சிறைப்படுத்திக் கொள்ளும் அவலம். இப்படிப் பார்த்துப் பழகிய அந்த வயதில் ஆசிரியர் சொன்னது புதுமையாகத் தெரிந்தது.

இதே போல, ஒரு கோரிக்கையை நிறைவேற்ற முடியாத மேலாளர் ஒருவர், அதை எப்படி கோரிக்கையாளரின் மனம் நோகாதவாறு சொல்வது என்பதற்கு ஒரு சான்று.

தமிழக முதல்வராக கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இருந்த சமயம். சட்டமன்றக் கூட்டத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தம் தொகுதியிலுள்ள ஓர் ஊருக்குத் தீயணைப்பு நிலையம் வேண்டுமென்று கோரினார். அதற்குப் பதிலளித்த முதல்வர், “தீயணைப்பு நிலையம் அமைப்பதாக இருந்தால், அங்கு குறிப்பிட்ட அளவு ஜனத்தொகை இருக்க வேண்டும். தாங்கள் குறிப்பிட்ட ஊரில் அந்த அளவு ஜனத்தொகை இல்லை. எனவே, உடனடியாக அந்த ஊரில் ஜனத்தொகையைப் பெருக்க ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று சுவைபடக் கூறினார். இது அந்நாட்களில் செய்தித் தாளில் படித்த ஞாபகம்.

கலை செய்யும் கலகம்

உழைப்பு கெடாமல் போராடுவதும், கோரிக்கையை நிறைவேற்றுவதில் உள்ள தன்மைகளைப் பக்குவமாகக் கூறி விளங்க வைப்பதும் ஒரு நிர்வாகத்தின் அழகியல். இத்தன்மையே ஒரு நிர்வாகத்திற்குள் ஆரோக்கியமான நல்லுறவுப் பாதையை அமைத்துத் தரும். இதையே மேலுள்ள நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.

ஒரு குழந்தையைக் கண்டிக்கும் தந்தை எப்போதும் தன் முகத்தை விகாரமாக்கிக் கொண்டு, கோபமாகப் பேசி, வன்மையுடன் நடந்து கொள்வதில்லை. அது செய்யும் சேட்டைக்கு ஏற்ப செயல்படுவார். சில நேரம் வன்மையுடன் கடிந்து, சிலநேரம் பொய்யான குட்டு குட்டி, சிலநேரம் செல்லமாகக் காதைத் திருகி, சிலநேரம் மெதுவாகக் கன்னத்தைக் கிள்ளி, சிலநேரம் தோளோடு தோளாக அணைத்துக் கொண்டு திருத்த முயல்வார். வள்ளுவர்கூட, “கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்” என்ற குறளில், தவறிழைத்த ஒருவரைக் தண்டிக்கும் போது கடுமையோடு மென்மையாக நடந்து கொள்கிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நீண்ட நாள் நீடிக்கும் என்று கூறுகிறார்.

கலை செய்யும் கலகம்

நாடு தழுவிய மிகப் பெரிய போராட்டங்கள் கடுமையாக நிகழ்ந்த போது கூட, கலைத்திறன் வழியாகத் தங்கள் போர்குணத்தைத் வெளிப்படுத்தியவர்களும் உண்டு. நம் தேச சுதந்திரப் போராட்டத்தின் போது பலதரப்பட்ட கலைஞர்களும் சும்மா இருக்கவில்லை. கவிதை, ஓவியம், கூத்து, மேடை நாடகம் என்று பற்பல நிலைகளிலும் தங்கள் போர்க்குணத்தை வெளிப்படுத்தி, ஆங்கில அரசால் தடை உத்திரவு பெற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்தளவுக்குக் கலைஇலக்கியம் ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய இடைஞ்சலைத் தந்திருக்கிறது.

தெ.கிருட்டினசாமிப் பாவலர், 1922-க்குப் பின்னர் கதரின் வெற்றி, தேசியக் கொடி, பதிபக்தி, கவர்னர்ஸ் கப், பம்பாய் மெயில் போன்ற நாடகங்களை நாட்டு விடுதலை, சமுதாய சீர்திருத்தம், தனிமனித ஒழுக்க மேம்பாடு, மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதினார். அக்காலத்தில், கதரின் வெற்றி, தேசபக்தி நாடகங்கள் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டவை. இவைபோன்றே, பாரதி, நாமக்கல் கவிஞர் போன்றோரும் இப்படிப்பட்ட தொல்லைகளுக்கு ஆட்படவர்கள்தாம்.

கலை செய்யும் கலகம்

உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை படைப்பாளிகள் தாங்கள் பார்த்த, அனுபவித்த சிரமங்களைத் தங்களின் படைப்புகள் மூலமாகப் பேசியே வந்திருக்கிறார்கள். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், ஒரு சிறந்த படைப்பு அது எழுந்த காலத்தையும் தாண்டி, தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதுதான். சான்றாக, பிக்காஸோ வரைந்த ஓவியமான “குவர்னிகா” (1937), சார்லி சாப்ளினின் “மார்டன் டைம்ஸ்” (1936) போன்ற படைப்புகள் இன்றும் ஆதிக்க சக்திகளை வெளிச்சம் போட்டு நம்மை எச்சரித்த வண்ணமே இருக்கின்றன. இச்சான்றுகள், கடல் நீரில் ஓரிரு துளிகள் போல.

இதனின்று, அழகியலோடு கூடிய மென்குணப் படைப்புகளும், வன்குணத் தன்மையை வெளிபடுத்தி இருப்பதைக் காண்கிறோம். இந்த வகையில் சமீபகாலமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் நடந்த நிகழ்வுகள் பற்றிய செய்திகள் குறிப்பிடத்தக்கன.

கலை செய்யும் கலகம்

அதாவது, நகரிலுள்ள பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள்; தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீர்; திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை வாயில்கள்; நடைபாதையில் சிதறிக் கிடக்கும் கான்கிரீட் பொருட்கள் என்று பல்வேறு விபத்துக் காரணிகள், பாதசாரிகளையும் வாகனப் பயணிகளையும் அச்சுறுத்திய வண்ணம் இருந்திருக்கின்றன. இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் இவற்றை மக்களுக்கு எச்சரிக்கவும், அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு செல்லவும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர். அதாவது, சாலையில் தேங்கி நிற்கும் நீரில் முதலை, பாதாளச் சாக்கடை வாயில்களில் மூழ்கும் மனிதர், சாலையோர நீர்த் தேக்கத்தில் தாமரைக் குளம், சாலையோரப் பள்ளங்களில் மனிதரை விழுங்கும் அனகோண்டா இப்படிப் பல விதமாகக் கற்பனைக்கெட்டிய தூரம் வரை முருகியற் பார்வையுடன் சித்தரித்திருந்தனர்.

கலை செய்யும் கலகம்

பெங்களூர் சென்றபின் ரஞ்சித் என்னுடன் பகிர்ந்து கொண்ட பல செய்திகள் “கலைஇலக்கியம்” சார்ந்தவை. அந்நகரில் அதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வியந்து கூறி இருக்கிறான். அடிக்கடி நிகழும் ஓவியக் கண்காட்சி, சுடுமண் பயிற்சி, மேஜிக் பயிற்சி, நவீன மற்றும் பாரம்பரிய நடனங்கள் மற்றும் நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. இளம் வயது முதலே இவற்றைப் பார்த்து வளரும் குழந்தைகள் எந்த ஒரு பிரச்சினையையும் கலைக் கண்ணோடு அணுகுவதாகவே நினைக்கிறேன். அதனால்தான், அவர்களுக்கு இப்படியொரு யோசனை வந்துள்ளதாகத் தோன்றுகிறது.

கலை, கண்டவனையும் கொண்டவனையும் கலகம் செய்ய வல்லது. அதனால்தான், “வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைபெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்” என்று பாரதியார் உசிதமாகப் பாடியுள்ளார். உண்மைதானே!

* * *

 

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

அசின் சார், கழுகுமலை.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

து நவம்பர் மாதத்தின் கடைசி வாரம்.

“தமிழகத்தின் தென்கிழக்குப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குக் கனமழை பெய்யக் கூடும்” – இது காலையில் கண் விழித்த போது காதில் விழுந்த தொலைக்காட்சி செய்தி!

படுக்கையை விட்டு எழுந்திராமல் போர்வைக்குள் கிடந்தவாறே தொலைக்காட்சித் திரையில் கீழே ஓடுகின்ற ஸ்குரோலிங் செய்தியில் “தூத்துக்குடி மாவட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை” என்று வந்து விடாதா? என்ற ஏக்கத்தோடு காத்திருந்து காத்திருந்து, செய்தி வராத ஏமாற்றத்தோடு பள்ளிக்குக் கிளம்பி வந்த மாணவர்கள்!

அவ்வப்போது பெய்யும் பொசுங்களுடன் மேக மூட்டமாகவே இருப்பதால் சூரிய ஒளியைப் பார்த்து ஓரிரு வாரங்களுக்கு மேலாகி விட்டது.

மதியம் முதல் பாடவேளை.

பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு. உள்ளே நுழைந்தேன்.

“வணக்கம் ஐயா” ஒருமித்த குரலில் மாணவர்கள் எழுந்து நின்றார்கள்.

“வணக்கம் மாணவர்களே! அமருங்கள்” என்றேன்.

மாணவர்களின் வருகையைப் பதிவேட்டில் பதிவு செய்தபின் அவர்கள் அனைவரையும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன்.

பாடங்கள் அனைத்தும் முடித்தாகிவிட்டது. அரையாண்டிற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. ஒவ்வொரு இயலாகத் திருப்புதல் பயிற்சியை மேற்கொண்டிருந்தேன்.

மந்தமான கிளைமேட்; காலையிலேயே விடுமுறை ஏமாற்றம்! இதோடு காலையில் இருந்த நான்கு பாடவேளைகளிலும் தொடர்ந்து திருப்புதல் பயிற்சித் தேர்வு. படிக்காமலே வந்து அத்தன தேர்வுகளையும் எழுதிவிட்டு, “டேய்! சூனா பானா! இத இப்பிடியே இன்னைக்கு மெயின்டெயின் பண்ணு”னு சமாளிச்சி உட்காந்திருக்கிறத அத்தன முகமும் கண்ணாடியாக் காட்டின!

“நீங்க இப்போ …” இப்படி ஆரம்பித்தேன்.

வழக்கமா பாடத்துக்குள்ள போறதுக்கு முன்பு உண்மை, நீதி, தன்னம்பிக்கை, ஒற்றுமை, சகோதரத்துவம், சமத்துவம் இப்படி ஏதாவதொரு கருத்தில் குறுங்கதை ஒன்று சொல்லி விட்டு வகுப்பைத் தொடங்குவேன். ஒருவேளை நான் மறந்திருந்தாக் கூட, பிரகாஷ் எழுந்து நின்னு, “ஐயா, கதை?”னு நினைவு படுத்துவான்.

இன்னைக்கு அவனும் நமத்துப் போன பட்டாசா இருந்தான்!

இனியும் நான் கேள்வி கேட்பதாலோ; தேர்வு வைப்பதாலோ காலவிரயம் ஏற்படுமே தவிர, எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை என்று மனதில் பட்டது.

“இந்தப் பாடவேளையில் நாம் திட்டமிட்டுடிருந்த எந்தத் தேர்வும் வேண்டாம் என்று நினைக்கிறேன் …” என்றேன்.

பவர் கட்டாகி இருந்த ஊருக்குள்ள கரண்ட் வந்ததும் எப்படி ‘பளிச்’சுன்னு பிரகாசிக்குமோ அது மாதிரி அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பிரகாசித்தது.

தொடர்ந்தேன்.

“தமிழ்ப் புத்தகத்த மட்டும் கையில எடுத்துக்கோங்க. நாம எல்லாரும் அப்படியே வெளியே இருக்கிற மரத்தடிக்குப் போறோம்.”

“சரி ஐயா” ஏறிய தொனியில் பதில்!

மாணவர்கள் அனைவரும் புதுத் தெம்புடன் வரிசையாக மரத்தடிக்கு வந்து அமர்ந்தனர்.

“இப்போ நீங்க என்ன செய்யப் போறீங்கன்னா…”

தொடர் மழையால் கரிசல் மண் களிமண்ணாகக் குழைந்திருந்தது. அந்தப் பகுதியைக் காண்பித்து, “ஆளுக்குக் கொஞ்சம் களிமண் எடுத்து வாரீங்க. அதிகம் வேணாம், நம்ம ஊரு புரோட்டா மாஸ்டர் ஒரு புரோட்டாவுக்கு உருட்டி வைக்கிற மாவு அளவு போதும்” என்றேன்.

அவ்வளவுதான்!

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

கண்ணிமைக்கும் நேரத்தில் உற்சாகம் பீரிட்டெழ அனைவரும் ஒரு கடைக்கே புரோட்டா போடுற அளவுக்கு மண்ணெடுத்து வந்துட்டாங்க. தேவைக்கு மட்டும் அதில் எடுத்துக்கச் சொல்லி, அவர்களை மரத்தடி டைல்ஸ் வெளியில் அமர்ந்து கொள்ளச் சொன்னேன். அவ்வளவு பணிவாக அமர்ந்து கொண்டனர்.

“இப்ப என்ன செய்யணும்?” கேள்வியோடு அனைவரும் தாய் முகம் பார்க்கும் சேய்இனம் போல என் முகம் நோக்கி இருந்தனர்.

“ம்! ரொம்ப எளிதான ஒன்றுதான். உங்களுடைய தமிழ்ப் புத்தகத்தில் உள்ள இலக்கணப்பகுதியில் அகத்திணை கருப்பொருள் அட்டவணை இருக்குதில்ல?”

“ஆமாம் ஐயா” ஒருமித்த கோஷம்! இல்ல இல்ல, ஆர்வம்!

“அத ஒருமுறை பாருங்க”

சரசரவென அந்தக் குளிரிலும் பதத்துப் போகாத தாள்களின் சத்தம் ஒட்டுமொத்தமாய்க் கேட்டது.

அனைவரின் கண்களும் புத்தகத்தில் புதைந்திருந்த அந்நேரம், “இந்தக் கருப்பொருட்களில் ஏதாவது ஒன்னக் களிமண்ணுல செஞ்சு காமிக்கிறீங்க” என்றேன்.

இமையா விழிகளோடு அவர்கள் என்னைப் பார்க்க, “சும்மா, ஒரு மூணு இன்ச் உயரம் இருந்தாப் போதும். ரொம்பப் பெரிசா முயற்சிக்க வேணாம். இன்னும் எளிதாக்கூட பண்ணலாம். எப்படின்னா, யானை செய்யும் ஒருவர் யானையை முழுசும் செய்யணுமுன்னு கட்டாயமில்ல. அதன் உறுப்புக்களில் ஒன்றான தலையை மட்டும் செஞ்சி காட்டினாலே போதுமானது” என்றேன்.

“அப்போ, நான் செஞ்சி முடிச்சிட்டேன் ஐயா!”

வேகமாகக் கையை உயர்த்தினான் விஷ்ணு.

நா சொல்லியே முடிக்கல, அதுக்குள்ள முடிச்சிட்டானா? ஆச்சரியத்துடன் அவன் பக்கம் திரும்பினேன். என்னைப் போலவே எல்லாருடைய பார்வையும்!

“இதோ! யானை வயிறு!” என்று கையில் உருட்டி வைத்திருந்த களிமண் உருண்டையை உயர்த்திக் காட்டினான்.

அனைவரும் “கொள்”ளெனச் சிரிக்க, அவனுடைய டைமிங் என்னையும் ரசிக்க வைத்தது. மேலும், இந்த இடத்தில் என்னுடைய செய்தி சரியாகப் போய் சேர்ந்து விட்ட இரட்டிப்பு மகிழ்ச்சி. இனி இதில் உள்ள திருத்தங்களை நான் சொல்வது எளிது.

விஷ்ணுவுக்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டு, “இது யானை வயிறு என்பது அவனுக்குத் தெரியுது; ஆனா மத்தவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்ல. அதனால, நாம செய்யிறது மத்தவங்க பார்த்ததுமே சரியாப் புரிஞ்சுக்கும்படி இருக்கணும். ம்! தொடங்கலாமா?” என்றேன்.

அதற்குள் அனைவரும் மளமளவெனச் செய்யத் தொடங்கினர். எந்த ஒரு வடிவமும் இல்லாமல் இருந்த களிமண்ணை ஒவ்வொருவரும் உருட்டித் திரட்டி ஏதோ ஒரு உருவத்தைக் கொண்டு வர முனைப்போடு செயல்படுவதைப் பார்க்கும்போது அனைவரும் குட்டி பிரம்மாக்களாகவே தெரிந்தார்கள்.

தனக்குப் பிடித்தமான விஷயமென்றால் அதில் ஆர்வமும், தன்முனைப்பும், பொறுப்புணர்வோடு கூடிய உழைப்பும் –அவர்களிடம் காட்டாற்று வெள்ளமெனப் பெருக்கெடுத்துப் பாய்வதைப் பார்த்தேன்.

கல்வி வியாபாரத்தில் ‘தேர்ச்சி சதவீதம்’ முதலீடாக இருப்பதால், மாணவர்கள் மனப்பாட எந்திரங்களாக மாற்றப்படுவதும்; அகஇருள் அகற்றும் கல்வி, “மனப்பாடம்” என்ற ஒற்றைச் சிறைக்குள் அடைக்கப்பட்டு குழந்தைகளின் தனித் திறன்கள் சூனியமாக்கப்படும் அவலமும் கண்முன் வந்து போயின.

எழுத்துத் தேர்வு என்றாலே கசப்பாக நினைக்கும் சிவகுமார் அவ்வளவு அக்கறையாக ஒரு விலங்கு ஒன்றை செய்து கொண்டிருந்தான். அருகில் நின்றவாறே கவனித்தேன். அதன் தலையில் இரண்டு குச்சிகளைச் சொருவி கொம்பு அமைத்தான். பின்பு, அதற்கு மேல் களிமண்ணை அப்பி, கொஞ்ச நேரத்தில் அக்குச்சிகள் தெரியாமல் அழகிய மண் கொம்புகளை உருவாக்கினான்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

கம்பி கட்டி சென்ட்ரிங் போடும் உத்தி அது. எப்படி கத்துக்கிட்டான்? எனக்கே ஆச்சரியம்! ஏதோ பலமுறை செய்த அனுபவசாலி மாதிரி, எல்லாரையும் விட வேகமாக செய்துக்கிட்டிருந்தான்.

அவன்கிட்ட, “இது என்னது?”ன்னு கேட்டேன்.

“ஐயா! இது மருத நிலத்து நீர் எருமை!” என்றவன், அது மாதிரியே உறுமிக் காட்டினான்.

“அடேயப்பா! பயங்கரமா இருக்குதே!” என்று அவனுடைய படைப்புக்கு வலுச்சேர்த்து விட்டு விக்னேஷ் பக்கம் வந்தேன்.

அவன் ஒரு பறவை ஒன்றைச் செய்து, அதன் பின்புறம் இலைகளை ஒட்டி தோகை போல அமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததுமே புரிந்தது அது மயில்தான் என்று!

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

என்னைப் பார்த்ததுமே, “ஐயா! தோகை விரித்தாடும் குறிஞ்சி மயில் எப்படி?” என்று அவன் உள்ளங்கையில் வைத்துக் காட்டினான்.

“பிரமாதம் பிரமாதம்! தோகையழகுக்கு இப்படி இலைகளை ஒட்டலாம் என்று நீ புதிதாய் முயற்சித்ததற்கு சிறப்புப் பாராட்டுகள்” என்றேன்.

அவனுக்கு சந்தோசம். அதை இன்னும் அழகு படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

பக்கத்தில் பிரகாஷ் ஒரு மனித உருவத்தை செய்து, அதன் கையில் வேல் போன்ற ஒன்றை ஒட்ட வைத்துக் கொண்டிருந்தான்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

“என்ன பிரகாஷ்?”

“அந்த மயிலேறும் குமரன் இவன்தான்! அதான், குறிஞ்சிக் கடவுள் ஐயா!” எனக்கே விளக்கினான்.

“அருமை அருமை!” புதிதாகக் கேட்பது போலக் கேட்டுக் கொண்டேன்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

ஜான் ஆல்பின் தொட்டி போல ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தான்.

“ம்! ஆல்பின்?”

என் குரல் கேட்டுத் திரும்பியவன், “ஐயா, இது நம்ம ஊரு வயக்காட்டுல இருக்கிற கிணறு. ம்! மருத நிலக் கிணறுக்கு இது சரிதானே?” தயக்கத்துடன் கேட்டான்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

“என்ன சந்தேகம்? இதுதான் சரியானது!” சொல்லிவிட்டு பின்புறம் பார்த்தேன். பிரியங்காவும் அதுமாதிரியே செய்து கொண்டிருந்தாள். தெரியாதது மாதிரி என்னனு கேட்டதும், “மனைக் கிணறு ஐயா” என்றாள்.

ஆல்பின் கிணறை விட இதுல வேலைப்பாடு அதிகம் மாதிரித் தெரிந்தது. வேலைப்பாடு அதிகம்னு சொல்லுறத விட அவளுடைய அப்சர்வேஷன் அப்படினு சொல்லுறதுதான் சரி. ஏன்னா, ஆல்பினின் கிணறை மறுபடியும் நான் பார்த்தபோது இன்னொரு ஆச்சரியம்! இந்தக் கிணறுகள் கூட பையனுக்கும் பெண்ணுக்கும் உள்ள அப்சர்வேஷன் வேறுபாட்டைக் காட்டி நின்றதுதான் அதற்கான காரணம்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

பிரியங்கா கிணற்றில் வெளிப்புற கல் கட்டுமானச் சுவர் நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது. ‘கப்பி’ தொங்க விடுவதற்கான குறுக்குக் கம்பும் அதற்கான தூண்களும் இருந்தன. ஆனால், ஆல்பின் கிணறு அப்படியில்லை, பம்பு செட், குழாய் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்தவுடன் எனக்கு இன்னொரு சேதியும் புரிந்தது. தோட்டம், வயல் என்று வீட்டுக்கு வெளியே செல்ல உரிமை கொண்ட ஆல்பின் பம்ப் செட் கிணறு செய்திருப்பதும்; ஒரு ஆணுக்கு நிகரான பாதுகாப்பான சுதந்திரம் பெண்ணுக்கில்லாத சமூகச் சூழலில் இருக்கும் பிரியங்கா மனைக்கிணறு செய்திருப்பதும், இச்சமூகம் ஆண் பெண் இருவரை எப்படி வேறுபட நடத்துகிறது என்பதன் வெளிப்பாடாய்த் தெரிந்தது.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

இதைப் பார்த்துக் கொண்டே பக்கத்திலிருந்த பட்டுரோஸ் பக்கம் திரும்பினேன். அவள் ஒரு விலங்கு போன்ற ஒன்றை செய்து, அதைத் தரையில் நிறுத்த முயன்று கொண்டிருந்தாள். அது நிற்க முடியாமல் கீழே சாஞ்சி சாஞ்சி விழுந்து கொண்டிருந்தது.

“என்ன பட்டு, போலியோ அட்டாக் ஆனதா?”

“ஐயா, இது நீர்நாய்! அதான், இதால நிலத்துல நிக்க முடியல” பட்டுன்னு சொன்னாள் பட்டு!

அவளுடைய பதிலளிக்கும் திறனைப் பாராட்டிவிட்டு, “இது எங்க உள்ள நீர்நாயாக்கும்?” என்றேன்.

“வயலும் வயல் சார்ந்த பகுதியில உள்ளது. சரியா ஐயா?” படபடவென கண்களை இமைத்துக் கொண்டே பதிலளித்தாள் பட்டு.

“உனக்குப் பட்டுங்கிற பேரு ரொம்பப் பொருத்தம் பட்டு! பட்டுன்னு பதிலச் சொல்லிட்டே! மிகநன்று!”

பக்கத்தில் பிரபா பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கம் திரும்பியதும், அவளாகவே முந்திக் கொண்டு, “இது கரடிக் குட்டி ஐயா” என்றாள் சிரித்துக் கொண்டே! அவளை அறியாமல் அவள் கைகள் அதை மெதுவாக மறைத்தன.

“நல்லாருக்கு பிரபா. நீயேன் தயங்குற? பெர்பெக்சன விட பெர்பாமென்ஸ்தான் முக்கியம். பெர்பாமென்ஸ் பண்ணப் பண்ண பெர்பெக்சன் தானா வந்திடப் போகுது. என்ன?” என்றேன்.

அவளுக்குள் புது நம்பிக்கை. தன் கரடி அழகானதுதான் என்ற நம்பிக்கை. எல்லாரும் பார்க்கும்படியாக முன்னால் தூக்கி வைத்தாள். இப்போது பிரபாவின் கரடிக் குட்டியைப் பார்த்தேன். அவளுடைய கற்பனை அபாரம்!

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

தரையில் உட்கார்ந்திருக்கும் குழந்தை தன் கால்களுக்கிடையே சாப்பிடும் தட்டை வைத்துக் கொண்டு கையால் எடுத்து உண்பதைப் போல கரடிக் குட்டியை செய்திருந்தாள். சிறு திருத்தம். இங்கு கரடி நின்று கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். இந்த நிற்கும் கரடியின் கால்களுக்கிடையே உணவுப் பாத்திரம்! இவர்களின் குழந்தை மனதால் வனவிலங்குகளும் குழந்தைகளாகிவிட்டன.

“பிரபா உன் குட்டிக் கரடி உண்மையிலேயே குட்டிக் கரடிதான். அத அழகாக் காட்டியிருக்க. வாழ்த்துக்கள்! ஆமா, இந்தக் கரடி எங்கிருக்கும்?”

“ம்! இது குறிஞ்சி மலைக் கரடி ஐயா!”

“பலே! இது மாதிரி இன்னும் நெறையா செய்யணும்! சரியா?” என்றேன். மட்டற்ற மகிழ்ச்சியோடு தலையாட்டினாள்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

மாதேஷ் அருகில் போனேன். அவன் யானை செய்திருந்தான். அதன் தும்பிக்கைக்குள் புற்கள் சொருவப்பட்டிருந்தன. அதையே நான் பார்த்துக் கொண்டிருந்த போது, “ஐயா, இந்த மலை யானை மரக்கிளைய ஒடிச்சி, அதத் தூக்கிக்கிட்டு வருது” என்றான்.

மலை – மரம் – யானை சரியா புரிஞ்சிருக்கான்.

மாதேஷ் உன் யானை முக்கால வினையுடன் கூடியதா இருக்கு வாழ்த்துக்கள். கைகொடுத்து வாழ்த்திவிட்டு திரும்பினேன்.

புவனா, யானையும் மயிலும் செய்திருப்பதை அவள் கையில் எடுத்துக் காட்டினாள். நான் எதிர்பாராத புதுவடிவம்! புடைப்புச் சித்திரம் போல களிமண்ணில் உருவாக்கி இருந்தாள். ஒருவேளை நான் முதலில் சொன்னதை இவள் உள்வாங்கி இருக்கலாம். இல்ல கோயில் சுவர்களிலோ தூண்களிலோ பார்த்த சிற்பங்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

“அருமை புவனா! சாதனையாளர்கள்னு சொல்லப்படுபவர்கள் எப்பவுமே புதுசா எதையும் சொல்றதுமில்ல; செய்யிறதுமில்ல. ஏற்கனவே இருக்கிறதத்தான் வித்தியாசமாச் சொல்றாங்க; வித்தியாசமாச் செய்றாங்க! அப்படி முயற்சி செய்பவர்கள்தான் அனைவருடைய கவனத்திற்கு உரியவங்களா ஆகுறாங்க. இப்போ, இங்கே நீ எடுத்துக்கிட்ட முறை வித்தியாசமானதா நான் நினைக்கிறேன். உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.”

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

“நன்றி ஐயா” அவள் சொல்லிக்கிட்டு இருக்கும் போதே அவளருகில் இருந்தவர்களெல்லாம் அதை வாங்கிப் பார்க்கத் தொடங்கினர்.

நான் மனோஜும் ஜெஸ்வாவும் இருந்த பக்கம் சென்றேன். குனிந்து குனிந்து அப்படி என்னதான் ரொம்ப நேரமா செஞ்சிக் கிட்டு இருக்காங்கனு பார்த்தேன்.

ஆளுக்கொரு முதலையா இரண்டு முதலைகள செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. மனோஜ் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவன். சிற்பத்திற்கு அடிப்படை ஓவியக்கலை. எனவே, அவன் எது செய்தாலும் அதில் ஓவியத்திறன் புகுந்திருக்கும் என்பது என் எண்ணம்.

நானும் குனிந்து பார்த்த போது, “ஐயா, இது முதலை இல்ல; மரப்பல்லி!” என்றான் ஐ.கருப்பசாமி.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

“அட, பரவாயில்லப்பா! ரெண்டும் ஊர்வன பேமிலிதான்!” என்று நான் ஆதரித்தாலும், சைசு சிறிதாயிருப்பதால் கருப்பன் சொன்னதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் நான் சொன்ன ‘அளவுக்குக்’ கட்டுப்பட்டு செய்திருக்கிறார்கள். இவ்வளவு வந்ததே பெரிய விஷயம்.

“ம்! மனோஜ் முதலைய எங்க பாத்திருக்க?”

“சூவில…”

உண்மைதான். இருந்தாலும் நான் அவனத் தேர்வுக்குத் தயாரிக்க வேண்டுமே. அதற்கான பதில் இதில்லியே. நான் மெளனமாக இருப்பதைப் பார்த்து,

“ஜியாக்கிரபி சானலில…” என்றான் வேக வேகமாக!

இதுவும் சரிதான். ஆனா, எதார்த்தத்திற்கு மதிப்பெண் கிடையாதே? மேலும் காலம் தாழ்த்த விருப்பமின்றி புத்தகத்தக் கண்ணால சுட்டி, “உன் பாடத்தில எங்க..?” என்றேன்.

“ஆங்! நெய்தல்! நெய்தல்தான் ஐயா!” தலையை சொரிந்து கொண்டான்.

“நன்று நன்று!” என்றேன் நானும் சிரித்துக் கொண்டே!?!

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

மெல்ல வலப்புறம் திரும்பினேன். அங்கே பவித்ரா, மத்தவங்களப் போல இல்லாம மாறுபட்ட விதத்தில முயற்சி செய்து கொண்டிருந்தாள். அதாவது, பாலிதீன் தாளை தரையில் விரித்து வைத்துக் கொண்டு அதன் மேலே தாமரை மலரை கோட்டோவியம் மாதிரி அமைத்துக் கொண்டிருந்தாள். இப்படி யாரும் முயற்சிக்க வில்லை. இமிட்டேட் செய்பவர்களைவிட இந்த மாதிரி மாணவர்கள் சிறந்தவர்கள். இந்த ஒரு வகுப்பு எனக்கு எத்தனை பேரை, எத்தனை செய்திகளுடன் அறிமுகப்படுத்தி விட்டது. ஒருமுறை கி.ராஜநாராயணன் ஐயா அவர்களைச் சந்தித்த போது, “சுவர்கள் இல்லாத வகுப்புதான் மிகச்சிறந்தது” என்று சொன்னார். அவர் சொன்னது இந்நேரம் என் நினைவில் வந்து போனது.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

“ரொம்ப நல்லாருக்கு பவி! வாழ்த்துக்கள்!”

விஷ்ணு ஒரு மனித உருவம் செய்து; அதன் ஒரு கையில் கலப்பையும் மறு கையில் புல்லுக்கட்டும் இருப்பதைக் காட்டி “மருதநில உழவன் ஐயா!” என்றான்.

அவன் உழவர் என்ற கருப்பொருளை உருவாக்க, அதற்குக் கருப்பொருளாக மண்வெட்டி, புல்லுக்கட்டு என்று காட்டியிருப்பது பிரமாதம். ஒன்றை அடையாளப்படுத்தும் போது இப்படிப்பட்ட புறக் காரணிகள் மிக அவசியம்.

“விஷ்ணு, நல்லாப் பண்ணியிருக்கே! நன்று!”

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

வாழ்த்துச் சொல்லிவிட்டு நகர்ந்த போது கவனித்தேன். ரொம்ப நேரமா களிமண்ண,‘பால் கொளக்கட்டைக்கு’ உருட்டின மாதிரி உருட்டியே வச்சிக் கிட்டிருந்தா சுப்பு!

“என்னாச்சு சுப்பு?”

“யோசிக்கிறேன் ஐயா!”

“இவ்வளவு நேரமாவா? ம்! சீக்கிரம்” துரிதப்படுத்தினேன்.

சில நேரங்களில் நாமும் முடிவெடுக்க இப்படித்தான் அதிக நேரம் பிடிக்கிறது. ஆனா, முடிவெடுத்த பின் மிகக் குறைந்த நேரத்தில் அதை செயல்படுத்தி விடுகிறோம். அதனால, அவள் யோசனைக்குத் தடையாக நான்அங்கு நிற்க விருப்பமின்றி மெதுவாக நகன்றேன்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

சந்தோஷ் மலைப் பாறைகளுக்கிடையே குகை ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தான். கிராமங்களில் உழவுத்தொழிலையே அன்றாடம் பார்த்துப் பழகிப் போனதால் பாண்டி, ஆனந்த், வைஷ்ணா போன்றோர் உழவர் வாழ்க்கையைப் பற்பல விதமாய் செய்து கொண்டிருந்தனர். வாழ்க்கையின் எதார்த்தம்தான் உண்மையான படைப்பாக முடியும் என்பதற்கு இது சின்ன எடுத்துக்காட்டு.

நவீன் யானை செய்ய ஆரம்பித்து பிள்ளையாரில் முடிந்த கதையைச் சொன்னான். “ம்! பரவாயில்ல, யானை முகன்தானே விநாயகர்” என்றேன். புன்னகைத்துக் கொண்டான்.

“நல்லது” என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

களிமண்ணக் கொளக்கட்டையா உருட்டி வைத்திருந்த சுப்பு, முயல் செய்து முடித்திருந்தாள். அதையவள் தரையில் நிறுத்த முயன்ற போது, அது மல்லாக்கப் படுத்தது. “பலே சுப்பு! அது அப்படியே இருக்கட்டும். ஒருவேள, அதுக்கு உண்ட மயக்கமா இருக்கும்” என்றேன்.

அதற்குள் ஏறத்தாழ எல்லாருமே செய்து முடித்து இருந்ததைப் பார்த்தேன். ஒருமுறை கரஒலி எழுப்பி அவர்கள் அனைவரின் கவனத்தையும் என் பக்கம் திருப்பினேன். “ம்! இப்ப நீங்க செஞ்சிருக்கிற அனைத்தையும் இந்த இடத்தில கொண்டு வந்து வரிசையாக வைத்து காட்சிப்படுத்துங்கள்” என்றேன்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

அவ்வளவு குஷியாகத் தங்கள் படைப்புக்களைக் கொண்டு வந்து வரிசையாக வைத்தார்கள். அவர்களுக்குள் ஒருவர் இன்னொருவர் செய்ததைப் பார்த்து மகிழ்ச்சியையும் நையாண்டியையும் பரிமாறிக் கொண்டனர்.

அப்போது எங்கள் தலைமையாசிரியர் வந்தார்.

மாணவர்களின் செயல் திறனையும் மகிழ்ச்சியையும் பார்த்து வெகுவாகப் பாராட்டினார். அவர் பேசும் போது,“இது போட்டியான உலகம். இதில் வெற்றி பெறுவதற்கு மதிப்பெண் மட்டும் போதாது. உங்களுடைய தனித்திறனும் வளர்க்கப்படணும். யாரொருவர் தன்னுடைய தனித்திறனை வளர்த்துக் கொண்டு முன்னேறுகிறாரோ அவரே வெற்றியாளர். அது மட்டுமின்றி, சாதனையாளராக சரித்திரத்தில் இடம்பெறும் அளவுக்கு உயர்ந்தும் விடுகிறார். நீங்களும் அப்படி உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கான காலமே இது. உங்களுக்கும் உங்கள் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்” என்று விடைபெற்றுக் கொண்டார்.

சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்!

“கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….”

எந்திரமணி பாடவேளை முடிந்ததைச் சுட்டியது.

மாணவர்கள் தங்கள் கைகளைக் கழுவிவிட்டு வரிசையாக வகுப்பறைக்குக் கிளம்பினர்.

தளர்ச்சியும் அயர்ச்சியுமாய் வந்தவர்கள்; மலர்ச்சியும் மகிழ்ச்சியுமாய்த் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

தேர்வு வைக்காமலேயே இன்று அவர்கள் கருப்பொருள் அட்டவணையைத் திருப்புதல் செய்து விட்டார்கள் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை!

* * *

 

தமிழாய்வுப் புலத்தில் ‘கெட்டுக்கிடை’

அசின் சார், கழுகுமலை.

‘மேலும்’சிவசு அவர்கள்

லம் விசாரித்துக் கொள்வதற்காக ஓரிரு வாரங்களுக்கு முன் பேரா.சிவசு அவர்களை அலைபேசியில் அழைத்தேன். தொடர்பு கொள்ளும் போதெல்லாம், அவர் முந்திக்கொண்டு என் வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கேட்டு நலம் விசாரித்துக் கொள்ளும் நற்தகைமையாளர். மகிழ்ச்சியுடன் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

“அண்மையில் ‘மேலும்’ நிகழ்வேதும் காணோமே?” என்றேன். புது உற்சாகம் கொண்டவராய், “அதற்கான ஏற்பாட்டில் தான் இருக்கிறேன். வழக்கத்தைவிட இந்த முறை சற்று வித்தியாசமான களமாக அமைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்றார்.

எப்படி? யென்று நான் கேட்டதும் தொடர்ந்தார். “கல்லூரிகளில் உள்ள ஆய்வு மாணவர்களுக்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும் புது முயற்சி. இதன் வழியாக, அவர்களின் ஆய்வு குறித்த புதிய பார்வைகளையும், ஆலோசனைகளையும், ஐய விளக்கங்களையும் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை” என்றார். “இது கல்லூரியோ அல்லது பல்கலையோ எடுத்து நடத்த வேண்டிய விஷயமாச்சே?” என்றேன். அதற்கு அவரோ, “உண்மைதான். இருந்தாலும், நாம் வெளியிலிருந்து நடத்தும்போது இன்னும் கொஞ்சம் சுதந்திரமாகச் செயல்பட முடியும்” என்றார். பங்கேற்பாளர்கள் குறித்துக் கேட்ட போது, “தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் ஆய்வு செய்யும் மாணவர்கள் எண்பது பேரும்; தமிழார்வலர்கள் இருபது பேருமாக மொத்தம் நூறு பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு. நிகழ்ச்சி அமைப்பை நெல்லை தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் கவனித்துக் கொள்கிறது. விரைவில் இதற்கான அழைப்பிதழ் வரும். தவறாமல் வந்து விடுங்கள்” என்றார்.

நிகழ்ச்சி நிரலோடு அழைப்பிதழ் வந்தது. சென்றிருந்தேன்.

நிகழ்வு: 29.03.2014 சனிக்கிழமை; காலை 10 மணிக்குத் தொடங்கியது.

நோக்க உரையில் பேரா.சிவசு அவர்கள், “ஆய்வுகள் சில நேரம் அப்படியே நின்று விடுகின்றன. படைப்பு அல்லது எழுத்திற்கும் இதுதான் நிலைமையாக உள்ளது. இந்த நிலையில் ‘மேலும்’ இதழ் அமைப்பியல் நிலைப்பாட்டை முன் நிறுத்தியது. தமிழவன் எழுதிய ‘ஸ்டக்சுரலிசம்’ என்னும் அமைப்பியல் நூல், தமிழ் இலக்கியங்களைப் புதிய முறையில் ஆய்வு மேற் கொள்ள வைத்தது. சான்றாக, ஆண்டாள் திருப்பாவையைக் கூட இவ்வாய்வு முறைக்கு உட்படுத்தப்பட்டது. இது போல குறியீட்டியல் முறையும் பின்பற்றப்பட்டது. இவ்விரு உத்திகளுடன் ஆய்வுப் புலத்திற்குள் நுழைந்தால் புதிய புதிய முறைகளைச் சொல்ல முடியும்.

மலையாளம், கன்னடம் சார்ந்தவர்கள், தம் சொந்தத் தாய் மொழியில் என்னென்ன இலக்கியங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்திருக்கிறார்கள். ஆனால், இங்கு அப்படியில்லை. இன்னும் சொல்லப் போனால், கல்விப் புலத்தில் உள்ளவர்களுக்கும், திறனாய்வாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருக்கிறது. இந்த இடைவெளியைக் குறைக்கும் பொருட்டே தமிழவன் ‘சிற்றேடு’ இதழை நடத்தி வருகிறார். இவ்விதழில், நவீன உத்திகளுடன் கூடிய ஆய்வுக் கட்டுரைகள் வருகின்றன. படியுங்கள், நீங்களும் எழுதுங்கள். இன்றைய ஆய்வு மாணவர்களாகிய உங்களுக்குப் புதிய ஆய்வு உத்திகளை எடுத்துச் சொல்ல நினைத்ததன் விளைவே இந்தப் பயிற்சிப் பட்டறை” என்றார்.

பேரா.கட்டளை கைலாசம்

வரவேற்புரை ஆற்ற வந்த பேரா.கட்டளை கைலாசம் அவர்கள், “இன்றைய ஆய்வுகள் தேக்கநிலை அடைந்து விட்டது என்பதற்கு சிவசு அவர்கள், ‘கெட்டுக்கிடை’ ஆகிவிட்டது என்ற சொல்லை அழைப்பிதழில் பயன்படுத்தியிருந்தார். ‘கெட்டுக்கிடை’ என்பது தேக்கம் மட்டுமல்ல; துர்நாற்றமும் சேர்ந்தது. இந்தக் கெட்டுக்கிடையை எப்படி சரி செய்வது? என்பதைத்தான் இன்றைய பயிற்சி நமக்கு எடுத்துக் கூற இருக்கிறது” என்றுரைத்தார்.

“ஆய்வுக் களங்களில் தேக்கம்” என்ற தலைப்பில் பேச வந்த பேரா.சிவசு அவர்கள், “தமிழ்க் கல்விப் புலத்தில் முதன்முதலாக முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர் டாக்டர் மு.வ. அவர்கள். பெரும்பாலும் ஆங்கிலப் படைப்புகளும் விமர்சனங்களும் இங்கே நுழையத் தொடங்கிய நேரம் அது. 1917-க்குப் பின், பொதுவுடைமை பிரச்சினை எழுந்த போது மார்க்சியப் பார்வை தோன்றியது. பின்பு, பிராய்டும் ஆய்வுக் களத்தில் வந்தார்.

தொல்காப்பியமும் நன்னூலும் ஆய்வாளர்களால் சரியான பார்வையில் பார்க்கப்பட வில்லை. இதனிடையே, பெண்ணியம், தலித்தியம் தொடர்பான பார்வைகளும் ஆய்வில் நுழைந்தன. ஆய்வு நெறிகளை எங்கிருந்து பெற வேண்டுமென நினைத்தோமோ, அங்கிருந்து பெறவில்லை. தொல்காப்பியம் காட்டும் எழுத்து, சொல், பொருள் வெறும் தேர்வுக் கண்ணோட்டத்துடனே போய் விட்டது. இதனால், பொருளிலிருந்து ஆய்வுத் தலைப்புகள் எடுக்கப்படவில்லை. இந்த ஆதங்கம் எங்களிடையே இன்றும் உள்ளது. தொல்காப்பியமும் நன்னூலும் மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும்.

கணிதத்தில், Permutation Component போல, நம் ஆய்வுகளின் மூலம் புதிய பல பெருக்கங்களைக் காண வேண்டும். Evaluvation Theory  என்னும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, புதிதாக ஏதும் தோன்ற முடியாது என்கிறது. “ஒன்றிலிருந்து ஒன்று” – இப்படித்தான் உருவாகியிருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. சான்றாக, புறநானூற்றில் உள்ள ஆற்றுப்படைப் பாடல்கள் பத்து அடிகளுக்குள் உள்ளவை. இவை பதிற்றுப்பத்தில் இருபது அடிகளுக்கு விரிவடைந்து, பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படைகள் இருநூற்று ஐம்பது அடிகளுக்கு நீட்சி பெறுகின்றன. புதிய உத்திகளுடன் வடிவமும் மாறி வந்துள்ளன. அகத்திணையும் புறத்திணையும் மயங்கி வருகின்றன. இந்த நீட்சிக்காக முதற்பொருளும் கருப்பொருளும் விரிவாக்கம் பெறுகின்றன. இப்படி மாற்றங்கள் அன்றே நிகழ்ந்து வந்த போதிலும், இன்று ஆய்வாளர்களின் ஆய்வுத் தலைப்புகளிலேயே தேக்க நிலை நிலவுகிறது.

இச்சூழலில், நவீன உத்திகளைப் பயன்படுத்தி புதுப்புது தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஆய்வு மாணவர்கள் தேர்வுக் கண்ணோட்டத்தைத் தவிர்த்து, திறனாய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என்றார்.

பேரா.தமிழவன் அவர்கள், “இலக்கணிகளும் புதிய கோட்பாடுகளும்”என்ற தலைப்பில் உரையாற்ற வந்தார். அப்போது, “உங்க எல்லாத்துக்குமே தமிழ் படிக்க ஆர்வமில்ல; டிகிரி வாங்க மட்டுமே ஆர்வமா இருக்கீங்க. (முன்னால் இருந்த ஆய்வு மாணவர்களைப் பார்த்து, தி.க.சி.-யைத் தெரியுமா? என்று வினவினார். பலரும் தெரியாது என்று சொல்ல) தமிழ் எழுத்தாளர்களைத் தெரிஞ்சுக்காத தமிழ் எம்.ஏ., எம்.பிஎல்., பி.எச்டி., எதுக்கு? வார்த்தை மாறாம எழுதுறதுக்கு மார்க் கிடைக்குது. நம்மளக் கொஞ்சமும் யோசிக்க வைக்கிறதில்ல. எழுத்து, சொல் சூத்திரங்களை ரிபீட் பண்றீங்க. சிந்திக்க வைக்கனும், பண்றதில்ல.

பேரா.தமிழவன் அவர்கள் காமராஜர் காலத்துல நூறு பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினா ஆறு பேருதான் பாஸ் ஆவாங்க. ஆனா, இன்னைக்கு? இந்த சமூகத்த மாத்தவே முடியாது. நாம பண்றது எல்லாமே சடங்காகி விட்டது. இங்கு படிப்பும் ஒரு சடங்காகவே இருக்கிறது. ரிபீட் பண்றது நம்முடைய நோயாகி விட்டது. அரசியல் மேடைகளில் பாரதிதாசன் பாடல்களை உணர்ச்சிப் பெருக்கோடு ஒப்பிக்கும் போதும்; பட்டிமன்றத்தில் சினிமாப் பாடல் வரிகளை இடைவிடாமல் பாடும்போதும் கை தட்டுகிற இனம் – தமிழினம்! எனக்குள்ள நெறைய கோபம். கொஞ்சம் கொட்டிக்கிட்டேன். அவ்வளவுதான்.

சரி, உன் கற்றல எங்க ஆரம்பிக்கிறது? உன் குடும்பத்திலிருந்து, சமயத்திலிருந்து எங்கும் ஆரம்பிக்கலாம். ஆனா, யோசிக்கிறதில்ல. தமிழ் சமூகத்தில் ஏதோ கோளாறு இருக்கு. இன்றைய மாணவர்களுக்குத் தற்கால பிரக்ஞை, உணர்வு வேணும். அடுத்த வேலை உணவு, அரசியல், கல்வி எல்லாம் எப்படிப் போயிட்டு இருக்குன்னு ஒவ்வொன்னா யோசிக்கணும். இதத்தான் நாம இப்பப் பேசணும். ஆய்வு செய்யக் கூடிய மாணவர்கள் தலைப்புகளைக் கூட அவர்களே தேர்வு செய்வதில்ல. அப்படித் தேர்வு செய்யும் தலைப்புகளும் பொருத்தமானதா இல்ல. எம்.பிஎல்., தலைப்ப பி.எச்டி.,க்கும்; பி.எச்டி., தலைப்ப எம்.பிஎல்.,க்குமா எடுத்திருதாங்க. இன்னும், சிலர் ஜனரஞ்சகமான பதிப்பக நூல்களையும், சினிமாப் பாடல்களையும், சுஜாதா நாவல்களையும் ஆய்வு செய்றாங்க. சுஜாதா எழுதின ஓரிரு நாவல் தவிர மத்ததெல்லாம் நாவலில்லனு அவரே ஏத்துக்கிட்டார். எட்டு ஞானபீட பரிசு பெற்ற கன்னட மொழியில், சினிமாக்காரர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்ல. இங்குதான் அவ்வளவு அந்தஸ்தும். சரி, தலைப்புக்கு வருகிறேன்.

என்கிட்ட A, B -ன்னு ரெண்டு பேர் ஆய்வு மாணவர்களா வர்றாங்க. அவங்ககிட்ட சுந்தர ராமசாமி எழுதின ‘புளியமரத்தின் கதை’ நாவலைக் கொடுத்து படிச்சிட்டு வரச் சொல்றேன். அவங்களும் படிச்சிட்டு வர்றாங்க. A புத்திசாலி மாணவரா இருக்கார். நான் எதிர் பார்க்கிற மாதிரி படிச்சிட்டு வர்றார். நாவலோட பெயரிலேயே ஒரு தத்துவம் இருக்குங்கிறார். B கிட்ட கேட்டேன். அவர் படிச்சேன்கிறார். தலைப்பு பத்தி நான் கேக்குறேன். அப்படி ஏதும் பாக்கல, கதை நோக்குல படிச்சேன்கிறார். அவரிட்ட, மறுபடியும் படிச்சுப்பாத்து சொல்லுங்கன்னு அனுப்பிடுறேன்.

ஆய்வு மாணவர்கள்

A மாணவர் கிட்ட, சுந்தர ராமசாமி எழுதின ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலைக் கொடுத்து படிச்சிட்டு வரச் சொல்லுதேன். அதையும் அவர் படிச்சிட்டு வர்றார். உடனே, சுந்தர ராமசாமி எழுதின சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாத்தையும் படிச்சிட்டு வரச் சொல்லுதேன். எல்லாத்தையும் படிச்சிட்டு வர்றார். அவருகிட்ட, புளியமரத்தின் கதைய, சுந்தர ராமசாமியின் பிற படைப்புகளோட ஒப்பீடு செய்யச் சொல்லுதேன். அதையும் அவர் செய்து வந்து சொல்றார். சுந்தர ராமசாமியின் கருத்துலகத்தில் ‘புளியமரத்தின் கதை’ எங்க நிக்குதுன்னு கேக்குறேன். அழகா பதில் சொல்றார்.

A மாணவர், சுந்தர ராமசாமி முழுமையும் படிச்சு முடிச்ச நிலையில; இப்ப அவருகிட்ட, க.நா.சு.-வ படிச்சிட்டு வாங்கனு சொல்றேன். அதப் படிச்சிட்டு வந்தவர், ‘க.நா.சு. போல இருக்கு சுந்தர ராமசாமி’னு சொல்றார். அந்த A மாணவர், உண்மையைக் கண்டுகொள்கிறார். இப்படி அறிவைத் தேடுவதுதான், உயர்கல்வியின் நோக்கம். ஆய்வு மாணவர்கள் இப்படித்தான் உருவாக வேண்டும்.

இதிலிருந்து தரம், தரமில்லாதது எது என்பதைக் கண்டுக்கோங்க. இலக்கியம் வேறு, இலக்கணம் வேறு என்பதில்ல. தொல்காப்பியர் எங்க கட்சிக்காரர். அவர் வேற பக்கம் இருந்திருந்தா பொருளதிகாரம் எழுதியிருக்க மாட்டார்” என்றார்.

“இலக்கியமும் புதிய முறையியலும்” என்ற தலைப்பில், பேரா.துரை சீனிச்சாமி அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “மொழிக்குரிய இலக்கணத்திற்கும், இலக்கியத்திற்குரிய இலக்கணத்திற்கும் வேறுபாடு உள்ளது. தமிழில் இலக்கணம் என்பது பண்பாடு சார்ந்தது. ‘தமிழ் வாழ்க’ என்று உணர்ச்சிப் பெருக்கோடுதான் தமிழை அணுகுகிறோமே தவிர, அதன் தொன்மை குறித்த அறிவுப் பூர்வமான தேடல் நம்மிடையே இல்லை. தொல்காப்பியத்தில் தலைவன், தலைவி என்ற சொற்பயன்பாடு கிடையாது. கிழவன், கிழத்தி என்ற பதங்களே பயன்படுத்தப் பட்டுள்ளன. அப்படியானால் இப்பத மாற்றம் எப்போது நிகழ்ந்தது? பழந்தமிழரின் இன வரலாறே எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும். இவற்றைப் படிக்காமல் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

பேரா.துரை சீனிச்சாமி

மொழியை வைத்துக் கொண்டு வியாபாரம், அரசியல் செய்வது இங்குதான் நடக்கிறது. கொஞ்சம் கூட சொரணையில்லை. இலக்கியம் என்பது கிரியேட்டிவிட்டியும்; கிரியேட்டிவிட்டி பற்றிய அறிவும். இன்று இரண்டும் இல்லை. சாதீயமும் மதவாதமும் சேர்ந்த வைதீகம், நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மை ஆட்சி செய்கிறது.

இச்சூழலில், நூல்களைப் படிக்காமல் எப்படி ஆய்வு செய்வது? குதிரைக்கு கடிவாளம் கட்டியது போன்ற ஆய்வுகளால் என்ன பயன்? இன்றைய மாணவர்களுக்கு நான் சொல்வது, வாசிப்பு அவசியம். படிக்கும் போதே குறிப்பெடுத்துப் படியுங்கள். படித்துப் படித்து உங்கள் அறிவைக் கூர்மைப் படுத்திக் கொள்ளுங்கள்” என்றார். இந்த உரைகளுடன் முற்பகல் நிகழ்வுகள் நிறைவுற்றன.

பிற்பகலில்:

மதிய உணவுக்குப் பின், ஆய்வாளர்கள் அனைவரும் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் என்ற பிரிவுகளின் அடிப்படையில் தனித்தனிக் குழுவாக அமர்ந்தனர். அப்பிரிவுகளுக்கு ஏற்ப தனித் திறனுடைய பேராசிரியர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அக்குழுக்களில் அமர்ந்தனர். ஆய்வு மாணவர்கள் தயக்கமின்றி தங்களுடைய ஐயங்களை அவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.

பேரா.தமிழவன் அவர்கள்

இன்றைய நிகழ்வில்:

கூட்டத் தொடக்கத்தில், மறைந்த மூத்த எழுத்தாளர் தி.க.சி. அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேரா.சிவசு அவர்களின், “இலக்கியத்தைப் புதிதாய் எழுதுவது எப்படி?” என்னும் நூல் வெளியிடப்பட்டது. அது, தமிழவன் எழுதிய ‘முஸல்பனி’ நாவல் பற்றிய பதினோரு விமர்சனக் கட்டுரைகளைக் கொண்டதாய் இருந்தது.

பொதுவாக, இம்மாதிரிக் கூட்டங்களில் பங்கேற்பாளர்கள் இறுதிவரைப் பார்வையாளர்களாகவே இருந்துவிட்டுப் போவதுண்டு. ஆனால், இந்நிகழ்வின் பிற்பாதி, ஆய்வு மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் தங்களின் ஆய்வு குறித்த சந்தேகங்களையும், தொடர்புடைய பார்வை நூல்கள் குறித்தும் கேட்டுக் கேட்டு குறிப்பெடுத்த வண்ணம் இருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. ஆய்வு மாணவர்களுடன்

ஒரு மருத்துவ முகாம், சுய தொழிலுக்கு வங்கிக்கடன் மேளா போன்றவற்றில் பயனாளி நேரடிப் பயன் பெறுவதைப் போல, இங்கு ஆய்வு மாணவர்களும் நேரடிப் பயன் அடைந்ததைக் காண முடிந்தது.

* * *

 

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

அசின் சார், கழுகுமலை.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

எனக்கு நடுநிலைப் பள்ளி மாணவ வயது இருக்கும்.

அப்போது, கழுகுமலை மற்றும் பக்கத்துக் கிராமங்களிலுள்ள கோவில் திருவிழாக்களில் நடைபெற்ற நாடகங்களை விரும்பிச் சென்று பார்த்திருக்கிறேன். அதில் அரசர் நாடகங்களும் உண்டு; சமூக நாடகங்களும் உண்டு. அம்மேடைகளில் தோன்றும் ஒப்பனை மாந்தர்களும், காட்சிகளுக்கேற்ப மாற்றும் திரைச் சீலைகளும் அந்த வயதில் பார்ப்பதற்குப் புதுமையாக இருந்தது.

ஒரு சமயம் செட்டிகுறிச்சி மொட்டைக் கோவிலைக் கட்டுவதற்கு வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரர்கள் ஒரு பஸ் நிறைய வந்திருந்தனர். ஒருநாள் இரவு, அவர்கள் செட்டிகுறிச்சி தெரு முனையில் இயேசுவின் சிலுவை மரணத்தைத் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள். அதைப் பார்த்து அச்சிறுவயதில் என் ஈரக்குலையே பதறியது. அந்த அளவிற்கு எதார்த்தம். அந்த அதிர்ச்சி நிகழ்வு என் மனதிலிருந்து கலைய நெடுநாள் பிடித்தது. நடந்தது நாடகமென்றாலும் அதை நிஜமாகவே பாவித்த வயது அது. இப்போது நினைக்கிறேன், நான் பார்த்த முதல் வீதி நாடகம் அதுதான்!

கழுகுமலை, ஆர்.சி.சூசை உயர்நிலைப் பள்ளியில் படித்த போது ஆறுமுகம் என்ற ஆசிரியர் ‘ரொட்டித்துண்டு’ என்ற ஓரரங்க நாடகத்தை நிகழ்த்தினார். அதில் நடித்த மாணவர்களுள் நானும் ஒருவன். திரைச் சீலை இல்லை; ஒப்பனை இல்லை; பொருட்கள் ஏதும் பயன்படுத்த வில்லை. நடிப்பும் பாவனையும் மட்டுமே கதையையும் உணர்ச்சியையும் பார்வையாளனிடம் கொண்டு சேர்த்தது. இது இன்னொரு புது வடிவ நாடகமாகப் பட்டது.

அந்நாட்களில் கோவில் கொடைவிழாக்களுக்கு அழைத்து வரப்படும் கரகாட்டங்களில், ‘குளத்தூர் ஆட்டக் குழு’வினரின் நிகழ்வு வித்தியாசமானது. ஏனெனில், கொஞ்சங்கூட பிசகாமல் பேசும் வட்டார வழக்கு மொழியுடன், மக்களின் மூட நம்பிக்கைகளைத் துணிந்து சாடும் அவர்களின் கலைத்திறன் என்னை மிகவும் வியக்க வைத்த மற்றொன்று.

பின்பொருமுறை, நெல்லையில் விவிலியம் சார்ந்த ஒலி ஒளிக் காட்சி நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு நிகழ்வுத் தளங்களைக் கொண்ட அந்நிகழ்வு அதுவரை நான் கண்டிராத புது விதம்.

கோவில்பட்டி வருடாந்திரப் பொருட்காட்சியில் நடைபெறும் எம்.ஆர்.ராதா நாடகம் முதல் சோ.ராமசாமி, கோமல் சுவாமிநாதன், ஆர்.எஸ்.மனோகர் என்று என் தேடல் விரியத் தொடங்கியது.

கல்லூரி நாட்களில் செய்யுள் நாடகம் தொடங்கி சுதந்திரப் போராட்ட கால நாடகங்கள், திராவிடக் கழக நாடகங்கள், துப்பறியும் மற்றும் நகைச்சுவை நாடகங்கள் என்று தேடித் தேடி படித்ததுண்டு. திரைப்படங்களாக வந்த நாடகங்களையும் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை.

சேவியர் கல்லூரியில் படித்த காலத்தில், அங்கு ஐக்கஃப் என்றொரு மாணவர் இயக்கம் இருந்தது. அதிலுள்ள மாணவர்கள் நிகழ்த்திய அணுஉலை, எய்ட்ஸ், எழுத்தறிவு – பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகங்கள், வேறொரு கோணத்தைக் காட்டின.

சென்னை தொலைக்காட்சி – கொடைக்கானல் ஒளிபரப்பு ஆரம்பித்த பின்னர், தேசிய நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் நாட்டிய நாடகங்கள் வேறெங்கிலும் கண்டிராத மற்றொரு புதுப் படைப்பாக இருந்தன. இன்னும்…

“வியாபாரமாயணம்” - நவீன நாடகம்

திருச்சி கலைக்காவிரி குழுவினரின் பலவித நாடகங்கள்…

கலைஇரவு மேடைகளில் தாமிரபரணி கலைக் குழு (சங்கரன்கோவில்) நடத்திய எளிமையும் எதார்த்தமும் கொண்ட வீதி நாடகங்கள்…

கல்லூரி மேடைகளில் மாணவர்கள் நடத்திய ‘Miming’ நிகழ்வுகள்…

இந்த வரிசையில் 2003-ஆம் ஆண்டு கோவில்பட்டியில் முனைவர் மு.ராமசாமியின் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ என்ற நாடகத்தைப் பார்த்தேன். அது நாடகத்தை வேறொரு பார்வையில் பார்க்கச் சொன்னது. அதன்பின் மு.ரா. பற்றியும், அவருடைய படைப்புகள் பற்றியும் எப்போதும் என்னுள் சிறு தேடல் உண்டு.

கடந்த வாரங்களில் மு.ரா.வின் ‘வியாபாரமாயணம்’ என்ற நவீன நாடகம் தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வந்தது. பாளை, தூய சேவியர் கல்லூரியில் இந்நாடகம் கடந்த 17.12.2013 அன்று நிகழ்ந்தது. பேரா.சிவசு அவர்கள் என்னை அழைத்திருந்தார். சென்றிருந்தேன்.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

நாடகத்தைப் பற்றி சொல்லும்முன் முதலில்…

பேரா.மு.ரா. பற்றி:

சொந்த ஊர் : பாளையங்கோட்டை

1971-ல், பாளை – தூய சேவியர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பட்டப் படிப்பு புதிதாகத் தொடங்கிய போது, முதல் தொகுதியில் ( First batch) பயின்ற மாணவர்களில் இவரும் ஒருவர். பேராசிரியர்கள் தே.லூர்து, சிவசு, பொ.செ.பாண்டியன் ஆகியவர்களின் மாணவர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், “தோல் பாவை நிழற் கூத்து” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். இதற்காக இவர் பாவைக்கூத்து நிகழ்த்துக் கலைஞர்களுடன் இரண்டாண்டுகள் கூடவே தங்கியிருந்து, அவர்களோடு வாழ்ந்து ஆய்வு நடத்தியுள்ளார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். செம்மொழி குறித்த ஆய்வுக்காக தமிழக அரசால் சென்னைக்கு அழைக்கப்பட்டு உள்ளார்.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

மதுரையில், ‘நிஜ நாடகக் குழு’வைத் தொடங்கி பல நாடகங்களை நிகழ்த்தியவர். குறிப்பாக இவர் நிகழ்த்திய, துர்க்கிர அவலம்(1984), சாபம்! விமோசனம்?(1987), ஸ்பார்டகஸ்(1989), இருள் யுகம்(1994), முனி(1995), கலிலியோ(1999), கட்டுண்ட பிராமிதியஸ்(2002), கலகக்காரர் தோழர் பெரியார்(2003), தோழர்கள், வலியிருப்பு போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் முதல் தென் மண்டல நாடக விழாவில் இவருடைய ‘துர்க்கிர அவலம்’ நாடகம் நடத்தப்பட்டது. அதில் பிற மாநிலத்தவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்ற இந்நாடகம், தேசிய நாடக விழாவிற்கும் தேர்வானது.

இவ்வாறு, இவர் நாடகத் துறையோடு கொண்ட வாழ்க்கை நாற்பது ஆண்டுகால நீளம் கொண்டது. இதோடு, தன் ஆசைக்குக் கொஞ்சம் சினிமாவையும், கொஞ்சம் விவரணப்படத்தையும் தொட்டுக் கொண்டவர்.

இனி நாடகம் பற்றி:

அழைப்பிதழில் நிகழுமிடம் சேவியர் கல்லூரியிலுள்ள ‘இலயோலா அரங்கம்’ என்று குறிப்பிட்டிருந்தாலும், நிகழ்வானது அரங்கத்திற்கு வெளியே தரையில் மரங்களுக்கிடையே நிகழவிருந்தது. காட்சித் தொடர்பியல் மற்றும் தமிழ்த் துறை மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் என்று சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். அவர்களில் பேரா.பொ.செ.பாண்டியன், வண்ணதாசன், தொ.பரமசிவம், பேரா.கட்டளைக் கைலாசம், அருட்தந்தை லூர்துசாமி, நாறும்பூநாதன் போன்றோரும் இருந்தனர்.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

அருகிலிருந்த முகம், தெரியாத அளவிற்கு மாலை இருள் வெளிச்சத்தை விழுங்கியதும், மின்னொளியில் நிகழ்வு தொடங்கியது. நெல்லை மணிகண்டன் வாத்திய இசை ஒலிக்க, மு.ரா.வும் கூத்துப் பட்டறையைச் சேர்ந்த ஆனந்தசாமியும் களத்தில் தோன்றினர்.

ஆயாசமாக வந்த ஆனந்தசாமி, ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு தலைக்கும் கைக்கும் ஒரு வெள்ளைத் துண்டை வளைத்துப் போட்டார். அது ‘விநாயகர்’ என்று பார்வையாளன் புரியும் போதே, ஏதோ ஒன்றை வித்தியாசமாக நிகழ்த்தப் போகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

‘ஆத்திகம், நாத்திகம்’ என்று ஆரம்பித்து, ‘அறிவா புனைவா?’ என்று பட்டிமன்றத் தலைப்பு போல வினா அமைத்து மாற்றி மாற்றிப் பதிலளித்து கருத்தை வளர்க்கிறார்கள். அதிலிருந்து சமகால சமூக, அரசியல் சூழல்கள் அனைத்துமே வியாபாரமாயின என்பதை எள்ளலோடு நகர்த்துகிறார்கள். அவ்வப்போது பயன்படுத்தும் Caption போன்ற சொற்றொடர்கள் சமூக அவலச் சுட்டிகளாக இருக்கின்றன. தொடர்ந்து ‘ஞெகிழி’ என்ற சொற்பதத்தை அறிமுகம் செய்கின்றனர். மனிதன் இயற்கையை அழித்து எல்லாம் செயற்கையான பின் உணவு மட்டும் என்ன வாழுது? அதுவும் ஞெகிழி ஆகிவிட வேண்டியதுதானே? இது தான் நாடகத்தின் முடிச்சு! ஞெகிழியைப் புனைவால் விளம்பரப்படுத்தி, அறிவால் வியாபாரமாக்குகிறார்கள். அறிவும் புனைவும் இயைந்த ராமகதை போல வியாபாரமும் ஆனதால், இது ‘வியாபாரமாயணம்’ ஆயிற்று! இதுதான் கதை.

அசை போட்டவை: “ + ”

மு.ரா., ஆனந்தசாமி இருவர் மட்டுமே நடிகர்கள்; இசைக்கு நெல்லை மணிகண்டன். இவர்களோடு ஐம்பது நிமிட நாடகம் நேரம் போனதே தெரியவில்லை. அந்த அளவிற்கு நாடகத்தைக் கொண்டு செல்கிறார்கள். இதை ராஜீவ் கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார்.

ரோஜா பாக்கு விளம்பரத்தில் முகங்கள் மாறுவதைத் திரையில் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு நம் கண் முன்னே உலவிக்கொண்டிருக்கும் இருவரும் திடீரென வேறு வேறு பாத்திரங்களாக மாறி வியக்க வைக்கிறார்கள். கொஞ்சமும் செயற்கை கலவாத மு.ரா.வின் நடிப்பு நம்மை வெகுவாகக் கவர்கிறது. 62-வயதுப் பெரியவராக இருந்தாலும், அவரது கால்களிலோ குரலிலோ தளர்வு இல்லை. வெட்ட வெளியில் மைக் இல்லாமல் பலத்த குரலில், பின் வரிசையில் இருப்பவர்களுக்கும் கேட்குமாறு பேசுவது எளிதானதல்ல.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

இந்நாடகத்தைப் பொறுத்தவரை இருவருக்கும் பிரமாதமான ஆடையென்று ஏதுமில்லை. சர்கஸில் பபூன் போடும் ஆடை; அது நிகர்ப்ப ஒப்பனை. அவ்வளவுதான். களமும் காட்சியும் ஒன்றாக இருப்பதால், அவர்களின் நடிப்புத் திறத்தாலே களமும் காட்சியும் மாறுபடுகிறது. இது புதுமை என்பதை விட, அவர்களின் அனுபவத் திறமை என்பதே சரியாக இருக்கும்.

இந்நாடகத்தில் பயன்படுத்திய பொருட்களை மிக எளிதாக வரிசைப்படுத்தி விடலாம். ஒன்றுக்குள் ஒன்றாக நுழையும் மூன்று ஸ்டீல் ஸ்டூல்கள். ஒரு மர  ஸ்டாண்டு, உருவினால் தனித் தனியாக வருகிறது. ஒரு குடைக் கம்பி, தொப்பி, கூலிங் கிளாஸ், வெள்ளை துண்டு, பிளாஸ்டிக் அங்கி, கொஞ்சம் பிளாஸ்டிக் கயிறு, பாட்டம் இல்லாத ஒரு லிட்டர் பிளாஸ்டிக் வாட்டர் கேன் – இவ்வளவுதான்.

அசை போட்டவை: “ – ”

வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் இரண்டிலும் பயணப்பட்ட மு.ரா., இந்தக் கதையை எந்தக் களத்திலும் நடிக்கும் விதமாகவே அமைத்திருக்கிறார். அதற்காக இது முருகபூபதியின் நாடகக் களமாகி விடாது. ஞெகிழி என்று ஆரம்பித்த பின் அதை விளக்குவதற்காக எடுத்துக் கொண்ட நேரம் நாடகப் பகுதியில் பெரும்பான்மையை விழுங்கி விடுகிறது.

கல்லூரியில் நடத்தப் பெறும் விளம்பரப் போட்டிகளில், மாணவர்கள் ஒரு பொருளை அல்லது சினிமாவை நையாண்டியுடன் விளம்பரப்படுத்துவார்கள். இந்நாடகத்தில் ஞெகிழி பற்றிய பகுதி அத்தகையதே!

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

சமகாலப் பிரச்சினைகளாக, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது, பன்னாட்டு நிறுவன வணிக நுழைவு, விளைநிலம் விலை நிலமானது என்று எட்டியவரை பேசினாலும்; ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் பிரளயன் உருவாக்கிய வீதிநாடகத்தில் உள்ள அழுத்தம் இதில் ஏனோ இல்லை.

நாடகத்தில் சொல்லப்பட்ட புனைவு, ஞெகிழி விஷயத்தில் அதிகமாகி விட்டது. இவ்விடத்தில் பார்வையாளன் சமகால வேதனைகளை அறிவால் புரிந்து கொள்ளாமல், வெறுமனே நகைத்து விட்டுச் சென்றால், அது படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கும் ஏமாற்றமே!

இறுதியாக…

இவை ஒரு புறமிருக்க, இன்றைய சூழலில் எண்ணற்ற மின்திரைக்குள் (தொ.காட்சி, கணிப்பொறி, செல், டேப்லெட்,…) சிக்கித் தவிக்கும் இளைய தலைமுறையினருக்கு இப்படிப்பட்ட நிகழ்வுகளை முன் நிகழ்த்திக் காட்டுவது மிக மிக அவசியம். இது அவர்கள் சிந்தையில் பற்பல சமூகநலச் சாளரங்களைத் திறந்து விடும்.

இந்த நம்பிக்கையோடுதான், பேரா.சிவசு அவர்களின் ‘மேலும்’ அமைப்பு கல்லூரிகளோடு கை கோர்த்து தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இன்னொருபுறம், பேரா.மு.ரா. அவர்கள், ஒரு யாத்திரிகனைப் போல தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகிறார். தமிழ் மொழி, நாடு, பண்பாடு, கலை, கலாச்சாரம் என்று நாளும் கவலை கொள்ளும் இவ்விருவருக்கும் தமிழ்ச் சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

* * *

இணையத்தில்: “வியாபாரமாயணம்” – நவீன நாடகம்

 

‘மேலும்’ விழா – ஒரு புதிய தடம்

அசின் சார், கழுகுமலை.

திரு.எஸ்.சண்முகம் அவர்களுக்கு, ‘மேலும்’ இலக்கிய விமர்சகர் விருது

ரு புறநானூற்றுப் பாடலை வகுப்பறையில் நடத்தும் போது, அதை வரிவரியாக விளக்கம் காண்பது மட்டுமின்றி, அப்பாடல் எழுந்த சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்களின் பின்புலத்தோடு வாசிக்கக் கற்றுக் கொடுத்தவர் பேரா.சிவசு அவர்கள்.

அதன்பின் எந்தவொரு இலக்கியத்தைப் படித்தாலும், அதை அத்தகு பார்வையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கே மனம் நாடும்.  முருகியற் பார்வையாளனாக மட்டும் இல்லாமல், நவீன தமிழிலக்கியக் கோட்பாடுகளின் உதவியால், உடலை ஊடுருவும் கதிர் வீச்சு போல இலக்கியங்களை ஊடுருவிப் பார்க்கும் ஓர் அறிவியல் ஆய்வாளனாக மாறினேன். இப்புலம் பெயர்ந்த எனக்கு, பிற இலக்கியக் கூட்டங்கள் ஏதோ ஒன்றை மறைத்து, சிந்தனையில் ஒரு வழிப் பாதையாகவும், வெறிச்சோடியும் தெரிந்தன.

அந்த வகையில் பேரா.சிவசு அவர்கள் நடத்தி வரும் ‘மேலும்’ இலக்கிய விமர்சனக் கூட்டங்கள், நம் தேடலுக்கு விருந்தாகவும், வாசகனின் பார்வையை விசாலமாக்கி எதையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தும் சிந்தனையையும் ஏற்படுத்துகின்றன.

இந்த வகையான தேடலோடுதான், கடந்த ஜூன் 29-ம் நாள் நெல்லையில் நடைபெற்ற ‘மேலும்’ இலக்கிய விமர்சனக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அந்நிகழ்வினின்று நான் உள்வாங்கிக் கொண்ட சில செய்திகளை இங்கு தொகுத்தளிக்கிறேன்.

1.பேரா.வேலம்மாள் அவர்கள் பேசும் போது, “படைப்பாளிகளைத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு, இலக்கியத் திறனாய்வாளர்களை இந்தச் சமூகம் ஏனோ கண்டு கொள்வதில்லை. இந்த ஓர் அவலம் போக்க, பேரா.சிவசு அவர்கள் சிறந்த இலக்கிய விமர்சகருக்கு ‘மேலும்’ அமைப்பு சார்பாக ரூ.25,000/- ரூபாயுடன் ‘விருது’ வழங்க நினைத்திருப்பதாகக் கூறினார்.

2. 1971-இல் தாமரையில் கவிதை எழுதத் துடித்தவருக்கு, கட்டுரை எழுத வாய்ப்புக் கிடைத்து, தி.க.சி அவர்கள் தூண்டுதலால் ‘தமிழவன்’ என்று என்று கட்டுரை எழுதத் தொடங்கியத்தைப் பகிர்ந்து கொண்ட தமிழவன் அவர்கள், தொடர்ந்து நவீனத் தமிழ் குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழவன்

அவர் உரையில், “இன்று, உலகத் தமிழ் இலக்கியம் உருவாகி வருகிறது. இது, இதுவரை இல்லாதது. ஜெர்மனியைச் சார்ந்த ஒருவர் தமிழிலக்கியங்களைப் படித்து விட்டு, அது பற்றி அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை சிங்கப்பூரில் வாசித்தளித்தார். இது போல இந்தியாவில் வேற எந்த மொழியிலும் இல்லை. தமிழோடு ஜெர்மன் சொற்களைக் கலந்து படைப்புகள் வருகின்றன. அவை புது அர்த்தம், புது உண்மை தருகின்றன. இது பற்றி மீண்டும் மீண்டும் நாம் படிக்க வேண்டும். தொல்காப்பியம் போல இதுவும் முக்கியம். நவீனத் தமிழ் வழியாகத் தமிழ் மொழியைக் கற்போம்.  நவீனத் தமிழை விட்டுவிடக் கூடாது” என்று கூறினார்.

3. சிவசு அவர்கள் உரையாற்றும் போது, “எங்களுக்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்தவர் தமிழவன். அவர் எழுதிய,

‘அவர் முதுகை இவர் சொரிந்தார்

இவர் முதுகை அவர் சொரிந்தார்’

என்ற கவிதை விமர்சகர் பற்றி சொல்லாமலேயே விமர்சகரைப் பேசியது” என்று கூறியவர், விமர்சகர் விருது பெற்ற எஸ்.சண்முகத்தைப் பற்றியும்; அவர் அனுப்பியிருந்த ஏற்புரையையும் சுருக்கமாக் கூறினார்.

பேரா.சிவசு அவர்கள்

கவிஞனாக, படைப்பாளியாக இருந்து, ‘மேலும்’ வாசகராக இருந்து, தமிழவனின்  ‘ஸ்டக்சுரலிசம்’ என்ற அமைப்பியல் சார்ந்த நூலைப் படித்த பின், தன்னை விமர்சகனாகப் பரிணமித்து, தமிழிலக்கியங்கள் மீதான பார்வையை நவீனப் படுத்திக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் தந்த திரு.எஸ்.சண்முகம் அவர்களுக்கு, ‘மேலும்’ இலக்கிய விமர்சகர் விருது வழங்கியதைக் குறித்துக் கூறினார். “தன் பார்வையை விசாலமாக்கிய ‘மேலும்’ பத்திரிக்கை மற்றும் அதன் ஆசிரியர்களைத் தன்னுடைய ஏற்புரையில் திரு.எஸ்.சண்முகம் நினைவு கூர்ந்ததையும் எடுத்துரைத்தார் சிவசு அவர்கள்.

4. ‘திராவிட இயக்கமும் நாடகக் கலகமும்’ என்ற தலைப்பில் மு.இராமசாமி அவர்கள் ஆற்றிய வரலாற்று நோக்கிலான உரை, அனைவருக்கும் புதிய பல தகவல்களைத் தந்தது.

திரு.மு.இராமசாமி அவர்கள்

5. நிகழ்வில் நிதா எழிலரசி, கவிதை வாசித்தார்.

“அரசமரம்………..

நான்கு வழிச் சாலை போட

குப்புறப் படுத்தது

நினைவுகளைத் தொலைத்து!”

என்பது போன்ற கவிதைகளும்; கோவை சுடலைமணி வாசித்த, ‘ஆறுமுகம் டாக்கீஸ், வெற்றிலைச் செல்லம், மேடை காவல் நிலையம்’ போன்ற கவிதைகளும், தற்கால அரசியல் பொருளாதாரக் காரணிகளால், இவர்கள் அனுபவித்த அழகியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகள் சிதைந்த அவலங்களை எடுத்துக்காட்டின.

6. கேரளாவிலிருந்து வந்திருந்த மலையாள எழுத்தாளர் திரு.ஹரிகுமார் அவர்களை, தமிழவன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். “இவர் மலையாள வார பத்திரிகையான ‘கலாகௌமுதி’ இதழில் ஒவ்வாரு வாரமும் இலக்கியம், தத்துவம், சார்ந்த செய்திகளை எழுதி வருகிறார்; தன் எழுத்துக்கள் மூலமாக எல்லா இலக்கியவாதிகளோடும் தொடர்பு கொண்டவர்.

மலையாள எழுத்தாளர் திரு.ஹரிகுமார்

உலக இலக்கியப் போக்கு அறிந்தவர். போஸ்ட் மார்டனிசம் படித்துவிட்டு, அதிலுள்ள கூறுகளை நீக்கிவிட்டு, அத்வைதத்தை விலக்கி நவ அத்வைதம் பற்றி எழுதியவர். இந்திய மற்றும் மேற்கத்திய இலக்கியக் கோட்பாடுகளைப் படித்துவிட்டு, தன்னுடைய கோட்பாட்டை முன் வைக்கக் கூடியவர். பழமொழி போல இவர் எழுதுகிற இலக்கியச் செய்திகள், விமர்சனங்கள் மேலை நாடுகளில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன” என்று ஹரிகுமார் அவர்களை அறிமுகப்படுத்தினார் தமிழவன். தோற்றத்தில் மிக எளிமையாக இருந்த ஹரிகுமார், தொடந்து வந்து பல செய்திகளைப் பரிமாறிக் கொண்டார்.

நிகழ்வின் சிறப்புகள்:

(அ) ‘மேலும்’ அமைப்பின் நிகழ்வு என்றால் குறித்த நேரத்தில் கிளம்பும் ராக்கெட் போல தொடக்கமும், முடிவும் அமையும் என்பதை இந்நிகழ்வும் மெய்ப்பித்தது.

(ஆ) கால்டுவெல் அவர்கள் தென் திராவிட மொழி ஆராய்ச்சி செய்தது போல, இக்காலத்தில் தென் திராவிட மொழிகளின் இலக்கியம், விமர்சனப் போக்குகள் இவற்றைப் பேசும் சிறு முயற்சியை ‘மேலும்’ அமைப்பு தொடங்கி வைத்துள்ளது போல இருந்தது.

(இ) மூத்த மற்றும் இளைய இலக்கியவாதிகளையும், விமர்சகர்களையும் இணைக்கும் பாலமாக இருந்தது.

விமர்சன விருது வழங்கும் விழாவில்...

(ஈ) இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுடைய படைப்புகளை வாசிக்கச் செய்து அங்கீகரித்தது, அடுத்த தலைமுறைகளை உருவாக்குவதில் உள்ள முனைப்பைக் காட்டியது.

(உ) வாசகனின் இலக்கியப் பார்வையை நவீனப்படுத்தியது.

(ஊ) பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களை உள்வாங்கிக் கொண்டு, நவீனத் தமிழின் வழியாக, எதிர்காலத் தமிழிற்கு அழைத்துச் செல்வதாய் அமைந்தது.

இறுதியாக, மலையாள எழுத்தாளர் ஹரிகுமார் அவர்களின் உரையை, மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் சரியாகவும், முழுமையாகவும் புரிந்த கொள்ள முடியவில்லை. மூத்த இலக்கிய விமர்சகர் திரு.தி.க.சி அவர்கள், இவ்விழாவிற்கு வந்திருந்து மேடையில் அமர்ந்திருந்தும் பேசுவதற்கு, நேர நிர்வாகத்திற்குள் இடமில்லாமற் போனது. இவ்விரண்டைத் தவிர வேறொன்றும் வெறுமையாகத் தெரியவில்லை. மொத்தத்தில், திருநெல்வேலி மண்ணில் நவீன தமிழ் இலக்கியப் போக்குகள் பற்றி நடக்கும் இந்நிகழ்வுகள், தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய தடத்தைப் பதித்து வருகிறது என்பதில் ஐயமில்லை.

* * *

இது ‘சிற்றேடு’ (அக்-டிச:2013) இதழில் வெளியானது.

 

வாத்தியார்

அசின் சார், கழுகுமலை.

எம்.ஜி.ஆர். பேட்டிகள்

கடந்த ஞாயிறன்று மதுரை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி செல்லும் போதும் நாம் நினைத்திருந்த புத்தகங்களுக்கிடையே, நினைத்திராத புத்தகங்களும் நம்மைக் கவர்வது உண்டு. அப்படி என் கண்ணில் பட்டதுதான் எம்.ஜி.ஆர். பேட்டிகள் என்ற புத்தகம். எஸ்.கிருபாகரன் என்பவர் தொகுத்ததை மனோன்மணி பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

கண்காட்சியில் வரிசையாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் புத்தகங்களின் முகப்பு, தலைப்பு, ஆசிரியர் பெயர் இவற்றை கவனிக்கிறோம். நம் விருப்ப எல்லைக்கு ஒத்ததைப் பார்த்த பார்வையிலேயே வாங்குகிறோம். பெரும்பான்மையை, “ஹூம்! இதிலென்ன பெரிசா இருந்திடப் போகுது?” என்ற அலட்சியப் பார்வையுடன் கடந்து போய் விடுகிறோம். அப்படி விடுபட்ட புத்தகமாக இது இருந்திருக்குமோ என்று எனக்குள் தோன்றியது. ஏனெனில், இந்நூல் இப்போது ஐந்தாவது பதிப்பு! இம்முறை எதிர்பாரா விதமாகக் கையிலெடுத்து மேல்வாரியாக வாசித்த போது அது நல்லதொரு தொகுப்பாகத் தெரிந்தது.

எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில், பல்வேறு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், செய்தித் தாளில் வெளிவந்த கேள்வி பதில்கள் என்று பலவற்றைப் பெருமுயற்சியுடன் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.

எம்.ஜி.ஆர். என்றதும் நம் அனைவரின் மனதில் தோன்றும் பொதுவான பிம்பமும், கருத்தும் உண்டு. அவர் நாடகக் கலைஞராயிருந்து சினிமாவிற்கு வந்து பெரும்பான்மையான மக்களைக் கவர்ந்தவர். அந்த செல்வாக்கோடு அரசியலில் நுழைந்து இறுதிவரை அதைத் தக்க வைத்துக் கொண்டவர். கூடவே, உதவி செய்யும் தயாள மனம் படைத்தவர் என்பதும் பல வேளைகளில் படித்ததும், கேட்டதுமான செய்தி.

ஆனால், இந்த நூல் நாம் கொண்ட எம்.ஜி.ஆர். பற்றிய அபிப்பிராயத்தை மாற்றுகிறது. மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் போன்ற அடைமொழிகள் வெறும் ஜோடனைகள் அல்ல; அதற்காக அவர் தன் சினிமா வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் தன் கருத்துக்களை நிலைநிறுத்த திருக்கமுற உழைத்திருக்கிறார் என்று காட்டுகிறது. அவர் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் ‘தன் கருத்துக்களை நிலை நிறுத்துதல்’ என்பது மிக முக்கியமாக எனக்குப் பட்டது. இதை அவர் காலத்திலும் சரி, அதற்குப் பின்பும் சரி, அதை யாரும் சரி வர செய்யவில்லை. அதனாலேயே, அவர் அடைந்த உச்சத்தை இன்று வரை யாராலும் தொட முடியவில்லை. அதை இந்த நூல் நமக்கு நன்கு தெரிவிக்கிறது. இந்த இடத்தில், எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் கருத்து பேதம் கொண்டவர்களும், அவருடைய ‘கருத்து நிலை நிறுத்தல்’ பின்பற்றலை மட்டும் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக வாழ்க்கை வரலாற்று நூல்கள் படிக்கும் போது அது யாருடையது என்பதை விட, அது யார் எழுதியது என்பது மிக முக்கியம். ஏனெனில், அது யாருடையதாக இருந்தாலும், எழுதுபவரின் தற்சார்பு அதில் தோன்றி அது நம்மை வேறு திசைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த நூலில் அந்தப் பிசகுக்கு வாய்ப்பே இல்லை. ‘உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்’ என்பதைப் போல முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர். மனமே பேசுகிறது. எக்ஸ்ரே எடுப்பது போல அவரின் எதார்த்தமான மன இயல்பை வெளிக்காட்டும் அவரது பசப்பற்ற பதில்களிலிருந்து அறிய முடிகிறது. அதில் யாரையும் சரிக்கட்டும் நினைப்பு இல்லை. தனக்குத் தெரியாததை ‘தெரியாது’ என்று சொல்லும் துணிபு! இப்படி அனைத்தும் வெளிப்படை. இன்றைய சினிமா நடிகர்களோடும், அரசியல்வாதிகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகுந்த இடைவெளியும், ஏமாற்றமும், நகைப்பும் நமக்கு ஏற்படுகின்றன.

இத்தொகுப்பிற்காக, நூலாசிரியர் கிருபாகரன் நெறையவே பாடுபட்டிருக்க வேண்டும். அவர் உழைப்பின் பயனே இப்போது நம்மை பேச வைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர். குண்டடிபட்ட நிலையில் தேர்தல் பணி பார்த்தது போன்ற சில பழைய படங்களும் உள்ளன.

நூலாசிரியரின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்!

*

இந்நூலிலிருந்து சான்றாக சில வினாக்களும் விடைகளும்:

நடிப்புத் துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?

வறுமை.

உங்கள் வீட்டில் பூஜை அறை உண்டா? எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்?

என் பூஜை அறையில் என் தாய்-தந்தை, மகாத்மா காந்தியடிகள், என் வாழ்க்கைத் துணைவியின் தாய் தந்தையரின் படங்கள் இருக்கின்றன. (அதோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று உண்டு) இவர்கள்தாம் நான் வணங்கும் தெய்வங்கள்.

பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?

பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் ஏற்பீர்களா?

நேரம் இருந்து, அந்தப் பாத்திரத்தில் என் கருத்துக்களை சொல்ல முடியும் என்ற நிலை இருந்து, என்னைத் தாங்கிக் கொள்ளக் கூடிய இதயம் அவர்களுக்கு இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

சினிமாவை நீங்கள் ஒரு கலை என்று நினைக்கிறீர்களா? வியாபாரம் அல்லது தொழில் என்று நினைக்கிறீர்களா?

ஒரு தொழிலை கலைநுணுக்கத்தோடு உருவாக்கினால் சிறந்த வியாபாரமாக அது பயன்படும். அது போல சினிமாவை தொழிலாகக் கருதி, கலை அம்சத்திற்கு எந்த ஊறு விளைவிக்காமல் பயன்படுத்தினால் அந்த வியாபாரம் செழிக்கும்.

உலகிலேயே அழகானது எது?

குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து கருத்துச் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கும் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்னால்! பரந்த இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள நான், உலகத்தில் உள்ளதில் அழகானது எது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

தங்களுக்கு யாருடைய கதை, வசனம், பாடல்கள் பிடிக்கும்?

நாடு, மொழி, இனம், பண்பாடு இவைகளை வளர்க்கும், போற்றும் வகையில் யார் எழுதுகிறார்களோ அவர்களுடைய கதை, உரையாடல், பாடல்கள் பிடிக்கும்.

தொழிலாளி ஒரு முதலாளியிடமும், முதலாளி ஒரு தொழிலாளியிடமும் எவ்வகையில் நடந்து கொள்ள வேண்டும்?

தற்போதைய சமுதாய அமைப்பில் உள்ள முதலாளியும் தொழிலாளியும் தந்தையும் தனயனையும் போல நடக்க வேண்டும்.

மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாதா? ஏன்?

மாணவர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது என் கருத்து. இதனை அண்மையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தெரிவித்தோம். உங்கள் கடமை நாட்டிற்கு நல்ல அறிஞர்களாக நீங்கள் திகழ வேண்டும். கல்வி கற்றுக் கொள்ளும் இந்தக் காலத்தில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் நீங்கள் அறிவு தேடிக் கொள்ளக்கூடாது என்பது என் கருத்தல்ல. ஆனால், செயல்முறையில் நீங்கள் இறங்கக் கூடாது.

(வேறொரு பக்கத்தில் அதே கேள்வி) மாணவர்கள் அரசியலில் கலந்து கொள்ளலாமா? கலந்து கொள்ளக் கூடாதா?

ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கோ, மக்களின் ஜனநாயக வாழ்க்கைக்கோ, தாய் மொழிக்கோ ஆபத்து வரும்போது அவர்கள் நிச்சயமாக ஈடுபடலாம்.

நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் ‘நாடோடி மன்னன்.’ சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

நான் விரும்புவதை என் தொழிலில் செய்து காட்ட வேண்டும் என்பது நீங்காத ஆசையாகும். ஒரு வேளை என் விருப்பம் தவறாகவும் இருந்து விடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்தத்தில் படம் எடுக்க இதுதான் காரணம்.

சினிமாவுக்குத் தணிக்கை போர்டு தேவையா?

தணிக்கை போர்டை எதற்காக வைத்திருக்கிறோம். மக்கள் பார்த்து வெறுக்கத்தக்கதை, ஒழுக்கத்தைக் குலைக்கக் கூடியதை, பண்புக்குப் பொருந்தாததைக் காட்டக் கூடாது என்பதற்காகவே தணிக்கை போர்டை ஏற்படுத்தி இருக்கிறோம். எனவே தணிக்கை போர்டு இருப்பதில் தவறு என்ன? தவிர, குறிப்பாகச் சொல்லப் போனால் பிராந்திய அடிப்படையில் இயங்கும் தணிக்கைக் குழுக்கள், ஒரு பிராந்தியத்திலிருந்து வரும் படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என்று சொல்வேன். குறிப்பாக பம்பாயிலிருந்து வெளிவரும் படங்கள் சற்று ஆபாசமாகவே இருக்கின்றன. இதை தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடும்போது, மீண்டும் தணிக்கை செய்தால் என்ன என்றுதான் தோன்றும். எனவே, இப்படி ஒரு தணிக்கை நடத்தினாலும் தகும்!

ஆங்கிலப் படங்களுக்கு ஈடான தரத்தில் தமிழ்ப் படங்கள் வருவதில்லையே, ஏன்?

‘தரம்’ என்று நீங்கள் எதை இங்கு குறிப்பிடுகிறீர்கள்? தரம் என்று நிர்ணயிப்பதற்கு அளவுகோல் என்ன? கிளியோபாட்ரா பெரிய படம். அதில் வரும் அரை நிர்வாணக் காட்சிகளை ஏற்றுக் கொள்கிறீர்கள். தமிழில் சோகம், ஹாஸ்யம், பண்பு, வீரம், சண்டை எல்லாம் வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப படம் எடுக்கிறோம். இவற்றில் தரத்தைக் காண முயற்சிக்க வேண்டுமே தவிர, ஆங்கிலப் படங்களுடன் ஒப்பிடக் கூடாது. அவர்களது கலாச்சாரம் வேறு. நம்முடையது வேறு.

உங்களைப் புகழ்ந்து, இகழ்ந்து எழுதும் பத்திரிகைகளைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

புகழ்ந்து எழுதுபவர்கள் எனக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். இகழ்ந்து எழுதுபவர்கள் எனக்கு ஆக்கத்தை அளிக்கிறார்கள்.

மனிதன் சந்திரனுக்குப் போனது பற்றித் தங்கள் கருத்து என்ன?

விஞ்ஞான யுகத்தில் மிகப் பெரிய முதற்சாதனையாகும். ஆனால், அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு அத்தகைய விஞ்ஞான சக்தியைப் பயன்படுத்தக் கூடாதா? முடியாதா?

தாங்கள் சிகரெட் கையில் வைத்திருப்பது போல தங்களின் சொந்தப் படத்தில் ஒரு காட்சி அமைப்பீர்களா?

கையில் சிகரெட் இல்லாத போதே அப்படிப் படம் போட்டு விளம்பரம் செய்கிறார்களே.. உண்மையாகவே அப்படி படம் பிடித்தால் என்ன ஆவது?

மாலை போடுகிறவர்களைப் பற்றி உங்கள் கருத்துக்கள்?

தற்போது மாலைகளுக்குச் செலவிடும் பணத்தை அவரவர் பெயரில் சிறு சேமிப்புத் திட்டத்தில் சேர்த்தால் நாட்டிற்கும் அவர்களுக்கும் நலம் பயக்கும்.

நீங்கள் மிகவும் ரசித்த தமிழ் இலக்கியம் எது? ஏன்?

அந்த அளவுக்கு இலக்கியம் படித்தவனல்ல நான்.

நாத்திகன் எப்பொழுது ஆத்திகன் ஆகிறான்?

சிறந்த ஒரு ஆத்திகன்தான் நல்ல ஒரு நாத்திகன் ஆக முடியும்.

சினிமா பாட்டுன்னா எப்படி இருக்க வேண்டும்?

பாடல் என்றால் அதில் பொருள் இருக்க வேண்டும். இசையும் கலந்திருக்க வேண்டும். கூச்சலாகவும், வெறும் வார்த்தைகளாலும், கருத்தில்லா பாடல்களாலும் பயன் இல்லை.

ஏழை மக்கள் வாழ்வில் துன்ப கீதம் கேட்காமலிருக்க வழி என்ன?

பொதுவுடைமைக் கருத்துக் கொண்ட பாடலை இயற்றி, சமதர்ம தத்துவத்தை தாளமாக்கி, உரிமைக் குரலை இசையாக்கினால் இன்ப கீதம் தோன்றும்.

நீங்கள் விரும்புவது எது? வெறுப்பது எது?

ஒருவனுடைய கடைசி மூச்சுவரை தன் உழைப்பில் வாழ்வதை, நான் விரும்புகிறேன். இதிலிருந்து தெரியுமே ‘நான் எதை வெறுக்கிறேன்’ என்பதை.

கலப்புமணம் பரவினால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உயர்ந்து விடலாம் அல்லவா?

அதுகூட பொருளாதாரத்தின் மேல் மட்டத்திலேயே நடக்கிறது. விளம்பரத்திற்காகத்தான் ஹரிஜன சமூகத்திலிருந்து பெண்ணெடுக்கிறார்கள் சிலர். சாதியை ஒழிக்கிறோம் என்று பேசுபவர்கள் சாதி வாரியாகக் குடியிருப்பு அமைத்து சாதி வித்தியாசத்தை நிரந்தரமாக்கி விடுகிறார்கள். ஹரிஜன் காலனி, குடியானவர் பகுதி என்று இருக்கக் கூடாது.

கலைஞனுக்கும் கூத்தாடிக்கும் என்ன வித்தியாசம்?

நேற்று கூத்தாடி; இன்று கலைஞன்.

திருமணமான பெண்கள் வேலை செய்வது பற்றி தங்கள் கருத்தென்ன?

திருமணமான பெண் சோம்பேறியாக இருக்க வேண்டுமென்று கருதுகிறீர்களா?

அரசியல்வாதிக்கும் சுயநலவாதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சுயநலவாதியால் நாடு என்ன ஆகும்?

முன்னவன் தியாகி. பின்னவன் அரசியல் வியாபாரி. அரசியல்வாதி சுயநலவாதியானால் நாடு சுடுகாடாகும்.

ஆண்டவனை எங்கே காணலாம்?

உங்களுடைய நல்ல செயல்களில்.

* * *

 

பொதிகை அடிவாரத்தில் ‘முஸல்பனி’

அசின் சார், கழுகுமலை.

முஸல் பனி

வந்த பார்சலைப் பிரித்தேன். உள்ளே அழைப்பிதழ், ஒரு நாவல் மற்றும் நான்கு பக்கக் குறிப்புரை இருந்தன. நெல்லை பேரா.சிவசு அவர்கள் அனுப்பியிருந்தார். முன்னதாகவே அலைபேசியில் விபரங்களைத் தெரிவித்திருந்தார். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ஆகஸ்ட் 18, 2013 ஞாயிறன்று நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை. வருவதற்கு முன் இந்நாவலைப் படித்து வர வேண்டும். இது அவரின் அன்புக் கட்டளை.

நாவல்: தமிழவன் எழுதிய ‘முஸல்பனி’

முதல் பதிப்பு: 2012

வெளியீடு: அடையாளம் (04332 – 273444)

தமிழகம் முழுவதும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு’ நடைபெறும் நாள். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு போல ஆறரை லட்சம் பேர் எழுதுவதாக செய்தித்தாளில் படித்த ஞாபகம். பேருந்தில் பெருங்கூட்டமாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பேராசிரியரிடமிருந்து அலைபேசி அழைப்பு.

“நெல்லை வந்திடுங்க; நம்ம காரிலேயே போயிடலாம்” என்றார்.

மனம் தந்தி அடித்ததோ? என்னுள் எழுந்த வியப்போடு “சரி” என்றேன்.

நிகழ்வன்று அதிகாலையிலேயே கிளம்பி பேராசிரியர் சொன்னபடி நெல்லையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரின் வர்சா கார் வந்தது. காரில் பேராசிரியருடன் விமர்சகர் ஜமாலன், ஆந்திர திருநாவுக்கரசு, கவிஞர் நிதாஎழிலரசி. இவர்களுடன் நானும். ஒன்பது மணிக்கு அம்பையில் காலை உணவை முடித்து விட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தோம்.

தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் மட்டுமின்றி பிறதுறைப் பேராசிரியர்களும் ஆர்வத்துடன் அவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இருந்தனர். தமிழ் வளர்த்த பொதிகையைப் படித்ததுண்டு. அப்போதுதான் நேரில் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் பெயர் பதிவு தொடங்கியது. பங்கேற்பாளர்களாக தென் தமிழகப் பல்கலைக் கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் படைப்பாளிளும் இலக்கிய ஆர்வலர்களும் வந்திருந்தனர்.

நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை

பத்து மணிக்கு தொடக்க விழா அரங்கேறியது. வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் சி. அழகப்பன் தலைமையுரை ஆற்றினார். “வாசிப்புப் பழக்கம் இன்றைய மாணவர்களிடையே மிகக் குறைந்து விட்டது. சற்று முன் இங்குள்ள சில மாணவிகளிடம் நீங்கள் படித்த ஏதாவது ஒரு நாவலைக் கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு யாரும் பதில் சொல்ல வில்லை. ஒரு மாணவி மட்டும் முல்லா கதைகள் படித்ததாகக் கூறினார். இது தான் இன்றைய இளையோரின் வாசிப்பு நிலை. இந்நிலை மாற உங்கள் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதுதான் அறிவைப் பெருக்கும். மேலும், நம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டத்தான் இம்மாதிரிப் பயிற்சிப் பட்டறைகள். இதை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

பேரா.சிவசு அவர்கள் பயிற்சிப் பட்டறையை நடத்த வந்தார். பங்கேற்பாளர்களுக்கும் கருத்துரையாளர்களுக்குமான இடைவெளியை அகற்ற மேடையை விட்டு கீழே இறங்கி, அனைவரும் ஒரே தளத்தில் ஒரு முகமாய் பார்த்துப் பேசும் வகையில் வட்ட வடிவ அமர்வாக மாற்றியமைத்தார். சுய அறிமுகத்தோடு பட்டறை தொடங்கியது.

நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை

‘முஸல்பனி’ என்ற தலைப்பு எதைக் காட்டுகிறது? என்று பேரா.சிவசு கேட்டார். அரங்கம் அமைதியானது. ஒருவர், “அது இளவரசியின் பெயர்” என்றார். பேராசிரியரோ, “முஸல் என்பது முயல். முயல் முல்லை நில விலங்கு. பனி பாலைக் குரியது. இந்தத் தலைப்பில் Space and Time இருக்கிறது. அதாவது இடமும் காலமும் தெரிகின்றன. இந்நூல் அவை சார்ந்தவையா என்று நாம் கவனிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நாவலின் முதல் அத்தியாயம் வாசிக்கப் பட்டது. புரிதலைப் பகிரும் படிக் கேட்டுக் கொண்ட போது, பலரும் புரியவில்லை என்றே கூறினர். ஒருவர் ராம கதையுடன் ஒத்துப் போவதாகவும், இன்னொருவர் பக்தி இலக்கியத்துடன் ஒத்துப் போவதாகவும் கூறினர். இப்படி கூறப்பட்ட கருத்துக்களும் வெவ்வேறானவையாக இருந்தன. இன்னும் அநேகர் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீராநதி விமர்சகர் ஜமாலன் எழுந்து, “மல்டி மீடியா வந்த பின்பு அனைவரும் கேட்பதையும் பார்ப்பதையுமே விரும்புகின்றனர். அத்தொழில் நுட்பம் எளிதாகச் சென்றடைவதால் புத்தகம் எடுப்பதைத் தவிர்க்கின்றனர். வாசிப்பு என்பது ஒரு கலை. நாவல் வாசிப்பிலிருந்து நம் வாசிப்புப் பழக்கத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். புத்தகம் வாங்குவது செயல் அல்ல; அது முதலீடு. இன்று எதிலும் துரிதம், துரிதம், துரிதம்! படிப்பதிலும் துரிதமாகப் படித்து துரிதமாகச் சலிப்படைந்து விடுகிறார்கள். மறைமுக அறிவு என்பதே இல்லை. அது நம்மை நிதானமாக வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறது. Reader and text என்பது மாறி இன்று Writer and text என்ற நிலை வந்துள்ளது. அந்த வகையிலே இந்த நாவல் படிமங்களையும், புது உத்திகளையும் கொண்டிருப்பதை நாவலாசிரியர் முன்னுரையிலேயே தெரிவிக்கிறார். இது நம்மை நிதான வாசிப்பிற்கு அழைத்துச் செல்கிறது.

தீராநதி விமர்சகர் ஜமாலன்

இப்போது வாசித்த பகுதியில் வருகிற அத்திரிகப்பா என்ற பெயர் ஓர் அர்த்தமற்ற சொல். தமிழக நாட்டுப்புறக் கதையொன்றில், அத்திரிப்பாச்சா என்ற அர்த்தமற்ற சொல்லை கொளக்கட்டை என்று நினைத்து மனைவியைத் துன்புறுத்திய ஒரு கணவனின் கதை உண்டு. அதைப் போலவே அர்த்தமற்ற ஒரு சொல்லாக அத்திரிகப்பா பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், அதையே அடுத்தடுத்த இயல்களில் படிக்கும் போது அத்திரிகப்பா சொல், பயனற்ற இக்கால அரசியல்வாதியைக் குறிக்கலாம். தமிழவன் எழுதிய, ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ முதலான ஐந்து நாவல்களும் அந்தந்த பத்தாண்டுகளில் உள்ள பிரச்சினைகளை உள்வாங்கி எழுந்தவையாகவே இருக்கின்றன” என்றார்.

சிவசு அவர்கள், “வாசிப்பு முறை எவ்வாறு காலந்தோறும் மாறுபடுகிறதோ அதற்கேற்ப, இன்று நாம் எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். காப்பியங்கள் படித்துக் கொண்டிருந்த நாம் ஆற்றுப்படை போன்ற நூல்கள் எழும்போது, அதற்கேற்ப நம் வாசிப்பு முறையை மாற்றிக் கொண்டோம். அதுபோல இன்று வழக்கமான நூல்களையும், பாடத்திட்ட நூல்களையும் தாண்டி புதிய சூழலுக்கு வந்துள்ளோம். மேலும், வெளிப்படையாக எழுதப்படும் படைப்புகள் எப்போதும் ஒரு பொருளைத் தருவன. அவை ஒரு காலத்தை மட்டுமே நிர்ணயித்துப் பேசுவன. ஆனால், இது போன்ற படைப்புகள் நம்மை வெவ்வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றன” என்றார்.

பெங்களூர் ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக வந்ததால், பிற்பகல் இறுதி அமர்வில் வந்து சேர்ந்தார் தமிழவன். பகலில் பல்வேறு வினாக்களை எழுப்பியவர்கள் அவற்றை தமிழவன் முன்னிலையில் கேட்டார்கள்.

பேரா. ரவிக்குமார்

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேரா. ரவிக்குமார் அவர்கள், “நாடு தழுவிய ஒரு பிரச்சினை இருக்கும் போது அப்பிரச்சினை குறித்துப் பேச, எழுத தடை இருக்கலாம். அச்சூழலில் பூடகமாக அவ்விசயத்தைக் கூற வேண்டிய அவசியம் படைப்பாளிக்கு இருக்கும். ஆனால், அப்படியொரு நிலை இல்லாத இக்கால கட்டத்தில் ஏன் இப்படியொரு நாவல் எழுத வேண்டும்” என்றவர் தொடர்ந்து, “எந்த ஒரு படைப்பிலக்கிய மாகட்டும். சாதாரணமாக, ஒரு திரை இசைப் பாடலாக இருந்தாலும் சரி; அதிலுள்ள இசையாக இருந்தாலும் சரி. அதில் எல்லாவற்றையும் இணைக்கும் ஓர் ஒத்திசைவு இருக்கும். அப்படி ஏதும் இதில் இல்லையே ஏன்?” என்றும் கேட்டார்.

கல்லூரி மாணவி ஒருவர், “நாவலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் தனித்தனித் தலைப்புகளாக உள்ளன. ஒரு தலைப்பிற்கும் அடுத்த தலைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை. இப்படியிருக்கும் போது இதை நாவல் என்பதை விட சிறுகதைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா?” என்றார்.

தமிழவன்

இறுதியாகத் தமிழவன் அவர்கள், பின்வரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கர்நாடக அரசு இலக்கியத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகமான பணத்தை செலவிடுகிறது. அதுபோல கேரளாவில் எழுத்து எவ்வளவோ மாற்றங்களை அடைந்து வருகிறது. ஆனால், நாம் அந்த அளவிற்கு எட்டவில்லை. தமிழகத்தில் ஆயிரம் பக்க நாவல்கள் வரத் தொடங்கியுள்ள இந்நாட்களில், கேரளத்தில் ஐம்பது பக்க அளவிலான மைக்ரோ நாவல்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆயிரம் பக்கங்கள் பேசுகின்ற செய்திகளை ஐம்பது பக்கங்கள் கூறுகின்றன. இது அங்கு பிரபலமாகி வருகிறது. லச்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆகின்றன. அங்குள்ள மக்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கிறார்கள். நான் அதைப் படித்த போது எனக்கு ரொம்ப ஆச்சரியம். தமிழிலும் இந்த மாதிரி வர வேண்டும் என்று விரும்பினேன். அதன் விழைவே இந்நாவல். இது இக்காலச் சூழல்களைக் கொண்டதே. நிகழ்வுகள் படிமங்களாக இருக்கின்றன. தனித்தனி தலைப்புகளாக இருந்தாலும் அனைத்திற்குமான ஒத்திசைவு உள்ளே இருக்கிறது என்று பதிலுரைத்தார்.

தமிழவன்

நானும் இந்த நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்திருந்தேன். முதல் வாசிப்பில் முன்னுரை புரிந்த அளவுக்கு நாவல் உள்ளடக்கம் எனக்கும் புரியவில்லைதான். இருந்தாலும் கூர்ந்து கவனித்ததில், ஆங்காங்கே தமிழ் மொழி, இலக்கணம், தமிழர் பிரச்சினை போன்றவற்றைத் தொடுவது போலத் தெரிந்தது.

பேரா. ரவிக்குமார் வினவிய வினா எனக்குள்ளும் இருந்தது. பாரதி பாஞ்சாலி சபதம் பாடிய போது இருந்த இறுக்கமான சூழல் போன்று இப்போதில்லையே. பிறகெதற்கு இப்பூடகம்? இதன் வழியாக நாவலாசிரியரின் கருத்தோ, சொல்லோ, எடுத்துரைக்கும் நயமோ எதிலும் நமக்குத் தெளிவு பெற முடியவில்லை. ஒரு படைப்பு வாசகனை யோசிக்க வைக்கலாம். ஆனால், எரிச்சலூட்டக் கூடாது. அப்படி நேரும் பட்சத்தில் அதை வாசிக்க வேண்டிய கட்டாயம் வாசகனுக்கு இருக்காது.

நாவலின் முன்னுரையிலிருந்து சில வரிகளை இங்கு எடுத்து வைக்கிறேன்:

“இந்த நாவல் பன்முகத் தன்மைகளைக் கொண்டு புது வகையில் அமைந்திருக்கிறது. அதாவது இதற்குத் தமிழில் முன் மாதிரி இல்லை.”

“இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுத்தாக்கப்பட்டிருக்கின்றன.”

“இதுபோல் ஒரு குறிப்பிட்ட உலக இலக்கிய மரபு பல எழுத்தாளர்களால் சமீபத்தில் உருவாக்கி வருகிறது. ஜேம்ஸ் ஜாய்ஸ், போர்ஹஸ், இட்டாலொ கால்வினோ, மிலராட் பாவிச் மற்றும் பல விஞ்ஞானக் கதைகளை எழுதுபவர்கள் இந்த மரபின் சில இழைகளைக் கையாள்கிறார்கள்.”

முஸல் பனி

“இரண்டு வரிகளில் எழுதியதையும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காதை காதையாக நீளக்கதையை மூன்று காண்டங்களில் எழுதியதையும் தமிழன் அறிந்து அங்கீகரித்துள்ளான்.”

“இந்த நாவலின் இன்னொரு தன்மையாகக் காட்சிகள் வழியே கதையாடல் அடுக்கு அடுக்காகக் கட்டப்படுவதைக் கூற வேண்டும். ஓர் அத்தியாயத்திற்கும் அடுத்த அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கவும் செய்கிறது; தொடர்பு இல்லாமலும் உள்ளது.”

“சீட்டுக்கட்டுப் புனைவுத் தொடர் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு காட்சியும் வெவ்வேறு தர்க்கத்திலிருந்து வளர்க்கப்படுகிறது. உள்ளே ஏதும் இல்லை. ஏன், உள் என்பதே இல்லையே!”

மேலுள்ள குறிப்புகள் ஒரு சில தான். இதற்குள்ளேயே சில முரண்கள் இருப்பதைக் காணலாம். ஒரு நல்ல நாவலுக்கு எந்த ஒரு முன்னுரையும் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால், முன்னுரை வாசகனின் சுய சிந்தனையை சிறைப்படுத்திவிடும் என்பதே என் எண்ணம். 102 பக்கங்கள் கொண்ட இந்த நாவலுக்கு எட்டுப் பக்க முன்னுரை!

முல்லா கதை மட்டுமே தெரிந்திருக்கும், இல்ல, அதுவும் தெரியாமலிருக்கும் இன்றைய இளையோருக்கு, இந்நாவல் அறிமுகம் அவர்களின் வாசிப்பை அச்சுறுத்துமே அன்றி ஆர்வமூட்டாது.

ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டுமென்ற இயல்புகளைக் குறித்து பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறும் போது, “தெளிவின்றி எங்கும் கருகலாய், எவ்வளவு முயன்றாலும் ஐயப்பாட்டின் நீங்காததாய் உள்ள செய்யுட்கள் நாம் கற்று இன்புறுதற்குரிய கவிதைகள் ஆகமாட்டா” என்று கூறுவார். இந்த வரையறை எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

இவை ஒருபுறமிருக்க, தமிழவன் அவர்களின் ஸ்டக்சுரலிஸம் நூல் வெளிவரும் போது நான் சேவியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, தமிழ்த்துறைப் பேராசிரியர்களே அந்நூலிலுள்ள பத்தியளவுள்ள நீண்ட வாக்கியங்களை வாசித்துக் காட்டி, அவற்றைப் புரியாத படிகளென விமர்சித்துக் கொண்டிருந்தனர். அது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதே வேளையில், அது தோன்றிய பின்புதான் தமிழ் இலக்கிய விமர்சனப் பார்வையின் போக்கு மாறியுள்ளது. இலக்கியங்கள் மீது நவீன உத்திகளைப் புகுத்தி வாசகனை மறு வாசிப்பிற்கு உட்படுத்தியது. படைப்பாளிகளும் விமர்சகர்களாகும் நிலை உருவாகியிருக்கிறது என்ற பன்முகச் சாளரம் திறந்ததையும் காண முடிகிறது.

பேரா.சிவசு அவர்கள்

பேரா.சிவசு அவர்கள் எதை எடுத்துச் செய்தாலும் அது எதிர்காலத் தளமாக இருக்கும். அவர் எப்போதுமே அடுத்த தளத்தைப் பற்றி யோசிப்பவர்; நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்பவர். அவர் எடுத்து நடத்தும் பயிற்சிப் பட்டறைகளும் அப்படிப்பட்டதே. அந்த வகையில் தமிழவனின் இந்நாவல் எழுப்பிய வினாக்களாகட்டும்; விடைகளாகட்டும். அவை இப்போது தெளிவின்றித் தெரிந்தாலும் அவற்றின் உண்மைப் புலத்தை காலம் காட்டி விடும்.

* * *

தொடர்புடைய பதிவுகள்:

‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை

நெல்லையில் ஒரு நிகழ்வு