RSS

Category Archives: எழுது புதிது!

மாநிலம் பயனுற

இருள் விலகட்டும்

அசின் சார், கழுகுமலை.

dsc018142-e1534588428234.jpg

“கிர்ர்ர்ரீச்”

துருப்பிடித்த இரும்புக் கதவு

திறக்கப்பட்டது.

 

அந்த மலையின் விலாப் பகுதியில் உள்ள

ஆயிரம் ஆண்டு பழமை சொல்லும்

சமணர் குகை அது.

 

தலை தட்டும் உயரம்தான்.

அண்ணார்ந்து பார்க்க முடியாது.

கண்ணெதிரே காய்த்துத் தொங்குகின்றன

கொத்துக் கொத்தாய் வெளவால்கள்.

அதன் எச்ச நெடியோ மூக்கைத் துளைக்கிறது.

 

சுழன்று பார்த்தால்

சுத்தப்படுத்தாத தரையில்

திட்டுத்திட்டாய் மண்.

படர்ந்து வளரும் பசலைச் செடியாய்

பாறை இடுக்கில் கறையான் புற்று.

 

அங்கிட்டும் இங்கிட்டுமாய்

பழைய வெளக்குமாரும் செருப்பும்.

கூடவே,

குறுக்கும் நெடுக்குமாய்

என்றோ பயன்படுத்திய

இரும்புப் பைப்புகளின் மிச்சம்.

 

இத்தனைக்கும் நடுவே

குகைக்குள் குகை நீள்கிறது.

 

மையிருட்டுப் பாதையில்

குனிந்து தவழ்ந்து சென்றால்

உள்ளே

பாதாளச் சிறை பரிதவிப்பு போல

சின்னஞ்சிறு விளக்கொளியில்

லிங்கமும் நந்தியும்!

 

திறந்து காட்டியவர் சொன்னார்:

“செருப்ப வெளிய கழட்டிடுங்க

சித்தர் வாழ்ந்த இடம்

வேணுங்கிறத மனசுல நெனச்சுக்குங்க

நடக்கும்” என்றார்.

 

விபூதித் தட்டில்

காசு விழும் சத்தம் கேட்டு

வாய் பிளந்தது குகை!

*

 

துஞ்சு விரட்டு

அசின் சார், கழுகுமலை.

துஞ்சு விரட்டு

ந்திணைத் தோட்டத்தில்

பிடிபடாத மொட்டு!

பூக்காது காய்க்காது; புகழ்மொழி யன்றிப்

புவிநீரில் வளராது.

புல் பூண்டு ஆனாலும் – அதன்

பக்கம் நில்லாது.

பாழ் பட்ட தோட்டத்தை

சீர்படுத்த வந்தது நீதித் தீர்ப்பு!

போதையில் திளைத்த வண்டுகள் எல்லாம்

மொட்டையடித்தும் விரதமிருந்தும்

விசுவாசம் காட்டிய போது

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

வெள்ளைக் கொக்குகள்

மீனை மட்டுமே கொத்திச் சென்றன.

திருட்டுப் பார்வை இருட்டுக் கொக்குகள்

ஆற்றைத் தின்று

குளத்தைக் குடித்து

மலையையே விழுங்கி ஏப்பமிட்ட போது

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

மழலைகள் மனை கட்டி விளையாட

ஆற்றுப் படுகையில் மணல் வேண்டி

ஆராய்ச்சி மணி அடித்ததால்

அவர்களையே தேர்க்காலிடும்

புதுநீதிச் சோழனால்

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

முதுகெலும்புகள்

கல்வி நரம்புகளால் முறுக்குறும் போது

பாதைகள் தோறும் போதை மலர்கள் தூவி

மாணவ வயதிலேயே காலனை அழைத்திடும்

அப்பாவித் தமிழனால்

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

பலப்பம் பிடித்தது முதல் பல்கலை வரை

கரம் பற்றிக் கற்றுக் கொடுத்தும்

கட்டை விரல் கேட்காத

துரோணாச்சாரியார்

துன்மார்க்க ஏகலைவன்களால்

பயிற்சிக் களத்திலேயே

படுகொலை செய்த போதும்

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

சமூக அவலமோ சாக்கடை அவலமோ

அதைச் சொல்ல நீ யாரென்று

குரல்வளையை நெறித்த பாசிசத்தின் முன்

மண்டியிட்டு அழுத எழுதுகோலால்

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

புண்ணியம் கோடியாம்

கற்பிக்கும் கல்வி

கட்டுக் கட்டாய் அடுக்கிய

ரூபாய் நோட்டுக் கோபுரத்தில்

எகிறிக் கொண்டதால்

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

பணத்திற்கும் பிரியாணிக்கும்

வாய்பிளந்து வாக்களிக்கும்

வாக்காளர்களால்

நற்சிந்தனையாளர்கள் தோற்றபோது

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

நித்திய ஆனந்தத்தைத் தேடி

போலி மதவாதிகளோடும்

வணிக குருமார்களோடும்

கூட்டம் கூட்டமாய் திரியும் ஏமாளி மக்களால்

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

உடலுக்கும் சூழலுக்கும் ஒவ்வாத

அம்மண ஆடைகளால்

தமிழப் பிள்ளைகள் உலா வரும்போது

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

பச்சை நிலமெல்லாம்

பணமுதலைகளால் பாடை கட்ட

வண்ணத் தூரிகை வரிசையில் நின்று

வாக்கரிசி போட வரவேற்கும் போது

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

மக்கள் நலத் திட்டங்கள் தீட்டி

அதற்கான கோடிகளைத் தின்று தீர்த்து

பெருச்சாளியாய்ப் பெருக்கெடுத்த

அரசியல்வாதிகளால்

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

வளரிளம் குழந்தைகளை

கொச்சைப் பாடல்களுக்கு

மயிலாட மயிராட ஆட்டுவித்து

திராவிடம் வளர்க்கும் சானல்களால்

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

பொங்கல் வைத்துக் கொண்டாடும்

கோமாதா குலமாதா

பாஸ்ட் புட் கடைகளில் வறுபடும் போது

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

மாலையில் மலரும் நாளிதழ்களில்

பச்சை பச்சையாய் பாலியல் பாதகங்கள்

தொடரும் போதும்

தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து போகவில்லை.

 

இன்று

திருநெல்வேலி ஊருக்குள்

திடீரெனப் புகுந்தது சிறுத்தை!

 

ஒரே களேபரம்!

 

திக்குத் தெரியாத காங்கிரீட் காட்டில்

அங்கிட்டும் இங்கிட்டும் தாவி – ஒரு

வீட்டிற்குள் நுழைந்தது.

பின் தொடர்ந்த மீட்பர்கள் – அதன் மேல்

மயக்க ஊசி எய்தனர்.

 

சினம் கொண்ட சிறுத்தை,

“ஊருக்குள்ள வந்தா

முறத்தால தொரத்துறதுதான வழக்கம்!

இதென்ன புதுசா…?

ம்! தமிழ்க் கலாச்சாரம் சீரழிஞ்சு போச்சு!”

முணுமுணுத்தவாறே மயக்கம் போட்டது!

 

குரல்கள்

சிறுகதை : ரஞ்சித் பரஞ்சோதி, பெங்களூர்.

ashera

ரே ஒரு கூக்குரல்தான்.

எனது உடல் மொத்தமும் சரிந்து விழுந்தது.

ஒற்றைக் குரலொலிக்கு உடலை சாய்க்கும் வலிமை இருக்க முடியுமா? கண்டிப்பாக இருக்க முடியும். நம் முன்னோர்கள் எரிக்கோ நகரின் மதிலை எப்படித் தகர்த்தார்கள். இரும்புக் கருவிகளாலா அல்லது கற்கருவிகளாலா? இல்லையே. அவர்கள் வலிமை மொத்தத்தையும் திரட்டி ஓலமிட்டார்களே. அந்தப் பெரும் சப்தமல்லவா எரிக்கோ மதிலை நொருக்கியது. அன்று தங்கள் குரலையல்லவா ஆயுதமாக்கினார்கள். அந்த இஸ்ரயேல் வம்சத்தில் வந்த நம்மில் ஒரு வீரன் இன்று எழுப்பிய கூக்குரல்தான் எங்கள் குரு மரபின் மாபெரும் மதிலான என் மாமனார் ஏலியை தரையில் வீழ்த்தி அவரது உயிரை கையில் எடுத்துக் கொண்டது. பின் காற்றில் மிதந்து வந்து என்னையும் கீழே வீழ்த்தியது.

இப்போது அந்தக் குரல் காற்றில் கரைந்து விட்டது. அழிவின் கூக்குரல் இப்போது காற்றின் திரைகளுக்குள்! நம் சந்ததியினர் அக்குரலை எப்படியும் காலந்தோறும் திரையை விலக்கி கேட்டபடிதான் இருக்கப் போகிறார்கள்.

இன்னும் அந்தக் குரல் என் உடம்பின் சுவர்களுக்குள் பட்டு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. என் வயிற்றில் இருந்த குழந்தையை தள்ளி வெளியே கொண்டு வந்ததும் அக்குரல்தான். பக்கத்தில் என் குழந்தையின் முதல் அழுகுரல் கேட்கின்றது. அவனது அழுகையிலும் அக் கொடூரக் குரல் கலந்துள்ளது. நான் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ஆண் குழந்தை எனத் தாதி சொன்னாள். அவனை ‘இக்கபோது’ – அகன்ற மாட்சி – என நம் மரபினர் அழைக்கட்டும். என் மகனுக்குப் பாலூட்டும் பாக்கியம் எனக்கு இல்லை. இப்போதே என் மார்பிலிருந்து பாலூற்று பெருக்கெடுத்து ஓடட்டும். “என் மகனே, அந்தப் பால் வெள்ளத்தில் இப்போதே நனைந்துவிடு.”

‘போரில் என் கணவன் பினகாசும் என் மைத்துனனும் இறந்து விட்டனர்’. அந்தக் குரல் கொண்டு வந்த முதல் செய்தி இதுதான். இச்செய்தி கேட்டு என் மாமனார் ஏலி அவ்வளவாக மனம் கலங்கவில்லை; நானும்தான். மூதாதையர் காலந்தொட்டு போர் மரணம் என்பது சாதாரணமாகி விட்டது. பழம்பாடல்களில் கூட வீரர்கள் நெடுநாள் உயிர் வாழ்வதில்லை. அந்தக் குரல் கொண்டு வந்த அடுத்த செய்திதான் உண்மையிலேயே சாவின் நிழலை எங்கள் வீடுகளில் விழச் செய்தது.

பென்யமின் குலத்தைச் சேர்ந்த வீரனின் குரல் அது. “கடவுளின் உடன்படிக்கைப் பேழையை எதிரிகள் கைப்பற்றினர். ஐயோ! நம் உன்னதக் கடவுளின் பேழையை எதிரிகள் கைப்பற்றினர்”. இந்தச் செய்திதான், இக்கொடுஞ் செய்திதான் அனைத்தையும் தகர்த்தது. எங்கள் குரு மரபு விருட்சத்தின் வேரில் விழுந்த முதல் கோடரி வீச்சு இச் செய்தி.

இதோ என் கை தொடும் தூரத்தில் அசேரா தெய்வத்தின் சுடுமண் சிலை சிதறி உடைந்து கிடக்கின்றது. அதன் பெருத்த வயிறும் மார்பும் பிளந்து கிடக்கின்றன. உடைந்து கிடக்கும் அவளது வயிற்று ஓட்டின் உட்புறம் பூச்சியொன்றின் மணற்கூடு உள்ளது.

அசேரா! எனதருமை அசேரா! உன்னையும் அக்குரல்தான் வீழ்த்தியதா? உனக்கு உதவ தாதிகள் கூட இல்லையா? எரிக்கோவில் உன் மக்கள் கனானியரை கொன்றொழித்து எங்கள் வெற்றியை அன்று நிலைநாட்டினோம். இன்று எங்கள் கடவுள் பெலிஸ்தியர் கையில் சிறைப்பட்டிருக்கும் அதே சூழல். அன்று எங்களிடம் நீ சிறைப்பட்டாய். எரிக்கோ மதில் நொறுங்கிக் கிளப்பிய புழுதியில் உன்னை ஒழித்து விட்டதாய் என் முன்னோர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் தலைமுறைகள் பல தாண்டி நீ இன்றும் காலத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறாய். அதுவும், உன் மரபைக் குத்திக் குருதி பார்த்த எங்கள் சமூகத்திற்குள்ளேயே ரகசிய வழியில் கடவுளாய் நுழைந்துவிட்டாய். அன்றைய உனது வீழ்ச்சிக்கு இன்று நீ கருணையால் வஞ்சம் தீர்க்கின்றாய்!

நல்லவேளை அசேரா! உனது உடல் மட்டுமே நொறுங்கிக் கிடக்கின்றது. முகத்திற்குச் சேதமில்லை. உன் சுடு மண் இதழ் சுமக்கும் புன்னகை என் வேதனை மாய்க்கும் மருந்து. உன்னை மண்ணில் வடித்த அந்தக் கலைஞன் கண்ணில் துயரையும் இதழில் புன்னகையையும் புகுத்திய மாயம் என்னை  வியக்கச் செய்கின்றது. உன்னைச் செய்த அக்கணம் அந்த உணர்வாகவே அவன் மாறியிருப்பான். கொதிக்கும் உலையில் நீ இருந்த நேரத்திலும் இந்தப் புன்னகையோடுதான் இருந்திருப்பாய். நெருப்பும் பொசுக்க முடியா அந்தப் புன்னகை மட்டுமே எனக்கான ஆறுதலாய் இருந்தது. இன்று உன் புன்னகையால் கூட என் வேதனை தீரவில்லை.

அசேரா, என்னால் இந்த மன வேதனையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னுள் பல குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பயங்கரமான பேரிரைச்சல். இதோ, இன்னுமொரு கூக்குரல் எனது நினைவடுக்கிலிருந்து எழும்பி ஒலிக்கின்றது. ஆம்! அவள்தான். அவளேதான். அசேரா உனக்குத் தெரியுமா அவளை? அவள்தான் ‘அன்னா’. எப்ராயிம் மலை நாட்டைச் சேர்ந்த அன்னா. கடவுள் திருமுன் அன்று ஓலமிட்ட அவளது அதே குரல் இன்று மீண்டும் எனக்குள் ஒலிக்கின்றது. என் உடம்பெல்லாம் அதிர்வது உனக்குத் தெரிகின்றதா? அவளது ஓலத்தின் அலைகள்தான் இந்த அதிர்வுகள்.

என் போன்ற எபிரேயப் பெண்களை எப்படி மதிப்பிடுவார்கள். உடல் நைந்து நாராகக் கிழியும் வரை பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளும் பெண்ணைத்தான் எபிரேயப் பெண்களுள் சிறந்தவளாகக் கருதுவார்கள். அந்தப் பேற்றைப் பெறாதவளாக இருந்தாள் அன்னா. அவளது சக்களத்தி பெனின்னா அவளுக்குச் செய்த கொடுமைகள்தான் எத்தனை? ஒவ்வொரு முறையும் ஆண்டுப் பலிக்காக அவளும் அவள் குடும்பமும் இங்கு வரும் போது அவள் கதறி அழுது பிதற்றியது இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். என் மாமனார் கூட ஒருமுறை அவள் மது அருந்திவிட்டுத்தான் பிதற்றுகிறாள் எனக் கடிந்து கொண்டார்.

என் கணவன் பினகாசும், மைத்துனன் ஒப்னியும் கூடாரத்தில் பணிபுரிந்த பெண்களின் மேல் கைவைத்தபோதும், கடவுளுக்கு படைக்கும் முன் கொழுப்பையும், குடல்களையும் பறித்துக் கொண்ட போதும் அன்னா அவர்களைத் தட்டிக்கேட்டாள். அதற்கு என் கணவன் சொன்னது என்ன? “ஆண்டுப் பலியில் ஒரு பங்கைப் பெறக் கூடத் தகுதியற்ற மலடிக்கு குருமரபினரை எதிர்த்துக் குரல் உயர்த்த எப்படித் தகுதி வந்தது” என அவமதித்தான் . அப்போது எவ்வளவு வேதனையைச் சுமந்தாள். ‘ஒரு மலடி எப்படி என் கணவனுக்கு எதிராய்ப் பேசலாம்’ என நானும் அப்போது கோபம் கொண்டேன்.

என் கணவன் செய்த அநியாயங்கள் கொஞ்சமா? காட்டுப் புறா பலியில் கூட அவன் கை வைத்தான். எங்கள் குடும்பத்தின் மீதான கோபம் இந்தச் சீலோவுக்கு பலி கொடுக்க வந்த ஒவ்வொரு இஸ்ரயேலிடமும் கனன்று கொண்டுதான் இருந்தது. இச்சம்பவங்கள் எல்லாம் உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அசேரா. அப்போது கூடாரத்தின் மணலுக்கடியில் உன்னை நான் புதைத்து வைத்திருந்தேன். அன்று என் கணவனின் வார்த்தைகளால் மனமுடைந்த அன்னா மொத்த அவமானத்தையும் நெஞ்சில் சுமந்து கொண்டு ஊர் திரும்பினாள்.

hanna_reduced

அடுத்த ஆண்டுப் பலிக்குள் கடவுள் அன்னாவுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்து விட்டார். அந்த ஆண்டுப் பலிக்கு அன்னா இங்கு வரவில்லை. அவளது மகன் பால் குடி மறந்ததும் மூன்று காளை, இருபது படி மாவு, ஒரு பை திராட்சை ரசம் இவற்றோடு அந்தப் பிஞ்சுக் குழந்தையையும் சுமந்து கொண்டு இங்கு வந்தாள். அசேரா, அவள் இவ்வழிப் பட்ட அன்று மலை உச்சியிலிருந்தோ, மரத்தினடியிலிருந்தோ நீ அவளை பார்த்திருக்கலாம். அப்போது அவள் கண்களை நீ பார்த்தாயா? கடவுள் கொடுத்த மகனை கடவுளுக்கே காணிக்கையாக்க நடந்து வந்தாளே, அப்போது அவள் இரும்பு மனதை உன்னால் பார்க்க முடிந்ததா?அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் நீ நின்று கொண்டிருந்த மலையுச்சியையும், மரத்தினடியையும் அசைத்திருக்குமே! நம் இலக்கியத்தில் இதற்கு இணையான சம்பவம் வேறு இருக்கமுடியுமா?

ஆபிரகாம் கூட கடவுளின் விருப்பத்திற்குப் பணிந்தல்லவா ஈசாக்கை பலியிட மலை நோக்கிச் சென்றார். அன்னாவோ முன்வந்தல்லவா தன் மகனை காணிக்கையாக்க வாக்களித்தாள். அவள் வந்த வழியில் ஆபிரகாமை வதைத்த அதே அலகை அவளையும் வதைத்திருக்குமா? இல்லை. அவள் வைராக்கியத்தின் முன் அலகை தன்னைக்  கிழித்துக் கொண்டு பாதாளம் நோக்கிப் பறந்திருக்கும். அப்படியொரு வைராக்கியத்துடன்தான் கடவுள் வசித்த இந்தச் சீலோ நகருக்கு அன்று வந்து சேர்ந்தாள் அன்னா.

கடவுளுக்கு காளைகளின் வாசனைமிகு கொழுப்பை எரித்துச் செலுத்திவிட்டு, தன் மகனையும் கடவுள் திருவடியில் ஒப்படைத்து விட்டு அவள் எழுப்பிய கூக்குரல் இன்று எனக்குள் மீண்டும் ஒலிக்கின்றது. அவள் சுமந்த வலிகளும் அவமானங்களும் தொண்டையைப் பிளந்து கொண்டு வந்து கடவுள் திருமுன் கொட்டியது.

“வலியோரின் வில்கள் உடைபடுகின்றன. தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்” என்ற அவளின் முழக்கம் இன்று வில்களை உடைக்கத் தொடங்கி விட்டது.

கடவுளுக்கான நன்றிகள் இருந்த அக்குரலில் எங்களுக்கான சாபமும் இருந்தது. ‘எந்தப் பிள்ளைப் பேற்றை வரமாக நினைத்தார்களோ அதுவே அவர்களின் கொடுஞ் சாபமாய் மாறட்டும்’ என்றாளே. இன்று எனக்கது பலித்து விட்டதல்லவா! பருவம் தப்பிப் பொழிந்த இப்பேறு இன்று என்னை வதைக்கின்றதே. அசேரா, நீயும் சாட்சியாய் இருந்து பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றாய். பிள்ளை பிறப்பின் மகிழ்ச்சியா இன்று எங்கள் வீடுகளில் உள்ளது?

அன்னாவின் அன்றைய கூக்குரலை எங்கள் பழம்பாடல்களுக்கு இணையாக இந்தச் சீலோவில் உள்ளோர் சொல்கின்றார்கள். தீர்க்கதரிசனம் எனவும் சொல்கின்றார்கள்.

“நம் பன்னிரு குலங்களின் ஒரு சகாப்தம் என் மகனால் முடிவுக்கு வரும். அடுத்த பெரும் சகாப்தமும் அவன் கைகளாலேயே தொடங்கும். வாளும் யாழும் ஏந்தி வரும் வீரனின் தலையில் என் மகன் எண்ணெய் வார்ப்பான். அவ்வீரன் தன் யாழ் நரம்புகளை அறுத்தெரிந்து கடவுளின் சட்டங்களை அதில் பூட்டி இசைக்கத் தொடங்குவான். அவ்விசை நம் இனத்தார் மேல் தேன் மழை பொழிய, எதிரிகளின் மேல் கனலாய்ப் பொழியும். அவன் கை வாளினை கடவுளின் வார்த்தைகள் கூர் தீட்டும். அவ்வாளின் வீச்சு நம் இனத்தாரின் தலை நிமிர்த்த, எதிரிகளின் தலைகளை கொய்து வீசும். என் மகன் சாமுவேலால் திருப்பொழிவு பெற்ற அவ்வீரனே இஸ்ரேயலின் மேன்மையை உலகம் புகழச் செய்வான்.” அவளது இவ் வார்த்தைகள் தீர்க்கதரிசனம் போல்தான் உள்ளன. எங்களுக்கோ அவளது வார்த்தைகள் சாபமாய்த்தான் இறங்கின. என் மாமனார் ஏலிதான் எங்கள் குல மரபின் கடைசிக் குருவாய் இருப்பார் எனத் தீர்க்கமாய்த் தெரிகின்றது.

மனித வலி ஓலமாய் வெளிப்படும் போது அது எப்பேர்ப்பட்ட சக்தியாக மாறிவிடுகின்றது. எகிப்தில் எங்கள் மக்கள் சேர்த்து வைத்திருந்த வலிகள் அல்லவா செங்கடலைப் பிளந்தது. உனக்குத் தெரியுமா அசேரா? செங்கடல் பிளந்த அன்று சாதாரண அடிமைப் பெண்கள் கண்ட அற்புதக் காட்சிகள் அளவுக்கு இன்றும் கூட எவரும் கண்டதில்லை. கடவுளின் மனிதர்கள் கூட அப்படி ஒரு காட்சியை இது நாள்வரை காணவில்லை. நாற்பதாண்டுகள் பாலை நிலத்தில் சுமந்த வலியல்லவா எரிக்கோ மதிலை சுக்கு நூறாக்கியது. என் அன்னை சொன்ன அந்தக் கதை இன்னும் வார்த்தை மாறாமல் எனக்குள் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

அசேரா, நீயும் எளிதில் மறக்கக் கூடிய கதையல்ல. யோசுவாவின் தலைமையில் மொத்த மக்களும் எரிக்கோ நகரை சுற்றி ஆறு நாட்கள் வலம் வந்தனர். ஏழாம் நாள் யோசுவா மக்களைப் பார்த்துக் கூறியது: ‘உங்கள் ஆயுதங்களை நீங்கள் நம்ப வேண்டாம். கடவுள் நம் பக்கம். வாக்களிக்கப்பட்ட நாடு நம்மை அடைந்தே தீரும். உங்கள் முன்னோர்கள் அனுபவித்த அடிமைத் துயர் உங்கள் ரத்ததில் உள்ளது. பாலை நிலத்தில் உங்கள் தந்தையர் பட்ட வேதனைகள் உங்கள் நினைவுகளில் அழுத்திக் கொண்டுள்ளது. அத்தனை துயரங்களையும் உங்கள் குரல் வழியாக வெளியே கொண்டு வாருங்கள். சிறு குழந்தையின் குரல் கூட எரிக்கோ மதிலின் ஒரு கல்லையாவது பெயர்க்க வேண்டும்.’

அவர்களின் ஒட்டு மொத்த ஆர்ப்பரிப்பும் எரிக்கோ மதிலில் கீறல்களை உண்டாக்கின. மொத்த சுவரும் தரை மட்டமானது. அவ்வளவு சக்தி வாய்ந்தது மனித வலியின் வல்லமை. மனித வலி எப்பக்கமோ அதுவே கடவுளின் பக்கம். இன்று கடவுள் அன்னாவின் பக்கம். அன்னா என்ற ஒரு எபிரேயப் பெண் சுமந்த வலியல்லவா இன்று நம் கடவுளின் பேழையை கேடுகெட்ட அந்த பெலிஸ்தியர் கையில் கொண்டு சேர்த்துள்ளது. நாம் இப்போது வீழ்ந்து கிடப்பதற்கும் அதுதானே காரணம்.

கடவுளின் பேழையைக் கொண்டு சென்ற அந்தப் பெலிஸ்தியக் கயவர்கள் அனுபவிக்கப் போகும் துன்பத்தை நினைத்து மட்டுமே என்னால் என் துயருற்ற மனதை ஆற்றுப்படுத்த முடிகின்றது. அவர்களின் கடவுள் தாகோனின் அழிவை இனி எவரும் தடுத்து நிறுத்த முடியாது. கடவுளின் மாட்சி வேறொரு நிலத்தில் வெளிப்பட இது சந்தர்ப்பமானாலும், இஸ்ரயேலுக்கு வந்த இந்த இழுக்கை எப்படித் துடைத்தெறிய முடியும்.

ஆடைகளைக் கிழித்துக் கொண்டு விண்ணுலகில் புலம்பி அழுது கொண்டு இருக்கும் கடவுளின் தூய மணவாட்டியே! எங்கள் ஞானத்தாயே! உனது துயருக்கு நிகராகி விடுமா எங்கள் துயரம். உன் பிள்ளைகள் நாங்கள் பெரும் பாவம் செய்துவிட்டோம். நரக அக்னியால் சுத்திகரிக்க முடியாத பாவம். நிரந்தர நரகமே எங்களுக்கான தீர்ப்பு. சர்ப்பமும் ஏவாளும் கூடிப் பெற்றெடுத்த சந்ததியினர் ஆகிவிட்டோம். கடவுளையே தொலைத்துவிட்ட எங்கள் குரு மரபு இனி எந்தத் தகுதியில் ஏபோது பட்டணிந்து அவர் முன் நிற்க முடியும்.

tabernacle_reduced

இதோ கெருபுகளின் இறக்கைகள் படபடக்கும் சப்தம் கேட்கின்றது. கடவுள் பேழையின் புனிதம் காக்க கெருபுகளின் இறக்கைகள் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன. பேழையை சுமந்து கொண்டு நிற்கும் வண்டியில்  நுகம் பூட்டியுள்ள காளைகளின் கழுத்து மணிச் சத்தம் என் உயிரை வதைக்கின்றது. வண்டியை நகர்த்த மனமின்றி காளைகள் முரண்டு பிடிக்கின்றன. காளைகள் மீது விழும் சவுக்கடி என் செவிப்பறையை கிழிக்கின்றது.

தீராத் தாகம் என் நாவில் கசந்து கொண்டுள்ளது. வற்றாத மிரியத்தின் கிணற்றுத் தண்ணீரால் என் நாவை நனைத்திடுங்கள். என் உடலுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த அத்தனை குரல்களும் இப்போது வெளியே வருகின்றன. இதோ, என் உடல் நீண்டு கிடக்கின்றது. வெளியேறிய அத்தனை குரல்களும் என் மீது மோதுகின்றன.

இமை தீய்க்கும் கண்ணீர் உகுத்து அழும் என் மகனின் குரல், என் அன்னையின் குரல், பென்யமின் வீரனின் குரல், கூடாரப் பணிப் பெண்களின் குரல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக ஓங்கி ஒலிக்கும் அன்னாவின் குரல். இப்படிக் குரல்களின் தாக்குதலில் சிக்கிக் கொண்டது எனது உடல்.

அசேரா, இந்தக் குரல்கள் எனது உடலை உடைத்து என் உயிரைத் தூக்கிச் செல்ல விழைகின்றன. எனது உடற் சுவரில் கீறல்கள் விழத் தொடங்கி விட்டன. உடல் மொத்தமும் தரைமட்டமாகப் போகின்றது.

இன்னும் கொஞ்ச நேரத்தில், உன்னைப் போலவே  உடைந்த ஓடாக, உயிர் நீங்கிய கூடாக என்னை நீ காணலாம். உன் சுடு மண் இதழில் எஞ்சியிருக்கும் புன்னகை என்னிலும் தோன்றும். ஆடிப் பிம்பமாய் உன்னை நான் பிரதிபலித்துக் கிடப்பேன்.

* * *

தொடர்புடைய பதிவு: ஓர் Icon ஓவியம்

 

அவனும் அவளும்

அசின் சார், கழுகுமலை.

அவனும் அவளும்

சாப்பிட்டுக் கொண்டிருந்தவள்,

“தோசையை பெறட்டிப் போடுங்களேன்” என்றாள்.

            அவனோ

            தோசைக் கரண்டியைக் கையிலெடுத்து

            ‘சரட்’ டென்று தோசையின் அடியில் விட்டான்.

தோசை

‘விருட்’ டென்று

அடுப்பின் பின்னால் போய் விழுந்தது!

*

“பால் அடுப்பிலே வச்சிருக்கேன்

கொஞ்சம் பாத்துக்கோங்க” என்றாள்.

           கையில் செய்தித்தாளுடன்

           அடுப்பு முன்பு போய் நின்றான்.

காலிங் பெல் அடித்தது.

யாரென்று பார்க்கப் போனான்;

பால் பொங்கி வழிந்து விட்டது.

*

“ஆபீசுக்கு நேரமாச்சு

நான் கெளம்புறேன்

அடுப்புல வெந்நீர் வெச்சிருக்கேன்

நீங்க ஆபீசு போறதுக்கு முன்னால

மறக்காம அணைச்சிடுங்க” என்றாள்.

           அவனோ மறக்காம மறந்திட்டான்!

பிற்பகலில்

வீடு திரும்பும் போது

வெந்நீர் வற்றிய பாத்திரம்

அனலாகித் தகித்தது!

*

தக்காளி கட் பண்றீங்களா?

பிதுங்கிடும்!

*

வெங்காயம்?

கண் கரிக்கும்.

*

பூண்டு உரிக்கீங்களா?

நகம் இல்ல.

*

தேங்கா திருகுறீங்களா?

கையில திருகிருவேன்.

*

பூரிக்கு உருட்டுறீங்களா?

வட்டமா வராதே!

*

இப்படித்தான்

தினம் தினம் அவளிடம்

தோற்றுப் போகிறான்.

           அப்போதெல்லாம்

           ஷோ கேஸில் நிமிர்ந்து நிற்கும் – அவனின்

           வெற்றிக் கோப்பைகள்

           கூனிக் கூனி சிரிக்கின்றன!

* * *

 

ஊர் வலிது!

கதை: அசின் சார், கழுகுமலை.

அசின் சார், கழுகுமலை.

டின் டிடிங் டிங் டிங் டின் டின் …”

தலைமாட்டிற்கு சற்று தள்ளி, லெதர் கவர் தரையில் படும்படி குப்புற வைத்திருந்த சாம்சங் கிராண்ட் செல், காலை மணி ஐந்து ஆனதை, ‘ஓவர் தி ஹோரிசன்’ என்ற மெல்லிய மேற்கத்திய இசை பாடி அறிவித்தது. பழக்கப்பட்ட அவ்விசை அவரின் செவி வழிச் சென்று உணர்வைத் தட்டி எழுப்பியது.

மல்லாந்து படுத்திருந்த அவர் விழித்ததும் இசை வந்த திசை பார்த்தார். கவுத்தியிருந்த செல்லின் அடிப்பகுதியில் கோடுபோல் வெளிச்சம் படுவதைப் பார்த்து, அதை எடுத்து ஆப் செய்தார். மெதுவாக எழுந்து உட்கார்ந்தவர், ஓரிரு நிமிடங்கள் கடவுளை மனதில் நினைத்திருப்பார் போலும். தன் இடுப்பு வரை மூடிக்கிடந்த பெட்சீட்டை விலக்கிவிட்டு எழுந்தார்.

இடுப்பில் நழுவவிருந்த லுங்கியை சரி செய்து கட்டிக் கொண்டே, அடுத்த அறையின் ஓரத்திலிருந்த பாத்ரூம் சென்றார். உள்ளே நுழையும் போதே, வலப்புறச் சுவரிலுள்ள சுவிச்சை ஆன் செய்தார். பாத்ரூம் விளக்கின் வெளிச்சம் ஹால் வரை நீண்டு தரையில் படிந்தது.

அங்கே, மாமா, அத்தை, மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

முகத்தைக் கழுவி வாயைக் கொப்பளித்து விட்டு டவலால் முகத்தைக் துடைத்துக் கொண்டே ஹாலிற்குள் வந்தார். அவ்வறையின் மேற்குச் சுவர் அவ்வீட்டின் பட்டாசல் மாதிரி. தாத்தா காலத்திலிருந்து பேரன் காலம் வரை எல்லோர் போட்டோவும் அங்கே தொங்கிக் கொண்டிருக்கும். அதில் தேசத் தலைவர்களும் உண்டு.

அதிலொரு போட்டோ ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த தன் சட்டையை எடுத்தார். அந்தப் போட்டோவில் அவர் மனைவி குழந்தைப் பருவத்தில் சிரித்துக் கொண்டிருந்தார். அவரையறியாமல் மனதுக்குள் ஒருவித மகிழ்ச்சி. திரும்பிப் பார்த்தார். அத்தையருகில் தன் மனைவி சுருண்டு படுத்திருப்பது, இப்போதும் அவருக்குக் குழந்தையாகவே தெரிந்தது.

சட்டையை மாட்டிக் கொண்டு, தன் செல், டி.வி. அருகிலிருந்த டார்ச் லைட் இரண்டையும் எடுத்துக் கொண்டு வெளியே போகத் தலைவாசல் கதவைத் திறந்தார்.

“மருமகனே, தொணக்கி அவன வேணா எழுப்பிவிடவா?” இருட்டறைப் படுக்கையிலிருந்து மாமாவின் குரல்.

“வேணா மாமா, சும்மா வெளியதான். நானே போயிட்டு வாரேன்” வந்த குரலுக்குப் பதில் சொல்லிவிட்டு, கதவை லேசாக சாத்தியவாறு வெளியே வந்தார்.

வெளித் திண்ணையில், தலை முதல் பாதம் வரை இழுத்து மூடித் தூங்கிக் கொண்டிருந்தான் மாப்ள. அவன் விடும் குறட்டையை ரசித்துக் கொண்டே, வாசலுக்கு வெளியே கிடந்த செருப்பை மாட்டிக் கொண்டு தெருவிற்கு வந்தார்.

*

அரவமற்ற தெரு!

கோழி ஆங்காங்கே கூவிக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் மாடு சோளத் தட்டையை இழுத்து இழுத்து தின்னும் போல! கழுத்துமணி பலமாகவே ஒலித்தது. ஒரு நிமிஷம் நின்னு வடக்குப் பக்கம் பார்த்தார்.

விஜயா பாட்டி முற்றம் தெளித்துக் கொண்டிருந்தார். டார்ச் விளக்கை சொடுக்கி, தெற்குப்புறச் சாலைக்கு வந்தார், அது கொஞ்சதூரம் போய் கயத்தாறு பிரதான சாலையில் சேரும். மண் சாலையாக இருந்த அது, இப்போது சிமெண்ட் சாலையாக மாறியிருக்கிறது. வரிசையாக உள்ள சி.எப்.எல். விளக்குக் கம்பங்களின் வெளிச்சத்தில் சாலை அனாதையாகக் கிடந்தது.

      “காலமே நீ எழுந்து

      கடவுளைத் துதி நன்று

      காலதாமதம் நன்றன்று என் மனமே…”

டி.ஜி.எஸ்.தினகரனின் குரல், வேதக்கோவில் கோபுரத்திலுள்ள ஒலிப்பெருக்கி வழியாக ஊரை எழுப்பத் தொடங்கியது. தன் பாக்கெட்டில் உள்ள செல்லை எடுத்து மெதுவாகப் பார்த்தார்.

இரவில் சில எஸ்.எம்.எஸ்.-கள் வந்து கிடந்தன.

      –  புல் டாக் டைம்

      –  உங்கள் ரேட் கட்டர் முடிய ஒரு நாளே உள்ளது.

      –  பேஸ் புக்கில் புதிய பிரெண்ட் ரிக்கொஸ்ட் .

      –  நேற்று பகலில் கோவில்பட்டி ஏ.டி.எம்.மில் எடுத்த பணத்திற்கு இரவில் வந்து கிடக்கும் செய்தி.

ஒவ்வொன்றையும் பார்த்து விட்டு டெலீட் செய்து கொண்டே மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.

“என்ன அண்ணாச்சி! எப்ப வந்தீக?”

பின்னாலிருந்து குரல்.

திரும்பிப் பார்த்தார். இராமசாமி மகன் ராஜாமணி.

தோளில் மண்வெட்டியும், கையுமாகவும்; மறு கையில் பித்தளைத் தூக்குச் சட்டியுடனும் வந்து கொண்டிருந்தான்.

“வாங்க தம்பி. நான் நைட்ல தான் வந்தேன். வீட்ல எல்லாரும் சுகம் தானே?”

“எல்லாரும் சௌரியந்தேன். மதினி, பிள்ளெக எல்லாம் வந்துருக்காகளா?”

“மதினி வந்திருக்காங்க. பசங்களுக்கு ஸ்கூல் டைம். அதனால வரல.”

“அப்பப்ப கூட்டிட்டு வாங்க. நம்ம சொந்த பந்தம் இன்னாருன்னு அப்பதானே தெரியும்.”

“ஓஎஸ். நிச்சயமா!”

வந்தவர் கடந்து சென்றபின், மீண்டும் கையிலிருந்த செல்லைப் பார்த்தார்.

கான்டெக்ட்ஸ்

சேர்ச்

R…

RU…

RUB…

RUBAN. – பெயர் வர,

டயல் செய்து விட்டு ‘ரிங்’ போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பல்ஸ் ஓட ஆரம்பித்ததும் செல்லை காதில் வைத்தார்.

“ஹலோ! ரூபன்!”

“சார்! குட் மார்னிங். என்ன சார், இவ்ளோ நேரத்துக்கு?”

“குட் மார்னிங் ரூபன், டிஸ்ட்ரப் பண்ணிட்டேனா?”

“நோ நோ, சொல்லுங்க சார்!”

“நான் வொய்ப் ஊருக்கு வந்திருக்கேன். இந்த வில்லேஜில டவர் சரிவர கிடைக்கிற தில்ல. அதான் அதிகாலையிலேயே வெளியே வந்து பேசுறேன். டுமாரோ ஈவ்னிங் நான் இங்கிருந்து சென்னைக்குக் கிளம்பனும், மூனு டிக்கெட் தக்கல்ல போட்டுடலாமா?”

“இவ்ளோதானா? செஞ்சிடுறேன் சார். கன்பாம் ஆனதும், அத உங்க மெயிலுக்கு அனுப்பிச்சிட்டு உங்களுக்குத் தகவல் சொல்லிடுறேன். ம் ம்., மூனு டிக்கெட் யாரெல்லாம் சார்?”

“நானு, வொய்ப், மாப்ள”

“ஓ! அண்ணா அங்க தான் வந்துருக்காங்களா? சரி சார் பன்னிடுறேன்!”

“வேறேதும் விபரம் வேணுமா ரூபன்?”

“வேணாம் சார், உங்க புரூப் தான் என்ட்ட இருக்கே. நானே பாத்துக்கறேன்”

“தேங்ஸ் ரூபன்”

“நல்லது சார்!”

செல்லை பாக்கெட்டில் போட்டார்.

பைபிளில் உள்ள ஏதோ ஒரு பகுதியை, யாரோ ஒருவர் வாசித்துக் கொண்டிருப்பதை  வேதக் கோவில் ஒலிப்பெருக்கி சொல்லிக் கொண்டிருந்தது. அதைக் கேட்டுக் கொண்டே, தெருவிளக்கின் மிதமான வெளிச்சத்தில் அந்த சாலையில் கொஞ்ச தூரம் சென்றார்.

புதிதாகப் பழுக்கத் தொடங்கும் மாம்பழத்தின் நிறம் போல கிழக்கே அடி வானத்தில் செந்நிறம் பரவத் தொடங்கியது.

*

“பர்ர்ர்ரட் பர்ர்ர்ரட் பர்ர்ர்ரட்…”

முக்காடு போட்டு தூங்கிக் கிடந்தவன் தடபுடலாக எழுந்து பார்த்தான். அப்பா திண்ணையில் உக்கார்ந்து கொண்டு அவரின் கெண்டைக் காலை மொட்டக் கத்தியால் பரண்டிக் கொண்டிருந்தார்.

“இது காலா? இல்ல காஞ்சு போன கம்பா? இத இந்தப் பிராண்டு பிராண்டுனா என்னத்துக் காகும்?”

“ஏலேய்! ஊரல் உசிரப் பிடுங்குது. இப்பிடி ரெண்டு இழுப்பு இழுத்தாத்தான் சொகமா இருக்கு?!”

“வெளங்கும். செய்யாதீகனு சொன்னா கேக்கவா போறீக?” சொல்லிக் கொண்டே படுக்கையை மடித்து வீட்டிற்குள் எடுத்துச் சென்றான். அக்கா நடு ஹாலில் உட்கார்ந்து கொண்டு, ஆவி பறக்கக் காபியை ஆத்தி வரிசையாக வைத்திருந்த டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“ஏல தம்பி! இத அப்பாவுக்கும் அத்தானுக்கும் எடுத்துக் கொடுடா.”

அவன் அதை எடுத்து, பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த அத்தானுக்கும், காலை பிராண்டிக் கொண்டிருந்த அப்பாவுக்கும் கொடுத்து விட்டு வந்தான்.

“இந்தாடா உனக்கு!”

காபி டம்ளரை கையில் வாங்கிக்கொண்டு, “அத்தானு! இதெல்லாம் என்ன காப்பி? இந்த ஊருல பொன்னையாக் கோனாருனு ஒருத்தர் காப்பி கடை வைச்சிருந்தாரு. அவரு காப்பி போட்டா ஊரே மணக்கும்.

இந்த ஊர்க்காரங்க காலையில எந்திரிச்சதும், முகத்தக் கழுவி பல்லு தேய்க்கிறதே அவரு கடையிலதான். இதுக்காகவே, அவரு ‘பிரகாஷ்’ பல்பொடி பாக்கெட் பாக்கெட்டா வாங்கிப் போட்டிருப்பாரு. அதிலும் அவரு பார்சல் காப்பி கொடுத்து விடும் அழகே தனி. சுடச் சுட போட்ட காப்பிய டம்ளருல ஊத்தி வட்டகைக்குள்ள தலைகீழாக் கவுத்திடுவாரு பாருங்க;  நாம போயி எடுக்குற வர அந்தச் சூடு அப்பிடியே நிக்கும்.”

பேப்பர் படிக்கிற அத்தானு இதையும் கேட்டுக் கொண்டார்.

“இந்த ஊரு மேலப் பள்ளிகூடத்துல இருந்த ஐயர் வாத்தியாரு அத வாங்கி வரச் சொல்லி குடிப்பாரு. கவுத்திருந்த டம்ளரை எடுத்தவுடனே வகுப்பே காப்பியா மணக்கும். ம்! அத இப்போ நெனச்சாலும் தொண்டக் குழிக்குள்ள டேஸ்ட் வந்து போகுது தெரியுமா?”

வீட்டுக்குள்ளிருந்த அக்கா,

“அப்ப, உனக்குக் காப்பி வேணாமாடா?”

“வேணும் வேணும்! இதக் குடிச்சாத்தானே கக்கா ஒழுங்காப் போவுது.”

“எம்மா, இந்தப் பயலுக்கு இனி காப்பியே கொடுக்காத!” சொல்லிக் கிட்டிருக்கும் போதே,

“அத்தானு, சீக்கிரம் கிளம்புங்க. இன்னைக்காவது கிணத்துல நல்லா நீச்சலடிச்சுக் குளிச்சுட்டு வருவோம்.”

*

பட்டன் மாட்டாத சட்டை; அதுக்குமேல கழுத்துல வளச்சுப் போட்ட துண்டு; ஒரு கையில் சோப்பு டப்பா; மறு கையில் குளோசப் பேஸ்ட்டை பிதுக்கி வைத்திருக்கும் பிரஷ். இவை சகிதமாக வாசலில் நின்றுகொண்டு,

“அத்தானு போகலாமா?” என்று கேட்டான்.

கண்ணாடி முன் நின்று தலையைப் பக்குவமாகச் சீவி; சட்டையின் கடைசிப் பட்டன் வரை மாட்டிக் கொண்டு; துண்டை கையில் மடிச்சி எடுத்துக் கொண்டு வந்தார் – அத்தான்.

இருவரும் கிழக்கு நோக்கி நடையைக் கட்டினர். எதிர்பட்டவர்கள் எல்லாம் குசலம் விசாரித்துக் கொண்டனர். ஆள் தெரியாத நாய்கள் மட்டும் குரைத்தன. வீட்டுக்காரர்கள் வருவது யாரென்று எட்டிப் பார்த்து நாயை அதட்டிக் கொண்டனர்.

அந்தத் தெரு முனையை அடைந்த போது,

“அத்தானு, இது தான் இந்த ஊரு சாதிசனங்க மடம். ஒரு காலத்துல இங்க வரும் அசலூர்க்காரங்க தங்கி ஓய்வெடுத்திட்டுப் போற எடமா இது இருந்திருக்கு. எனக்கு வெவரந் தெரிஞ்ச நாளுல, இது பள்ளிகூடமாத்தான் இருந்துச்சி. அதனால எல்லாரும் இத, ‘மடத்துப் பள்ளிக்கூடம்’னுதான் சொல்வாங்க. இங்க நான் ஒன்னாப்பு படிச்சேன். அப்ப ‘வலச வாத்தியாரு’ன்னு ஒருத்தர் இருந்தார். அவருக்கு சொந்த ஊரு வலசை.  அதனாலதான் அந்தப் பேரு. காலையில வந்ததும் எங்களுக்கு அவர் சொல்ற மொத வேலயே, “சீனிக்கல்லப் பெறக்கிட்டு வாங்கடா”ங்கிறதுதான்.”

“சீனிக்கல்லா? அதெதுக்கு?”

மடத்துத் தரையில “அ,ஆ,இ…” னு எல்லா எழுத்தையும் வரிசையா, சாக்பீசால பெரிசு பெரிசா எழுதி வெச்சிருப்பார். நாங்க பெறக்கிட்டு வந்த சீனிக்கல்ல அது மேல வரிசையா வெச்சு அந்த எழுத்தப் படிச்சுக் காட்டனும். பின்னே, அடுத்த அடுத்த எழுத்துக்கு மாறிக்கணும். அப்பிடி!”

“நைஸ்! இது வேற ஒன்னுமில்ல, இன்னைக்கு கவர்மென்ட் சொல்ற ‘செயல்வழிக் கற்றல்’ முறையத்தான் அவர் அன்னைக்கே செய்திருக்கார். எக்ஸலெண்டு!”

“ம்! இப்போ இங்க பள்ளிக்கூடமும் இல்ல; அந்த வாத்தியாரும் இல்ல. அந்தக் காலமெல்லாம் போச்சு!”

*

வேதக் கோவிலக் கடந்து கிழக்காகப் போகும்போது இடப்பக்கம் ஒரு தெரு தெரிந்தது. ஒரு கணம் நின்று, “அத்தானு அதோ அந்த வளைவில தெரியுது பாருங்க ஒரு வீடு, அத மட்டும் பார்த்துக்கோங்க.”

“ம்”

நடையைத் தொடர்ந்தனர்.

“அந்த வீட்டுல ‘லட்சுமி’னு ஒரு அம்மா இருந்தாங்க. அவங்கள லட்சுமினு சொன்னா யாருக்கும் தெரியாது.

“பின்னே?”

“வருசப் பிள்ளைக்காரினு எல்லாரும் சொல்வாங்க”

“அப்படின்னா?”

“அதாவது, நான் ஆறாப்புப் படிக்கும் போதே அதுக்கு ஏழெட்டுப் பிள்ளைக. வருச வருசம் பிள்ளை பெத்துக்கிறதனால அந்தம்மாவ எல்லாரும் வருசப் பிள்ளைக்காரின்னு கூப்பிட ஆரம்பிச் சுட்டாங்க! சில பேரு, அவங்க வீட்ல வரிசையா பிள்ளைக இருக்கிறதால வரிசைப் பிள்ளைக்காரினும் சொல்லுவாங்க.”

“வெரி இன்ட்ரஸ்டிங்”

“இதுல ஒரு சுவாரஸ்யம் என்னென்ன? அந்தம்மாவோட மூத்த பிள்ளைக, ஒரு கட்டத்துல இந்தம்மாவுக்குப் பிரசவம் கவனிச்சாங்கன்னா பார்த்துக்கோங்களேன்!”

அத்தான் விழியில் ஆச்சர்யம் பிதுங்க, ஒரு முறை அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.

“லெட்சுமி மாதிரி திட உடம்பு இன்னிக்கு யாருக்கிருக்கு? அதனாலதான், மாலு மாதிரி ஆஸ்பத்திரிங்க ஊரு ஒலகத்துல அதிகமாகிட்டே வருது! ம், இது மட்டுமா மாறிப் போச்சு?” மாப்ள சலித்துக் கொண்டான்.

*

ஊர் கடைசியில் கீழத்தெரு முடியும் இடத்திற்கு இருவரும் வந்தனர். அங்கிருந்து வடக்குப் பக்கம் பார்த்தால் கடைசியில் ஒரு நீண்ட சுவரு தெரிந்தது. அது கிருஷ்ணசாமி வீட்டுச் சுவரு.

“அங்க பாத்தீங்களா அத்தானு?”

“என்னது?”

“அதான்! அந்தச் சுவரு”

“ம்! அதுக்கென்ன?”

“பாத்துக்கோங்க, அதப்பத்தி சொல்லுதேன்.”

வந்த தெருப்பாதை ஊரைக் கடந்து தோட்டங்களுக்கு இடையே சென்றது. இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே நடந்தனர்.

“இந்த ஊருல நாட்டாமக்காரு வீடுன்னு ஒன்னு இருந்துது. எனக்குத் தெரிஞ்சு அவங்க குடும்பத்துல யாரும் நாட்டாமயா இருந்ததப் பாத்ததில்ல. இருந்தாலும், வெள்ளக்காரன் காலத்துல அந்த வீட்டுல யாரோ ஒருத்தரு நாட்டாமயா இருந்திருக்காங்க போல. அதனாலேயே இன்னிக்கு வரைக்கும் எல்லாரும் அது நாட்டாமக்காரு வீடுன்னு தான் சொல்லுதாங்க. அவங்க வீட்டு வாரிசா ஒருத்தர் இருந்தாரு. அவரு பேரு உக்கிரபாண்டி.

ஆளு கட்டுமஸ்தான காள மாதிரி! கலரு கொஞ்சம் கம்மினாலும் மடிப்பு விலகாத வெள்ள வேட்டி, வெள்ள சட்டை போட்டுக்கிட்டு சும்மா ஜெகதாண்டமா வருவாரு. ரெண்டு பக்கக் கேராவும் கொஞ்சம் நரைச்சிருந்தாலும், அதுக்கான சாயம் பூசிக்கிற வழக்கமெல்லாம் அவருக்குக் கிடையாது. சேக்குச் சீவி வரும் போது ரஜினிக்கு நெத்தியில சரிஞ்சி விழுற முடிக மாதிரி அவருக்கும் சரிஞ்சி விழும். மீச ரெண்டு பக்கமும் வீச்சறுவாளக் கவுத்திப் போட்டாப்ல இருக்கும்.

கட்டியிருக்கும் வேட்டியப் பின்னங்காலால தூக்கிவிட்டு, கையாள பிடிச்சுகிட்டு, இன்னொரு கையாள மீசைய முறுக்கி விட்டுக்கிட்டே வருவாரு. அவரு தெருவுல நடந்து வர்றதப் பாத்தா சிறுசுல இருந்து பெருசுக வரைக்கும் திரும்பிப் பாப்பாங்க. சாயங்காலம் ஆச்சுன்னா கிழக்க படப்புல மறைச்சு வெச்சிருக்கிற சாராயத்த வாங்கிக் குடிச்சிட்டு மீசய நீவி விட்டுக்கிட்டே வருவாரு!

வந்து, நான் சொன்னேனே அந்தச் சுவருப் பக்கம் நிப்பாரு. அவர் நிக்கிறதே தனி ஸ்டைலுதான். ஒரு காலத் தரையில ஊனிக்கிட்டு, இன்னொரு காலப் பின் பக்கமா மடிச்சு அந்தச் சுவருல மிதிச்சி அடக் கொடுத்துக் கிட்டு, சாஞ்சி நிப்பாரு. கையில புகையக் கக்கிக்கிட்டு சிகரெட்டு இருக்கும். புருவம் வர சரிஞ்சி விழும் முடிய அப்பப்ப மோதிர விரல் தெரியிற மாதிரி வலது கையால மேலாக்கக் கோதி விட்டுக்குவாரு.”

“ஆமா, அவரு ஏன் அங்க நிப்பாரு?”

“அத்தானு, அதாங் ஹாட்ரிக்கு!”

“புரியலியே?”

“சொல்லுதேன், தெனந்தெனம் சாயங்காலம் அவரு அங்க வர்றதே, அங்கிருக்கிற சொக்குத்தாயப் பாக்குறதுக்குத்தான்!”

“என்ன ரொமான்ஸா?”

“ம்! அவரு வந்து நின்னுட்டா, சொக்குத்தாயி என்ன வேல செஞ்சிட்டு இருந்தாலும் அப்பிடியே போட்டுட்டு சேலை முந்தானைய ரெண்டு கையாலையும் சேத்துப் பிடிச்சு திருக்கிக் கிட்டே வந்து நின்னுடுவா! கண்ண உருட்டி உருட்டி அப்பிடி என்னதான் பேசுவாளோ யாருக்கும் தெரியாது. பேசும் போது அவதான் அங்கயிங்க நெளிஞ்சுக்குவாளே தவிர, உக்கிரபாண்டி சுவத்துல சாத்தி வெச்ச வாரியல் கம்பாட்டம் நேராத்தான் நிப்பாரு.

‘சொக்குத்தாயி என்ன சொக்குப்பொடி போட்டாளோ?’னு எல்லாரும் மனசுக்குள்ள சொல்லிக்குவாங்க. யாரு அந்த வழியாப் போனாலும் வந்தாலும் ரெண்டு பேரு கண்ணோ தலையோ கொஞ்சம் கூட எங்கிட்டும் திரும்பாது. போறவங்கதான் கொஞ்சம் தயக்கமாப் போவாங்க. இதனாலேயே, அவங்க அங்கின பேசிட்டு நின்னா அவ்வழியா யாரும் போறதில்ல.

மேல் சாதிக்காரரோட சொக்குத்தாயி சவகாசம் வெச்சிக்கிட்டதால, யாரும் அவகிட்டயோ, இல்ல உக்கிரபாண்டி கிட்டயோ சொல்லிக்க முடியல. இது இப்பிடியே வளந்தது.”

“அவங்க மேரேஜ் பன்னிக்கிட்டாங்களா?”

“அப்புறம், நான்தான் வேலசோலின்னு சென்னைக்கு வந்திட்டேனே! இருந்தாலும், ஊருல நடந்த கலவரத்துல உக்கிரபாண்டி இறந்திட்டதா மட்டும் கேள்விப்பட்டேன். ஆனா, சொக்குத்தாயி என்ன ஆனாங்கிற வெவரந்தான் தெரியல?”

“ஐ திங் அவங்க வாழ்க்கையில ரொமான்ஸ் மட்டுமில்ல, டிராஜிடியும் இருந்திருக்கு! சோ, ஷூயரா அதுக்கு ஒரு ரீசன் இருக்கச் சான்ஸ் இருக்கு!”

“என்ன இருந்து என்ன செய்ய? இன்னிக்கு இந்த ஊரே மாறிப் போச்சே!”

*

அந்த சாலை தெற்குப் புறமாகத் திரும்பும் முன் இடப் பக்கம் இருந்தது பெரியகிணறு. இருவரும் அதன் வாவரைக்கு வந்தனர்.

“ஒரு காலத்துல, மூனு பக்கமும் கமல கெட்டி எறச்ச கெணறு இது. இன்னிக்கு நாலு பக்கமும் ஆயில் மோட்ரா ஆயிடுச்சி?“

அத்தான் உள்ளே எட்டிப் பார்த்தார்.

“இறங்கிறதுக்கு ஸ்டெப்ஸ் சரியில்லியே?”

“ஒன்னும் கவலப் படாதீக! (தெற்குப் புறம் கைய நீட்டி) அதோ தெரியுது பாருங்க மோட்ரு ரூம்பு. அதான் பண்டாரநாடாரு கெணறு. எறங்கி ஏற படி சூப்பரா இருக்கும். தண்ணியும் கண்ணாடியாக் கெடக்கும். வாங்க அங்க போவம்.”

இருவரும் நடையைத் தொடர்ந்தனர்.

ஒரு பக்கம் சோளம் தோள்பட்டை உயரம் வளர்ந்திருந்தது. இந்தப் பக்கம் மிளகாய் தோட்டம். கொத்துக் கொத்தாய் காய்த்திருந்தது. இடையிடையே சிவப்பாய்ப் பழுத்திருந்த மிளகாய்களும் அவர்களை எட்டிப் பார்ப்பதாய் நினைத்துக் கொண்டார்கள். கிழக்கிலிருந்து வீசிய காற்றின் வேகத்திற் கேற்ப சோளப் பயிர்கள் இலைகளை அசைத்துக் கொண்டும் தலையை ஆட்டிக் கொண்டும் இருந்தன. அவைகள் தங்களைக் காண முண்டியடித்து நிற்பதாக மகிழ்ந்து கொண்டே நடந்தார்கள்.

கண்ணுக் கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல்!

கிணற்றை நெருங்கினர்.

அத்தானு உள்ளே எட்டிப் பார்த்தார்.

மலைகோவிலுக்குக் கட்டிய படிகள் மாதிரி இருந்தன. சிலேபி மீன்கள் கூட்டமாக தண்ணீருக்குள் ஆய்ந்து கொண்டிருப்பது மேலிருந்து பார்க்கத் தெளிவாகத் தெரிந்தது.

அதற்குள், சோப்பு டப்பாவையும் டூத்பிரசையும் பூட்டியிருந்த மோட்ரு ரூம்பு படியில வெச்சிட்டு, கழுத்தில் கிடந்த துண்டைத் தலைப்பாகை கட்டிக் கொண்டான் மாப்ள!

“அத்தானு, நீங்க இங்க இருங்க, ஒரு நிமிசம் ‘போயிட்டு’ வந்திடுதேன்.”

“ம்” தலையாட்டிக் கொண்டார்.

லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு தெற்குப் புறம் இருந்த பருத்தித் செடிகளுக்குள் புகுந்தான் மாப்ள. அஞ்சாறு பாத்தி தள்ளிப் போனதும், சுத்தி முத்தி ஒரு பார்வைய வீசிவிட்டு உள்ளே டபக்குனு உக்காந்தான்.

அடி வயிற்றுப் பாரம் கொஞ்சங் கொஞ்சமா குறையத் தொடங்கியது.

முன்னால் இருந்த பருத்திச் செடியப் பாத்துக் கிட்டே ‘இருந்தான்!’

ஒவ்வொரு இலையாகத் தொட்டு, பிடித்துப் பார்த்தான். ஜோதிடம் பார்ப்பவரிடம் கையை நீட்டுபவர் போல பருத்திச் செடி தன் இலைகளை அவனிடம் நீட்டிக் கொண்டிருந்தது.

மஞ்சள் நிறப் பூ, அழகாகப் பூத்து விரிந்திருந்தது. அதன் உள்ளே பித்தக் கையில் மருதாணி ஒட்டியது போன்ற கருரத்த நிறம். அதுக்குள்ள ஏதோ ஒரு எறும்போ குளவியோ இருந்தது? அப்பூவின் பக்கத்திலேயே சிறு சிறு மொட்டுக்கள். அங்கிட்டுச் சின்னச்சின்ன பருத்திக் காய்கள்.

சென்னை நகர, ம்ஹூம்! நரக வாழ்க்கையில தினமும் ரெண்டு தடவ திருவொற்றியூர் டோல்கேட்டுக்கும் வியாசர்பாடி மார்க்கெட்டுக்கும் போயிட்டு வர்றதுக்குள்ள, அய்யய்யய்யோவ்! எத்தன எத்தன சன நெருக்கடி? போதாக்குறைக்கு புழுதி, புகை, தூசி, ஆள அவிச்செடுக்கும் வெயிலு! ம் ம் இந்த இயற்கை அழகெல்லாம் அங்க எங்கிட்டாவது பாக்க முடியுமா?

மன ஏக்கத்தோடு விரலால் செடியின் ஒவ்வொரு அங்கங்களையும் தொட்டு, கண்களால் பசுமையை அள்ளி, மனதில் இருந்த வெற்றிடமெல்லாம் நிரப்பிக் கொண்டிருந்தான்.

அவனுக்குள் எல்லையில்லா மகிழ்ச்சி.

அப்போதவன் வயிறு வெறுமையானது. செடிகளைத் தழுவி தன்னையும் தொட்டுச் செல்லும் மெல்லிய காற்றின் ஸ்பரிசத்தில் மெதுவாக நிமிர்ந்தான்.

எதிரே…

நெடுநெடுன்னு… நெடுமாடு மாதிரி வளந்திருந்த…

நான்கு வேட்டை நாய்கள்!

அவனைச் சுற்றி உட்கார்ந்திருந்தன!?!

நாக்கைத் தொங்க விட்டுக் கிட்டு செடிகளுக்கு மத்தியில் இவை எப்ப வந்து உக்காந்துதுனே அவனுக்குத் தெரியல?!

ஒவ்வொன்னும் இளவட்ட மிடுக்கோடு இருந்தன. பாத்ததும் அவனுக்கு ஒன்னுமே ஓடல. இதயம் படபடத்து வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

கருப்பு மையில குளிச்சு வந்த மாதிரி கருங்கருன்னு அவன் மூஞ்சுக்கு நேரா ஒன்னு. குடிகாரன் கண்ணு மாதிரி லேசான சிவப்புக் கலருல இருந்த அது கண்ணப் பாத்தாலே வில்லத்தனமா தெரிஞ்சுச்சி. காலை சூரிய வெளிச்சத்துல அது ரோமமெல்லாம் மினுமினுத்தது. திறந்த வாயின் பற்கள் எல்லாம் ஜியாகிரபி சானலில் வரும் முதலை வாயை அவனுக்கு ஞாபகப்படுத்தியது.

லேசா திரும்பினா..

இந்தப்பக்கம் வெள்ளையும் காப்பிக் கலருமா இருந்த இன்னோனு வாயை இளித்துக் கொண்டே கொட்டாவி விட்டது. இங்கிலீசுப் படத்துல வர்ற டெவிலுக்கு முளைக்கும் கோரப் பற்களைப் போலவே இருந்தது.

பயத்தில் மெதுவாகத் தலைப்பாகையைக் அவிழ்த்தான்.

ஏதோ செய்யப் போறான்னு நினைச்சுதோ என்னவோ, அவன் செய்கையைப் பார்த்ததும் இடப்பக்கமிருந்த வேறொன்னு காதுகளை விரைப்பாக்கிக் கொண்டு எழுந்து நின்றது.

அவனுக்கோ, வெறும் வயித்துல புளியைக் கரைப்பது போல ஆனான்.

வலப்பக்கமிருந்ததோ சிசிவி காமிரா மாதிரி வச்ச கண் மாறாம அவனயே பாத்துக்கிட்டு இருந்தது.

பாவம் அவன்.. எந்திரிக்க நினைச்சாலோ, தூரத்திலிருக்கிற அத்தானக் கூப்பிட நினைச்சாலோ – அதோ கதிதான்!

‘மெல்லவும் முடியல விழுங்கவும் முடியல’ங்கிறது இது தானோ?

இப்போது அவனுக்குத் தன்னைக் காப்பாத்த எந்தக் கடவுளை கூப்பிடனு தெரியல.

சில நேரம் எலியைப் பிடித்த விளையாட்டுப் பூனை, அதைத் தன்முன் வைத்துக் கொண்டு எங்கிட்டும் போகவும் விடாம; தின்னவும் செய்யாம பாடாப் படுத்தும். அது போல, அவன் இப்போது ஒரு எலியாகிப் போனது போல உணர்ந்தான்.

சென்னை பிரபல கம்பெனியில சேல்ஸ் மானேஜர் உத்தியோகம். எத்தன பேர வெரட்டி வெரட்டி வேலை வாங்கியிருக்கான். ஆனா இன்னிக்கு சொந்த ஊருல கேவலம் இந்த நாய்களுக்கு மத்தியில கூனிக் குறுகி கைதியாட்டம் உக்காந்திருக்கிறத நெனைச்சா அவனுக்கே கேவலமாத் தெரிந்தது!

உடலெல்லாம் வியர்வை ஆறாகக் கொப்பளித்தது. அத்தான் எங்கிருக்கார்னு லேசாக நிமிர்ந்து பார்த்தான். அவரோ கெணத்துப் பக்கத்துல நின்னுக்கிட்டு கையை நீட்டியும் உயர்த்தியும் ஏதோ உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அதுவும் அங்கிட்டாமப் பாத்துக்கிட்டு!

அநியாயத்துக்கு தான் மாட்டிக்கிட்டு முழிக்கிற இந்தக் கொடுமைய யாரிட்டச் சொல்ல? எப்படிச் சொல்ல? கால்களெல்லாம் நடுங்கிப் போக எந்திரிக்க முடியாதவனாய் ஒடுங்கி அப்படியே உட்கார்ந்திருந்தான்.

மெல்லியதாய் வீசிய காற்றுக்கு ஆடிய இலைகளும் பூக்களும் அவனைப் பாத்து ‘மாட்டிக்கிட்டியா? மாட்டிக்கிட்டியா?’ என்று நகைப்பது போலத் தெரிந்தது.

திடீரென…

பக்கத்துத் தோட்டத்துப் பொழியிலிருந்த பனைமரத்தில் காய்ந்து தொங்கிய ஓலை மட்டை சலசலத்துக் கீழே விழுந்தது.

சம்பளத்துக்கு வெச்ச கணக்குப் பிள்ளைய மாதிரி அவனைச் சுத்தியிருந்த நாலு பிசாசுகளும்; அதான், அந்த நாலு நாய்களும் நாலுகால் பாச்சலுல சத்தங் கேட்ட தெசைய நோக்கி ஓடின.

இதான் தாமசம்!

எந்தச் சாமி புண்ணியமோ! தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு நெனச்சவன் வரப்புலயும் பாத்தியிலுமா தாவித் தாவி அத்தானிருந்த இடத்துக்கு மூச்சு இறைக்க ஓடிவந்தான்.

வெவரந் தெரியாத அத்தானு,

“என்ன மாப்ள ஜாக்கிக் ஏதும் போனியா?”னு கேட்டார்.

“நா… உசிரக்… கையில பிடுச்சிட்டு… ஓடியாந்திருக்கேன். ஜாக்கிங்கா..?” மூச்சும் பேச்சுமா சொன்னான்.

“யேன் என்னாச்சி? ஏதும் வைல்டு அனிமெல்ஸ்?”

வாங்கிய பெரும் மூச்சால் நிக்க முடியாதவனாய், மெதுவாகச் சென்று மோட்ரு ரூம்பு தொட்டி விளிம்புல போய் உக்கார்ந்தான்.

“அத்தானு! இந்த ஊருல… அது மாறிப் போச்சு… இது மாறிப் போச்சுன்னு சொன்னேன். ஆனா.., இங்க இருக்கிற… தாயேலி நாய்க மட்டும்… இன்னும் மாறவே இல்ல!”

“என்ன மாப்ள சொல்லுத?”

மூச்சு இறைக்க இறைக்கச் சொன்னான்,

“கொஞ்சம் பொறுங்க… தவிப்பாறிட்டு சொல்லுதேன்.”

* * *

 

கார(ண)ம்!

படம்: கீற்று

காரமே

நீ அதிகமாகி அதிகமாகி

‘அதிகாரம்’ ஆகி விட்டாய்!

           நன்மை செய்யப் பிறந்ததாகக் கூறுகிறாய்

           நீயே சொல்.

           நீ செய்த நன்மைதான் என்ன?

உன் பலம் பெரிதென்று

ஓர் இனத்தை, ஒரு தேசத்தை

அழிக்கத் துடித்தவனுக்குப் பயன்படுகிறாய்.

           காரணம் கேட்டால் – அதி

           காரமே காரணம் என்கிறாய்!

வேலைகளைச் சுமத்தியே பழக்கப்பட்ட நீ

உன் வேலைகளில் மட்டும்

மெத்தனமும் சோம்பேறித் தனமும்!

           கருப்புக் கணக்குகளை எழுதும் போதும்;

           கருப்புப் பணங்களை அமுக்கும் போதும்

           சுறுசுறுப்பாகும் சூட்சுமத்தை

           எங்கு கற்றுக் கொண்டாயோ?

உன் செயல்களைப் பார்த்து

உன் வழித் தோன்றல்களும்

அப்படியே பின்பற்றுகிறார்கள்!

           நான்தான் அரசன்!

           நான்தான் உங்களைக் காப்பவன்!

           என்று கூறி

           மான்களை நீயே வேட்டையாடி விடுகிறாய்.

தமிழ் எழுத்துக்களில்

ஓங்கி ஒலிக்கும் நெடில்களையெல்லாம்

உன்னுடையதாக்கிக் கொண்டாய்.

           கண் திறக்கும்

           கல்வியைப் பார்த்து – உன்

           ஆதிக்கக் கண் அழுது சிவக்கிறது.

உன் ஆட்சியில்

உனக்கு மட்டுமே சுதந்திரம்

என்ற தந்திர சாசனத்தை

நீயே எழுதிக் கொண்டாய்!

           நாட்டரசனும் காட்டரசனும்

           உன் கண்டுபிடிப்புகள்.

எதன் மேலும் நம்பிக்கையில்லாத நீ

நாடாளும் நாத்திகவாதி என்பதை

யாரும் அறிவதில்லை.

           உன்

           கிறுக்கல்களையும் புலம்பல்களையும்

           இலக்கியம் என்கிறாய்.

           கொண்டாடு என்று குட்டுகிறாய்

           எங்களுக்கோ

           தலையும் வலிக்கிறது

           தலைக்குள்ளும் வலிக்கிறது!

திருட்டு யானையில் வலம் வரும் நீ;

மழைக்காலப் பிழைப்புக்காக

உணவைத் தூக்கிச் செல்லும்

எறும்புகளைக் கைது செய்கிறாய்.

           இருட்டறையில் குவிந்து கிடக்கும்

           கருப்பு ஆப்பிள்களின் பேரம் – ஒருபுறம்!

           பாதாள அறை விஷவாயு

           பிரகடனப்படுத்தும்

           ஓலமில்லா மரணம் – மறு புறம்!

           நீயோ

          குளிரறையில் வர்ணம் தீட்டப்பட்ட

           உதடுகளுக்கும், நெடிய நகங்களுக்கும் இடையே!

நீ தவறுகளின் தோற்றுவாய்

செய்பவனும் செய்விப்பவனும்

நீயாக இருக்கவே ஆசைப்படுகிறாய்.

குற்ற ஆவணங்களை

ஆக்குவதும் அழிப்பதும் நீயாக இருக்கும் போது

உன்மேல் யார் குற்றம் சுமத்துவர்?

          இவ்வளவிருந்தும்

          உன்னால் கோலோச்ச முடியவில்லை.

உன்னை துச்சமென நினைத்து

செருப்பை

சிம்மாசனம் ஏற்றிய போது

உன் முகம் கோணியது எங்களுக்கும் தெரியும்!

          அன்பை

          சிலுவையில் அறைந்தது தான்

          உன் உச்சம்!

          என்ன பிரயோஜனம்?

          அது உயிர்த்து விட்டதே!

உன் சர்வாதிகாரம்

சரிந்து வீழ்வது இப்போதாவது தெரிகிறதா?

           உண்மையை ஒத்துக்கொள்.

           அன்பு சாதிப்பதை

           ‘அதிகாரம்’ சாதிக்காதென்று!

                                                                                             – உக்கிரப்பெருவழுதி.

* * *

 

கிளி

கிளி

பூட்டிய கூண்டிற்குள் கிளி.

          தித்திக்கும் பழங்கள்;

          விக்கித்துப் போகாதிருக்கத் தண்ணீர்.

சொன்னதைச் சொன்னாலோ

சொல்வதைச் செய்தாலோ

பாராட்டு!

         கூடுதலாகப் பேசினால்

         வாய்க்கொழுப்பு.

பறக்கத் துடித்தால்

சிறகுகள் துண்டிப்பு.

         அடங்கியிருந்தால்

         அழகான கிளியென்றும்;

         அதிசயக் கிளியென்றும் மெச்சுவார்கள்.

சுவையான பழங்களுக்கும்

புகழார மொழிகளுக்கும் மயங்கிய கிளி

சுதந்திர வெளியை அறியுமா?

          சுதந்திர வெளியை அறிந்திருந்தால்

          இவைகளுக்குத்தான் மயங்குமா?

                                                                                     – அசின் சார், கழுகுமலை.

* * *