RSS

Monthly Archives: திசெம்பர் 2016

உணவு : கருவிகள்

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

கல் தொட்டி

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

முந்தைய பதிவு : மி.மு., மி.பி : உணவு

பதிவு :15

ம் தமிழக மக்கள் மின்சாரத்திற்கு முந்திய காலத்தில் உணவு தயாரிப்பதற்காகப் பயன்படுத்திய கருவிகள் பற்பல. அவை, அவர்கள் வாழிடம் மற்றும் சூழலுக்கேற்ப வெவ்வேறு விதமாகவும் இருந்தன. இருப்பினும், அவற்றில் பொதுத்தன்மையோடு விளங்கிய சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

1. அம்மி:

அம்மி

உணவின் ஓர் அங்கமாக விளங்குவது குழம்பு, கூட்டுக்கறி ஆகியவையாகும். இவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் மசால், தேங்காய் போன்றவற்றை அரைக்கப் பன்நெடுங்காலமாகப் பயன்படுவது கல்லில் செதுக்கப்பட்ட அம்மியும் குழவியுமாகும்.

 2. ஆட்டுரல்:

ஆட்டுரல்

அன்றைய நாட்களில் விழாக்கால சிறப்பு உணவாகத் தோசை, இட்லி, வடை, பனியாரம் போன்றவற்றைச் செய்ய ஊறவைத்த தானியம், பருப்பு வகைகளை மாவாக அரைக்க வேண்டியதிருந்தது. இதற்கு கல்லில் செதுக்கப்பட்ட ஆட்டுரலையே பயன்படுத்தினர். மின்சாரம் வந்தபின் நாகரீக வளர்ச்சியில் இவ்வேலைகளைச் செய்ய மிக்ஸி, கிரைண்டர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழக அரசு இவற்றை இலவசமாகக் கொடுத்ததால் இன்று எல்லா வீடுகளிலும் மிக்ஸி, கிரைண்டர் இருக்கின்றன.

எனவே அம்மி, ஆட்டுரல் இரண்டும் இன்று பயனற்ற பொருட்களாக மாறிவிட்டன. இருப்பினும் நம் கிராமங்களில் மட்டும் இன்றும் ஒரு சிலர் இவற்றைப் பயன்படுத்தி வருவதைக் காண முடிகிறது.

3. குத்துரல்:

குத்துரல்

குத்துரல் என்பது மேலும் கீழும் சமஅளவு வட்ட வடிவமுடையதாகவும், நடுப்பகுதி உடுக்குப்போன்று சிறுத்தும் சுமார் ஒரு முள உயரத்திற்கு கல்லில் செதுக்கப்பட்ட நீள் உருளை வடிவமுடையது. இதன் மேல் வட்டப் பகுதியில் மையத்தில் சுமார் ஒரு சாண் அளவு ஆழத்தில் குழியிருக்கும். இக்குழியின் சுற்றளவு கீழே செல்லச் செல்ல சற்று குறைந்து செல்லும். இந்தக் குழியில்தான் தானியங்களை இட்டு உமிநீக்குதல், நொறுக்குதல், மாவாக்குதல் போன்ற வேலைகளை உலக்கையால் குத்திச் செய்வார்கள். உலக்கை வைத்து இதில் குத்துவதால் இது குத்துரல் என்று காரணப்பெயர் பெற்றது. மக்கள் பெரும்பாலும் உரல் என்றே சொல்வார்கள்.

இது பல அளவுகளில் உண்டு. இன்று எல்லாப் பொருட்களும் கடைகளில் சமைக்கத்தக்க நிலையில் கிடைப்பதால் இது பயனற்ற பொருளாகிவிட்டது. கிராமங்களில் கோவில் கொடை விழா சமயங்களில் மாவிளக்குப் போடுவதற்கு மாவு இடிக்க சிலர் அரிதாகப் பயன்படுத்துகின்றனர். இந்த உரல் பற்றிய செய்தி புறநானூற்றில் பாடல் 333ல் அடி 12ல் “விதைத்தினை உரல் வாய்ப் பெய்து” என வந்துள்ளது.

4. உலக்கை:

உலக்கை

உலக்கை என்பது உரலில் இடப்பட்ட தானியங்களைக் குத்துவதற்குப் பயன்படுவது. இது கனம் மிகுந்த கோங்கு, நாங்கிள், தோதகத்தி (ஈட்டி, Block Wood) போன்ற மரங்களில் கணுக்கள் இல்லாத நேர் கம்புகளின் பட்டையை நீக்கி நன்கு வழுவழுப்பாக இளைத்து செய்யப்படுவது. தேக்குப் போன்ற கனம் குறைந்த மரங்களில் செய்வது சிறப்பாக இருக்காது. இந்த உலக்கையில் ஒரு முனையில் சிறு கிண்ணத்தைக் கவிழ்த்து வைத்தது போன்று இரும்பால் பூண் கட்டியிருப்பார்கள். இப்பகுதியை குப்பிப்பூண் என்றும், குழிப்பூண் என்றும் சொல்வார்கள்.

குப்பிப்பூண் (அ) குழிப்பூண்

இப்பகுதியைக் கொண்டுதான் தானியங்களின் உமியை (மேல்தோடு) குத்தி நீக்குவார்கள். இந்த உலக்கையின் மறுபுறம் அதன் மேல்மட்ட அளவிற்கு மட்டமாக இருப்பதால் பூண் கட்டியிருப்பார்கள். இப்பகுதி மட்டப்பூண் எனப்படும். இப்பகுதியைக் கொண்டுதான் தானியங்களை சமைக்கத் தகுந்த நிலைக்கு மாவும் நொறுங்கலுமாக ஆகும்படி இடிப்பார்கள்.

மட்டப்பூண்

சில உலக்கைகளில் மட்டப்பூண் ஒருபுறம் வைத்து அதன் மறுபுறத்தில் பந்தை பாதி அறுத்து கவிழ்த்து வைத்தது போல் செதுக்கி இரும்பால் வளையல் போன்று பூண் கட்டியிருப்பார்கள். இந்தப் பகுதியைக் கழுத்துப் பகுதி என்பார்கள். மாவு இடிக்க இந்த கழுத்துப் பகுதியைத்தான் பயன்படுத்துவார்கள். உலக்கை சுமார் கைப்பிடி அளவு உருட்டு கொண்டதாகவும், சுமார் 3 அடி முதல் 5 அடிக்கு மிகாமல் பல அளவுகளில் செய்யப்படுவதுண்டு. புறநானூற்றில் 399வது பாடலில் அடி இரண்டில் “தொடிமாண் உலக்கைப் பரூஉக்குற் றரிசி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தொடிமாண் உலக்கை என்பது பூண்கட்டிய சிறந்த உலக்கை என்று பொருள்படும்.

5. உரைப்பெட்டி:

u8

உரலில் இடப்பட்ட தானியங்களை உலக்கையால் குத்தும்போது, அவை வெளியே சிந்திச் சிதறாமல் இருக்கும்படி பாதுகாப்பைத் தருவது உரைப் பெட்டியாகும். கத்திக்கு உரை பாதுகாப்பைத் தருவதுபோல், இது உரலில் இடப்பட்ட தானியங்களுக்குப் பாதுகாப்பைத் தருவதால் உரைப்பெட்டி என்ற காரணப்பெயர் பெற்றது. இதன் கீழ்ப்பகுதி உரலில் வைக்கும் அளவிற்கும், மேல்பகுதி விரிந்து இருபுறமும் திறப்புள்ளதாக, ஓரளவிற்கு ஒலிப்பெருக்கி குழாய் வடிவில் தகரத்தில் செய்யப்பட்டிருக்கும். இதைக் கல்லில் செதுக்கி வைத்திருப்பதையும் அரிதாகப் பார்த்திருக்கிறேன்.

6. குந்தாணி:

குந்தாணி என்பது மேலே சொன்ன உரைப்பெட்டி போன்று பெரிய அளவில் தகரத்தில் செய்யப்பட்டது. நெல் மணிகளை அரிசியாக்க அதிகமாக இட்டுக் குத்த வேண்டியதிருப்பதால் உரலில் இட்டுக் குத்த முடியாது. ஆகவே, தரையில் சுமார் 1 ½  அடி நீள, அகலத்திற்கு சதுரக் கல் பதித்து, அதில் இக்குந்தாணியை வைத்து நடுவில் நெல் மணிகளைக் கொட்டி, அதைக் குத்தி அரிசி எடுப்பார்கள். நான் சிறுவனாய் இருந்த போது எங்கள் வீட்டுத் தரையில் ஓரிடத்தில் இது போன்ற கல் பதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கல்லின் மீது குந்தாணியை வைத்து என் தாய் நெல்லைக் குத்தி அரிசி எடுப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

7. சுளவு:

சுளவு

சுளவு என்பது பனையோலை, பனை நார், பனைமட்டை இவற்றைக்கொண்டு செய்யப்படுவது. இதைச் சுளவு என்றும் சொளவு என்றும் முறம் என்றும் சொல்வார்கள். இதில் சுளவு என்பது புறநானூற்றில் பாடல் 249, அடி – 12ல், “நீறாடு சுளிகின் சீறிடம் நீக்கி” என்றும்; பாடல் 321ல் அடி 3ல், “சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு” என்றும் சொல்லப்பட்டுள்ளது. முறம் என்பது புறநானூறு பாடல் 339ல் அடி – 13ல், “முறஞ்செவி யானை வேந்தர்” என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் முறம் என்பது யானையின் செவிக்கு (காதிற்கு) உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

குத்துரல் & சுளவு

இந்தச் சுளவு என்பதை இருகைகளாலும் பிடித்து அசைக்கும் மாறுபாட்டால், 1.பிடைத்தல், 2. நாவுதல், 3. கொளித்தல், 4.தெள்ளுதல் என்ற நான்கு முக்கியச் செயல்களைச் செய்வார்கள். அதாவது, 1.பிடைத்தல் என்ற செயலினால் தானியங்கள், பயறுகள் எள் போன்றவற்றில் கலந்துள்ள தூசி, தொலி போன்றவற்றை நீக்குவார்கள். 2. நாவுதல் என்ற செயலினால் அவற்றில் கலந்துள்ள கற்களை நீக்குவார்கள். 3.கொளித்தல் என்ற செயலினால் எள் போன்ற சிறு பொருள்களில் கலந்துள்ள குறு (சிறு) மணல்களை நீக்குவார்கள், 4.தெள்ளுதல் என்ற அசைவினால் உரலில் இட்டுக் குத்தி எடுத்த அரிசி போன்றவற்றில் கலந்துள்ள தவிடு என்பதைப் பிரித்து எடுப்பார்கள். இவ்வாறு சுளவு என்ற ஒன்றை வைத்துக் கொண்டு, அதை அசைக்கும் மாறுபாட்டால் பல செயல்களைச் செய்வது அன்றையப் பெண்களுக்கு மிகச் சாதாரணமான செயலாகும். இன்றும் கிராமங்களில் இவற்றைச் செய்யக்கூடியவர்கள் இருக்கின்றார்கள்.

8. திருகல் (திருவை):

திருகல் (திருவை):

திருகு என்றால் முறுக்குதல், சுற்றுதல், சுழற்றுதல் என்று பொருள்படும். ஆகவே சுற்றக்கூடிய அமைப்பில் உள்ள கல் “திருகல்” ஆகும். இந்தத் திருகல்லை, பேச்சு வழக்கில் “திருவை” என்றும்; “திருவல்” என்றும் சொல்வார்கள். இது கீழும் மேலுமாக இருவட்ட வடிவக் கற்களால் ஆனது. கீழேயுள்ள கல்லின் மீது மேலேயுள்ள கல் விலகாமல் சுற்றும்படி நடுவில் முளைக்குச்சி என்பதை அடித்து (பதித்து) வைத்திருப்பார்கள். மேலேயுள்ள கல்லின் நடுவில் இம்முளைக்குச்சி சென்று சுலபமாகச் சுற்றும்படி துளை இருக்கும். இந்தத் துளையின் மேல்பகுதியில் தானியங்கள், பயறுகள் போன்றவற்றைப் போடுவதற்காகச் சற்று அகலமாக இருக்கும். இந்த மேல்கல்லின் வெளிவட்டப் பகுதியின் ஓர் இடத்தில் சிறு புடைப்பாக அரைவட்ட வளைவு செய்து அதில் ஓர் குச்சி அடித்து வைத்திருப்பார்கள். இக்குச்சியைப் பிடித்துத்தான் திருகல்லை இழுத்து சுற்ற வேண்டும். இதில் மாவாகத் திரிக்க வேண்டிய தானியத்தைப் போட்டு சுற்ற அத்தானியம்  மாவாகக் கிடைக்கும். எங்கள் வீட்டில் கருங்கல்லில் செய்யப்பட்ட பெரிய திருகல் இருந்தது.

என் அம்மா கீழே துணி விரித்து அதில் அத்திருகல்லை வைத்து கேப்பை (கேழ்வரகு)யை போட்டு திரிக்கும் போது சுற்றி விழும் கேப்பைமாவை ஓர் ஓலையால் அள்ளித் அள்ளித் தின்றது இப்போதும் நினைவில் இருக்கிறது. இத்திருகல்லில் இரண்டுவகை உண்டு. அதாவது கனம் அதிகமாகவும், பெரிய அளவிலும் உள்ளது மாவு திரிக்கப் பயன்படும். மற்றொன்று உளுந்து, பாசிப்பயறு, தட்டாம்பயறு போன்ற பயறு வகைகளை இரண்டாக உடைத்து, பருப்பு எடுக்கக் கனம் குறைந்த சிறிய அளவிலான திருகல்லும் உண்டு. மாவாகத் திரிக்கும் பெரிய திருகல் இன்று முற்றிலும் பழக்கத்தில் இல்லை. சிறிய திருகல்லைக் கிராமங்களில் பயறு வகைகளை உடைக்க ஒருசிலர் இன்றும் பயன்படுத்துகின்றனர்.

9. துடுப்பு:

துடுப்பு

இன்று கிரிக்கட் விளையாடப் பயன்படுத்தும் மட்டை போன்று சிறிய அளவில் பனைமட்டையால் செதுக்கப்பட்டது “துடுப்பு” என்பதாகும். அன்றைய உணவுகளைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களில் இதுவும் ஒன்றாகும். எவ்வாறெனில் கம்மஞ்சோறு, சோளச்சோறு, கேப்பைக்கழி போன்ற உணவுகள் சமைக்கப்படும் போது அவற்றை மீண்டும் மீண்டும் கிண்டி விட்டு வேகவைக்க வேண்டும். அவ்வாறு கிண்டி விடுவதற்கு இத்துடுப்பே பயன்பட்டது. புறநானூற்றில் பாடல் 328 ல் அடி 10, 11ல், “அரிசியொடு நெய்பெய்து அட்டுத் துடுப்பொடு சிவனிய களிக்கொள் வெண்சோறு” என்றும்; பாடல் 372ல் அடி 7ல், “:வன்னியர் துடுப்பின்” என்றும் துடுப்பு என்பது காணப்படுகிறது. இன்றும் தைப்பொங்கல் சமயங்களில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் இடும்போது பலர் துடுப்பு வைத்தே கிண்டி பொங்கல் தயாரிக்கின்றனர்.

10. கவைக்கம்பு:

கவைக்கம்பு

இரண்டாகக் பிரிந்து (பிளவுபட்டு) இருப்பதை “கவை” எனச் சொல்வார்கள். பொதுவாக எல்லா முட்களும் இரண்டிரண்டாக மாட்டின் இரு கொம்புகள், போன்று பிரிந்தே இருக்கும். ஆகவேதான், புறநானூற்றில் பாடல் 322ல் அடி 2 ல், “கவைமுள் கள்ளில் பொரி அரைப் பொருந்திய” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டாகப் பிரிந்து ஆங்கில எழுத்து Y போன்றுள்ள கம்பை கவைக்கம்பு என்பார்கள். மூதுரை என்ற நூலில் பாடல் 13ல், “கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்” என வந்துள்ளது. இவ்வாறுள்ள கவைக்கம்பு அன்று கேப்பைக் கழியைத் துடுப்பு வைத்துக் கிண்டும்போது பானை சுற்றாமலும் அசையாமலும் இருக்கும்படி பானையைப் பிடித்துக் கொள்ள இக்கவைக் கம்பு பயன்படுத்தப்பட்டது.

11. புளித்த தண்ணீர்:

புளித்த தண்ணீர் என்பது அன்றை மக்கள் தங்களின் உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்திய நீர். இது புளிப்புத் தன்மை கொண்டது. வடித்த சோற்று நீருடன் (வடிநீர்) தண்ணீரும் உப்பும் சேர்ந்து வைத்தாலோ; அல்லது வீட்டிலுள்ள ஏதாவது சோறு சிறிது எடுத்து அத்துடன் தண்ணீரும் உப்பும் சேர்த்து வைத்தாலோ மறுநாளில் புளிப்புத் தண்ணீராக மாறி நமக்குக் கிடைக்கும். இதைப் புளித்த தண்ணீர், புளிச்ச தண்ணீ, புளிச்சாணி, நீராகாரம், நீஸ்தண்ணி, காடித்தண்ணி (காடி என்றால் புளிப்பு என்று பொருள்) என்று பல பெயர்களில் சொல்வார்கள். அன்று எல்லோர் வீடுகளிலும் இத்தண்ணீர் ஒரு பெரிய பானை நிறைய எப்போதும் இருக்கும். இதன் புளிப்புத்தன்மை அதிகமாகி விட்டால் பானையிலிருந்து சிறிது எடுத்துவிட்டு பச்சைத் தண்ணீர் ஊற்றி புளிப்பைக் குறைப்பார்கள். இல்லையேல், முற்றிலும் மாற்றி புதிதாகத் தயாரித்துக் கொள்வார்கள்.

புளித்த நீர் பானை

சோறு சமைக்க உலை வைக்கும் போது சோறின் வகையைப் பொருத்து இத்தண்ணீரைச் சேர்ந்து உலை வைப்பார்கள். இதை உலை நீர் என்பார்கள். இந்த புளித்தநீர் என்ற காடிநீர் பற்றி புறநானூற்றுப் பாடல் 399ல் அடி 3ல், “காடி வெள்ளுலைக் கொளீஇ” என்று வந்துள்ளது. இன்று காலையில் எழுந்ததும் சிறுவர் முதல் பெரியவர் வரை காப்பி, டீ, குடிக்கும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், காப்பி, டீ என்றால் என்னவென்று தெரியாமலும் பழக்கத்திற்கு வராமலும் இருந்த அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்தப் புளித்த தண்ணீரை உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லிக் குடித்து வந்தனர். இன்று அன்றைய உணவுகளுமில்லை; புளித்த தண்ணீர்ப் பானையும் இல்லை. “கஞ்சி போயி காப்பி வந்த காலமடி காலம்” என்ற திரைப் பாடலின் காலமாக இன்று மாறிவிட்டது.

12. பாத்திரங்கள்:

பொதுவாகப் பாத்திரங்களை இரு வகையாகப் பகுக்கலாம். ஒன்று, சமையல் செய்யத் தேவையான பாத்திரங்கள். மற்றொன்று தண்ணீர் எடுத்துவர, எடுத்து வந்த தண்ணீரை சேமித்து வைக்கத் தேவைப்படும் பாத்திரங்கள். இதில் தண்ணீர் எடுத்து வரவும்; அதை சேமித்து வைக்கவும் இன்றுள்ள மக்கள் பிளாஸ்டிக் குடம், பிளாஸ்டிக் பேரல் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். அடுப்பில் வைத்து சமைக்க அலுமினியம், எவர்சில்வர் இவற்றாலான பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். நான் சிறுவனாயிருந்த அக்காலத்தில் அலுமினியம், எவர்சில்வர், பிளாஸ்டிக் என்று எதுவும் வராத காலம். அன்று சாதாரண மக்களின் வீடுகளில் தண்ணீர் எடுத்துவர மண் குடங்களையே பயன்படுத்தினர். எடுத்து வந்த தண்ணீரை சேமித்து வைக்கப் பானை, தொட்டி என்று அனைத்தும் மண்ணால் செய்யப்பட்டதாகவே இருந்தன. சிலர் கல்தொட்டிகளையும் பயன்படுத்தினர். இதுபோக சமைக்கப் பயன்படும் பானைசட்டி, தோசை சுட தோசைக்கல், குழிப்பனியாரம் சுட பனியாரச்சட்டி, காட்டிற்கு கஞ்சி கொண்டு சென்று சாப்பிட கஞ்சிக்கலயம் என்று அனைத்தும் மண்ணால் செய்யப்பட்டவையாகவே இருந்தன. சோறு, குழம்பு இவற்றை எடுக்கத் தேங்காய் சிரட்டையில் செய்த அகப்பைகளே பயன்படுத்தப்பட்டன.

பாத்திரங்கள்

பொருளாதார வசதி உள்ள வீடுகளில் மட்டும் சில உலோகப் பாத்திரங்கள் உபயோகத்தில் இருந்தன. குறிப்பாகப் பித்தளையில் செய்த குடம், பானை, குத்துச்சட்டி, அண்டா (கொப்பரை), சிறுசட்டி, செம்பு போன்ற பாத்திரங்களும், வெங்கலத்தால் செய்த பானை, கும்பா, வட்டில் போன்றவற்றையும், செம்புப் பானையும் (Copper pot) பயன்படுத்தப்பட்டன. பித்தளைப் பாத்திரங்களில் புளித்த உணவுப் பொருள்களை வைத்தால் அவை காய்த்துப் போய்விடும். அதாவது, உண்ணத்தகாததாக மாறிவிடும் என்பதால் அப்பாத்திரங்களின் உட்புறம் ஈயம் பூசிப் பயன்படுத்தினர். ஆகவே, அன்று ஊர் ஊராகச் சென்று பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசித் தருதல் என்ற தொழிலைச் செய்து பிழைப்பவர்களும் இருந்தனர். இன்று இப்பாத்திரங்கள் அன்று போல் உபயோகத்தில் இல்லை. ஆகவே, ஈயம் பூசுதல் என்ற தொழிலைச் செய்து பிழைப்போரும் இல்லை. காலம் செல்லச் செல்ல முதலில் அலுமினியப் பாத்திரங்களும், அதன்பின் எவர்சில்வர் பாத்திரங்களும், கடைசியாக பிளாஸ்டிக் பாத்திரங்களும் வந்தன. இன்று பித்தளை, வெங்கலம், செம்பு இவற்றாலான பாத்திரங்களை சிலர் கௌரவத்திற்காக வீட்டில் வைத்துள்ளனர். மேலும், பெண்களின் திருமணத்தின்போது இப்பாத்திரங்களை சீதனப் பொருளாகக் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

மி.மு.,மி.பி.,வளரும் …