RSS

“கழுகுமலை” லூர்து வாத்தியார்

14 ஆக

அசின் சார், கழுகுமலை.

கழுகுமலை லூர்து வாத்தியார்

பொக்கை வாய், சோடாபுட்டி மூக்குக் கண்ணாடி, சதையெல்லாம் வற்றி சுருக்குகள் பரவிய தலையில் கொஞ்சம் நரைத்த முடி, வரிச்சிக் கம்புல மனுஷ உருவம் செஞ்சு அதுக்கு வேட்டி சட்டை போட்டுவிட்ட மாதிரி உடம்பு. இவர்தான் லூர்து வாத்தியார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் வடகோடியில் உள்ள நாலாந்துலாதான் இவரது சொந்த ஊர். இருந்தாலும், இவர் அதிகம் இருந்தது கழுகுமலையில்தான். அதனால் கழுகுமலை லூர்து வாத்தியார் என்றே அனைவராலும் அறியப்பட்டவர்.

எனக்குத் தெரிஞ்சி கழுகுமலை மாதா கோயில் மாணவர் விடுதியில் கண்காணிப்பாளரா ரொம்ப நாள் இருந்திருக்கார். பார்க்கும் போதெல்லாம், “என்ன பேரப்புள்ள சௌக்கியமா?”னு ஆசுவாசமாய் கேட்பார். தொண்ணூறு வயதைத் தாண்டியவர் என்பதால் ஊருக்குள் இருக்கும் பலரும் இவருக்குப் பேரப்புள்ளதான்!

தள்ளாத வயது என்றாலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாலாந்துலாவில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கழுகுமலை மாதா கோயிலுக்குத் திருப்பலி காண சிரமம் பாராமல் பஸ் ஏறி வந்துவிடுவார். அப்படி வருபவர் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வரை உள்ள முக்கால் கிலோமீட்டர் தூரமும் நடந்தே வந்துவிடுவார். எப்போதாவது நான் டூ வீலரில் செல்லும் போது எதிர்பட்டால், அவரை தவறாமல் என் வண்டியில் ஏற்றிக்கொண்டு அவர் விரும்பும் இடத்தில் சேர்த்திருக்கிறேன். இருந்தாலும், இப்படிப்பட்ட உதவியையெல்லாம் எதிர்பார்ப்பவர் அவர் அல்லர்.

பாளை மறைமாவட்டத்தில் கழுகுமலை வின்சென்ட் தெ பால் சபை கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சோம்பலின்றி அங்கு சென்று கலந்து கொள்வார். அக்கூட்டங்களில் தம் ஊர் சார்பான அறிக்கையை மிகவும் விருப்புடன் வாசித்தளிப்பார். அப்போது, இன்றைய தூக்கம் பிடித்த இளையோருக்கு மத்தியில் அவர் முதுமை இளமையாய்த் துளிர் விடும்.

கழுகுமலை லூர்து வாத்தியார்

நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு ஒருமுறை ஒரு மாணவனை அழைத்து வந்தார். அட்மிஷனெல்லாம் முடிந்த நேரம் அது. வந்தவர், “இது கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நம்ம கிராமத்துப் பய. இவன இங்க சேக்கணும்”னார். தலைமையாசிரியர், “அட்மிஷன் முடிஞ்சிருச்சி. இருந்தாலும் ஐயா கூப்பிட்டுட்டு வந்ததால சேக்கலாம். ம்! எழுதப் படிக்கத் தெரியுதானு மட்டும் பாருங்க”னார்.

ஒரு புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னா, அவன் பேந்தப் பேந்த விழித்தான். நான் மெதுவாகத் தாத்தாவிடம், “என்ன தாத்தா, பயலுக்கு ஒன்னுமே தெரியலியே?”னு இழுத்தேன். மெல்லிய புன்னகையோடு நிதானமாகச் சொன்னார், “பேரப்புள்ள, அவனுக்கு எல்லாந் தெரிஞ்சா நான் எதுக்கு வாறேன்?” னார்.

அந்த அளவுக்கு இயலாத வீட்டுப் பிள்ளைகள் கல்வி பெறுவதில் திண்மை கொண்டவர் மட்டுமல்ல, உடன் சென்று உதவி செய்யக் கூடியவர்.

ஒரு சமயம், தூத்துக்குடியில் பெருந் தொழிலதிபராய் இருக்கும் கழுகுமலையைச் சார்ந்த திரு.அண்ணாமலைச்சாமி அவர்களின் கழுகுமலை வீட்டில் நடந்த நிகழ்வில் தாத்தா அவர்கள் கலந்து கொண்டார்கள். அது ஒரு வழிபாட்டு நிகழ்வு. அந்நிகழ்வின் இறுதியில், தொழிலதிபர் அண்ணாமலைச்சாமி அவர்கள் அவருடைய ஆசிரியரான லூர்து வாத்தியார் பாதத்தில் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

“ஒரு மனிதன் தன் வாழ்க்கை நிலையில், சமூக நிலையில், பொருளாதார நிலையில் எந்நிலைக்கு உயர்ந்தாலும்; தன் ஆசிரியரிடம் காட்டும் மரியாதைக்கும், தாழ்ச்சிக்கும் இதுவே தக்க சான்று” என்று நேரில் பார்த்த என் தந்தை கூறினார். அதன் பின் ஒருமுறை தாத்தாவை நேரில் சந்திக்க நேர்ந்த போது அவரிடம் கேட்டேன். “மிகப்பெரிய தொழிலதிபர் உங்கள்மேல் அளப்பரிய அன்பு வைத்திருப்பதன் காரணம் என்ன?” என்றேன். என் கையைப் பிடித்துக் கொண்டு அவருக்கே உரிய பொக்கை வாய் புன்னகையோடு கூறத் தொடங்கினார்.

“அக்காலத்தில் ஒரு சமயம், நாடு முழுக்க மிகப் பெரிய வறட்சி நிலவியது. கொளுத்தும் வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் ஆடுகள் தானாகப் பலியான கொடூர காலம். அப்போ ஒருநாள், நம்ம மாதா கோயிலின் முன்பு மாணவர்கள் அனைவரையும் வரிசைப்படி நிறுத்தி முழந்தாளிடச் செய்து, அவர்களோடு சேர்ந்து நானும் வானத்தை நோக்கிக் கைகளை விரித்து செபிக்க ஆரம்பித்தேன். மழைக்கான செபத்தை அனைவரும் சேர்ந்து சொல்லச் சொல்ல எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை. கருமேகங்கள் மூட்டம் மூட்டமாய் கிளம்பி வந்து வானத்தைப் பிளந்து கொண்டு பெருமழை கொட்டியது. நனைந்த படியே நாங்கள் செபித்துக் கொண்டிருந்தோம். அன்று செபித்த மாணவர் கூட்டத்தில் ஒருவராக இருந்த நம் அண்ணாமலைச்சாமி மனதில் இந்நிகழ்வு கல்வெட்டாய் நிலைத்து விட்டது” என்றார். அவர் சொல்லி முடித்த போது நானே ஒரு நிமிஷம் மெய் சிலிர்த்துப் போயிருந்தேன்.

“குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு அவர்களதே” என்ற விவிலிய வரிகளை அறிவேன். ஆனால், குழந்தைகளைக் கொண்டு வேண்டியதால் விண்ணகமே திரண்டு வந்து பொழிந்த உண்மை நிகழ்வை இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். கற்பனையாகக் கூட நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. ஒரு நிகழ்வு எல்லோருக்கும் ஒரே விதமான தாக்கத்தைத் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அங்கிருந்த மாணவர்களில் ஒருவரான அண்ணாமலைச்சாமி அவர்களுக்கு மட்டும் இந்நிகழ்வு குருபக்தி என்னும் விதையை ஆழமாக விதைத்துவிட்டது.

இதற்குப்பின் தாத்தாவைப்பற்றி இன்னும் நிறைய கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா எனக்குள் நிறைய எழுந்ததுண்டு. அதற்கான வாய்ப்பினைத் தேடிக் கொண்டிருந்த எனக்கு, எங்கள் பள்ளி இதழ் தக்க தருணமாக அமைந்தது. அதில், இவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுத முடிவு செய்து, நேரில் சந்திக்க நாலாந்துலாவில் உள்ள அவரது வீட்டிற்கே சென்றேன்.

அப்போது அவருக்கு வயது 93 (2010), மனந்திறந்து பேசினார். “கழுகுமலை புனித மரியன்னை ஆரம்பப் பள்ளியில் 37ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். 1918–இல் பிறந்த நான் நான்கு தலைமுறைகளைப் பார்த்து விட்டேன். 1941–இல் ஆசிரியராக நான் பணியில் சேர்ந்தபோது என்னுடைய முதல் மாதச் சம்பளம் ரூ.12/-“ என்று தன்னைப்பற்றி விவரிக்கத் தொடங்கினார். அவர் பேசியவற்றிலிருந்து சிலவற்றை இங்கு தொகுக்கிறேன்.

“கழுகுமலை கிரிப்பிரகார வீதியில் உள்ள வீடுகளில் தெருவை நோக்கி ஜன்னல், வாசல் வைக்கக் கூடாது. பல்லக்கு மற்றும் பிரேத ஊர்வலம் போகக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் அன்று இருந்தன. அவைகளை எல்லாம் அகற்றக் கோரி அன்றைய முதலமைச்சர் காமராஜர் ஐயாவை சந்திக்கச் சென்றவர்களில் நானும் ஒருவன். மேலும், மகாத்மா காந்தி கழுகுமலைக்கு வந்த போது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று அவருக்கு வரவேற்பு தந்துள்ளேன்.”

“கழுகுமலையில் தீப்பெட்டித் தொழில் ஸ்தாபிதம் ஆகி, மிகப்பெரிய செல்வாக்குடன் மக்களை கோலோச்சிய போது, ஒவ்வொரு வீட்டிலுள்ள பிள்ளைகளும் பள்ளிக் கூடத்தை மறந்து தீப்பெட்டி ஆபீசுக்குச் சென்று விட்டனர். அப்போது, தீப்பெட்டி ஆபீசு முதலாளிகளோடு சண்டைபோட்டு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்தேன்.”

“புனித மரியன்னை ஆரம்பப் பள்ளி, 1950-இல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தேன். அப்போது சேசுசபையைச் சேர்ந்த அருட்தந்தை செபாஸ்டின் அரிக்காட் என்னிடம் ஆசிரியராகப் பணியாற்றினார். அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் காலத்தில் கிராமங்கள் தோறும் குழுவாகச் சென்று ஞான உபதேசம் செய்துள்ளேன்.” என்று தன்னுடைய பணிக்கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

தன்னுடைய பணி ஓய்வுக்குப் பின்னும் அவர் சும்மா இருக்கவில்லை. அருட்தந்தை ஆரோக்கியசாமி கழுகுமலையில் பங்குத்தந்தையாக இருந்த போது, 1983-லிருந்து சுமார் 12-ஆண்டுகள் சர்ச் மாணவர் விடுதியில் விடுதிக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். நாலாந்துலாவில் உள்ள தன் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாயக்கர்பட்டி கிராம நூல் நிலையத்தில் சிலகாலம் முகவராகப் பணியாற்றி உள்ளார். தன் வாழ்நாளின் இறுதிவரை நாலாந்துலாவில் உள்ள திருமுழுக்கு யோவான் சிற்றாலயப் பணியையும், வின்சென்ட் தெ பால் சபையின் சேவைப் பணியையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்து வந்துள்ளார்.

இவரின் வத்தல் தொத்தல் உடலைப் பார்த்தால் யாருக்கும் இவர்மேல் பரிவுதான் ஏற்படும். அப்படியொரு உடல்வாகு. ஆனால், இவருடைய பணிக்கால வாழ்வைப் பற்றி, பழைய ஆட்களிடம் விசாரித்தால், ‘பாட்ஷா’ மாதிரி இவரின் இன்னொரு முகத்தை பயபக்தியுடன் பகிர்கிறார்கள்

புலவர் அ.மரியதாஸ்

புலவர் அ.மரியதாஸ்

இவரைப்பற்றி என்னுடைய தந்தை புலவர் அ.மரியதாஸ் அவர்கள் கூறும்போது, “எல்லாருக்கும் தெரிஞ்ச வாத்தியார்னா, அன்னைக்கு அவருதான்! பள்ளியிலும் சரி, கோயில் காரியங்களிலும் சரி – அவ்வளவு ஈடுபாடானவர். அன்று கோயிலில் பாடப்படும் லத்தீன் மற்றும் தமிழ்ப் பாடல்களுக்கு ஆர்மோனியம் வாசிப்பார். மாணவர்களுக்கு சொல்லியும் கொடுப்பார். அதேநேரத்தில், ரொம்பக் கண்டிசனாவும் இருப்பார். அதனாலேயே சின்னஞ்சிருசுக அவருக்குப் பயப்பிடும். வீட்டுல சேட்ட பண்ணினா லூர்து வாத்தியார்ட்ட பிடிச்சுக் கொடுத்திடுவேன்னு சொல்லுவாங்க. அப்படினா பாத்துக்கோயேன்” என்றார்.

கழுகுமலை அன்னக்கிளி மேட்சஸ் திரு.அலெக்ஸாண்டர் அவர்கள் தன்னுடைய ஆசானான லூர்து வாத்தியாரை நினைவு கூறும்போது, “காலந் தவறாமை, ஒழுங்குமுறை, பக்தி – இம்மூன்றையும் தன் பணிக்காலம் மட்டுமின்றி கடைசிவரை அவர் பின்பற்றி வந்ததால், அவரை யாரும் குறை சொல்ல முடியாது. அந்தக் கால நிகழ்வுகளைக் கேட்டால், ஆண்டு தேதி உட்பட நினைவுபடுத்தி சொல்வார், அப்படியொரு மனுஷன்.

திரு.அலெக்ஸாண்டர்

திரு.அலெக்ஸாண்டர்

சத்தமா பாடம் நடத்துவார். கேள்வி கேட்டுப் புரிய வைப்பார். பள்ளியில் ஏதாவது நிகழ்ச்சியினா விழா மேடையிலிருந்து தலைவாசல் வரைக்கும் அவர்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர். அந்தப் பவர் அவரைத் தவிர வேறு யார்கிட்டயும் இருக்காது. வெள்ளைக்காரன் ரோல் மாடல்தான் அவர். சேட்ட பண்றவங்களையும், படிக்காம வர்றவங்களையும் வெளுத்து வாங்கிடுவார். பள்ளிக்கூடம் வந்திட்டா பிரம்பு அவர் உடம்போடு சேர்ந்த உறுப்பு மாதிரி!

இன்னைக்கு உள்ள சிறு குழந்தைகள், தானாகவே சில அடிப்படை ஒழுங்குமுறைகளைக் கத்துக்கிட்டு வந்திடுதாங்க. ஆனா, அன்னைக்கு அப்படியில்லை. எந்த ஒரு கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் இல்லாத காலமா இருந்ததால, அவரின் கடுமையான கண்டிசன் தேவைப்பட்டது. அதனாலதான், அன்னைக்கு அத யாரும் பெரிசுபடுத்தல. ம்! அது ஒரு இனிமையான காலம்” என்று தன் ஆழ்மன பசுமை நினைவுகளை  மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒரு நூற்றாண்டு மனிதர். பல்வேறுபட்ட சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்களைப் பார்த்தவர்; அவற்றில் வாழ்ந்தவர். இவைகளின் சலனத்திற்கு ஆட்படாமல் வெள்ளத்தனைய மலர் நீட்டமாய் சாதுர்யமாக வாழ்ந்து முடித்தவர். பிணக்குகளால் வாழ்வைச் சச்சரவாக்காமல் ஆற்றொழுக்கு போல தன் பாதையை வடிவமைத்துக் கொண்டவர். நமக்கு வேண்டுமானால் அது வேறுபடத் தோன்றலாம்; அவரைப் பொறுத்தவரையில் அது நிர்மாணிக்கப்பட்ட ஒன்று.

14.08.15 இன்று காலை இறையடி சேர்ந்தாலும், தன் இறப்புக்கு முன்னதாகவே தன் ஈமச் சடங்கு, அடுத்து நிகழும் சம்பிரதாயச் சடங்கு மற்றும் கல்லறை கட்டுதல் என இவற்றிக்கு ஆகும் செலவினத்திற்காக ஒரு பெருந்தொகையை தன் நம்பிக்கைக்கு உரியவரிடம் தந்துள்ளார். செலவழித்தது போக மீதமிருப்பின் அதை ஏழை எளியவர்களுக்கோ, அல்லது வின்சென்ட் தெ பால் சபைக்கோ கொடுத்துவிடச் சொல்லியிருக்கிறார். தன் வாழ்வு இப்படித்தான் என்று கட்டுமானம் செய்பவர்கள், தன் இறப்புகூட பிறருக்குப் பாரமாகிவிடக் கூடாது என்று முன்கூட்டியே தீர்மானித்து விடுகிறார்கள்.

ஓடித் தேடி சரித்திரத்தை உருவாக்க நினைப்பதை விட, நாம் இருக்கும் இடத்திலேயே வாழும் வாழ்க்கையை ஒரு சரித்திரமாக்குவது மேலானது. அத்தகைய வாழ்க்கையை மதிப்பிற்குரிய தாத்தா, லூர்துசாமி வாத்தியார் அவர்கள் வாழ்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது. இதில் மிகப்பெரிய உச்சங்களை அவர் எட்டாவிட்டாலும், வெகுசில எச்சங்களை நம் பார்வைக்கு விட்டுச் சென்றுள்ளதாகவே நினைக்கிறேன்.

* * *

Advertisements
 

5 responses to ““கழுகுமலை” லூர்து வாத்தியார்

 1. Subsah

  16/08/2015 at 7:43 முப

  Arumayana pathivugal

   
 2. Vinoth Prasanna raj S

  16/08/2015 at 9:45 முப

  கோவிலுக்கு தாமதமாக வருவது, கோவிலுக்கு உள்ளே வராமல் வெளியே விளையாடுவது, திருபலியின் போது பேசி விளையாடுவது போன்றவற்றை செய்திருந்தால், மாணவ பருவத்திலே இவரிடம் தலையில் ஒரு கொட்டோ, அல்லது ஒரு காது திருகளோ வாங்காம இருந்திருக்க முடியாது. மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிப்பதில் முன்மாதிரி. இப்போது இருக்கும் மாணவர்களுக்கு இப்படி ஒரு ஆசிரியர் இல்லாதது இழப்பே. இவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த கட்டுரை உதவுகிறது. நன்றி திரு. அசின் சார்.

   
 3. JUDE SELVARAJ

  17/08/2015 at 7:15 பிப

  நாலாந்துலா அருளப்பர் கோயிலை பார்க்கும்போது ஆசிரியர் ஞாபகம் வருகிறது

   
 4. Thadeus Anand

  18/08/2015 at 12:35 பிப

  தள்ளாத வயதிலும் தவறாமல் எல்லாப் பழங்கதைகளையும் நினைவு கூர்ந்து விளக்கும் இவரது நினைவாற்றலைக் கண்டு நான் பெருவியப்படைந்திருக்கிரேன். சிறு வயதில் இவரிடம் கொட்டு வாங்கிய அனுபவம் எனக்கும் உண்டு. கோயில் வளாகத்தில் உள்ள எவ்வொரு மணல் துகளும் இவரின் பாதம் படாமல் தப்பித்திருக்க இயலாது. இவரது வருகையால் விண்ணகம் பூரிப்படைந்திருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

  ஒரு அருமையான மனிதரின் வாழ்வை இங்கு பதிவு செய்ததற்காக அசினுக்குக் கோடானு கோடி நன்றிகள்.

   
 5. சட்டநாதன்

  06/09/2015 at 12:01 பிப

  இவர் வார்டனாக இருந்த போது பயங்க வாங்குற அடியெல்லாம் பதற வைக்கும் . அப்போ நான் ,இப்போ பெண்கள் பள்ளியாக மாறிவிட்ட , மரியன்னை பள்ளியின் அருகிலே உள்ள சூசையப்பர் பள்ளியில் படித்தேன். ஒரு தடவ சாப்பிட்டு முடித்து விட்டு விளையாடும் போது சாப்பிட்ட தட்டை மறந்து விட்டு விட்டு போயிட்டேன். சாயங்காலம் தான் நினைவு வந்தது , யாரு எடுத்திருந்தாலும் வார்டன் கிட்ட தான் கொடுத்திருப்பாங்க , நீ அவர்ட்ட அடி வாங்குறதுக்கு , உங்க அம்மா கிட்ட அடி வாங்கிரலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள் . அப்படி ஒரு கண்டிப்பு .( கடைசியில் தட்டு , சத்துணவுக்கூடத்தின் ஆயாவிடம் இருந்தது)

  நிதானமாக நடந்து வருபவரை பார்த்து எல்லாரும் வேகமாக ஓடுவார்கள் .

  நல்ல நினைவுகூரல் பதிவு .

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: