RSS

Monthly Archives: பிப்ரவரி 2015

நோயும் மருந்தும் – 4

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

“இது மருத்துவ முறையை அறிந்து கொள்வதற்காக அன்று; மின்சாரத்திற்கு முந்தைய காலத்தில் உள்ள மக்களின் நிலையைத் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே.”

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

முந்தைய பதிவு : நோயும் மருந்தும் – 3

பதிவு :12

17. குன் இருமல்

பொதுவாக இருமல் என்பது பலருக்கும் வயது வரம்பின்றி சளியின் காரணமாக ஏற்படுவதாகும். ஆனால், இந்தக் குன் இருமல் என்பதில் சளி எதுவும் வெளிவராது. பெரும்பாலும் ஆறு, ஏழு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும். இந்நோய் வந்த பிள்ளைகள் அடிக்கடி இடைவெளியின்றி தொடர்ந்து தொரத்திக் கொண்டு (இருமிக்கொண்டு) இருப்பார்கள். அதைப் பார்க்கும் போது பார்ப்பவர்க்கே மனக் கஷ்டத்தைத் தருவதாயிருக்கும். அவ்வாறு குன் இருமல் ஏற்பட்டுத் தொரத்தும் போது வயிறு நெஞ்செல்லாம் குன்னிப் போய், அதாவது ஒட்டிப்போய் துடிக்கும். எனவேதான், இதைக் குன் இருமல் என்றனர். இந்நோய் இன்று இல்லை. இதற்கு அன்று அறியாமையால் செய்தவை பல. அதில் இரண்டினை இங்கு குறிப்பிடுகிறேன்.

(அ) புங்க மரக்காயை எடுத்து அதன் ஒரு பகுதியில் துளையிட்டு கயிற்றில் கோர்த்து கழுத்தில் கட்டுவார்கள்.

(ஆ) தூக்குப்போட்டு இறந்தவர்களின் கயிறு யார் வீட்டிலாவது இருந்தால் அதில் ஒரு சிறு பகுதியை வாங்கி கயிற்றில் கட்டி கழுத்தில் கட்டுவார்கள்.

18. காது வலி

குளம், கிணறு, ஆறு, ஏரி என்று நீர் நிலைகளில் அதிக நேரம் நீந்தியும், ஆழமாக மூழ்கியும் குளித்து விளையாடும் போது நீரின் அழுத்தத்தால் காதின் உட்பகுதியில் நீர் புகுந்து வலி ஏற்படும். மற்றொரு காரணம் காதினுள் தீக்குச்சி, கோழி இறகு, காது குடும்பி, கொண்டை ஊசி, ஊக்கு போன்றவற்றைக் கொண்டு காதை அடிக்கடி குடைவதாலும் இவ்வலி ஏற்படும். இதை காதினுள் வெளிச்சி ஏற்பட்டிருக்கிறது என்பர். காதைத் தொட முடியாத அளவிற்கு வலி இருக்கும். இன்று குழாய் நீரிலும், வாளி, தொட்டி போன்றவற்றிலுள்ள நீரிலும் குளிக்கும் நிலை இருப்பதால் இன்று இந்நோய் இல்லை.

ஜ்ஜ்

மருந்து:

இதற்குக் கீழே காணும் வைத்தியத்தை மட்டுமே அன்று செய்தனர். அதாவது, நீளமான நன்கு காய்ந்த மிளகாய் வற்றல் எடுத்து அதன் காம்புப் பகுதியைக் கிள்ளி எடுத்து வற்றலின் உள்ளே உள்ள விதைகளைக் கவிழ்த்து தட்டிவிட்டு, வெறும் கூடாக உள்ள வற்றலுக்குள் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, அதனை விளக்குச் சுடரில் வெதுவெதுப்பு ஆகும்படிச் சூடேற்றி, அந்த எண்ணெயைக் காதில் ஊற்றி பஞ்சை வைத்து காதை அடைத்து விடுவார்கள். இது எனக்குப் பல தடவை செய்யப்பட்டிருக்கிறது. இது போகக் காதில் சீழ்வடிதல் என்ற நோயும் அன்று இருந்தது. இன்று இது எவர்க்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இது காதில் இருந்து குழுகுழு என்று புண்ணிலிருந்து வரும் சீழ் போன்று வரும். துர்நாற்றமிருக்கும். இதற்கு கற்றாழை வகையைச் சேர்ந்த மருள் என்பதை நெருப்பில் வாட்டிப் பிழிந்து சாறு எடுத்துக் காதில் விடுவார்கள்.

19. பல்வலி

பல் இடுக்கில் இருக்கும் உணவுப் பொருட்கள் மட்கி உண்டாகும் கிருமியால், பல்லில் துளை ஏற்பட்டு வலி வருவதுண்டு. இதை சூத்தப்பல் என்றும் சொத்தைப்பல் என்றும் கூறுவர். இது அக்காலம் முதல் இன்று வரை பலருக்கும் ஏற்படுகிறது. சொல்லப் போனால் அக்காலத்தைவிட இக்கால உணவு, இனிப்புத் தின்பண்டங்கள் போன்றவற்றால் இன்றுதான் அதிகம் ஏற்படுகிறது. அன்று நான் சிறுவனாய் இருந்த போது பல்வலி உள்ளவர்க்கு எங்கள் வீட்டில் வைத்து செய்த மருத்துவத்தைப் பார்த்திருக்கிறேன். இது அறியாமையால் செய்த செயலாகும்.

பல்வலி

அதாவது கண்டங்கத்தரி பழத்திலுள்ள விதைகளை எடுத்துக் காய வைத்திருப்பார்கள். இவ்விதைகள் மிகச் சிறியதாக இருக்கும். இந்த விதையுடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து வைத்துக் கொள்வார்கள். பின் அன்று தானியங்களை அளக்கப் பயன்படுத்திய நாழி அல்லது பக்காப்படி என்று சொல்லக்கூடிய அளவைப் பாத்திரத்தை எடுத்து, அதில் முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்வார்கள். பின் அடுப்பில் இரும்புப் பட்டை அல்லது அரிவாள் போன்ற ஒன்றைப் போட்டு சிவக்க சூடேற்றி அதை நாழியின் மீது வைத்து துளையுள்ள சிரட்டையைக் கவிழ்த்து வைப்பார்கள். பின் வேப்பெண்ணைய் கலந்த கண்டங்கத்தரி விதைகளை ஒரு ஓலையால் எடுத்து சிரட்டை ஓட்டை வழியாகப் போட்டு சிரட்டையின் துளை மட்டும் தெரியும் படி மற்ற இடத்தைத் துணி கொண்டு மறைத்து விடுவார்கள். சூடேற்றப்பட்ட இரும்பில் வேப்பெண்ணெய் கலந்த விதைகள் விழுந்து பொரிந்து குபுகுபுவென சிரட்டைத் துளைவழி புகை வரும். பல்வலி உள்ளவர் வாயைத் திறந்து சிரட்டை மீது வைக்க வேண்டும். இவ்வாறு மூன்று தடவை செய்வார்கள். அதன்பின் நாழியிலுள்ள தண்ணீரில் மிகச் சிறிய புழுக்கள் போன்று மிதப்பதைப் சூழ்ந்து இருப்பவர்கள் பார்த்து, சொத்தைப் பல்லிலிருந்து விழுந்த புழுக்கள் அவை என்று நம்பினர். நானும் அவ்வாறே நம்பினேன். ஆனால், அந்தப் புழுக்கள் என்பது கண்டங்கத்தரி விதையிலுள்ள விதைமுளை என்பது வெகுகாலம் கழித்தே எனக்குப் புரிந்தது. இது போக, பல் வலிக்கும் பகுதியில் புகையிலையை வைத்துக் கொள்வதும்; மூக்குப்பொடியை வைத்துக் கொள்வதும் உண்டு.

20. கொதிபார்த்தல்

வயிற்றில் வலி இருந்தாலும் அல்லது ஜீரணம் ஆகாமல் புளிச்ச ஏப்பம் எடுத்துக் கொண்டு சரியாகச் சாப்பிட முடியாமல் இருந்தாலும், “கொதிபார்த்தால்” என்பதைச் செய்வார்கள். இச்செயல் அறிவியல் விதி என்பதை அறியாது, தங்கள் அறியாமையால் மூடநம்பிக்கைக்கு உரியதானது.

வயிற்றில் வலி

அறிவியல் விதி:

ஒரு பாத்திரத்தினுள் நெருப்பை எரியவைத்து அப்பாத்திரத்தின் வாய்ப்பகுதி நீரில் சிறிது முழ்கி இருக்கும்படி கவிழ்த்து வைத்தால், அப்பாத்திரத்தினுள் எரியும் நெருப்பு அதனுள் இருக்கும் காற்றிலுள்ள ஆக்ஸினை எடுத்து எரிந்து அணையும். அவ்வாறு எரிந்த பின் பாத்திரத்தினுள் ஆக்ஸிஜன் இல்லாமல் வெற்றிடம் ஏற்படும். இந்த வெற்றிடத்தை நிரப்ப வெளியிலுள்ள காற்றினால் நீர் அழுத்தப்பட்டு பாத்திரத்தினுள் செல்லும். இதுவே அறிவியல் விதி.

கொதிபார்த்தால் செயல் முறை:

விளிம்புள்ள சாப்பிடும் தட்டு ஒன்றை எடுத்துக் கொள்வார்கள். அத்தட்டின் விளிம்பில் சுமார் பாதி அளவு வரும்படித் தண்ணீர் ஊற்றி சமதளத்தில் வைத்து, தட்டின் மையப் பகுதியில் சிறு செங்கல் துண்டு அல்லது மேற்பகுதி சமமாக உள்ள கல் அல்லது சிறு கிண்ணம் என்று ஏதாவது வைத்துக் கொள்வார்கள். வயிற்றுக் கோளாறு உள்ளவரை தட்டின் முன் உட்கார வைப்பர். சிறு பழைய துணியை எடுத்து அவர் வயிற்றின் மீது தடவுவர். அத்துணியைக் கொண்டு அவர் தலையைச் மூன்று சுற்று சுற்றி, மூன்று முறை அத்துணி மீது அவரை எச்சில் துப்பச் சொல்வர். அதன்பின், அத்துணியில் நெருப்பு பற்ற வைத்து தட்டின் மையப் பகுதியில் வைத்துள்ள பொருளின் மீது துணி நீரில் நனையாதபடி வைத்துக் கொள்வர். செம்பை வேகமாக நெருப்பின் மீது கவிழ்த்து தட்டில் வைத்தவுடன், மேலே சொன்ன அறிவியல் விதிப்படி நீர் செம்பினுள் செல்லும். இதைப் பார்த்து அனைவரும், “அடேயப்பா வயிற்றினுள் எவ்வளவு கோளாறு இருந்திருக்கிறது. அந்தக் கோளாரை எல்லாம் எப்படிச் செம்பு உள்ளே இழுக்கிறது!” என்று பார்த்து ஆச்சரியப்படுவார்கள். அவ்வாறு ஆச்சரியப்பட்டவர்களில் நானும் ஒருவன். அதன்பின், பள்ளியில் அறிவியல் பாடம் படிக்கும் போதுதான் அன்று நடந்த அறியாமையைப் புரிந்தேன்.

இதே விதியின்படி நடைபெற்ற இன்னொன்றும் உண்டு. ஒரு சிறு துணியில் நெருப்பு பற்ற வைத்து அதை ஒரு செம்பினுள் போட்டு, வயிற்றுவலி வந்துள்ளவரின் வயிற்றில் வைத்து அழுத்திப் பிடிப்பர். சிறிது நேரத்தில் கையை எடுத்து விட, முன்பு சொன்ன அறிவியல் விதிப்படி அச்செம்பு வயிற்றில் ஒட்டிக் கொள்ளும். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுடன், அச்செம்பு வயிற்றில் ஒட்டிக்கொண்டு வயிற்றிலுள்ள வலியை செம்பினுள் இழுப்பதாக நம்பினர்.

21. அம்மன் (அம்மை)

அம்மன் என்றும் அம்மை என்றும் அழைக்கப்படும் இந்நோய் ஒருவகை வைரஸ் கிருமியால் உண்டாகும் தொற்று நோயாகும். இந்நோய் ஏற்படும்போது முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு காய்ச்சல் (ஜீரம்) ஏற்படும். அதன்பின் சங்கம் பழம் போன்று (வெள்ளைச் சோளத்தை விட சற்று பெரியதாக நீர்க்கோர்த்து) உடல் முழுவதும் கொப்புளங்கள் உண்டாகும். இந்தக் கொப்புளங்களை முத்துக்கள் என்று சொல்வார்கள். இமமுத்துக்களை மாரியம்மன் என்ற பெண் தெய்வம் வைத்திருப்பதாகக் கருதி அத்தெய்வத்தை முத்துமாரியம்மன் என்றும் அழைப்பார்கள். இத்தெய்வம் அம்முத்துக்களை யார் மீது போடுகிறதோ அவர்களுக்கு இக்கொப்புளங்கள் ஏற்படுவதாகவும்; இவை மிக அதிகமாகவும் நெருக்கமாகவும் காணப்பட்டால் ‘பெரியம்மை’ என்றும்; சற்று கலக்கமாகக் காணப்பட்டால் ‘சின்னம்மை’ என்றும்  அழைத்தார்கள்.

சின்னம்மை

இந்நோய் குறித்து மற்றவரிடம் பேசும்போது, “எங்கள் வீட்டில் அம்மன் வந்திருக்கிறது அல்லது அம்மை விளையாடுகிறது” என்றுதான் சொல்வார்கள். அதனால் இந்நோய் வந்தால் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதை மீறி மருத்துவரிடம் சென்று மருந்து, மாத்திரை, ஊசி என்று வைத்தியம் செய்தால் அம்மனுக்குக் கோபம் ஏற்பட்டு மேலும் அதிகமான முத்துக்களைப் போடக்கூடும் என்று பயந்தனர். இவ்வாறு பயந்து மருத்துவம் எதுவும் செய்யாமல் இருந்ததனால் உடலில் கொப்புளங்கள் தோன்றி அவை தானாகக் குணமாகும் வரை நோயாளி அதிக வேதனை அனுபவிக்க நேரிட்டது. ஆனாலும், அன்று இந்நோய் வந்த போது கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் இது மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பதற்குரிய தடுப்பு நடவடிக்கையாக இருந்தது.

அதாவது, இந்நோய் ஏற்பட்டவர்க்கு சூடாக எதுவும் கொடுக்க மாட்டார்கள். பழம், இளநீர், கஞ்சி, பானக்கரம் போன்றவற்றைத்தான் கொடுப்பார்கள். வீட்டில் மாரியம்மன் வந்திருப்பதாகக் கருதியதால் வீட்டை பெருக்குமாறு வைத்துப் பெருக்கமாட்டார்கள். அழுக்குத் துணிகளை சலவைத் தொழிலாளியிடமோ, மற்றவரிடமோ கொடுக்க மாட்டார்கள். இந்நோய் கண்டவர் பாயில் படுக்கக் கூடாதென்றும், தரையில் துணி விரித்துத்தான் படுக்க வேண்டும் என்றும் செய்தனர். ஆண்களாக இருந்தால் இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண்கயிறு (அண்ணாக்கயிறு) என்று சொல்லும் இடுப்புக் கயிற்றையும் நீக்கி விடுவார்கள். பெரியம்மை கண்டு மிக அதிக கொப்புளங்கள் இருந்தால், சில நாட்களுக்கு வாழை இலை விரித்து அதில் படுக்க வைப்பார்கள். நோயாளி படுத்திருக்கும் தலைப் பகுதியில் வேப்பிலைக் கொத்து எப்பொழுதும் வைத்திருப்பார்கள். உடலில் எண்ணெய் அல்லது வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து அரைத்த கலவையைப் போடுவார்கள். வீட்டில் கோமியம் என்று சொல்லப்படும் பசுமாட்டின் சிறுநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து, அதை வேப்பிலை கொண்டு வீட்டில் தெளிப்பார்கள்.

சின்னம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் உடைந்து நீர் வடிந்து உலர்ந்து சரியாவதற்கு சுமார் பத்து நாட்கள் வரை ஆகும். பெரியம்மை என்றால் குணமாக அதன் பாதிப்பைப் பொறுத்து பதினைந்து முதல் இருபது நாட்கள் வரையிலும் ஆகும். இது சரியான பின் தண்ணீர் ஊற்றுதல் என்பது செய்வார்கள். அதாவது ஒரு பானை நிறையத் தண்ணீர் எடுத்து அதில் மஞ்சள்தூள் போட்டு கலக்கி வேப்பிலையும் போட்டு காலையிலிருந்து மதியம் வரை வீட்டு வாசல் முன் முற்றத்தில் நன்கு சூரிய ஒளி படும்படியாக வைப்பார்கள். அதன்பின் மதியம் சுமார் 1½ அல்லது 2 மணியளவில் நோய் வந்து குணமானவரை முற்றத்தில் உட்கார வைத்து சூரிய ஒளியில் சூடேறிய அந்நீரை ஊற்றி குளிக்க வைப்பர்கள்.

இந்நோயை மாரியம்மன் என்று கருதுவதால் குளித்து முடிந்தபின் மாரியம்மனை அனுப்பி வைப்பதற்காக பானக்கரமும், இனிப்புமாவு அரிசியில் செய்ததும் பக்கத்து வீட்டாருக்கும், அவ்வழியே செல்வோருக்கும் கொடுப்பார்கள். இவ்வாறு முதல் தண்ணீர் ஊற்றும் போது செய்வார்கள். அதன்பின் ஒருநாள் விட்டு ஒருநாள் மஞ்சள்தூள் வேப்பிலையிட்டு தண்ணீரை முன்போன்று சூரிய ஒளியில் வைத்து தலைக்கு ஊற்றி குளிக்கச் செய்வார்கள்.

பெரியம்மை

பெரியம்மை ஏற்பட்டு குணமான பின் அதன் தழும்புகள் உடலில் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இருப்பவை முகத்தில் உள்ள தழும்புகள் ஆகும். இவை முகம் முழுவதும் நெருக்கமாக சிறுசிறு குழிகளை ஏற்படுத்தி முக அழகைக் கெடுத்து விகாரமாக்கி விடும். இத்தழும்புகள் ஆயுள் முழுவதும் இருக்கும். இவ்வாறு உள்ளவர் பலரை அன்று நான் பார்த்திருக்கிறேன்.

அக்காலங்களில் இந்நோய்க்குத் தடுப்பு நடவடிக்கையாக அரசாங்கம் உருக்குத்துதல் என்பதைச் செய்தது. இதை அம்மை குத்துதல் என்றும் சொல்வார்கள். அதாவது, சட்டைப் பித்தான் அளவிற்கு வட்டமாகவும் ஒரு பக்கம் ஊசி போன்ற சிறுமுனைகள் பல கொண்டதாகவும் மறுபக்கம் தீக்குச்சி போன்ற சிறு கைப்பிடி கொண்டதாகவும் உள்ள உலோகப் பொருளைக் கொண்டு குழந்தையின் இரண்டு கைகளிலும் தோளுக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் மேலும் கீழுமாக ஒவ்வோர் கைக்கும் இரண்டு இடங்களில் தடுப்பு மருந்து வைத்து லேசாக இதை வைத்துத் திருக்குவார்கள். பின் அந்த இடங்கள் புண்ணாகி ஆறும். இத்தழும்புகள் என்றும் அழியாமல் இருக்கும். இதை என் வயதில் உள்ளவர்கள் கையில் இன்றும் காணலாம்.  இன்று இம்முறை இல்லை. வேறு வகைகளில் தடுப்பு நடவடிக்கை செய்யப்படுகிறது.

இவ்வாறு அரசு தொடர்ந்து செய்த அம்மை தடுப்புச் செயல் காரணமாக இன்று இந்நோய் இல்லை. சிச்சிலிப்பான் என்ற மிகச்சிறிய அளவிலான நோயே இன்று அரிதாகக் காணப்படுகிறது. என் மகனுக்கு சின்னம்மை வந்தபோது மருத்துவமனை சென்று மருத்துவம் செய்து மிக விரைவில் குணமானதை இங்கு கூறிக் கொள்கிறேன்.

22. அம்மன்கட்டு (அம்மைக்கட்டு)

அம்மைக்கட்டு என்பது இரு கன்னங்களிலும் காதுப் பகுதியை ஒட்டி சற்று வீங்கி (புடைத்து) சுமார் ஒரு வாரம் வரை இருந்து குணமாக்கும். இதையும் மாரியம்மனோடு தொடர்புபடுத்திக் கூறுவர்.

அம்மைக்கட்டு

இதற்கு வேப்பிலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் போடுவார்கள். இது ஒன்றே இதற்கு மருந்து. குணமாகும் அம்மை நோய்க்கு மும்முறைத் தண்ணீர் ஊற்றும் முறையையே இதற்கும் செய்வார்கள். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இன்றும் இது மிகக் குறைந்த அளவில் வருவதுண்டு.

23. இளம்பிள்ளை வாதம்

ஒரு குழந்தை பிறக்கும் போது கைகால் போன்ற உறுப்புகளில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பிறந்து, வளரும் காலத்தில் சுமார் ஐந்து வயதிற்குள்ளாக காய்ச்சலுடன் ஜன்னி வந்து கைகால்கள் இழுத்துக் கொண்டு போகும். முடிவில் காலோ கையோ செயல் இழந்து எல்லோரையும் போல நடக்க முடியாமலும், வேலை செய்ய இயலாமலும் முடமாக்கி விடும் ஒரு கொடிய நோய் இது.

இளம்பிள்ளை வாதம்

இதற்கென்று பிரத்யேகமான மருந்து எதுவும் அன்று இல்லை. பச்சிலை போட்டு காய்ச்சிய எண்ணெய்யைப் போடுவார்கள். பலன் இருக்காது. அன்று இந்நோய் தாக்கிய பலரைப் பார்த்திருக்கிறேன். சில குழந்தைகள் இறந்தும் போய்விடும்.

எங்கள் வீட்டிலும் இப்படியொரு துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. எனக்கு அடுத்து சொர்ணத்தாய் என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆசையுடன் நான் தூக்கி மகிழும் அக்குழந்தை, பிறக்கும்போது எந்தக் குறைபாடும் இன்றி ஆரோக்கியமாகவே பிறந்தது. அதன்பின் இந்நோய் ஏற்பட்டு நடக்க முடியாமல் போனது. என் பெற்றோர் அன்று நடைமுறையில் இருந்த மருத்துவத்தைச் செய்தும் பயனின்றி, சுமார் மூன்று அல்லது நான்கு வயதிற்குள் இறந்துவிட்டது. அதை நினைக்கும்போது இப்போதும் அது வேதனை தரும் நிகழ்வாகவே இருக்கிறது.

இளம்பிள்ளை வாதம்-

ஆனால், அரசு இன்று எடுத்துள்ள போலியோ தடுப்பு மருத்துவ முறையால், இன்று மறைந்து போன நோய்களுள் இதுவும் ஒன்றாகிவிட்டது என்பது மகிழ்ச்சியான ஒன்று.

நோயும் மருந்தும் – 5 : பேய்கள்

Advertisements
 

நோயும் மருந்தும் – 3

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

நோயும் மருந்தும்

“இது மருத்துவ முறையை அறிந்து கொள்வதற்காக அன்று; மின்சாரத்திற்கு முந்தைய காலத்தில் உள்ள மக்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக மட்டுமே.”

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

முந்தைய பதிவு : நோயும் மருந்தும் – 2

பதிவு :11

இயற்கை, மனிதன் அமைத்த புது வாழ்க்கைச் சூழல் இதற்கேற்ப நோய்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமாய் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றில், அன்று மனிதனுக்கு ஏற்பட்ட புண்கள், கட்டிகள், காயங்கள் பற்றி இப்பகுதி சொல்கிறது.

புண்கள்: 

11(அ) வாய்ப்புண்

வாயின் உட்பகுதியில் சிறுசிறு புண்கள் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் வலி இருக்கும். இதற்கு வெள்ளாதாழை செடியை ஒடிக்கும் போது வரும் நீர் போன்ற பாலை வாயில் சிறிது நேரம் வாயில் அடக்கி வைத்து துப்புவார்கள். சோப்பு நுரை போன்று வரும். இதை வெளியே துப்பாமல் குடித்தால் குடல் புண் ஆறும். இது ஒரு நல்ல மருந்தாக அன்று மட்டுமல்ல இன்றும் கிராமங்களில் செய்கிறார்கள். மேலும் முள்ளு முருங்கை இலையை இடித்து சாறு எடுத்தும் குடிக்கக் கொடுப்பார்கள்.

11(ஆ) சிரங்கு

சிரங்கு வந்த பிள்ளை குரங்கு போலாகும் என்று சொல்லும் அளவிற்குள்ள நோய் சிரங்கு என்பதாகும். இது தொற்று நோய். சிறுவர் முதல் பெரியவர் வரை வரக்கூடியதாக இருந்தாலும், சிறுவர்களுக்கே அதிகம் வரும். இதை அரிசிரங்கு என்றும் சொறிசிரங்கு என்றும் சொல்வார்கள். இது இருகைகளின் விரல்களுக்கு இடையில் வெள்ளைச் சோளம் அளவிற்கு நெருக்கமாக சிறு சிறு கொப்புளங்களாக  உண்டாகும். அதிக ஊரல் இருக்கும். சொறியச் சொறிய சுகமாக இருக்கும். சொறிந்து முடிந்தபின் வலி ஏற்படும். இருந்தாலும் சொறியாமல் இருக்க முடியாது. ஆகவே தான், “இரும்பு இருக்கிறவன் கையும், சிரங்கு இருக்கிறவன் கையும் சும்மா இருக்காது” என்று பழமொழியாக அன்று சொல்வார்கள். இன்று அரசு எடுத்த மருத்துவ நடவடிக்கையால் இந்நோய் முற்றிலும் இல்லை.

செய்யப்பட்ட மருத்துவம்:

(அ) தேங்காய் எண்ணெய்யில் கந்தகத்தைப் போட்டு சூடேற்றி அந்த எண்ணெய்யைப் போடுவார்கள்.

(ஆ) கோமியம் என்று சொல்லப்படும் பசு மாட்டின் சிறுநீரைப் பிடித்து சிரங்கில் போடுவார்கள். இதைப் போடும் போது எரிச்சல் (காந்தல்) இருக்கும்.

(இ) குப்பை மேனி என்ற இலையுடன் உப்புச்சேர்த்து அரைத்துப் போடுவார்கள். இதுவும் எரிச்சலும் காந்தலுமாக இருக்கும்.

(ஈ). வெள்ளாட்டுப் புழுக்கையைக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, அப்பொடியுடன் சூடம் சேர்த்து அதை தேங்காய் எண்ணெய்யில் கலக்கிப் போடுவார்கள்.

(உ) நன்கு உலர்ந்த (காய்ந்த) கழுதை விட்டையை நெருப்பு வைத்து எரித்துக் கிடைக்கும் சாம்பலில் தேங்காய் எண்ணெய் சேர்த்துப் போடுவார்கள்.

(ஊ) ஆடு அறுக்கும் போது அதன் குடலில் குழுகுழுவென இருக்கும் உதவி என்று சொல்லப்படும் மலத்தை சூடாக எடுத்துப் போடுவார்கள்.

(எ) சிரங்கு என்பது ஊரல் தரும் நோய் என்பது ஊரல் தன்மை கொண்ட செந்தட்டி இலையை இடித்து சிறிது சாறு குடிக்கக் கொடுப்பார்கள்.

சிரங்கு என்பது அன்று சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் வந்த நோய் எனக்கும் வந்துள்ளது. இதில் மேலே கண்ட மருத்துவங்களில் சில எனக்கும் செய்யப்பட்டுள்ளன. அவைகளில் சில அறுவறுப்பாகத் தெரிந்தாலும் அன்று வாழ்ந்தவர்கள் கடைப்பிடித்த மருத்துவம் என்பதே உண்மை.

11(இ) பொடுகு

தலையில் சிறு சிறு புண்களாக நெருக்கமாக முடிகளுக்கு இடையில் ஏற்படுவதாகும்.  இதைப் ‘பொடுகு’ என்று சொல்வார்கள். இப்புண்களில் இருந்து நீர் வந்து காய்ந்து முடியுடன் ஒட்டிக் கொள்ளும். இதைப் பொருக்கு என்பார்கள். இதைச் சுற்றி முடியை வெட்டி விடுவார்கள். பார்க்க விகாரமாக இருக்கும். இது சுமார் பத்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கே அதிகம் வரும். சிரங்கு போன்று அன்று அதிகம் வந்த நோய்களுள் இதுவும் ஒன்று. இதற்கு அன்று செய்த வைத்தியங்களில் ஒன்றை சொல்கிறேன். முகம் சுளிக்காதீர்கள். அது என்னவென்றால், காய்ந்த கழுதை விட்டையை எடுத்து வந்து, அதை இடித்து, சலித்துப் பொடியாக்கி அதனைத் தேங்காய் எண்ணெயில் கலந்து போடுவார்கள். என்ன சொல்வது? அவர்கள் நம்பிக்கை அப்படி!

11() சேத்துக்கடி

அக்காலங்களில் மழைக்காலத்தில் பல நாட்கள் விடாமல் பெய்யும் மழையை “அடைமழை” என்பர். அப்போது தெருக்களும் மற்றுமுள்ள இடங்களும் விடாத மழையால் சேறு போலாகிவிடும். அத்தெருக்களில் மீண்டும் மீண்டும் நடக்கும் போது கால் விரல்களுக்கிடையே புண்கள் ஏற்படும். நம் மக்கள் எப்பவுமே முள்ளில் மிதித்துவிட்டால், “முள் குத்திவிட்டது” என்பர். அதுபோலவே, சேற்றில் அதிகம் நடந்ததால் வந்த இப்புண்ணையும், சேறு கடித்துவிட்டதாக நினைத்து, “சேற்றுக்கடி” என்றனர். இது பேச்சு வழக்கில், “சேத்துக்கடி” ஆனது. இதற்கு அன்று செய்த மருத்துவம் என்னவென்றால், ஒன்று, அப்புண்களில் மண்ணெண்ணெய்யைப் போடுவது; மற்றொன்று மஞ்சள் பொடியைப் போடுவது, அவ்வளவுதான். அன்று போல் இன்று மழை அதிகம் பெய்யாததாலும், தெருக்களுக்கெல்லாம் சிமென்ட் போடப்பட்டு விட்டதாலும், எல்லா வயதினரும் செருப்பணிந்து நடப்பதாலும் இந்நோய் அருகிவிட்டது. நான் சிறுவனாய் இருந்த போது, மழைக் காலங்களில் இப்புண் எனக்கும் வந்திருக்கிறது.

நோயும் மருந்தும்

12.கட்டிகள்

கட்டிகள் என்பவை உடலில் தோன்றும் இடத்தைப் பொருத்தும், அவை குணமாக எடுக்கும் காலத்தைப் பொருத்தும் பல பெயர்களால் அழைக்கப்படுபவை யாகும். அதாவது தலைப் பகுதியில் வருவதைப் ‘பொன்னி’ என்றும் முதுகில் தண்டுவடப் பகுதியில் வருவாதைப் ‘பிளவை’ என்ன மற்ற இடங்களில் வருவதைப் பொதுவாகச் சிலந்தி  என்றும் சொல்வார்கள்.

12( ) பொன்னி

பொன்னி என்பது தலையிலும் காதின் பக்கத்திலும், அதையடுத்துள்ள நெற்றியின் ஓரத்திலும் உண்டாகும் கட்டியாகும். இன்று இந்நோய் இல்லாததால் பொன்னி என்ற இதன் பெயரும் இன்றைய சமுதாயத்தினருக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இது சிறு உருளைக்கிழங்கு அளவிற்குப் புடைத்து, பின்பழுத்து உடைந்து சீழ் வடியத் தொடங்கும். தக்க மருத்துவம் செய்யாததால் துர்நாற்றம் அடித்துக் கொண்டும், அதில் ஈக்கள் போன்றவை பறந்துவந்து உட்காருவதும் செல்வதுமாக சுமார் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையிலும் கூட இருக்கும். இதை வீட்டில் யாருக்காவது திருமணம் ஆனால் சரியாகும் என்றும்; அல்லது ஏதாவது இறப்பு நிகழ்ந்தால் தானாகவே சரியாகும் என்றும் நம்பினர். இதனால் இதைக் கல்யாணப் பொன்னி என்றும், சாவுப்பொன்னி என்றும் பெயர் சொல்லி அழைத்தனர். இது வந்து குணமானபின் அவ்விடத்தில் முடியுதிர்ந்து பெரிய வட்டமாகத் தழும்பு ஒன்று இருக்கும். இதற்கு அன்று செய்த வைத்தியத்தில் ஒன்று விசித்திரமானதும் அறுவருப்பானதும் ஆகும். அதாவது, கோழியிடும் குழுகுழுவென இருக்கும் மலத்தை எடுத்துப் போடுவார்கள். நான் சிறுவனாய் இருந்தபோது பெரியவர்களுக்கும், என்னுடன் பயின்ற மாணவரில் சிலருக்கும் இந்நோய் வந்துள்ளதைப் பார்த்திருக்கிறேன்.

12(ஆ) பிளவை

முதுகுத்தண்டுப் பகுதியில் ஏற்படும் ஒரு வகைக் கட்டி(சிலந்தி)யை பிளவை என்று சொல்வர். இதில் சாதாரணப் பிளவை, இராச பிளவை என்று இரு வகையுண்டு. இராசபிளவை ஏற்பட்டால் உயிர் பிழைப்பது அரிது. பொதுவாகப் பிளவை வந்தால் குணமாக 10 முதல் 15 நாட்களுக்கு மேலாகும். இதற்குக் குப்பைமேனி இலையுடன் துளசி இலை சேர்த்து அரைத்து அதில் சிறிது கொடுத்து விழுங்கச் சொல்லி; பின் மீதம் உள்ளதில் மயில்துத்தம் என்றும் தாமிரசல்பேட் (copper sulphate ) என்றும் சொல்வதில் சிறிது சேர்த்து பிளவையில் போடுவர். இந்நோய் எனக்குத் தெரிந்த அளவில் இல்லை.

12(இ) சிலந்தி

கை கால்கள் போன்ற பகுதிகளில் ஏற்படும் கட்டிகளை சிலந்தி என்று சொல்வார்கள்.  இவை பழுத்து உடைந்து சீல் வெளியேறும் வரை அதிக வலி இருக்கும். சுமார் பத்து முதல் பதினைந்து நாட்களுக்குள் குணமாகும். இப்போதும் இது அரிதாக சிலருக்கு வருவதுண்டு. ஆனால் இன்று சிறந்த மருத்துவம் இருக்கிறது. அன்று இது வந்தால் பழுத்து உடைவதற்காக விளக்கெண்ணைய் போடுவார்கள். அல்லது கடுகு அரைத்துக் போடுவார்கள். சிலர் சின்ன வெங்காயமும் மஞ்சளும் சேர்த்து அரைத்துப் போடுவார்கள். இவற்றைப் போட்டு சிலந்தி சீழ் வைத்து உடையும் நிலையை அடைந்ததும், சிலர் சிலந்தி வந்தவரை அழுத்திப் பிடிக்க, ஒருவர் அதை சிறிது  அறுத்து பிதுக்கி சீழை வெளியேற்றி மஞ்சள் வெங்காயம் அரைத்துப் போடுவார்கள்.  மற்றொன்று வாகைப்பத்து என்பது. அதாவது உடையும் நிலையடைந்த சிலந்தி மீது பஞ்சை வைத்து அதில் வாகைமர இலையுடன் உப்பு சேர்த்து கசக்கிப் பிழிவார்கள்.  அப்போது வரும் சாற்றை பஞ்சின் மீது விடுவார்கள். பஞ்சு நன்கு காய்ந்து ஒட்டிக் கொள்ளும், பின் ஓரிரு நாள்கள் கழித்து வெடுக்கெனப் பிடித்து பஞ்சை இழுப்பார்கள்.  அது சிலந்தியின் மேல் தொலியைப் பிய்த்துக் கொண்டு சிலந்தியின் மையப் பகுதியாகிய ஆணியுடன் வரும். பின் எண்ணெய் போன்றவற்றைப் போட குணமாகும். நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது எனது முழங்காலில் சிலந்தி வந்து இந்த வாகைப்பத்து போட்டதை நினைக்கும் போது அதன் வலி இப்போதும் எண்ணெய் மயிர் கூச்செறிய வைக்கிறது.

12() யானைக் கால்

“யானைக்கால்” என்று சொல்லப்படும் பெயரே இந்நோயின் தன்மையைக் கூறுவதாக உள்ளது. நம் நாட்டில் கியுலக்ஸ் என்ற ஒருவகைக் கொசுக்களின் வழியாகப் பரவும் இந்நோய் வந்தவரின் காலானது, முழங்கால் பகுதியிலிருந்து பாதம் வரை யானையின் கால் போன்று பருத்துக் காணப்படும். இவ்வாறு பருத்து விடுவதால் இவர்கள் இயல்பான நடை நடக்க முடியாமல் கால்களைக் கஷ்டப்பட்டுத் தூக்கி வைத்து நடப்பார்கள். இந்த நோய் வந்த பலரை அன்று நான் பார்த்திருக்கிறேன். இன்று இந்நோய் உள்ளோர்கள் ஒருவர்கூட எங்கள் பகுதியில் இல்லை.

நோயும் மருந்தும்

யானைக்குத் தமிழில் “கரி” என்றும் ஒரு பெயர் உண்டு. ஆகவே, இந்நோய் வந்தவர்களை “கரிகாலன்” என்று கிண்டலாகக் கேலி செய்வதைப் பார்த்திருக்கிறேன். இந்த யானைக்கால் என்னும் நோய் முன்பு தஞ்சை மாவட்டத்தில் அதிகம் உண்டு. அதனால், செட்டிகுறிச்சியில் இருந்து சென்று, சிறுவயது முதல் கும்பகோணத்தில் வாழ்ந்து வரும் பெருவணிகரான திரு.கந்தசாமி அவர்களிடம் இந்நோய் பற்றிக் கேட்ட போது, “நான் எனது வியாபார சம்பந்தமாகவும், பொதுப்பணி சம்பந்தமாகவும் தினம் தினம் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளுக்குச் சென்று வருகிறேன்.

திரு.கந்தசாமி

திரு.கந்தசாமி

முன்பெல்லாம் இந்நோய் வந்தவர்கள் பலரை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். ஆனால், இப்போது இந்த நோய் உள்ளவர்களை நான் எங்கும் பார்த்ததில்லை” என்று கூறுகிறார். இவ்வாறு இவர் கூறுவது அரசு எடுத்த நோய்த் தடுப்பு நடவடிக்கையின் விளைவைக் காட்டுகிறது.

13(அ) காயங்கள்

எதிர்பாராத விதமாக உடலில் ஏதாவது பட்டு சிறு காயங்கள் உண்டாகி இரத்தம் வருவது என்றும் நிகழும் நிகழ்வு. அன்று அதற்குச் செய்த மருத்தவம் இன்றுள்ளோர்க்கு “இதுவா மருந்து?” என நினைக்கத் தோன்றும். ஆனால், அதுவே அன்று மருந்து. அதாவது, சிறுகாயம் ஏற்பட்டு இரத்தம் வரும் போது உடனே அடுப்புக் கரியை எடுத்துக் கல்லில் தேய்த்து, பொடி எடுத்து, இரத்தம் வரும் இடத்தில் வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடிப்பார்கள். இரத்தக் கசிவு நின்று கரிப் பொடி ஒட்டிக் கொள்ளும். பின் தானாகப் புண் விரைவில் ஆறிவிடும். எனது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு எனக்கும் இம்முறை செய்துள்ளனர். அதன்பின் காப்பி குடிக்கும் பழக்கம் ஒருசில வீடுகளில் வந்த பின், சிறிது காப்பிப் பொடியை அவர்களிடம் வாங்கி, முன் சொன்னது போலவே செய்தனர். காட்டில் வேலை செய்யும் போது காலிலோ கையிலோ காயம் ஏற்பட்டால் அந்தச் சூழ்நிலையில் செய்த மருத்துவம் இன்னும் வித்தியாசமானது. அதாவது, காயம்பட்டவுடன் தரையிலுள்ள புழுதி போன்ற மண்ணை எடுத்து அதிலுள்ள தூசி, சிறு கற்கள் இவற்றை நீக்கி விட்டு இரத்தம் வரும் இடத்தில் போடுவார்கள். இரத்தம் வருவது உடனே நின்று; அதன்பின் புண் தானாக ஆறிவிடும். சிறுவயதில் நண்பர்களோடு விளையாடும் போது எனக்கு ஏற்பட்ட காயத்திற்கு இதையே நானும் செய்திருக்கிறேன். என் நண்பர்கள் உட்பட அன்று எல்லோரும் இதைச் செய்துள்ளனர். “கழுதைப் புண்ணுக்கு தெருப்புழுதி மருந்து” என்னும் பழமொழியே அன்று வழக்கில் உண்டு. புழுதிமண் கழுதைக்கு மட்டுமல்ல; மனிதனுக்கும் மருந்தாக இருந்தது.

13(ஆ). தீப்புண்

நெருப்பு அல்லது சுடுநீர், சுடுஎண்ணெய் போன்றவை உடலில் பட்டால்; உடனே அத்தெருவில் உள்ள எழுதப் படிக்கத் தெரிந்தவரிடம் சென்று, அவர் எழுதப் பயன்படுத்தும் பேனா மையை வாங்கிப் போடுவார்கள். இது போக தோசை மாவு இருந்தால் அதையும் அவ்விடத்தில் போடுவார்கள்.

14.காலம் கடந்து நடந்தால்

நடைபயிலத் தொடங்கும் சிறு குழந்தைகள் சில சீக்கிரமாகவும், சில சற்று தாமதமாகவும் நடக்கத் தொடங்கும். இது இயல்பானதுதான். ஆனால், அன்றையத் தாய்மார்களில் சிலர் இதற்காகச் செய்த சிகிச்சை சிரிப்பைத் தருவதாயுள்ளது.  அதாவது அன்று எல்லா, வீடுகளிலும், கேப்பைக்கழி, கம்மங்கஞ்சி, சோளக்கஞ்சி என்று உணவு தயாரிக்கும்போது அதைக் கிண்டி விடுவதற்காகத் துடுப்பு என்பது வைத்திருப்பார்கள். அத்துடுப்பை ஒரு மண் பானை நிறைய தண்ணீர் எடுத்து அதில் போட்டு, சிறு பிள்ளை குளிக்கும் அளவிற்கு சூடேற்றி அதிகாலையில் அதாவது காக்கா பறக்கும் முன் என்று சொல்வார்கள். அவ்வேளையில் முச்சந்தியில் வைத்து குழந்தையைக் குளிப்பாட்டினால் சீக்கிரம் நடக்கும் என்று நம்பிச் செய்தனர்.

15. செந்தட்டி ஊரல்

செந்தட்டி என்ற செடியின் இலை உள்ளங்கை, உள்ளங்கால் தவிர உடலின் மற்ற இடங்களிலுள்ள தோலில் பட்டால் ஊரல் கொடுக்கும். இந்தச் செடிகள் அன்று சர்வ சாதரணமாக எல்லா இடங்களிலும் இருந்தன. நடந்து சொல்லும்போது காலில் தெரியாமல் பட்டுவிட்டால் ஊரல் ஏற்படும். இதற்கு மருந்து என்பது எதுவும் கிடையாது. அதற்கு அன்று செய்த ஒரே மருந்து என்னவென்றால், செந்தட்டி இலை உடலில் பட்டு ஊரல் எடுத்ததும், அந்த இடத்தில் தரையில் சிறுநீர் கழித்து, சிறுநீர் கலந்த மண்ணை எடுத்து போடுவார்கள். இது ஒன்றே அதற்கு மருந்து. அன்று எல்லோரும் இதற்கு இதையே செய்தார். நானும் செய்துள்ளேன். சிறுபிள்ளைகள் இச்செடி இலையைக் கையில் மறைத்துத் கொண்டு வந்து மற்றப் பிள்ளைகள் மீது தேய்த்து விளையாடுவதும் செய்வார்கள்.

16. கண் நோய்

கண்கள் இரண்டும் சிவப்பாக மாறி பூழை தள்ளி கண்களில் வலியும் கூச்சமும் இருப்பதைக் கண்வலி என்பர். இன்றும் இந்நோய் இருக்கிறது. சிறந்த மருத்துவமும் இருக்கிறது. இன்று இந்தக் கண்வலியை மெட்ராஸ்-ஐ என்று கூறுகின்றனர்.

நோயும் மருந்தும்

அன்று செய்த மருத்துவம்:

(அ) புளியமர இலையைப் பறித்து புளித்த பழைய சோற்றுத் தண்ணீரில் வேக வைத்து அந்த நீரைக் கொண்டு கண்களைக் கழுவினால் சரியாகும் என்று செய்தனர்.

(ஆ) சீனிக்காரம் சிறிது எடுத்து வேகவைத்துக் கடைந்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து கண்களின் மேல் பட்டையில் போட்டால் சரியாகும் என்று செய்தனர்.

(இ) அகத்திச் செடியின் கொழுந்து (தளிர்) இலைகளைப் பறித்து கண்களை மூடிக் கொண்டு அதன் மேலே வைத்தால் சரியாகும் என்று செய்தனர்.

(ஈ) மழை பெய்யும் போது சில வேளைகளில் பனிக்கட்டி மழை (ஆலங்கட்டி மழை) என்று பனிக்கட்டிகள் சிறு சிறு துண்டுகளாக மழையுடன் சேர்ந்து விழும். அவ்வாறு விழும் பனிக்கட்டித் துண்டுகளைப் பொருக்கி எடுத்து அதை ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொள்வார்கள். கண்வலி வரும்போது பனிக்கட்டி நீரில் சில துளிகளை கண்களில் விடுவார்கள். சிலர் இந்த பனிக்கட்டி நீருடன் சிறிது சீனிக்காரம் சேர்த்து விடுவார்கள்.

(உ) கண்களில் சிறு குச்சி போன்றைவை பட்டு கண் கலங்கி சிவப்பாக இருந்தால், அவர்களை மல்லாந்து படுக்க வைத்து ஒரு கோழியைப் பிடித்து அதன் கால் விரல்களில் ஒன்றை கத்திக் கொண்டு அறுப்பர். அப்போது வரும் இரத்தத்தில் ஓரிரு துளிகளை கண்களில் விடுவார்கள். இவ்வாறு செய்வதை நான் அன்று பார்த்திருக்கிறேன்.

(ஊ)  இது மிக எளிய முறையும் அன்று அதிகம் நடைமுறையில் இருந்ததுவும் ஆகும். அதாவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களிடம் ஒரு சங்கில் சிறிது தாய்ப்பால் (அமிர்தப் பால்) வாங்கி அதைக் கண்களில் விடுவார்கள்.

(எ) செம்பருத்திப் பூ அல்லது இலை இவற்றை அரைத்து கண்களை மூடச் சொல்லி இமை மீது வைப்பார்கள்.

பதிவு 12 : நோயும் மருந்தும் – 4

 

நோயும் மருந்தும் – 2

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

“இது மருத்துவ முறையை அறிந்து கொள்வதற்காக அன்று; மின்சாரத்திற்கு முந்தைய காலத்தில் உள்ள மக்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக மட்டுமே.”

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

முந்தைய பதிவு : நோயும் மருந்தும்

பதிவு: 10

ன்றைய மருத்துவம் என்பது மருத்துவக் கல்லூரியில் கற்றுத் தரப்படும் ஒரு கல்வியாக இருக்கிறது. இதனால் இதில் கற்று வரும் மருத்துவர்கள் செய்யும் மருத்துவமும் நாடெங்கிலும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் நம் நாட்டில் பன்னெடுங் காலத்திற்கு முன்பே சித்த மருத்துவம் போன்ற சிறந்த மருத்துவ முறைகள் இருந்தன என்றாலும், அவற்றை இன்று போல் அன்று பலரும் கற்கும் நிலை இல்லாததாலும்; நூல் அச்சிடும் முறை இல்லாததாலும்; அவை எல்லோரையும் சென்றடையாமல் ஒரு சிலர் மட்டுமே அறியும்படி இருந்தன. அதனால் நோய் வந்த போது முன்பு நான் ஏற்கனவே சொல்லியுள்ளபடி கடைகளில் கிடைக்கும் சில கடைச்சரக்குகளைக் கொண்டும், பச்சிலை என்று சொல்லப்படும் மூலிகைகளைக் கொண்டும் அவரவர் வாழும் பகுதியில் பின்பற்றப்படும் மருந்துகளை அவர்களாகவே தயாரித்துப் பயன்படுத்தினர். அவ்வாறு அன்று அவர்கள் செய்தவைகளில் சில நல்ல மருந்துகளாகவும், பல அவர்களின் அறியாமை மற்றும் மூடப் பழக்கவழக்கங்களால் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவையாகவும் இருந்தன. அதாவது, “தென்னை மரத்தில் தேள் கொட்ட பனைமரத்தில் பதவளை(நெரி) கட்டியது” என்று சொல்வார்களே அது போன்று இருந்தது.

சிறு குழந்தைகளின் உடல் மென் தளிர் போன்ற தன்மை கொண்டது. எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடியது. ஆகவே அவர்களை நாற்றங்கால் பயிர்களைப் போன்று பாதுகாத்து வளர்த்தல் வேண்டும். ஆனால், அன்றைய மக்களின் வாழ்க்கை என்பது எல்லா நிலைகளிலும் மிகவும் தாழ்ந்து இருந்ததாலும், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கேற்ற ஊட்டச்சத்து அடங்கிய உணவுகளைக் கொடுக்காததாலும், அன்றைய தாய்மார்கள் அடுத்தடுத்து பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு இருந்ததனால், குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த முடியாமல் சிறு கைக்குழந்தையை மூத்த பிள்ளையிடம் கவனிக்கும் படி விட்டுவிட்டு காட்டு வேலைக்குச் செல்லுதல் போன்ற நிலை இருந்ததாலும் குழந்தைகள் பல நிலைகளிலும் பாதிக்கப்பட்டு நோயுண்டாகி மரணமும் அடைந்தன. அன்று இவ்வாறு மரணமடைந்த குழந்தைகள் மிக மிக அதிகம். எனவே தான், “ஐந்து வயதைத் தாண்டினால்தான் அதிக ஆயுசு; அதற்கு முன்பு அற்ப ஆயுசு” என்று சொல்லும் வழக்கு உண்டானது.

மொத்தத்தில், அன்றைய மக்கள் தகுந்த மருத்துவ வசதி இன்மையால், உயிர் காக்கும் பயத்தில் எதை எதையோ நம்ப உந்தப்பட்டார்கள். அது சரியா தவறா என்பது அவர்களுக்குத் தெரியாது. அந்த நம்பிக்கை காப்பாற்றிய போது அது மருந்தாகக் கண்டார்கள். காப்பாற்றத் தவறிய போது விதி முடிந்து விட்டதாக நிந்தித்துக் கொண்டார்கள்.

இப்புலத்தொடு, அன்று குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பெரும் சவாலாக இருந்த எண்ணற்ற நோய்களுள் சிலவற்றை அவர்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவத்துடன் இங்கு குறிப்பிடுகிறேன். இது மருத்துவ முறையை அறிந்து கொள்வதற்காக அன்று; மி.மு.காலத்தில் உள்ள மக்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக மட்டுமே.

நோயும் மருந்தும்

1.வயிற்றோட்டம்

சிறு பிள்ளைகளுக்கு அன்று அடிக்கடி வந்த நோய்களுள் வயிற்றோட்டமும் ஒன்றாகும். இது முதலில் அஜீரணமாகத் தொடங்கி பின் குடித்தபால் அப்படியே வயிற்றோட்டமாகவும் வாந்தியாகவும் வரும். குழந்தையோ கண் சொருகி மயங்கிய நிலையடையும். தக்க மருத்துவம் செய்யாவிடில் இறந்து போகும். அன்று இந்நோயால் இறந்த குழந்தைகள் மிக அதிகம்.

(அ) சீர் அடித்தல்

வயிற்றோட்டத்திற்குப் பல பெயர்கள் சொல்வதுண்டு. ஒருவயதிற்குட்பட்ட சிறு குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் ஏற்படும் போது சொல்லும் காரணங்களில் “சீர்” என்பது முக்கியமானதாகும். இதை சீர் அடித்திருக்கிறது என்று சொல்வார்கள். தீட்டுடைய (மாதவிடாய்) பெண்களின் காற்றோ அல்லது அவர்கள் கட்டியிருக்கும் சேலையின் முந்தியோ குழந்தை மீது பட்டால், இந்த சீர் ஏற்பட்டு வயிற்றோட்டம் ஏற்படுவதாகக் கருதினர். இது போக “அடைக்கோழி சீர்” என்றும் ஒன்று சொல்வார்கள். அதாவது முட்டையிட்டு அடை காக்கும் கோழி தன் இறக்கைகளை அடித்துக் கொண்டு செல்லும் போது அதன் காற்று பட்டால் இந்த அடைக்கோழி சீர் ஏற்படுமாம். இதற்கெல்லாம் மருந்து கொடுத்ததை விட அறியாமையால் செய்தவையே அதிகம்.

செய்த மருத்துவம் :

(அ)   அன்றையக் காலங்களில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சலவைத் தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குப் பயன்படுத்த கழுதைகள் வைத்திருப்பார்கள். சீர் தாக்கி வயிற்றோட்டம் செல்லும் குழந்தையை காலை நேரத்தில் கொண்டு வந்து கழுதையின் முகத்தில் ஒட்டிப் பிடிப்பர். அவ்வாறு பிடிக்கும்  போது கழுதை “துர்ர்ர்…” என்று மூச்சுவிட்டால் இந்த சீர் சரியாகி வயிற்றோட்டம் நிற்கும் என்று நம்பிச் செய்தனர். நான் இருக்கும் செட்டிகுறிச்சியில் செங்கி என்ற பெண் சலவைத் தொழிலாளி வீட்டில் மூன்று நான்கு கழுதைகள் எப்பொழுதும் இருக்கும். இந்தக் கழுதையின் முகத்தில் குழந்தைகளைக் கொண்டு வந்து பிடித்துச் செல்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

(ஆ)   பன்றி வளர்ப்பவர்கள் பன்றியை அறுக்கும் போது அதன் இரத்தத்தை துணியில் நனைத்து அத்துணியை காய வைத்து (உலர்த்தி) வைத்திருப்பார்கள். இவர்களிடம் கேட்டால் இலவசமாக இத்துணியில் சிறிது கொடுப்பார்கள். அப்படி வாங்கிய துணியுடன் ஓமம், மஞ்சள்பொடி, சாம்பிராணிப்பொடி இவற்றைச் சேர்த்து ஒரு கைக்கரண்டியில் கங்கு (தணல்) எடுத்து அதில் இவற்றைப் போட வேண்டும். அப்போது வரும் புகையில் குழந்தையைக் காட்டினால் எப்பேற்பட்ட சீரானாலும் நீங்கிவிடும் என்று நம்பிச் செய்தனர்.

(இ)   வயிற்றோட்டம் செல்லும் குழந்தை மீது சூடம் தடவி எரித்தல், திருநீருபோடுதல், மசூதி, பள்ளிவாசல், மாதாகோவில் என்று அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து எடுத்துச் சென்று மந்திரித்து தண்ணீர் தெளித்து வருவார்கள். இவ்வாறு செய்வது வயிற்றோட்டத்திற்கு மட்டுமல்லாது எல்லா நோய்களுக்கும் அன்று செய்தனர். இன்றும் செய்கின்றனர்.

(ஈ)    பிள்ளை வளத்தி இலையுடன் மஞ்சள்தூள், வசம்பு சேர்த்து வெள்ளைத் துணியில் வைத்து அதை குழந்தையின் மணிக்கையில் கட்டி வைப்பர்கள். இவ்வாறு கட்டுவதால் குழந்தை கையை முகத்திற்கு கொண்டு செல்லும் போதெல்லாம் அதன் வாசனை மூக்கிலும் முகத்திலும் பட்டு சீர் சரியாகும் என்றும், சீர் ஏற்படாத குழந்தைகளுக்குக் கூட தற்காப்பு நடவடிக்கையாகவும் இதைக் கட்டினர்.

(உ)   கலப்பை படாத கொழுஞ்சிவேர், இஞ்சி, சுக்கு, மிளகு, காயம், வெள்ளப்பூடு இவற்றை வெள்ளைத் துணியில் கட்டி அதை அடுப்பில் சுட்டு எடுத்து அம்மியில் நன்கு அரைத்து சங்கில் வெந்நீருடன் கலந்து கொடுத்தார்கள். இது போன்று பற்பல அன்று செய்தார்கள்.

என் மூத்த மகன் அசினுக்கு சுமார் ஒரு வயது இருக்கும் போது வயிற்றோட்டம் மிக அதிகமாகி கண் சொருகி மயங்கிய நிலையடைந்தான். பலரும் வந்து, “கடுமையாகச் சீர் அடித்திருக்கிறது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றால் கேட்காது” என்று இதில் மேலே சொல்லியுள்ளது போன்ற பலவிதமான பக்குவம் செய்யும் படிச் சொன்னார்கள். அவை எதுவும் அறிவுக்கும், மருத்துவத்திற்கும் ஒத்துவராத செயல்களாக இருந்தமையால் அவற்றில் எதுவும் செய்யாமல் போக்குவரத்து வசதியும் மருத்துவ வசதியும் இல்லாத அன்று இரவில் கடைசிப் பேருந்திற்கு கழுகுமலை சென்று அங்கிருந்த மலையாள டாக்டரிடம் மருத்துவம் செய்து சரியானது.

நோயும் மருந்தும்

(ஆ) குடல் ஏற்றம்

வயிற்றோட்டம் ஏற்படுவதற்குச் சொல்லப்படும் காரணங்களுள் குடல் ஏற்றம் என்பதும் ஒன்று. அதாவது குழந்தையை மேலே கீழே தூக்கும் போதோ அல்லது தொட்டில் போன்ற குறைந்த உயரத்திலிருந்து தலைகீழாக விழுந்தாலோ குழந்தையின் குடல், அது இருக்கும் இடத்திலிருந்து விலகி நெஞ்சுப் பகுதிக்கு வந்து விட்டதாகக் கருதினர். ஆகவே, இதற்கு “நெஞ்சுக் குடல் ஏற்றம்” என்று அழைத்தார்கள். இவ்வாறு ஏற்பட்டு வயிற்றோட்டம் செல்வதற்கு என்ன மருந்து கொடுத்தாலும் சரியாகாது என்றும் குடல் தட்டி விட்டால்தான் சரியாகும் என்று நினைத்தனர். ஆகவே “குடல் தட்டி விடுபவர்” என்று இருப்பவரிடம் சென்று குழந்தையைக் காட்டுவார்கள். அவர் குழந்தையின் வயிற்றில் தனது உள்ளங்கையாலும், உள்ளங்கையின் பின் பகுதியாலும் தட்டியும் தடவியும் விடுவார். பின் பிள்ளையைத் தூக்கிப்பிடித்து தனது நாடியால் தடவி விட்டு வாயால் ஊதுவார். இவ்வாறு செய்வதனால் குடல் சரியான இடத்திற்குச் சென்று விடுவதாகவும் இதனால், வயிற்றோட்டமும் சரியாகும் என்று நம்பிச் செய்தனர். இப்பழக்கம் ஒரு சில பாமர மக்களிடம் மட்டும் மிகக் குறைந்த அளவில் இன்றும் காணப்படுகிறது.

சிறு குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் ஏற்பட இக்காரணங்களின்றி, சுமார் மூன்று மாதத்தில் குப்புற விழப் படிக்கும் போதும்; அதன்பின் உட்காரப் படிக்கும் போதும்; தவழப்படிக்கும் போதும்; நடக்கப் படிக்கும் போதும்; பல் முளைக்கும் போதும் வயிற்றோட்டம் ஏற்படத்தான் செய்யும் என்ற கருத்து அன்று இருந்தது. இதனால் அது தானாகவே சரியாகிவிடும் என்று கருதி எந்த மருத்துவமும் செய்யாமல் பலர் இருந்தனர். இன்று இந்நிலை இல்லை.

நோயும் மருந்தும்

2.பட்சிதோசம் (பறவை தோசம்)

பட்சிதோசம் என்பது அன்று பரவலாக எல்லா இடங்களிலும் செய்துவந்த ஒருசெயல். அதாவது சுமார் ஆறு மாதத்திற்குட்பட்ட அல்லது நடக்கப் படிப்பதற்கு முன் சிறு குழந்தையை வீட்டிலிருந்து மாலை நேரத்தில் திண்ணை, முற்றம், பக்கத்து வீடு என்று வெளியே எடுத்துச் செல்லும்போது குழந்தையின் தலைக்கு மேலே வானத்தில் ஏதாவது பறவை பறந்து சென்றால் அதனால் குழந்தை பாதிக்கப்படும் என்று கருதி அதற்கு பட்சிதோசம் என்று சொன்னார்கள். இவ்வாறு காரணம் இல்லாது கூறிய இதற்கு இவர்கள் தடுப்பு நடவடிக்கையாகச் செய்ததும் காரண காரியமற்றதாகும். அதாவது அவ்வாறு குழந்தையை வெளியே கொண்டு செல்லும்போது அதன் தலையில் சிறுநகம் அளவிற்கு பனை ஓலைத்துண்டு அல்லது சிறுஇலை என்று ஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே கொண்டு வருவார்கள். அக்குழந்தையின் தலையில் விளக்கெண்ணெய் தேய்த்திருப்பதால் அது நன்கு ஒட்டிக் கொள்ளும். இன்று இப்பழக்கம் முழுமையாக இல்லை.

3. பால்திரட்சி

தாய்ப்பால் குடிக்கும் மூன்று அல்லது நான்கு மாதக் குழந்தைகளின் வாயிலிருந்து சில வேலைகளில் குடித்த பாலில் சிறுபகுதி தயிர் போன்று திரைத்திரையாக எச்சிலுடன் சேர்ந்து வெளியே வரும். இதைப் பால்திரட்சி என்பார்கள். இதற்கு கடைகளில் விற்கப்படும் பால்ப்பாசி என்ற வெள்ளை நிறப் பாசி கோர்க்கப்பட்ட மாலையை வாங்கிக் கழுத்தில் கட்டுவார்கள். அவ்வாறு செய்தால் சரியாகும் என்று நம்பிச் செய்தனர். ஆனால், இந்தப் பால்திரட்சி என்பது குழந்தையை ஒன்றும் பாதிக்காது. இப்பழக்கம் இன்னும் சிலரிடையே இருக்கிறது.

நோயும் மருந்தும்

4. வாந்தி

பால்திரட்சிக்கு சொல்லியுள்ளபடி வாயிலிருந்து எச்சிலுடன் திரைத்திரையாக பால்வந்து குழந்தை வாடாமல் ஆரோக்கியத்துடன் இருந்தால் பால் பாசி  கட்டியதுடன் இருந்து விடுவார்கள். ஆனால் அதுவே அதிகமாக ஏற்பட்டு குழந்தை தளர்ச்சியாகக் காணப்பட்டால் வாந்தி என்று சொல்லி மயில் தோகையை நெருப்பில் எரித்து அதன் சாம்பலை எடுத்து உள்ளங்கையில் வைத்து அதில் தேன் துளி சில விட்டு கலக்கிக்  கொடுப்பார்கள்.

மற்றொன்று சூடத்தை எரியவைத்து அது எரியும் போது வரும் புகைமீது ஒரு டம்ளரைக் கவிழ்த்துப் பிடிப்பார்கள். அப்புகை டம்ளரின் உட்புறத்தில் ஒட்டிக் கொள்ளும். பின் அப்புகையை விரலால் வழித்தெடுத்து தேனில் கலக்கிக் கொடுப்பார்கள். இம்மருத்துவம் குழந்தை சற்று பெரிய பிள்ளையாகும் வரைக் கொடுப்பார்கள்.

5. சளி

சளி ஏற்பட்டு மூக்கில் தண்ணீராக ஒழுகுவது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அன்றும் இன்றும் என்றும் இருக்கும் நோய்களுள் ஒன்று. இதை சளிப்பிடித்திருக்கிறது. தடுமம் பிடித்திருக்கிறது. ஜலதோசம் பிடித்திருக்கிறது. பலபெயர்களால் சொல்வார்கள். இன்று இது ஏற்பட்டால் மருத்துவமனைகளில் மருந்து மாத்திரை டானிக் என்பது எத்தனையோ இருக்கின்றது. ஆனால் அன்று சிறு பிள்ளைகளுக்கு சளி பிடித்தபோது செய்த பக்குவங்களில் சில.

(அ) மிகச் சிறு கைக்குழந்தைகளுக்கு சளிப்பிடித்தால் கேழ்வரகு (கேப்பை, ராகி) மாவை சிறிது வாயில் போட்டுமென்று அது கட்டியாகி பசைபோன்று வந்ததும் அதை எடுத்து பிள்ளையின் தலையில் தப்பளம் போடுவார்கள்.

(ஆ) தேங்காய் எண்ணெய்யில் சிறிது எலிப்புழுக்கையைப் போட்டு சுடவைத்து அந்த எண்ணெய்யை குழந்தையின் தலையில் தேய்ப்பார்கள்.

(இ) சற்று பெரிய பிள்ளைகளுக்கு சோற்றுக் கற்றாழைத் தோலைச்சீவி நீக்கிவிட்டு, சங்கு போன்ற பகுதியை எடுத்து சிறிது கொடுப்பார்கள்.

(ஈ) ஆவரை இலையை இடித்து சாறு எடுத்து வைத்துக் கொண்டு, முச்சந்தி மண்எடுத்து சுளவில் (முறம்) இட்டு பு(பி)டைக்க வேண்டும், அப்போது கிடைக்கும் புழுதி போன்ற மண்ணை சட்டியில் போட்டு வறுத்து அத்துடன் இந்தச் சாறை ஊற்றி கொதிக்க விடுவார்கள். அப்போது வரும் நுறையை எடுத்து தலையில் தப்பளம் போட்டு ஒரு சங்கு குடிக்கவும் கொடுப்பார்கள்.

(உ) துளசி இலை, கண்டங்கத்தரி இலை, இஞ்சி, வெள்ளப்பூடு சேர்த்துத் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு சங்கு  கொடுப்பார்கள்.

6.வயிற்றொளச்சல்

வயிற்றொளச்சல் என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை இருக்கும் நோய். இந்நோய் ஏற்பட்டால் ஆரம்பத்தில் மலம் நுரை நுரையாகவும் முற்றினால் இரத்தம் கலந்தும் வரும். வயிற்றில் வலியும் ஆசன வாயில் காந்தலும் இருக்கும். இதற்கு இன்று சிறந்த மருந்துகள் இருக்கின்றன. ஆனால் அன்று செய்தவைகளில் சில கீழே காணலாம்.

(அ) தயிரில் குப்பைமேனி இலையை உப்புவைத்து கையால் கசக்கும் போது வரும் சாரைப் பிழிந்து குடித்தார்கள். இவ்வாறு செய்தால் இரண்டு நாளில் குணமாகும்.

(ஆ) மாதுளை மரத்தில் கொழுந்து இலை அல்லது கொய்யா மரத்திலுள்ள கொழுந்து இலையை அரைத்துக் குடிக்கக் கொடுப்பார்கள்.

(இ) பெருந்தும்பை இலையுடன் வெங்காயம் சேர்த்து இடித்து சாறு எடுத்து குடிக்கக் கொடுத்தார்கள்.

(ஈ) வயிறை தட்டி விடுதலும் செய்தார்கள்.

7. காலரா

காலரா என்பது மிக மோசமான தொற்றுநோய் இந்நோய் கண்டவர்க்கு வயிற்றோட்டம் தண்ணீர் போன்று அடிக்கடி செல்லும் ஓரிரு நாளில் நோயாளி இறந்து போவார். நான் சிறுவனாய் இருந்தபோது  எங்கள் பகுதியில் இந்நோயால் ஒரே நாளில் பலர் இறந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இது சம்மந்தமாக அன்று கழுகுமலையில் நான் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்தவரும் இன்று 97 வயதில் வாழ்ந்து வருபவருமாகிய திரு.லூர்துசாமி ஆசிரியர் அவர்களிடம் கேட்ட போது அன்று ஆறு நாளில் நாற்பது பேர் இறந்தனர் என்ற செய்தியைக் கூறினார். இதிலிருந்து காலராவின் கொடூரத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.

இந்நோய் வந்தவர்க்கு மிளகாய் வற்றல் எடுத்து கருக வறுப்பார்கள். அவ்வாறு வறுக்கும் போது அதில் சிறிது கருப்பட்டி சேர்ப்பார்கள். கருப்பட்டி இழகி வரும் போது அதில் புளித்த பழைய சோற்று நீரைச் சேர்த்து ஆறவைத்து குடிக்கக் கொடுப்பார்கள். ஆனால் அது எந்த அளவிற்கு பலன் கிடைத்தது என்பது அவரவர் தலைவிதியைப் பொருத்தது. அரசு செய்துவரும் நோய் தடுப்பு முயற்சியாலும், மருத்துவ வளர்ச்சியாலும் இன்று இந்நோய் முற்றிலும் இல்லை.

நோயும் மருந்தும்

8. சவலப் பிள்ளை

குடும்பக்கட்டுப்பாடு என்றால் என்ன என்று தெரியாமலும் அதன் தேவை இல்லாமலும் வாழ்ந்த அக்காலப் பெண்கள் அடுத்தடுத்து  பல குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு பெற்றெடுக்கும் போது, தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முந்திய பிள்ளை எந்த வயதில் இருந்தாலும் அதை “சவலப் பிள்ளை” என்று சொல்வார்கள். இக்காலத்தில் ஒரு பிள்ளையைப் பெற்று வளர்ப்பதே பெரும்பாடாக இருப்பதால் சவலப் பிள்ளை என்ற சொல்லும் வழக்கத்தில் இல்லாத சொல்லாகி விட்டது. இவ்வாறு சவலப் பிள்ளை என்று சொல்லப்படும் பிள்ளை ஊட்டச் சத்துக் குறைவினாலும் பராமரிப்புக் குறைவினாலும் நோஞ்சி நோய்வாய்ப்பட்டு காணப்பட்டாலும், “சவலப் பிள்ளை இப்படித்தான் இருக்கும். என்ன கொடுத்தாலும் தேராது, அம்மா குழந்தையைப் பெற்றபின் தானாகவே சரியாகிவிடும்” என்று கவனியாது விட்டு விடுவார்கள். இதனாலும் குழந்தை மரணம் நிகழ்ந்தது.

9. அக்கி

சிறு பிள்ளைகளுக்கு உடலில் தடுப்புத்தடுப்பாக காசு அளவிற்கு சிவந்து காணப்படும்  நோய்க்கு ‘அக்கி ‘ என்று சொல்வார்கள். இதற்கு அன்று அவர்கள் செய்த வைத்தியம் அக்கி எழுதுதல் என்பதாகும். அதாவது கோவில்களில் பூசை வைக்கும் பூசாரி, மண்பாண்டம் செய்யும் வேளாளர் என்ற பிரிவினர் இவர்களிடம் சென்றால் அவர் காவிக் கட்டியை நீரில் கரைத்து குழந்தையின் உடல்மீது சிங்கம் போன்று ஏதாவது படம் வரைவார். இதுவே அக்கி எழுதுதல் என்பதாகும். வேளாளர் இல்லாத ஊர்களில் வாழ்பவர்கள், அவர்களாகவே காவிக் கட்டியை நீரில் குழைத்து பூசிவிடுவார்கள். காவிமண் பூசப்பட்ட குழந்தை சிவப்பாக இருக்கும். இந்நோய்க்கு  இது ஒன்றே அன்று மருந்தாக இருந்தது.

10. பாம்புச் சட்டை

சிறு பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவால் தோல் பளபளப்பின்றி பொறிப் பொறியாக ஏற்படுவதற்கு பாம்புச் சட்டை என்றும் தேம்ஸ்டை, பேம்ஸ்டை என்றும் பற்பல பெயர்களால் அழைத்தார்கள். இதற்கு அன்று செய்த மருத்துவம் இன்றுள்ளோர்க்கு நகைப்பைத் தருவதாக இருக்கும். அதாவது ஆண் பிள்ளையாக இருந்தால் பெண் பிள்ளையின் சிறு நீரையும், பெண் பிள்ளையாக இருந்தால் ஆண் பிள்ளையின் சிறு நீரையும் பிடித்து சாம்பலில் கலந்து உடலில் தேய்த்தார்கள். இதுவே இதற்கு முக்கியமான வைத்தியம். இதுபோக மற்றொன்றும் செய்தார்கள். அது என்னவென்றால் கணவனும் மனைவியும் ஒரே பெயருடைவர்களாக இருப்பவர்களிடம் சென்று திருநீறு போட்டுக் கொள்வார்கள்.

பதிவு 11: நோயும் மருந்தும் – 3