அசின் சார், கழுகுமலை.
(புதியவர்கள் “முதல் பதிவு” வழியாக வாருங்கள்)
*
விட்ணுவர்த்தனின் பேரன் இரண்டாம் வீர வல்லாளன் ஆட்சிக் காலம் ஹொய்சள சாம்ராஜ்யத்தின் பொற்காலமாக இருந்துள்ளது. அவனும் அவனுடைய இளைய ராணி அபிநவ கேதாள தேவியும் இணைந்து கி.பி.1219-ஆம் ஆண்டு கட்டியதே இந்தக் கேதாரீஸ்வரர் கோயில். இதை, “இந்திய சிற்பக் கலையின் மாணிக்கம்” என்கின்றனர்.
ஹொய்சலேஸ்வர கோயிலைவிடச் சிறியதான இக்கோயிலின் ஒரு பகுதி, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பராமரிப்பின்மையால் இடிந்து விட்டது. இருக்கிற இன்றைய கோயிலிலும் சிதைந்திருக்கிற பல பகுதிகளை அந்தந்த இடத்திற்கேற்ப கற்களை வைத்து தொல்லியலார் சரி செய்திருப்பது தெரிகிறது.
நட்சத்திர வடிவில் மாக்கல்லினால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் சுவர்கள், கோபுரம், கதவுகள், கூரைகள் என்று அனைத்திலுமே சிற்பங்கள் நிரம்பி வழிகின்றன. என்.ஸ்ரீநிவாஸன் என்பவர், “இதை மனிதர்கள் கட்டிய கோயில் என்று சொல்வதை விட, தெய்வீக ஆபரணம் என்று கூறலாம்” என்று புகழ்வார்.
கேக் போன்ற மேடை, அதன் மேல் கோயில்; நான்கு மூலைகளிலும் நான்கு யானைகள் கோயிலைத் தாங்குவது போன்ற அமைப்பு; சுற்றுப்புறச் சுவர் முழுவதிலும் அடுக்கடுக்காக நுட்பமான சிற்பங்கள்; பூப் போன்ற வடிவ அலங்காரத்துடன் சுவரின் மேல் பகுதி விளிம்பு; அதற்கு மேலே பெரிய அளவிலான சிற்பங்கள் – இவைதான் இக்கோயிலின் பொதுவான அமைப்பு.
இதிலுள்ள பெரிய அளவிலான சிற்பங்களில் புராண கதைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேற்குப் பகுதியிலுள்ள சுவரில் மிகவும் வித்தியாசமான சிற்பம் ஒன்றிருப்பதை நூல் ஒன்றில் படித்தேன். அதாவது, வானரங்கள் டெலஸ்கோப் போன்ற ஒன்றைத் தாங்கி நிற்க, சடாயுவின் சகோதரன் சம்பாதி அதன் வழியாக சீதை இருக்குமிடத்தைக் கண்டு பிடிப்பது போன்ற காட்சி.
இது போல, இராம இராவண போர்க் களம், பாற்கடல் கடைவது, பிரகலாதன் கதை, அர்ச்சுனன் மீனின் கண்ணைக் குறிபார்த்து அம்பால் எய்தவுடன் திரௌபதி மணமாலையுடன் காத்திருப்பது போன்ற புராணக் கதைக் காட்சிகள் மிகுதியாக உள்ளன.
காமிக்ஸ் புத்தகத்தில் கதையின் போக்குக்கேற்ப தொடர்ந்து படங்கள் வரையப்படுவதைப் போல புராணத்தில் வரும் ஏதேனும் ஒரு நிகழ்வை எடுத்துக் கொண்டு அதனை விளக்கத் தொடர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
நேரமின்மையால் ஒவ்வொன்றையும் தனித் தனியாகப் பார்க்க முடியவில்லை. மேற்போக்கான பார்வையுடன் திரும்பி விட்டேன். பக்கத்தில் உள்ள பார்ஷவ நாதர் கோயிலையும் பார்த்துவிட்டு, இருட்டுவதற்குள் செட்டிஹள்ளி செல்ல வேண்டுமென்பதால், அனைவரையும் விரைவு படுத்தினேன்.
உண்மையில் ஒரு நாள் முழுக்கச் செலவிட வேண்டியது ஹளெபீடே.
ஹளெபீடு: பார்ஷவ நாதர் கோயில்