RSS

ஹளெபீடு: ஹொய்சலேஸ்வர கோயில்

01 நவ்

அசின் சார், கழுகுமலை.

ஹளெபீடு: ஹொய்சலேஸ்வர கோயில்

(புதியவர்கள் “முதல் பதிவு” வழியாக வாருங்கள்)

*

கல் ஒரு மணியைத் தாண்டியது.

மதிய உணவை பேளூரிலேயே முடித்து விட்டு உடனே கிளம்பினோம்.

ஹளெபீடு 17 கி.மீ. தூரம்தான். ஆனால், ஹாசன்-பேளூர் சாலை போல இல்லை. பராமரிக்கப்படாத கிராமப்புறச் சாலையாக இருந்ததால் கார் விரைவாகச் செல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட முப்பது நிமிடப் பயணத்திற்குப் பின் ஹளெபீடு ஊருக்குள் நுழைந்தது எங்கள் கார்.

DSC03985n

ஹொய்சால மன்னர்களின் பழைய தலைநகரான துவாரசமுத்திரமே இந்த “ஹளெபீடு.” இங்கு சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டுள்ள ஹொய்சலேஸ்வர கோயில்தான் ஹொய்சள கோயில்களிலேயே மிகப் பெரியது என்கிறார்கள்.

இந்தியத் தொல்லியலார் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் முன் இறங்கினோம். வளாகத்திற்குள் வந்த போது, அகன்ற புல்வெளியின் மத்தியில் இரு தென்னை மரங்களுக்கு இடையே, பேளூரைவிட அகன்ற வடிவில், அதே கிடைமட்டக் கேக் தோற்றத்தில் கோயில் தெரிந்தது.

???????????????????????????????

விட்ணுவர்த்தனின் அதிகாரிகளில் ஒருவரான கேட்டுமல்லா என்பவரால்,கி.பி.1121-இல் தொடங்கப்பட்டு, கி.பி.1207-வரை இக்கோயில் வேலைகள் நடந்துள்ளதாக சுற்றுலா கையேடு குறிப்பிடுகிறது.

நுழைவிடத்திலிருந்து கோயில் முகப்பு வரை ஒரு பூங்காவின் பாதை போல அமைத்திருந்தார்கள்.அதில் சென்று கொண்டிருந்த போது, மேற்கில் இருந்து வீசிய சூரிய ஒளி கண்களைக் கூசச் செய்தது. சல்யூட் அடிப்பது போல் வலக் கையை உயர்த்தி, கண்களுக்கு நிழல் பரப்பியவாறு நடந்தேன். வெளிச்சத்திற்கும் நிழலுக்கும் இடையே கோவில்!

DSC04008n

கி.பி.1311-இல் மாலிக்காபூர் படையெடுத்து வந்து இந்நகரைத் தரைமட்டமாக்கிவிட்டு, கிடைத்த பொன் பொருட்களை எல்லாம் மூட்டை மூட்டையாக ஒட்டகங்களில் கட்டிக் கொண்டு டில்லிக்குச் சென்றுள்ளான். அதன்பின் கி.பி.1326-இல் முகமது பின் துக்ளக் படையெடுப்பில் மீதமுள்ளவையும் சிதைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட காலக் கொடுமைகளைக் கடந்துதான் இந்த ஹொய்சலேஸ்வர கோயிலும், பக்கத்திலுள்ள கேதாரீஸ்வரர் கோயிலும் நிற்கின்றன.

DSC04030n

தெப்பத்தில் தத்தளித்தவன் கிடைத்ததைப் பற்றுவது போல காலத்தை நினைத்து தடுமாறியநான் கோயில் வாயிற்படியருகே பற்றி ஏறலானேன். அப்போது பக்கவாட்டிலிருந்த கட்டுமானக் கற்களைக் கவனித்தேன். அவற்றிடையே கரிசக்காட்டு வெடிப்பு போல் பிளவுகள் தென்பட்டன. என்னதான் புனரமைப்பு செய்திருந்தாலும் காலக் காயங்கள் மறையவில்லை. கருவறை நோக்கி உள்ளே சென்றேன். சிவலிங்கம் இருந்த கருவறை ஒரு மூங்கில் தட்டியால் சாத்தப்பட்டுக் கிடந்தது. வழிபாடு நடப்பதாகத் தெரியவில்லை.

கோயிலின் உட்புறம் இருக்கிற தூண்களின் மேல் பகுதியில் “மந்தானிகா” என்னும் அழகிய பெண் சிற்பங்கள் இருந்திருக்கின்றன. பல்வேறு படையெடுப்புகளையும், காலச் சிதைவுகளையும் கடந்து இன்று அவற்றில் ஒன்று மட்டுமே இருக்கிறது.

???????????????????????????????

அப்படியே கோயிலின் வெளிப்புறம் வந்து,பேஸ் மட்டத்திலிருந்து மேல் கூரை வரை சுவரிலுள்ள சிற்பங்களைக் கவனித்தேன்.

பேளூரை விட அதிகமாகவும் நெருக்கமாகவும் சிற்பங்களைச் சித்தரித்துள்ள புதிய வடிவம். கோயிற் சுவரின் கீழிருந்தே சிற்ப வரி தொடங்குகிறது.இதில் நேர்த்தியான எட்டு வரிகள் உள்ளன. அதில் யானைகள், யாளிகள், போர்க் காட்சிகள், குதிரை வீரர்கள், பூ வளைவுகள் என்று நீண்டுகொண்டே செல்கிறது. இந்த எட்டு அடுக்குகளின் மேலே நான்கடி உயரமுள்ள பெரிய வகை சிற்பங்கள் வரிசையாக உள்ளன. பேளூரில் இருந்த சிறு இடைவெளி கூட இங்கு கிடையாது. சிற்பங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவே நட்சத்திர அமைப்பு கோயில் என்பது தெரியும். அதிலும், இங்கு ஒவ்வொரு நட்சத்திரக் கடவுகளிலும் கூடுதல் கடவு அமைக்கப்பட்டு அதிலும் சிற்பங்கள்.

DSC04024n

இவற்றைப் பார்க்கப் பார்க்க, கணிப்பொறியில் புதிதாகத் திறந்த கோப்பு பழையதை மறைத்து நிற்பதைப் போல என் மனதில் புதிய திரை விரிவதை உணர்ந்தேன்.

கடவுளர்கள் சிற்பங்கள் மட்டுமின்றி, புராணக் கதைக் காட்சிகள், அக்கால மக்களின் வாழ்வியல் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை கணக்கின்றி செதுக்கப்பட்டுள்ளன.

???????????????????????????????

பேளூர் சிற்பங்களைப் பார்த்ததும் அதிலுள்ளஆபரண அலங்கரிப்பு வியப்பே மேலெழுந்து நின்றது.ஆனால், ஹளெபீடு நமக்கு வேறு விதமான வியப்பைத் தந்தது. அதாவது, இங்குள்ள சிற்ப வரிகள் ஒவ்வொன்றாகப் பார்த்துச் செல்லும் போது, உணர்வுகளை உள்வாங்கிச் சித்தரித்த உயிர்களைக் காண முடிந்தது. இதில் அன்றைய சமூக, அரசியல் நடைமுறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வேளையில், இந்திய மற்றும் கீழை நாட்டு சிற்பக்கலை வல்லுநரான பெர்குஸ்சன் என்பவர் ஹளெபீடு பற்றிக் கூறியது நினைக்கத் தக்கது.

DSC04025n

அவர் கூறும்போது, “மனித மனத்தின் வரம்பற்ற நம்பிக்கை அல்லது இதமான உணர்வுகள் இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை, மனிதனின் கடும் உழைப்பிற்கும் சிற்பக்கலைத் திறனுக்கும் உன்னதமான சான்றுகள். இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் சிற்ப வளம் கொழித்துப் பொங்கிப் பெருவெள்ளமாய்ப் பாய்கிறது” என்கிறார். மேலும், அவர் இக்கோயில் குறித்துக் கூறுகையில், ஏதென்ஸ் நகர பார்த்தினான் கோயிலோடு ஒப்பிட்டுக் கூறுகிறார். அதாவது, “இவையிரண்டுமே கலையின் இரு துருவங்களாக உள்ளன. எனினும், அந்தந்தக் கலைப் பாணியின் உன்னத சிகரங்கள் இவை” என்கிறார்.

அவர் கூற்று உண்மையாகவே எனக்குப் பட்டது. ஏனெனில், தொல்காப்பியர் கூறும் எண்வகை வனப்பின் அடிப்படையிலும் இங்குள்ள சிற்பங்களைப் பார்த்து மகிழ இடமிருக்கிறது – என்றுசிந்தையில் நினைந்து சிற்பங்களைப் பார்த்துச் செல்கையில் கோயிலின் தென் மேற்குப் பகுதியில் அதைப் பார்த்தேன்!

DSC04020n

பத்திரிகைகளில் வரும் சிறுவர் பகுதிகளில் “வரைந்து பழகுங்கள்” என்று ஓவியத்தின் அவுட் லைன் கொடுத்திருப்பார்கள். அது போல அந்தச் சுவற்றில் அத்தனை சிற்பங்களுக்கும் மத்தியில் சிற்ப அவுட் லைன் மட்டுமே உள்ள கற்களும் இருந்தன. இது பார்வையாளன் சிற்ப செய்முறையைத் தெரிந்து கொள்ளவா? அல்லது, பார்வையாளனை சிற்ப சவாலுக்கு இழுக்கும் முயற்சிக்காகவா? என்பது புரியவில்லை.

???????????????????????????????

கோயில் சுவர் என்றால் சிற்பங்கள் இருப்பது நடைமுறை. பக்கத்திற்கு ஒன்றோ இரண்டோ பார்க்க முடியும். ஆனால், ரெட்டைக் கோடு நோட்டில் குழந்தைகள் வரிவரியாக எழுதுவது போல சிற்பங்களைச் செதுக்கியிருப்பது ஹொய்சளர்களின் சாதுர்யம். அதிலும் ஒரு காலகட்ட சமூக வரலாற்றையும், அரசியலையும், அந்நாட்களில் வழங்கிய புராணங்களையும், தொன்மங்களையும் விடுபடாமல் கோயிற் சுவரில் செதுக்கி வைத்திருப்பது, கல்வெட்டு எழுத்துக்களை விட வீரியமானது.

ஹளெபீடு

மனிதனின் சமூக, அரசியல், பொருளாதாரக் கூறுகளை ஒட்டுமொத்தமாகக் கோயில் சுவரில் செதுக்கி வைத்துவிட்டு, அதற்குள் கடவுளை வைத்து வழிபடுவது, ஒரு விதப் படிமக் கூற்றாகத் தெரிந்தது.

இதைத் திருப்பிப் பார்த்தால், மனிதன் கடவுளைத் தரிசிப்பது என்பதே அவனின் சமூக, அரசியல், பொருளாதாரக் கூறுகளின் கூரைக்குள்தான் என்று காட்டியது.

ஹளெபீடு

கோயில் வளாகத்திலுள்ள பெரிய நந்தி, விநாயகர் சிலை, கோமதீஸ்வரர் சிலை போன்றவை நம்மை அருகில் வந்து பார்க்க வைக்கின்றன. அங்கு தொல்லியலார் அமைத்துள்ள பலவித சிலைகளுடன் கூடிய காட்சியகத்தை ஒரு விசிட் அடித்து விட்டு கிளம்பத் தயாரானேன்.

ஹளெபீடு: கேதாரீஸ்வரர் கோயில்

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: