RSS

Monthly Archives: நவம்பர் 2014

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

அசின் சார், கழுகுமலை.

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

(புதியவர்கள் “முதல் பதிவு” வழியாக வாருங்கள்)

*

ளெபீட்டில் இருந்து ஹாசன் 42 கி.மீ.

ஹாசன் சாலை நன்றாக இருந்ததால் கார் ஒரே சீராகச் சென்று கொண்டிருந்தது.

“செட்டிஹள்ளி ஹாசனிலிருந்து எங்கிருக்கு?” டிரைவர் கேட்டார்.

“ஹாசனிலிருந்து பக்கம்தான். ஹேமாவதி ஆற்றங்கரையிலுள்ள ஊர். ம்! அங்கே போகும் சாலை பெயர் தெரியலியே…”

நான் சொல்லிக்கிட்டிருக்கும் போதே ரஞ்சித் கூகுள் சேர்ச்சில் ரூட் மேப் ஆக்டிவேட் செய்ய, காரின் வேகத்திற் கேற்ப செல்லில் சுட்டியும் ஓடியது.

“ஹாசன் பக்கத்தில்தான் காட்டுது.” என்றான்.

டிரைவர் சாலையைப் பார்த்து டிரைவ் செய்துகொண்டிருக்க, ரஞ்சித் மூக்குக்கண்ணாடியை சரி செய்து கொண்டே கூகுள் மேப் சுட்டியைப் பாலோ செய்து கொண்டிருந்தான்.

ஹாசன் நெருங்க நெருங்க கூகுள் மேப்பில் செட்டிஹள்ளியும் நெருங்கியது. பரவாயில்ல, வெளிச்சம் இருக்கும் போதே சென்று விடலாம் என்ற நிம்மதி.

கார் ஹாசனுக்குள் வந்ததும் கூகுள் மேப் சுட்டி, செட்டிஹள்ளிக்குள் வந்ததாய்க் காட்டியது!

“தட்சூ!” இப்போது அனைவருக்கும் குழப்பம்!

இதுவும் தவறாகக் காட்டும் என்பதை அப்போதுதான் முதன்முறையாய் புரிந்து கொண்டேன்.

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

மாலை மணி 5.30

இருட்டுவதற்குள் செல்ல வேண்டும். அல்லது, எங்கள் லிஸ்டிலிருந்து செட்டிஹள்ளி நீக்கப்பட வேண்டும். என்ன செய்வது?

ஹாசன் சிட்டிக்குள் டாக்ஸி நிற்குமிடத்தில் காரை ஓரங்கட்டினார் எங்கள் டிரைவர். இறங்கிச் சென்று அங்கிருந்தவர்களிடம் கேட்டுவிட்டு வேகவேகமாக வந்தார்.

“என்னாச்சு?” என்றேன்.

“கொரூர் ரோடுன்னு சொல்றாங்க!”

அதுவரை புதிது புதிதாய் சேர்ச் செய்துகொண்டிருந்த ரஞ்சித்தும்,

“கரெக்ட்! அதைத்தான் காட்டுது. 24கி.மீ.தான்” என்றான்.

கார் புதிய உறுமலுடன் புறப்பட்டது.

இதுவரை இல்லாத வேகம்!

எங்களின் சுற்றுலா ஆவி இப்போது டிரைவருக்குள் புகுந்து விட்டது போல என்று நினைத்துக் கொண்டேன். பள்ளம் மேடு, ஸ்பீடு பிரேக்கர் என்று சகட்டுமேனிக்கு எல்லாவற்றின் மீதும் துள்ளிப் பாய்ந்து; எதிர்ப்பட்ட வாகனங்களை எல்லாம் முந்திக்கொண்டு சென்றது கார்!

“கொஞ்சம் மெதுவாகவே போகலாமே” என்றேன்.

“மிதமான சாலை, அதான் சார்!”

சமாளித்தார். அதுவும் எனக்குப் புரிந்தது!

போகப் போக சாலையில் ஏற்ற இறக்கமும், வளைவும் நெளிவும் அதிகமானது. அடர்ந்த மரங்கள் தோன்ற குளிர் காற்றுடன் இருள் படர்ந்ததால், “மலைப் பகுதி போல இருக்கிறதே?” என்றேன்.

“ஆமா சார். இன்னும் அரைமணி பயணம் செய்தால் மலைதான். இதுதான் ஆரம்பம்” என்றார்.

கடக்கும் ஒவ்வொரு கிராமமும் “ஹள்ளி ஹள்ளி” என்றே முடிந்து கொண்டிருந்தது. கன்னடத்தில் ஹள்ளி என்பதற்கு கிராமம் என்று பொருளாம். தொடர்ந்து சாலையையும், சாலையோரப் பெயர்ப் பலகைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நிமிர்த்திக் கொண்டு வந்தது “செட்டிஹள்ளி” பெயர்ப் பலகை!

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

மணி 5.55

இன்னும் இருட்டவில்லை.

சூரிய ஒளி மிச்சம் இருக்கிறது.

அச்சிறு கிராம வாயிலில் காரை ஸ்லோ செய்த டிரைவர், சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவரிடம், “அந்தப் பழைய சர்ச் எங்கிருக்கிறது?” என்று கேட்க, அவர் கையை நீட்டினார். அத்திசையில் விருட்டெனக் கார் பறந்தது – நன்றி சொல்ல நேரமின்றி!

ஊருக்கு வெளியே சாலையின் இடப்புறம் ஓடிக்கொண்டிருக்கும் செடிகளுக்கு ஊடே, “ஆலய கோபுரம்” தெரிந்தது.

“டிரைவர், அதோ!”

நான் சொல்லும் போதே அவ்விடத்தைக் கடந்து போனது கார்.

கவன வீச்சில் மிதித்த பிரேக்கினால் நாங்கள் சீட்டில் முன்னோக்கி நகர்ந்திருந்தோம்!

எங்களையும் கோயிலையும் திரும்பிப் பார்த்துக் கொண்டவர், காரை சற்று பின்னோக்கி நகர்த்தி, சாலையின் சரிவில் இரண்டாள் உயரத்திற்கு உயர்ந்திருந்த செடிகளுக்கு ஊடே தெரிந்த வண்டிப்பாதை வழியாக, காரை சரசரவென செலுத்தினார்.

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

நூற்றாண்டுப் பழமையுடைய ஜெபமாலை ஆலயம் செடிகளின் மறைவிலிருந்து தன்னை முழுமையும் வெளிப்படுத்திக் காட்டியது.

இப்போது, எங்களைப் போலவே டிரைவர் முகத்திலும் மகிழ்ச்சிப் பிரகாசம்!

அது கொரூர் டேம்மின் உட்பகுதி.

கோடைக்காலம் என்பதால் டேம் தண்ணீர், கீழே மிகத் தாழ்வாகக் கிடந்தது. ஆலயத்தின் அருகில் போய் காரை நிறுத்தினார் டிரைவர்.

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

அடர்ந்த காட்டில் சிதைந்த நிலையில் கிடக்கும் டயனோசரின் எலும்புக் கூட்டை ஆங்கிலப் படத்தில் பார்ப்பது போல சிதிலமடைந்த அவ்வாலயத்தை விழி விலகாமல் பார்த்துக் கொண்டே அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

அதைப் பற்றி ஏதுமறியா அவர்களிடம், “மழைக் காலத்தில் தண்ணீர் அளவு அணையில் அதிகரிக்கும் போது, இப்படி இந்த ஆலயத்தின் அருகே வர முடியாது. ஆலயம் முழுவதும் மூழ்கி மேலுள்ள சிறு பகுதி மட்டுமே வெளியே தெரியும். அப்போது, பரிசிலில் வந்துதான் மேலுள்ள பகுதியை வட்டமடித்துப் பார்க்க முடியும். ஆனா, ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளேயும் வெளியிலுமாக நின்று நிதானமாகப் பார்க்கும் வாய்ப்பு இப்பத்தான்” என்றேன்.

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

மணி ஆறு ஆகியிருந்தாலும் கோடைக் காலம் என்பதால் சூரியனும் இன்னும் மறையவில்லை. ஒருவேளை, எங்களின் ஆர்வம் இப்போது அதற்குத் தொற்றிக் கொண்டதோ என்னவோ? தன்னை மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

கூரையில்லா கோயிலுக்குள் நுழைந்தோம். அங்கு எங்களைத் தவிர வேறு டூரிஸ்டுகள் இல்லை.

ரஞ்சித், “இது எனக்குப் புதுசு!” என்றான்.

டிரைவர் “எனக்கும்தான்” என்றவர், “டூரிஸ்டா எத்தனையோ பேர் வர்றாங்க! ஆனா, இத யாரும் இதுவரக் கேட்டதில்ல! அதான், எனக்கே ஒரு இன்ட்ரஸ்ட் வந்திடுச்சி.” என்று புன்னகைத்தவர், “ஆமா, இதெப்பிடி நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்க?” என்றார்.

“அதேதான் நானுங் கேக்க நெனைச்சேன் சார்!” என்றான் ரஞ்சித்.

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

“ஒரு சமயம் நம் நாட்டிலுள்ள நூற்றாண்டுப் பழமையான தேவாலயங்களை இணையத்தில் தேடித் தேடி படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் கண்ணில் பட்டதுதான் இது. இந்த ஆலயத்தின் படங்களைப் பார்த்ததும் இன்னொரு ஆச்சர்யம்! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, மழைக் காலத்தில் தண்ணீருக்குள்ளும் கோடைக் காலத்தில் தண்ணீருக்கு வெளியிலுமாக இருப்பது. இதுதான் என்னை நேரில் பார்க்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. அதுக்கு இந்த ட்ரிப் சரிவரும் என நினைத்தேன். (டிரைவரைப் பார்த்து) அது உங்களால் சக்சஸ் ஆயிற்று!” என்றேன்.

அவருக்கு மகிழ்ச்சி!

உள்ளே பீடத்தின் அருகில் சென்றோம்.

நெட்டுக்கு நிற்கும் சுவர்களை மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டே, “பெரிய கோயிலாத்தான் இருந்திருக்கு!” என்றான் ரஞ்சித்.

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

“இது கோவாவில் பார்த்த கோயில் மாதிரி இருக்கு” என்றான் என் மகன்.

இது கோதிக் கட்டக்கலையில் கட்டப்பட்டுள்ள ஆலயமாக இருப்பதால், அவனது ஒப்பீட்டு அறிவுக்கு அவ்வாறு புலப்பட்டிருக்கலாம்.

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

“இது கட்டி எவ்ளோ காலமிருக்கும்?” என்றாள் என் மனைவி.

“சரியாச் சொல்றதா இருந்தா, இந்த ஆலயம் 1860-இல் பிரெஞ்ச் மிஷனெரிகளால் கட்டப்பட்டது. அதுக்கப்புறம், நூறு வருஷத்துக்குப் பின்பு, 1960-இல் இந்த ஹேமாவதி ஆற்றின் குறுக்கே கொரூர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த ரெண்டு தகவலும் நான் இணையத்தில் பார்த்ததுதான். இந்த அடிப்படையில், 154 வயசு ஆலயம், 54 வருசமா அணைக்கட்டுகுள்ள இருக்குது”

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

அப்போது ஒரு கார் வந்து நிற்பது சிதைந்திருந்த ஜன்னல் இடையே தெரிந்தது. அதிலிருந்து குடும்பமாக இறங்கியவர்கள் ஆலய வளாகத்திற்குள் வந்தனர்.

வந்தவர்கள் ஆலயத்தினுள் ஒவ்வோரிடமாகச் சென்று நின்று பார்த்தார்கள். அவர்களோடு வந்திருந்த பெரியவர் ஒருவர் அவர்களுக்கு கன்னடத்தில் ஏதேதோ விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார். வந்தவர்கள் வியப்பாய்க் கேட்க, அவர் இன்னும் அதிக ஆர்வத்துடன் அங்கிட்டும் இங்கிட்டுமாகச் சென்று கை நீட்டி நீட்டி விவரித்தார்.

அவர் சொல்கிற விதத்தைப் பார்த்து, கண்டிப்பாக அவர் ஆலயத்தைப் பற்றிதான் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட என் மனைவி, எங்கள் டிரைவர் வழியாக அவரிடம் கேள்வி கேட்கத் தொடங்கினாள்.

அங்கேயே பிறந்து வளர்ந்திருந்த அவர் தன் பால்ய கால நினைவுகளைப் பசுமையோடு பகிர, எங்கள் டிரைவர் மொழிபெயர்ப்பாளர் ஆனார்.

“இந்தக் கோயிலச் சுத்திதான் எங்க ஊரே இருந்தது. இந்தப் பகுதியில் எங்க கோயிலுதான் பெரிசு. இந்த மலைப் பகுதியில இருக்கிற கிராம மக்கள் எல்லாரும் இங்கதான் வருவாங்க”

 

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

ஈடில்லாத சந்தோசத்தோடு வெளிப்பகுதியை சுட்டிக் காட்டி, “இதெல்லாம் நாங்க ஓடியாடி விளையாண்ட இடம். இதோ பாருங்க இங்கதான் நான் படிச்ச பிரைமரி ஸ்கூல் இருந்தது. ம்! அந்த இடத்திலதான் சிஸ்டர்ஸ் கான்வென்ட் இருந்தது.”

அவருக்குள் பசுமையாய் இருந்த இளம் வயது நாட்களை அடையாளம் காட்டுவதில் அத்தனை மகிழ்ச்சி.

“தினமும் இந்தக் கோயிலில ஜெபம், ஆராதனை, வழிபாடுனுதான் இருக்கும். இந்தக் கோயில் மணிச் சத்தம், சுத்தியிருந்த அத்தன கிராம மக்களுக்கும் மனப்பாடம். திருவிழா வந்திடுச்சினா, அவ்வளவு பேரும் இங்க வந்திடுவாங்க. சும்மா ஊரே ஜே ஜே-னு இருக்கும்.”

“அப்புறம் எப்போ டேம் வந்தது?”

“திடீர்னு ஒருநாள், கவர்மென்ட் அதிகாரிங்கல்லாம் எங்க ஊருக்கு வந்தாங்க. வந்து, இப்படி இந்த இடத்துல டேம் வருது. இது உங்க கஷ்டங்களுக்கு விடிவுகாலம். இதனால உங்க வாழ்க்கையே மாறப் போகுது. உங்க பிள்ளைக எதிர்காலமெல்லாம் உயரப் போகுது. உங்க தலைமுறைக்கே அதிஷ்டம்! அது இதுன்னு சொல்லி; அதனால, எங்களுக்கு குடியிருக்க மாத்து இடம் தருவோம்னு சொன்னங்க.”

“நீங்க போக முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?” என் மனைவி.

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

“அப்ப நான் சின்னப் பையன்தான். அன்னைக்கிருந்த பெரியவங்க எல்லாரும் ‘நல்லதுக்குத்தானே’னு ஒத்துக்கிட்டாங்க. அடுத்து, கவர்மென்ட் சொன்னத கேட்டுக்கிட்டுத்தான் ஆகணும். இந்த நெல எங்க ஊருக்கு மட்டுமில்ல, இதே மாதிரி இந்த அணைக்கட்டுக்குள்ள இருந்த அத்தன மலை கிராம மக்களும் தன் சொந்த மண்ண விட்டுட்டு கவர்மென்ட் காட்டுன இடத்துக்குக்குத்தான் போனாங்க.”

“இது நிகழக் கூடியதுதான். மேட்டூர் டேம் கட்டுனபோதுகூட இப்படித்தான். அந்த அணைப் பகுதிக்குள் இருந்த பண்ணைவாடி கிராமத்தில் உள்ள இரட்டைக் கோபுர தேவாலயம், ஜலகண்டேஸ்வரர் கோயில், நந்தி சிலை போன்றவை தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. வைகை டேம் வரும்போதும் இதேதான் நிகழ்ந்தது. இந்த சோகத்தை வைரமுத்து “கருவாச்சி காவியத்தில்” எழுதியிருப்பார்” என்றேன் சோகமாக!

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

“ம்! அப்புறம்?” ஆர்வத்துடன் என் மனைவி.

“கவர்மென்ட் சொன்னதத் தட்டாம எல்லா சனங்களும் சொந்த இடத்தக் காலி செஞ்சி போனாங்க. இதுல நாங்க இருந்த வீடு, பாடுபட்ட நிலம் எல்லாம் உண்டு. இருந்தாலும், இந்த டேம் வந்து தண்ணி நிரம்பி நிக்கிறப்ப எங்களுக்கெல்லாம் அப்படியொரு சந்தோசம்! அப்போ, எங்க வாழ்க்கை, எங்க பிள்ளைக வாழ்க்கை எல்லாம் பிரகாசமாயிடும்னு சொன்னவங்க; மறுபடியும் வந்தாங்க! வந்து, இந்தத் தண்ணிய நீங்க பயன்படுத்தக்கூடாதுனு சொல்லிட்டாங்க!”

மிகச் சாதாரணமாகச் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் “குபீர்” என்று பற்றியது நெஞ்சு!

விக்கித்துப் போனவளாய், “அடக் கொடுமையே! ஏன் என்னாச்சு?” என்றாள் என் மனைவி.

“கவர்மென்ட்டு அதிகாரிங்கதான் இதையும் சொன்னாங்க! இந்தத் தண்ணிய எதெதுக்கெல்லாமோ பயன்படுத்தப் போறாங்களாம். அதனால, நாங்க இதத் தொடக் கூடாதுன்னு உத்தரவு!”

“சே! என்னய்யா இது இலவு காத்த கிளிபோலாச்சே?” என்றேன்.

மேற்கிலிருந்து எங்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சூரியனின் முகம், செக்கச் செவேரென சிவந்து கொண்டிருந்தது.

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

“அப்புறம்?” வினாவாகிப்போன வாழ்க்கையைக் கேட்டாள்.

“இப்ப இருக்கிற இடத்துல, கிடைக்கிறத வெச்சி உழைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். “இந்த டேம் வந்தா உங்க வாழ்க்கை ஒளிரும்”னு சொன்ன யாரையும் இப்போ காணோம்!” என்றார் மிகவும் வெள்ளந்தியாய்.

“ரஞ்சித், எனக்கென்னமோ இதுவும் கூடங்குளமும் ஒன்னுபோலத் தெரியுதே!” என்றேன்.

“ஆமா சார்! எந்த ஒரு அரசும் ஒரு பெரிய திட்டத்தத் தொடங்கும்போதும் மொதல்ல இப்படித்தான் நடந்துக்கிடும். ஜப்பானிய இயக்குநர் அகிரா குருசேவாவோட “கனவுகள்”-ங்கிற சினிமாவுல, அணு ஆலை வெடிச்சி சிதறுதப்போ, ஏழை ஜனங்க கதறி அழுகிற மாதிரி ஒரு காட்சி வரும். அதுல ஒரு தாய், “உங்களுக்கு எல்லாப் பாதுகாப்பும் நாங்கதான்னு அன்னைக்கு சொன்னாங்களே; அவங்க யாரையும் இன்னைக்குக் காணோமே!”னு சொல்லி அழுவாள். அதேதான் இதிலும் தெரியுது!”

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

இருள் லேசாகப் பரவத் தொடங்கியது.

மேற்கில் பார்த்தேன். சூரியனைக் காணோம்.

முகம் சிவந்திருந்த அது, ஒருவேளை தலை சுற்றி கீழே விழுந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு கையைக் கட்டிக் கொண்டு மறு கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு நின்றிருந்த எங்கள் டிரைவர், “என்ன சார் இது! கொஞ்சமாவது நீதி இல்லையே?” மனச்சஞ்சலத்துடன் கேட்டார்.

கம்மியிருந்த தொண்டையை லேசாக இருமி சரி செய்து கொண்டே, “ஒன்னுமட்டும் நல்லாத் தெரிஞ்சுக்கோங்க நண்பரே! சட்டமும் நீதியும் – ஏழை மக்களுக்கு அதிகார வர்க்கமும் ஆதிக்க வர்க்கமும் போடுற “வேலி!” அதப் போடவும் எடுக்கவும் தாண்டவும் அவங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. ஆனா, மக்களுக்கில்ல. மன்னராட்சிக் காலத்திலிருந்து இன்னைக்கு வரைக்கும் இதுதான் நாம சொல்ற சமநீதி.” என்றேன்.

மெதுவாக ஆலயத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தோம்.

என் கையைப் பிடித்து நடந்து வந்து கொண்டிருந்த என் மகன் கேட்டான், “அப்பா, இந்தக் கோயில், ஊரு, பள்ளிக்கூடம் எல்லாம் இங்கிருந்தா நல்லா இருந்திருக்குமில்ல” என்றான்.

அந்நேரம், அவ்வாலயத்தின் ஏதோ ஒரு சுவரிலிருந்து ஒரு கல் கீழே விழுந்த சத்தம் என் காதில் பட்டது.

அது ஆலயம் விட்ட பெருமூச்சினாலா? இல்ல, உள்ளக் குமுறலாலா? தெரியவில்லை.

ஆனால், ஒன்று …

“ஒவ்வோராண்டும் அணையின் நீர் இவ்வாலய உச்சிவரை வந்து செல்வது, இதன் கண்ணீரைத் துடைப்பதற்காகத்தான்!”

இப்படி என் மனம் தேற்றிக் கொண்டது.

விடுபட முடியா நினைவுகளோடு நாங்கள் காரை நோக்கி வர வர, இருள் கொஞ்சங் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தது ஆலயத்தை!

* * *

தொடர்புடைய பதிவு: சிதில தரிசனம்!

 

ஹளெபீடு: பார்ஷவ நாதர் கோயில்

அசின் சார், கழுகுமலை.

ஹளெபீடு: பார்ஷவ நாதர் கோயில்

(புதியவர்கள் “முதல் பதிவு” வழியாக வாருங்கள்)

*

ளெபீட்டில், இக்கோயில் ஹொய்சலேஸ்வரர் கோயிலுக்குத் தென்பகுதில் உள்ள சாலையில் கேதாரீஸ்வரர் கோயிலுக்குக் கிழக்கே உள்ளது. இதனை பஸ்திஹள்ளி அல்லது பாசாடிஹள்ளிக்கு அருகிலுள்ளது என்றும் கூறுவர். சமண தீர்த்தங்கரர்களில் மூன்றாவது தீர்த்தங்கரரான பார்ஷவ நாதருக்கான கோயில் இது. விட்ணுவர்த்தன் ஆட்சிக் காலத்தில் ராணுவத் தளபதி ஒருவரின் மகன் போபண்ணா என்பவரால் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயில் கருவறையில் பார்ஷவ நாதரின் பதினான்கடி உயரமுள்ள கருங்கல் சிற்பம் உள்ளது. இச்சிலையின் தலை முடி மேல் ஏழுதலை நாகம் உள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது.

ஹளெபீடு: பார்ஷவ நாதர் கோயில்

இது சிறிய கோயில் என்றாலும் இதன் சிறப்பே நவரங்கக் கூடத்தில்தான் உள்ளது. கருங்கல்லினால் செதுக்கப்பட்டுள்ள இக்கூடத்திலுள்ள தூண்கள் ஒவ்வொன்றும் பத்தடி உயரமும் மூன்றடி சுற்றளவும் கொண்டவை. அன்றைய சிற்பி தன் கைத் திறனால் தூணின் ஒரு பகுதியைக் கண்ணாடி போல பளபளவென்று இழைத்திருக்கிறான். அதிலும், நுழைவாயிலுக்கு எதிரே உள்ள தூண்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றை “மாயாஜாலத் தூண்கள்” என்றே கூறலாம்.

ஹளெபீடு: பார்ஷவ நாதர் கோயில்

ஏனெனில், இத்தூண்கள் தன் முன் நிற்போரை இரட்டை பிம்பங்களாகப் பிரதிபலித்துக் காட்டுகின்றன. இத்தூணுக்கு முன்னால் சற்று தொலைவில் நாம் நிற்கும் போது ஒருவிதமான உருவமாகவும், தூணுக்கு அருகில் நெருங்கி வர வர வேறு உருவமாகவும் நம்மைக் காட்டுகின்றன.

அன்றைய சிற்பிகள், ஒவ்வொரு தூணிலும் ஒளிப் பிரதிபலிப்பு ஏற்படும் தன்மையைச் சரியாகக் கணக்கிட்டு, தூணில் கண்ணுக்குப் புலப்படாத சிற்சிறு வளைவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், பிரதிபலிப்பு உருவம் வடிவம் மாறி வேறுவிதமாகத் தோன்றுகிறது.

ஹளெபீடு: பார்ஷவ நாதர் கோயில்

இன்னொரு விஷயமும் இதில் கவனிக்கத் தக்கது. இருட்டறையில் ஒளியைப் பாய்ச்சிக் காட்டும் திரையரங்க உத்தியும் தெரிகிறது. அதாவது, இத்தூண்களுள்ள நவரங்கக் கூடத்தின் முன்னால் பல தூண்களைக் கொண்ட ஒரு மண்டபம் இருக்கிறது. இரண்டிற்கும் பாதையளவு இடைவெளிதான். இந்த மண்டபத்திற்கு நேராகத்தான் நவரங்க கூடத்திற்கான சிறு வாசல் உள்ளது. இதனால், வெளியிலுள்ள அதிகப் படியான பேரொளி கட்டுப்படுத்தப்பட்டு மிகக் குறைந்த அளவு ஒளியே நவரங்கக் கூடத்தினுள் நுழைய முடிகிறது. இந்த ஒளிதான் பல்வேறு கோணங்களில் தூண்களில் பட்டு புதுவிதப் பிரதிபலிப்பை உண்டாக்குகிறது.

இதைப் பார்க்கப் பார்க்க அன்றைய சிற்பியின் இயற்பியல் அறிவு நம்மை வெகுவாக வியக்க வைக்கிறது.

மணி 4.40 ஆகியிருந்தது.

அனைவரையும் விரைவுபடுத்தி காரில் ஏற்ற,

டிரைவர் என் பக்கம் திரும்பிப் பார்த்தார்.

“நேரா ஹாசன்!” என்றேன்.

*

செட்டிஹள்ளி: ஜெபமாலை ஆலயம்

 

ஹளெபீடு: கேதாரீஸ்வரர் கோயில்

அசின் சார், கழுகுமலை.

ஹளெபீடு: கேதாரீஸ்வரர் கோயில்

(புதியவர்கள் “முதல் பதிவு” வழியாக வாருங்கள்)

*

விட்ணுவர்த்தனின் பேரன் இரண்டாம் வீர வல்லாளன் ஆட்சிக் காலம் ஹொய்சள சாம்ராஜ்யத்தின் பொற்காலமாக இருந்துள்ளது. அவனும் அவனுடைய இளைய ராணி அபிநவ கேதாள தேவியும் இணைந்து கி.பி.1219-ஆம் ஆண்டு கட்டியதே இந்தக் கேதாரீஸ்வரர் கோயில். இதை, “இந்திய சிற்பக் கலையின் மாணிக்கம்” என்கின்றனர்.

ஹொய்சலேஸ்வர கோயிலைவிடச் சிறியதான இக்கோயிலின் ஒரு பகுதி, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பராமரிப்பின்மையால் இடிந்து விட்டது. இருக்கிற இன்றைய கோயிலிலும் சிதைந்திருக்கிற பல பகுதிகளை அந்தந்த இடத்திற்கேற்ப கற்களை வைத்து தொல்லியலார் சரி செய்திருப்பது தெரிகிறது.

ஹளெபீடு: கேதாரீஸ்வரர் கோயில்

நட்சத்திர வடிவில் மாக்கல்லினால் கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் சுவர்கள், கோபுரம், கதவுகள், கூரைகள் என்று அனைத்திலுமே சிற்பங்கள் நிரம்பி வழிகின்றன. என்.ஸ்ரீநிவாஸன் என்பவர், “இதை மனிதர்கள் கட்டிய கோயில் என்று சொல்வதை விட, தெய்வீக ஆபரணம் என்று கூறலாம்” என்று புகழ்வார்.

ஹளெபீடு: கேதாரீஸ்வரர் கோயில்

கேக் போன்ற மேடை, அதன் மேல் கோயில்; நான்கு மூலைகளிலும் நான்கு யானைகள் கோயிலைத் தாங்குவது போன்ற அமைப்பு; சுற்றுப்புறச் சுவர் முழுவதிலும் அடுக்கடுக்காக நுட்பமான சிற்பங்கள்; பூப் போன்ற வடிவ அலங்காரத்துடன் சுவரின் மேல் பகுதி விளிம்பு; அதற்கு மேலே பெரிய அளவிலான சிற்பங்கள் – இவைதான் இக்கோயிலின் பொதுவான அமைப்பு.

ஹளெபீடு: கேதாரீஸ்வரர் கோயில்

இதிலுள்ள பெரிய அளவிலான சிற்பங்களில் புராண கதைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேற்குப் பகுதியிலுள்ள சுவரில் மிகவும் வித்தியாசமான சிற்பம் ஒன்றிருப்பதை நூல் ஒன்றில் படித்தேன். அதாவது, வானரங்கள் டெலஸ்கோப் போன்ற ஒன்றைத் தாங்கி நிற்க, சடாயுவின் சகோதரன் சம்பாதி அதன் வழியாக சீதை இருக்குமிடத்தைக் கண்டு பிடிப்பது போன்ற காட்சி.

ஹளெபீடு: கேதாரீஸ்வரர் கோயில்

இது போல, இராம இராவண போர்க் களம், பாற்கடல் கடைவது, பிரகலாதன் கதை, அர்ச்சுனன் மீனின் கண்ணைக் குறிபார்த்து அம்பால் எய்தவுடன் திரௌபதி மணமாலையுடன் காத்திருப்பது போன்ற புராணக் கதைக் காட்சிகள் மிகுதியாக உள்ளன.

காமிக்ஸ் புத்தகத்தில் கதையின் போக்குக்கேற்ப தொடர்ந்து படங்கள் வரையப்படுவதைப் போல புராணத்தில் வரும் ஏதேனும் ஒரு நிகழ்வை எடுத்துக் கொண்டு அதனை விளக்கத் தொடர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

ஹளெபீடு: கேதாரீஸ்வரர் கோயில்

நேரமின்மையால் ஒவ்வொன்றையும் தனித் தனியாகப் பார்க்க முடியவில்லை. மேற்போக்கான பார்வையுடன் திரும்பி விட்டேன். பக்கத்தில் உள்ள பார்ஷவ நாதர் கோயிலையும் பார்த்துவிட்டு, இருட்டுவதற்குள் செட்டிஹள்ளி செல்ல வேண்டுமென்பதால், அனைவரையும் விரைவு படுத்தினேன்.

உண்மையில் ஒரு நாள் முழுக்கச் செலவிட வேண்டியது ஹளெபீடே.

ஹளெபீடு: பார்ஷவ நாதர் கோயில்

 

ஹளெபீடு: ஹொய்சலேஸ்வர கோயில்

அசின் சார், கழுகுமலை.

ஹளெபீடு: ஹொய்சலேஸ்வர கோயில்

(புதியவர்கள் “முதல் பதிவு” வழியாக வாருங்கள்)

*

கல் ஒரு மணியைத் தாண்டியது.

மதிய உணவை பேளூரிலேயே முடித்து விட்டு உடனே கிளம்பினோம்.

ஹளெபீடு 17 கி.மீ. தூரம்தான். ஆனால், ஹாசன்-பேளூர் சாலை போல இல்லை. பராமரிக்கப்படாத கிராமப்புறச் சாலையாக இருந்ததால் கார் விரைவாகச் செல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட முப்பது நிமிடப் பயணத்திற்குப் பின் ஹளெபீடு ஊருக்குள் நுழைந்தது எங்கள் கார்.

DSC03985n

ஹொய்சால மன்னர்களின் பழைய தலைநகரான துவாரசமுத்திரமே இந்த “ஹளெபீடு.” இங்கு சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டுள்ள ஹொய்சலேஸ்வர கோயில்தான் ஹொய்சள கோயில்களிலேயே மிகப் பெரியது என்கிறார்கள்.

இந்தியத் தொல்லியலார் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் முன் இறங்கினோம். வளாகத்திற்குள் வந்த போது, அகன்ற புல்வெளியின் மத்தியில் இரு தென்னை மரங்களுக்கு இடையே, பேளூரைவிட அகன்ற வடிவில், அதே கிடைமட்டக் கேக் தோற்றத்தில் கோயில் தெரிந்தது.

???????????????????????????????

விட்ணுவர்த்தனின் அதிகாரிகளில் ஒருவரான கேட்டுமல்லா என்பவரால்,கி.பி.1121-இல் தொடங்கப்பட்டு, கி.பி.1207-வரை இக்கோயில் வேலைகள் நடந்துள்ளதாக சுற்றுலா கையேடு குறிப்பிடுகிறது.

நுழைவிடத்திலிருந்து கோயில் முகப்பு வரை ஒரு பூங்காவின் பாதை போல அமைத்திருந்தார்கள்.அதில் சென்று கொண்டிருந்த போது, மேற்கில் இருந்து வீசிய சூரிய ஒளி கண்களைக் கூசச் செய்தது. சல்யூட் அடிப்பது போல் வலக் கையை உயர்த்தி, கண்களுக்கு நிழல் பரப்பியவாறு நடந்தேன். வெளிச்சத்திற்கும் நிழலுக்கும் இடையே கோவில்!

DSC04008n

கி.பி.1311-இல் மாலிக்காபூர் படையெடுத்து வந்து இந்நகரைத் தரைமட்டமாக்கிவிட்டு, கிடைத்த பொன் பொருட்களை எல்லாம் மூட்டை மூட்டையாக ஒட்டகங்களில் கட்டிக் கொண்டு டில்லிக்குச் சென்றுள்ளான். அதன்பின் கி.பி.1326-இல் முகமது பின் துக்ளக் படையெடுப்பில் மீதமுள்ளவையும் சிதைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட காலக் கொடுமைகளைக் கடந்துதான் இந்த ஹொய்சலேஸ்வர கோயிலும், பக்கத்திலுள்ள கேதாரீஸ்வரர் கோயிலும் நிற்கின்றன.

DSC04030n

தெப்பத்தில் தத்தளித்தவன் கிடைத்ததைப் பற்றுவது போல காலத்தை நினைத்து தடுமாறியநான் கோயில் வாயிற்படியருகே பற்றி ஏறலானேன். அப்போது பக்கவாட்டிலிருந்த கட்டுமானக் கற்களைக் கவனித்தேன். அவற்றிடையே கரிசக்காட்டு வெடிப்பு போல் பிளவுகள் தென்பட்டன. என்னதான் புனரமைப்பு செய்திருந்தாலும் காலக் காயங்கள் மறையவில்லை. கருவறை நோக்கி உள்ளே சென்றேன். சிவலிங்கம் இருந்த கருவறை ஒரு மூங்கில் தட்டியால் சாத்தப்பட்டுக் கிடந்தது. வழிபாடு நடப்பதாகத் தெரியவில்லை.

கோயிலின் உட்புறம் இருக்கிற தூண்களின் மேல் பகுதியில் “மந்தானிகா” என்னும் அழகிய பெண் சிற்பங்கள் இருந்திருக்கின்றன. பல்வேறு படையெடுப்புகளையும், காலச் சிதைவுகளையும் கடந்து இன்று அவற்றில் ஒன்று மட்டுமே இருக்கிறது.

???????????????????????????????

அப்படியே கோயிலின் வெளிப்புறம் வந்து,பேஸ் மட்டத்திலிருந்து மேல் கூரை வரை சுவரிலுள்ள சிற்பங்களைக் கவனித்தேன்.

பேளூரை விட அதிகமாகவும் நெருக்கமாகவும் சிற்பங்களைச் சித்தரித்துள்ள புதிய வடிவம். கோயிற் சுவரின் கீழிருந்தே சிற்ப வரி தொடங்குகிறது.இதில் நேர்த்தியான எட்டு வரிகள் உள்ளன. அதில் யானைகள், யாளிகள், போர்க் காட்சிகள், குதிரை வீரர்கள், பூ வளைவுகள் என்று நீண்டுகொண்டே செல்கிறது. இந்த எட்டு அடுக்குகளின் மேலே நான்கடி உயரமுள்ள பெரிய வகை சிற்பங்கள் வரிசையாக உள்ளன. பேளூரில் இருந்த சிறு இடைவெளி கூட இங்கு கிடையாது. சிற்பங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவே நட்சத்திர அமைப்பு கோயில் என்பது தெரியும். அதிலும், இங்கு ஒவ்வொரு நட்சத்திரக் கடவுகளிலும் கூடுதல் கடவு அமைக்கப்பட்டு அதிலும் சிற்பங்கள்.

DSC04024n

இவற்றைப் பார்க்கப் பார்க்க, கணிப்பொறியில் புதிதாகத் திறந்த கோப்பு பழையதை மறைத்து நிற்பதைப் போல என் மனதில் புதிய திரை விரிவதை உணர்ந்தேன்.

கடவுளர்கள் சிற்பங்கள் மட்டுமின்றி, புராணக் கதைக் காட்சிகள், அக்கால மக்களின் வாழ்வியல் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை கணக்கின்றி செதுக்கப்பட்டுள்ளன.

???????????????????????????????

பேளூர் சிற்பங்களைப் பார்த்ததும் அதிலுள்ளஆபரண அலங்கரிப்பு வியப்பே மேலெழுந்து நின்றது.ஆனால், ஹளெபீடு நமக்கு வேறு விதமான வியப்பைத் தந்தது. அதாவது, இங்குள்ள சிற்ப வரிகள் ஒவ்வொன்றாகப் பார்த்துச் செல்லும் போது, உணர்வுகளை உள்வாங்கிச் சித்தரித்த உயிர்களைக் காண முடிந்தது. இதில் அன்றைய சமூக, அரசியல் நடைமுறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வேளையில், இந்திய மற்றும் கீழை நாட்டு சிற்பக்கலை வல்லுநரான பெர்குஸ்சன் என்பவர் ஹளெபீடு பற்றிக் கூறியது நினைக்கத் தக்கது.

DSC04025n

அவர் கூறும்போது, “மனித மனத்தின் வரம்பற்ற நம்பிக்கை அல்லது இதமான உணர்வுகள் இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை, மனிதனின் கடும் உழைப்பிற்கும் சிற்பக்கலைத் திறனுக்கும் உன்னதமான சான்றுகள். இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் சிற்ப வளம் கொழித்துப் பொங்கிப் பெருவெள்ளமாய்ப் பாய்கிறது” என்கிறார். மேலும், அவர் இக்கோயில் குறித்துக் கூறுகையில், ஏதென்ஸ் நகர பார்த்தினான் கோயிலோடு ஒப்பிட்டுக் கூறுகிறார். அதாவது, “இவையிரண்டுமே கலையின் இரு துருவங்களாக உள்ளன. எனினும், அந்தந்தக் கலைப் பாணியின் உன்னத சிகரங்கள் இவை” என்கிறார்.

அவர் கூற்று உண்மையாகவே எனக்குப் பட்டது. ஏனெனில், தொல்காப்பியர் கூறும் எண்வகை வனப்பின் அடிப்படையிலும் இங்குள்ள சிற்பங்களைப் பார்த்து மகிழ இடமிருக்கிறது – என்றுசிந்தையில் நினைந்து சிற்பங்களைப் பார்த்துச் செல்கையில் கோயிலின் தென் மேற்குப் பகுதியில் அதைப் பார்த்தேன்!

DSC04020n

பத்திரிகைகளில் வரும் சிறுவர் பகுதிகளில் “வரைந்து பழகுங்கள்” என்று ஓவியத்தின் அவுட் லைன் கொடுத்திருப்பார்கள். அது போல அந்தச் சுவற்றில் அத்தனை சிற்பங்களுக்கும் மத்தியில் சிற்ப அவுட் லைன் மட்டுமே உள்ள கற்களும் இருந்தன. இது பார்வையாளன் சிற்ப செய்முறையைத் தெரிந்து கொள்ளவா? அல்லது, பார்வையாளனை சிற்ப சவாலுக்கு இழுக்கும் முயற்சிக்காகவா? என்பது புரியவில்லை.

???????????????????????????????

கோயில் சுவர் என்றால் சிற்பங்கள் இருப்பது நடைமுறை. பக்கத்திற்கு ஒன்றோ இரண்டோ பார்க்க முடியும். ஆனால், ரெட்டைக் கோடு நோட்டில் குழந்தைகள் வரிவரியாக எழுதுவது போல சிற்பங்களைச் செதுக்கியிருப்பது ஹொய்சளர்களின் சாதுர்யம். அதிலும் ஒரு காலகட்ட சமூக வரலாற்றையும், அரசியலையும், அந்நாட்களில் வழங்கிய புராணங்களையும், தொன்மங்களையும் விடுபடாமல் கோயிற் சுவரில் செதுக்கி வைத்திருப்பது, கல்வெட்டு எழுத்துக்களை விட வீரியமானது.

ஹளெபீடு

மனிதனின் சமூக, அரசியல், பொருளாதாரக் கூறுகளை ஒட்டுமொத்தமாகக் கோயில் சுவரில் செதுக்கி வைத்துவிட்டு, அதற்குள் கடவுளை வைத்து வழிபடுவது, ஒரு விதப் படிமக் கூற்றாகத் தெரிந்தது.

இதைத் திருப்பிப் பார்த்தால், மனிதன் கடவுளைத் தரிசிப்பது என்பதே அவனின் சமூக, அரசியல், பொருளாதாரக் கூறுகளின் கூரைக்குள்தான் என்று காட்டியது.

ஹளெபீடு

கோயில் வளாகத்திலுள்ள பெரிய நந்தி, விநாயகர் சிலை, கோமதீஸ்வரர் சிலை போன்றவை நம்மை அருகில் வந்து பார்க்க வைக்கின்றன. அங்கு தொல்லியலார் அமைத்துள்ள பலவித சிலைகளுடன் கூடிய காட்சியகத்தை ஒரு விசிட் அடித்து விட்டு கிளம்பத் தயாரானேன்.

ஹளெபீடு: கேதாரீஸ்வரர் கோயில்