RSS

Monthly Archives: ஒக்ரோபர் 2014

பேளூர்: சென்னக்கேசவப் பெருமாள் கோயில்

அசின் சார், கழுகுமலை.

பேளூர்: சென்னக்கேசவப் பெருமாள் கோயில்

(புதியவர்கள் “முதல் பதிவு” வழியாக வாருங்கள்)

பெங்களூர் – இராஜராஜேஸ்வரி நகரிலிருந்து நாங்கள் கிளம்பும்போது காலை மணி 6.50. என்னுடைய திட்டப்படி காலை ஐந்து மணிக்கே கிளம்பியிருக்க வேண்டும். புக் செய்திருந்த கார் தாமதமாக வந்ததால் இந்நேரம்!

கூகுள் மேப் படி உத்தேசமாக ஹாசன்  185 கி.மீ.அங்கிருந்து பேளூர் 40 கி.மீ.ஆக மொத்தம் 225 கி.மீ. செல்ல வேண்டும். இதற்கிடையே காலை டிபன் நேரமும் இருக்கிறது.

அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து கிளம்பி தயாரானதால் கார் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் கண்ணைக் கட்டியது. அவ்வப்போது தட்டிய முழிப்பின் போது பார்த்தேன். என்னைப் போலவே என் மனைவி; “சன்னலோரம் எனக்கு” என்று முந்திக்கொண்டு உக்கார்ந்த என் மகன், முன் சீட்டில் இடதுபுறம் ரஞ்சித் – எல்லாருமே ஒவ்வொரு தினுசாய் தூங்கிக் கொண்டிருந்தார்கள். டிரைவர் மட்டும் விழிப்பாய் …

காரில் மெல்லிசாய் பாடிக் கொண்டிருந்த கன்னடப் பாடல்கள் புரியாத இரைச்சலாய் இருந்தது. “தமிழ் மீடியம் சாங்ஸ் ஏதாவது இருக்கிறதா?”டிரைவரிடம் கேட்டேன்.“இருக்கிறது” என்றவர்,“நானும் தமிழ் நாட்டுக் காரன்தான்”என்று சொல்லிக் கொண்டே, காரில் உள்ள சிடி ஒன்றைத் தேடி எடுத்து பிளே செய்தார். இசைத்தேன் வந்து பாய்ந்தது காரினிலே!

??

தமிழர்-தமிழிசை உறவால் தூக்கம் கலைய, டிரைவரிடம் ஊர் பேர் விசாரித்துக் கொண்டேன்.

“ஆமாம்! அதென்ன ‘ஷிவு’னு பேரு?”

“உண்மையில் என் பேரு சிவா. கன்னடக்காரர்கள் அத ஷிவு, ஷிவுனு கூப்பிட்டு, அப்படியே புக்கிங்கிலும் ‘Shivu’னு போட்டுட்டாங்க. வர்ற டூரிஸ்டுகளும் “ஷிவு ஷிவு” னே கூப்பிடுறாங்க. இதாவது பரவாயில்ல, சில பேரு “ஷூ ஷூ” ன்னும் கூப்பிடுவாங்க! அதுக்கும் என்னனு கேட்டுக்குவேன்” என்றார் நகைப்புடன்!

காலை மணி எட்டரையைத் தொட்டது. “நல்ல ஹோட்டலாப் பாத்து நிறுத்துங்க” என்று நான் கேட்டுக் கொண்டதை நினைவிற் கொண்டு சாலையின் இடது புறமிருந்த அந்த சைவ ஹோட்டல் வளாகத்திற்குள் வளைந்து காரை நிறுத்தினார்.

எங்களைப் போன்ற வழிப் போக்கர்களுக்கான உணவு விடுதி போல. காலையிலேயே கார்கள் குவிந்திருந்தன. தூக்கத்தை முறித்துக் கொண்டே காரின் வெளியே வந்த எங்க டிக்கட்டுகள் அந்த வளாகத்தைப் பார்வையால் துலாவின.

விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் அங்கே நிற்பதாக என் மகன் கூறினான். அவன் கூற்று, விடுதியினுள் உள்ள பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கலாம் என்ற உள்ளுணர்வைத் தந்தது.

இருந்தாலென்ன? இந்த நிர்ணயம்கூட சிலரக மக்களை, உள் வராதபடி வடிகட்டி விடும். அதை நுகர்வதில் எனக்கும் விருப்பம்தான். இருந்தாலும் பணம் ஒரு வெவஸ்த கெட்டது. அது யாரு கையிலயும் இருக்கும். உழைச்சி உழைச்சி ஓடாத் தேயும் உழைப்பாளியின் கைக்கு வரும் போது மட்டும் தவங்கித் தவங்கி வருது. ஆனா, சுயநல அரசியல்வாதி கையிலயும்; லஞ்சத்தில் வாங்கிய பதவி நாற்காலியில் – அதிகார மிடுக்கில் அமர்ந்திருக்கும் அதிகாரி கையிலயும்; மத்தவங்க உழைப்பைச் சுரண்டி மிடுக்கா வாழும் தொழிலதிபர் கையிலயும்; இவங்க மூணு பேரையும் வசக்கி அவங்க முதுகுல சவாரி செய்யும் மதவாதிகள் மடியிலயும் – பணம் ஒரு வேசியைப் போல புரளுது. ம்! இவங்க எல்லாரையும் இம்மாதிரி விடுதிகளில ஈசியாப் பாக்கலாம். எண்ண அலைகள் எப்படி எப்படியோ விரிய…. உள்ளே சென்றோம்.

எதிர்பார்த்தது போல் விலை இருந்தாலும், சுவையில் அது நம்ம ஊர் சரவணபவன் தான். ஆனால், பிசுபிசுத்த கூட்டம் அங்கில்லை.

???????????????????????????????

இருபது இருபத்தைந்து நிமிட இடைவெளிக்குப் பின் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஹாசனைத் தாண்டி பேளூரில் எங்கள் கார் நுழையும் போது மணி 10.40.

“பேளூர் – நுணுக்கமான வேலைப்பாடுகளோட நம்மை வியக்க வைக்கும் அற்புதமான சிற்பங்களைக் கொண்ட கோயில் உள்ள ஊர். நம்ம ஊருல கட்டில், நாற்காலிகளுக்கு மரக்கட்டைகளை கடைசல் போடுவது போல அங்கு, கோயிலிலுள்ள கல் தூண்களுக்குக் கடைசல் போட்டிருப்பாங்க” என்று என்னுடைய பெரியப்பா விளித்து விளித்துக் கூறும்போது, என் விழிகள் பிதுங்கக் கேட்டிருப்பேன். அப்போது சில படங்களைக் காட்டி மேலும் விளக்குவார்.

???????????????????????????????

“கோவில் சுவர் முழுக்க சிற்பங்கள்தாம். சோழர்களை வென்ற சமயத்துல சோழ சிற்பிகளை பிடிச்சிட்டுப் போயி அங்க பயன்படுத்திக்கிட்டதாகவும் சொல்றாங்க.” என்று கண்ணடித்துக் கொண்டார். “அட!” என்று நான்சொல்ல வாயெடுக்கும் முன், “ஒரு இன்ச் இடங்கூட சும்மாயிராது. அப்படியொரு வேலைப்பாடு. சிற்பத்துல உள்ள நகையலங்காரமெல்லாம் தனித் தனியாத் தொங்கும். ஒரு சிற்பத்தின் கையில வளையல் சுத்துமுனா பாத்துக்கோயேன். இப்படி நெறைய. நீ அவசியம் பாக்கணும்.” என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் அவர் ரசித்து ருசித்து சொன்ன போது நான் கல்லூரி மாணவன்.

கார் நின்றது.

“பார்த்தேயாகணும்” என்று ஆழ் மனதில் கங்கனம் கட்டிக்கொண்டு இருந்த நான், காரின் கதவைத் திறந்து, காலைத் தரையில் ஊன்றினேன்.

பேளூர் பூமி!

???????????????????????????????

“சார்! பார்க்கிங்க்குல வண்டிய நிறுத்திடுறேன். பார்த்திட்டு வந்ததும் கால் பண்ணுங்க. வந்திடுறேன். ம்! செப்பல் போட்டுக்க உள்ளே அனுமதிக்க மாட்டாங்க. காரிலேயே விட்டிடுங்க” கேட்டுக் கொண்டார் டிரைவர்.

அப்படியே பணிந்தோம்.

நூறடித் தூரத்தில் சென்னக் கேசவா கோயில் வாசல். தார் சாலையின் சூடு, எங்களை நடக்க விடாமல் துரத்தியது. கைகளை விரித்து அழைக்கும் தாயை நோக்கி ஓடும் குழந்தையைப் போல ஓடினோம். அந்நேரத்தில் அதுவும் சுகமாகத்தான் இருந்தது.

நுழைவு வாயிற் கோபுர வாசல் நிழலில் போய் நின்றோம். மூச்சு வாங்கியது. “நுழைவு வாயிற் கோபுரம்”என்பது பாண்டியர், நாயக்கர் காலக் கட்டடப் பாணி. ஒரு சில நிமிடங்கள் கோபுரத்தின் பாதத்தில் நின்ற நான், அதன் உச்சியைக் காண பின்னோக்கி நகர்ந்து பார்க்கலானேன்.

???????????????????????????????

இதற்குமுன்பிருந்த பழைய பெரிய நுழைவு வாயிலைத் துக்ளக்கின் படைத்தலைவன் கங்கா சலாரால் கைப்பற்றிய போது தீ வைத்து சிதைத்திருக்கிறான். அதன்பின் இந்தக் கோபுரம் கி.பி.1397-இல் மன்னன் இரண்டாம் அரிகராவின் தளபதி குண்டலால் கட்டப்பட்டிருக்கிறது. அதைத்தான் பார்க்கிறேன்.

உள்ளே நுழைந்தேன். ஒரு சாம்ராஜ்யத் தலைநகரின் கலைப் பொக்கிஷத்தினுள் வந்த மகிழ்வு. சுற்றி வளைத்திருந்த மதிலின் நடுவே சென்னக் கேசவப் பெருமாள் கோயில் காட்சியளித்தது.

தலைக்காட்டில் நடந்த மாபெரும் போரில் சோழர்களை வென்று அதைக் கொண்டாடும் வகையில் விஷ்ணு பகவானின் இருபத்து நான்கு அம்சங்களில் ஒன்றான விஜய நாராயண பெருமாளுக்கு அர்ப்பணம் செய்து கட்டிய கோயில் என்றும்; வைணவ குரு ராமானுஜர் சொற்படி வைணவத்தைக் கடைப் பிடித்த காலத்தில் விட்ணுவர்த்தன் கட்டியது என்றும் இதைக் கூறுகின்றனர்.

???????????????????????????????

இந்தக் கோயிலைப் பார்த்த மாத்திரத்திலேயே இதுவரை எங்குமே பார்த்திராத புதுவடிவ அமைப்பாகத் தோன்றியது. நட்சத்திர வடிவப் பீடத்தின் மேல் சப்பட்டையாக இருக்கும் இக்கோயில், பேக்கரிக் கடையில் காட்சிக்கு வைத்திருக்கும் பிறந்த நாள் கேக் போன்ற தோற்றமாக எனக்குத் தெரிந்தது.

இடப்புறம் பெரிய கற்றூண். பரந்த அவ்வளாகத் தரை முழுவதும் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அக்கற்கள் முழுவதும் வெம்மையைத் தாங்கி நிற்பதால், நுழைவாயில் முதல் கோயில் வரை நடப்பதற்கு ஏதுவாக கார்பெட் விரித்திருந்தார்கள். கண்கள் அங்கிமிங்கும் நோட்டமிட்டாலும், கால்கள் கார்பெட்டை விலக மறுத்தன.

???????????????????????????????

ஒரு மே மாத பகற்பொழுதில் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது சுட்டெரிக்கும் வெயிலாக இருந்ததால், அங்குள்ள கல் தரையில் நடப்பதற்கு வசதியாக, காலில் அணிந்து கொள்ள துணியால் ஆனா ஒரு உரை கொடுத்தார்கள். அதுபோல இங்கிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றிற்று. இருந்தாலும் இம்மாதிரிச் சூழலைச் சமாளிக்க நாமலே கால்களுக்கு காலுறை கொண்டு வந்திருந்தால், நாம் விரும்பியவாறு குறுக்கும் நெடுக்குமாகச் சென்று பார்க்க வசதியாக இருந்திருக்கும்.

சென்னக் கேசவா கோயிலின் முன்வாசல் வழியாக ஏறினேன். முகப்பு வாசலின் மேல் பகுதியிலும், கூரையின் கீழ் இருபக்கங்களிலும் உள்ள சிற்பங்கள் நம் பார்வையை எங்கும் சிதறாதபடி கட்டிப் போட்டன.

இதுவரை எங்குமே கண்டிராத அளவிற்கு நுட்பமான கல் வேலைப்பாடு. ஒரு தங்க ஆசாரியின் ஆபரண வேலைப்பாடு போல ஒவ்வொரு சிற்பமும் தன்னை அலங்கரித்து நிற்பது நம் வியப்பைப் பன்மடங்கு பெருக்கியது. இந்த வேலைக்கேதுவான கல் அவர்களுக்கு அருகிலேயே கிடைத்ததுதான் பெருங்கொடை. ஏன்னா, இது நம்ம ஊர் கருங்கல் போல இல்லை. மென்தன்மை கொண்ட ஒரு வகையான சோப்புக் கல் வகையைச் சார்ந்தது. உளியால் உடைப்பதற்கு எளிதாக இருக்கும் இது, நிலவும் தட்பவெப்பநிலையால் நாளாவட்டத்தில் வன்தன்மை பெற்று விடுவதாகவும் கூறுகிறார்கள். இதனால்கூட, இங்குள்ள சிற்பிகள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு தங்களின் நுண்கலைத் திறனை வெளிப்படுத்த தன்னார்வம் கொண்டிருக்கலாம். இந்தக் கல் பேளூரிருந்து சுமார் இருநூறு கி.மீ. தொலைவில் உள்ள தும்கூர் என்னும் ஊருக்கருகிலிருந்து வெட்டியெடுத்து வந்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.

???????????????????????????????

கருவறை முன் உள்ள சிற்பங்களைப் பார்க்கும் போது அவை கல் வேலை போன்றே தெரியவில்லை. அவை நம்ம ஊர் காரைக்குடி ஆசாரிகளின் மர வேலைப்பாடு போலவே இருந்தது.

கோயில் சுவரின் மேற்பகுதியில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கூரை, ஓட்டு சாய்ப்பு போல கல்லில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அடியில் கல்லிலே மரச் சட்டங்கள் போன்று அமைத்திருப்பது தத்ரூபமாக இருந்தது. இது போன்ற அமைப்பை நம்ம தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலிலும் பார்த்திருக்கிறேன்.

???????????????????????????????

நான்தான் இப்படி நினைத்து நினைத்து வியந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய மனைவிக்கோ, மகனுக்கோ இது கொஞ்சமும் ஆர்வமில்லாததாகக் கூட இது இருக்கலாம். கோடை விடுமுறை – பெங்களூர் என்றால் எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கு? “பெங்களூர் போயிட்டு வந்தியா? அங்க என்னென்ன பாத்த?”னு அவளுடைய கொலீக்ஸ் கேட்டாங்கன்னா? ஷாப்பிங் மால், அது இதுன்னு சொன்னா வாய் பிளப்பாங்க. அத விட்டுட்டு பேளூர், ஹளிபீடுன்னா, ஹூம்! இவ்வளவுதானாக்கும்னு உதட்டப் பிதுக்கி முகம் சுளிப்பாங்க! இந்தச் சின்ன விஷயம் கூடத் தெரியாத மக்கா நான்? ஒரு வேளை, என் ரசனைக்கு சலாம் போட்டு விட்டு ஐஸ் கிரீமோ, கூல்டிரிங்ஸ்சோ சாப்பிட்டுக் கொண்டு ஓரமாக நிழலில் உட்கார்ந்து விட்டார்களோ? கணப் பொழுதில் தட்டிய பொறி அவர்களைத் தேடியது.

கோயிலின் ஒன்றிரெண்டு நட்சத்திர விளிம்புகளைக் கடந்து, என் மனைவி அந்த வெயிலிலும் முந்தானையால் தலையைப் போர்த்திக் கொண்டு, ஒவ்வொரு சிற்பமாகக் காமிராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு பக்கம், என் மகனும் ரஞ்சித்தும் ஏதேதோ பேசிக் கொண்டே அங்கிருந்த சிற்ப வரிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆச்சர்யத்தோடு அருகில் சென்றேன்.

“சார், பையன் சிற்பங்கள ரொம்ப ஆர்வமா பாக்கிறான். சின்ன விஷயங்களக்கூட கவனிச்சி சொல்றான்” என்றான் ரஞ்சித்.

???????????????????????????????

அதற்குள் என் மனைவி, “கொஞ்சம் இப்படித்தான் வாங்களேன். இந்த சிற்பத்தப் பாருங்க! எவ்ளோ அழகா இருக்கு?!” என்றவள், சற்று குரலைத் தாழ்த்தி, “பயமாவும் இருக்கு!” என்றாள்.

அது திருமாலின் நரசிம்ம அவதார சிலை. தோற்றத்தில் மிகத் துல்லியமாக இருந்தது. அதைப் பார்த்தவாறே, காமிராவைக் கொடு என்றேன்.

நான்தான் அப்போதே எடுத்துவிட்டேனே என்று காமிராவை நீட்டினாள். பிளே செய்து பார்த்தேன். அத்தனையும் சிற்பங்கள்!

அப்போதுதான் என் மரமண்டைக்கு உரைத்தது. உண்மையான கலையழகை நாம யாருக்கும் அடையாளம் காட்ட வேண்டிய அவசியமில்ல. அது வயசு, பால், படிப்பு, தேசம், மொழினு எந்த வித்தியாசமுமின்றி தானே அனைவரையும் ஈர்த்துக் கொள்ளும்.

???????????????????????????????

சாப்ளினின் திரை மொழி போல ஹொய்சளர்களின் கலைமொழியையும் உணர்ந்தேன். கோயிலின் சுவர்களில் படிக்கட்டுபோல ஒன்றின்மேல் ஒன்றாக படுக்கை வசத்துக்கு வரிகள். அவற்றில், மனித உருவங்கள், கடவுளர்கள், யானைகள், யாளிகள் போன்றவை வரிசை கட்டி செதுக்கப் பட்டிருந்தன.

அங்கொரு சிறுகுழந்தை, தும்பிக்கையைத் தூக்கி நிற்கும் யானையின் வரி வடிவ சிற்பத்தைப் பார்த்து, அதைப் போலவே தன் கையை உயர்த்திப் பாவனை செய்து கொண்டிருந்தது.

சிலை உயிர் பெற்றஅழகு!

இப்படித்தான், அங்குள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் அங்கு வரும் எல்லோரையும் ஏதாவதொரு வகையில் பாடாய்ப்படுத்துகிறது. இதை அங்கு நின்ற சிறிது நேரத்திலேயே நன்றாகப் புரிந்து கொண்டேன்.

???????????????????????????????

அருகில் நின்ற ரஞ்சித், “சார் இதோ பாருங்க!” என்று ஒரு சிற்பத்தைக் காட்டினான். அது தவில் போன்ற ஓர் இசைக்கருவியை வாசிக்கும் இளைஞனுடைய சிற்பம்.

அவனின் இடக்கையைக் கவனியுங்கள். அந்தத் தவுலின் இருபக்கத் தோலையும் இழுத்துக் கட்டியிருக்கும் நாணின் உள்ளே இருக்கிறது. கையால் நாணுக்கு இழுப்புக் கொடுப்பதால், தோலின் விரைப்பு இன்னும் அதிகமாகும். இதனால் தவிலின் ஒலி முன்பைக் காட்டிலும் அதிகமாக ஒலிக்கும்.” என்றவன், “அன்றைய இயல்பைக் காட்டும் சிற்பியின் படைப்பாற்றல் அருமை சார்!” என்றான்.

“… அன்றைய இயல்பைக் காட்டும் …” ரஞ்சித்தின் வார்த்தைகள் என் மனதில் புதிய சாளரத்தைத் திறந்தது.

அதுவரை நான் பார்த்த வெளிப்புறக் கூரையின் கீழ் இருந்த சிற்பங்கள்; நவரங்க மண்டபத்திலுள்ள நான்கு தூண்களின் உச்சியில் உள்ள பெண் சிற்பங்கள் – இவற்றில் உள்ள நுட்பமான ஆபரண அலங்காரங்கள் அனைத்தும், கவி புனையும் கவியின் கவியைப் போல கற்பனை கலந்த சிற்பங்கள்தாம் என்று நினைத்திருந்தேன்.

???????????????????????????????

இப்போது, ரஞ்சித் திறந்து விட்ட புதிய சாளரத்தின் வழியாக அவற்றைப் பார்க்க…

சிற்பிகள் இந்தச் சிற்பங்களிலும் அன்றைய சமூக இயல்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். அப்படியானால், ஹொய்சல தேசம் கொழுத்த செல்வச் செழிப்பு மிகுந்த தேசம் என்பதில் துளியும் ஐயமில்லை. அதனால்தான், மாலிக்காபூர் தென்திசை நோக்கி இவ்வளவு தூரம் பிரயாசப்பட்டு வந்துள்ளான் என்று புரிந்துகொள்ள முடிகிறது.அள்ள அள்ளக் குறையாத செல்வவளம் யாரைத்தான் கொள்ளை கொள்ளாது?

வளமான தேசம், வசதியான மக்கள், ஒப்பற்ற கலைஞர்கள் என அத்தனை செல்வங்களையும் நெறிப்படுத்தி நடந்த அரசாட்சி. இவையெல்லாம், இவ்வாலய சிற்பங்கள் நமக்குக் காட்டும் அக்கால வரலாற்றுச் சுவடுகள்.

இவற்றைக் காணாமல், சுற்றுலா வழிகாட்டியைப் பரக்கப் பரக்கப் படித்து விட்டு, இதோ இந்தச் சிற்பம் இங்கிருக்கிறது! அதோ அந்தச் சிற்பம் அங்கிருக்கிறது! என்று சிற்பங்களைச் சரிபார்க்கும் முயற்சியிலோ; யானைகள் இத்தனை, யாளிகள் இத்தனை என்று அங்குள்ளவற்றைக் கணக்கெடுக்கும் முயற்சியிலோ –ஈடுபட்டிருந்தால், அது அபத்தமானதாக இருந்திருக்கும்!

???????????????????????????????

பெரியப்பா சொன்ன கடைசல் தூண்களைப் பார்த்ததும், இவற்றை உருவாக்க அக்காலத்தில் எவ்விதத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருப்பார்கள் என்று யோசிக்க வைத்தது. கோயிலுக்குள் உள்ள ஒரேயொரு தூண் மட்டும் முழுமையும் சிற்சிறு சிற்பங்களைக் கொண்டு பிறவற்றிலிருந்து மாறுபட்ட ஒன்றாக நின்றது. அதனை “நரசிம்மர் தூண்” என்கிறார்கள். ஒரு காலத்தில் இதனைச் சுழற்றினால் சுழலும் படியாக இருந்ததாம். ஆனால், இப்போது முயன்ற மட்டும் முக்கிப் பார்த்தாலும் பலன் இல்லை.

???????????????????????????????

கோயிலுக்குப் பின்னால், வலப் பக்கம் ஓரமாக வானவெளியில் கடைசல் போட்ட தூண்கள் நெறைய நின்றன. இவை வட நாட்டவர் படையெடுப்பினால் உண்டான சிதைவு எச்சங்களா? இல்ல, கோயில் கட்டும் போதிருந்த கூடுதல் உற்பத்திப் பொருளா? என்று தெரியவில்லை.

???????????????????????????????

கோயிலைப் பார்த்துவிட்டு தலைவாசலை நோக்கித் திரும்பும்போது வலப் பக்கத்தில் கல்லால் ஆன “விளக்குத் தூண்” ஒன்று இருந்தது. இதற்கும் ஒரு வரலாற்றுக் காரணம் கூறுகிறார்கள். அதாவது, கி.பி.1327-இல் முஸ்லிம் படையெடுப்பின் போது இக்கோவில் அடைந்த சிதைவுகளை, விஜய நகர மன்னன் முதலாம் அரிகரன் புதிப்பித்துள்ளான். அப்போது, புதிய பல கட்டுமானங்களை அவன் உருவாகியுள்ளான். அவற்றில் ஒன்றுதான் இந்த விளக்குத் தூண்.

இவ்வாலய வளாகத்தில் தென்கிழக்குப் பகுதியில்,கல் பீடத்தின் நடுவில் நிறுத்தப்பட்டுள்ள இதன் உயரம் 42 அடி என்றும், எடை சுமார் இரண்டு டன் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இத்தூண் நிற்கின்ற பீடத்தில் பள்ளமோ, பிடித்து நிறுத்த ஊக்குகளோ, இழு கம்பிகளோ அல்லது, வேறு வகையான பிடிமானமோ ஒன்றும் இல்லை. ஏன்? கட்டுமானச் சாந்து கூட இல்லாமல் இருக்கிறது. இதனால்தான் இதனை, “புவிஈர்ப்புத் தூண்” என்கின்றனர்.

பொதுவாக, இத்தூணின் அமைப்பைப் பார்க்கும் போது, இதன் மேல் பகுதி மெலிவாகவும் கீழ்ப் பகுதி தடிமனாகவும் உள்ளது. மேலும், தூணின் அடிப்பகுதி உட்குழிவாக இருப்பதால், இதன் நான்கு மூளைகளே இத்தூணைத் தாங்குகின்றன. இவ்விடத்தில் உள்ள சிறு இடைவெளி வழியாக சுருட்டிய சிறு தாளையோ அல்லது சிறு குச்சியையோ சொருகினால் மறு பக்கம் எடுத்து விடலாம்.

மொத்தத்தில் இத்தூணை, மனிதன் அல்லது வலிமை கொண்ட விலங்கு ஒன்றின் அதிகபட்ச உந்து சக்தி; மற்றும், அவ்வளாகத்தில் வீசும் காற்றின் வேகத்தை எதிர்த்து நிற்கும் சக்தி – இவற்றைக் கணக்கில் கொண்டுதான் இதன் உயரத்தையும் எடையையும் நிறுவி இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றியது. இருந்தாலும், பார்வையாளர்கள் பீடத்தில் ஏறிப் பார்ப்பதைத் தவிர்க்க, தூணில் அடிவாரத்தில் “Don’t climb” என்று எழுதி வைத்துள்ளார்கள்.

???????????????????????????????

எங்கிருந்தோ வந்த மெல்லிய கோயில் மணி ஓசை என் காதில் பட்டதும், யாரோ சொன்னது மனதில் கேட்டது:“இன்று வரை காலையும் மாலையும் வழிபாடு செய்து வரும் ஒரே ஹொய்சலக் கோயில் இது மட்டுமே!”

* * *

ஹளெபீடு: ஹொய்சலேஸ்வர கோயில்