RSS

Monthly Archives: மே 2014

ஹொய்சளர்கள் – ஓர் அறிமுகம்

அசின் சார், கழுகுமலை.

ஹொய்சளர்கள்(Hoysalars)

ந்தக் கோடை விடுமுறையில் கர்நாடக மாநிலம், ஹாசன் நகரின் அருகிலுள்ள ஹொய்சள மன்னர்களின் பிரசித்தி பெற்ற பேளூர்(Belur), ஹளெபீடு(Halebeedu) கோவில்கள்; மற்றும் செட்டிஹள்ளி(Shettihalli) என்னும் சிற்றூருக்கருகில் ஹேமாவதி ஆற்றின் அணைக்கட்டினுள் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் ஜெபமாலை அன்னை ஆலயம் (Rosary Church) – இம்மூன்றையும் பார்த்துவிடுவது என்பது என்னுடைய பயணத் திட்டம். அதன்படி கடந்த வாரத்தில் சென்று வந்தேன். அது பற்றிய செய்திகளையும் அதற்காகப் படித்த சில விஷயங்களையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். புதிதாக அறிந்து கொள்பவர்களுக்கும், அங்கு செல்ல விரும்புபவர்களுக்கும் இவை பயனுள்ளவையாக இருக்கலாம்.

முதலில் அக்கோவில்களைப் பற்றிக் கூறுவதற்கு முன், அவைகளை எழுப்பிய ஹொய்சள மன்னர்களின் வரலாற்றை எளிய ஓர் அறிமுகமாக இங்கு தருகிறேன். இந்தப் பின்புலத்தோடு அவ்வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கும் போதுதான் அவற்றின் உண்மையான புலமும், பிரமிப்பும் நமக்குத் தெரியும்.

ஹொய்சளர்கள் யார்?

கர்நாடகத்தில் மைசூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழ்ந்து, பின்னர் சமவெளிப் பகுதிகளில் இறங்கி அரசு ஏற்படுத்தும் அளவிற்கு வளர்ச்சி பெற்ற குறுநிலத் தலைவர்களின் வழிவந்தோரே “ஹொய்சளர்கள்” என்று அழைக்கப்பட்டனர். இப்பத விளக்கம் குறித்து மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் கூறியுள்ள செய்திகள் இங்கு அறியத்தக்கன.

“கன்னட நாட்டிற் சிறந்த பகுதி மைசூர்ச் சீமையாகும். மைசூரில் தற்போது ஹளெபீடு (Halebid) என வழங்கும் துவரை நகர் (துவார சமுத்திரம்) கி.மு.2000 ஆண்டுகட்கு முன்னர்ச் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததாயிருந்தது. இது துவராபதி எனவும் வழங்கும்.

நச்சினார்க்கினியர், “அகத்தியனார்………….துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கி” எனத் தொல்காப்பியப் பாயிரவுரையிலும், “மலைய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்” என அகத்திணையியல் 32-ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்.

பண்டைச் சேரநாட்டில் மைசூர்ச் சீமையின் தென் பகுதியும் சேர்ந்திருந்தது. கடைக்கழகக் காலத்தில் மைசூர்த் துவரைநகரை ஆண்டவன் இருங்கோவேள் என்னும் தமிழச் சிற்றரசன். அவன் வடபக்கத்தில் ஒரு முனிவரின் ஓம குண்டத்தில் தோன்றித் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்த வேளிர்களுள் ஒருவன் என்றும், ஒரு முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவர்க்கு இடையூறு செய்யவந்த ஒரு புலியை அவர் ஏவற்படி கொன்றமையால் புலிகடிமால் எனப்பட்டானென்றும் கூறப்படுவன்.

              “நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச்

               செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை

               உவரா வீகைத் துவரை யாண்டு

               நாற்பத் தொன்பது வழிமுறை வந்த

               வேளிருள் வேளே விறற்போ ரண்ணல்

               தாரணி யானைச் சேட்டிருங் கோவே

               ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய

               ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்”   (புறம். 201)

என்று கபிலர் பாடுதல் காண்க. இப் பாட்டின் அடிக்குறிப்பில், “தபங்கரென்னு முனிவர் ஒரு காட்டில் தவஞ்செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அதுகண்ட அம் முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி ‘ஹொய் ஸள’ என்று கூற, அவன் அப் புலியைத் தன் அம்பால் எய்து கடிந்தமையால் ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப்பட்டா னென்று சிலர் கூறுவர்; சளகபுரத்தையடுத்த காட்டிலுள்ள தன் குலதேவதையான வாஸத்திகா தேவியைச் சளனென்னும் அரசன் வணங்கச் சென்றபோது புலியால் தடுக்கப்பட்டு வருந்துகையில், அக்கோயிலிலிருந்த பெரியவர் அவனை நோக்கி ‘ஹொஸ் ஸள’ என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அதுகொண்டு அதனைக் கொன்றமைபற்றி, ‘ஹொய் ஸளன்’ என்றும் ‘புலிகடிமால்’ என்றும் பெயர் பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர்” என்று சாமிநாதையர் அவர்கள் வரைந்துள்ளனர்.

பிற்காலத்தில் 11ஆம் நூற்றாண்டில் துவாரசமுத்திரத்தில்(Halebid) நிறுவப்பட்ட ஹொய்சள பல்லாள மரபு கடைக்கழகக் காலப் புலிகடிமாலின் வழியதே. பல்லாளன் என்னும் பெயர் வல்லாளன் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. வ-ப, போலி, ஒ,நோ: வண்டி – பண்டி, வகு-பகு, வல்லாளன் = வலிய ஆண்மையை யுடையவன். ஒரு மறவனுடைய இல்லையும் ஊரையும் இயல்பையும் சொல்லி அவன் ஆண்மைத் தன்மையை மிகுத்துக் கூறும் புறத்துறைக்கு வல்லாண்முல்லை (பு.வெ.177) என்று பெயர்.”

பாவாணர் விளம்பிய மேற்படி பாடத்தின்படி, ஹொய்சள நாடு என்பது பண்டைய செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பகுதியென்றும், ஹொய்சளர்கள் தமிழச் சிற்றரசர்கள் வழியானவர்கள் என்பதும் புலனாகும். செழுமையும் செல்வாக்கும் மிக்க இவர்களின் ஆட்சி, பதினான்காம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. இவர்களுடைய எல்லை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தமிழகத்தின் சில பகுதிகள் வரை நீண்டிருந்தது.

ஹொய்சள மன்னர்கள்:

இந்த ஹொய்சள தலைமுறை, ஆரகெல்லா (கி.பி.950) என்ற தலைவனிலிருந்து தொடங்குகிறது. இவர்களுடைய வழித்தோன்றல்களில் வந்த முதல் மன்னன் விநயாதித்தியன்.

வளமுடைய துவாரசமுத்திரம்(Halebeedu)

வளமுடைய துவாரசமுத்திரம்(Halebeedu)

இரண்டாம் விநயாதித்தியன் காலத்தில் ஹொய்சள அரசு வலுவுடையதாகவும், நாடு வளமுடையதாகவும் இருந்தது. இவன் கி.பி.1062-இல் சசாகபுராவில் இருந்த தலைநகரை துவார சமுத்திரத்திற்கு(Halebeedu) மாற்றினான். அதன் பின்னர் ஹொய்சள அரசு வீழ்ச்சி அடையும் வரையிலும் துவாரசமுத்திரமே தலைநகராகவே இருந்தது. மேலும் இங்கிருந்து 16 கி.மீ.தூரத்திலுள்ள பேளூர் மாற்றுத் தலைநகராகவும் இருந்தது.

முதலாம் பல்லாளன் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, கி.பி.1103-இல் துவாரசமுத்திரமும் பேளூரும் சிந்தா படையினரால் சூறையாடப்பட்டன. இதில் ஹொய்சளரின் வளர்ச்சி தடைபட்டது. சமண சமயத்தைப் பின்பற்றி வந்த முதலாம் பல்லாளன், பின்னர் சைவ சமயத்தைத் தழுவினான். “சைவர்களின் மாணிக்கம்” என்று போற்றுத்தலுக்கு உரியவன் ஆனான். இவனுக்குப் பிள்ளைகள் இல்லாததால், தன் இறுதிக் காலத்தில் ஒரே நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பேரழகு மிக்க மூன்று பெண்களை அவன் திருமணம் செய்தான். ஆனாலும், ஆண் வாரிசு பிறக்காமலே கி.பி. 1108-இல் இறந்தான்.

விட்ணுவர்த்தனன்

இவனுக்குப் பின் இவனுடைய தம்பி விட்ணுவர்த்தனன் அரச பதவி ஏற்றான். ஆற்றல் மிக்க இவன் ஹொய்சள அரசை விரிவு படுத்துவதிலும், அதன் செல்வத்தையும் செல்வாக்கையும் பெருக்குவதிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தான். இவர் காலத்தில் சோழப் பேரரசில் இருந்த பலவீனத்தால் தலைக்காட்டைக் கைப்பற்றி, சோழர்களை கர்நாடகாவிலிருந்து விரட்டினான். மேற்கு சாளுக்கியர்களைத் தோற்கடித்தான். கடம்பர்களின் படைத்தலைவன் மாசாண்யாவின் தாக்குதலை முறியடித்தான். இவ்வாறு பல வெற்றிகளைக் கொண்ட இவனுடைய ஆட்சி தெற்கே தலைக்காவிரி முதல் வடக்கே பங்கபுரா வரைப் பரவி இருந்தது. வெற்றிகள் பல பெற்ற வீரனாக விளங்கிய விட்ணுவர்த்தனன் கி.பி.1142-இல் இறந்தான்.

தந்தையின் மறைவுக்குப் பின் எட்டு வயதே நிரம்பிய விட்ணுவர்த்தனின் மகன் நரசிம்மன், தாய் இலக்குமி பாதுகாப்பில் ஆட்சி செய்யத் தொடங்கினான். இவனுடைய முப்பதாண்டு கால (கி.பி.1142-1173) ஆட்சியில், ஹொய்சளருக்கு எவ்விதப் பெருமையையும் சேர்க்கவில்லை. தந்தை தேடித்தந்த பெருமைகள் கூடப் பாதுகாக்கப்படவில்லை.

விட்ணுவர்த்தனுக்கு தனிப் பேரரசு அமைக்க வேண்டுமென்றொரு அவா இருந்தது. அதை அவர் பேரன் இரண்டாம் பல்லாளன் (கி.பி.1173-1220), நிறைவேற்றினான். மேலும், பாண்டியர்கள் சோழ நாட்டைத் தோற்கடித்த போது, அவர்களை எதிர்த்துப் போரிட்டு, சோழருக்கு நாட்டை மீட்டுத் தந்த பெருமைக்குரியவன் இவன்.

பதினான்காம் நூற்றாண்டில் டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி தன்னுடைய தளபதி மாலிக்கபூரைக் கொண்டு, தென் இந்தியப் பகுதிகளைக் கைப்பற்றத் திட்டமிட்டான். அதன்படி அவன் கி.பி.1311 மற்றும் கி.பி.1327 ஆண்டுகளில், சியுனா பேரரசையும் துவார சமுத்திரத்தையும்(Halebeedu) முறியடித்தான். மூன்றாம் பல்லாளன் சுமார் முப்பது ஆண்டுகள் மாலிக்கபூருக்கு ஈடு கொடுத்து வந்தவன், கி.பி.1343-இல் மதுரை போரில் உயிரிழந்தான்.

முதலாம் ஹரிஹரா ஆதிக்கத்தின் கீழ் ஹொய்சள பேரரசு வந்ததும், அதுவே விஜயநகர பேரரசு ஆனது.

தமிழகத்தில் ஹொய்சளர்கள்:

விட்ணுவர்த்தனுடைய ஆட்சிக் காலத்தில் மிகவும் மோசமான நிலைமையிலிருந்த ஹொய்சளர் – சோழர் உறவு, இரண்டாம் வீரபல்லாளன் ஆட்சிக் காலத்தில் செம்மைப்படுத்தப்பட்டது. கி.பி.1200-ஆம் ஆண்டு அளவில் மூன்றாம் குலோத்துங்க சோழன் தன் மகள் ஒருத்தியை இரண்டாம் வீரபல்லாளனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். பதிலுக்கு இரண்டாம் வீரபல்லாளன் தன்னுடைய மகள் சோமலாதேவியை, வயதான சோழப் பேரரசன் குலோத்துங்கனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். மேலும், நரசிம்மன் தன்னுடைய மகளை மூன்றாம் இராசராசனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். இவ்வாறு வலுப்படுத்தப் பெற்ற உறவின் காரணமாக மூன்றாம் இராசராசன் நெருக்கடிகளுக்கு ஆளான போதெல்லாம், தங்கள் சுயநலம் கருதியும், சோழரின் நலம் கருதியும் ஹொய்சளர் உதவுவதற்கு முன்வந்தனர்.

வீரசிம்மனுடைய மனைவி கலாலாதேவி என்ற கலாவதி சோமேசுவரனைப் பெற்றெடுத்த மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இறந்து விட்டாள். குழந்தைப் பருவத்திலேயே தாயைப் பறிகொடுத்துவிட்ட சோமேசுவரனை வளர்ப்பதற்காக வீரநரசிம்மனின் தங்கையும், மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய மனைவியுமான சோமலா தேவி அவனைக் கங்கைகொண்ட சோழபுரத்திற்குக் கொண்டு சென்று விட்டாள். திருமணமான சில ஆண்டுகளிலேயே மூன்றாம் குலோத்துங்க சோழனை இழந்து விதவைக் கோலம் பூண்டு வெறுமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த சோமலா தேவி சோமேசுவரனை கண்ணுங் கருத்துடன் வளர்ப்பதில் காலத்தை செலவிடத் தொடங்கினாள்.

சோமேசுவரனின் இளமைப் பருவம் முழுவதும்  கங்கைகொண்ட சோழபுரத்திலேயே கழிந்தது. எனவேதான், சோமேசுவரனுக்குத் துவாரசமுத்திரத்திலிருந்து ஆட்சி செய்வதை விட தமிழ் நாட்டில் தங்கி இருப்பதில்தான் அதிக ஆர்வம் இருந்தது. பாண்டியனின் தாக்குதல் சிற்றரசர்களின் கிளர்ச்சி ஆகியவற்றிலிருந்து தன்னையும் தன்னுடைய அரசையும் பாதுகாத்துக் கொள்ள ஹொய்சளர் படை ஒன்று சோழ நாட்டிலேயே தங்கி இருக்க வேண்டுமென்று சோழப் பேரரசன் கருதினான். இதற்காகத் திருச்சிக்கருகில் உள்ள கண்ணனூர் கொப்பம் ஹொய்சளருக்கு அளிக்கப்பட்டது. கி.பி.1228-இல் சோமேசுவரன் கண்ணனூரில் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அதன்பின், அவன் கண்ணனூரைத் தலைநகராகக் கொண்டு தன்னுடைய ஆட்சியை வலு மிக்கதாக ஆக்கிக் கொண்டான்.

இவ்வாறு சோழருக்கும் பாண்டியருக்கும் ஏற்பட்ட போரில் நடுவராக வந்த ஹொய்சளர் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஹொய்சள அரசை நிறுவி தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் கி.பி.1235-ஆம் ஆண்டின் இறுதியில் வீரநரசிம்மன் நோய்வாய்ப்பட்டிருந்தான். அவனைக் காண்பதற்காக கண்ணனூரில் இருந்து சோமேசுவரன் புறப்பட்டுச் சென்றான். நோயிலிருந்து குணமடையாத நிலையிலேயே வீரநரசிம்மன் கி.பி.1236-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்து விட்டான். அவனுக்குப் பின் ஹொய்சளப் பேரரசனாக முடி சூட்டப் பெற்ற சோமேசுவரன் சில காலம் துவாரசமுத்திரத்தில் (ஹளெபீடு) தங்கியிருந்த பின் கண்ணனூருக்குத் திரும்ப வந்து விட்டான்.

வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதி

வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதி

ஹொய்சளர்களின் இத்தகைய வரவினால் அவர்கள் தமிழகத்தில் எழுப்பிய கோவில்களும் உண்டு. சான்றாக, திருச்சி சமயபுரத்திலிருந்து சிறிது தொலைவில் ஹொய்சள மன்னர் கட்டிய போசளேசுவரர் கோவிலைக் காணலாம். மேலும், இவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஒரு நந்தவனத்தையும், மூன்றாம் பிரகாரத்தில் ஒரு சாலையையும் ஏற்படுத்தினர் என்பது ஒரு கல்வெட்டிலிருந்து அறியப்படும் செய்தி. இக்கோவிலில் ஆண்டாள் சந்நிதிக்குப் போகும் வழியில் வலப்பக்கம் உள்ள வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதி ஹொய்சள ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதேயாகும்.

அந்நியரைக் கவர்ந்த ஹொய்சள தேசம்:

ஹொய்சளப் பேரரசு மேற்கே காவிரியில் தொடங்கி கிழக்கே கிருஷ்ணா வரை விரிந்து செழிப்பான பூமியைக் கொண்டதாக இருந்தது. உன்னதமான கட்டடக்கலைக்கும் சிற்பக் கலைக்கும் சான்றாக ஹொய்சளக் கோவில்கள் விளங்கின. இங்குள்ள செழிப்பு வடநாட்டவரை மிகுதியாகக் கவர்ந்ததால், மாலிக்காபூர் போன்றோர் பலமுறை வந்து சூறையாடிச் சென்றுள்ளனர். இங்கு மட்டுமின்றி ஹொய்சளர் இருந்த தமிழ் நாட்டிற்கும் வந்து பொன்பொருட்களைக் கவர்ந்து சென்றுள்ளனர். இது பற்றிய ஒரு சுவையான தகவலை STORY OF SRIRANGAM என்ற வலைத்தளத்தில் பார்த்தேன்.

*

பார்வை நூல்கள்:

ஞா.தேவநேயப் பாவாணர் – திரவிடத்தாய்.

அ.இராமசாமி – தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும்

வி.கந்தசாமி – தமிழ் நாட்டின் தலவரலாறுகளும் பண்பாட்டுச்சின்னங்களும்

* * *

பேளூர்: சென்னக்கேசவப் பெருமாள் கோயில்