RSS

Monthly Archives: மார்ச் 2014

அவனும் அவளும்

அசின் சார், கழுகுமலை.

அவனும் அவளும்

சாப்பிட்டுக் கொண்டிருந்தவள்,

“தோசையை பெறட்டிப் போடுங்களேன்” என்றாள்.

            அவனோ

            தோசைக் கரண்டியைக் கையிலெடுத்து

            ‘சரட்’ டென்று தோசையின் அடியில் விட்டான்.

தோசை

‘விருட்’ டென்று

அடுப்பின் பின்னால் போய் விழுந்தது!

*

“பால் அடுப்பிலே வச்சிருக்கேன்

கொஞ்சம் பாத்துக்கோங்க” என்றாள்.

           கையில் செய்தித்தாளுடன்

           அடுப்பு முன்பு போய் நின்றான்.

காலிங் பெல் அடித்தது.

யாரென்று பார்க்கப் போனான்;

பால் பொங்கி வழிந்து விட்டது.

*

“ஆபீசுக்கு நேரமாச்சு

நான் கெளம்புறேன்

அடுப்புல வெந்நீர் வெச்சிருக்கேன்

நீங்க ஆபீசு போறதுக்கு முன்னால

மறக்காம அணைச்சிடுங்க” என்றாள்.

           அவனோ மறக்காம மறந்திட்டான்!

பிற்பகலில்

வீடு திரும்பும் போது

வெந்நீர் வற்றிய பாத்திரம்

அனலாகித் தகித்தது!

*

தக்காளி கட் பண்றீங்களா?

பிதுங்கிடும்!

*

வெங்காயம்?

கண் கரிக்கும்.

*

பூண்டு உரிக்கீங்களா?

நகம் இல்ல.

*

தேங்கா திருகுறீங்களா?

கையில திருகிருவேன்.

*

பூரிக்கு உருட்டுறீங்களா?

வட்டமா வராதே!

*

இப்படித்தான்

தினம் தினம் அவளிடம்

தோற்றுப் போகிறான்.

           அப்போதெல்லாம்

           ஷோ கேஸில் நிமிர்ந்து நிற்கும் – அவனின்

           வெற்றிக் கோப்பைகள்

           கூனிக் கூனி சிரிக்கின்றன!

* * *

Advertisements
 

நோயும் மருந்தும்

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

நோயும் மருந்தும்

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

முந்தைய பதிவு : பொட்டு

பதிவு : 9

மனிதர்கள் தங்களின் மகத்தான பகுத்தறிவால் வியப்பான பொருட்களைப் படைத்து, நினைத்திட முடியா அளவிற்கு இன்று இகமதில் சுகமாக வாழ்ந்து வருகின்றனர். இவ்விதம் கண்டுபிடித்த சிந்தை கவரும் விந்தைப் பொருள்கள் சந்தையில் தினம்தினம் வருவதைப் போல் புதுபுது நோய்களும் மனிதரைத் தேடி வந்து கொண்டே இருக்கின்றன. இதனால், இன்றைய மனிதரின் வாழ்க்கை என்னும் யாத்திரை பெரும்பாலும் மாத்திரையுடன் கழிப்பதாகவே உள்ளது. ஒருவர் தான் தேடிய செல்வத்தைத் தனது பிள்ளைகளுக்குக் கொடுக்கிறாரோ இல்லையோ, மருத்துவருக்கு மறக்காமல் மறுக்காமல் மனசாரத் தேடிச் சென்று கொடுப்பவராகவே இருக்கின்றார்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் நம் முன்னோரின் வாக்கு ‘முக்கால’ உண்மையாகும். நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாயிருந்தாலும் சில நோய்கள் வருவதைத் தவிர்த்திட இயலாது. அவ்வாறு நோய் வரும்போது ‘மருந்து’ தேவையான பொருளாகிறது. ஆகவே தான் மருந்தின் மகத்துவம் கருதி திருவள்ளுவரும் ‘மருந்து’ (அதிகாரம்: 95) என ஓர் அதிகாரமே அமைத்துப் பாடியுள்ளார். அதுவும் இவ்வதிகாரத்தை ‘நட்பியல்’ என்ற பகுதியில் அமைந்துள்ளது மேலும் அதற்கு சிறப்புத் தருவதாயுள்ளது. அதாவது, உயர் நட்பு என்பது சபை நடுவே நிற்கும் ஒருவரது ஆடை அவிழ்ந்தால், எவ்வாறு அவரது கை விரைந்து ஆடையைப் பற்றி மானத்தைக் காக்குமோ அதுபோல் நட்பும் துன்பத்தை நீக்குவதில் விரைந்து உதவ வேண்டும் என்பதாகும். இதைப் போன்றே உடலுக்கு நோய் ஏற்படும் போது கொடுக்கப்படும் மருந்தும் விரைந்து நோய் நீக்கி உடலுக்கு நலம் தர வேண்டும் என்று கருதியே மருந்து என்னும் அதிகாரத்தை நட்பியல் என்ற பகுதியில் அமைத்துள்ளார்.

நோயும் மருந்தும்

மருந்து மனிதருக்கு மட்டுமல்ல, தெய்வமே இந்த உலகில் மனித அவதாரம் எடுத்தாலும், அந்த அவதாரத்திற்கும் மருந்து தேவை என்பதை நம் நாட்டு இதிகாசங்கள் கூறுகின்றன. சான்றாக, இராமாயணத்தில் இராம இராவண யுத்தத்தின் போது இராவணன் மகன் மேகநாதன் என்ற இந்திரஜித் விடுத்த பிரம்மாஸ்த்திரம் தாக்கி வீழ்ந்த லட்சுமணர் முதலியோரை மீண்டும் எழச் செய்ய, அனுமன் உயிர் தரும் மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வருகிறான். அதிலுள்ள மருந்துக் காற்று பட்டு வீழ்ந்தோரெல்லாம் உயிர் பெற்று நலமாய் எழுந்தனர் என்பதை கம்பராமாயணம், யுத்தகாண்டத்திலுள்ள,

           “காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர்

            போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்

            ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினர்

            கூற்றினை வென்று தம்உருவும் கூடினர்” (பாடல்: 2744)

என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது. மேலும், சஞ்சீவி மலையைப் போன்றே நாட்டிலுள்ள பிற மலைகளிலுள்ள மருந்துகளும் மனிதர்களின் நோய்களை நீக்கி சுகம் தரும் என்ற கருத்தை ஒளவையார் பாடிய மூதுரையில்,

            “மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்” (பாடல்: 2௦)

என்று கூறியுள்ளார். இறைவன் உணவிற்காகப் பல தாவரங்களைப் படைத்துள்ளது போல், மருந்திற்காகவும் பல தாவரங்களைப் படைத்துள்ளார். இக்கருத்தைக் கிறிஸ்தவர்களின் வேத நூலாகிய பைபிளிலில்,

           “ஆண்டவர் நிலத்திலிருந்து மருந்து வகைகளைப் படைத்தார்

            அறிவுத் திறன் கொண்டோர் அவற்றை புறக்கணிப்பதில்லை” (சீராக்: 38:4)

காண முடிகிறது. இச்செய்தி, கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் முழுமையான பைபிளில் மட்டுமே இருக்கிறது.

நோய்கள் ஏற்படக் காரணம்:

உலகிலுள்ள உயிரினங்களில் மனித இனத்தைத் தவிர மற்றெல்லா உயிரினங்களும் அவை தோன்றியது முதல் இயற்கையை விட்டு விலகாமல் இயற்கையோடு இணைந்து வாழ்கின்றன. அதனால்தான் அவற்றிற்கு நோய்கள் வருவதும் குறைவு. ஆனால், மனிதன் மட்டுமே உணவு முதல் எல்லாவற்றிலும் மாற்றம் செய்து இயற்கையை செயற்கையாக்கி இயற்கையினின்று விலகி வாழ்கின்றான். இவ்வாழ்க்கை எவ்வளவோ உயர்ந்த வாழ்க்கை என்றாலும் “எல்லா நன்மையிலும் ஒரு தீமை உண்டு, தீமை இல்லாத நன்மை இல்லை” என்ற நியதிப்படி மனிதனுக்கு நோய்களும் அதிகம் ஏற்படுகின்றன.

நோயும் மருந்தும்

ஒருவரது உடலுக்கும் மற்றொருவரது உடலுக்கும் மிகச் சிறிய வேதியியல் வேறுபாடுகள் உண்டு. இதை இரத்தத்தில் பல பிரிவுகள் இருப்பதன் மூலம் எளிதில் அறியலாம். இது போன்றே உடலில் இன்னும் பல வேறுபாடுகளும் இருக்கின்றன. நிலத்திற்கேற்ற பயிரும் உரமும் இடுதல் அவசியம். அது போன்றே உடலுக்கேற்ற உணவும் அவசியம். ஒரு உடலுக்குப் பொருந்தும் உணவாக இருப்பது; வேறோர் உடலுக்குப் பொருந்தா உணவாகவும் இருக்கும். இவ்வாறு உடலுக்கேற்ற உணவைக் குறித்த நேரத்தில் குறித்த அளவு உண்ணுதல் வேண்டும். உடலினுள் செல்லும் உணவும், உடலிலிருந்து வெளியேறும் கழிவும் சீராகச் செயல்பட்டால் நோய்கள் வரும் வாய்ப்புக் குறைவு. அதிக உணவும், குறைந்த உணவும் நோய் உண்டு பண்ணும். அதனால்தான்,

           “மிகினும் குறையினும் நோய் செய்யும்”

என்று வள்ளுவர் கூறியுள்ளார். மதுரை கூடலூர்கிழார் எழுதிய “முதுமொழிக் காஞ்சி” என்ற நூலில் எட்டாவது பிரிவான எளியபத்து என்பதில்,

           “உண்டி மெய் யோர்க்கு உறுபிணி எளிது”

என்று கூறுகிறார். அதாவது அதிக உணவை உண்டால் அதிக நோய் உண்டாகும் என்பதாகும். ஆகவே தான் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்று சொல்லுதல் ஏற்பட்டது. இதனால், தவத்திரு. மறைமலையடிகள் அவர்களும், ‘பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்’ என்றோர் நூல் எழுதியதை அறிக. இன்று பசிக்கு உணவு என்ற நிலை மாறி சுவைக்கு உணவு என்னும் நிலை உருவானதால், காற்று, நீர், வாழும் இடம், சுற்றுச் சூழல் என்று எத்தனையே மாற்றங்கள் இடையே வாழ்வதாலும் நோய்கள் அதிகமாகிவிட்டன.

அன்றைய நிலை:

இன்று நாம் எல்லா நிலைகளிலும் மாற்றத்தைப் படைத்து ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்து வருகிறோம். ஆனால் மின்சாரம் இல்லாத அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் நோய் வந்த போது என்ன செய்தனர் என்பதை அறிவது சுவைமிகு செய்தி. அதேசமயம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது.

அன்று சாதாரண நோய்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகூட, குறைந்தது மூன்று நாட்களுக்குள் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்று அன்றுள்ளோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆகவே தான், “விருந்தும் மருந்தும் மூன்று நாள்” என்ற பழமொழி ஏற்பட்டது. ஆனால், இன்றைய உலகு அவரசம் மிகுந்த உலகாக இருக்கின்றது. அதனால் விருந்தினர் வந்தால் ஒருநாள் அல்லது ஒருநேர உணவுடனும், நோய் வந்தால் ஊசி மருந்து போட்டு ஒருநாளிலேயே குணமாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருக்கின்றனர். இதனால் “விருந்தும் மருந்தும் ஒருநாள்” என்று சொல்லும் நிலை உருவாகிஉள்ளது.

நோயும் மருந்தும்

அன்றைய மக்கள் பெரும்பாலும் மளிகைக் கடைகளில் கிடைக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, போன்ற பொருள்களைக் கொண்டும், காட்டில் கிடைக்கும் மருத்துவக் குணம் கொண்ட தாவரங்களைக் (மூலிகைகள்) கொண்டும் தாங்களாகவே மருந்து தயாரித்து நோய்களை நீக்கினர். இதில் சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவை முக்கியம் பெருவதால்

           “சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை

            சுப்பிரமணிக்கு மிஞ்சிய சாமியுமில்லை”

என்று பழமொழி அன்று வழக்கத்தில் இருந்தது. மேலும், கம்பு ஊன்றி நடக்கும் நிலையில் உள்ளவரும் காலை, மதியம், மாலை ஆகிய மூவேளையும் இஞ்சி, சுக்கு, மிளகு ஆகியவற்றை ஒரு மண்டலம் சேர்த்து வந்தால், ஊன்று கோல் துணையின்றியே நடப்பர் என்பதனை,

            “காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

            மாலை மிளகு மண்டலம் தின்றால்

            கோல் ஊன்றி நடந்த வரும்

            கோலை வீசி விட்டு நடப்பரே”

என்னும் செவிவழிப் பாடல் வழி அறிகிறோம்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘திரிகடுகம்’ என்ற மருந்தின் பெயரால் நல்லாதனாரும்; கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர், பெருமல்லி வேர் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘சிறுபஞ்சமூலம்’ பெயரால் காரியாசனும்; ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘ஏலாதி’ என்ற சூரணத்தின் பெயரால் கணிமேதாவியாரும் நம் தமிழ் மொழியில் நீதி நூல்கள் எழுதியிருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

இவை போன்ற பொருள்களாலும் மற்றும் வேறு பல பொருள்களாலும் அன்று வாழ்ந்த மக்கள் நோயைத் தவிர்க்க எவ்விதம் மருந்து தயாரித்துப் பயன்படுத்தினர் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

* * *

பதிவு 10 : நோயும் மருந்தும் – 2