RSS

Monthly Archives: பிப்ரவரி 2014

ஊர் வலிது!

கதை: அசின் சார், கழுகுமலை.

அசின் சார், கழுகுமலை.

டின் டிடிங் டிங் டிங் டின் டின் …”

தலைமாட்டிற்கு சற்று தள்ளி, லெதர் கவர் தரையில் படும்படி குப்புற வைத்திருந்த சாம்சங் கிராண்ட் செல், காலை மணி ஐந்து ஆனதை, ‘ஓவர் தி ஹோரிசன்’ என்ற மெல்லிய மேற்கத்திய இசை பாடி அறிவித்தது. பழக்கப்பட்ட அவ்விசை அவரின் செவி வழிச் சென்று உணர்வைத் தட்டி எழுப்பியது.

மல்லாந்து படுத்திருந்த அவர் விழித்ததும் இசை வந்த திசை பார்த்தார். கவுத்தியிருந்த செல்லின் அடிப்பகுதியில் கோடுபோல் வெளிச்சம் படுவதைப் பார்த்து, அதை எடுத்து ஆப் செய்தார். மெதுவாக எழுந்து உட்கார்ந்தவர், ஓரிரு நிமிடங்கள் கடவுளை மனதில் நினைத்திருப்பார் போலும். தன் இடுப்பு வரை மூடிக்கிடந்த பெட்சீட்டை விலக்கிவிட்டு எழுந்தார்.

இடுப்பில் நழுவவிருந்த லுங்கியை சரி செய்து கட்டிக் கொண்டே, அடுத்த அறையின் ஓரத்திலிருந்த பாத்ரூம் சென்றார். உள்ளே நுழையும் போதே, வலப்புறச் சுவரிலுள்ள சுவிச்சை ஆன் செய்தார். பாத்ரூம் விளக்கின் வெளிச்சம் ஹால் வரை நீண்டு தரையில் படிந்தது.

அங்கே, மாமா, அத்தை, மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

முகத்தைக் கழுவி வாயைக் கொப்பளித்து விட்டு டவலால் முகத்தைக் துடைத்துக் கொண்டே ஹாலிற்குள் வந்தார். அவ்வறையின் மேற்குச் சுவர் அவ்வீட்டின் பட்டாசல் மாதிரி. தாத்தா காலத்திலிருந்து பேரன் காலம் வரை எல்லோர் போட்டோவும் அங்கே தொங்கிக் கொண்டிருக்கும். அதில் தேசத் தலைவர்களும் உண்டு.

அதிலொரு போட்டோ ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த தன் சட்டையை எடுத்தார். அந்தப் போட்டோவில் அவர் மனைவி குழந்தைப் பருவத்தில் சிரித்துக் கொண்டிருந்தார். அவரையறியாமல் மனதுக்குள் ஒருவித மகிழ்ச்சி. திரும்பிப் பார்த்தார். அத்தையருகில் தன் மனைவி சுருண்டு படுத்திருப்பது, இப்போதும் அவருக்குக் குழந்தையாகவே தெரிந்தது.

சட்டையை மாட்டிக் கொண்டு, தன் செல், டி.வி. அருகிலிருந்த டார்ச் லைட் இரண்டையும் எடுத்துக் கொண்டு வெளியே போகத் தலைவாசல் கதவைத் திறந்தார்.

“மருமகனே, தொணக்கி அவன வேணா எழுப்பிவிடவா?” இருட்டறைப் படுக்கையிலிருந்து மாமாவின் குரல்.

“வேணா மாமா, சும்மா வெளியதான். நானே போயிட்டு வாரேன்” வந்த குரலுக்குப் பதில் சொல்லிவிட்டு, கதவை லேசாக சாத்தியவாறு வெளியே வந்தார்.

வெளித் திண்ணையில், தலை முதல் பாதம் வரை இழுத்து மூடித் தூங்கிக் கொண்டிருந்தான் மாப்ள. அவன் விடும் குறட்டையை ரசித்துக் கொண்டே, வாசலுக்கு வெளியே கிடந்த செருப்பை மாட்டிக் கொண்டு தெருவிற்கு வந்தார்.

*

அரவமற்ற தெரு!

கோழி ஆங்காங்கே கூவிக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் மாடு சோளத் தட்டையை இழுத்து இழுத்து தின்னும் போல! கழுத்துமணி பலமாகவே ஒலித்தது. ஒரு நிமிஷம் நின்னு வடக்குப் பக்கம் பார்த்தார்.

விஜயா பாட்டி முற்றம் தெளித்துக் கொண்டிருந்தார். டார்ச் விளக்கை சொடுக்கி, தெற்குப்புறச் சாலைக்கு வந்தார், அது கொஞ்சதூரம் போய் கயத்தாறு பிரதான சாலையில் சேரும். மண் சாலையாக இருந்த அது, இப்போது சிமெண்ட் சாலையாக மாறியிருக்கிறது. வரிசையாக உள்ள சி.எப்.எல். விளக்குக் கம்பங்களின் வெளிச்சத்தில் சாலை அனாதையாகக் கிடந்தது.

      “காலமே நீ எழுந்து

      கடவுளைத் துதி நன்று

      காலதாமதம் நன்றன்று என் மனமே…”

டி.ஜி.எஸ்.தினகரனின் குரல், வேதக்கோவில் கோபுரத்திலுள்ள ஒலிப்பெருக்கி வழியாக ஊரை எழுப்பத் தொடங்கியது. தன் பாக்கெட்டில் உள்ள செல்லை எடுத்து மெதுவாகப் பார்த்தார்.

இரவில் சில எஸ்.எம்.எஸ்.-கள் வந்து கிடந்தன.

      –  புல் டாக் டைம்

      –  உங்கள் ரேட் கட்டர் முடிய ஒரு நாளே உள்ளது.

      –  பேஸ் புக்கில் புதிய பிரெண்ட் ரிக்கொஸ்ட் .

      –  நேற்று பகலில் கோவில்பட்டி ஏ.டி.எம்.மில் எடுத்த பணத்திற்கு இரவில் வந்து கிடக்கும் செய்தி.

ஒவ்வொன்றையும் பார்த்து விட்டு டெலீட் செய்து கொண்டே மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.

“என்ன அண்ணாச்சி! எப்ப வந்தீக?”

பின்னாலிருந்து குரல்.

திரும்பிப் பார்த்தார். இராமசாமி மகன் ராஜாமணி.

தோளில் மண்வெட்டியும், கையுமாகவும்; மறு கையில் பித்தளைத் தூக்குச் சட்டியுடனும் வந்து கொண்டிருந்தான்.

“வாங்க தம்பி. நான் நைட்ல தான் வந்தேன். வீட்ல எல்லாரும் சுகம் தானே?”

“எல்லாரும் சௌரியந்தேன். மதினி, பிள்ளெக எல்லாம் வந்துருக்காகளா?”

“மதினி வந்திருக்காங்க. பசங்களுக்கு ஸ்கூல் டைம். அதனால வரல.”

“அப்பப்ப கூட்டிட்டு வாங்க. நம்ம சொந்த பந்தம் இன்னாருன்னு அப்பதானே தெரியும்.”

“ஓஎஸ். நிச்சயமா!”

வந்தவர் கடந்து சென்றபின், மீண்டும் கையிலிருந்த செல்லைப் பார்த்தார்.

கான்டெக்ட்ஸ்

சேர்ச்

R…

RU…

RUB…

RUBAN. – பெயர் வர,

டயல் செய்து விட்டு ‘ரிங்’ போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பல்ஸ் ஓட ஆரம்பித்ததும் செல்லை காதில் வைத்தார்.

“ஹலோ! ரூபன்!”

“சார்! குட் மார்னிங். என்ன சார், இவ்ளோ நேரத்துக்கு?”

“குட் மார்னிங் ரூபன், டிஸ்ட்ரப் பண்ணிட்டேனா?”

“நோ நோ, சொல்லுங்க சார்!”

“நான் வொய்ப் ஊருக்கு வந்திருக்கேன். இந்த வில்லேஜில டவர் சரிவர கிடைக்கிற தில்ல. அதான் அதிகாலையிலேயே வெளியே வந்து பேசுறேன். டுமாரோ ஈவ்னிங் நான் இங்கிருந்து சென்னைக்குக் கிளம்பனும், மூனு டிக்கெட் தக்கல்ல போட்டுடலாமா?”

“இவ்ளோதானா? செஞ்சிடுறேன் சார். கன்பாம் ஆனதும், அத உங்க மெயிலுக்கு அனுப்பிச்சிட்டு உங்களுக்குத் தகவல் சொல்லிடுறேன். ம் ம்., மூனு டிக்கெட் யாரெல்லாம் சார்?”

“நானு, வொய்ப், மாப்ள”

“ஓ! அண்ணா அங்க தான் வந்துருக்காங்களா? சரி சார் பன்னிடுறேன்!”

“வேறேதும் விபரம் வேணுமா ரூபன்?”

“வேணாம் சார், உங்க புரூப் தான் என்ட்ட இருக்கே. நானே பாத்துக்கறேன்”

“தேங்ஸ் ரூபன்”

“நல்லது சார்!”

செல்லை பாக்கெட்டில் போட்டார்.

பைபிளில் உள்ள ஏதோ ஒரு பகுதியை, யாரோ ஒருவர் வாசித்துக் கொண்டிருப்பதை  வேதக் கோவில் ஒலிப்பெருக்கி சொல்லிக் கொண்டிருந்தது. அதைக் கேட்டுக் கொண்டே, தெருவிளக்கின் மிதமான வெளிச்சத்தில் அந்த சாலையில் கொஞ்ச தூரம் சென்றார்.

புதிதாகப் பழுக்கத் தொடங்கும் மாம்பழத்தின் நிறம் போல கிழக்கே அடி வானத்தில் செந்நிறம் பரவத் தொடங்கியது.

*

“பர்ர்ர்ரட் பர்ர்ர்ரட் பர்ர்ர்ரட்…”

முக்காடு போட்டு தூங்கிக் கிடந்தவன் தடபுடலாக எழுந்து பார்த்தான். அப்பா திண்ணையில் உக்கார்ந்து கொண்டு அவரின் கெண்டைக் காலை மொட்டக் கத்தியால் பரண்டிக் கொண்டிருந்தார்.

“இது காலா? இல்ல காஞ்சு போன கம்பா? இத இந்தப் பிராண்டு பிராண்டுனா என்னத்துக் காகும்?”

“ஏலேய்! ஊரல் உசிரப் பிடுங்குது. இப்பிடி ரெண்டு இழுப்பு இழுத்தாத்தான் சொகமா இருக்கு?!”

“வெளங்கும். செய்யாதீகனு சொன்னா கேக்கவா போறீக?” சொல்லிக் கொண்டே படுக்கையை மடித்து வீட்டிற்குள் எடுத்துச் சென்றான். அக்கா நடு ஹாலில் உட்கார்ந்து கொண்டு, ஆவி பறக்கக் காபியை ஆத்தி வரிசையாக வைத்திருந்த டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“ஏல தம்பி! இத அப்பாவுக்கும் அத்தானுக்கும் எடுத்துக் கொடுடா.”

அவன் அதை எடுத்து, பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த அத்தானுக்கும், காலை பிராண்டிக் கொண்டிருந்த அப்பாவுக்கும் கொடுத்து விட்டு வந்தான்.

“இந்தாடா உனக்கு!”

காபி டம்ளரை கையில் வாங்கிக்கொண்டு, “அத்தானு! இதெல்லாம் என்ன காப்பி? இந்த ஊருல பொன்னையாக் கோனாருனு ஒருத்தர் காப்பி கடை வைச்சிருந்தாரு. அவரு காப்பி போட்டா ஊரே மணக்கும்.

இந்த ஊர்க்காரங்க காலையில எந்திரிச்சதும், முகத்தக் கழுவி பல்லு தேய்க்கிறதே அவரு கடையிலதான். இதுக்காகவே, அவரு ‘பிரகாஷ்’ பல்பொடி பாக்கெட் பாக்கெட்டா வாங்கிப் போட்டிருப்பாரு. அதிலும் அவரு பார்சல் காப்பி கொடுத்து விடும் அழகே தனி. சுடச் சுட போட்ட காப்பிய டம்ளருல ஊத்தி வட்டகைக்குள்ள தலைகீழாக் கவுத்திடுவாரு பாருங்க;  நாம போயி எடுக்குற வர அந்தச் சூடு அப்பிடியே நிக்கும்.”

பேப்பர் படிக்கிற அத்தானு இதையும் கேட்டுக் கொண்டார்.

“இந்த ஊரு மேலப் பள்ளிகூடத்துல இருந்த ஐயர் வாத்தியாரு அத வாங்கி வரச் சொல்லி குடிப்பாரு. கவுத்திருந்த டம்ளரை எடுத்தவுடனே வகுப்பே காப்பியா மணக்கும். ம்! அத இப்போ நெனச்சாலும் தொண்டக் குழிக்குள்ள டேஸ்ட் வந்து போகுது தெரியுமா?”

வீட்டுக்குள்ளிருந்த அக்கா,

“அப்ப, உனக்குக் காப்பி வேணாமாடா?”

“வேணும் வேணும்! இதக் குடிச்சாத்தானே கக்கா ஒழுங்காப் போவுது.”

“எம்மா, இந்தப் பயலுக்கு இனி காப்பியே கொடுக்காத!” சொல்லிக் கிட்டிருக்கும் போதே,

“அத்தானு, சீக்கிரம் கிளம்புங்க. இன்னைக்காவது கிணத்துல நல்லா நீச்சலடிச்சுக் குளிச்சுட்டு வருவோம்.”

*

பட்டன் மாட்டாத சட்டை; அதுக்குமேல கழுத்துல வளச்சுப் போட்ட துண்டு; ஒரு கையில் சோப்பு டப்பா; மறு கையில் குளோசப் பேஸ்ட்டை பிதுக்கி வைத்திருக்கும் பிரஷ். இவை சகிதமாக வாசலில் நின்றுகொண்டு,

“அத்தானு போகலாமா?” என்று கேட்டான்.

கண்ணாடி முன் நின்று தலையைப் பக்குவமாகச் சீவி; சட்டையின் கடைசிப் பட்டன் வரை மாட்டிக் கொண்டு; துண்டை கையில் மடிச்சி எடுத்துக் கொண்டு வந்தார் – அத்தான்.

இருவரும் கிழக்கு நோக்கி நடையைக் கட்டினர். எதிர்பட்டவர்கள் எல்லாம் குசலம் விசாரித்துக் கொண்டனர். ஆள் தெரியாத நாய்கள் மட்டும் குரைத்தன. வீட்டுக்காரர்கள் வருவது யாரென்று எட்டிப் பார்த்து நாயை அதட்டிக் கொண்டனர்.

அந்தத் தெரு முனையை அடைந்த போது,

“அத்தானு, இது தான் இந்த ஊரு சாதிசனங்க மடம். ஒரு காலத்துல இங்க வரும் அசலூர்க்காரங்க தங்கி ஓய்வெடுத்திட்டுப் போற எடமா இது இருந்திருக்கு. எனக்கு வெவரந் தெரிஞ்ச நாளுல, இது பள்ளிகூடமாத்தான் இருந்துச்சி. அதனால எல்லாரும் இத, ‘மடத்துப் பள்ளிக்கூடம்’னுதான் சொல்வாங்க. இங்க நான் ஒன்னாப்பு படிச்சேன். அப்ப ‘வலச வாத்தியாரு’ன்னு ஒருத்தர் இருந்தார். அவருக்கு சொந்த ஊரு வலசை.  அதனாலதான் அந்தப் பேரு. காலையில வந்ததும் எங்களுக்கு அவர் சொல்ற மொத வேலயே, “சீனிக்கல்லப் பெறக்கிட்டு வாங்கடா”ங்கிறதுதான்.”

“சீனிக்கல்லா? அதெதுக்கு?”

மடத்துத் தரையில “அ,ஆ,இ…” னு எல்லா எழுத்தையும் வரிசையா, சாக்பீசால பெரிசு பெரிசா எழுதி வெச்சிருப்பார். நாங்க பெறக்கிட்டு வந்த சீனிக்கல்ல அது மேல வரிசையா வெச்சு அந்த எழுத்தப் படிச்சுக் காட்டனும். பின்னே, அடுத்த அடுத்த எழுத்துக்கு மாறிக்கணும். அப்பிடி!”

“நைஸ்! இது வேற ஒன்னுமில்ல, இன்னைக்கு கவர்மென்ட் சொல்ற ‘செயல்வழிக் கற்றல்’ முறையத்தான் அவர் அன்னைக்கே செய்திருக்கார். எக்ஸலெண்டு!”

“ம்! இப்போ இங்க பள்ளிக்கூடமும் இல்ல; அந்த வாத்தியாரும் இல்ல. அந்தக் காலமெல்லாம் போச்சு!”

*

வேதக் கோவிலக் கடந்து கிழக்காகப் போகும்போது இடப்பக்கம் ஒரு தெரு தெரிந்தது. ஒரு கணம் நின்று, “அத்தானு அதோ அந்த வளைவில தெரியுது பாருங்க ஒரு வீடு, அத மட்டும் பார்த்துக்கோங்க.”

“ம்”

நடையைத் தொடர்ந்தனர்.

“அந்த வீட்டுல ‘லட்சுமி’னு ஒரு அம்மா இருந்தாங்க. அவங்கள லட்சுமினு சொன்னா யாருக்கும் தெரியாது.

“பின்னே?”

“வருசப் பிள்ளைக்காரினு எல்லாரும் சொல்வாங்க”

“அப்படின்னா?”

“அதாவது, நான் ஆறாப்புப் படிக்கும் போதே அதுக்கு ஏழெட்டுப் பிள்ளைக. வருச வருசம் பிள்ளை பெத்துக்கிறதனால அந்தம்மாவ எல்லாரும் வருசப் பிள்ளைக்காரின்னு கூப்பிட ஆரம்பிச் சுட்டாங்க! சில பேரு, அவங்க வீட்ல வரிசையா பிள்ளைக இருக்கிறதால வரிசைப் பிள்ளைக்காரினும் சொல்லுவாங்க.”

“வெரி இன்ட்ரஸ்டிங்”

“இதுல ஒரு சுவாரஸ்யம் என்னென்ன? அந்தம்மாவோட மூத்த பிள்ளைக, ஒரு கட்டத்துல இந்தம்மாவுக்குப் பிரசவம் கவனிச்சாங்கன்னா பார்த்துக்கோங்களேன்!”

அத்தான் விழியில் ஆச்சர்யம் பிதுங்க, ஒரு முறை அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.

“லெட்சுமி மாதிரி திட உடம்பு இன்னிக்கு யாருக்கிருக்கு? அதனாலதான், மாலு மாதிரி ஆஸ்பத்திரிங்க ஊரு ஒலகத்துல அதிகமாகிட்டே வருது! ம், இது மட்டுமா மாறிப் போச்சு?” மாப்ள சலித்துக் கொண்டான்.

*

ஊர் கடைசியில் கீழத்தெரு முடியும் இடத்திற்கு இருவரும் வந்தனர். அங்கிருந்து வடக்குப் பக்கம் பார்த்தால் கடைசியில் ஒரு நீண்ட சுவரு தெரிந்தது. அது கிருஷ்ணசாமி வீட்டுச் சுவரு.

“அங்க பாத்தீங்களா அத்தானு?”

“என்னது?”

“அதான்! அந்தச் சுவரு”

“ம்! அதுக்கென்ன?”

“பாத்துக்கோங்க, அதப்பத்தி சொல்லுதேன்.”

வந்த தெருப்பாதை ஊரைக் கடந்து தோட்டங்களுக்கு இடையே சென்றது. இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே நடந்தனர்.

“இந்த ஊருல நாட்டாமக்காரு வீடுன்னு ஒன்னு இருந்துது. எனக்குத் தெரிஞ்சு அவங்க குடும்பத்துல யாரும் நாட்டாமயா இருந்ததப் பாத்ததில்ல. இருந்தாலும், வெள்ளக்காரன் காலத்துல அந்த வீட்டுல யாரோ ஒருத்தரு நாட்டாமயா இருந்திருக்காங்க போல. அதனாலேயே இன்னிக்கு வரைக்கும் எல்லாரும் அது நாட்டாமக்காரு வீடுன்னு தான் சொல்லுதாங்க. அவங்க வீட்டு வாரிசா ஒருத்தர் இருந்தாரு. அவரு பேரு உக்கிரபாண்டி.

ஆளு கட்டுமஸ்தான காள மாதிரி! கலரு கொஞ்சம் கம்மினாலும் மடிப்பு விலகாத வெள்ள வேட்டி, வெள்ள சட்டை போட்டுக்கிட்டு சும்மா ஜெகதாண்டமா வருவாரு. ரெண்டு பக்கக் கேராவும் கொஞ்சம் நரைச்சிருந்தாலும், அதுக்கான சாயம் பூசிக்கிற வழக்கமெல்லாம் அவருக்குக் கிடையாது. சேக்குச் சீவி வரும் போது ரஜினிக்கு நெத்தியில சரிஞ்சி விழுற முடிக மாதிரி அவருக்கும் சரிஞ்சி விழும். மீச ரெண்டு பக்கமும் வீச்சறுவாளக் கவுத்திப் போட்டாப்ல இருக்கும்.

கட்டியிருக்கும் வேட்டியப் பின்னங்காலால தூக்கிவிட்டு, கையாள பிடிச்சுகிட்டு, இன்னொரு கையாள மீசைய முறுக்கி விட்டுக்கிட்டே வருவாரு. அவரு தெருவுல நடந்து வர்றதப் பாத்தா சிறுசுல இருந்து பெருசுக வரைக்கும் திரும்பிப் பாப்பாங்க. சாயங்காலம் ஆச்சுன்னா கிழக்க படப்புல மறைச்சு வெச்சிருக்கிற சாராயத்த வாங்கிக் குடிச்சிட்டு மீசய நீவி விட்டுக்கிட்டே வருவாரு!

வந்து, நான் சொன்னேனே அந்தச் சுவருப் பக்கம் நிப்பாரு. அவர் நிக்கிறதே தனி ஸ்டைலுதான். ஒரு காலத் தரையில ஊனிக்கிட்டு, இன்னொரு காலப் பின் பக்கமா மடிச்சு அந்தச் சுவருல மிதிச்சி அடக் கொடுத்துக் கிட்டு, சாஞ்சி நிப்பாரு. கையில புகையக் கக்கிக்கிட்டு சிகரெட்டு இருக்கும். புருவம் வர சரிஞ்சி விழும் முடிய அப்பப்ப மோதிர விரல் தெரியிற மாதிரி வலது கையால மேலாக்கக் கோதி விட்டுக்குவாரு.”

“ஆமா, அவரு ஏன் அங்க நிப்பாரு?”

“அத்தானு, அதாங் ஹாட்ரிக்கு!”

“புரியலியே?”

“சொல்லுதேன், தெனந்தெனம் சாயங்காலம் அவரு அங்க வர்றதே, அங்கிருக்கிற சொக்குத்தாயப் பாக்குறதுக்குத்தான்!”

“என்ன ரொமான்ஸா?”

“ம்! அவரு வந்து நின்னுட்டா, சொக்குத்தாயி என்ன வேல செஞ்சிட்டு இருந்தாலும் அப்பிடியே போட்டுட்டு சேலை முந்தானைய ரெண்டு கையாலையும் சேத்துப் பிடிச்சு திருக்கிக் கிட்டே வந்து நின்னுடுவா! கண்ண உருட்டி உருட்டி அப்பிடி என்னதான் பேசுவாளோ யாருக்கும் தெரியாது. பேசும் போது அவதான் அங்கயிங்க நெளிஞ்சுக்குவாளே தவிர, உக்கிரபாண்டி சுவத்துல சாத்தி வெச்ச வாரியல் கம்பாட்டம் நேராத்தான் நிப்பாரு.

‘சொக்குத்தாயி என்ன சொக்குப்பொடி போட்டாளோ?’னு எல்லாரும் மனசுக்குள்ள சொல்லிக்குவாங்க. யாரு அந்த வழியாப் போனாலும் வந்தாலும் ரெண்டு பேரு கண்ணோ தலையோ கொஞ்சம் கூட எங்கிட்டும் திரும்பாது. போறவங்கதான் கொஞ்சம் தயக்கமாப் போவாங்க. இதனாலேயே, அவங்க அங்கின பேசிட்டு நின்னா அவ்வழியா யாரும் போறதில்ல.

மேல் சாதிக்காரரோட சொக்குத்தாயி சவகாசம் வெச்சிக்கிட்டதால, யாரும் அவகிட்டயோ, இல்ல உக்கிரபாண்டி கிட்டயோ சொல்லிக்க முடியல. இது இப்பிடியே வளந்தது.”

“அவங்க மேரேஜ் பன்னிக்கிட்டாங்களா?”

“அப்புறம், நான்தான் வேலசோலின்னு சென்னைக்கு வந்திட்டேனே! இருந்தாலும், ஊருல நடந்த கலவரத்துல உக்கிரபாண்டி இறந்திட்டதா மட்டும் கேள்விப்பட்டேன். ஆனா, சொக்குத்தாயி என்ன ஆனாங்கிற வெவரந்தான் தெரியல?”

“ஐ திங் அவங்க வாழ்க்கையில ரொமான்ஸ் மட்டுமில்ல, டிராஜிடியும் இருந்திருக்கு! சோ, ஷூயரா அதுக்கு ஒரு ரீசன் இருக்கச் சான்ஸ் இருக்கு!”

“என்ன இருந்து என்ன செய்ய? இன்னிக்கு இந்த ஊரே மாறிப் போச்சே!”

*

அந்த சாலை தெற்குப் புறமாகத் திரும்பும் முன் இடப் பக்கம் இருந்தது பெரியகிணறு. இருவரும் அதன் வாவரைக்கு வந்தனர்.

“ஒரு காலத்துல, மூனு பக்கமும் கமல கெட்டி எறச்ச கெணறு இது. இன்னிக்கு நாலு பக்கமும் ஆயில் மோட்ரா ஆயிடுச்சி?“

அத்தான் உள்ளே எட்டிப் பார்த்தார்.

“இறங்கிறதுக்கு ஸ்டெப்ஸ் சரியில்லியே?”

“ஒன்னும் கவலப் படாதீக! (தெற்குப் புறம் கைய நீட்டி) அதோ தெரியுது பாருங்க மோட்ரு ரூம்பு. அதான் பண்டாரநாடாரு கெணறு. எறங்கி ஏற படி சூப்பரா இருக்கும். தண்ணியும் கண்ணாடியாக் கெடக்கும். வாங்க அங்க போவம்.”

இருவரும் நடையைத் தொடர்ந்தனர்.

ஒரு பக்கம் சோளம் தோள்பட்டை உயரம் வளர்ந்திருந்தது. இந்தப் பக்கம் மிளகாய் தோட்டம். கொத்துக் கொத்தாய் காய்த்திருந்தது. இடையிடையே சிவப்பாய்ப் பழுத்திருந்த மிளகாய்களும் அவர்களை எட்டிப் பார்ப்பதாய் நினைத்துக் கொண்டார்கள். கிழக்கிலிருந்து வீசிய காற்றின் வேகத்திற் கேற்ப சோளப் பயிர்கள் இலைகளை அசைத்துக் கொண்டும் தலையை ஆட்டிக் கொண்டும் இருந்தன. அவைகள் தங்களைக் காண முண்டியடித்து நிற்பதாக மகிழ்ந்து கொண்டே நடந்தார்கள்.

கண்ணுக் கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல்!

கிணற்றை நெருங்கினர்.

அத்தானு உள்ளே எட்டிப் பார்த்தார்.

மலைகோவிலுக்குக் கட்டிய படிகள் மாதிரி இருந்தன. சிலேபி மீன்கள் கூட்டமாக தண்ணீருக்குள் ஆய்ந்து கொண்டிருப்பது மேலிருந்து பார்க்கத் தெளிவாகத் தெரிந்தது.

அதற்குள், சோப்பு டப்பாவையும் டூத்பிரசையும் பூட்டியிருந்த மோட்ரு ரூம்பு படியில வெச்சிட்டு, கழுத்தில் கிடந்த துண்டைத் தலைப்பாகை கட்டிக் கொண்டான் மாப்ள!

“அத்தானு, நீங்க இங்க இருங்க, ஒரு நிமிசம் ‘போயிட்டு’ வந்திடுதேன்.”

“ம்” தலையாட்டிக் கொண்டார்.

லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு தெற்குப் புறம் இருந்த பருத்தித் செடிகளுக்குள் புகுந்தான் மாப்ள. அஞ்சாறு பாத்தி தள்ளிப் போனதும், சுத்தி முத்தி ஒரு பார்வைய வீசிவிட்டு உள்ளே டபக்குனு உக்காந்தான்.

அடி வயிற்றுப் பாரம் கொஞ்சங் கொஞ்சமா குறையத் தொடங்கியது.

முன்னால் இருந்த பருத்திச் செடியப் பாத்துக் கிட்டே ‘இருந்தான்!’

ஒவ்வொரு இலையாகத் தொட்டு, பிடித்துப் பார்த்தான். ஜோதிடம் பார்ப்பவரிடம் கையை நீட்டுபவர் போல பருத்திச் செடி தன் இலைகளை அவனிடம் நீட்டிக் கொண்டிருந்தது.

மஞ்சள் நிறப் பூ, அழகாகப் பூத்து விரிந்திருந்தது. அதன் உள்ளே பித்தக் கையில் மருதாணி ஒட்டியது போன்ற கருரத்த நிறம். அதுக்குள்ள ஏதோ ஒரு எறும்போ குளவியோ இருந்தது? அப்பூவின் பக்கத்திலேயே சிறு சிறு மொட்டுக்கள். அங்கிட்டுச் சின்னச்சின்ன பருத்திக் காய்கள்.

சென்னை நகர, ம்ஹூம்! நரக வாழ்க்கையில தினமும் ரெண்டு தடவ திருவொற்றியூர் டோல்கேட்டுக்கும் வியாசர்பாடி மார்க்கெட்டுக்கும் போயிட்டு வர்றதுக்குள்ள, அய்யய்யய்யோவ்! எத்தன எத்தன சன நெருக்கடி? போதாக்குறைக்கு புழுதி, புகை, தூசி, ஆள அவிச்செடுக்கும் வெயிலு! ம் ம் இந்த இயற்கை அழகெல்லாம் அங்க எங்கிட்டாவது பாக்க முடியுமா?

மன ஏக்கத்தோடு விரலால் செடியின் ஒவ்வொரு அங்கங்களையும் தொட்டு, கண்களால் பசுமையை அள்ளி, மனதில் இருந்த வெற்றிடமெல்லாம் நிரப்பிக் கொண்டிருந்தான்.

அவனுக்குள் எல்லையில்லா மகிழ்ச்சி.

அப்போதவன் வயிறு வெறுமையானது. செடிகளைத் தழுவி தன்னையும் தொட்டுச் செல்லும் மெல்லிய காற்றின் ஸ்பரிசத்தில் மெதுவாக நிமிர்ந்தான்.

எதிரே…

நெடுநெடுன்னு… நெடுமாடு மாதிரி வளந்திருந்த…

நான்கு வேட்டை நாய்கள்!

அவனைச் சுற்றி உட்கார்ந்திருந்தன!?!

நாக்கைத் தொங்க விட்டுக் கிட்டு செடிகளுக்கு மத்தியில் இவை எப்ப வந்து உக்காந்துதுனே அவனுக்குத் தெரியல?!

ஒவ்வொன்னும் இளவட்ட மிடுக்கோடு இருந்தன. பாத்ததும் அவனுக்கு ஒன்னுமே ஓடல. இதயம் படபடத்து வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

கருப்பு மையில குளிச்சு வந்த மாதிரி கருங்கருன்னு அவன் மூஞ்சுக்கு நேரா ஒன்னு. குடிகாரன் கண்ணு மாதிரி லேசான சிவப்புக் கலருல இருந்த அது கண்ணப் பாத்தாலே வில்லத்தனமா தெரிஞ்சுச்சி. காலை சூரிய வெளிச்சத்துல அது ரோமமெல்லாம் மினுமினுத்தது. திறந்த வாயின் பற்கள் எல்லாம் ஜியாகிரபி சானலில் வரும் முதலை வாயை அவனுக்கு ஞாபகப்படுத்தியது.

லேசா திரும்பினா..

இந்தப்பக்கம் வெள்ளையும் காப்பிக் கலருமா இருந்த இன்னோனு வாயை இளித்துக் கொண்டே கொட்டாவி விட்டது. இங்கிலீசுப் படத்துல வர்ற டெவிலுக்கு முளைக்கும் கோரப் பற்களைப் போலவே இருந்தது.

பயத்தில் மெதுவாகத் தலைப்பாகையைக் அவிழ்த்தான்.

ஏதோ செய்யப் போறான்னு நினைச்சுதோ என்னவோ, அவன் செய்கையைப் பார்த்ததும் இடப்பக்கமிருந்த வேறொன்னு காதுகளை விரைப்பாக்கிக் கொண்டு எழுந்து நின்றது.

அவனுக்கோ, வெறும் வயித்துல புளியைக் கரைப்பது போல ஆனான்.

வலப்பக்கமிருந்ததோ சிசிவி காமிரா மாதிரி வச்ச கண் மாறாம அவனயே பாத்துக்கிட்டு இருந்தது.

பாவம் அவன்.. எந்திரிக்க நினைச்சாலோ, தூரத்திலிருக்கிற அத்தானக் கூப்பிட நினைச்சாலோ – அதோ கதிதான்!

‘மெல்லவும் முடியல விழுங்கவும் முடியல’ங்கிறது இது தானோ?

இப்போது அவனுக்குத் தன்னைக் காப்பாத்த எந்தக் கடவுளை கூப்பிடனு தெரியல.

சில நேரம் எலியைப் பிடித்த விளையாட்டுப் பூனை, அதைத் தன்முன் வைத்துக் கொண்டு எங்கிட்டும் போகவும் விடாம; தின்னவும் செய்யாம பாடாப் படுத்தும். அது போல, அவன் இப்போது ஒரு எலியாகிப் போனது போல உணர்ந்தான்.

சென்னை பிரபல கம்பெனியில சேல்ஸ் மானேஜர் உத்தியோகம். எத்தன பேர வெரட்டி வெரட்டி வேலை வாங்கியிருக்கான். ஆனா இன்னிக்கு சொந்த ஊருல கேவலம் இந்த நாய்களுக்கு மத்தியில கூனிக் குறுகி கைதியாட்டம் உக்காந்திருக்கிறத நெனைச்சா அவனுக்கே கேவலமாத் தெரிந்தது!

உடலெல்லாம் வியர்வை ஆறாகக் கொப்பளித்தது. அத்தான் எங்கிருக்கார்னு லேசாக நிமிர்ந்து பார்த்தான். அவரோ கெணத்துப் பக்கத்துல நின்னுக்கிட்டு கையை நீட்டியும் உயர்த்தியும் ஏதோ உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அதுவும் அங்கிட்டாமப் பாத்துக்கிட்டு!

அநியாயத்துக்கு தான் மாட்டிக்கிட்டு முழிக்கிற இந்தக் கொடுமைய யாரிட்டச் சொல்ல? எப்படிச் சொல்ல? கால்களெல்லாம் நடுங்கிப் போக எந்திரிக்க முடியாதவனாய் ஒடுங்கி அப்படியே உட்கார்ந்திருந்தான்.

மெல்லியதாய் வீசிய காற்றுக்கு ஆடிய இலைகளும் பூக்களும் அவனைப் பாத்து ‘மாட்டிக்கிட்டியா? மாட்டிக்கிட்டியா?’ என்று நகைப்பது போலத் தெரிந்தது.

திடீரென…

பக்கத்துத் தோட்டத்துப் பொழியிலிருந்த பனைமரத்தில் காய்ந்து தொங்கிய ஓலை மட்டை சலசலத்துக் கீழே விழுந்தது.

சம்பளத்துக்கு வெச்ச கணக்குப் பிள்ளைய மாதிரி அவனைச் சுத்தியிருந்த நாலு பிசாசுகளும்; அதான், அந்த நாலு நாய்களும் நாலுகால் பாச்சலுல சத்தங் கேட்ட தெசைய நோக்கி ஓடின.

இதான் தாமசம்!

எந்தச் சாமி புண்ணியமோ! தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு நெனச்சவன் வரப்புலயும் பாத்தியிலுமா தாவித் தாவி அத்தானிருந்த இடத்துக்கு மூச்சு இறைக்க ஓடிவந்தான்.

வெவரந் தெரியாத அத்தானு,

“என்ன மாப்ள ஜாக்கிக் ஏதும் போனியா?”னு கேட்டார்.

“நா… உசிரக்… கையில பிடுச்சிட்டு… ஓடியாந்திருக்கேன். ஜாக்கிங்கா..?” மூச்சும் பேச்சுமா சொன்னான்.

“யேன் என்னாச்சி? ஏதும் வைல்டு அனிமெல்ஸ்?”

வாங்கிய பெரும் மூச்சால் நிக்க முடியாதவனாய், மெதுவாகச் சென்று மோட்ரு ரூம்பு தொட்டி விளிம்புல போய் உக்கார்ந்தான்.

“அத்தானு! இந்த ஊருல… அது மாறிப் போச்சு… இது மாறிப் போச்சுன்னு சொன்னேன். ஆனா.., இங்க இருக்கிற… தாயேலி நாய்க மட்டும்… இன்னும் மாறவே இல்ல!”

“என்ன மாப்ள சொல்லுத?”

மூச்சு இறைக்க இறைக்கச் சொன்னான்,

“கொஞ்சம் பொறுங்க… தவிப்பாறிட்டு சொல்லுதேன்.”

* * *

Advertisements