RSS

Monthly Archives: திசெம்பர் 2013

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

அசின் சார், கழுகுமலை.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

எனக்கு நடுநிலைப் பள்ளி மாணவ வயது இருக்கும்.

அப்போது, கழுகுமலை மற்றும் பக்கத்துக் கிராமங்களிலுள்ள கோவில் திருவிழாக்களில் நடைபெற்ற நாடகங்களை விரும்பிச் சென்று பார்த்திருக்கிறேன். அதில் அரசர் நாடகங்களும் உண்டு; சமூக நாடகங்களும் உண்டு. அம்மேடைகளில் தோன்றும் ஒப்பனை மாந்தர்களும், காட்சிகளுக்கேற்ப மாற்றும் திரைச் சீலைகளும் அந்த வயதில் பார்ப்பதற்குப் புதுமையாக இருந்தது.

ஒரு சமயம் செட்டிகுறிச்சி மொட்டைக் கோவிலைக் கட்டுவதற்கு வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரர்கள் ஒரு பஸ் நிறைய வந்திருந்தனர். ஒருநாள் இரவு, அவர்கள் செட்டிகுறிச்சி தெரு முனையில் இயேசுவின் சிலுவை மரணத்தைத் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள். அதைப் பார்த்து அச்சிறுவயதில் என் ஈரக்குலையே பதறியது. அந்த அளவிற்கு எதார்த்தம். அந்த அதிர்ச்சி நிகழ்வு என் மனதிலிருந்து கலைய நெடுநாள் பிடித்தது. நடந்தது நாடகமென்றாலும் அதை நிஜமாகவே பாவித்த வயது அது. இப்போது நினைக்கிறேன், நான் பார்த்த முதல் வீதி நாடகம் அதுதான்!

கழுகுமலை, ஆர்.சி.சூசை உயர்நிலைப் பள்ளியில் படித்த போது ஆறுமுகம் என்ற ஆசிரியர் ‘ரொட்டித்துண்டு’ என்ற ஓரரங்க நாடகத்தை நிகழ்த்தினார். அதில் நடித்த மாணவர்களுள் நானும் ஒருவன். திரைச் சீலை இல்லை; ஒப்பனை இல்லை; பொருட்கள் ஏதும் பயன்படுத்த வில்லை. நடிப்பும் பாவனையும் மட்டுமே கதையையும் உணர்ச்சியையும் பார்வையாளனிடம் கொண்டு சேர்த்தது. இது இன்னொரு புது வடிவ நாடகமாகப் பட்டது.

அந்நாட்களில் கோவில் கொடைவிழாக்களுக்கு அழைத்து வரப்படும் கரகாட்டங்களில், ‘குளத்தூர் ஆட்டக் குழு’வினரின் நிகழ்வு வித்தியாசமானது. ஏனெனில், கொஞ்சங்கூட பிசகாமல் பேசும் வட்டார வழக்கு மொழியுடன், மக்களின் மூட நம்பிக்கைகளைத் துணிந்து சாடும் அவர்களின் கலைத்திறன் என்னை மிகவும் வியக்க வைத்த மற்றொன்று.

பின்பொருமுறை, நெல்லையில் விவிலியம் சார்ந்த ஒலி ஒளிக் காட்சி நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு நிகழ்வுத் தளங்களைக் கொண்ட அந்நிகழ்வு அதுவரை நான் கண்டிராத புது விதம்.

கோவில்பட்டி வருடாந்திரப் பொருட்காட்சியில் நடைபெறும் எம்.ஆர்.ராதா நாடகம் முதல் சோ.ராமசாமி, கோமல் சுவாமிநாதன், ஆர்.எஸ்.மனோகர் என்று என் தேடல் விரியத் தொடங்கியது.

கல்லூரி நாட்களில் செய்யுள் நாடகம் தொடங்கி சுதந்திரப் போராட்ட கால நாடகங்கள், திராவிடக் கழக நாடகங்கள், துப்பறியும் மற்றும் நகைச்சுவை நாடகங்கள் என்று தேடித் தேடி படித்ததுண்டு. திரைப்படங்களாக வந்த நாடகங்களையும் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை.

சேவியர் கல்லூரியில் படித்த காலத்தில், அங்கு ஐக்கஃப் என்றொரு மாணவர் இயக்கம் இருந்தது. அதிலுள்ள மாணவர்கள் நிகழ்த்திய அணுஉலை, எய்ட்ஸ், எழுத்தறிவு – பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகங்கள், வேறொரு கோணத்தைக் காட்டின.

சென்னை தொலைக்காட்சி – கொடைக்கானல் ஒளிபரப்பு ஆரம்பித்த பின்னர், தேசிய நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் நாட்டிய நாடகங்கள் வேறெங்கிலும் கண்டிராத மற்றொரு புதுப் படைப்பாக இருந்தன. இன்னும்…

“வியாபாரமாயணம்” - நவீன நாடகம்

திருச்சி கலைக்காவிரி குழுவினரின் பலவித நாடகங்கள்…

கலைஇரவு மேடைகளில் தாமிரபரணி கலைக் குழு (சங்கரன்கோவில்) நடத்திய எளிமையும் எதார்த்தமும் கொண்ட வீதி நாடகங்கள்…

கல்லூரி மேடைகளில் மாணவர்கள் நடத்திய ‘Miming’ நிகழ்வுகள்…

இந்த வரிசையில் 2003-ஆம் ஆண்டு கோவில்பட்டியில் முனைவர் மு.ராமசாமியின் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ என்ற நாடகத்தைப் பார்த்தேன். அது நாடகத்தை வேறொரு பார்வையில் பார்க்கச் சொன்னது. அதன்பின் மு.ரா. பற்றியும், அவருடைய படைப்புகள் பற்றியும் எப்போதும் என்னுள் சிறு தேடல் உண்டு.

கடந்த வாரங்களில் மு.ரா.வின் ‘வியாபாரமாயணம்’ என்ற நவீன நாடகம் தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வந்தது. பாளை, தூய சேவியர் கல்லூரியில் இந்நாடகம் கடந்த 17.12.2013 அன்று நிகழ்ந்தது. பேரா.சிவசு அவர்கள் என்னை அழைத்திருந்தார். சென்றிருந்தேன்.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

நாடகத்தைப் பற்றி சொல்லும்முன் முதலில்…

பேரா.மு.ரா. பற்றி:

சொந்த ஊர் : பாளையங்கோட்டை

1971-ல், பாளை – தூய சேவியர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பட்டப் படிப்பு புதிதாகத் தொடங்கிய போது, முதல் தொகுதியில் ( First batch) பயின்ற மாணவர்களில் இவரும் ஒருவர். பேராசிரியர்கள் தே.லூர்து, சிவசு, பொ.செ.பாண்டியன் ஆகியவர்களின் மாணவர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், “தோல் பாவை நிழற் கூத்து” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். இதற்காக இவர் பாவைக்கூத்து நிகழ்த்துக் கலைஞர்களுடன் இரண்டாண்டுகள் கூடவே தங்கியிருந்து, அவர்களோடு வாழ்ந்து ஆய்வு நடத்தியுள்ளார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். செம்மொழி குறித்த ஆய்வுக்காக தமிழக அரசால் சென்னைக்கு அழைக்கப்பட்டு உள்ளார்.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

மதுரையில், ‘நிஜ நாடகக் குழு’வைத் தொடங்கி பல நாடகங்களை நிகழ்த்தியவர். குறிப்பாக இவர் நிகழ்த்திய, துர்க்கிர அவலம்(1984), சாபம்! விமோசனம்?(1987), ஸ்பார்டகஸ்(1989), இருள் யுகம்(1994), முனி(1995), கலிலியோ(1999), கட்டுண்ட பிராமிதியஸ்(2002), கலகக்காரர் தோழர் பெரியார்(2003), தோழர்கள், வலியிருப்பு போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் முதல் தென் மண்டல நாடக விழாவில் இவருடைய ‘துர்க்கிர அவலம்’ நாடகம் நடத்தப்பட்டது. அதில் பிற மாநிலத்தவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்ற இந்நாடகம், தேசிய நாடக விழாவிற்கும் தேர்வானது.

இவ்வாறு, இவர் நாடகத் துறையோடு கொண்ட வாழ்க்கை நாற்பது ஆண்டுகால நீளம் கொண்டது. இதோடு, தன் ஆசைக்குக் கொஞ்சம் சினிமாவையும், கொஞ்சம் விவரணப்படத்தையும் தொட்டுக் கொண்டவர்.

இனி நாடகம் பற்றி:

அழைப்பிதழில் நிகழுமிடம் சேவியர் கல்லூரியிலுள்ள ‘இலயோலா அரங்கம்’ என்று குறிப்பிட்டிருந்தாலும், நிகழ்வானது அரங்கத்திற்கு வெளியே தரையில் மரங்களுக்கிடையே நிகழவிருந்தது. காட்சித் தொடர்பியல் மற்றும் தமிழ்த் துறை மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் என்று சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். அவர்களில் பேரா.பொ.செ.பாண்டியன், வண்ணதாசன், தொ.பரமசிவம், பேரா.கட்டளைக் கைலாசம், அருட்தந்தை லூர்துசாமி, நாறும்பூநாதன் போன்றோரும் இருந்தனர்.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

அருகிலிருந்த முகம், தெரியாத அளவிற்கு மாலை இருள் வெளிச்சத்தை விழுங்கியதும், மின்னொளியில் நிகழ்வு தொடங்கியது. நெல்லை மணிகண்டன் வாத்திய இசை ஒலிக்க, மு.ரா.வும் கூத்துப் பட்டறையைச் சேர்ந்த ஆனந்தசாமியும் களத்தில் தோன்றினர்.

ஆயாசமாக வந்த ஆனந்தசாமி, ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு தலைக்கும் கைக்கும் ஒரு வெள்ளைத் துண்டை வளைத்துப் போட்டார். அது ‘விநாயகர்’ என்று பார்வையாளன் புரியும் போதே, ஏதோ ஒன்றை வித்தியாசமாக நிகழ்த்தப் போகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

‘ஆத்திகம், நாத்திகம்’ என்று ஆரம்பித்து, ‘அறிவா புனைவா?’ என்று பட்டிமன்றத் தலைப்பு போல வினா அமைத்து மாற்றி மாற்றிப் பதிலளித்து கருத்தை வளர்க்கிறார்கள். அதிலிருந்து சமகால சமூக, அரசியல் சூழல்கள் அனைத்துமே வியாபாரமாயின என்பதை எள்ளலோடு நகர்த்துகிறார்கள். அவ்வப்போது பயன்படுத்தும் Caption போன்ற சொற்றொடர்கள் சமூக அவலச் சுட்டிகளாக இருக்கின்றன. தொடர்ந்து ‘ஞெகிழி’ என்ற சொற்பதத்தை அறிமுகம் செய்கின்றனர். மனிதன் இயற்கையை அழித்து எல்லாம் செயற்கையான பின் உணவு மட்டும் என்ன வாழுது? அதுவும் ஞெகிழி ஆகிவிட வேண்டியதுதானே? இது தான் நாடகத்தின் முடிச்சு! ஞெகிழியைப் புனைவால் விளம்பரப்படுத்தி, அறிவால் வியாபாரமாக்குகிறார்கள். அறிவும் புனைவும் இயைந்த ராமகதை போல வியாபாரமும் ஆனதால், இது ‘வியாபாரமாயணம்’ ஆயிற்று! இதுதான் கதை.

அசை போட்டவை: “ + ”

மு.ரா., ஆனந்தசாமி இருவர் மட்டுமே நடிகர்கள்; இசைக்கு நெல்லை மணிகண்டன். இவர்களோடு ஐம்பது நிமிட நாடகம் நேரம் போனதே தெரியவில்லை. அந்த அளவிற்கு நாடகத்தைக் கொண்டு செல்கிறார்கள். இதை ராஜீவ் கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார்.

ரோஜா பாக்கு விளம்பரத்தில் முகங்கள் மாறுவதைத் திரையில் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு நம் கண் முன்னே உலவிக்கொண்டிருக்கும் இருவரும் திடீரென வேறு வேறு பாத்திரங்களாக மாறி வியக்க வைக்கிறார்கள். கொஞ்சமும் செயற்கை கலவாத மு.ரா.வின் நடிப்பு நம்மை வெகுவாகக் கவர்கிறது. 62-வயதுப் பெரியவராக இருந்தாலும், அவரது கால்களிலோ குரலிலோ தளர்வு இல்லை. வெட்ட வெளியில் மைக் இல்லாமல் பலத்த குரலில், பின் வரிசையில் இருப்பவர்களுக்கும் கேட்குமாறு பேசுவது எளிதானதல்ல.

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

இந்நாடகத்தைப் பொறுத்தவரை இருவருக்கும் பிரமாதமான ஆடையென்று ஏதுமில்லை. சர்கஸில் பபூன் போடும் ஆடை; அது நிகர்ப்ப ஒப்பனை. அவ்வளவுதான். களமும் காட்சியும் ஒன்றாக இருப்பதால், அவர்களின் நடிப்புத் திறத்தாலே களமும் காட்சியும் மாறுபடுகிறது. இது புதுமை என்பதை விட, அவர்களின் அனுபவத் திறமை என்பதே சரியாக இருக்கும்.

இந்நாடகத்தில் பயன்படுத்திய பொருட்களை மிக எளிதாக வரிசைப்படுத்தி விடலாம். ஒன்றுக்குள் ஒன்றாக நுழையும் மூன்று ஸ்டீல் ஸ்டூல்கள். ஒரு மர  ஸ்டாண்டு, உருவினால் தனித் தனியாக வருகிறது. ஒரு குடைக் கம்பி, தொப்பி, கூலிங் கிளாஸ், வெள்ளை துண்டு, பிளாஸ்டிக் அங்கி, கொஞ்சம் பிளாஸ்டிக் கயிறு, பாட்டம் இல்லாத ஒரு லிட்டர் பிளாஸ்டிக் வாட்டர் கேன் – இவ்வளவுதான்.

அசை போட்டவை: “ – ”

வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் இரண்டிலும் பயணப்பட்ட மு.ரா., இந்தக் கதையை எந்தக் களத்திலும் நடிக்கும் விதமாகவே அமைத்திருக்கிறார். அதற்காக இது முருகபூபதியின் நாடகக் களமாகி விடாது. ஞெகிழி என்று ஆரம்பித்த பின் அதை விளக்குவதற்காக எடுத்துக் கொண்ட நேரம் நாடகப் பகுதியில் பெரும்பான்மையை விழுங்கி விடுகிறது.

கல்லூரியில் நடத்தப் பெறும் விளம்பரப் போட்டிகளில், மாணவர்கள் ஒரு பொருளை அல்லது சினிமாவை நையாண்டியுடன் விளம்பரப்படுத்துவார்கள். இந்நாடகத்தில் ஞெகிழி பற்றிய பகுதி அத்தகையதே!

‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்

சமகாலப் பிரச்சினைகளாக, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது, பன்னாட்டு நிறுவன வணிக நுழைவு, விளைநிலம் விலை நிலமானது என்று எட்டியவரை பேசினாலும்; ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் பிரளயன் உருவாக்கிய வீதிநாடகத்தில் உள்ள அழுத்தம் இதில் ஏனோ இல்லை.

நாடகத்தில் சொல்லப்பட்ட புனைவு, ஞெகிழி விஷயத்தில் அதிகமாகி விட்டது. இவ்விடத்தில் பார்வையாளன் சமகால வேதனைகளை அறிவால் புரிந்து கொள்ளாமல், வெறுமனே நகைத்து விட்டுச் சென்றால், அது படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கும் ஏமாற்றமே!

இறுதியாக…

இவை ஒரு புறமிருக்க, இன்றைய சூழலில் எண்ணற்ற மின்திரைக்குள் (தொ.காட்சி, கணிப்பொறி, செல், டேப்லெட்,…) சிக்கித் தவிக்கும் இளைய தலைமுறையினருக்கு இப்படிப்பட்ட நிகழ்வுகளை முன் நிகழ்த்திக் காட்டுவது மிக மிக அவசியம். இது அவர்கள் சிந்தையில் பற்பல சமூகநலச் சாளரங்களைத் திறந்து விடும்.

இந்த நம்பிக்கையோடுதான், பேரா.சிவசு அவர்களின் ‘மேலும்’ அமைப்பு கல்லூரிகளோடு கை கோர்த்து தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இன்னொருபுறம், பேரா.மு.ரா. அவர்கள், ஒரு யாத்திரிகனைப் போல தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகிறார். தமிழ் மொழி, நாடு, பண்பாடு, கலை, கலாச்சாரம் என்று நாளும் கவலை கொள்ளும் இவ்விருவருக்கும் தமிழ்ச் சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

* * *

இணையத்தில்: “வியாபாரமாயணம்” – நவீன நாடகம்