RSS

Monthly Archives: நவம்பர் 2013

தொட்டில்

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

தொட்டில்

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

பதிவு : 7

‘தொட்டில்’ என்பது மிக மிக எளிதான, அதே நேரம் அதிக சுகமான ஒரு படுக்கை. இது சிறு குழந்தைகளுக்கு மெத்தையிலும் மேலானது. தாயின் மடியில் படுத்திருப்பது போன்ற தன்மையது. தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பு போன்ற சிறு பூச்சிகளிடமிருந்து பாதுகாப்புத் தருவது. தொட்டிலின் இடையே வைக்கப்படும் தொட்டில் கம்பை சரித்து வைத்தாலோ அல்லது எடுத்து விட்டாலோ ஈ, கொசு, குளிர்காற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும். சிறு குழந்தைகளுக்கு இதை விட சிறந்த படுக்கை இல்லையெனக் கூறலாம். ஒரு கயிறும், வேஷ்டி அளவிற்கு நீளமுள்ள துணியும் இருந்தாலே போதும்; தொட்டில் அமைத்து விடலாம். சேலையாக இருந்தால் கயிறு கூடத் தேவையில்லை. சேலையின் இரு ஓரங்களையும் ஒன்றாகச் சேர்த்து முடித்துத் தொட்டில் அமைத்து விடலாம்.

இத்தொட்டிலை அமைப்பதற்குத் துணியும் கயிறுமே முக்கியப் பொருளாக இருப்பதனால், இதை வெளியிடங்கள் அல்லது வெளியூர்களுக்குச் செல்லும் போது, எளிதாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு செல்லலாம். தோட்டவேலைக்குச் செல்லும் தாய்மார்கள் இதை எடுத்துச் சென்று அங்குள்ள ஒரு மரக் கிளையில் கட்டி எளிதாகத் தொட்டில் அமைத்துக் கொள்வர். இத்தொட்டில் அழுக்கானால் துவைத்து சுத்தம் செய்வதும் எளிது. இதன் பயனோ பெரிது, செலவோ சிறிது. காற்றோட்ட வசதிக்காக இடையே விரித்துப் பிடிக்கக் கம்பு வைப்பார்கள். இதைத் ‘தொட்டில் கம்பு’ என்பர். இக்கம்பில் அழகிய வண்ணம் கொண்ட பொம்மைகள், ஒலி எழுப்பும் கிலுகிலுப்பை (கிழுக்கு) போன்றவற்றைக் கட்டித் தொங்கவிடுவர். தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தை கை காலை ஆட்டும்போது அப்பொம்மைகள் அசைந்து ஆடும். அவ்வாறு பொம்மைகள் ஆடுவதும், கிலுகிலுப்பை ஒலி எழுப்புவதும் சிறு குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து பொழுது போக்கு விளையாட்டாக அமையும்.

குழந்தை சற்று வளர்ந்து பெரியதாகி எடை கூடும் போது தொட்டில் கட்டுவதற்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் ‘தொட்டில் வேஷ்டி’யை வாங்கி உபயோகிப்பர். தொட்டிலின் சுகத்தை விட முடியாத பிள்ளைகள் நான்கு, ஐந்து வயதானாலும் கூட இதில் இருபுறமும் கால்களைத் தொங்க விட்டு, உட்கார்ந்து கொண்டு ஊஞ்சலாக ஆடி மகிழ்வர். இத்தொட்டிலானது அன்றையக் காலம் முதல் இன்றையக் காலம் வரை ஏழை பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் சிறு குழந்தையுள்ள எல்லோர் வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காலத்தைக் கணக்கிட்டுக் கூற முடியாத, நம் முன்னோர் வடிவமைத்த இத்தொட்டில், அறிவியல் கண்டு பிடிப்புப் பொருட்கள் எத்தனையோ வந்தாலும் இன்றும் மாறாமலிருக்கிறது. இனி வருங்காலங்களில் எது மாறினாலும் மனித குலம் உள்ள வரை இது மாறாமலிருக்கும்.

தொட்டில்

துணியால் தொட்டில் கட்டி, குழந்தையை அதில் படுக்க வைக்கும் பழக்கம் பழங்காலம் தொட்டு இருந்து வந்துள்ளதை “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்ற பழமொழி மூலம் அறியலாம். மேலும், பட்டினத்தார் பாடல் ஒன்றில் தொட்டில் பற்றிய குறிப்பு வருகிறது. எவ்வாறெனில், அவர் தன் தாயாரின் இறந்த உடலை சிதையில் வைத்து தீ மூட்டும் போது, தன் சிறுவயதில் அவர் எவ்வாறெல்லாம் சீராட்டி வளர்த்தார் என்று கூறி தீ மூட்டுகிறார். அப்போது தொட்டிலில் இட்டு வளர்த்ததையும் கூறுகிறார்.

      “வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

       கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்

       சிறகிலிட்டு காப்பாற்றி சீராட்டும் தாய்க்கோ

       விரகிலிட்டு தீ மூட்டுவேன்” (பட்டினத்தார்)

கவிஞர் கண்ணதாசன் ‘பாத காணிக்கை’ என்னும் திரைப்படத்திற்கு எழுதிய,

      “வீடுவரை உறவு வீதி வரை மனைவி

       காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ”

என்ற பாடலில்,

      “தொட்டிலுக்கு அன்னை

       கட்டிலுக்குக் கன்னி”

என்று தொட்டிலை சுட்டுகிறார்.

(இவ்விடத்தில் இப்பாடலில் வருகின்ற “வீடுவரை .. … கடைசி வரை யாரோ” அடிகளின் கருத்துக்கள்,

      “அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழியம் பொழுக

       மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மிவிம்மி இரு

       கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே

       பற்றித் தொடரும் இருவினை எண்ணிய பாவமுமே”

என்ற பட்டினத்தாரின் பாடலிலிருந்து அடிமாறாமல் அப்படியே கண்ணதாசன் அவர்களால் எடுத்தாண்டது ஒப்பு நோக்கத் தக்கது.)

ஊஞ்சல் தொட்டில் (சிற்றூஞ்சல்):

தொட்டிலும் ஊஞ்சலும் ஒத்த தன்மையுடையவை. கடவுள் கூடத் தொட்டில் தன்மை கொண்ட ஊஞ்சலில் அமர்ந்திருப்பது போன்றும், அயர்ந்து தூங்குவது போன்றும் ஆலயங்களில் அமைத்திருப்பதைக் காண முடிகிறது. மேலும், நம் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான “பிள்ளைத் தமிழ்” இலக்கிய நூலில் அதற்கு இலக்கணமாகப் பத்துப் பருவங்கள் பகுத்துச் சொல்லப்படுகிறது. அதில் கடைசிப் பருவமாக ஊசல் (ஊஞ்சல்) என்ற பருவம் உள்ளது. ஊசல் என்ற இப்பருவத்தில் பாட்டுடைத் தலைவனாக வரும் தெய்வம் அல்லது அரசனை சிறு பிள்ளையாகப் பாவித்து ஊஞ்சல் என்ற தொட்டிலில் இட்டு, பாடி ஆட்டுவதாக அந்நூலில் நாம் காணலாம்.

இவ்வகை ஊஞ்சல் தொட்டில் குழந்தையானது நன்கு உருண்டு புரண்டு படுக்கும் அளவிற்கு நீளம் அகலம் கொண்டதாக இருக்கும். இதைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் குழந்தை உருண்டு கீழே விழாமல் இருப்பதற்காகவும், காற்றோட்ட வசதிக்காகவும் சிறுசிறு இடைவெளி விட்டு, கடைந்தெடுத்த அழகிய மர உருளைகளைக் கொண்டும், அல்லது சிறு பலகைத் துண்டுகளைக் கொண்டும் தடுப்பு அமைத்திருப்பர். இதன் நான்கு மூலைகளிலும் இரும்பு வளையங்கள் அமைத்து அவ்வளையங்களில் இரும்புச் சங்கிலிகளைக் கொண்டோ அல்லது கயிற்றைக் கொண்டோ இணைத்து வீட்டின் உயரே இதற்கென உள்ள இரும்பு வளையங்களில் மாட்டித் தொங்க விடுவர். இவ்வகை ஊஞ்சல் தொட்டில் அரசர்கள், ஜமீன்தார்கள் அல்லது மிகப்பெரும் செல்வந்தர்கள் வீடுகளில் மட்டுமே அன்று இருந்தன. அவ்வாறு ஊஞ்சல் தொட்டில் இருந்தாலும் துணியில் கட்டித் தொங்க விடும் தொட்டிலும் அவர்கள் வீடுகளில் இருக்கத்தான் செய்தன.

குறுங்கட்டில்:

குழந்தைகளின் படுக்கையைப் பற்றிப் பார்க்கும் போது, ‘குறுங்கட்டில்’ என்பதையும் குறிப்பிடுவது அவசியம். இது பிள்ளைகள் படுப்பதற்காகச் செய்யப்படும் மிகச்சிறிய அளவிலான கட்டில். பனை நாரால் பின்னப்பட்டிருக்கும். சிறு குழந்தைகளுக்கெனப் பயன் படுத்தப்பட்ட இக்கட்டிலைக் ‘குறுங்கட்டில்’ என்றே அனைவரும் அழைத்தனர். இக்குறுங்கட்டில் இருந்தாலும், அவ்வீடுகளில் துணித் தொட்டிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

தாலாட்டுப் பாட்டு:

நம் செந்தமிழ் நாட்டிற்குப் பழங்காலந் தொட்டு பற்பல சிறப்புகள் உண்டு. அதில் இசையும் ஒன்று. சங்க இலக்கிய நூல்களில் யாழைப் பற்றியும் வேறு பல இசைக் கருவிகளைப் பற்றியுமுள்ள செய்திகள் பரந்து காணப்படுகின்றன. இந்து ஆலயங்களில் இசைக் கருவிகளைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற  எத்தனையோ சிற்பங்களை இன்றும் காண்கிறோம். தமிழர்களுக்கு உணவும் உடையும் போன்று உடன் கலந்திருப்பது இசை. இது பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாச் செயல்களிலும் கலந்து காணப்படுகிறது. உதாரணமாக உழவன் பாட்டு, உழத்தி பாட்டு, வண்டிப் பாட்டு, வயல் பாட்டு, நலுங்கு பாட்டு, தொழுகைப் பாட்டு, அழுகைப்பாட்டு (ஒப்பாரி) என்று எத்தனையோ வகைப் பாட்டுகள் உள்ளன. இவற்றில் ஒன்றுதான் தாலாட்டுப் பாட்டு.

மலரோடு மணம் தொடர்புடையது போலவும், கவிஞனோடு கற்பனை தொடர்புடையது போலவும்; தொட்டிலோடு தொடர்புடையது ‘தாலாட்டுப் பாட்டு.’ ஏடும் எழுத்தும் அறியாதிருந்த அன்றையத் தாய்மார்கள் எதுகை, மோனை, இயைபு, ஓசை, அந்தாதி போன்ற செய்யுள் நயங்களுடன் தம் எண்ணத்தால் உருவாக்கிப் பாடிய பாடல்களே தாலாட்டுப் பாட்டு. தொட்டிலில் ஆடிக்கொண்டே இத்தாலாட்டுப் பாடலைக் கேட்கும் பேரக் குழந்தைகள் சிறிதே நேரத்தில் மெய் மறந்து தூங்கி விடுவர்.

இத்தகைய பாடலை என்னுடைய வீட்டிலும் நான் கேட்டிருக்கிறேன். என் அக்காள் இஞ்ஞாசியம்மாள் வீடு, எங்கள் வீட்டிலிருந்து கூப்பிடும் தூரத்தில் தான் இருந்தது. ஆகவே, அவருடைய பிள்ளைகள் எப்பொழுதும் எங்கள் வீட்டில் தான் இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் அச்சிறு பிள்ளைகளுக்கு, என் தாய் சூசையம்மாள் தொட்டில் கட்டிப் பாடிய பாடல்களைப் பல முறை கேட்டிருக்கிறேன். அவர் கல்வி கற்காதவராக இருந்தாலும், எவ்வாறு இவ்விதம் பாடினார் என்பதை இப்போதும் நான் நினைத்து வியக்கிறேன்.

கீழுள்ள பாடல்கள் அவர் ஒரேநாளில் பாடியவையல்ல, பற்பல  நாட்களில் பாடியவை. இவை அன்றைய வீட்டுச் சூழ்நிலை, வெளிச் சூழ்நிலை, காலநிலை, உறவு, ஊர்விழாக்கள் என்று அந்தந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல் அவர் பாடியவை. பாடலைத் தொடங்கும் போதும், ஒவ்வொரு சரணத்தைப் பாடி முடித்ததும் “ராராரோ…” என்றோ அல்லது “ஆராரோ…” என்றோ பாடி அடுத்த அடியைப் பாடுவார். பாடல் எத்தனை அடிகளில் முடியும் என்பதற்கெல்லாம் கணக்கு கிடையாது. பிள்ளை தூங்க ஆரம்பித்ததும் பாடல் முடியும். பெண் பிள்ளையாக இருந்தால், பெண்பாலில் பாடுவார். அப்பாடலிலிருந்து சான்றாக சில…

குலம் தழைக்க வந்தவனே

நல்ல குணம் உள்ளவனே

எல்லோருக்கும் நல்லவனே

வல்லவனே நீயுறங்கு

              ஆளப் பிறந்தவனே

              அழாமல் நீயுறங்கு

              நிலாவைப் பிடித்துத்தாரேன்

              எழாமல் படுத்துறங்கு

தங்கமான தொட்டிலிலே

தனித்து நீ படுத்துறங்கு

தவத்தாலே வந்தவனே – என்

தாலாட்டைக் கேட்டுறங்கு

             எல்லோருக்கும் சோறுதரும்

             நல்லவராம் நாச்சியாரு – அந்த

             நாச்சியாரு ஆச்சிவீடு

             அழைத்துப் போறேன் நீயுறங்கு

உனக்குப் பிடித்த உளுந்தவடை

உறுதியாய் வாங்கித்தாரேன்

உறங்கி நீ விழிக்கும்போது

உன்னிடத்தில் ஆச்சிதாரேன்

             காலமழை மூனு மாதம்

             கணக்குப்படி பெய்திடுச்சி

             காணுமிட மெல்லாம் தண்ணீரு – உன்

             கண்ணீர் எதற்கு கண்ணுறங்கு

ஆம்பல் ஊரணியின்

அழகையெல்லாம் பார்க்கணும்

ஆறுமுகன் கோவிலும்;

அழகுத் தெப்பமும் பார்க்கணும்

             வீரமாய் முருகனுமே

             சூரனை வென்றவிழா

             விரும்பினால் நீயுந்தான்

             வருகையில் பார்க்கலாம்

தேரோட்டத் திருவிழாவும் – சில

தினத்தில் வந்துவிடும்

தேரோடும் அழகையும்

தெருவில் நின்று பார்க்கணும்

             மாதாகோவில் கோபுரத்தை

             மறக்காமல் பார்க்கணும்

             மனதிலதை நினைத்து நீயும்

             மௌனமாய் துதிக்கணும்

முழுப் பாடல் உள்ள பக்கம் : “தாலாட்டுப் பாடல்”

* * *

பதிவு  8 : பொட்டு 

Advertisements