RSS

குழந்தையுணவு

16 அக்

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

குழந்தையுணவு

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

பதிவு : 6

குழந்தையுணவு பற்பல இருப்பினும் அவற்றில் முதன்மையும் சிறப்பும் பெற்றது தாய்ப்பால். இதற்கு ஈடான உணவு இவ்வையகத்தில் வேறேதும் இல்லை. இது செயற்கையாகத் தயாரிக்க முடியாதது; விலை கொடுத்து வாங்கவும் முடியாதது. சுத்தமானது, சுகாதாரமானது, கலப்படமற்றது. குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகையான சத்துப் பொருட்களையும் உள்ளடக்கியது. தாய் கொடுப்பதற்கும் குழந்தை குடிப்பதற்கும் எளிதானது. இது குழந்தையின் உடலை சீராக வளர்ப்பது மட்டுமின்றி, அதற்கு ஏற்படும் நோயை எதிர்க்கும் ஆற்றலுள்ளது.

தேவலோகத்திலுள்ள தேவாமிர்தத்திற்கு ஒப்பாகக் கருதி, நம் முன்னோர் தாய்ப்பாலை ‘அமிர்தம்’ என்றே அழைத்தனர். அமிர்தம் என்பதற்குத் தேவர் உணவு, நஞ்சு போக்கும் மருந்து, அழிவின்மை போன்ற பல பொருள்கள் உள்ளன. தாய்ப்பால் இத்தகு சிறப்புகளைப் பெற்றதால்தான், கடவுள் தம் மீது காட்டும் அன்பை விளக்க முயன்ற மாணிக்கவாசகர், “பால் நினைந் தூட்டும்தாயினும் சாலப் பரிந்து…” என்று திருவாசகத்தில் கூறுகிறார்.

இன்றைய மக்களின் மாறுபட்ட உணவுமுறையாலும், உழைப்பு மாறுபாட்டாலும் தாய்ப்பால் சுரக்கும் காலமும், அளவும் மிகக் குறைந்து விட்டது. எனவேதான், இன்றுள்ள குழந்தைகள் பெரும்பாலும் டப்பாவில் அடைக்கப்பட்ட பால் பவுடரையும், பசுவின் பாலையும் குடித்தே வளர்கின்றன. “பாதிபுள்ள பொறக்குதப்பா பசும்பாலத் தாய்ப்பாலா நம்பி…” என்ற வைரமுத்துவின் பாடல், இன்று பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பாலை நம்பாமல் பசுவின் பாலை நம்பிப் பிறப்பதாக நையாண்டி செய்கிறது. இருந்தாலும் இதிலுள்ள உண்மையை யாரும் மறுக்க முடியாது.

மின்சாரம் வருவதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை முறை, அவர்களின் உணவு, வீட்டிலும் காட்டிலும் அவர்கள் செய்த வேலை போன்றவற்றின் காரணமாக அன்றுள்ள தாய்மார்களின் உடல் வலுப்பெற்று தாய்ப்பால் சுரக்கும் காலமும், அளவும் அதிகமாயிருந்தது. இதனால் பிறந்த தன் குழந்தைக்கு இரண்டாண்டிற்குக் குறையாமல் பால் கொடுத்தனர். சிலர் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவும் பால் கொடுத்ததும் உண்டு.

தாய்ப்பால் இரண்டு ஆண்டுகள் கொடுக்க வேண்டுமென்பதை இஸ்லாமியர்களின் புனித நூலாகிய திருக்குர்ஆன், “மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தி யுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப் பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும் உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக” (லுக்மான் 31:14) என்று கூறுகிறது.

குழந்தையுணவு

எவ்வித விழிப்புணர்வும் இல்லாத அக்காலத் தாய்மார்களுக்கு, கைக்குழந்தை இருக்கும் போதே அடுத்த குழந்தை உருவானாலோ, தாயின் உடல் நோய்வாய்ப்பட்டாலோ; அல்லது குழந்தை பெற்ற தாய் இறந்து விடினோ தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்படும். இச்சமயங்களில் ‘ராகி’ என்று சொல்லப்படும் கேழ்வரகு மாவை ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் போட்டு நன்கு சுறுக்கிப் பிடித்து, சிறு பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு, அத்துணியிலுள்ள மாவை அதில் முக்கி கசக்குவர். அப்போது மாவு கரைந்து பால் போலத் தண்ணீர் மாறும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சுட வைத்து பாலுக்குப் பதிலாகக் கொடுப்பர். சிலர் முதலில் கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து காய்ச்சி எடுத்து, அதன்பின் துணியில் வடிகட்டியும் கொடுப்பர். இவ்வாறு தயாரித்துக் கொடுக்கப்படும் கேழ்வரகுப் பால் தாய்ப்பாலுக்கு அடுத்த குழந்தையுணவாக அன்று இருந்தது.

குழந்தை பெற்றவுடன் தாய் இறந்து விட்டால் மேலே சொன்னபடி கொடுத்தாலும், சில சமயங்களில் பக்கத்து வீட்டில் குழந்தை பெற்ற தாய்மார் இருந்தால், தனக்கு சுரக்கும் தாய்ப்பாலை தாயை இழந்த குழந்தைக்கும் சிறிது காலம் வரை கொடுப்பர். இதனின்று, மாற்றார் பிள்ளையையும் மாசறப் போற்றும் மாண்புடைய மக்கள் நம் முன்னோர் என்பதை அறியலாம்.

பால் குடிக்கும் குழந்தை சிறிது வளர்ந்து சுமார் ஐந்து அல்லது ஆறு மாதம் ஆனதும் அதற்கு தாய்ப்பால் மட்டும் போதாது. தாய்ப்பாலோடு செயற்கை உணவாகிய திட உணவும் தேவைப்படும். இச்சமயங்களில் வாழைப்பழம் மற்றும் அரிசிச்சோறு இவற்றை நன்கு நசுக்கிக் கொடுப்பர். ஆனால், அக்காலங்களில் பெரும்பான்மையோர் வீடுகளில் கூழும் கஞ்சியுமே உணவாயிருந்தன. அதனால் தான் “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்ற பழமொழி ஏற்பட்டது. இது போலவே, பாரத ஜனங்களின் நிலையை விளிக்க நினைத்த பாரதி, “கஞ்சி குடிப்பதற்கிலார்; அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்” என்று எழுத நேர்ந்தது.

அக்காலங்களில் அரிசியுணவு ஏழைக் குடும்பங்களில் கிடைப்பதற்கரிய உணவாக இருந்தது. புளித்த கஞ்சியை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக, தாய்மார்கள் அரிசியுணவு சமைத்திருக்கும் வீட்டில் சிறிது சாதம் வாங்கித் தன் பிள்ளைக்குக் கொடுப்பர். என் சிறு வயதில், இவ்வாறான நிகழ்வுகளைக் கண்டுள்ளேன். அக்காட்சிகள், பின்னாட்களில் நான் கற்ற நூல்களில் காணப்படும் செய்திகளுக்கு உண்மை வடிவம் கொடுப்பது போலிருந்தன.

‘கழுகுமலை’ திரு.மீனாட்சிசுந்தர நாடார் வீடு

நான் இருந்த வீட்டிற்கு எதிர் வரிசையில் மூன்று வீடுகள் அடுத்து திரு.மீனாட்சிசுந்தர நாடார் என்ற ஒரு செல்வந்தர் இருந்தார். போக்குவரத்து சரியாக இல்லாத அக்காலத்தே ஆந்திரா, கேரளா என்று அண்டை மாநிலங்களுக்குச் சென்று வணிகம் செய்பவர். அவ்வாறு செல்லும் மாநிலங்களிலுள்ள மொழிகளைப் பேசுவதிலும் திறன் பெற்றவர். இவரது துணைவியார் திருமதி. நாச்சியாரம்மையார். ‘நாச்சியார்’ என்றால் தலைவி என்று பொருள் உண்டு. இவ்வம்மையார் இன்சொல்லும், இரக்க குணமும், ஈகைச் செயலும் நிறைந்த குணவதியாய் எம் தெருவிலிருந்தார்.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்” (புறம்:18)

என்ற குடபுலவியனார் பாடலுக்கு எடுத்துக் காட்டாகவும்;

“பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்

தவப்பெரு நல்லறம் சாற்றினார்” (மணிமேகலை, அறவணர்த் தொழுத காதை:118, 119)

என சீத்தலைச் சாத்தனார் சொல்லியது போலவும் நல்லறம் செய்து இல்லறம் நடத்தி வந்தார் இம்மாதரசி.

‘கழுகுமலை’ திரு.மீனாட்சிசுந்தர நாடாரும் நாச்சியாரம்மையாரும்

தினமும் இவர் தன் வீட்டில் மதிய உணவிற்காக அரிசியுணவு சமைப்பது வழக்கம். அவ்வாறு சமைக்கும் போது தன் வீட்டுத் தேவையை விட அதிகமான அளவு அரிசி எடுத்து சமைப்பார். எதற்கெனில் பிறர்க்குக் கொடுப்பதற்காகவே அவ்வாறு செய்வார். அதனால், அக்கம் பக்கத்தில் குழந்தை வைத்திருக்கும் அனைவரும் அவருடைய வீட்டிற்குச் சென்று, சிறு பாத்திரத்தில் உணவு பெற்று வருவர். அவ்வாறு உணவு பெற்று வருவோரின் காட்சியானது,

“முட்டை கொண்டு வற்புலம் சேரும்

சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்

சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்” (புறம்:173)

என்ற பாடலை நினைவூட்டுவதாய் இருக்கும். ‘மழைக்காலம் வருவதை உணர்ந்த எறும்புகள் அவை இருக்குமிடத்திலுள்ள வெண்சிறு முட்டைகளைப் பற்றி எடுத்துக் கொண்டு வரிசையாக மேட்டு நிலத்திற்குச் செல்வது போல, வந்தோர்க் கெல்லாம் உணவு கொடுத்து பசிப்பிணி மருத்துவனாய் விளங்கிய சிறுகுடிகிழான் பன்ணனது வீட்டில் உணவு பெற்று கையில் கொண்டு வருவோரின் கூட்டம் இருந்தது’ எனப் பாடிய சோழன் குழமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் கற்பனை நயம், நான் கண்ட நாச்சியாரம்மையாருக்குப் பொருந்தி நின்றது.

விவிலியத்தில், “இச்சிறியோருள் ஒருவர்க்கு ஒரு கிண்ணம் நீர் கொடுப்பவரும் கைம்மாறு பெறாமற் போகார்” (மத்தேயு:10 : 42) என்று உண்டு. சிறு பிள்ளைகளுக்கு கொடுப்பது இறைவனுக்கு நேரடியாகக் கொடுப்பதற்குச் சமம் என்ற விவிலியக் கருத்துக்கு செயல் விளக்கம் தந்தவராய், எத்தனை பேர் வந்தாலும் இல்லையெனாது இன்முகமாய் உணவு கொடுத்தவர் நாச்சியாரம்மையார். மேலும், பால், மோர், நெய் போன்ற பசுப் பொருட்களையும் கொடுத்துதவக் கூடியவர். இவ்வாறு, அப்பகுதியில் யார் வீட்டுக் குழந்தையானாலும் அக்குழந்தை வளர்ப்பில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இத்தகு பண்பாளரான அவரை, ‘நாச்சியார் எங்கள் ஆச்சியாரென’ அனைவரும் வாழ்த்தினர்.

காப்பி, டீ குடிக்கும் பழக்கம் ஏற்பட்ட பின்பு தான் பரவலாக மாட்டுப் பாலைப் பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே ஏற்பட்டது. அதற்கு முன் சாதாரணமாக மக்கள் வாழ்வில் பாலின் உபயோகம் இல்லாமலிருந்தது. ஆகவே, இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பாலே முக்கிய உணவு. அத்துடன் கேழ்வரகில் தயாரித்துக் கொள்ளும் கேழ்வரகுப்பாலும், நாச்சியாரம்மையார் போன்றோர் தந்த அரிசியுணவுமே குழந்தை உணவாயிருந்தன. பிறந்த குழந்தை இரண்டாண்டைத் தாண்டி நன்கு ஓடியாடி நடக்க ஆரம்பித்தவுடன், மேலே சொல்லப்பட்ட உணவுடன் சோளக்கஞ்சி, கம்மங்கஞ்சி, கேழ்வரகுக்கூழ் ஆகியவற்றையும்; சாமி, குதிரைவாலி போன்றவற்றையும் குழந்தைகளுக்கு உணவாகக் கொடுத்தனர்.

பதிவு 7 : தொட்டில்

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: