RSS

Monthly Archives: செப்ரெம்பர் 2013

வாத்தியார்

அசின் சார், கழுகுமலை.

எம்.ஜி.ஆர். பேட்டிகள்

கடந்த ஞாயிறன்று மதுரை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி செல்லும் போதும் நாம் நினைத்திருந்த புத்தகங்களுக்கிடையே, நினைத்திராத புத்தகங்களும் நம்மைக் கவர்வது உண்டு. அப்படி என் கண்ணில் பட்டதுதான் எம்.ஜி.ஆர். பேட்டிகள் என்ற புத்தகம். எஸ்.கிருபாகரன் என்பவர் தொகுத்ததை மனோன்மணி பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

கண்காட்சியில் வரிசையாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் புத்தகங்களின் முகப்பு, தலைப்பு, ஆசிரியர் பெயர் இவற்றை கவனிக்கிறோம். நம் விருப்ப எல்லைக்கு ஒத்ததைப் பார்த்த பார்வையிலேயே வாங்குகிறோம். பெரும்பான்மையை, “ஹூம்! இதிலென்ன பெரிசா இருந்திடப் போகுது?” என்ற அலட்சியப் பார்வையுடன் கடந்து போய் விடுகிறோம். அப்படி விடுபட்ட புத்தகமாக இது இருந்திருக்குமோ என்று எனக்குள் தோன்றியது. ஏனெனில், இந்நூல் இப்போது ஐந்தாவது பதிப்பு! இம்முறை எதிர்பாரா விதமாகக் கையிலெடுத்து மேல்வாரியாக வாசித்த போது அது நல்லதொரு தொகுப்பாகத் தெரிந்தது.

எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில், பல்வேறு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், செய்தித் தாளில் வெளிவந்த கேள்வி பதில்கள் என்று பலவற்றைப் பெருமுயற்சியுடன் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.

எம்.ஜி.ஆர். என்றதும் நம் அனைவரின் மனதில் தோன்றும் பொதுவான பிம்பமும், கருத்தும் உண்டு. அவர் நாடகக் கலைஞராயிருந்து சினிமாவிற்கு வந்து பெரும்பான்மையான மக்களைக் கவர்ந்தவர். அந்த செல்வாக்கோடு அரசியலில் நுழைந்து இறுதிவரை அதைத் தக்க வைத்துக் கொண்டவர். கூடவே, உதவி செய்யும் தயாள மனம் படைத்தவர் என்பதும் பல வேளைகளில் படித்ததும், கேட்டதுமான செய்தி.

ஆனால், இந்த நூல் நாம் கொண்ட எம்.ஜி.ஆர். பற்றிய அபிப்பிராயத்தை மாற்றுகிறது. மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் போன்ற அடைமொழிகள் வெறும் ஜோடனைகள் அல்ல; அதற்காக அவர் தன் சினிமா வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் தன் கருத்துக்களை நிலைநிறுத்த திருக்கமுற உழைத்திருக்கிறார் என்று காட்டுகிறது. அவர் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் ‘தன் கருத்துக்களை நிலை நிறுத்துதல்’ என்பது மிக முக்கியமாக எனக்குப் பட்டது. இதை அவர் காலத்திலும் சரி, அதற்குப் பின்பும் சரி, அதை யாரும் சரி வர செய்யவில்லை. அதனாலேயே, அவர் அடைந்த உச்சத்தை இன்று வரை யாராலும் தொட முடியவில்லை. அதை இந்த நூல் நமக்கு நன்கு தெரிவிக்கிறது. இந்த இடத்தில், எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் கருத்து பேதம் கொண்டவர்களும், அவருடைய ‘கருத்து நிலை நிறுத்தல்’ பின்பற்றலை மட்டும் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக வாழ்க்கை வரலாற்று நூல்கள் படிக்கும் போது அது யாருடையது என்பதை விட, அது யார் எழுதியது என்பது மிக முக்கியம். ஏனெனில், அது யாருடையதாக இருந்தாலும், எழுதுபவரின் தற்சார்பு அதில் தோன்றி அது நம்மை வேறு திசைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த நூலில் அந்தப் பிசகுக்கு வாய்ப்பே இல்லை. ‘உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்’ என்பதைப் போல முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர். மனமே பேசுகிறது. எக்ஸ்ரே எடுப்பது போல அவரின் எதார்த்தமான மன இயல்பை வெளிக்காட்டும் அவரது பசப்பற்ற பதில்களிலிருந்து அறிய முடிகிறது. அதில் யாரையும் சரிக்கட்டும் நினைப்பு இல்லை. தனக்குத் தெரியாததை ‘தெரியாது’ என்று சொல்லும் துணிபு! இப்படி அனைத்தும் வெளிப்படை. இன்றைய சினிமா நடிகர்களோடும், அரசியல்வாதிகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகுந்த இடைவெளியும், ஏமாற்றமும், நகைப்பும் நமக்கு ஏற்படுகின்றன.

இத்தொகுப்பிற்காக, நூலாசிரியர் கிருபாகரன் நெறையவே பாடுபட்டிருக்க வேண்டும். அவர் உழைப்பின் பயனே இப்போது நம்மை பேச வைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர். குண்டடிபட்ட நிலையில் தேர்தல் பணி பார்த்தது போன்ற சில பழைய படங்களும் உள்ளன.

நூலாசிரியரின் முயற்சிக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்!

*

இந்நூலிலிருந்து சான்றாக சில வினாக்களும் விடைகளும்:

நடிப்புத் துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?

வறுமை.

உங்கள் வீட்டில் பூஜை அறை உண்டா? எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்?

என் பூஜை அறையில் என் தாய்-தந்தை, மகாத்மா காந்தியடிகள், என் வாழ்க்கைத் துணைவியின் தாய் தந்தையரின் படங்கள் இருக்கின்றன. (அதோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று உண்டு) இவர்கள்தாம் நான் வணங்கும் தெய்வங்கள்.

பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?

பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் ஏற்பீர்களா?

நேரம் இருந்து, அந்தப் பாத்திரத்தில் என் கருத்துக்களை சொல்ல முடியும் என்ற நிலை இருந்து, என்னைத் தாங்கிக் கொள்ளக் கூடிய இதயம் அவர்களுக்கு இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

சினிமாவை நீங்கள் ஒரு கலை என்று நினைக்கிறீர்களா? வியாபாரம் அல்லது தொழில் என்று நினைக்கிறீர்களா?

ஒரு தொழிலை கலைநுணுக்கத்தோடு உருவாக்கினால் சிறந்த வியாபாரமாக அது பயன்படும். அது போல சினிமாவை தொழிலாகக் கருதி, கலை அம்சத்திற்கு எந்த ஊறு விளைவிக்காமல் பயன்படுத்தினால் அந்த வியாபாரம் செழிக்கும்.

உலகிலேயே அழகானது எது?

குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து கருத்துச் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கும் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்னால்! பரந்த இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள நான், உலகத்தில் உள்ளதில் அழகானது எது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

தங்களுக்கு யாருடைய கதை, வசனம், பாடல்கள் பிடிக்கும்?

நாடு, மொழி, இனம், பண்பாடு இவைகளை வளர்க்கும், போற்றும் வகையில் யார் எழுதுகிறார்களோ அவர்களுடைய கதை, உரையாடல், பாடல்கள் பிடிக்கும்.

தொழிலாளி ஒரு முதலாளியிடமும், முதலாளி ஒரு தொழிலாளியிடமும் எவ்வகையில் நடந்து கொள்ள வேண்டும்?

தற்போதைய சமுதாய அமைப்பில் உள்ள முதலாளியும் தொழிலாளியும் தந்தையும் தனயனையும் போல நடக்க வேண்டும்.

மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாதா? ஏன்?

மாணவர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது என் கருத்து. இதனை அண்மையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தெரிவித்தோம். உங்கள் கடமை நாட்டிற்கு நல்ல அறிஞர்களாக நீங்கள் திகழ வேண்டும். கல்வி கற்றுக் கொள்ளும் இந்தக் காலத்தில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் நீங்கள் அறிவு தேடிக் கொள்ளக்கூடாது என்பது என் கருத்தல்ல. ஆனால், செயல்முறையில் நீங்கள் இறங்கக் கூடாது.

(வேறொரு பக்கத்தில் அதே கேள்வி) மாணவர்கள் அரசியலில் கலந்து கொள்ளலாமா? கலந்து கொள்ளக் கூடாதா?

ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கோ, மக்களின் ஜனநாயக வாழ்க்கைக்கோ, தாய் மொழிக்கோ ஆபத்து வரும்போது அவர்கள் நிச்சயமாக ஈடுபடலாம்.

நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் ‘நாடோடி மன்னன்.’ சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

நான் விரும்புவதை என் தொழிலில் செய்து காட்ட வேண்டும் என்பது நீங்காத ஆசையாகும். ஒரு வேளை என் விருப்பம் தவறாகவும் இருந்து விடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்தத்தில் படம் எடுக்க இதுதான் காரணம்.

சினிமாவுக்குத் தணிக்கை போர்டு தேவையா?

தணிக்கை போர்டை எதற்காக வைத்திருக்கிறோம். மக்கள் பார்த்து வெறுக்கத்தக்கதை, ஒழுக்கத்தைக் குலைக்கக் கூடியதை, பண்புக்குப் பொருந்தாததைக் காட்டக் கூடாது என்பதற்காகவே தணிக்கை போர்டை ஏற்படுத்தி இருக்கிறோம். எனவே தணிக்கை போர்டு இருப்பதில் தவறு என்ன? தவிர, குறிப்பாகச் சொல்லப் போனால் பிராந்திய அடிப்படையில் இயங்கும் தணிக்கைக் குழுக்கள், ஒரு பிராந்தியத்திலிருந்து வரும் படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என்று சொல்வேன். குறிப்பாக பம்பாயிலிருந்து வெளிவரும் படங்கள் சற்று ஆபாசமாகவே இருக்கின்றன. இதை தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடும்போது, மீண்டும் தணிக்கை செய்தால் என்ன என்றுதான் தோன்றும். எனவே, இப்படி ஒரு தணிக்கை நடத்தினாலும் தகும்!

ஆங்கிலப் படங்களுக்கு ஈடான தரத்தில் தமிழ்ப் படங்கள் வருவதில்லையே, ஏன்?

‘தரம்’ என்று நீங்கள் எதை இங்கு குறிப்பிடுகிறீர்கள்? தரம் என்று நிர்ணயிப்பதற்கு அளவுகோல் என்ன? கிளியோபாட்ரா பெரிய படம். அதில் வரும் அரை நிர்வாணக் காட்சிகளை ஏற்றுக் கொள்கிறீர்கள். தமிழில் சோகம், ஹாஸ்யம், பண்பு, வீரம், சண்டை எல்லாம் வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப படம் எடுக்கிறோம். இவற்றில் தரத்தைக் காண முயற்சிக்க வேண்டுமே தவிர, ஆங்கிலப் படங்களுடன் ஒப்பிடக் கூடாது. அவர்களது கலாச்சாரம் வேறு. நம்முடையது வேறு.

உங்களைப் புகழ்ந்து, இகழ்ந்து எழுதும் பத்திரிகைகளைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

புகழ்ந்து எழுதுபவர்கள் எனக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். இகழ்ந்து எழுதுபவர்கள் எனக்கு ஆக்கத்தை அளிக்கிறார்கள்.

மனிதன் சந்திரனுக்குப் போனது பற்றித் தங்கள் கருத்து என்ன?

விஞ்ஞான யுகத்தில் மிகப் பெரிய முதற்சாதனையாகும். ஆனால், அதே நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு அத்தகைய விஞ்ஞான சக்தியைப் பயன்படுத்தக் கூடாதா? முடியாதா?

தாங்கள் சிகரெட் கையில் வைத்திருப்பது போல தங்களின் சொந்தப் படத்தில் ஒரு காட்சி அமைப்பீர்களா?

கையில் சிகரெட் இல்லாத போதே அப்படிப் படம் போட்டு விளம்பரம் செய்கிறார்களே.. உண்மையாகவே அப்படி படம் பிடித்தால் என்ன ஆவது?

மாலை போடுகிறவர்களைப் பற்றி உங்கள் கருத்துக்கள்?

தற்போது மாலைகளுக்குச் செலவிடும் பணத்தை அவரவர் பெயரில் சிறு சேமிப்புத் திட்டத்தில் சேர்த்தால் நாட்டிற்கும் அவர்களுக்கும் நலம் பயக்கும்.

நீங்கள் மிகவும் ரசித்த தமிழ் இலக்கியம் எது? ஏன்?

அந்த அளவுக்கு இலக்கியம் படித்தவனல்ல நான்.

நாத்திகன் எப்பொழுது ஆத்திகன் ஆகிறான்?

சிறந்த ஒரு ஆத்திகன்தான் நல்ல ஒரு நாத்திகன் ஆக முடியும்.

சினிமா பாட்டுன்னா எப்படி இருக்க வேண்டும்?

பாடல் என்றால் அதில் பொருள் இருக்க வேண்டும். இசையும் கலந்திருக்க வேண்டும். கூச்சலாகவும், வெறும் வார்த்தைகளாலும், கருத்தில்லா பாடல்களாலும் பயன் இல்லை.

ஏழை மக்கள் வாழ்வில் துன்ப கீதம் கேட்காமலிருக்க வழி என்ன?

பொதுவுடைமைக் கருத்துக் கொண்ட பாடலை இயற்றி, சமதர்ம தத்துவத்தை தாளமாக்கி, உரிமைக் குரலை இசையாக்கினால் இன்ப கீதம் தோன்றும்.

நீங்கள் விரும்புவது எது? வெறுப்பது எது?

ஒருவனுடைய கடைசி மூச்சுவரை தன் உழைப்பில் வாழ்வதை, நான் விரும்புகிறேன். இதிலிருந்து தெரியுமே ‘நான் எதை வெறுக்கிறேன்’ என்பதை.

கலப்புமணம் பரவினால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உயர்ந்து விடலாம் அல்லவா?

அதுகூட பொருளாதாரத்தின் மேல் மட்டத்திலேயே நடக்கிறது. விளம்பரத்திற்காகத்தான் ஹரிஜன சமூகத்திலிருந்து பெண்ணெடுக்கிறார்கள் சிலர். சாதியை ஒழிக்கிறோம் என்று பேசுபவர்கள் சாதி வாரியாகக் குடியிருப்பு அமைத்து சாதி வித்தியாசத்தை நிரந்தரமாக்கி விடுகிறார்கள். ஹரிஜன் காலனி, குடியானவர் பகுதி என்று இருக்கக் கூடாது.

கலைஞனுக்கும் கூத்தாடிக்கும் என்ன வித்தியாசம்?

நேற்று கூத்தாடி; இன்று கலைஞன்.

திருமணமான பெண்கள் வேலை செய்வது பற்றி தங்கள் கருத்தென்ன?

திருமணமான பெண் சோம்பேறியாக இருக்க வேண்டுமென்று கருதுகிறீர்களா?

அரசியல்வாதிக்கும் சுயநலவாதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சுயநலவாதியால் நாடு என்ன ஆகும்?

முன்னவன் தியாகி. பின்னவன் அரசியல் வியாபாரி. அரசியல்வாதி சுயநலவாதியானால் நாடு சுடுகாடாகும்.

ஆண்டவனை எங்கே காணலாம்?

உங்களுடைய நல்ல செயல்களில்.

* * *