RSS

பொதிகை அடிவாரத்தில் ‘முஸல்பனி’

25 ஆக

அசின் சார், கழுகுமலை.

முஸல் பனி

வந்த பார்சலைப் பிரித்தேன். உள்ளே அழைப்பிதழ், ஒரு நாவல் மற்றும் நான்கு பக்கக் குறிப்புரை இருந்தன. நெல்லை பேரா.சிவசு அவர்கள் அனுப்பியிருந்தார். முன்னதாகவே அலைபேசியில் விபரங்களைத் தெரிவித்திருந்தார். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ஆகஸ்ட் 18, 2013 ஞாயிறன்று நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை. வருவதற்கு முன் இந்நாவலைப் படித்து வர வேண்டும். இது அவரின் அன்புக் கட்டளை.

நாவல்: தமிழவன் எழுதிய ‘முஸல்பனி’

முதல் பதிப்பு: 2012

வெளியீடு: அடையாளம் (04332 – 273444)

தமிழகம் முழுவதும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு’ நடைபெறும் நாள். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு போல ஆறரை லட்சம் பேர் எழுதுவதாக செய்தித்தாளில் படித்த ஞாபகம். பேருந்தில் பெருங்கூட்டமாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பேராசிரியரிடமிருந்து அலைபேசி அழைப்பு.

“நெல்லை வந்திடுங்க; நம்ம காரிலேயே போயிடலாம்” என்றார்.

மனம் தந்தி அடித்ததோ? என்னுள் எழுந்த வியப்போடு “சரி” என்றேன்.

நிகழ்வன்று அதிகாலையிலேயே கிளம்பி பேராசிரியர் சொன்னபடி நெல்லையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரின் வர்சா கார் வந்தது. காரில் பேராசிரியருடன் விமர்சகர் ஜமாலன், ஆந்திர திருநாவுக்கரசு, கவிஞர் நிதாஎழிலரசி. இவர்களுடன் நானும். ஒன்பது மணிக்கு அம்பையில் காலை உணவை முடித்து விட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தோம்.

தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் மட்டுமின்றி பிறதுறைப் பேராசிரியர்களும் ஆர்வத்துடன் அவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இருந்தனர். தமிழ் வளர்த்த பொதிகையைப் படித்ததுண்டு. அப்போதுதான் நேரில் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் பெயர் பதிவு தொடங்கியது. பங்கேற்பாளர்களாக தென் தமிழகப் பல்கலைக் கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் படைப்பாளிளும் இலக்கிய ஆர்வலர்களும் வந்திருந்தனர்.

நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை

பத்து மணிக்கு தொடக்க விழா அரங்கேறியது. வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் சி. அழகப்பன் தலைமையுரை ஆற்றினார். “வாசிப்புப் பழக்கம் இன்றைய மாணவர்களிடையே மிகக் குறைந்து விட்டது. சற்று முன் இங்குள்ள சில மாணவிகளிடம் நீங்கள் படித்த ஏதாவது ஒரு நாவலைக் கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு யாரும் பதில் சொல்ல வில்லை. ஒரு மாணவி மட்டும் முல்லா கதைகள் படித்ததாகக் கூறினார். இது தான் இன்றைய இளையோரின் வாசிப்பு நிலை. இந்நிலை மாற உங்கள் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதுதான் அறிவைப் பெருக்கும். மேலும், நம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டத்தான் இம்மாதிரிப் பயிற்சிப் பட்டறைகள். இதை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

பேரா.சிவசு அவர்கள் பயிற்சிப் பட்டறையை நடத்த வந்தார். பங்கேற்பாளர்களுக்கும் கருத்துரையாளர்களுக்குமான இடைவெளியை அகற்ற மேடையை விட்டு கீழே இறங்கி, அனைவரும் ஒரே தளத்தில் ஒரு முகமாய் பார்த்துப் பேசும் வகையில் வட்ட வடிவ அமர்வாக மாற்றியமைத்தார். சுய அறிமுகத்தோடு பட்டறை தொடங்கியது.

நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை

‘முஸல்பனி’ என்ற தலைப்பு எதைக் காட்டுகிறது? என்று பேரா.சிவசு கேட்டார். அரங்கம் அமைதியானது. ஒருவர், “அது இளவரசியின் பெயர்” என்றார். பேராசிரியரோ, “முஸல் என்பது முயல். முயல் முல்லை நில விலங்கு. பனி பாலைக் குரியது. இந்தத் தலைப்பில் Space and Time இருக்கிறது. அதாவது இடமும் காலமும் தெரிகின்றன. இந்நூல் அவை சார்ந்தவையா என்று நாம் கவனிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நாவலின் முதல் அத்தியாயம் வாசிக்கப் பட்டது. புரிதலைப் பகிரும் படிக் கேட்டுக் கொண்ட போது, பலரும் புரியவில்லை என்றே கூறினர். ஒருவர் ராம கதையுடன் ஒத்துப் போவதாகவும், இன்னொருவர் பக்தி இலக்கியத்துடன் ஒத்துப் போவதாகவும் கூறினர். இப்படி கூறப்பட்ட கருத்துக்களும் வெவ்வேறானவையாக இருந்தன. இன்னும் அநேகர் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீராநதி விமர்சகர் ஜமாலன் எழுந்து, “மல்டி மீடியா வந்த பின்பு அனைவரும் கேட்பதையும் பார்ப்பதையுமே விரும்புகின்றனர். அத்தொழில் நுட்பம் எளிதாகச் சென்றடைவதால் புத்தகம் எடுப்பதைத் தவிர்க்கின்றனர். வாசிப்பு என்பது ஒரு கலை. நாவல் வாசிப்பிலிருந்து நம் வாசிப்புப் பழக்கத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். புத்தகம் வாங்குவது செயல் அல்ல; அது முதலீடு. இன்று எதிலும் துரிதம், துரிதம், துரிதம்! படிப்பதிலும் துரிதமாகப் படித்து துரிதமாகச் சலிப்படைந்து விடுகிறார்கள். மறைமுக அறிவு என்பதே இல்லை. அது நம்மை நிதானமாக வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறது. Reader and text என்பது மாறி இன்று Writer and text என்ற நிலை வந்துள்ளது. அந்த வகையிலே இந்த நாவல் படிமங்களையும், புது உத்திகளையும் கொண்டிருப்பதை நாவலாசிரியர் முன்னுரையிலேயே தெரிவிக்கிறார். இது நம்மை நிதான வாசிப்பிற்கு அழைத்துச் செல்கிறது.

தீராநதி விமர்சகர் ஜமாலன்

இப்போது வாசித்த பகுதியில் வருகிற அத்திரிகப்பா என்ற பெயர் ஓர் அர்த்தமற்ற சொல். தமிழக நாட்டுப்புறக் கதையொன்றில், அத்திரிப்பாச்சா என்ற அர்த்தமற்ற சொல்லை கொளக்கட்டை என்று நினைத்து மனைவியைத் துன்புறுத்திய ஒரு கணவனின் கதை உண்டு. அதைப் போலவே அர்த்தமற்ற ஒரு சொல்லாக அத்திரிகப்பா பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், அதையே அடுத்தடுத்த இயல்களில் படிக்கும் போது அத்திரிகப்பா சொல், பயனற்ற இக்கால அரசியல்வாதியைக் குறிக்கலாம். தமிழவன் எழுதிய, ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ முதலான ஐந்து நாவல்களும் அந்தந்த பத்தாண்டுகளில் உள்ள பிரச்சினைகளை உள்வாங்கி எழுந்தவையாகவே இருக்கின்றன” என்றார்.

சிவசு அவர்கள், “வாசிப்பு முறை எவ்வாறு காலந்தோறும் மாறுபடுகிறதோ அதற்கேற்ப, இன்று நாம் எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். காப்பியங்கள் படித்துக் கொண்டிருந்த நாம் ஆற்றுப்படை போன்ற நூல்கள் எழும்போது, அதற்கேற்ப நம் வாசிப்பு முறையை மாற்றிக் கொண்டோம். அதுபோல இன்று வழக்கமான நூல்களையும், பாடத்திட்ட நூல்களையும் தாண்டி புதிய சூழலுக்கு வந்துள்ளோம். மேலும், வெளிப்படையாக எழுதப்படும் படைப்புகள் எப்போதும் ஒரு பொருளைத் தருவன. அவை ஒரு காலத்தை மட்டுமே நிர்ணயித்துப் பேசுவன. ஆனால், இது போன்ற படைப்புகள் நம்மை வெவ்வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றன” என்றார்.

பெங்களூர் ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக வந்ததால், பிற்பகல் இறுதி அமர்வில் வந்து சேர்ந்தார் தமிழவன். பகலில் பல்வேறு வினாக்களை எழுப்பியவர்கள் அவற்றை தமிழவன் முன்னிலையில் கேட்டார்கள்.

பேரா. ரவிக்குமார்

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேரா. ரவிக்குமார் அவர்கள், “நாடு தழுவிய ஒரு பிரச்சினை இருக்கும் போது அப்பிரச்சினை குறித்துப் பேச, எழுத தடை இருக்கலாம். அச்சூழலில் பூடகமாக அவ்விசயத்தைக் கூற வேண்டிய அவசியம் படைப்பாளிக்கு இருக்கும். ஆனால், அப்படியொரு நிலை இல்லாத இக்கால கட்டத்தில் ஏன் இப்படியொரு நாவல் எழுத வேண்டும்” என்றவர் தொடர்ந்து, “எந்த ஒரு படைப்பிலக்கிய மாகட்டும். சாதாரணமாக, ஒரு திரை இசைப் பாடலாக இருந்தாலும் சரி; அதிலுள்ள இசையாக இருந்தாலும் சரி. அதில் எல்லாவற்றையும் இணைக்கும் ஓர் ஒத்திசைவு இருக்கும். அப்படி ஏதும் இதில் இல்லையே ஏன்?” என்றும் கேட்டார்.

கல்லூரி மாணவி ஒருவர், “நாவலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் தனித்தனித் தலைப்புகளாக உள்ளன. ஒரு தலைப்பிற்கும் அடுத்த தலைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை. இப்படியிருக்கும் போது இதை நாவல் என்பதை விட சிறுகதைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா?” என்றார்.

தமிழவன்

இறுதியாகத் தமிழவன் அவர்கள், பின்வரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கர்நாடக அரசு இலக்கியத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகமான பணத்தை செலவிடுகிறது. அதுபோல கேரளாவில் எழுத்து எவ்வளவோ மாற்றங்களை அடைந்து வருகிறது. ஆனால், நாம் அந்த அளவிற்கு எட்டவில்லை. தமிழகத்தில் ஆயிரம் பக்க நாவல்கள் வரத் தொடங்கியுள்ள இந்நாட்களில், கேரளத்தில் ஐம்பது பக்க அளவிலான மைக்ரோ நாவல்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆயிரம் பக்கங்கள் பேசுகின்ற செய்திகளை ஐம்பது பக்கங்கள் கூறுகின்றன. இது அங்கு பிரபலமாகி வருகிறது. லச்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆகின்றன. அங்குள்ள மக்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கிறார்கள். நான் அதைப் படித்த போது எனக்கு ரொம்ப ஆச்சரியம். தமிழிலும் இந்த மாதிரி வர வேண்டும் என்று விரும்பினேன். அதன் விழைவே இந்நாவல். இது இக்காலச் சூழல்களைக் கொண்டதே. நிகழ்வுகள் படிமங்களாக இருக்கின்றன. தனித்தனி தலைப்புகளாக இருந்தாலும் அனைத்திற்குமான ஒத்திசைவு உள்ளே இருக்கிறது என்று பதிலுரைத்தார்.

தமிழவன்

நானும் இந்த நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்திருந்தேன். முதல் வாசிப்பில் முன்னுரை புரிந்த அளவுக்கு நாவல் உள்ளடக்கம் எனக்கும் புரியவில்லைதான். இருந்தாலும் கூர்ந்து கவனித்ததில், ஆங்காங்கே தமிழ் மொழி, இலக்கணம், தமிழர் பிரச்சினை போன்றவற்றைத் தொடுவது போலத் தெரிந்தது.

பேரா. ரவிக்குமார் வினவிய வினா எனக்குள்ளும் இருந்தது. பாரதி பாஞ்சாலி சபதம் பாடிய போது இருந்த இறுக்கமான சூழல் போன்று இப்போதில்லையே. பிறகெதற்கு இப்பூடகம்? இதன் வழியாக நாவலாசிரியரின் கருத்தோ, சொல்லோ, எடுத்துரைக்கும் நயமோ எதிலும் நமக்குத் தெளிவு பெற முடியவில்லை. ஒரு படைப்பு வாசகனை யோசிக்க வைக்கலாம். ஆனால், எரிச்சலூட்டக் கூடாது. அப்படி நேரும் பட்சத்தில் அதை வாசிக்க வேண்டிய கட்டாயம் வாசகனுக்கு இருக்காது.

நாவலின் முன்னுரையிலிருந்து சில வரிகளை இங்கு எடுத்து வைக்கிறேன்:

“இந்த நாவல் பன்முகத் தன்மைகளைக் கொண்டு புது வகையில் அமைந்திருக்கிறது. அதாவது இதற்குத் தமிழில் முன் மாதிரி இல்லை.”

“இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுத்தாக்கப்பட்டிருக்கின்றன.”

“இதுபோல் ஒரு குறிப்பிட்ட உலக இலக்கிய மரபு பல எழுத்தாளர்களால் சமீபத்தில் உருவாக்கி வருகிறது. ஜேம்ஸ் ஜாய்ஸ், போர்ஹஸ், இட்டாலொ கால்வினோ, மிலராட் பாவிச் மற்றும் பல விஞ்ஞானக் கதைகளை எழுதுபவர்கள் இந்த மரபின் சில இழைகளைக் கையாள்கிறார்கள்.”

முஸல் பனி

“இரண்டு வரிகளில் எழுதியதையும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காதை காதையாக நீளக்கதையை மூன்று காண்டங்களில் எழுதியதையும் தமிழன் அறிந்து அங்கீகரித்துள்ளான்.”

“இந்த நாவலின் இன்னொரு தன்மையாகக் காட்சிகள் வழியே கதையாடல் அடுக்கு அடுக்காகக் கட்டப்படுவதைக் கூற வேண்டும். ஓர் அத்தியாயத்திற்கும் அடுத்த அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கவும் செய்கிறது; தொடர்பு இல்லாமலும் உள்ளது.”

“சீட்டுக்கட்டுப் புனைவுத் தொடர் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு காட்சியும் வெவ்வேறு தர்க்கத்திலிருந்து வளர்க்கப்படுகிறது. உள்ளே ஏதும் இல்லை. ஏன், உள் என்பதே இல்லையே!”

மேலுள்ள குறிப்புகள் ஒரு சில தான். இதற்குள்ளேயே சில முரண்கள் இருப்பதைக் காணலாம். ஒரு நல்ல நாவலுக்கு எந்த ஒரு முன்னுரையும் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால், முன்னுரை வாசகனின் சுய சிந்தனையை சிறைப்படுத்திவிடும் என்பதே என் எண்ணம். 102 பக்கங்கள் கொண்ட இந்த நாவலுக்கு எட்டுப் பக்க முன்னுரை!

முல்லா கதை மட்டுமே தெரிந்திருக்கும், இல்ல, அதுவும் தெரியாமலிருக்கும் இன்றைய இளையோருக்கு, இந்நாவல் அறிமுகம் அவர்களின் வாசிப்பை அச்சுறுத்துமே அன்றி ஆர்வமூட்டாது.

ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டுமென்ற இயல்புகளைக் குறித்து பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறும் போது, “தெளிவின்றி எங்கும் கருகலாய், எவ்வளவு முயன்றாலும் ஐயப்பாட்டின் நீங்காததாய் உள்ள செய்யுட்கள் நாம் கற்று இன்புறுதற்குரிய கவிதைகள் ஆகமாட்டா” என்று கூறுவார். இந்த வரையறை எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

இவை ஒருபுறமிருக்க, தமிழவன் அவர்களின் ஸ்டக்சுரலிஸம் நூல் வெளிவரும் போது நான் சேவியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, தமிழ்த்துறைப் பேராசிரியர்களே அந்நூலிலுள்ள பத்தியளவுள்ள நீண்ட வாக்கியங்களை வாசித்துக் காட்டி, அவற்றைப் புரியாத படிகளென விமர்சித்துக் கொண்டிருந்தனர். அது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதே வேளையில், அது தோன்றிய பின்புதான் தமிழ் இலக்கிய விமர்சனப் பார்வையின் போக்கு மாறியுள்ளது. இலக்கியங்கள் மீது நவீன உத்திகளைப் புகுத்தி வாசகனை மறு வாசிப்பிற்கு உட்படுத்தியது. படைப்பாளிகளும் விமர்சகர்களாகும் நிலை உருவாகியிருக்கிறது என்ற பன்முகச் சாளரம் திறந்ததையும் காண முடிகிறது.

பேரா.சிவசு அவர்கள்

பேரா.சிவசு அவர்கள் எதை எடுத்துச் செய்தாலும் அது எதிர்காலத் தளமாக இருக்கும். அவர் எப்போதுமே அடுத்த தளத்தைப் பற்றி யோசிப்பவர்; நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்பவர். அவர் எடுத்து நடத்தும் பயிற்சிப் பட்டறைகளும் அப்படிப்பட்டதே. அந்த வகையில் தமிழவனின் இந்நாவல் எழுப்பிய வினாக்களாகட்டும்; விடைகளாகட்டும். அவை இப்போது தெளிவின்றித் தெரிந்தாலும் அவற்றின் உண்மைப் புலத்தை காலம் காட்டி விடும்.

* * *

தொடர்புடைய பதிவுகள்:

‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை

நெல்லையில் ஒரு நிகழ்வு

Advertisements
 

4 responses to “பொதிகை அடிவாரத்தில் ‘முஸல்பனி’

 1. சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

  25/08/2013 at 8:41 பிப

  தமிழுக்குத் தேவையான பட்டறை.

  தன்னை முன்நிறுத்திப் படைப்பாளிகள் படைப்புகளைப் படைக்க, சிவசு அய்யா அடுத்த தலைமுறையை வளர்க்கப் பாடுபடும் முயற்சி நன்முயற்சி.

  விழாவை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.
  அசின் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.

  – சௌந்தரமகாதேவன், திருநெல்வேலி.

   
 2. V.P. Somasundaram

  26/08/2013 at 8:47 பிப

  படித்தேன் வியந்தேன்.!!

   
 3. வாணி

  31/08/2013 at 6:16 முப

  உங்கள் கட்டுரையைப் பார்த்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மலையாளத்தில் மைக்ரோ நாவலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இலட்சக்கணக்கான வாசகர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். தமிழில் முதல்முறை மைக்ரோ நாவல் வெளிவருகின்றது. இதைக் கல்வித் துறையை சாராத வாசகர்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். தமிழ்த் துறையை சார்ந்தவர்கள் இதைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. ஏன் இந்த மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

  இத்தாலிய எழுத்தாளர் இட்டாலோ கால்வினோ குளிர்கால இரவில் ஒரு பயணி என்ற நாவலை எழுதி உள்ளார். இந்நாவலின் மொத்தக்கதையும் ஒரு நாவலை எப்படி வாசிப்பது என்பதைப் பற்றியே பேசுகிறது. எங்கேயும் கதாநாயகன், கதாநாயகி காணப்படுவதே இல்லை. இந்த நாவலை இத்தாலியில் மிகச்சிறந்த நாவலாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதை எவ்வாறு புரிந்து கொள்வது? இத்தாலிய எழுத்தாளர்கள் தங்கள் நாவலின் கதைக்கு கிரேக்கத் தொன்மங்களை உள் வைத்து எழுதுகின்றனர். இது போன்ற உலகத் தரமான கோட்பாடுகளைப் பயன்படுத்தி முஸல்பனி உருவாக்கப் பட்டுள்ளது. இங்கு இந்தியத் தொன்மங்களையும் தமிழ் வரலாற்றையும் தமிழ்த் தேசியத்தையும் உள் வைத்து எழுதப்பட்டுள்ளது.

  தமிழ்த் துறையை சாராத நடராஜனும், ஜமாலனும், சா.தேவதாஸும், எஸ்.சண்முகமும் புரிந்து கொண்டுள்ளனர். தமிழ்த்துறை சார்ந்தவர்கள் இந்த நாவலை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை? ஒரே இலக்கியப் பிரதியை புரிந்து கொள்ளும் தன்மை வேறுபடுகின்றது. இலக்கியமும் உலகமும் தொடர்ந்து நவீனமாகிக் கொண்டே வருகிறது. இந்த நவீனத்தை பழமையில் இருந்து பார்த்தால் புரியாததாகவே தோன்றும். இந்த மயக்கத்தை, நாவலைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் மாணவர்கள் மத்தியிலும் கொண்டு செல்வது மிகவும் தவறானது.

  ஜமாலன், தேவதாஸ், சிவசு, நடராஜன் போன்றவர்கள் பேசியதை முக்கியத்துவப்படுத்தாமல் புரியாத நாவல் என்று பேசிய ஓரிருவருடைய கருத்தை முக்கியத்துவப்படுத்தி கட்டுரை அமைந்திருப்பது வேடிக்கையாக உள்ளது. புதிய இலக்கிய வகை ஒன்று உருவாகும் போது பழைய படைப்பை மனதில் வைத்துப் பேசுவதும் வியப்புத்தான்.

  இவர்களுடைய கருத்துப்படி பார்த்தால் தி.ஜானகிராமனுக்குப் பிறகு நாவல் எழுத தேவை இல்லை என்று தோன்றுகிறது. தி.ஜானகிராமனின் நாவலை வைத்து உலக நாவல்களைப் புரிந்து கொள்ள முடியும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. நாவலில் புதிய வகை ஒன்று உருவாகும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அடம் பிடிக்கும் சிலரின் கருத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பெரும்பான்மையானவர்களின் கருத்தை அலட்சியப்படுத்தி சிறுபான்மையினரின் கருத்தை உயர்த்திப் பேசுவது சரியான விமர்சனம் ஆகாது.

  மனுஷி ஒரு புதுக்கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளார். அவர் கவிதையில் படிமமும் குறியீடும் பெண்சார்ந்த வடிவங்களை மிக லாவகமாகப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இந்த புதுவித எழுத்தைத் தன் கவிதைக்குள் பயன்படுத்தும் ஒருவரால் நவீன எழுத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது வியப்பூட்டுகின்றது. இந்த நாவலுக்குக் களமாக எல்லோருக்கும் தெரிந்த சைவம், வைணவம், சங்க இலக்கியம், நாட்டுப்புறவியல், வரலாறு, அறிவியல், கணிதம், தத்துவம் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அழிந்த தமிழ்த் தேசத்தை நினைவில் உருவாக்கும் எண்ணத்துடன் உள் கதை இயக்கமுறுகின்றது. (‘சிற்றேடு’ பத்தாவது இதழில் வந்துள்ள முஸல்பனி நாவலை எப்படி வாசிப்பது என்ற நிதா எழிலரசியின் கட்டுரையை பார்க்க.) இது போல் பல விஷயங்களைச் சொல்லலாம்.

   
 4. asin sir

  01/09/2013 at 11:02 பிப

  பொதிகை அடிவாரத்தில் ‘முஸல்பனி’ கட்டுரைக்கு பின்னிணைப்பு இது:

  1. அத்திரிகப்பாவுக்கு எட்டு திசைகள்:

  அத்திரிகப்பா என்பவன் தெகிமொலா அரசர்களில் முதலாமவன் என்பது புத்தகங்களிலும் இலக்கணங்களிலும் சோதிடக் குறிப்புகளிலும் உண்டு (இவர்களின் இலக்கணங்கள் ஒன்று போல் தொடர்ந்து இன்னொன்று எழுதப்படும் ஆனால் வேறானவை).

  அதில் ஒரு குறிப்பு இப்படி எழுதப்பட்டுடிருந்தது:

  ஆரியர்கள் வருவதற்கு முன்பு மூவாயிரத்து முந்நூற்று முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அத்திரிகப்பா இருந்தான். அத்திரிகப்பா ஒரு வடிவமா, ஒரு நிகழ்வா, ஒரு தனி நபரா என்று கூற முடியாது. ஓர் ஒலியா, இசையா என்பதும் நிச்சயமில்லை.

  அத்திரிகப்பாவுக்கு எட்டு திசைகள் இருந்தாலும் அவைகளுக்குப் பெயர் கிடையாது. இது நமக்குப் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயமாக இருப்பினும் அப்படி ஒன்றும் விளங்க முடியாத கருத்தும் அல்ல. அத்திரிக்கபா விபத்துக்களிலிருந்து தப்புவதற்குப் பத்து அறைகளில் ஒரே நேரத்தில் வசிப்பவன் என்று அவனது பிரஜைகள் பல காலமாக நூல்களில் எழுதி வருகிறார்கள். அவன் ஓர் அறையில் தூங்கும் போது அவனது ஆவி (அவனது மாளிகையில் தாதிப் பெண்கள் கூறும் நாட்டுப்புறக் கதைகளில் வருவது போல்) மீதி ஒன்பது அறைகளில் தூங்கும். ஆபத்து ஏதேனும் நேரிட்டால், எல்லோரும் அனுமானிப்பதுபோல், அவன் தூங்கும் அறைக்கு அடுத்தடுத்த அறைகளில் அவன் கூடுவிட்டுப் பாய்ந்துபோய் விடுவதை அவனது விரோதிகளின் சேனாதிபதிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கூறுகையில் அவர்களின் கட்டுக்கடங்காத கோபம் விளக்க முடியாதது.

  காலை நேரங்களில் ஏழு பார்பர்கள் வரவழைக்கப்பட்டாலும் முகச்சவரம் செய்து முடிக்கும் வரை எந்த முகம் நிஜ முகம் என்று யாருக்கும் தெரியாது. அத்திரிகப்பாவின் முன்னோர்கள் நூற்றைவர். அவர்களில் பலர் பார்பர்களால் சதித் திட்டமிடப்பட்டுக் கொல்லப்பட்டது எல்லாக் கதைப்பாடல்களிலும் வருகிறது.

  பின்பக்கத்திலிருந்து வாசிக்கப்படும் தெகிமொலா சரித்திரம் அத்திரிகப்பா என்னும் முதல் அரசன் பற்றிக் கூறுவதுடன் ஆரம்பிக்கிறது.

  2. முந்நூற்று அறுபத்தைந்து படிகள்:

  அத்திரிகப்பாவின் ஆதிமொழியில் இருந்த காலம் பற்றிய கருத்து, விளக்குவதற்கு எளிமையாக இருந்தது போலவே, புரிந்து கொள்வதற்கும் கடினமானது. ஏனென்றால் அன்றிலிருந்து இன்றுவரை இவர்களின் பழமொழி ஒன்று கூறுவதுபோல, வாலையும் தலையையும் குழப்பினால் யாருக்குப் புரியும்? விஷயம் சாதாரணமானது. காலமும் இடமும் குழம்பிப் போன ஒரு பதிலைக் கொண்ட விடுகதைதான் அடிப்படை விஷயம்:

  ‘முந்நூற்று அறுபத்தைந்து படிகள் கொண்ட ஆழமான கிணறு. அது என்ன?’

  பதில் தான் பிரச்சினை.

  (எந்த விடுகதையின் பதிலில் தான் பிரச்சினை இல்லை?)

  பதில்: ஓர் ஆண்டுக்கு முந்நூற்று அறுபத்தைந்து நாட்கள் (சாதாரண ஆண்டு).

  கேள்வி, இடத்தையும் (கிணறு – வடிவமான ஆழம்) ஆண்டு என்ற காலத்தையும் (படிகள்) இணைக்கிறது.

  இது போல் கீழ் வரும் கணக்கு, அறிவால் புரிவதை விட உணர்வால் புரிந்து கொள்வது எளிது.

  அத்திரிகப்பாவின் மகள் 3300 ஆண்டுகளுக்குப் பிறகு 3 மணிக்கு (அதிகாலை) 3 நிமிடங்கள் இருக்கும் போது பிறந்தாள். அவள் பிறந்த நேரத்தைத் திசைக்கொரு கடவுளாக நான்கு கடவுளர்கள் சாட்சி கூறினாலும் நான்கு திசையையும் ஒரே முகமாகக் கொண்ட – இடது புறம் கறுப்பும் (கோபம்) வலது புறம் சிவப்பும் (இதுவும் கோபத்தைக் குறிக்கும்) நிறமான – கடவுள் ஏற்கவில்லை. இந்த மறுப்பு ஆதிகால நூற்களின் அடிக்குறிப்புகளில் நீக்கமறப் பிரஸ்தாபிக்கப்பட்டது.

  அவளுக்குக் காரணமின்றி வெளிநாட்டுப் பெயர் வைக்கப்பட்டிருந்தது: முஸல்பனி.

  முஸல்பனி இரண்டு கால்களும் சம அளவு கொண்டவளல்ல. ஏனெனில் மூன்றங்குலம் குறைவாக உள்ள அவளது இடது காலில் அப்படி ஒரு குறை உள்ளதுபற்றி யாருக்கும் தெரியாதபடி ஓடியாடி நடந்து பதினாறு வயதைக் கடந்தாள். காலமும் இடமும் இணைந்த வளாகையால் அத்தகைய ஓர் ஆற்றல் அவளுக்கு இருந்தது என்றனர் தெருவோரத்தில் வாழ்ந்த ஏழைகள்.

  பள்ளிக்குப் போகும்போது இவளை ஒரு மீனவனும் (இவனுக்கு ஒற்றைக் கண்) ஒரு வேடனும் (இவனுக்கு ஒரு கையில்லை) வேறு பதின்மூன்று பேர்களும் காதலித்தது பற்றி முஸல்பனி யாருக்கும் சொல்லவில்லை. அரச குடும்பத்துப் பெண்ணைப் பற்றி அவதூறு பேசுவது தவறு என்று கருதியதால் அவளுடைய பதினைந்து காதலர்களும் வாய் திறக்காததால், அவர்களின் காதல் ஊருக்குத் தெரிந்த விதம் மர்மமானது. வேடனுக்கு இரு பக்கமும் காதுக்கருகில் தொங்கிய கிருதா, புலி போன்று அவனைக் காட்டியதென்ற தனிச் செய்தி விசேஷமானது – அது வேறு விசேஷம் கொண்ட கவனிப்பைப் பெறாவிடினும்.

  முஸல்பனியின் தாய் மட்டும் ‘வார்த்தையானது மாம்சமானது’ என்று தன் மகளைப் பற்றிக் கூறினாள் என்று, வீட்டுத் தாதிப் பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்தபின் தன் ஆடைகளைக் களைந்து தெரு முனைகளில் காட்சி தரும் போது, எல்லாரிடமும் கூறினாள்.

  முஸல்பனியின் சிலைகளில் ஐந்து கைகள் இருந்தாலும் அவற்றில் மூன்று கைகள் வெட்டப்பட்டவை; ஒரு கை எப்போதும் வெள்ளைச் சங்கை உயர்த்திப் பிடித்திருந்தது. இன்னொரு கையில் மேகம் பாடிக் கொண்டிருந்தது.

  முஸல்பனியின் அரக்கத்தனமான, மூன்று அங்குலம் நீளம் குறைந்த, காலின் பாதத்திற்குக்கீழ் ஒருவன் அகப்பட்டிருந்தான். அவனது தலையில் தலைப்பாகையும் தோளில் துண்டும் காணப்பட்டன. உடல் கறுப்பாக இருந்தது. அது முஸல்பனியின் வெண்மை நிறத்துக்கு அழகைக் கூட்டியது. அவளது கண்கள் மேகத்துக்கப்பால், தெரிந்த இருண்ட வானத்தில் ஆயிரமாயிரமாய் கண் சிமிட்டிய நட்சத்திரங்களில் பதிந்திருந்தன.

  இவை முஸல்பனி நாவலிலுள்ள முதல் இரண்டு அத்தியாயங்கள். இந்நாவல் முழுமையும் சுவைத்து இன்புற நினைப்போர் ஏற்புடைய முகவரியில் நாவலை வாங்கிப் படிக்கவும்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: