RSS

‘அர்த்த’ ராத்திரி

15 ஆக

சிறுகதை: அசின் சார், கழுகுமலை.

Picture: Rejira Thembhavan

கும்மிருட்டு.

கருப்பு மை பாட்டிலுக்குள் விழுந்த கருவண்டுக்கு எப்படி எங்கிட்டும் எதுவும் தெரியாதோ, அப்படியொரு இருட்டு.

கண்ணு மண்ணு தெரியாத அவ்விருட்டு அறைக்குள், எப்படியோ வந்து சேர்ந்த அச்சிறு பூச்சி “கீர்ர்ர் கீர்ர்ர்” என்று இரைந்து தன் இனப்பெடைக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது. வெளியே வீசும் காற்றின் வேகம் அதிகமாகும் போது மட்டும், உட்புறம் பூட்டப்பட்டிருந்த மேற்கு புற ஜன்னல் கதவிடுக்கின் வழியாக லேசான காற்று கோடு போல் உள்ளே பாய்ந்தது.

அந்த இருட்டறையின் உட்புறம் சுவிச் போர்டுக்கு அருகிலும் எதிரிலுமாக இருந்தது ஒரு புத்தக அலமாரி. அதன் மேல் தட்டில் சாய்வாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் கடைசியாய் இருந்த புத்தகம் மட்டும் கொஞ்சம் கூடுதலாகச் சாய்ந்து வெளியே துருத்திக் கொண்டிருந்தது.

உடல் வளைந்திருந்த அது, திடீரெனச் சரிந்து சுவிச் போர்டில் உரசியபடி கீழே விழ, டியூப் லைட் சுவிச் ஆன் ஆனது.

அறையெங்கும் ‘பளிச்’.

அது ஒரு நூலக அறை!

இருளை விரட்டியபடி கீழே விழுந்த புத்தகம் அடிபட்ட வேதனையையும் மறந்து சிரித்தது.

வரிசையாக இருந்த புத்தக அலமாரிகளில் உள்ள புத்தகங்கள் எல்லாம் ஒரு கணம் இதைப் பார்த்துத் திரும்பின.

“எப்பவுமே இவன் இப்படித் தான். ராத்திரி ஆயிட்டா இவனோட குசும்பு வேலையக் காமிக்க ஆரம்பிச்சிருவான்” என்றது அதைக் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு புத்தகம்.

கீழே விழுந்ததோ ஒரு குழந்தைகள் புத்தகம். மூச்சு இரைக்கத் தன் மேலில் அடிபட்ட இடத்தைத் தடவி விட்டுக் கொண்டே “பின்னே என்னவாம்? எவ்ளோ நேரந்தான் ஒரே இடத்துல உக்காந்துக்கிட்டு இருக்கிறது? வைக்கிறவனாவது நம்மள ஒழுங்கா வைக்கணும். பொறுப்பில்லாமா, கோணமானலா வெச்சுட்டுப் போயிருதான். இடுப்பு வலிக்குதுல” என்றது.

“நீயாவது பரவாயில்ல தம்பி, ஏதாவது பள்ளிக்கூடத்து பிள்ளைக உன்னெ எடுத்துப் பாக்குறாங்க; படிக்கிறாங்க. ஆனா, அதோ பாரு! அந்தக் கடைசி அலமாரியில; எத்தனையோ வருசக் கணக்கா, யாரும் பயன்படுத்தாம படுத்திருந்து படுத்திருந்து தூசியடைஞ்சு தூங்குற புத்தகங்கள் எத்தனை இருக்கு தெரியுமா?” ஆதங்கத்துடன் கேட்டது பக்கத்து அலமாரி விளிம்பிலிருந்த புத்தகம்.

அப்போது அந்த அறையின் மூலையிலிருந்த அலமாரியின் மேல் தட்டில் “லொக் லொக்”னு இருமுற சத்தம் கேட்டது. “என்ன பெரியவரே உடம்புக்கு முடியலையா?” கீழே விழுந்த குழந்தைகள் புத்தகம் கேட்க,

நெஞ்சு பிதுங்க இருமிக் கொண்டே, “மனுசங்களுக்கு… மருந்துவம் சொல்ற… நூற்றாண்டுப் பழமையான குறிப்புகளை… நான்… பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். லொக்! ஆனாலும், யாரும்… என்னெத் தேடுறதோ, படிக்குறதோ இல்ல. ஒரே இடத்துல இருந்து என் ஆயுசும் முடிஞ்சு போச்சுன்னு கவலையா இருக்கு. என் மேலெல்லாம் அடை அடையா தூசி படிஞ்சு, இப்போ நானே உடம்புக்கு முடியாமக் கெடக்கேன். இப்படியே போனா இன்னுங் கொஞ்ச நாளுல சிறு சிறு பூச்சிகளுக்கு சீக்கிரமே நான் இரையாயிடுவேனோன்னு பயமா இருக்கு பேராண்டி!” என்றது.

“ஒன்னும் கவலப்படாதீரும் பெரியவரே! உண்மையில கவலப்பட வேண்டியது இந்த மனிதர்கள்தான். ஆனா ஒன்னு! புத்தகமா இருக்குற நமக்கே இந்தக் கதின்னா, நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்துல ஓலைச் சுவடிகளில இருந்த எவ்வளவோ அரிய நூல்களெல்லாம் அழிஞ்சு போனதுல என்ன ஆச்சர்யம் இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே, நூலகர் உட்காரும் ரோலிங் சேரில் ஒரு ஜம்ப் செய்து உட்கார்ந்தது அந்தக் குழந்தைகள் புத்தகம்.

“நீ சொல்றதும் சரிதாம்” என்று சொன்ன பக்கத்து அலமாரியிலிருந்த புத்தகம், “நான் சமீபத்துல ஒரு டாக்டர் வீட்டுக்குப் போயிருந்தேன். கூட்டம்னா கூட்டம் அப்படியொரு கூட்டம். வர்ரவங்களுகெல்லாம் மருந்து மாத்திரைன்னு பை நெறைய கொடுத்து விடுறாங்க. இருக்குறவங்களும் ஆபரேசன் அது இதுன்னு பேசிக்கிறாங்க. பணத்த எண்றதுக்கு பேங்க் மாதிரி மெசினு! பாக்கப் பாக்க எனக்குத் தலையே சுத்திருச்சி. ஆனா பெரியவரே! உங்கள மாதிரியான மருத்துவ நூல்கள் பற்றி யாருமே அங்க பேசிக்கல!” என்றது வருத்தத்துடன்.

இருமல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தவிப்பாறிய அந்தப் பழைய மருத்துவ நூல் மெதுவாகக் கண்ணயர்ந்து தூங்க, அருகிலிருந்த இன்னொரு மருத்துவப் புத்தகம் சொன்னது, “செலவில்லாம, உடலுக்குக் கெடுதி இல்லாம இவங்க முன்னோர், நம்ம முன்னோர் வழியா எத்தனையோ மருத்துவக் குறிப்புகளை எழுதி வச்சிருந்து என்ன பிரயோசனம்? ம்… எல்லாம் வீணாப் போச்சு? ஆனா ஒன்னு தம்பி! உன்னையாவது எடுத்துட்டுப் போய் படிக்கிறாங்களேன்னு சந்தோசப்படு” சொல்லி பெருமூச்சு விட்டது அந்தப் பழைய புத்தகம்.

எதிரே நாவல் பகுதியிலிருந்து ஒரு நாவல், “எங்க படிக்கிறாங்க, போன வாரம் என்ன எடுத்திட்டுப் போன ஒருத்தர், வீட்ல அவர் உக்காந்திருக்கிற சேருக்கு நேரா டி.வி! அதுல கிரிக்கெட் மாட்ச் ஓடுது. வெளம்பரம் வரும் போது மட்டும் என்னக் கையிலெடுக்கிறார். மிச்ச நேரமெல்லாம் என்னிய குப்புறக் கவுத்திடுதார். இதுதான் அவங்க படிக்கிற லட்சணம்” தலையிலடித்து வருந்தியது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கட்டுரைப் பிரிவு நூல்களுள் ஒன்று, “அட! அத வுடப்பா, பெண்களெல்லாருமே நாவல்களான உங்களத்தானே ரொம்பப் பிரியமா எடுத்திட்டுப் போறாங்க!” என்றது.

அதற்கு நாவல், “அது ஒரு காலம் பிரதர். சாண்டில்யன், கல்கி, பாலகுமாரன்னு தேடித் தேடி எடுத்துப் படிச்சது! இப்போ பெண்களும் டி.வி முன்னாடி உக்காந்து, ‘புடிச்சி வெச்ச புள்ளயாரா’ ஆயிட்டாங்க. அவங்க எந்த அளவுக்கு அடிமையா இருக்காங்கங்கிறதுக்கு, ஒரு சேதிய சொல்லுதேன் கேளும். போன மாசம் ஒரு வீட்டுல திருடன் ஒருத்தன் புகுந்திருக்கான். அங்க ஒரு அம்மா தனியா இருந்து டி.வி பார்த்துக்கிட்டு இருந்திருக்காங்க. உள்ள வந்த திருட்டுப்பய கிச்சன்ல போய் மூக்குப் புடிக்க சாப்பிட்டுட்டு, நிதானமா அந்த அம்மாகிட்டப் போய், பீரோல் சாவிய பணிவா கேட்டுருக்கான். டி.வி பார்த்துக்கிட்டிருந்த அந்தம்மாவும், திரும்பிப் பார்க்காம இடுப்புல இருந்த சாவிய உருவிக் கொடுத்து, ‘போகும் போது மறக்காம சாவியக் கொடுத்திட்டு போ’னு வேற கண்டிசன் போட்டிருக்கு! அவனும் ‘சரி’ன்னு சொல்லிப் புட்டு, அந்த அம்மாவையும் டி.வி பொட்டியையும் விட்டுட்டு, வீட்ல இருந்த அத்தன சாமானையும் சுருட்டிக்கிட்டு போயிருக்கான் திருட்டுப்பய”

சொல்லி முடிக்கும் போது அத்தனை பேரும் ஒன்றாய் சிரிக்க, “அட, பய சரியாத்தாண்டே செஞ்சுருக்கான்!” மேல் தட்டிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சிரிப்புக் கதைகள் புத்தகம் சிரிச்சுக்கிட்டே சொன்னது.

“சரி சரி! என்னதா இருந்தாலும், எப்பமும் சமையக் கட்டுக்குள்ளேயே இருக்கிற அவங்களுக்கு வேறென்ன ரிலாக்ஸ் இருக்கு?” என்று ஒரு புத்தகம் வெள்ளந்தியாய் இரக்கப்பட்டதும்,

அருகிலிருந்த நீதி நூல், மிகுந்த கோபத்துடன், “சமையல் கட்டே ஓர் அடிமைத்தனம்; இதுல ரிலாக்ஸுனு சொல்லி இன்னோர் நவீன அடிமைத்தனமா? அறிவியல் கண்டுபிடிப்பு அறிவ வளக்கறதுக்கு; யாரையும் அடிமைபடுத்த யில்ல! ம் ம்! இனிமேலாவது அவங்களக் கொஞ்சம் சுயமா சிந்திக்க விடுங்க.” கறாராகச் சொல்லிவிட்டு முகத்தை அங்கிட்டு திருப்பிக் கொண்டது.

இப்படியொரு பதிலை யாரும் எதிர் பார்க்காததால் ஒரு நிமிடம் அனைத்தும் வெலவெலத்து அமைதியாயின. சூழலைப் புரிந்த இனிய இல்லறம் புத்தகம் பேச்சைத் திசை திருப்ப, “ஆங் ஆங்க்! எல்லாரும் இங்க பாருங்க! இன்னைக்கு இருக்குற குட்டி குட்டி பசங்களப் பாருங்க! எப்பிடி துருதுருன்னு இருக்காங்கனு? ம்… நேத்துக் கூட ஒரு பையன் வந்து ரொம்ப நேரம் குழந்தைங்க புத்தகங்க இருக்கிற பக்கம் நின்னானே?” என்றது.

நூலகரின் ரோலிங் சேரில் உட்கார்ந்து, அங்கிட்டும் இங்கிட்டுமாக குழந்தைத் தனத்துடன் ஆடிக் கொண்டிருந்த அக்குழந்தைகள் புத்தகம், இதைக் கேட்டதும் டக்குனு திரும்பிச் சொன்னது: “அந்தப் பையன்தானே? அவன் என்னடான்னா சுத்தி சுத்தி வந்து, ஸ்பைடர்மேன் இருக்கா? பேட்ஸ்மேன் இருக்கா?னு தேடிட்டு உதட்ட பிதுக்கி “அப்பா, இங்க வேஸ்ட்”னு சர்டிபிகேட் கொடுக்கிறான்! என்னத்தச் சொல்ல? அவங்கப்பா அறிவ வளர்த்த நாம, இவன் அறிவ வளர்க்கமாட்டமா என்ன?” ஏக்கத்தோடு கேட்டது.

அதுவரை வலப்புற அலமாரியின் மேல்தட்டு விளிம்பில் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டுமிருந்த சுற்றுலாப் பிரிவுப் புத்தகம் வாய் திறந்து, “அவனாவது உன்னெ வந்து பார்த்துட்டுப் போயிருக்கான்னு சந்தோசப்படு தம்பி. போன மாசம் நான் போயிருந்த ஒரு வீட்ல, குழந்தைங்க படுறபாடு அப்பப்பப்பா…! தாங்க முடியல தெரியுமா? கொஞ்சம்கூட சுதந்திரமோ, சந்தோசமோ அவங்க கிட்டப் பாக்க முடியல. மொத்தத்துல அவங்க வாழ்க்கையே விநோதமா இருந்துச்சி! ஸ்கூல் விட்டா வீடு. வீட்டுக்கு வந்த பின்னே டியூசன். மறுபடியும் படிப்பு. அப்புறம் வீடு, அப்புறம் படுக்குற வரைக்கும் படிப்பு, படிப்புதான்! தாய் தகப்பனப் பார்த்தா டையனோசரப் பாத்த மாதிரி முழிக்குதுக ஒவ்வொரு பிள்ளைகளும்” என்று மனம் வெம்பியது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர்கள் பிரிவு புத்தகம், “ஏம்ப்பா, கணித மேதைன்னு புகழுதாங்களே, அவரே கல்லூரியில படிக்கும் போது கணிதப் பாடம் தவிர பிற பாடத்துல பெயிலுதாம் தெரியுமா? திரும்ப எழுதியும் அவரால பாசாக முடியலையாம்! அதுக்காக அவர ஒன்னுக்கும் லாயக்கில்லாத ஆளுன்னு யாரும் சொல்லலியே. அவரிட்ட இருந்த கணித மேதாவித் தனத்தத்தான எல்லாரும் பெருமையா பேசிக்கிறாங்க. இன்னுஞ் சொன்னா, இதத்தான சாதனைனு புத்தகம் புத்தகமா எழுதியிருக்காங்க” என்றது.

அதே அலமாரியின் கீழ்த்தட்டில் இருந்த சாதனையாளர்கள் பகுதியிலுள்ள புத்தகம், ‘அதாம்பா, படிக்காதவன் எழுதுனத படிச்சவன் பாடமாக்குறான். வாழ்க்கையில தோத்துப் போனதா நெனச்சவந்தான் வரலாறு பேசுற மாதிரி செயிச்சிருக்கான். அதச் சொல்லத் தான நாம இவ்வளவு பேரும் ஒன்னா இருக்கோம்” என்றது.

இதைக் கேட்டவுடன் அதுவரை அமைதியாக இருந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், “அது சரி மாப்ள! அப்போதைக்கு பிள்ளைகளுக்கு படிப்பு வராட்டாலும், வராதத வா வான்னு யாரும் டார்ச்சர் பண்ணல. அதனால, அது போக்குல ஆர்வப்பட்டதுல அறிவ வளர்த்துதுக. இப்ப அப்பிடியில்லையே! பிள்ளைகளுக்குன்னு சுயமா சிந்திக்க என்ன பொழுது போக்கு இருக்கு? நீயே சொல்லு?” என்று கேட்டது.

“ஓ இருக்கே! புத்தியக் கட்டிப் போடும் மங்குனித்தனமான கார்டூன் சானல்களும், வீடியோ விளையாட்டுக்களும்! அத்தனையும் ஒட்டுமொத்தமா குழந்தைகளோட எல்லா விளையாட்டுக்களையும் விழுங்கிட்டு, பொல்லாத பூதமா நடு வீட்ல குத்தவச்சி இருக்குன்னா பாத்துக்கோயேன்” என்று நிலைமையை விவரித்தது விளையாட்டுப் பிரிவுப் புத்தகம்.

அப்போது எதிர் பட்ட உடல் நலப் புத்தகம், “ஏம்ப்பு, பிள்ளையாண்டம்! ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ. இன்னைக்கு இருக்கிற பிள்ளைகளுக்கு முன்ன மாதிரி உடல் நல விளையாட்டும் இல்ல; உள்ளம் வலுப்படுற மாதிரி, நாசூக்கா நகைச்சுவையா புத்தி சொல்லுற நம்மள மாதிரிப் புத்தகங்களும் அவங்களுக்குக் கிடைக்கிறதில்ல. இன்னுஞ் சொல்லப் போனா, நாமெல்லாம் இங்கிருக்கோங்கிற சேதிய அவங்களுக்குச் சொல்றதுக்கும் ஆளில்ல” என்று வருந்திச் சொன்னது.

அருகிலிருந்த பாட்டி வைத்திய நூல், “அவங்க தாத்தா பாட்டி கூடவா இல்ல?” என்று ஆதங்கத்துடன் கேட்டது.

இதைக் கேட்ட வரலாற்றுப் புத்தகம், “ம்… ம்! அதெல்லாம் அந்தக் காலம் அப்பத்தா! தாத்தா பக்கத்துல உக்காந்து அவர் சொல்ற ராசாராணி கதையில ஆரம்பிச்சு, அன்றாடம் வேலை செஞ்சு பொழைக்கிற குப்புசாமி கதை வரை எல்லாத்தையும் பேரன் பேத்தி கேட்டதும்; அவங்க மழலைப் பேச்சில பெருசுக ரெண்டும் சந்தோசப்பட்டதும் சொர்க்கமா இருந்துச்சு! ஆனா இப்ப, ஒவ்வொரு வீட்லயும் வயசானவங்களுக்குத் தனியா ஒரு அறையக் கொடுத்து, அதுல ஒரு டி.வியையும் கூடவே வெச்சுருதானுங்க! பாவம் தாத்தா! கதைக் களஞ்சியமா இருக்குற அவரு சொல்றதுக்கு ஆளில்லாமலும், டி.வி பெட்டியப் பாக்க மனசில்லாமலும் கட்டிலில பரிதாபமா சுருண்டு படுத்திருக்கார்” என்று ஏக்கத்தோடு சொல்லி பெருமூச்சு விட்டது.

“ஏ ராசா, நீ சொல்றதப் பாத்தா, இங்கினக்குள்ள நாம சேத்து வெச்சிருக்கிற அறிவ எப்படிய்யா அவங்க கிட்டச் சொல்றது?” எதிர்பார்ப்போடு ‘பாட்டி கதைகள்’ கேட்டது.

உடனே, அதனருகிலிருந்த நீதிநூல் சொன்னது, “பாட்டி, உனக்கு வயசாயிருச்சுன்னு யோசிக்காம, வெக்கப்படாம, நீயும் நானும் எப்படியாவது அந்த டி.வி பொட்டிக்குள்ள போனாத்தான் உண்டு!”

அப்போது அந்த அறையின் ஓரத்திலிருந்த நிலைக் கண்ணாடியின் முன் தன்னை அலங்காரப் படுத்திக் கொண்டிருந்த “இயற்கை அழகுக் குறிப்பு” நூல் சலித்துக் கொண்டே, “ம்ஷீம்! நானுந் தான் என்னெ அழகு படுத்திப் பாக்குறேன்! என்னிய எடுத்துப் படிக்க ஒரு நாதியக் காணோம்! கெழடு தட்டுன காலத்துல இதுக என்னடான்னா, டி.வி பொட்டிக்குள்ளப் போகப் போகுதுகளாம்! ஐய! நெனப்பப் பாரு?” என்றது ஏளனமாக!

எதிரிலிருந்த அலமாரியில் உள்ள ‘உலகமயமாக்கல் நூல்’ சொன்னது. “ஹலோ! மைனர் சார்! உங்களுக்கு உலக நடப்பே தெரியலனு நெனைக்கேன். இப்பெல்லாம், அழகு சாதனப் பொருட்கள் பேஸ்ட், பவுடர், கிரீம் அது இதுன்னு என்னெல்லாமோ வெளிநாட்டுல இருந்து கப்பல் கப்பலா இறக்குமதி பண்றாங்க. இதுல கத்தாழைய அரைச்சுப் போடு, அருகம்புல்ல அரைச்சுக் குடின்னா யாரு கேப்பா? உங்களைத் தேடி ஒருத்தரும் வரமாட்டாங்க. சோ, டோன்ட் வேஸ்ட் யுவர் டைம். நீங்க நிம்மதியா மேல ஏறிப் படுங்க!” என்றது.

‘அழகுக் குறிப்பு நூல்’ ஏமாற்றத்துடன், “என்னப்பா நம்மளத் தேடி கொஞ்ச வயசுக்காரங்க கூடவா வரமாட்டாங்க? தேடித் தேடி பிடிச்ச புத்தகத்த எடுத்துட்டுப் போய் படிப்பாங்களே?” என்றது ஆதங்கத்துடன்.

இதைக் கேட்டுகிட்டிருந்த சிறுகதைப் புத்தகம் “அட! அது எவ்வளவு கிளுகிளுப்பான விசயம்?” என்று சொல்ல,

வெடுக்கென்று திரும்பிய நாவல் பகுதி நூலொன்று, “ஆமா ஆமா! தன் காதலச் சொல்லத் தவிக்கிற சில பேர், ஒருத்தரொருத்தரச் சந்திக்க நம்மளச் சாக்குச் சொல்லில வருவாங்க?” என்று முடிப்பதற்குள்,

“சரியா சொன்னீங்க” என்று இடை மறித்த ‘வரலாற்று நாவல்’ மிகுந்த ரசனையோடு, “ம்…ம்! அதெல்லாம் மறக்க முடியாத ஞாபகங்கள் தம்பி!” என்று தொடர்ந்தது…

“நம்ம அறையிலேயே புத்தக அலமாரியின் இந்தப் பக்கம் அவளும்; அந்தப் பக்கம் அவனுமா நின்னு புத்தகம் தேடுற சாக்குல கண்ணோட கண்ணா பேசிக்குவாங்க. அதப்பாத்து நானே மலச்சுப் போயிருக்கேன். அவனப் பார்த்தபடி, வரிசையா இருக்கும் நம் ஒவ்வொருத்தரையும் மெல்லிய விரலால் அவள் தடவிக்கிட்டே போகும் போது, நானே சிலிர்த்துப் போய் அவங்க கவனத்தத் திருப்ப கீழே விழுந்திருக்கேன்.

உடனே, அவள் காலடியில் விழுந்து கிடந்த என்னைக் கையிலெடுத்து ஆசையாய் என் பெயரைப் பார்த்துக் கொண்டே எல்லாத் தாள்களையும் பின்பக்கமா வளைச்சி முன்னே ஓடவிடுவாள். அப்போது, அவள் முகத்தில் மெல்லிய காற்றை விசிறியிருக்கேன். அக்காற்றின் பரிசத்தில் அவள் என்னைப் பார்த்து சிறிதாய் புன்னகைத்ததும் உண்டு. மேலும், அவள் தேடிய புத்தகமாய் நான் இருந்த போது, எனக்கு அவள் ஈர உதடுகளின் முத்தம் கூட கிடைத்திருக்கிறது.

அவள் என்னை விரும்பி எடுத்துச் செல்லும் போது, கையால் இறுகப் பற்றி என் முகம் முன்னால் தெரியும்படி மார்போடு அணைத்துச் செல்வாள். அவள் மார்பின் இளஞ்சூட்டிலும், இறுகப் பற்றிய விரல்களில் உண்டாகிய வியர்வையிலும் நான் கொஞ்சம் ஈரம் வாங்கி நனைந்து போயிருக்கிறேன். சில நேரம் அவள் கையில் இருந்த லேசான மஞ்சளும் என்மேல் படிந்தது உண்டு! …”

“யோவ்! யோஓ….வ்! வரலாற்று நாவல், போதுமய்யா..!” தலையை சொரிந்து கொண்டே நூலகர் ரோலிங் சேரிலிருந்து ‘தொபீர்’ என்று கீழே குதித்தது அந்த குழந்தைகள் புத்தகம்!

“என்னய்ய்யா இது? வுட்டா, விடிய விடிய விரிச்சுகிட்டே போவீரு போல” என்றதும், தன் நினைவுகளைக் கலைக்க முடியாமல் மெல்லியதாய் முணுமுணுத்துக் கொண்டே தன் கண்களை மூடி அமைதியானது அந்த வரலாற்று நாவல்.

கீழ்த் தட்டிலிருந்த ‘துணுக்குச் செய்தி’ புத்தகம் வேகமாக ஓடி வந்து, “மக்கா! கணக்கா தடியப் போட்ட!” என்று கை கொடுத்துச் சென்றது.

அடுத்த அலமாரியிலிருந்த ஆங்கில நாவல், “ஹலோ பிரதர்! எப்படியோ இந்த மேட்டர நீங்க ஓப்பன் பண்ணுனதனால சொல்றேன். நீங்க பேசிக்கிட்டு இருந்தப்ப எனக்கு ஒரு இன்சிடென்ட் கிளிக் ஆச்சு! ஒன்ஸ் அப்பான் எ டைம், ஒரு கேர்ள், அவா எழுதின பஸ்ட் லவ் லெட்டர்னு நெனைக்கிறேன். அத எப்படி அவளோட லவ்வர்ட்டப் போய் டெலிவரி பண்றதுன்னு திங் பண்ணிடிருந்தா. வெரி பியர்னஸ். பரிதவிச்சி பரிதவிச்சி, பைட் கெர் பிங்கர்ஸ் நெய்ல். ஐ மீன் விரல் நகத்தக் கடிச்சிட்டிருந்தா! அட் தேட் டைம், ஐ காட் எ லட்டர் இன் மை மிடில் ஆப் பேஜஸ், நான் அந்த லட்டர என் பக்கங்களுக்கிடையே வாங்கினேன். உங்க டமில் லிட்ரச்சர்ல சொல்றாப்ல ‘தூதுப் பொருளா’, நான் போய் அந்த லட்டர சேர்த்தேன்” என்று ஒரு வழியா தமிலிஷ்ல பேசி முடித்தது.

அதற்கு நேர் எதிரே உள்ள தட்டில், கையிரண்டையும் தலைக்கு அடைக்கொடுத்து, கால் மேல் கால் போட்டுப் படுத்திருந்த கணிப்பொறிப் புத்தகம், படுத்த வண்ணமே தலையை லேசாகத் திருப்பி, “டியர் பிரெண்ட்ஸ், நீங்க முன்ன மாதிரியே நெனைக்கிறீங்க. ஆனா, என்னைக்கு செல்போனும் இணைய தளமும் வந்துச்சோ; அப்பவே காதல்ல அகக்கவர்ச்சி மறைஞ்சு புறக்கவர்ச்சி தலையெடுக்க ஆரம்பிச்சிருச்சி! வரையறையில்லா வாழ்க்கைக்கு அதுவே அஸ்திவாரமாயிடுச்சு” என்று சொல்லிக் கொண்டே நட்டின காலை எடுத்த கணிப்பொறிப் புத்தகம், எழுந்து நேராக உட்கார்ந்தது. எல்லோரும் இது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க,

“பின்னே?” என்றது முன்னிருந்த இளையோர் புத்தகம்.

தன் முகத்தை நிமிர்த்திய கணிப்பொறிப் புத்தகம், “பின்னே என்ன? பிரேக் இல்லா பேருந்து தான்” என்று இரு கைகளையும் விரித்தவாறு சொன்னது. அதற்குள்,

“அங்கிள்! அப்ப குடும்ப உறவுகள்?” ஆர்வமாய் கேட்டது ஆய்வுக் கட்டுரைகள் புத்தகம்.

அனைவரின் ஆர்வத்தைப் பார்த்து, “உறவுகளை மறந்து உணர்ச்சிக்கும், பாசத்தை மறந்து பணத்திற்கும் அடிமையாகிட்டான் மனிதன்” என்று சொல்லி முடிப்பதற்குள், “அப்ப குடும்பக் கட்டமைப்பு சிதைஞ்சு போகுமே?” தயக்கமாய் கேட்டது தமிழ்க் கட்டுரை.

“நிச்சயமா! அதத்தானே வளர்ச்சின்னு சொல்றாங்க” மெல்லியதாய் சிரித்துக் கொண்டே சொல்லி அவ்விடம் விட்டு அகன்றது கணிப்பொறிப் புத்தகம்.

“தம்பி சொன்னதுலயும் உண்மை இருக்கு” என்று சட்ட நூல்கள் அலமாரியிலிருந்து திரும்பிப் பார்த்த ஒரு புத்தகம், “முன்னெல்லாம் தேச ஒற்றுமை, குடும்ப ஒற்றுமைனு நூல்கள் நெறைய வரும். ஆனா இப்போ வில்லங்கம், விவாகரத்து அப்படில்ல வருது. எங்க சட்ட நூல் பகுதியிலே பாத்தீங்கன்னா, இப்படிப்பட்ட நூல்கள் தாம் அதிகமா இருக்கு” என்றது.

இதைக் கேட்டதும், தலைவர்கள் பகுதியிலிருந்த ஒரு புத்தகம் “ம்ம்.. இதெல்லாம் பள்ளியில படிக்கும் பிஞ்சு வயசுலயே, நல்ல புத்தி சொல்லி வளர்த்திருக்கணும். அதச் செய்யாம இப்பப் பேசுறது, புலிய விட்டுட்டு வாலப் புடிச்ச கதைதான்!” விரக்தியுடன் சொன்னது.

இதைக் கேட்டவுடன், “என்ன பெரியவரே! இன்னைக்கு பள்ளியில எங்க நல்லத, கலைத்திறன, கலாச்சாரத்த சொல்லிக் கொடுக்க முடியுது? தப்பு செஞ்ச பையன கண்டிச்சா பையனும், பெற்றோரும் வாத்தியார இம்சபடுத்தக் கெளம்பிடுதாங்க! இதுக்கெடையில, எதையும் பரபரப்புச் செய்தியாக்கப் போட்டி போடும் மாஸ் மீடியாவால போலீசும் பொசுக்கு பொசுக்குனு வந்திடுது! யாரு சுதந்திரமா செயல்பட முடியுது?” என்று சமூகவியல் பகுதியிலிருந்த புத்தகம் இயல்பாய் கேட்டது.

கல்வியாளர் பகுதியிலுள்ள நூலொன்று இதை முழுமையாக ஆமோதிப்பது போல் தலையாட்டிக் கொண்டே, “பிரதர் சொல்றது நியாயந்தான். பள்ளியில கலை, இலக்கிய, விளையாட்டுப் போட்டின்னாலே, ‘அச்சச்சோ! எம்புள்ள படிப்பு பாழாப் போயிடும்; தயவு செஞ்சு எதுலேயும் சேத்துறாதீங்க’னு தகப்பன் கொடியப் பிடிச்சுகிட்டே ஓடியாறான்! என்ன பண்றது? ‘ஆசிரியப் பணி ஓர் அறப்பணி’ன்னு சொன்னாங்க. இன்னிக்கு அரைப்பணி செஞ்சா போதுங்கிற நிலையாயிடுச்சு!” இச்சு கொட்டிக் கொண்டே சொல்லி முடித்தது.

அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் புத்தகம், “என்ன மாமா! நீங்களே இப்படிச் சொல்லுதீக! நல்ல பண்பைப் படிக்காம, கலைத்திறன வளக்காமா, வெறும் பாடப் புத்தகத்த மட்டும் படிச்சு என்ன பிரயோசனம்?” கேட்டவுடன்,

“மார்க் மாப்ள! மார்க்! அதான் இன்னிக்கு வேணும்! உலகமே நம்பருக்குள்ள வந்திடுச்சி.” என்றது கல்வியாளர் நூல்.

“மாமா, எனக்குப் புரியிறமாதிரி தெளிவா சொல்லுங்களேன்?”

குனிந்து அதன் முதுகில் தட்டிக் கொடுத்தவாறே, “மாப்ள! படிக்கிறவன் முன்னால மாதிரி பக்கம் பக்கமா தேர்வு எழுத வேண்டிய அவசியமில்ல. இப்ப கேள்வியும் நம்பர், பதிலும் நம்பர். திருத்தி வந்தா மார்க்கும் நம்பர். வேலைக்குப் போனா அங்கயும் நம்பர். சம்பளமும் நம்பர். உன் வங்கிக் கணக்கும் நம்பர். பணம் போட்டாலும் நம்பர், எடுத்தாலும் நம்பர். இனியொரு தேசத்தின் குடிமகன்னு சொல்றதுக்கு ஆதாரமே நம்பர்தான்! மொத்தத்துல நீயே ஒரு நம்பர். இப்படி எல்லாமே நம்பருக்குள்ள வந்தாச்சு! ஒவ்வொரு மனுசனும், இந்த நம்பரக் கூட்டுறதிலயும், பெருக்கிறதிலயும், கழிக்கிறதுலயும்தான் குறியா இருக்கான். ஏன்னா, ஒரு நம்பர வெச்சி இன்னொரு நம்பர வாங்கத் தினமும் துடிக்கிறான். நம்பராசை இப்ப அவன்ட பேராசப் பேயா உருவெடுத்திருச்சி. அதுக்காக அவன் எதையும் செய்யத் துணிஞ்சிட்டான். அதனாலதான், அவன் அறிவப் பெருசா நினைக்கிறதில்ல.” மிகுந்த வேதனையுடன் சொல்லி முடித்தது.

அது வரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பொருளாதார பகுதியிலிருந்த கனத்த புத்தகம், இவர்களைப் பார்த்து மெதுவாகத் திரும்பியது. தன் தொண்டையை கனைத்து சரி செய்தது, தன் தாடியை நீவி விட்டுக் கொண்டே,

“தம்பி, நீங்க எல்லாருமே மேலோட்டமாப் பாக்குறீங்க! ஒன்னு சொல்லுதேன். கவனமா கேளுங்க. அனைவருக்கும் கல்வினு சொல்றாங்க. உண்மையில அனைவருக்கும் கல்வி இருக்கா? இல்ல. வேலையிருக்கா? அதுவுமில்ல. சரி, அப்படியே வேலை கிடைச்சாலும், அது படிச்ச படிப்புக்கான வேலையா? பாக்குற வேலைக்கான சம்பளமா? எதுவுமில்ல. இதனாலதான், பல பிரச்சின தொடர்ந்துக் கிட்டிருக்கு! இதெல்லாம் பொருளாதார சமத்துவம் இல்லாததால வரும் தொல்ல. இத ஒரு அரசாங்கம் நெனச்சாத்தான் சரி பண்ண முடியும். அதுக்கு மொதல்ல அப்படி ஒரு அரசு உருவாகணும், இல்ல உருவாக்கணும். அதுக்கான முயற்சி பண்ணாம, வெறுமனே இப்படிப் பேசிப் பிரயோசனமில்ல!

அதில்லாம, மக்கள்தான் எல்லாத்திலயும் மாறிட்டாங்க, அவங்க நுகர்வு மோகம் மாறிடுச்சி, அப்படினு சொல்றதும் ரொம்பத் தப்பு. ஏன்னா, இதுல ஒன்னு சூசகமா நடந்திட்டிருக்கு! எந்த ஒரு நாட்டின் குடிமகனும், இறக்குமதி செய்த பற்பசையிலதான் பல் தேய்ப்பேன்னு அடம்பிடிக்கல. அவன் எப்பவும் போலத்தான் இருக்கான். அவனப் பொறுத்த வரையில மூடியிருந்த அவன் வீட்டுக் கதவு திடீருன்னு திறந்தது. திறந்தவுடனே எக்கச்சக்கமான பொருட்கள் அவனைச் சுத்தி கொட்டப்பட்டன. அத்தனையும் நுகர்வத் தூண்டக்கூடிய பொருட்கள்! அவன் பார்த்தான், பயன்படுத்த ஆரம்பிச்சுட்டான். அவ்வளவுதான்! இதுல நாம யோசிக்க வேண்டியது என்னென்னா? கதவத் திறந்தது யாரு? பொருளக் கொட்டுனது யாரு? கதவத் திறந்தவனுக்கும், பொருளக் கொட்டுனவனுக்கும் என்ன சம்பந்தம்? இத ஏன் மூடியிருந்த இவன் வீட்டுல கொட்டணும்? இந்த மாதிரி விடை காண வேண்டிய வினாக்கள் ஏராளம்!

இப்படிப்பட்ட பேஸ்மட்டம் இருக்கிறதனாலதான், பணம் இருக்கிறவன்ட குவியிது; இல்லாதவன மேலும் இல்லாதவனாக்குது” என்றபோது இடைமறித்த நாட்டுநலப் புத்தகம்,

“இங்க நா ஒன்னு சொல்லிக்கிறேன் பெரியவரே! அரசுக்கு வரி கட்டுறவங்கள்ல, குறிப்பிட்ட சிலர்தான் எப்பவுமே வரி கட்டுறாங்க. வரி ஏய்க்கிறவங்க எப்பவுமே ஏய்க்கத்தான் செய்றாங்க” என்றது.

அதைக் கேட்ட பொருளாதார நூல், “ஓ எஸ்! அதே நேரத்துல வரி கட்டுறவங்கள்லயும் பலபேர் உண்மையான கணக்கக் காமிக்கிறதில்ல. அதையும் கவனிக்கணும். இதெல்லாம் சனங்க மண்டையில ஏறணும்னா, ‘மாஸ் அவார்னஸ்’ வேணும். அப்படியொரு விபரீதம் நடந்திடக் கூடாதுன்னு தான் பெரு முதலாளிகள், அரசியல்வாதிகள் வழியா பெரும் பணத்த பல வழிகளில ஸ்பான்சர் பண்றாங்க! இது சனங்க கண்ண ஈஸியா மறைச்சிடுது. தம்பிகூட சொல்லும் போது, எல்லாமே நம்பர் நம்பர்னு சொன்னாரு. ஆனா, அவர் சொன்ன ஒவ்வொரு நம்பருக்குப் பின்னாலயும் ‘பணம்’ங்கிற குணம் ஒழிஞ்சுக்கிட்டு இருக்கிறதக் கொஞ்சம் உன்னிப்பாப் பாத்தாத் தெரியும்!” தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே பக்கத்திலிருந்த சொம்புத் தண்ணீரை எடுத்து “மடக்மடக்” என்று முழுவதும் குடித்து விட்டு பெருமூச்சு விட்டது பொருளாதாரப் புத்தகம். அதன் வாயின் விளிம்பில் பட்ட நீர் அதன் பெரிய தாடி முடியைப் பற்றிக் கொண்டு கீழே வழிந்தது.

அவ்வேளையில், அதன் வயிற்றுக்குள் இருந்து வெளியே வந்த “வ்வாஆவ்” ஏப்பம் அதற்கு நிம்மதியை தந்தது போலிருந்தது. தொடர்ந்து, “எல்லாத்துக்கும் அடிப்படை பொருள்தான். அத சரி பண்ணாத வர, எதுவும் சரியாகாது!” உறுதியாகச் சொன்னது.

கம்முனு இருந்த அப்பொழுதில் அனைத்துப் புத்தகங்களின் முகத்தையும் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டே, “ஒரு காலத்துல உற்பத்தி சுரண்டலும், உழைப்பு சுரண்டலும் இருந்துச்சு. அத எதிர்த்துதான் நாங்க எழுந்தோம்; பிடிக்காதவங்க எங்களக் கிழிச்சி தீயில போட்டு எரிச்சாங்க! சோர்ந்து போகல; பல பேர் எங்களப் படிச்சு போராடி செயிச்சாங்க!”

கம்பீரமாகப் பேசிய பொருளாதாரப் புத்தகம் ஒரு நிமிடம் அமைதியானது. அனைத்துப் புத்தகங்களும் இதை வெறித்துப் பார்க்க, தன் கண்ணாடியைக் கழற்றிய அது, குரல் கொஞ்சம் தளர்ந்து, “ஆனா இன்னைக்கு, ஒவ்வொரு தனி மனிதனின் மூளையும், ஒவ்வொரு நாட்டிலிருக்கும் மூலப்பொருட்களும் சுரண்டப்படுது. இந்தச் சூழலில ஒரு தேசத்தின் மறுமலர்ச்சிக்காக எங்கள யாரும் படிக்க முன் வராதத நினைக்கும் போது என் மனம் பதறுது! (வாய் குளறியபடி) உ..ட..லே.. மு..ழுசும் நடு..நடு..ங்குது” என்று சொல்லும் போது அதன் கண்களில் இருந்து தாரை தாரையாய் நீர் வழிந்தது!

அதை ஆற்றுப்படுத்தும் விதமாக இயற்கை வளப் பாதுகாப்பு நூல் சொன்னது, “அன்னிக்கு மண்ணுக்குக் கீழேயும் மேலேயும் இருந்தது கொள்ளை போச்சுன்னு வருத்தப்பட்டோம்; ஆனா இன்னைக்கு, மண்ணே கொள்ளை போகுதே! இப்பிடி எத்தன எத்தன?” சோகத்தில் தன் பங்கையும் பதிவு செய்து கொண்டது.

தன் வேட்டி முனையால் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “ம்! இந்த எண்ணம் நாடுகளுக்கிடையே வளரும் போதுதான் போர்க் குணம் வந்திடுது!” கரகரத்து குரல் கன்றி சொன்னது பொருளாதார நூல்.

அது வரை விழித்த கண் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த சங்க நூல், “உலகிலேயே முதன் முதலா, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு பொதுமை சிந்தனையச் சொன்னது நாங்க. ரெண்டாயிரம் வருசமா எவ்வளவு அனுபவ அறிவப் பாதுகாத்து வாரோம். அதுவுமில்லாம, யாரும் நம்மளத் தேடி வரமாட்டாங்களான்னு வாசலப் பாத்து தவங்கெடக்கோம். இவரு சொல்றதப் பாத்தா இனி யாரு வருவா? நாங்க யாருட்டச் சொல்ல?” என்றது.

அப்போது டாய்லெட்டிலிருந்து பேண்ட் ஜிப்பை மாட்டிக் கொண்டே வெளியே வந்த ஓர் இளையோர் புத்தகம், “என்ன பெருசு! ரொம்பவும் பீல் பண்றீர்! அதான் தாடி சொன்னதக் கேட்டீருல்ல. மொத்தத்துல நாம இருக்கிறதும் வேஸ்ட், இவங்களப் பேசுறதும் வேஸ்ட்! என் அறிவுக்குப் பட்டதச் சொல்லுதேன் கேட்டுக்கோரும். செருப்பு அரியணை ஏறுனமாதிரி புராணம் எழுதினவங்க இவங்க; புத்தகம் அரியணை ஏறுனமாதிரி புராணம் எழுதியிருந்தால புத்தி வந்திருக்கும்? ம்! ம்! விட்டுத் தொலையும்! சாரவாடை சன்னலத் தொளைக்குது! கதகதப்பா ஒருத்தர் மேல ஒருத்தர் சாஞ்சி வாய மூடிட்டு நிம்மதியா தூங்கும் ஓய்!” என்றது.

“அப்படிச் சொல்லுடா திருவாசகம்” என்று சமய நூல் பகுதியிலிருந்த ஒரு புத்தகம் சொன்னதும், அதை ஆமோதித்த சத்தமும் அறையெங்கும் கேட்டது.

“டக்… டடக்… கிர்ர்ரீச்!”

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், அத்தனை புத்தகங்களும் அதனதன் இடத்திற்கு எகிறின. குழந்தைகள் புத்தகம் மட்டும் கீழே அயர்ந்து தூங்கிக் கிடந்தது.

கதவு திறந்தது!

வாசல் வெளிச்சத்தின் ஊடே நூலகர் நின்றிருந்தார்.

‘என்னடா இது! ஒரு கதவத் திறந்தா நூறு கதவத் திறந்த மாதிரி சத்தம் வருது?’ என்று மனதிற்குள் நினைத்தவர், எரிந்து கொண்டிருந்த டியூப் லைட்டைப் பார்த்தார்.

‘அடடா! நேத்து ராத்திரி கதவப் பூட்டும் போது கரண்ட் கட்டாயிருந்தது. இருட்டுல இந்த சுவிச்சக் கவனிக்காமப் போயிருக்கேனே?!’ என்று வருந்தியவர் வேகமாகச் சென்று சுவிச்சை ஆப் செய்தார்.

அவ்வேளையில், கீழே விழுந்து கிடந்த புத்தகத்தைக் கவனித்தவர், அருகில் சென்று, “தினமும் இது எப்படி கீழே விழுதுன்னே தெரியல; ஹும்! ராத்திரி ஆயிட்டா இதுக்கு கை கால் மொளச்சிருதோ என்னவோ?” என்று மெதுவாக முணுமுணுத்துக் கொண்டே, அதை எடுத்து அலமாரியில் அடுக்கினார்.

வாயைப் பொத்தியவாறே சிரித்துக் கொண்டன அத்தனை புத்தகங்களும்!

* * *

Advertisements
 

One response to “‘அர்த்த’ ராத்திரி

 1. சட்டநாதன்

  15/08/2013 at 9:03 முப

  நீங்கள் எழுதியுள்ள எல்லா வகையான நூல்களையும் தேடித் தேடி படித்த காலம் உண்டு. இன்று ஒரு சில குறிப்பிட்ட வகைகளை மட்டும் தான் தொடர்கிறேன். காரணங்கள் எல்லாவற்றையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்.

  படம் வரைந்தது ரெஜியா ? நன்றாக உள்ளது.

  பல நல்ல புத்தகங்களை நாம் வெளிச்சத்திற்கு வராதவை என்று பரிதாபமாகச் சொல்கிறோம். அவைகளோ – தேடிப் பார்த்து படிக்க வேண்டிய கடமை உங்களுக்குத் தான் என்று இருட்டுக்குள் நின்று நம்மைப் பார்த்து கண் சிமிட்டுகின்றன.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: