RSS

Monthly Archives: ஓகஸ்ட் 2013

கார(ண)ம்!

படம்: கீற்று

காரமே

நீ அதிகமாகி அதிகமாகி

‘அதிகாரம்’ ஆகி விட்டாய்!

           நன்மை செய்யப் பிறந்ததாகக் கூறுகிறாய்

           நீயே சொல்.

           நீ செய்த நன்மைதான் என்ன?

உன் பலம் பெரிதென்று

ஓர் இனத்தை, ஒரு தேசத்தை

அழிக்கத் துடித்தவனுக்குப் பயன்படுகிறாய்.

           காரணம் கேட்டால் – அதி

           காரமே காரணம் என்கிறாய்!

வேலைகளைச் சுமத்தியே பழக்கப்பட்ட நீ

உன் வேலைகளில் மட்டும்

மெத்தனமும் சோம்பேறித் தனமும்!

           கருப்புக் கணக்குகளை எழுதும் போதும்;

           கருப்புப் பணங்களை அமுக்கும் போதும்

           சுறுசுறுப்பாகும் சூட்சுமத்தை

           எங்கு கற்றுக் கொண்டாயோ?

உன் செயல்களைப் பார்த்து

உன் வழித் தோன்றல்களும்

அப்படியே பின்பற்றுகிறார்கள்!

           நான்தான் அரசன்!

           நான்தான் உங்களைக் காப்பவன்!

           என்று கூறி

           மான்களை நீயே வேட்டையாடி விடுகிறாய்.

தமிழ் எழுத்துக்களில்

ஓங்கி ஒலிக்கும் நெடில்களையெல்லாம்

உன்னுடையதாக்கிக் கொண்டாய்.

           கண் திறக்கும்

           கல்வியைப் பார்த்து – உன்

           ஆதிக்கக் கண் அழுது சிவக்கிறது.

உன் ஆட்சியில்

உனக்கு மட்டுமே சுதந்திரம்

என்ற தந்திர சாசனத்தை

நீயே எழுதிக் கொண்டாய்!

           நாட்டரசனும் காட்டரசனும்

           உன் கண்டுபிடிப்புகள்.

எதன் மேலும் நம்பிக்கையில்லாத நீ

நாடாளும் நாத்திகவாதி என்பதை

யாரும் அறிவதில்லை.

           உன்

           கிறுக்கல்களையும் புலம்பல்களையும்

           இலக்கியம் என்கிறாய்.

           கொண்டாடு என்று குட்டுகிறாய்

           எங்களுக்கோ

           தலையும் வலிக்கிறது

           தலைக்குள்ளும் வலிக்கிறது!

திருட்டு யானையில் வலம் வரும் நீ;

மழைக்காலப் பிழைப்புக்காக

உணவைத் தூக்கிச் செல்லும்

எறும்புகளைக் கைது செய்கிறாய்.

           இருட்டறையில் குவிந்து கிடக்கும்

           கருப்பு ஆப்பிள்களின் பேரம் – ஒருபுறம்!

           பாதாள அறை விஷவாயு

           பிரகடனப்படுத்தும்

           ஓலமில்லா மரணம் – மறு புறம்!

           நீயோ

          குளிரறையில் வர்ணம் தீட்டப்பட்ட

           உதடுகளுக்கும், நெடிய நகங்களுக்கும் இடையே!

நீ தவறுகளின் தோற்றுவாய்

செய்பவனும் செய்விப்பவனும்

நீயாக இருக்கவே ஆசைப்படுகிறாய்.

குற்ற ஆவணங்களை

ஆக்குவதும் அழிப்பதும் நீயாக இருக்கும் போது

உன்மேல் யார் குற்றம் சுமத்துவர்?

          இவ்வளவிருந்தும்

          உன்னால் கோலோச்ச முடியவில்லை.

உன்னை துச்சமென நினைத்து

செருப்பை

சிம்மாசனம் ஏற்றிய போது

உன் முகம் கோணியது எங்களுக்கும் தெரியும்!

          அன்பை

          சிலுவையில் அறைந்தது தான்

          உன் உச்சம்!

          என்ன பிரயோஜனம்?

          அது உயிர்த்து விட்டதே!

உன் சர்வாதிகாரம்

சரிந்து வீழ்வது இப்போதாவது தெரிகிறதா?

           உண்மையை ஒத்துக்கொள்.

           அன்பு சாதிப்பதை

           ‘அதிகாரம்’ சாதிக்காதென்று!

                                                                                             – உக்கிரப்பெருவழுதி.

* * *

Advertisements
 

பொதிகை அடிவாரத்தில் ‘முஸல்பனி’

அசின் சார், கழுகுமலை.

முஸல் பனி

வந்த பார்சலைப் பிரித்தேன். உள்ளே அழைப்பிதழ், ஒரு நாவல் மற்றும் நான்கு பக்கக் குறிப்புரை இருந்தன. நெல்லை பேரா.சிவசு அவர்கள் அனுப்பியிருந்தார். முன்னதாகவே அலைபேசியில் விபரங்களைத் தெரிவித்திருந்தார். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ஆகஸ்ட் 18, 2013 ஞாயிறன்று நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை. வருவதற்கு முன் இந்நாவலைப் படித்து வர வேண்டும். இது அவரின் அன்புக் கட்டளை.

நாவல்: தமிழவன் எழுதிய ‘முஸல்பனி’

முதல் பதிப்பு: 2012

வெளியீடு: அடையாளம் (04332 – 273444)

தமிழகம் முழுவதும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு’ நடைபெறும் நாள். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு போல ஆறரை லட்சம் பேர் எழுதுவதாக செய்தித்தாளில் படித்த ஞாபகம். பேருந்தில் பெருங்கூட்டமாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பேராசிரியரிடமிருந்து அலைபேசி அழைப்பு.

“நெல்லை வந்திடுங்க; நம்ம காரிலேயே போயிடலாம்” என்றார்.

மனம் தந்தி அடித்ததோ? என்னுள் எழுந்த வியப்போடு “சரி” என்றேன்.

நிகழ்வன்று அதிகாலையிலேயே கிளம்பி பேராசிரியர் சொன்னபடி நெல்லையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரின் வர்சா கார் வந்தது. காரில் பேராசிரியருடன் விமர்சகர் ஜமாலன், ஆந்திர திருநாவுக்கரசு, கவிஞர் நிதாஎழிலரசி. இவர்களுடன் நானும். ஒன்பது மணிக்கு அம்பையில் காலை உணவை முடித்து விட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தோம்.

தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் மட்டுமின்றி பிறதுறைப் பேராசிரியர்களும் ஆர்வத்துடன் அவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இருந்தனர். தமிழ் வளர்த்த பொதிகையைப் படித்ததுண்டு. அப்போதுதான் நேரில் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் பெயர் பதிவு தொடங்கியது. பங்கேற்பாளர்களாக தென் தமிழகப் பல்கலைக் கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் படைப்பாளிளும் இலக்கிய ஆர்வலர்களும் வந்திருந்தனர்.

நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை

பத்து மணிக்கு தொடக்க விழா அரங்கேறியது. வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் சி. அழகப்பன் தலைமையுரை ஆற்றினார். “வாசிப்புப் பழக்கம் இன்றைய மாணவர்களிடையே மிகக் குறைந்து விட்டது. சற்று முன் இங்குள்ள சில மாணவிகளிடம் நீங்கள் படித்த ஏதாவது ஒரு நாவலைக் கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு யாரும் பதில் சொல்ல வில்லை. ஒரு மாணவி மட்டும் முல்லா கதைகள் படித்ததாகக் கூறினார். இது தான் இன்றைய இளையோரின் வாசிப்பு நிலை. இந்நிலை மாற உங்கள் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதுதான் அறிவைப் பெருக்கும். மேலும், நம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டத்தான் இம்மாதிரிப் பயிற்சிப் பட்டறைகள். இதை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

பேரா.சிவசு அவர்கள் பயிற்சிப் பட்டறையை நடத்த வந்தார். பங்கேற்பாளர்களுக்கும் கருத்துரையாளர்களுக்குமான இடைவெளியை அகற்ற மேடையை விட்டு கீழே இறங்கி, அனைவரும் ஒரே தளத்தில் ஒரு முகமாய் பார்த்துப் பேசும் வகையில் வட்ட வடிவ அமர்வாக மாற்றியமைத்தார். சுய அறிமுகத்தோடு பட்டறை தொடங்கியது.

நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை

‘முஸல்பனி’ என்ற தலைப்பு எதைக் காட்டுகிறது? என்று பேரா.சிவசு கேட்டார். அரங்கம் அமைதியானது. ஒருவர், “அது இளவரசியின் பெயர்” என்றார். பேராசிரியரோ, “முஸல் என்பது முயல். முயல் முல்லை நில விலங்கு. பனி பாலைக் குரியது. இந்தத் தலைப்பில் Space and Time இருக்கிறது. அதாவது இடமும் காலமும் தெரிகின்றன. இந்நூல் அவை சார்ந்தவையா என்று நாம் கவனிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நாவலின் முதல் அத்தியாயம் வாசிக்கப் பட்டது. புரிதலைப் பகிரும் படிக் கேட்டுக் கொண்ட போது, பலரும் புரியவில்லை என்றே கூறினர். ஒருவர் ராம கதையுடன் ஒத்துப் போவதாகவும், இன்னொருவர் பக்தி இலக்கியத்துடன் ஒத்துப் போவதாகவும் கூறினர். இப்படி கூறப்பட்ட கருத்துக்களும் வெவ்வேறானவையாக இருந்தன. இன்னும் அநேகர் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீராநதி விமர்சகர் ஜமாலன் எழுந்து, “மல்டி மீடியா வந்த பின்பு அனைவரும் கேட்பதையும் பார்ப்பதையுமே விரும்புகின்றனர். அத்தொழில் நுட்பம் எளிதாகச் சென்றடைவதால் புத்தகம் எடுப்பதைத் தவிர்க்கின்றனர். வாசிப்பு என்பது ஒரு கலை. நாவல் வாசிப்பிலிருந்து நம் வாசிப்புப் பழக்கத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். புத்தகம் வாங்குவது செயல் அல்ல; அது முதலீடு. இன்று எதிலும் துரிதம், துரிதம், துரிதம்! படிப்பதிலும் துரிதமாகப் படித்து துரிதமாகச் சலிப்படைந்து விடுகிறார்கள். மறைமுக அறிவு என்பதே இல்லை. அது நம்மை நிதானமாக வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறது. Reader and text என்பது மாறி இன்று Writer and text என்ற நிலை வந்துள்ளது. அந்த வகையிலே இந்த நாவல் படிமங்களையும், புது உத்திகளையும் கொண்டிருப்பதை நாவலாசிரியர் முன்னுரையிலேயே தெரிவிக்கிறார். இது நம்மை நிதான வாசிப்பிற்கு அழைத்துச் செல்கிறது.

தீராநதி விமர்சகர் ஜமாலன்

இப்போது வாசித்த பகுதியில் வருகிற அத்திரிகப்பா என்ற பெயர் ஓர் அர்த்தமற்ற சொல். தமிழக நாட்டுப்புறக் கதையொன்றில், அத்திரிப்பாச்சா என்ற அர்த்தமற்ற சொல்லை கொளக்கட்டை என்று நினைத்து மனைவியைத் துன்புறுத்திய ஒரு கணவனின் கதை உண்டு. அதைப் போலவே அர்த்தமற்ற ஒரு சொல்லாக அத்திரிகப்பா பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், அதையே அடுத்தடுத்த இயல்களில் படிக்கும் போது அத்திரிகப்பா சொல், பயனற்ற இக்கால அரசியல்வாதியைக் குறிக்கலாம். தமிழவன் எழுதிய, ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ முதலான ஐந்து நாவல்களும் அந்தந்த பத்தாண்டுகளில் உள்ள பிரச்சினைகளை உள்வாங்கி எழுந்தவையாகவே இருக்கின்றன” என்றார்.

சிவசு அவர்கள், “வாசிப்பு முறை எவ்வாறு காலந்தோறும் மாறுபடுகிறதோ அதற்கேற்ப, இன்று நாம் எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். காப்பியங்கள் படித்துக் கொண்டிருந்த நாம் ஆற்றுப்படை போன்ற நூல்கள் எழும்போது, அதற்கேற்ப நம் வாசிப்பு முறையை மாற்றிக் கொண்டோம். அதுபோல இன்று வழக்கமான நூல்களையும், பாடத்திட்ட நூல்களையும் தாண்டி புதிய சூழலுக்கு வந்துள்ளோம். மேலும், வெளிப்படையாக எழுதப்படும் படைப்புகள் எப்போதும் ஒரு பொருளைத் தருவன. அவை ஒரு காலத்தை மட்டுமே நிர்ணயித்துப் பேசுவன. ஆனால், இது போன்ற படைப்புகள் நம்மை வெவ்வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றன” என்றார்.

பெங்களூர் ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக வந்ததால், பிற்பகல் இறுதி அமர்வில் வந்து சேர்ந்தார் தமிழவன். பகலில் பல்வேறு வினாக்களை எழுப்பியவர்கள் அவற்றை தமிழவன் முன்னிலையில் கேட்டார்கள்.

பேரா. ரவிக்குமார்

பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேரா. ரவிக்குமார் அவர்கள், “நாடு தழுவிய ஒரு பிரச்சினை இருக்கும் போது அப்பிரச்சினை குறித்துப் பேச, எழுத தடை இருக்கலாம். அச்சூழலில் பூடகமாக அவ்விசயத்தைக் கூற வேண்டிய அவசியம் படைப்பாளிக்கு இருக்கும். ஆனால், அப்படியொரு நிலை இல்லாத இக்கால கட்டத்தில் ஏன் இப்படியொரு நாவல் எழுத வேண்டும்” என்றவர் தொடர்ந்து, “எந்த ஒரு படைப்பிலக்கிய மாகட்டும். சாதாரணமாக, ஒரு திரை இசைப் பாடலாக இருந்தாலும் சரி; அதிலுள்ள இசையாக இருந்தாலும் சரி. அதில் எல்லாவற்றையும் இணைக்கும் ஓர் ஒத்திசைவு இருக்கும். அப்படி ஏதும் இதில் இல்லையே ஏன்?” என்றும் கேட்டார்.

கல்லூரி மாணவி ஒருவர், “நாவலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் தனித்தனித் தலைப்புகளாக உள்ளன. ஒரு தலைப்பிற்கும் அடுத்த தலைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை. இப்படியிருக்கும் போது இதை நாவல் என்பதை விட சிறுகதைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா?” என்றார்.

தமிழவன்

இறுதியாகத் தமிழவன் அவர்கள், பின்வரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கர்நாடக அரசு இலக்கியத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகமான பணத்தை செலவிடுகிறது. அதுபோல கேரளாவில் எழுத்து எவ்வளவோ மாற்றங்களை அடைந்து வருகிறது. ஆனால், நாம் அந்த அளவிற்கு எட்டவில்லை. தமிழகத்தில் ஆயிரம் பக்க நாவல்கள் வரத் தொடங்கியுள்ள இந்நாட்களில், கேரளத்தில் ஐம்பது பக்க அளவிலான மைக்ரோ நாவல்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆயிரம் பக்கங்கள் பேசுகின்ற செய்திகளை ஐம்பது பக்கங்கள் கூறுகின்றன. இது அங்கு பிரபலமாகி வருகிறது. லச்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆகின்றன. அங்குள்ள மக்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கிறார்கள். நான் அதைப் படித்த போது எனக்கு ரொம்ப ஆச்சரியம். தமிழிலும் இந்த மாதிரி வர வேண்டும் என்று விரும்பினேன். அதன் விழைவே இந்நாவல். இது இக்காலச் சூழல்களைக் கொண்டதே. நிகழ்வுகள் படிமங்களாக இருக்கின்றன. தனித்தனி தலைப்புகளாக இருந்தாலும் அனைத்திற்குமான ஒத்திசைவு உள்ளே இருக்கிறது என்று பதிலுரைத்தார்.

தமிழவன்

நானும் இந்த நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்திருந்தேன். முதல் வாசிப்பில் முன்னுரை புரிந்த அளவுக்கு நாவல் உள்ளடக்கம் எனக்கும் புரியவில்லைதான். இருந்தாலும் கூர்ந்து கவனித்ததில், ஆங்காங்கே தமிழ் மொழி, இலக்கணம், தமிழர் பிரச்சினை போன்றவற்றைத் தொடுவது போலத் தெரிந்தது.

பேரா. ரவிக்குமார் வினவிய வினா எனக்குள்ளும் இருந்தது. பாரதி பாஞ்சாலி சபதம் பாடிய போது இருந்த இறுக்கமான சூழல் போன்று இப்போதில்லையே. பிறகெதற்கு இப்பூடகம்? இதன் வழியாக நாவலாசிரியரின் கருத்தோ, சொல்லோ, எடுத்துரைக்கும் நயமோ எதிலும் நமக்குத் தெளிவு பெற முடியவில்லை. ஒரு படைப்பு வாசகனை யோசிக்க வைக்கலாம். ஆனால், எரிச்சலூட்டக் கூடாது. அப்படி நேரும் பட்சத்தில் அதை வாசிக்க வேண்டிய கட்டாயம் வாசகனுக்கு இருக்காது.

நாவலின் முன்னுரையிலிருந்து சில வரிகளை இங்கு எடுத்து வைக்கிறேன்:

“இந்த நாவல் பன்முகத் தன்மைகளைக் கொண்டு புது வகையில் அமைந்திருக்கிறது. அதாவது இதற்குத் தமிழில் முன் மாதிரி இல்லை.”

“இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுத்தாக்கப்பட்டிருக்கின்றன.”

“இதுபோல் ஒரு குறிப்பிட்ட உலக இலக்கிய மரபு பல எழுத்தாளர்களால் சமீபத்தில் உருவாக்கி வருகிறது. ஜேம்ஸ் ஜாய்ஸ், போர்ஹஸ், இட்டாலொ கால்வினோ, மிலராட் பாவிச் மற்றும் பல விஞ்ஞானக் கதைகளை எழுதுபவர்கள் இந்த மரபின் சில இழைகளைக் கையாள்கிறார்கள்.”

முஸல் பனி

“இரண்டு வரிகளில் எழுதியதையும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காதை காதையாக நீளக்கதையை மூன்று காண்டங்களில் எழுதியதையும் தமிழன் அறிந்து அங்கீகரித்துள்ளான்.”

“இந்த நாவலின் இன்னொரு தன்மையாகக் காட்சிகள் வழியே கதையாடல் அடுக்கு அடுக்காகக் கட்டப்படுவதைக் கூற வேண்டும். ஓர் அத்தியாயத்திற்கும் அடுத்த அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கவும் செய்கிறது; தொடர்பு இல்லாமலும் உள்ளது.”

“சீட்டுக்கட்டுப் புனைவுத் தொடர் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு காட்சியும் வெவ்வேறு தர்க்கத்திலிருந்து வளர்க்கப்படுகிறது. உள்ளே ஏதும் இல்லை. ஏன், உள் என்பதே இல்லையே!”

மேலுள்ள குறிப்புகள் ஒரு சில தான். இதற்குள்ளேயே சில முரண்கள் இருப்பதைக் காணலாம். ஒரு நல்ல நாவலுக்கு எந்த ஒரு முன்னுரையும் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால், முன்னுரை வாசகனின் சுய சிந்தனையை சிறைப்படுத்திவிடும் என்பதே என் எண்ணம். 102 பக்கங்கள் கொண்ட இந்த நாவலுக்கு எட்டுப் பக்க முன்னுரை!

முல்லா கதை மட்டுமே தெரிந்திருக்கும், இல்ல, அதுவும் தெரியாமலிருக்கும் இன்றைய இளையோருக்கு, இந்நாவல் அறிமுகம் அவர்களின் வாசிப்பை அச்சுறுத்துமே அன்றி ஆர்வமூட்டாது.

ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டுமென்ற இயல்புகளைக் குறித்து பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறும் போது, “தெளிவின்றி எங்கும் கருகலாய், எவ்வளவு முயன்றாலும் ஐயப்பாட்டின் நீங்காததாய் உள்ள செய்யுட்கள் நாம் கற்று இன்புறுதற்குரிய கவிதைகள் ஆகமாட்டா” என்று கூறுவார். இந்த வரையறை எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

இவை ஒருபுறமிருக்க, தமிழவன் அவர்களின் ஸ்டக்சுரலிஸம் நூல் வெளிவரும் போது நான் சேவியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, தமிழ்த்துறைப் பேராசிரியர்களே அந்நூலிலுள்ள பத்தியளவுள்ள நீண்ட வாக்கியங்களை வாசித்துக் காட்டி, அவற்றைப் புரியாத படிகளென விமர்சித்துக் கொண்டிருந்தனர். அது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதே வேளையில், அது தோன்றிய பின்புதான் தமிழ் இலக்கிய விமர்சனப் பார்வையின் போக்கு மாறியுள்ளது. இலக்கியங்கள் மீது நவீன உத்திகளைப் புகுத்தி வாசகனை மறு வாசிப்பிற்கு உட்படுத்தியது. படைப்பாளிகளும் விமர்சகர்களாகும் நிலை உருவாகியிருக்கிறது என்ற பன்முகச் சாளரம் திறந்ததையும் காண முடிகிறது.

பேரா.சிவசு அவர்கள்

பேரா.சிவசு அவர்கள் எதை எடுத்துச் செய்தாலும் அது எதிர்காலத் தளமாக இருக்கும். அவர் எப்போதுமே அடுத்த தளத்தைப் பற்றி யோசிப்பவர்; நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்பவர். அவர் எடுத்து நடத்தும் பயிற்சிப் பட்டறைகளும் அப்படிப்பட்டதே. அந்த வகையில் தமிழவனின் இந்நாவல் எழுப்பிய வினாக்களாகட்டும்; விடைகளாகட்டும். அவை இப்போது தெளிவின்றித் தெரிந்தாலும் அவற்றின் உண்மைப் புலத்தை காலம் காட்டி விடும்.

* * *

தொடர்புடைய பதிவுகள்:

‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை

நெல்லையில் ஒரு நிகழ்வு

 

கிளி

கிளி

பூட்டிய கூண்டிற்குள் கிளி.

          தித்திக்கும் பழங்கள்;

          விக்கித்துப் போகாதிருக்கத் தண்ணீர்.

சொன்னதைச் சொன்னாலோ

சொல்வதைச் செய்தாலோ

பாராட்டு!

         கூடுதலாகப் பேசினால்

         வாய்க்கொழுப்பு.

பறக்கத் துடித்தால்

சிறகுகள் துண்டிப்பு.

         அடங்கியிருந்தால்

         அழகான கிளியென்றும்;

         அதிசயக் கிளியென்றும் மெச்சுவார்கள்.

சுவையான பழங்களுக்கும்

புகழார மொழிகளுக்கும் மயங்கிய கிளி

சுதந்திர வெளியை அறியுமா?

          சுதந்திர வெளியை அறிந்திருந்தால்

          இவைகளுக்குத்தான் மயங்குமா?

                                                                                     – அசின் சார், கழுகுமலை.

* * *

 

‘அர்த்த’ ராத்திரி

சிறுகதை: அசின் சார், கழுகுமலை.

Picture: Rejira Thembhavan

கும்மிருட்டு.

கருப்பு மை பாட்டிலுக்குள் விழுந்த கருவண்டுக்கு எப்படி எங்கிட்டும் எதுவும் தெரியாதோ, அப்படியொரு இருட்டு.

கண்ணு மண்ணு தெரியாத அவ்விருட்டு அறைக்குள், எப்படியோ வந்து சேர்ந்த அச்சிறு பூச்சி “கீர்ர்ர் கீர்ர்ர்” என்று இரைந்து தன் இனப்பெடைக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது. வெளியே வீசும் காற்றின் வேகம் அதிகமாகும் போது மட்டும், உட்புறம் பூட்டப்பட்டிருந்த மேற்கு புற ஜன்னல் கதவிடுக்கின் வழியாக லேசான காற்று கோடு போல் உள்ளே பாய்ந்தது.

அந்த இருட்டறையின் உட்புறம் சுவிச் போர்டுக்கு அருகிலும் எதிரிலுமாக இருந்தது ஒரு புத்தக அலமாரி. அதன் மேல் தட்டில் சாய்வாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் கடைசியாய் இருந்த புத்தகம் மட்டும் கொஞ்சம் கூடுதலாகச் சாய்ந்து வெளியே துருத்திக் கொண்டிருந்தது.

உடல் வளைந்திருந்த அது, திடீரெனச் சரிந்து சுவிச் போர்டில் உரசியபடி கீழே விழ, டியூப் லைட் சுவிச் ஆன் ஆனது.

அறையெங்கும் ‘பளிச்’.

அது ஒரு நூலக அறை!

இருளை விரட்டியபடி கீழே விழுந்த புத்தகம் அடிபட்ட வேதனையையும் மறந்து சிரித்தது.

வரிசையாக இருந்த புத்தக அலமாரிகளில் உள்ள புத்தகங்கள் எல்லாம் ஒரு கணம் இதைப் பார்த்துத் திரும்பின.

“எப்பவுமே இவன் இப்படித் தான். ராத்திரி ஆயிட்டா இவனோட குசும்பு வேலையக் காமிக்க ஆரம்பிச்சிருவான்” என்றது அதைக் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு புத்தகம்.

கீழே விழுந்ததோ ஒரு குழந்தைகள் புத்தகம். மூச்சு இரைக்கத் தன் மேலில் அடிபட்ட இடத்தைத் தடவி விட்டுக் கொண்டே “பின்னே என்னவாம்? எவ்ளோ நேரந்தான் ஒரே இடத்துல உக்காந்துக்கிட்டு இருக்கிறது? வைக்கிறவனாவது நம்மள ஒழுங்கா வைக்கணும். பொறுப்பில்லாமா, கோணமானலா வெச்சுட்டுப் போயிருதான். இடுப்பு வலிக்குதுல” என்றது.

“நீயாவது பரவாயில்ல தம்பி, ஏதாவது பள்ளிக்கூடத்து பிள்ளைக உன்னெ எடுத்துப் பாக்குறாங்க; படிக்கிறாங்க. ஆனா, அதோ பாரு! அந்தக் கடைசி அலமாரியில; எத்தனையோ வருசக் கணக்கா, யாரும் பயன்படுத்தாம படுத்திருந்து படுத்திருந்து தூசியடைஞ்சு தூங்குற புத்தகங்கள் எத்தனை இருக்கு தெரியுமா?” ஆதங்கத்துடன் கேட்டது பக்கத்து அலமாரி விளிம்பிலிருந்த புத்தகம்.

அப்போது அந்த அறையின் மூலையிலிருந்த அலமாரியின் மேல் தட்டில் “லொக் லொக்”னு இருமுற சத்தம் கேட்டது. “என்ன பெரியவரே உடம்புக்கு முடியலையா?” கீழே விழுந்த குழந்தைகள் புத்தகம் கேட்க,

நெஞ்சு பிதுங்க இருமிக் கொண்டே, “மனுசங்களுக்கு… மருந்துவம் சொல்ற… நூற்றாண்டுப் பழமையான குறிப்புகளை… நான்… பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். லொக்! ஆனாலும், யாரும்… என்னெத் தேடுறதோ, படிக்குறதோ இல்ல. ஒரே இடத்துல இருந்து என் ஆயுசும் முடிஞ்சு போச்சுன்னு கவலையா இருக்கு. என் மேலெல்லாம் அடை அடையா தூசி படிஞ்சு, இப்போ நானே உடம்புக்கு முடியாமக் கெடக்கேன். இப்படியே போனா இன்னுங் கொஞ்ச நாளுல சிறு சிறு பூச்சிகளுக்கு சீக்கிரமே நான் இரையாயிடுவேனோன்னு பயமா இருக்கு பேராண்டி!” என்றது.

“ஒன்னும் கவலப்படாதீரும் பெரியவரே! உண்மையில கவலப்பட வேண்டியது இந்த மனிதர்கள்தான். ஆனா ஒன்னு! புத்தகமா இருக்குற நமக்கே இந்தக் கதின்னா, நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்துல ஓலைச் சுவடிகளில இருந்த எவ்வளவோ அரிய நூல்களெல்லாம் அழிஞ்சு போனதுல என்ன ஆச்சர்யம் இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே, நூலகர் உட்காரும் ரோலிங் சேரில் ஒரு ஜம்ப் செய்து உட்கார்ந்தது அந்தக் குழந்தைகள் புத்தகம்.

“நீ சொல்றதும் சரிதாம்” என்று சொன்ன பக்கத்து அலமாரியிலிருந்த புத்தகம், “நான் சமீபத்துல ஒரு டாக்டர் வீட்டுக்குப் போயிருந்தேன். கூட்டம்னா கூட்டம் அப்படியொரு கூட்டம். வர்ரவங்களுகெல்லாம் மருந்து மாத்திரைன்னு பை நெறைய கொடுத்து விடுறாங்க. இருக்குறவங்களும் ஆபரேசன் அது இதுன்னு பேசிக்கிறாங்க. பணத்த எண்றதுக்கு பேங்க் மாதிரி மெசினு! பாக்கப் பாக்க எனக்குத் தலையே சுத்திருச்சி. ஆனா பெரியவரே! உங்கள மாதிரியான மருத்துவ நூல்கள் பற்றி யாருமே அங்க பேசிக்கல!” என்றது வருத்தத்துடன்.

இருமல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தவிப்பாறிய அந்தப் பழைய மருத்துவ நூல் மெதுவாகக் கண்ணயர்ந்து தூங்க, அருகிலிருந்த இன்னொரு மருத்துவப் புத்தகம் சொன்னது, “செலவில்லாம, உடலுக்குக் கெடுதி இல்லாம இவங்க முன்னோர், நம்ம முன்னோர் வழியா எத்தனையோ மருத்துவக் குறிப்புகளை எழுதி வச்சிருந்து என்ன பிரயோசனம்? ம்… எல்லாம் வீணாப் போச்சு? ஆனா ஒன்னு தம்பி! உன்னையாவது எடுத்துட்டுப் போய் படிக்கிறாங்களேன்னு சந்தோசப்படு” சொல்லி பெருமூச்சு விட்டது அந்தப் பழைய புத்தகம்.

எதிரே நாவல் பகுதியிலிருந்து ஒரு நாவல், “எங்க படிக்கிறாங்க, போன வாரம் என்ன எடுத்திட்டுப் போன ஒருத்தர், வீட்ல அவர் உக்காந்திருக்கிற சேருக்கு நேரா டி.வி! அதுல கிரிக்கெட் மாட்ச் ஓடுது. வெளம்பரம் வரும் போது மட்டும் என்னக் கையிலெடுக்கிறார். மிச்ச நேரமெல்லாம் என்னிய குப்புறக் கவுத்திடுதார். இதுதான் அவங்க படிக்கிற லட்சணம்” தலையிலடித்து வருந்தியது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கட்டுரைப் பிரிவு நூல்களுள் ஒன்று, “அட! அத வுடப்பா, பெண்களெல்லாருமே நாவல்களான உங்களத்தானே ரொம்பப் பிரியமா எடுத்திட்டுப் போறாங்க!” என்றது.

அதற்கு நாவல், “அது ஒரு காலம் பிரதர். சாண்டில்யன், கல்கி, பாலகுமாரன்னு தேடித் தேடி எடுத்துப் படிச்சது! இப்போ பெண்களும் டி.வி முன்னாடி உக்காந்து, ‘புடிச்சி வெச்ச புள்ளயாரா’ ஆயிட்டாங்க. அவங்க எந்த அளவுக்கு அடிமையா இருக்காங்கங்கிறதுக்கு, ஒரு சேதிய சொல்லுதேன் கேளும். போன மாசம் ஒரு வீட்டுல திருடன் ஒருத்தன் புகுந்திருக்கான். அங்க ஒரு அம்மா தனியா இருந்து டி.வி பார்த்துக்கிட்டு இருந்திருக்காங்க. உள்ள வந்த திருட்டுப்பய கிச்சன்ல போய் மூக்குப் புடிக்க சாப்பிட்டுட்டு, நிதானமா அந்த அம்மாகிட்டப் போய், பீரோல் சாவிய பணிவா கேட்டுருக்கான். டி.வி பார்த்துக்கிட்டிருந்த அந்தம்மாவும், திரும்பிப் பார்க்காம இடுப்புல இருந்த சாவிய உருவிக் கொடுத்து, ‘போகும் போது மறக்காம சாவியக் கொடுத்திட்டு போ’னு வேற கண்டிசன் போட்டிருக்கு! அவனும் ‘சரி’ன்னு சொல்லிப் புட்டு, அந்த அம்மாவையும் டி.வி பொட்டியையும் விட்டுட்டு, வீட்ல இருந்த அத்தன சாமானையும் சுருட்டிக்கிட்டு போயிருக்கான் திருட்டுப்பய”

சொல்லி முடிக்கும் போது அத்தனை பேரும் ஒன்றாய் சிரிக்க, “அட, பய சரியாத்தாண்டே செஞ்சுருக்கான்!” மேல் தட்டிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சிரிப்புக் கதைகள் புத்தகம் சிரிச்சுக்கிட்டே சொன்னது.

“சரி சரி! என்னதா இருந்தாலும், எப்பமும் சமையக் கட்டுக்குள்ளேயே இருக்கிற அவங்களுக்கு வேறென்ன ரிலாக்ஸ் இருக்கு?” என்று ஒரு புத்தகம் வெள்ளந்தியாய் இரக்கப்பட்டதும்,

அருகிலிருந்த நீதி நூல், மிகுந்த கோபத்துடன், “சமையல் கட்டே ஓர் அடிமைத்தனம்; இதுல ரிலாக்ஸுனு சொல்லி இன்னோர் நவீன அடிமைத்தனமா? அறிவியல் கண்டுபிடிப்பு அறிவ வளக்கறதுக்கு; யாரையும் அடிமைபடுத்த யில்ல! ம் ம்! இனிமேலாவது அவங்களக் கொஞ்சம் சுயமா சிந்திக்க விடுங்க.” கறாராகச் சொல்லிவிட்டு முகத்தை அங்கிட்டு திருப்பிக் கொண்டது.

இப்படியொரு பதிலை யாரும் எதிர் பார்க்காததால் ஒரு நிமிடம் அனைத்தும் வெலவெலத்து அமைதியாயின. சூழலைப் புரிந்த இனிய இல்லறம் புத்தகம் பேச்சைத் திசை திருப்ப, “ஆங் ஆங்க்! எல்லாரும் இங்க பாருங்க! இன்னைக்கு இருக்குற குட்டி குட்டி பசங்களப் பாருங்க! எப்பிடி துருதுருன்னு இருக்காங்கனு? ம்… நேத்துக் கூட ஒரு பையன் வந்து ரொம்ப நேரம் குழந்தைங்க புத்தகங்க இருக்கிற பக்கம் நின்னானே?” என்றது.

நூலகரின் ரோலிங் சேரில் உட்கார்ந்து, அங்கிட்டும் இங்கிட்டுமாக குழந்தைத் தனத்துடன் ஆடிக் கொண்டிருந்த அக்குழந்தைகள் புத்தகம், இதைக் கேட்டதும் டக்குனு திரும்பிச் சொன்னது: “அந்தப் பையன்தானே? அவன் என்னடான்னா சுத்தி சுத்தி வந்து, ஸ்பைடர்மேன் இருக்கா? பேட்ஸ்மேன் இருக்கா?னு தேடிட்டு உதட்ட பிதுக்கி “அப்பா, இங்க வேஸ்ட்”னு சர்டிபிகேட் கொடுக்கிறான்! என்னத்தச் சொல்ல? அவங்கப்பா அறிவ வளர்த்த நாம, இவன் அறிவ வளர்க்கமாட்டமா என்ன?” ஏக்கத்தோடு கேட்டது.

அதுவரை வலப்புற அலமாரியின் மேல்தட்டு விளிம்பில் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டுமிருந்த சுற்றுலாப் பிரிவுப் புத்தகம் வாய் திறந்து, “அவனாவது உன்னெ வந்து பார்த்துட்டுப் போயிருக்கான்னு சந்தோசப்படு தம்பி. போன மாசம் நான் போயிருந்த ஒரு வீட்ல, குழந்தைங்க படுறபாடு அப்பப்பப்பா…! தாங்க முடியல தெரியுமா? கொஞ்சம்கூட சுதந்திரமோ, சந்தோசமோ அவங்க கிட்டப் பாக்க முடியல. மொத்தத்துல அவங்க வாழ்க்கையே விநோதமா இருந்துச்சி! ஸ்கூல் விட்டா வீடு. வீட்டுக்கு வந்த பின்னே டியூசன். மறுபடியும் படிப்பு. அப்புறம் வீடு, அப்புறம் படுக்குற வரைக்கும் படிப்பு, படிப்புதான்! தாய் தகப்பனப் பார்த்தா டையனோசரப் பாத்த மாதிரி முழிக்குதுக ஒவ்வொரு பிள்ளைகளும்” என்று மனம் வெம்பியது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர்கள் பிரிவு புத்தகம், “ஏம்ப்பா, கணித மேதைன்னு புகழுதாங்களே, அவரே கல்லூரியில படிக்கும் போது கணிதப் பாடம் தவிர பிற பாடத்துல பெயிலுதாம் தெரியுமா? திரும்ப எழுதியும் அவரால பாசாக முடியலையாம்! அதுக்காக அவர ஒன்னுக்கும் லாயக்கில்லாத ஆளுன்னு யாரும் சொல்லலியே. அவரிட்ட இருந்த கணித மேதாவித் தனத்தத்தான எல்லாரும் பெருமையா பேசிக்கிறாங்க. இன்னுஞ் சொன்னா, இதத்தான சாதனைனு புத்தகம் புத்தகமா எழுதியிருக்காங்க” என்றது.

அதே அலமாரியின் கீழ்த்தட்டில் இருந்த சாதனையாளர்கள் பகுதியிலுள்ள புத்தகம், ‘அதாம்பா, படிக்காதவன் எழுதுனத படிச்சவன் பாடமாக்குறான். வாழ்க்கையில தோத்துப் போனதா நெனச்சவந்தான் வரலாறு பேசுற மாதிரி செயிச்சிருக்கான். அதச் சொல்லத் தான நாம இவ்வளவு பேரும் ஒன்னா இருக்கோம்” என்றது.

இதைக் கேட்டவுடன் அதுவரை அமைதியாக இருந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், “அது சரி மாப்ள! அப்போதைக்கு பிள்ளைகளுக்கு படிப்பு வராட்டாலும், வராதத வா வான்னு யாரும் டார்ச்சர் பண்ணல. அதனால, அது போக்குல ஆர்வப்பட்டதுல அறிவ வளர்த்துதுக. இப்ப அப்பிடியில்லையே! பிள்ளைகளுக்குன்னு சுயமா சிந்திக்க என்ன பொழுது போக்கு இருக்கு? நீயே சொல்லு?” என்று கேட்டது.

“ஓ இருக்கே! புத்தியக் கட்டிப் போடும் மங்குனித்தனமான கார்டூன் சானல்களும், வீடியோ விளையாட்டுக்களும்! அத்தனையும் ஒட்டுமொத்தமா குழந்தைகளோட எல்லா விளையாட்டுக்களையும் விழுங்கிட்டு, பொல்லாத பூதமா நடு வீட்ல குத்தவச்சி இருக்குன்னா பாத்துக்கோயேன்” என்று நிலைமையை விவரித்தது விளையாட்டுப் பிரிவுப் புத்தகம்.

அப்போது எதிர் பட்ட உடல் நலப் புத்தகம், “ஏம்ப்பு, பிள்ளையாண்டம்! ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ. இன்னைக்கு இருக்கிற பிள்ளைகளுக்கு முன்ன மாதிரி உடல் நல விளையாட்டும் இல்ல; உள்ளம் வலுப்படுற மாதிரி, நாசூக்கா நகைச்சுவையா புத்தி சொல்லுற நம்மள மாதிரிப் புத்தகங்களும் அவங்களுக்குக் கிடைக்கிறதில்ல. இன்னுஞ் சொல்லப் போனா, நாமெல்லாம் இங்கிருக்கோங்கிற சேதிய அவங்களுக்குச் சொல்றதுக்கும் ஆளில்ல” என்று வருந்திச் சொன்னது.

அருகிலிருந்த பாட்டி வைத்திய நூல், “அவங்க தாத்தா பாட்டி கூடவா இல்ல?” என்று ஆதங்கத்துடன் கேட்டது.

இதைக் கேட்ட வரலாற்றுப் புத்தகம், “ம்… ம்! அதெல்லாம் அந்தக் காலம் அப்பத்தா! தாத்தா பக்கத்துல உக்காந்து அவர் சொல்ற ராசாராணி கதையில ஆரம்பிச்சு, அன்றாடம் வேலை செஞ்சு பொழைக்கிற குப்புசாமி கதை வரை எல்லாத்தையும் பேரன் பேத்தி கேட்டதும்; அவங்க மழலைப் பேச்சில பெருசுக ரெண்டும் சந்தோசப்பட்டதும் சொர்க்கமா இருந்துச்சு! ஆனா இப்ப, ஒவ்வொரு வீட்லயும் வயசானவங்களுக்குத் தனியா ஒரு அறையக் கொடுத்து, அதுல ஒரு டி.வியையும் கூடவே வெச்சுருதானுங்க! பாவம் தாத்தா! கதைக் களஞ்சியமா இருக்குற அவரு சொல்றதுக்கு ஆளில்லாமலும், டி.வி பெட்டியப் பாக்க மனசில்லாமலும் கட்டிலில பரிதாபமா சுருண்டு படுத்திருக்கார்” என்று ஏக்கத்தோடு சொல்லி பெருமூச்சு விட்டது.

“ஏ ராசா, நீ சொல்றதப் பாத்தா, இங்கினக்குள்ள நாம சேத்து வெச்சிருக்கிற அறிவ எப்படிய்யா அவங்க கிட்டச் சொல்றது?” எதிர்பார்ப்போடு ‘பாட்டி கதைகள்’ கேட்டது.

உடனே, அதனருகிலிருந்த நீதிநூல் சொன்னது, “பாட்டி, உனக்கு வயசாயிருச்சுன்னு யோசிக்காம, வெக்கப்படாம, நீயும் நானும் எப்படியாவது அந்த டி.வி பொட்டிக்குள்ள போனாத்தான் உண்டு!”

அப்போது அந்த அறையின் ஓரத்திலிருந்த நிலைக் கண்ணாடியின் முன் தன்னை அலங்காரப் படுத்திக் கொண்டிருந்த “இயற்கை அழகுக் குறிப்பு” நூல் சலித்துக் கொண்டே, “ம்ஷீம்! நானுந் தான் என்னெ அழகு படுத்திப் பாக்குறேன்! என்னிய எடுத்துப் படிக்க ஒரு நாதியக் காணோம்! கெழடு தட்டுன காலத்துல இதுக என்னடான்னா, டி.வி பொட்டிக்குள்ளப் போகப் போகுதுகளாம்! ஐய! நெனப்பப் பாரு?” என்றது ஏளனமாக!

எதிரிலிருந்த அலமாரியில் உள்ள ‘உலகமயமாக்கல் நூல்’ சொன்னது. “ஹலோ! மைனர் சார்! உங்களுக்கு உலக நடப்பே தெரியலனு நெனைக்கேன். இப்பெல்லாம், அழகு சாதனப் பொருட்கள் பேஸ்ட், பவுடர், கிரீம் அது இதுன்னு என்னெல்லாமோ வெளிநாட்டுல இருந்து கப்பல் கப்பலா இறக்குமதி பண்றாங்க. இதுல கத்தாழைய அரைச்சுப் போடு, அருகம்புல்ல அரைச்சுக் குடின்னா யாரு கேப்பா? உங்களைத் தேடி ஒருத்தரும் வரமாட்டாங்க. சோ, டோன்ட் வேஸ்ட் யுவர் டைம். நீங்க நிம்மதியா மேல ஏறிப் படுங்க!” என்றது.

‘அழகுக் குறிப்பு நூல்’ ஏமாற்றத்துடன், “என்னப்பா நம்மளத் தேடி கொஞ்ச வயசுக்காரங்க கூடவா வரமாட்டாங்க? தேடித் தேடி பிடிச்ச புத்தகத்த எடுத்துட்டுப் போய் படிப்பாங்களே?” என்றது ஆதங்கத்துடன்.

இதைக் கேட்டுகிட்டிருந்த சிறுகதைப் புத்தகம் “அட! அது எவ்வளவு கிளுகிளுப்பான விசயம்?” என்று சொல்ல,

வெடுக்கென்று திரும்பிய நாவல் பகுதி நூலொன்று, “ஆமா ஆமா! தன் காதலச் சொல்லத் தவிக்கிற சில பேர், ஒருத்தரொருத்தரச் சந்திக்க நம்மளச் சாக்குச் சொல்லில வருவாங்க?” என்று முடிப்பதற்குள்,

“சரியா சொன்னீங்க” என்று இடை மறித்த ‘வரலாற்று நாவல்’ மிகுந்த ரசனையோடு, “ம்…ம்! அதெல்லாம் மறக்க முடியாத ஞாபகங்கள் தம்பி!” என்று தொடர்ந்தது…

“நம்ம அறையிலேயே புத்தக அலமாரியின் இந்தப் பக்கம் அவளும்; அந்தப் பக்கம் அவனுமா நின்னு புத்தகம் தேடுற சாக்குல கண்ணோட கண்ணா பேசிக்குவாங்க. அதப்பாத்து நானே மலச்சுப் போயிருக்கேன். அவனப் பார்த்தபடி, வரிசையா இருக்கும் நம் ஒவ்வொருத்தரையும் மெல்லிய விரலால் அவள் தடவிக்கிட்டே போகும் போது, நானே சிலிர்த்துப் போய் அவங்க கவனத்தத் திருப்ப கீழே விழுந்திருக்கேன்.

உடனே, அவள் காலடியில் விழுந்து கிடந்த என்னைக் கையிலெடுத்து ஆசையாய் என் பெயரைப் பார்த்துக் கொண்டே எல்லாத் தாள்களையும் பின்பக்கமா வளைச்சி முன்னே ஓடவிடுவாள். அப்போது, அவள் முகத்தில் மெல்லிய காற்றை விசிறியிருக்கேன். அக்காற்றின் பரிசத்தில் அவள் என்னைப் பார்த்து சிறிதாய் புன்னகைத்ததும் உண்டு. மேலும், அவள் தேடிய புத்தகமாய் நான் இருந்த போது, எனக்கு அவள் ஈர உதடுகளின் முத்தம் கூட கிடைத்திருக்கிறது.

அவள் என்னை விரும்பி எடுத்துச் செல்லும் போது, கையால் இறுகப் பற்றி என் முகம் முன்னால் தெரியும்படி மார்போடு அணைத்துச் செல்வாள். அவள் மார்பின் இளஞ்சூட்டிலும், இறுகப் பற்றிய விரல்களில் உண்டாகிய வியர்வையிலும் நான் கொஞ்சம் ஈரம் வாங்கி நனைந்து போயிருக்கிறேன். சில நேரம் அவள் கையில் இருந்த லேசான மஞ்சளும் என்மேல் படிந்தது உண்டு! …”

“யோவ்! யோஓ….வ்! வரலாற்று நாவல், போதுமய்யா..!” தலையை சொரிந்து கொண்டே நூலகர் ரோலிங் சேரிலிருந்து ‘தொபீர்’ என்று கீழே குதித்தது அந்த குழந்தைகள் புத்தகம்!

“என்னய்ய்யா இது? வுட்டா, விடிய விடிய விரிச்சுகிட்டே போவீரு போல” என்றதும், தன் நினைவுகளைக் கலைக்க முடியாமல் மெல்லியதாய் முணுமுணுத்துக் கொண்டே தன் கண்களை மூடி அமைதியானது அந்த வரலாற்று நாவல்.

கீழ்த் தட்டிலிருந்த ‘துணுக்குச் செய்தி’ புத்தகம் வேகமாக ஓடி வந்து, “மக்கா! கணக்கா தடியப் போட்ட!” என்று கை கொடுத்துச் சென்றது.

அடுத்த அலமாரியிலிருந்த ஆங்கில நாவல், “ஹலோ பிரதர்! எப்படியோ இந்த மேட்டர நீங்க ஓப்பன் பண்ணுனதனால சொல்றேன். நீங்க பேசிக்கிட்டு இருந்தப்ப எனக்கு ஒரு இன்சிடென்ட் கிளிக் ஆச்சு! ஒன்ஸ் அப்பான் எ டைம், ஒரு கேர்ள், அவா எழுதின பஸ்ட் லவ் லெட்டர்னு நெனைக்கிறேன். அத எப்படி அவளோட லவ்வர்ட்டப் போய் டெலிவரி பண்றதுன்னு திங் பண்ணிடிருந்தா. வெரி பியர்னஸ். பரிதவிச்சி பரிதவிச்சி, பைட் கெர் பிங்கர்ஸ் நெய்ல். ஐ மீன் விரல் நகத்தக் கடிச்சிட்டிருந்தா! அட் தேட் டைம், ஐ காட் எ லட்டர் இன் மை மிடில் ஆப் பேஜஸ், நான் அந்த லட்டர என் பக்கங்களுக்கிடையே வாங்கினேன். உங்க டமில் லிட்ரச்சர்ல சொல்றாப்ல ‘தூதுப் பொருளா’, நான் போய் அந்த லட்டர சேர்த்தேன்” என்று ஒரு வழியா தமிலிஷ்ல பேசி முடித்தது.

அதற்கு நேர் எதிரே உள்ள தட்டில், கையிரண்டையும் தலைக்கு அடைக்கொடுத்து, கால் மேல் கால் போட்டுப் படுத்திருந்த கணிப்பொறிப் புத்தகம், படுத்த வண்ணமே தலையை லேசாகத் திருப்பி, “டியர் பிரெண்ட்ஸ், நீங்க முன்ன மாதிரியே நெனைக்கிறீங்க. ஆனா, என்னைக்கு செல்போனும் இணைய தளமும் வந்துச்சோ; அப்பவே காதல்ல அகக்கவர்ச்சி மறைஞ்சு புறக்கவர்ச்சி தலையெடுக்க ஆரம்பிச்சிருச்சி! வரையறையில்லா வாழ்க்கைக்கு அதுவே அஸ்திவாரமாயிடுச்சு” என்று சொல்லிக் கொண்டே நட்டின காலை எடுத்த கணிப்பொறிப் புத்தகம், எழுந்து நேராக உட்கார்ந்தது. எல்லோரும் இது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க,

“பின்னே?” என்றது முன்னிருந்த இளையோர் புத்தகம்.

தன் முகத்தை நிமிர்த்திய கணிப்பொறிப் புத்தகம், “பின்னே என்ன? பிரேக் இல்லா பேருந்து தான்” என்று இரு கைகளையும் விரித்தவாறு சொன்னது. அதற்குள்,

“அங்கிள்! அப்ப குடும்ப உறவுகள்?” ஆர்வமாய் கேட்டது ஆய்வுக் கட்டுரைகள் புத்தகம்.

அனைவரின் ஆர்வத்தைப் பார்த்து, “உறவுகளை மறந்து உணர்ச்சிக்கும், பாசத்தை மறந்து பணத்திற்கும் அடிமையாகிட்டான் மனிதன்” என்று சொல்லி முடிப்பதற்குள், “அப்ப குடும்பக் கட்டமைப்பு சிதைஞ்சு போகுமே?” தயக்கமாய் கேட்டது தமிழ்க் கட்டுரை.

“நிச்சயமா! அதத்தானே வளர்ச்சின்னு சொல்றாங்க” மெல்லியதாய் சிரித்துக் கொண்டே சொல்லி அவ்விடம் விட்டு அகன்றது கணிப்பொறிப் புத்தகம்.

“தம்பி சொன்னதுலயும் உண்மை இருக்கு” என்று சட்ட நூல்கள் அலமாரியிலிருந்து திரும்பிப் பார்த்த ஒரு புத்தகம், “முன்னெல்லாம் தேச ஒற்றுமை, குடும்ப ஒற்றுமைனு நூல்கள் நெறைய வரும். ஆனா இப்போ வில்லங்கம், விவாகரத்து அப்படில்ல வருது. எங்க சட்ட நூல் பகுதியிலே பாத்தீங்கன்னா, இப்படிப்பட்ட நூல்கள் தாம் அதிகமா இருக்கு” என்றது.

இதைக் கேட்டதும், தலைவர்கள் பகுதியிலிருந்த ஒரு புத்தகம் “ம்ம்.. இதெல்லாம் பள்ளியில படிக்கும் பிஞ்சு வயசுலயே, நல்ல புத்தி சொல்லி வளர்த்திருக்கணும். அதச் செய்யாம இப்பப் பேசுறது, புலிய விட்டுட்டு வாலப் புடிச்ச கதைதான்!” விரக்தியுடன் சொன்னது.

இதைக் கேட்டவுடன், “என்ன பெரியவரே! இன்னைக்கு பள்ளியில எங்க நல்லத, கலைத்திறன, கலாச்சாரத்த சொல்லிக் கொடுக்க முடியுது? தப்பு செஞ்ச பையன கண்டிச்சா பையனும், பெற்றோரும் வாத்தியார இம்சபடுத்தக் கெளம்பிடுதாங்க! இதுக்கெடையில, எதையும் பரபரப்புச் செய்தியாக்கப் போட்டி போடும் மாஸ் மீடியாவால போலீசும் பொசுக்கு பொசுக்குனு வந்திடுது! யாரு சுதந்திரமா செயல்பட முடியுது?” என்று சமூகவியல் பகுதியிலிருந்த புத்தகம் இயல்பாய் கேட்டது.

கல்வியாளர் பகுதியிலுள்ள நூலொன்று இதை முழுமையாக ஆமோதிப்பது போல் தலையாட்டிக் கொண்டே, “பிரதர் சொல்றது நியாயந்தான். பள்ளியில கலை, இலக்கிய, விளையாட்டுப் போட்டின்னாலே, ‘அச்சச்சோ! எம்புள்ள படிப்பு பாழாப் போயிடும்; தயவு செஞ்சு எதுலேயும் சேத்துறாதீங்க’னு தகப்பன் கொடியப் பிடிச்சுகிட்டே ஓடியாறான்! என்ன பண்றது? ‘ஆசிரியப் பணி ஓர் அறப்பணி’ன்னு சொன்னாங்க. இன்னிக்கு அரைப்பணி செஞ்சா போதுங்கிற நிலையாயிடுச்சு!” இச்சு கொட்டிக் கொண்டே சொல்லி முடித்தது.

அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் புத்தகம், “என்ன மாமா! நீங்களே இப்படிச் சொல்லுதீக! நல்ல பண்பைப் படிக்காம, கலைத்திறன வளக்காமா, வெறும் பாடப் புத்தகத்த மட்டும் படிச்சு என்ன பிரயோசனம்?” கேட்டவுடன்,

“மார்க் மாப்ள! மார்க்! அதான் இன்னிக்கு வேணும்! உலகமே நம்பருக்குள்ள வந்திடுச்சி.” என்றது கல்வியாளர் நூல்.

“மாமா, எனக்குப் புரியிறமாதிரி தெளிவா சொல்லுங்களேன்?”

குனிந்து அதன் முதுகில் தட்டிக் கொடுத்தவாறே, “மாப்ள! படிக்கிறவன் முன்னால மாதிரி பக்கம் பக்கமா தேர்வு எழுத வேண்டிய அவசியமில்ல. இப்ப கேள்வியும் நம்பர், பதிலும் நம்பர். திருத்தி வந்தா மார்க்கும் நம்பர். வேலைக்குப் போனா அங்கயும் நம்பர். சம்பளமும் நம்பர். உன் வங்கிக் கணக்கும் நம்பர். பணம் போட்டாலும் நம்பர், எடுத்தாலும் நம்பர். இனியொரு தேசத்தின் குடிமகன்னு சொல்றதுக்கு ஆதாரமே நம்பர்தான்! மொத்தத்துல நீயே ஒரு நம்பர். இப்படி எல்லாமே நம்பருக்குள்ள வந்தாச்சு! ஒவ்வொரு மனுசனும், இந்த நம்பரக் கூட்டுறதிலயும், பெருக்கிறதிலயும், கழிக்கிறதுலயும்தான் குறியா இருக்கான். ஏன்னா, ஒரு நம்பர வெச்சி இன்னொரு நம்பர வாங்கத் தினமும் துடிக்கிறான். நம்பராசை இப்ப அவன்ட பேராசப் பேயா உருவெடுத்திருச்சி. அதுக்காக அவன் எதையும் செய்யத் துணிஞ்சிட்டான். அதனாலதான், அவன் அறிவப் பெருசா நினைக்கிறதில்ல.” மிகுந்த வேதனையுடன் சொல்லி முடித்தது.

அது வரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பொருளாதார பகுதியிலிருந்த கனத்த புத்தகம், இவர்களைப் பார்த்து மெதுவாகத் திரும்பியது. தன் தொண்டையை கனைத்து சரி செய்தது, தன் தாடியை நீவி விட்டுக் கொண்டே,

“தம்பி, நீங்க எல்லாருமே மேலோட்டமாப் பாக்குறீங்க! ஒன்னு சொல்லுதேன். கவனமா கேளுங்க. அனைவருக்கும் கல்வினு சொல்றாங்க. உண்மையில அனைவருக்கும் கல்வி இருக்கா? இல்ல. வேலையிருக்கா? அதுவுமில்ல. சரி, அப்படியே வேலை கிடைச்சாலும், அது படிச்ச படிப்புக்கான வேலையா? பாக்குற வேலைக்கான சம்பளமா? எதுவுமில்ல. இதனாலதான், பல பிரச்சின தொடர்ந்துக் கிட்டிருக்கு! இதெல்லாம் பொருளாதார சமத்துவம் இல்லாததால வரும் தொல்ல. இத ஒரு அரசாங்கம் நெனச்சாத்தான் சரி பண்ண முடியும். அதுக்கு மொதல்ல அப்படி ஒரு அரசு உருவாகணும், இல்ல உருவாக்கணும். அதுக்கான முயற்சி பண்ணாம, வெறுமனே இப்படிப் பேசிப் பிரயோசனமில்ல!

அதில்லாம, மக்கள்தான் எல்லாத்திலயும் மாறிட்டாங்க, அவங்க நுகர்வு மோகம் மாறிடுச்சி, அப்படினு சொல்றதும் ரொம்பத் தப்பு. ஏன்னா, இதுல ஒன்னு சூசகமா நடந்திட்டிருக்கு! எந்த ஒரு நாட்டின் குடிமகனும், இறக்குமதி செய்த பற்பசையிலதான் பல் தேய்ப்பேன்னு அடம்பிடிக்கல. அவன் எப்பவும் போலத்தான் இருக்கான். அவனப் பொறுத்த வரையில மூடியிருந்த அவன் வீட்டுக் கதவு திடீருன்னு திறந்தது. திறந்தவுடனே எக்கச்சக்கமான பொருட்கள் அவனைச் சுத்தி கொட்டப்பட்டன. அத்தனையும் நுகர்வத் தூண்டக்கூடிய பொருட்கள்! அவன் பார்த்தான், பயன்படுத்த ஆரம்பிச்சுட்டான். அவ்வளவுதான்! இதுல நாம யோசிக்க வேண்டியது என்னென்னா? கதவத் திறந்தது யாரு? பொருளக் கொட்டுனது யாரு? கதவத் திறந்தவனுக்கும், பொருளக் கொட்டுனவனுக்கும் என்ன சம்பந்தம்? இத ஏன் மூடியிருந்த இவன் வீட்டுல கொட்டணும்? இந்த மாதிரி விடை காண வேண்டிய வினாக்கள் ஏராளம்!

இப்படிப்பட்ட பேஸ்மட்டம் இருக்கிறதனாலதான், பணம் இருக்கிறவன்ட குவியிது; இல்லாதவன மேலும் இல்லாதவனாக்குது” என்றபோது இடைமறித்த நாட்டுநலப் புத்தகம்,

“இங்க நா ஒன்னு சொல்லிக்கிறேன் பெரியவரே! அரசுக்கு வரி கட்டுறவங்கள்ல, குறிப்பிட்ட சிலர்தான் எப்பவுமே வரி கட்டுறாங்க. வரி ஏய்க்கிறவங்க எப்பவுமே ஏய்க்கத்தான் செய்றாங்க” என்றது.

அதைக் கேட்ட பொருளாதார நூல், “ஓ எஸ்! அதே நேரத்துல வரி கட்டுறவங்கள்லயும் பலபேர் உண்மையான கணக்கக் காமிக்கிறதில்ல. அதையும் கவனிக்கணும். இதெல்லாம் சனங்க மண்டையில ஏறணும்னா, ‘மாஸ் அவார்னஸ்’ வேணும். அப்படியொரு விபரீதம் நடந்திடக் கூடாதுன்னு தான் பெரு முதலாளிகள், அரசியல்வாதிகள் வழியா பெரும் பணத்த பல வழிகளில ஸ்பான்சர் பண்றாங்க! இது சனங்க கண்ண ஈஸியா மறைச்சிடுது. தம்பிகூட சொல்லும் போது, எல்லாமே நம்பர் நம்பர்னு சொன்னாரு. ஆனா, அவர் சொன்ன ஒவ்வொரு நம்பருக்குப் பின்னாலயும் ‘பணம்’ங்கிற குணம் ஒழிஞ்சுக்கிட்டு இருக்கிறதக் கொஞ்சம் உன்னிப்பாப் பாத்தாத் தெரியும்!” தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே பக்கத்திலிருந்த சொம்புத் தண்ணீரை எடுத்து “மடக்மடக்” என்று முழுவதும் குடித்து விட்டு பெருமூச்சு விட்டது பொருளாதாரப் புத்தகம். அதன் வாயின் விளிம்பில் பட்ட நீர் அதன் பெரிய தாடி முடியைப் பற்றிக் கொண்டு கீழே வழிந்தது.

அவ்வேளையில், அதன் வயிற்றுக்குள் இருந்து வெளியே வந்த “வ்வாஆவ்” ஏப்பம் அதற்கு நிம்மதியை தந்தது போலிருந்தது. தொடர்ந்து, “எல்லாத்துக்கும் அடிப்படை பொருள்தான். அத சரி பண்ணாத வர, எதுவும் சரியாகாது!” உறுதியாகச் சொன்னது.

கம்முனு இருந்த அப்பொழுதில் அனைத்துப் புத்தகங்களின் முகத்தையும் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டே, “ஒரு காலத்துல உற்பத்தி சுரண்டலும், உழைப்பு சுரண்டலும் இருந்துச்சு. அத எதிர்த்துதான் நாங்க எழுந்தோம்; பிடிக்காதவங்க எங்களக் கிழிச்சி தீயில போட்டு எரிச்சாங்க! சோர்ந்து போகல; பல பேர் எங்களப் படிச்சு போராடி செயிச்சாங்க!”

கம்பீரமாகப் பேசிய பொருளாதாரப் புத்தகம் ஒரு நிமிடம் அமைதியானது. அனைத்துப் புத்தகங்களும் இதை வெறித்துப் பார்க்க, தன் கண்ணாடியைக் கழற்றிய அது, குரல் கொஞ்சம் தளர்ந்து, “ஆனா இன்னைக்கு, ஒவ்வொரு தனி மனிதனின் மூளையும், ஒவ்வொரு நாட்டிலிருக்கும் மூலப்பொருட்களும் சுரண்டப்படுது. இந்தச் சூழலில ஒரு தேசத்தின் மறுமலர்ச்சிக்காக எங்கள யாரும் படிக்க முன் வராதத நினைக்கும் போது என் மனம் பதறுது! (வாய் குளறியபடி) உ..ட..லே.. மு..ழுசும் நடு..நடு..ங்குது” என்று சொல்லும் போது அதன் கண்களில் இருந்து தாரை தாரையாய் நீர் வழிந்தது!

அதை ஆற்றுப்படுத்தும் விதமாக இயற்கை வளப் பாதுகாப்பு நூல் சொன்னது, “அன்னிக்கு மண்ணுக்குக் கீழேயும் மேலேயும் இருந்தது கொள்ளை போச்சுன்னு வருத்தப்பட்டோம்; ஆனா இன்னைக்கு, மண்ணே கொள்ளை போகுதே! இப்பிடி எத்தன எத்தன?” சோகத்தில் தன் பங்கையும் பதிவு செய்து கொண்டது.

தன் வேட்டி முனையால் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “ம்! இந்த எண்ணம் நாடுகளுக்கிடையே வளரும் போதுதான் போர்க் குணம் வந்திடுது!” கரகரத்து குரல் கன்றி சொன்னது பொருளாதார நூல்.

அது வரை விழித்த கண் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த சங்க நூல், “உலகிலேயே முதன் முதலா, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு பொதுமை சிந்தனையச் சொன்னது நாங்க. ரெண்டாயிரம் வருசமா எவ்வளவு அனுபவ அறிவப் பாதுகாத்து வாரோம். அதுவுமில்லாம, யாரும் நம்மளத் தேடி வரமாட்டாங்களான்னு வாசலப் பாத்து தவங்கெடக்கோம். இவரு சொல்றதப் பாத்தா இனி யாரு வருவா? நாங்க யாருட்டச் சொல்ல?” என்றது.

அப்போது டாய்லெட்டிலிருந்து பேண்ட் ஜிப்பை மாட்டிக் கொண்டே வெளியே வந்த ஓர் இளையோர் புத்தகம், “என்ன பெருசு! ரொம்பவும் பீல் பண்றீர்! அதான் தாடி சொன்னதக் கேட்டீருல்ல. மொத்தத்துல நாம இருக்கிறதும் வேஸ்ட், இவங்களப் பேசுறதும் வேஸ்ட்! என் அறிவுக்குப் பட்டதச் சொல்லுதேன் கேட்டுக்கோரும். செருப்பு அரியணை ஏறுனமாதிரி புராணம் எழுதினவங்க இவங்க; புத்தகம் அரியணை ஏறுனமாதிரி புராணம் எழுதியிருந்தால புத்தி வந்திருக்கும்? ம்! ம்! விட்டுத் தொலையும்! சாரவாடை சன்னலத் தொளைக்குது! கதகதப்பா ஒருத்தர் மேல ஒருத்தர் சாஞ்சி வாய மூடிட்டு நிம்மதியா தூங்கும் ஓய்!” என்றது.

“அப்படிச் சொல்லுடா திருவாசகம்” என்று சமய நூல் பகுதியிலிருந்த ஒரு புத்தகம் சொன்னதும், அதை ஆமோதித்த சத்தமும் அறையெங்கும் கேட்டது.

“டக்… டடக்… கிர்ர்ரீச்!”

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், அத்தனை புத்தகங்களும் அதனதன் இடத்திற்கு எகிறின. குழந்தைகள் புத்தகம் மட்டும் கீழே அயர்ந்து தூங்கிக் கிடந்தது.

கதவு திறந்தது!

வாசல் வெளிச்சத்தின் ஊடே நூலகர் நின்றிருந்தார்.

‘என்னடா இது! ஒரு கதவத் திறந்தா நூறு கதவத் திறந்த மாதிரி சத்தம் வருது?’ என்று மனதிற்குள் நினைத்தவர், எரிந்து கொண்டிருந்த டியூப் லைட்டைப் பார்த்தார்.

‘அடடா! நேத்து ராத்திரி கதவப் பூட்டும் போது கரண்ட் கட்டாயிருந்தது. இருட்டுல இந்த சுவிச்சக் கவனிக்காமப் போயிருக்கேனே?!’ என்று வருந்தியவர் வேகமாகச் சென்று சுவிச்சை ஆப் செய்தார்.

அவ்வேளையில், கீழே விழுந்து கிடந்த புத்தகத்தைக் கவனித்தவர், அருகில் சென்று, “தினமும் இது எப்படி கீழே விழுதுன்னே தெரியல; ஹும்! ராத்திரி ஆயிட்டா இதுக்கு கை கால் மொளச்சிருதோ என்னவோ?” என்று மெதுவாக முணுமுணுத்துக் கொண்டே, அதை எடுத்து அலமாரியில் அடுக்கினார்.

வாயைப் பொத்தியவாறே சிரித்துக் கொண்டன அத்தனை புத்தகங்களும்!

* * *

 

பிறப்பு: நடைமுறைகள் – 2

புலவர் அ.மரியதாஸ்,செட்டிகுறிச்சி.

பிறப்பு: நடைமுறைகள்
(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

பதிவு : 5

குழந்தை பெற்ற தாய்க்கு செய்பவை:
மின்சாரத்திற்கு முன்புள்ள மக்களின் வாழ்க்கை நிலையைக் காணும் போது, அது இன்றுள்ளோருக்கு நம்ப முடியாதவைகளாகத் தோன்றும். ஆனால், அவை எல்லாம் நம் முன்னோர்கள் அன்று கடைபிடித்த உண்மையான செயல்களே. அந்த வகையில் குழந்தை பிறந்தவுடன் செய்வனவற்றில் சில ஏற்கனவே சொல்லி இருந்தாலும்; இனி தாயுக்கும் குழந்தைக்கும் செய்யப்பட்டவை என்னென்ன? என்று தனித்தனியே கூறுகிறேன்.

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு மஞ்சளும் காயமும் சேர்த்து அம்மியில் அரைத்து மூன்று உருண்டைகள் கொடுப்பார்கள். இவ்வுருண்டைகளை உண்டதும் நீராகாரம் என்னும் பழைய சோற்று நீர் ஒரு டம்ளர் கொடுப்பார்கள். அதைக் குடிக்க வேண்டும். குழந்தை பிறந்த பின் கருப்பை நன்கு சுத்தமாவதற்காக என்று கடுகு சுமார் நூறு கிராம் வறுத்து கருப்பட்டி சேர்த்து இடித்து உருண்டையாக்கிக் கொடுப்பார்கள். இவ்வுருண்டையை இரண்டு நாள் உண்ண வேண்டும். குழந்தை பெற்ற தாயை சுமார் பன்னிரெண்டு மணி நேரத்தில் உடம்பின் தோல் வெந்து போகாத அளவிற்கு சுட வைத்த வெந்நீரால் பச்சைத் தண்ணீர் சேர்க்காமல் உடம்பின் பாதி அளவிற்கு கீழ் நன்கு ஊற்றி குளிக்க வைப்பார்கள். குளித்த பின் வடபூடு என்று சொல்லப்படும் பெரிய வெள்ளைப் பூண்டை உரித்துப் பச்சையாக (வேகவைக்காமல்) கருப்பட்டியைக் கடித்துக் கொண்டு நன்கு மென்று தின்ன வேண்டும். இவ்வாறு ஐந்து நாட்கள் வரை கொடுப்பார்கள். பத்து நாட்கள் வரை சூடு அதிகமாகவுள்ள சுடுநீரில் காலை மாலை இருவேளையும் குளிக்க வேண்டும். இவ்வாறு குளிக்கும் போது உடல் முழுவதும் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும்.

குழந்தை பெற்ற மறு நாள் காலையில் வெள்ளைப் பூண்டு குழம்பு வைத்து சோறு கொடுப்பார்கள். அதன் பின் கருவாட்டுக் குழம்பு வைத்து சோறு கொடுப்பார்கள். சாப்பிடும் போது சோற்றில் நல்லெண்ணெய் ஊற்றி உண்ண வேண்டும். அரிசிச் சோறு என்பது அன்று அநேக வீடுகளில் அரிதான ஒன்றாக இருந்தது. குழந்தைபெற்ற தாய்க்கு மட்டுமே ‘வீடு கூடுதல்’ என்ற ஏழு அல்லது பத்து நாள் வரை அரிசிச் சோறு கொடுப்பார்கள். முந்திய பிள்ளைகள் இருந்தாலும் கூட கொடுக்க மாட்டார்கள். இரண்டு நாளுக்கு ஒருமுறை வசதியைப் பொறுத்து கோழிக் குழம்பு வைத்து சாறு கொடுப்பார்கள்.பிறப்பு: நடைமுறைகள் கருவாடு உணவில் முக்கிய பங்குள்ளதாக இருக்கும். கருவாடு உணவில் அதிகம் சேர்த்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் என்று கருவாடு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைப் பெற்றுள்ளவர்களைப் பார்க்கச் செல்லும் நெருங்கிய உறவினர்கள் கோழி அல்லது கருவாடு கொண்டு சென்று கொடுத்து பார்த்து வருவார்கள். குழந்தை பெற்ற தாய் இரவு படுக்கச் செல்லும் முன் முப்பது நாள் வரை இஞ்சி அம்மியில் தட்டி எடுத்து சாறு பிழிந்து குடிக்க வேண்டும். இதனால் இஞ்சியை மொத்தமாக வாங்கி ஓலைப் பெட்டி போன்ற ஒரு பெட்டியில் மணல் போட்டு அதில் புதைத்து வைத்து நீர் தெளித்து வைத்துக் கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் இஞ்சி பல நாள் வரை கேட்டுப் போகாமல் இருக்கும்.

மேலும் குழந்தை பெற்ற தாய்க்கு பச்சை மருந்து என்று சொல்லப்படும் பத்துக்கும் மேற்பட்ட மருந்து வகைகளைக் கொண்ட காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சித்தரத்தை, கடுகு, நறுக்கு மூலம், கருப்பட்டி போன்றவைகளை கடையில் வாங்கி வறுத்து இடித்து சலித்து பொடியாக்கி அத்துடன் கருப்பட்டி சேர்த்து இடித்து உருண்டையாகப் பிடித்து ஒரு மண்சட்டியில் மூடி வைத்துக் கொள்வார்கள் இவ்வுருண்டையை காலை மாலை உண்ண வேண்டும். இம்மருந்து உருண்டை புண்ணை ஆற்றி நல்ல பசி கொடுப்பதாகும். ஆகவே, தாய் விரைவில் உடல் நலமும் வலுவும் பெற்று சகஜ நிலைக்கு வருவாள்.பிறப்பு: நடைமுறைகள்இம்மருந்து உருண்டையில் கருப்பட்டி சேர்ந்திருப்பதால் தின்பதற்கு ருசியாக இருக்கும். ஆகவே மூத்த பிள்ளைகள் இருந்தால் தாயிடம் கேட்டு வாங்கிச் சாப்பிடுவதுண்டு. இவ்வாறு, நான் சிறுவயதிலிருந்த போது என் அக்காளுக்காகச் செய்திருந்த இம்மருந்துருண்டையை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்.

வீடு கூடுதல் :
வீடு கூடுதல் என்பது குழந்தை பெற்ற பெண்ணிற்கு உறுதுணையாக இருந்து உணவு தயாரித்துக் கொடுத்தல், வெந்நீர் வைத்து குளிக்க வைத்தல், மருந்து பொருட்கள் செய்து கொடுத்தல் பிறந்த குழந்தைக்கு செய்வனவற்றைச் செய்தல், தண்ணீர் எடுத்தல், துணிகளைத் துவைத்தல், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்தல் போன்ற வேலைகளைச் செய்தவர்களின் துணையை, உதவியை நீக்கி, குழந்தை பெற்ற தாயே அனைத்து வேலைகளையும் செய்யத் தொடங்கும் நாள். இது வீட்டு வசதி, தாயின் உடல் நிலையைப் பொறுத்து சுமார் ஏழு அல்லது பதினொன்றாம் நாளிற்குள் நடைபெறும். அன்று திரை மறைவு கட்டியிருந்தால் அதை எடுத்து வீட்டை சாணத்தால் மெழுகுவர். அன்று எல்லா வீடுகளுமே மண்தரையாகவே இருந்தன. குழந்தை பெற்ற தாயை வழக்கம் போல் குளிக்க வைத்து, கோழி அல்லது கருவாட்டுக் குழம்பு வைத்து சோறு கொடுத்து, “இனி நீயே எல்லா வேலைகளையும் செய்து கொள்” என்று கூறுவர். அதிலிருந்து குழந்தை பெற்ற தாயே அனைத்து வேலைகளையும் செய்து கொள்வாள். அன்றைய காலங்களில் பெண்களுக்கு அவ்வாறான உடல் வலுவும் திடனும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிறந்த குழந்தைக்குச் செய்பவை :
தாயின் வயிற்றிலிருந்த குழந்தைக்குத் தேவையான காற்றும் உணவும்; தாயின் இரத்தத்தின் ஒரு பகுதியும் தொப்பூள்கொடி வழியாய் கிடைத்து வந்தது. குழந்தை பிறந்தவுடன் தொப்பூள் கொடியை வெட்டி முடிச்சிட்டு பிரித்து எடுப்பர்.இப்போது குழந்தை முற்றிலும் ஒரு புதிய சூழ்நிலைக்குள் வருகிறது.பிறப்பு: நடைமுறைகள் காற்றை முதன் முதலாக மூக்கின் வழி தானே சுவாசிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகிறது. அப்புதிய முயற்சியில் தன்னை ஈடுபடுத்தும் போது ஏற்படும் கஷ்டத்தால் அது வீர் வீரென அழுகிறது. இவ்வாறு கண் திறந்து அழுதவுடன் அதன் உடலில் ஒட்டியுள்ள கருப்பை நீர் நீங்குவதற்காக பச்சை தண்ணீரில் கழுவி துடைத்து எடுப்பர். குளிர் காலமாக இருந்தால் வெந்நீரில் கழுவுவர்.

இவ்வாறு குழந்தை நன்கு அழுத பின் அதற்கு ‘சேனை’ என்பதைக் கொடுப்பார்கள். இச்சேனை என்பது விளக்கெண்ணெய்யும் கருப்பட்டியும் சேர்ந்த கலவையாகும். இதை அக்குடும்பத்திலோ அல்லது உறவினர்களோ கல்வி, வீரம், செல்வம், நற்பண்பு என்று ஏதாவது ஒன்றிலாவது சிறந்தவர்களைக் கொண்டு அவர்களின் வலது கை ஆள்காட்டி விரலால் சேனை என்னும் கலவையைத் தொட்டு குழந்தையின் நாக்கில் வைக்கச் சொல்லுவர். இதைக் கோழி இறகைக் கொண்டும்; பேனாவின் எழுது முனையைக் கொண்டும் தொட்டு வைப்பதுண்டு. இதற்கு, ‘சேனை வைத்தல் அல்லது கொடுத்தல்’ என்று சொல்லுவர். இதுவே குழந்தைக்குத் தரப்படும் முதலுணவு. இவ்வாறு செய்வதால் சேனை கொடுத்தவரைப் போன்று குழந்தை பிற்காலத்தில் சிறந்து விளங்கும் என்பது இவர்கள் நம்பிக்கை. ஒருவர் பெரியவரானாலும் கூட, ‘உனக்கு சேனை வைத்தது யார்?’ என்று சொல்லிப் பேசும் பேச்சும் இருந்தது. குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் முடிய தலையிலும் உடலிலும் விளக்கெண்ணெய் எப்போதும் தேய்த்து வைத்திருப்பர். உடலுக்குள்ளும் குடிக்கக் கொடுப்பர். ஆதலால், விளக்கெண்ணெய் குழந்தையோடு தொடர்புடைய முக்கிய பொருளாக அன்று இருந்தது.

சேனை என்னும் இவ்விளக்கெண்ணெய்க் கலவையை வெங்கலத்தில் செய்யப்பட சட்டி போன்ற அமைப்புடைய சிறு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்வர். குழந்தை அழும் போதெல்லாம் இக்கலவையை தாய் தன் விரலால் தொட்டு குழந்தைக்குக் கொடுப்பாள். சிலர் பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் சிலர் ஒரு நாள் வரையிலும் கொடுப்பர். இந்த சேனை என்னும் விளக்கெண்ணைய் கலவையை ஏன் கொடுக்கிறார்கள் என்றால் தாயின் வயிற்றிலிருந்த குழந்தைக்கு தாயின் ரத்தமே உணவாக இருந்தது என ஏற்கனவே சொல்லியுள்ளேன். அந்த இரத்த உணவு சிறுகுடல் பெருங்குடல்களில் தங்கி இருக்கும். ஆகவே, தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் அவற்றை வெளியேற வைத்து குடலை சுத்தம் செய்ய இந்த விளக்கெண்ணெய் கலவையைக் கொடுப்பார்கள். விளக்கெண்ணெய்க்கு மலத்தை வெளியேற்றும் தன்மையுண்டு. இக்கலவையை உண்ட குழந்தையிடமிருந்து கருப்பாக இரத்த மலம் வெளியேறிக் கொண்டிருக்கும். இதுவே, குழந்தையையும் சேர்த்து வைக்கோல் படுக்க வைக்க முக்கியக் காரணம். இவ்வாறு, சேனை கொடுக்கப்பட்ட குழந்தை சோர்ந்து காணப்படும். அதன் பின் குழந்தையை பச்சை தண்ணீரிலோ, தேவைப்பட்டால் சுடு நீரிலோ குளிப்பாட்டி தாய்ப்பால் கொடுப்பார்கள். அதன் பின் வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய் ‘ஒரு சங்கு’ கொடுப்பார்கள்.

கண்ணிற்கு எண்ணெய் கட்டுதல் :
தலைக்கு ஷாம்பு தேய்த்து குளித்து எண்ணெய் தேய்க்காமலிருக்கும் இக்கால மக்கள் முன், ‘கண்ணிற்கு எண்ணெய் கட்டுதல்’ என்பது கேள்விப்படாத ஒன்றாகவே இருக்கும். ஆனால், அன்று இது நடைமுறையில் கடைபிடிக்கப்பட்ட பழக்க வழக்கமாகும். எனது அக்காளின் பிள்ளைகளுக்கு எனது அம்மா செய்ததை பல முறை நான் பார்த்திருக்கிறேன். இது என்னவென்று இனி பார்ப்போம்.

சிறு பிள்ளைகளுக்குச் செய்யப்படும் செயல்களுள் இதுவும் முக்கியமான ஒன்றாகும். ஆறு மாதம் வரை வாரம் ஒரு முறை கண்ணிற்கு எண்ணெய் கட்டி குளிக்கச் செய்வார்கள். இக்குளியலின் போது குழந்தையின் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் (எள்ளெண்ணைய்)யை நன்கு தேய்ப்பார்கள். பின் சிறிது பொறுத்து சுமார் அரையடி உயரமுள்ள பலகையில் அனுபவமுள்ள பெண் உட்கார்ந்து தன் இரு கால்களையும் ஒன்று போல் சேர்த்து நீட்டிக் கொள்வர்.பிறப்பு: நடைமுறைகள் பின் சேலையை முட்டு வரை சுருக்கி வைத்துக் கொண்டு பிள்ளையை வாங்கிக் காலில் படுக்க வைத்து மீண்டும் எண்ணெய்யை நன்கு தேய்த்து விட்டு குழந்தையை மல்லாந்து காலில் படுக்க வைத்துக் கொள்வர். பின் குழந்தையின் கண்களில் ஒரு கண்ணை தனது கை விரல்களால் விரித்துப் பிடித்து கண்ணில் நல்லெண்ணெய்யை ஊற்றுவார்கள். அதை சிறிது நேரம் கண்ணில் தேங்கி இருக்கும் படிச்செய்து பின் அடுத்த கண்ணிற்கும், இது போல் செய்வர். நல்லெண்ணெய் கண்ணில்பட்டால் கரிக்குமாதலால் பிள்ளை அழும். இருந்தாலும் இதைச் செய்வர். இவ்வாறு கண்ணிற்கு எண்ணெய் கட்டினால் கண் பார்வை முதியவர்களானாலும் நன்றாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அதன் பின் வெந்நீர் கொண்டு சீகக்காயால் நன்கு தேய்த்து குளிப்பாட்டி துணியால் துடைப்பர். பின் காது, மூக்கில் ஏதாவது தண்ணீர் இருக்குமென்று காதில் வாயைக் கொண்டு காற்று ஊதியும், மூக்கில் வாயை வைத்து உறிஞ்சியும் தண்ணீரை எடுப்பர். அதன் பின் குழந்தையின் இரு கால்களையும் ஒன்று போல் சேர்த்து ஒரு கையில் பிடித்து தலைகீழாகத் தொங்க விட்டு வலது பக்கமும், இடது பக்கமுமாக ஆட்டுவார்கள். தொடர்ந்து கைகள் இரண்டையும் சேர்த்து ஒரு கையில் பிடித்துக் கொண்டு முன்பு போல ஆட்டுவார்கள். இப்படிச் செய்த பின்பு இருகைகளையும் விரித்து அதில் குழந்தையை படுக்கை வசத்தில் பிடித்துக் கொண்டு சிறிது உயரத்திற்கு தூக்கிப் போட்டு பிடிப்பார்கள்.பிறப்பு: நடைமுறைகள் பின் சாம்பிராணி புகைப் போட்டு அதில் பிள்ளையை காட்டுவார்கள். இவ்வாறெல்லாம் செய்வதால் குழந்தை பயம் நீங்கி உடல் வலுவோடு வளரும் என்பதற்காக அவ்வாறு செய்தனர்.

மேலே சொல்லப்பட்டவை அசைவம் உண்ணும் பல இன மக்கள் பின்பற்றும் பழக்க வழக்கமாகும். அதிலும் ஒரு இன மக்கள் இவற்றிலிருந்து சற்று மாறுபட்டவர்களாக இருக்கின்றனர். குழந்தை பிறந்த மூன்று நாட்கள் வரை ஏற்கனவே சொல்லியதைப் போன்றே இவர்களும் செய்கின்றனர். சேனை கொடுப்பதிலும் மாற்றம் கிடையாது. ஆனால், இவர்கள் குழந்தை பிறந்த மூன்று நாளைக்குப் பின், சுமார் முப்பது நாட்கள் முடிய பின்பற்றும் பழக்க வழக்கம் முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கிறது. எப்படியெனில், இந்நாட்களில் குழந்தைக்கு தினமும் ஒரு சங்கு விளக்கெண்ணெய் ஊற்றுகிறார்கள். அவ்வாறு ஊற்ற வேண்டிய விளக்கெண்ணெய்யை ஒரு கைக் கரண்டியில் ஊற்றி அதில் வெள்ளைப்பூடு, காயம், சுக்கு, மிளகு என்பவற்றுடன் மிகச் சிறிது சேர்த்து, அத்துடன் :

1. அருகம்புல்
2. வேப்பங்கொழுந்து
3. கோவை இலை
4. பாவை இலை
5. செந்தட்டி இலை
6. யானை நெருஞ்சி இலை
7. குப்பை மேனி இலை
8. சிறுகுமட்டி இலை
9. பெருந்தும்பை இலை
10. கீழா நெல்லி இலை
11. முருங்கை பூ
12. எக்கடுகு இலை
13. கலப்பை படாத கொழுஞ்சிவேர்
14. பொன் ஆவரை
15. வேலிப் பருத்தி இலை

என்று மேலே சொல்லப்பட்டவைகளுள் இலையின் அளவைப் பொறுத்து, ஒன்று அல்லது இரண்டு இலையைப் போட்டு சுட வைத்து நன்கு ஆறிய பின் அதில் போட்டவைகளை எல்லாம் நன்கு எடுத்து விட்டு சங்கில் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு இலையாகப் போட்டு ஒரு சுற்று முடிந்ததும் மீண்டும் முதலிலிருந்து தொடங்கிச் செய்வார்கள். வேலிப்பருத்தி இலை கொடுக்கும் தினத்தில் மட்டும் தாய் மதியம் மட்டும் சாப்பிட்டு பத்தியம் இருக்க வேண்டும்.

இவ்வாறு கொடுக்கும் முப்பது நாள் முடியுமட்டும் தினமும் காலை மாலை இரு வேலைகளிலும் குழந்தையின் கண்கள், மூக்கோடு சேரும் இடத்தில் இரு கண்களிலும் ஒவ்வோர் சொட்டு விளக்கெண்ணெய் விடுவார்கள். விளக்கெண்ணெய் கண்ணில் படும் போது கண் கரிக்காமல், கண்ணிற்கு குளிர்ச்சியாக இருக்குமாம். இதனால் குழந்தை அழுவதில்லை. மேலும், சிலர் குழந்தை மதியம் தூங்கி எழுந்தவுடன் கண்களில் சுத்தமான தண்ணீர் ஊற்றுவார்கள். இவர்களிடம் கண்ணிற்கு நல்லெண்ணெய் ஊற்றும் பழக்கம் இல்லை.

இவ்வாறாக, குழந்தை பெற்ற தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் அன்று கடைபிடிக்கப்பட்ட செயல் முறைகள் இருந்தன.

* * *

பதிவு 6 : குழந்தையுணவு