RSS

Monthly Archives: ஜூலை 2013

தேடுங்கள்!

கவிதை: P.J.ஜீவராஜ், தஞ்சாவூர்.அமைதியில்
ஒரு சகாப்தம் எழும்புகிறது என்றால்
நம்பிக்கையில்
ஒரு வெற்றி துளிர்க்கிறது.

அன்பு செய்கிறவனை
அடிமையாக்குவதும்;
ஆறுதல் தேடுகிறவனிடம்
ஆவேசப்படுவதும் அகங்காரம்.

தீர்ப்புகள் இடாதவரை
திருடனும் நல்லவனே
திருந்தியவனுக்கு – அந்தத்
தீர்ப்புகளும் நல்லவையே!

கண்ணீரின் வருகையை
கைகளால் துடைப்பவர்கள்
சாதாரணமானவர்கள்;
நம்பிக்கையால் துடைப்பவர்கள்
சாதனையாளர்கள்.

கோபத்தின் அதிர்வுகளால்
உண்மைகள்
உள்ளத்தின் உள்ளேயே
மடிந்து போகின்றன.
உண்மைகளை நேசித்தால்
கோபத்தின் மேல் கோபப்படு.

சிரிப்புக்கும் அழுகைக்கும்
அர்த்தம் இல்லையெனில்
வாழ்க்கைக்கும் அர்த்தம் இல்லை.

புத்தனென்றும் சித்தனென்றும்
போற்றுகின்றார்
புனிதனென்றும் ஞானியென்றும்
வாழ்த்துகின்றார்.
போதி தேடி அலையுமவர்
மனதிடம் போதி
அவர்களும் மனிதரென்று!

புதைத்தவனுக்கு
அது புதையலாகத் தெரியாது
விதைத்தவனுக்கு
அது விருட்சமாகத் தெரியாது.
அது போல,
உங்களின் உயர்ச்சியும்
உங்களுக்குத் தெரியாது!

இன்னும் தேடுங்கள்… தேடுங்கள்…
தேடல்கள் உள்ளவரிடம் நேரம் இருப்பதில்லை
நேரம் இருப்பவரிடம் தேடல்கள் இருப்பதில்லை.
* * *

Advertisements