RSS

பிறப்பு: நடைமுறைகள் – 1

17 மே

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

Pulavar A.Mariadoss, Chettikurichchi

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

பதிவு : 4

வைக்கோல் படுக்கை (Straw bed) :

கிறிஸ்துமஸ் தினத்தன்று பெரும்பான்மையான கிறிஸ்தவ தேவாலயங்களிலும், வீடுகளிலும் மாட்டுத் தொழுவம் போன்று அமைத்து அதில் வைக்கோல் படுக்கையில் இயேசு படுத்திருப்பதாகக் காட்சிப்படுத்தி இருப்பார்கள். வாழ்த்துக்களைத் தெரிவிப்பவர்கள்கூட இதுபோன்ற படங்களைக் கொண்டு அஞ்சலிலோ, மின்னஞ்சலிலோ அனுப்புவதைப் பார்த்திருப்போம். இயேசு வைக்கோல் படுக்கையில் படுத்திருந்ததால் அவரைப் பெற்ற தாயாகிய மரியாவும் வைக்கோல் படுக்கையில்தான் படுத்திருப்பார் என்பது எண்ணத்தால் அறியப்படும் செய்தி. இதனாலேயே, இயேசு தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்ளவே மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல் படுக்கையில் பிறந்தார் எனக் கிறிஸ்தவர்கள் சிறப்பித்துக் கூறுவர். இது பற்றி கிறிஸ்தவ சமய நூலான விவிலியம் கீழ்க் கண்டவாறு கூறுகிறது.

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுக்குமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழி மரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்த பொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். (லூக்கா: 2:1-7)

மேலும், குழந்தையை தீவனத் தொட்டியில் கிடத்திய இச்செய்தி இவ்வதிகாரத்தில் 12, 16 வசனங்களிலும் வருகின்றன.

யோசேப்பும் மரியாவும் பெத்லகேம் வருகை

இதன்படி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்கள் பெயரைப் பதிவு செய்யவே யோசேப்பும் மரியாவும் நாசரேத்திலிருந்து பெத்லகேம் வந்தார்கள். வந்த இடத்தில் குழந்தை பெற்றெடுக்கும் நிலை ஏற்பட, விடுதிகளில் இடம் கிடைக்காததால் வேறு வழியின்றி மாட்டுத் தொழுவத்தில் இயேசுவைப் பெற்றெடுக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இதனாலேயே இயேசு தீவனத் தொட்டியில் அதாவது வைக்கோல் படுக்கையில் வைக்கப் பட்டார் என்பதை அறிகிறோம்.

ஒரு வேளை விடுதியிலோ அல்லது வேறு நல்ல இடம் கிடைத்திருந்தாலோ இயேசு நிச்சயம் மாட்டுத்தொழுவத்தில் பிறந்திருக்க மாட்டார். வைக்கோல் படுக்கையில் படுத்திருக்கும் நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்காது. அதுபோலவே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறாமல் இருந்திருந்தாலும், யோசேப்பும் மரியாவும் பெத்லகேம் வந்திருக்க மாட்டார்கள். நாசரேத்தில் தங்கள் வீட்டிலேயே நல்ல வசதியுடன் குழந்தையைப் பெற்றெடுத்திருப்பார்கள். அவர்களுக்கு வைக்கோல் படுக்கையில் படுத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது என்பது விவிலிய அடிப்படையில் நாம் பெறும் செய்தி.

வைக்கோல் படுக்கையில் குழந்தை

எப்படியோ, இயேசுவால் வைக்கோல் படுக்கை சிறப்படைந்தது உண்மைதான் என்றாலும், நம் நாட்டில் இயேசுவை அறியாத நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே நம் மக்களிடையே குழந்தை பெற்றெடுத்த தாயையும் சேயையும் வைக்கோல் படுக்கையில் படுக்க வைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

அன்று வசதிகள் பல பெற்று மாளிகையில் வாழ்ந்தவர்கள் ஆனாலும் சரி; அல்லது மண் வீடாகிய குடிசையில் வாழ்ந்தவர்களானாலும் சரி; குழந்தை பெற்ற தாயும் பிள்ளையும் மூன்று நாட்கள் வரை வைக்கோலில் தான் படுத்திருந்தார்கள். அக்காலத்தில் பெரும்பாலான வீடுகளின் தரை மண் தளமாக இருந்ததால், குழந்தை பிறந்ததும் அவ்விடத்தை மாட்டுச் சாணத்தால் சுத்தம் செய்து, வீட்டின் ஓர் ஓரத்தில் வைக்கோலால் சுமார் ஆறு அடி நீளம், நாலடி அகலம், அரையடி உயரத்தில் பரப்புவர். மேலும், அதன்மீது பழைய சாக்கு, பழைய துணி போன்றவற்றை விரித்து அவர்களைப் படுக்க வைப்பர். இவ்வாறு செய்வதால் தாயிடமிருந்து வெளிப்படும் உதிரப் போக்கு போன்றவை வைக்கோலில் தங்கும். உதிரம் பட்ட பகுதியை அகற்றவும், அவ்விடத்தில் புதிய வைக்கோலை இடுவதும் எளிது. பின் மூன்று நாட்கள் ஆனவுடன் மொத்தத்தில் வைக்கோல் முழுவதையும் அள்ளி, சுருட்டி எடுத்து ஊருக்குப் புறம்பே கொண்டு போய் தீயிட்டு எரித்து விடுவர். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பல மாற்றங்களில் இப்பழக்கமும் இன்று முற்றிலும் மறைந்து போய் விட்டது.

திரையிடுதல் (Screening):

திரையிடுதல் என்பது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக எளிய முறையில் தற்காலிகமாக அமைக்கும் மறைப்பு ஆகும். இது குழந்தை பெற்ற தாயும் பிள்ளையும் படுத்திருக்கும் வைக்கோல் படுக்கையை மறைக்கும் வகையில் கயிறு கட்டி அதில் பழைய போர்வை, சேலை அல்லது சாக்கு போன்றவற்றைத் தொங்க விட்டு அமைப்பதாகும். இது அந்நாட்களில் நிலவி வந்த பழக்கங்களுள் ஒன்று. அதே போல குழந்தை பெற்ற மனைவியைக் குறிப்பிட்ட நாட்கள் கணவர் பார்க்கக் கூடாது என்பதும் ஒரு வழக்கம்.

ஓலை வேய்ந்த வீடு

மேலும், அன்றைய வீடுகள் தனித்தனி அறைகள் கொண்ட வீடாக இல்லாமல், ஒன்றிரண்டு அறைகள் கொண்ட ஓலை வேய்ந்த மண் வீடுகளாக இருந்த படியாலும், அதில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த படியாலும், குழந்தை பெற்ற பெண்ணும் மேலாடை இன்றி சற்று சுதந்திரமாக இருந்து கொள்வதற்கும் இத்திரை மறைப்பு அன்று தேவைப்பட்டது. வீட்டுச் சூழல் குடும்ப அமைப்பு இவற்றைப் பொறுத்து திரையிடாமல் இருப்பதுவும் உண்டு. இன்று குழந்தை பெற்ற தாய்மார்கள் மின் விசிறியின் கீழே கட்டிலின் மேலே பற்பல வசதியுடன் இருக்கும் இக்கால நிலையை ஒப்பிட்டால், ஒப்பிடமுடியா இடைவெளியுள்ளதை உணரலாம்.

விளக்கெண்ணெய் (Castor oil) தயாரித்தல்:

பிறந்திருக்கும் குழந்தையோடு அன்று அதிக தொடர்புடைய பொருளாக இருந்தது விளக்கெண்ணெய். பிள்ளைக்கும் எண்ணெய்க்கும் என்ன தொடர்பு? எனக் கேட்கலாம். ஆனால், அன்றைய நிலை அதுதான்! இவ்வெண்ணெய்யை எவ்விதம் குழந்தைக்குப் பயன்படுத்தினார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ளும் முன், இவ்வெண்ணெய்யின் தன்மையும், அதை எவ்விதம் தயாரித்தனர் என்பதையும் கூறி விடுகிறேன்.

ஆமணக்கு (Castor plant)

ஆமணக்கு (Castor plant) எனப்படும் தாவரத்திலிருந்து கிடைக்கும் விதையை ஆமணக்கு முத்து என்பர். அதாவது, புளிய மரத்து விதையை புளியமுத்து என்பது போலவும், வேப்பமரத்து விதையை வேப்பமுத்து என்பது போலவும் இதையும் கூறுவர். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், நம் நாட்டில் மண்ணெண்ணெய் உபயோகத்திற்கு வராத காலத்தில் விளக்கு எரியப் பயன்படுத்தியதால் விளக்கெண்ணெய் எனக் காரணப் பெயராயிற்று. இது அடர்த்தி குறைந்ததாகவும் அதிக பிசுபிசுப்புத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். இதை நம் முன்னோர்கள் பல நிலைகளில் பயன்படுத்தினர்.

ஆமணக்கு முத்துக்கள் (Castor seeds)

இதை தலைக்குத் தேய்த்தால் உடல் வெப்பம் குறையும் என்று கருதினர். மேலும், குடலிலுள்ள அசடுகள் சுத்தமாய் வெளியேற (பேதி போக) இதைக் குடிப்பர். இன்றும் மருத்துவ மனைகளில் இவ்வகைக்கு இதைப் பயன்படுத்துகின்றனர். சுழுக்கு, வயிற்று வலி இவற்றிக்கும் இதைத் தடவுவர். இம்முத்திலிருந்து செய்யப்படும் கரிய மையைக் கொண்டு மாட்டு வண்டியின் அச்சுகளில் தேய்மானத்தைக் குறைக்க உராய்வுப் பசை (Grease) யாகப் பயன்படுத்துவர். இன்றுவரை இறந்தவர்களின் உடலை எரிக்கவும் இம்முத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.

உராய்வுப் பசை (Greases)

இவ்வெண்ணெய் கடைகளில் கிடைத்தாலும் அன்றைய மக்கள் வீடுகளில் தாங்களாகவே தயாரித்துக் கொள்வர். என் அக்காள் குழந்தை பெற்றெடுக்க எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது என் அம்மா தயாரிப்பதைப் பார்த்திருக்கிறேன். அக்காலங்களில் ஆமணக்கு முத்துக்களைத் தோட்டக்காரர்களிடம் இருந்து இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். இம்முத்துக்களை நன்கு வெயிலில் காய வைத்து, உரலில் போட்டு உலக்கையால் நைந்து போகும்படி இடிப்பார்கள். பின் அதை எடுத்து ஒரு பானையில் போட்டு நீர் ஊற்றி, அடுப்பில் வைத்துக் காய்ச்சுவார்கள். நன்கு சூடேற்றிய பின் நீண்ட துடுப்பாலோ அல்லது அகப்பை (தேங்காய் ஓட்டில் செய்தது) கொண்டோ, கிளரிக் கிளரி விடும்போது எண்ணெய் பிரிந்து மேலே வந்து மிதக்கும். இதை அகப்பை கொண்டு எடுத்து வேறோர் பாத்திரத்தில் சேகரிப்பர். இவ்வாறு சேகரித்ததில் நீரும் சிறிது கலந்திருக்கும். இக்கலவையை நன்கு தெளிய வைத்தால் தண்ணீர் கீழும் எண்ணெய் மேலுமாகப் பிரிந்து நிற்கும். பின் எண்ணெய்யை மட்டும் வடித்தெடுத்து, வடித்தெடுத்த எண்ணெய்யை மீண்டும் அடுப்பிலிட்டுக் காய்ச்சுவர். அப்போது தண்ணீர் முழுவதும் வெளியேறி சுத்தமான விளக்கெண்ணெய் கிடைக்கும்.

பதிவு 5 : பிறப்பு: நடைமுறைகள் – 2

Advertisements
 

5 responses to “பிறப்பு: நடைமுறைகள் – 1

 1. சட்டநாதன்

  20/05/2013 at 5:43 முப

  இந்தத் தொடர் என் போன்ற பலருக்கு, மிகவும் அரிய தகவல்களைத் தருகின்றது.

  இப்ப இருக்கிற சின்னப் பசங்க கிட்ட, நான் கல்லூரியில் படிக்கும் போது வீட்டுக்கு தொலை பேசியில் தொடர்பு கொள்ள மூன்று – நான்கு கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்று சொல்லும்போது, அவங்க அதிசயமா, ஏன் உங்ககிட்ட மொபைல் போன் கிடையாதா? என்று கேட்பார்கள். வசதிகள் பெருகி விட்ட நிலையில் நம் முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள் என்ன என்று கூடத் தெரியாமல் போய் விட்டது.

  சரி, இதைத் தெரிந்து கொள்வதால் இப்ப என்ன கிடைக்கும்? என்னைப் பொறுத்தவரை பல படைப்புகளை, இந்தப் பின்னணி தெரிந்து இருந்தால் நன்கு உள் வாங்கிக் கொள்ள முடியும்.

  ஜெயமோகனுடைய படைப்பு ஒன்று – சிறுகதையா குறு நாவலா என்று மறந்து விட்டது. ஈராறு கால் கொண்டு எழும் புரவி என்று தலைப்பு. அதில் வரும் சாத்தான் குட்டிப் பிள்ளையின் மனைவி நாகம்மைக்கு பிள்ளைப்பேறு பார்க்க வரும் சின்னம்மைக் கிழவி மூக்குக் கண்ணாடியை வாலாய்மைத் துணிச் சுருளுடன் சுருட்டி வைத்து விட்டு, கண் தெரியாமல் தொப்புள் கொடியை முந்தானை என்று நினைத்து இடுப்பில் சொருகிக் கொண்டதில் தாய், சேய் இருவரும் மரணிப்பர்.

  கதை தான் என்றாலும் அந்தக் காலத்தில் வசதிகள் இன்றி நம் முன்னோர்கள் பட்ட கஷ்டங்களை நினைக்கும் போது ஒரு கனம் நெஞ்சில் ஏறுகிறது.

  வண்ணநிலவன், நாஞ்சில் நாடன் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில்,
  “அதுவும் நம்முடைய பொம்பிளைப் பிள்ளைகள், ‘உண்டாகி’ பெத்துப் பிழைக்க
  வந்திருக்கிற காலம் அருமையானது” என்பார். அதை சரியான பொருளில் விளங்கிக் கொள்ள உங்களுடைய இது போன்ற கட்டுரைகள் அவசியம்.

  தொடருங்கள் சார்.

   
 2. சித்திரவீதிக்காரன்

  26/05/2013 at 1:22 பிப

  அறியாத பல அரிய தகவல்களை இப்பதிவின் மூலம் வாசித்தேன். பகிர்விற்கு நன்றி.

   
 3. Alex Ambrose

  14/06/2013 at 5:16 முப

  இந்தத் தொடர் மூலமாக, நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளுக்கும் பின்னுள்ள, அறியாத தகவல்களை, தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் சார். இடைவிடாது வளரட்டும் இந்தத் தொடர். ஒருமுறை அசின் சாருடன் பேசும் போது, நம்மூர் ‘தாவணி’ பற்றி நீங்கள் எழுதியிருப்பதாக அறிந்தேன். அது பற்றியும் பல அறியப்படாத தகவல்களை இதுபோன்ற தொடரில் நீங்கள் எழுத விரும்புகின்றேன்.

   
 4. jeevaraj

  16/06/2013 at 3:35 பிப

  i am a student of mariadoss sir

   
 5. இமா க்றிஸ்

  21/03/2017 at 11:07 முப

  ஆமணக்கு எண்ணெய் எப்படி எடுப்பார்கள் என்பதை இப்போதான் அறிந்துகொண்டேன். நன்றி.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: