RSS

கழுகுமலையின் உயரம் ‘வை.பூ.சோ.’

02 மே

அசின் சார், கழுகுமலை.கழுகுமலையின் உயரம் ‘வை.பூ.சோ.’வை.பூ.சோ. என்றும், கவிஞர் பூமதி என்றும் அறியப்பட்டவர் கழுகுமலை திரு வை.பூ.சோமசுந்தரம் அவர்கள். கழுகுமலை ஊருக்குள் நாங்கள் ‘சோமு சார்’ என்றே அன்போடு அழைத்து வருகிறோம்.

கழுகுமலை அரசு பள்ளியில் நான் +2 படித்த போது, அவரிடம் நான் தமிழ் பயின்றிருக்கிறேன். அவர் நடத்திய புதுமைப்பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’ சிறுகதை இப்போதும் என் நினைவில் நிற்கிறது. அதில் வரும் ஏழை எழுத்தாளர் முருகதாசர் ஒரு நாளை ஓட்ட என்ன பாடு பட்டார் என்பதை இயல்பு வழக்கில் பேசி நடத்திய போது, அவரே எங்களுக்கு முருகதாசராகத் தெரிந்தார். அன்றைய நாட்களில் வீட்டிலுள்ள கிழிந்த கோரைப்பாயைப் பார்க்கும் போதெல்லாம் முருகதாசரின் நினைவும், சோமு சார் நடத்திய விதமுமே மனதில் தோன்றும்.

எதையும் நகைச்சுவை உணர்வோடு சொல்லக் கூடிய பண்பாளர். நன்றாக ஞாபகம் இருக்கிறது, பதினோராம் வகுப்பில் புதிதாக நுழைந்த நேரம். அவர் சொன்ன அட்வைஸ். “நீங்க ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்கனுங்கிறதுக்காக வகுப்பில் எழுந்து நின்னு வணக்கம் சொல்லுதீங்க, சரி. அதுக்காக, சைக்கிளில் நீங்க எதிரே வரும்போது பெடலில் நின்று கொண்டு வணக்கம் சொல்லுவது சரியில்ல. உங்க சைக்கிள் லேசா ஆடும்போது எதிரே நடக்கும் எனக்கு பயமா இருக்கு. அந்த மாதிரி நேரங்களில் நீங்க ‘வணக்கம்’னு சொன்னாலே போதும்” என்றார்.

நான் பி.எட். படித்த போது இவரே எனக்கு வழிகாட்டி ஆசிரியர். படிப்பை முடித்த பின் பெ.ஆ.கழகத்தின் சார்பாக கழுகுமலை அரசு பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்ற வாய்ப்புத் தந்தவரும் இவரே. இவரில்லத்தில் இவரை சந்திக்கச் செல்லும் போதெல்லாம், வீட்டின் முன்புற வரவேற்பறையில் நமக்கு முன்னதாகவே வந்த சிலர் அவர்களின் அலுவல் பிரச்சனை குறித்துப் பேசி ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பர். அல்லது இலக்கிய ஆர்வலர்களோடு அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருப்பார். நாம் சென்றதும் நம் நலம், பெற்றோர் நலம், பணி நலம் குறித்து விசாரித்துக் கொள்வார். மேலும், புதிதாக வந்த அரசாணைகள், அரசு சலுகைகள் பற்றியும் பகிர்ந்து கொள்வார்.

ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அவர் புதிதாகப் பெற்ற விருதும், வாழ்த்துப் பட்டயமும் பற்றிக் கூறுவார். அவை நம் வாழ்வில், நம் பணியில் நாம் எட்ட வேண்டிய உச்சங்களாக முன் நிற்கும். சோமு சார் வீட்டிலிருந்து வருகிறேன் என்பதை என்னைப் பார்த்ததுமே என் மனைவி அறிவாள். அந்த அளவிற்கு ஒவ்வொரு முறை போகும் போதும் கல்வித்துறை, தமிழ்த் துறை சார்ந்த நூல்கள், இதழ்கள், இலக்கியக் கூட்ட அழைப்பிதழ்கள் என்று கை நிறையக் கொடுத்து விடுவார்.

தொலைக்காட்சி நாடகப் பிரியர். இதனாலேயே மாலையில் நாம் அவரை சந்திக்க விரும்பினால் ஏழு மணிக்கு முன்னதாகவே வந்து விடுங்கள் என்று கனிவாகக் கேட்டுக் கொள்வார்.

ஒரு சமயம் கோவில்பட்டியில் தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி நடந்தது. அந்தப் பயிற்சி வகுப்பிற்கு நானும் சென்றிருந்தேன். எங்களுக்கு வகுப்பெடுத்த சோமு சார், பயிற்சி ஆசிரியர்களாகிய எங்களிடம் அடுத்த நாள் வரும் போது கதை, கவிதை, கட்டுரை போன்ற ஏதாவது ஒரு படைப்பை எழுதி வரக் கேட்டுக் கொண்டார். நான் கல்லூரி நாட்களில் எழுதி, வீட்டில் தூங்கிக் கிடந்த “ப்ளஸ் X மைனஸ் = மைனஸ்” சிறுகதையை அடுத்த நாள் கொடுத்தேன். சோமு சார் படைப்புகளுக்கான பரிசளிக்கும் போது எனது சிறுகதைக்கு முதல் பரிசு தந்தார். இவ்வாறெல்லாம் ஆசிரியர்களை ஊக்குவிக்கக் கூடியவர்.நான் எழுதிய “+2 தமிழ் வழிகாட்டி”யை சகோ.மரியண்ணன் வெளியிட சோமு சார் பெறுகிறார்.+2 தமிழ் இரண்டாம் தாளில் ‘இலக்கிய நயம் பாராட்டல்’ வினா ஒன்று உண்டு. அதில் பாடலின் சந்த நயத்தை மாணவர் கண்டறிந்து எழுத வேண்டும். இது குறித்த தெளிவு ஏடுகளிலும் சரியாக இல்லாததால், சோமு சாரிடம் கேட்டேன். அதை மிக எளிமையாக விளக்கினார்.

‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலடியை எடுத்துக் கொண்டார். அதை அசைப்படி ‘நல்-லதோர் வீ-ணை செய்-தே’ என்று பிரித்து, ‘நேர்-நிரை நேர்-நேர் நேர்-நேர்’ என்று அதற்குரிய அசையை எழுதினார். பின்பு அவ்வசைகளுக்கு ஏற்ப சந்த நயத்தை, ‘தன்-னன தா-னா தன்-னே’ என்று எழுதி, பாடிக் காட்டினார். என்ன ஆச்சரியம்! பாடலின் சந்தம் வெளிப்படையாக வந்தது. அப்போதுதான் கவனித்தேன். சினிமாப் பாடல்களில் கூட சந்தம் இப்படித்தான் பயன்படுத்தப் பட்டிருந்தது. ‘சிற்பி இருக்குது முத்துமிருக்குது’ என்ற ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படப் பாடல் முழுவதும், சந்தத்தைச் சொல்லிச் சொல்லி அடிகளைப் பாடுவதாக அமைந்திருப்பதை ஒத்துப் பார்த்தேன். அவர் எளிமையாக்கிச் சொன்னதை நினைத்து வியந்தேன்.

இவர் தந்தை திரு.பூசைப்பிள்ளை அவர்கள், கழுகுமலை சுதந்திரப் போராட்டத் தியாகியும், ஊர் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவரும் ஆவார். தாயார் மாரியம்மாள். இவரைப் பற்றி இளசை அருணா சொல்லும் போது, ‘இலஞ்சம் வாங்கத் தெரியாத அப்பாவி ஏட்டையா சுந்தரம்பிள்ளையின் மகள்’ என்று கூறுவார். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒரே ஆண் மகனாக சோமு அவர்கள், 20-06-1944 –ல் பிறந்தார்.

பள்ளிப் பருவத்திலேயே கவிதை, கட்டுரை படைக்கும் திறனோடு இருந்திருக்கிறார். அவ்விளம் வயதிலிருந்தே இவரின் வலப்பக்க காது கேட்கும் திறன் குறைவாக இருந்திருக்கிறது. அந்நாட்களில் தன் நண்பன் பாலசுப்பிரமணியனுடன் (வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர்), இணைந்து “இருவர்” என்ற கையெழுத்து மலரை வெளியிட்டுள்ளார். பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வில் பொதுத் தமிழ், சிறப்புத் தமிழ் இரண்டிலும் முதலிடம் பெற்றமைக்கு தலைமையாசிரியர் கையால் சோமு சார் பரிசு பெற்றிருக்கிறார்.

நெல்லை பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் பயின்ற போது, அக்கல்லூரி மலரில் இவருடைய பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரெழுதிய “கோலமிகு மயிலே” எனத் தொடங்கும் அக்கல்லூரியின் சிறப்பு பற்றிய பாடல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. 1959-60 ஆண்டுகளில் பேரா.பா.வளனரசு நடத்திய, “இளைஞர் குரல்” என்ற கையெழுத்து ஏட்டிற்கான போட்டிக் கவிதைகளில் முதல் பரிசு வென்றிருக்கிறார்.

பாளை தூய சவேரியார் கல்லூரியில் பி.எஸ்.சி. விலங்கியல் பட்டப்படிப்பு (1960-1963) படித்துள்ளார். ‘தேசிய ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் 150 மாணவர்கள் எழுதிய கட்டுரைகளில் சோமு அவர்கள் எழுதிய கட்டுரையைத் தேடி எடுத்துப் பாராட்டியவர் பேரா.குருசு அந்தோணி. சேவியர் கல்லூரி மலரில் இவரெழுதிய ‘கழுகுமலைப் பத்து’ என்ற வெண்பாக்களும், ‘பேசாத இரு உள்ளம்’ என்ற கதையும், ‘திருவள்ளுவர் பாடல்’ என்ற கட்டுரையும் வெளிவந்துள்ளன.பட்டிமன்ற மேடையில்முதன் முதலில் பயிற்சி பெறாத ஆசிரியராக இராமநாதபுரம் மாவட்டத்தில் (1964-65) பணியில் சேர்ந்தவர், 08.08.1966 முதல் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகக் கலிங்கப்பட்டியில் பணியைத் தொடங்கினார். 1968-லிருந்து கழுகுமலையில் 27 ஆண்டுகள் ஆசிரியப்பணி. இதனிடையே, 1970-ல் முதுகலைத் தேர்வினை எழுதியவர், 1979 முதல் முதுகலைத் தமிழாசிரியர் ஆனார். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைக் கையெழுத்து மலர் தயாரிக்க வைத்து அவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்த்திருக்கிறார். நாகலாபுரம் தமிழாசிரியர் காசாமைதீன் போன்றோரோடு சேர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் துணையோடு, கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகளை மாணவர்களுக்குத் திருவிழா போல நடத்திய பெருமை இவருக்குண்டு. தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று கயத்தாறு, இளையரசனேந்தல், நாலாட்டின்புதூர் ஆகிய அரசு பள்ளிகளில் பணியாற்றி இருக்கிறார். மாவட்டக் கல்வி அலுவலராகக் கோவில்பட்டியில் சில மாதங்கள் பொறுப்பு வகித்துள்ளார்.

ஆசிரியர் சங்கங்கள் துடிப்போடு இருந்த காலங்களில் முக்கியப் பொறுப்புகளில் சோமு சார் இருந்திருக்கிறார். ஆசிரியர்களின் அனைத்து சங்கங்கள் இணைந்து 1985-ல் நடத்திய ‘ஜாக்டி’ போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 50,000-க்கும் மேற்பட்டோர் சிறை சென்றனர். அதில் இவரும் பாளை சிறையில் 55 நாட்கள் இருந்திருக்கிறார். அந்நாட்களில் வந்த தீபாவளிப் பண்டிகையையும் சிறையிலேயே கழித்ததாகக் கூறினார். கவிஞர் முத்துராமலிங்கம் சிறையில் பாடிய “சிறைக்குயில் கூவுகிறது” பாடல் மிகவும் உணர்வுப்பூர்வமானது என்றார். மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான ‘ஜாக்டோ’ அமைப்பின் கீழும் பல போராட்டங்கள் சென்றிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு மேல்நிலைத் தமிழ்ப் பாடநூல்களின் மேலாய்வாளராகப் பணியாற்றி உள்ளார். இவரியற்றிய ‘அணி திகழ் பாரதம்’ என்ற கவிதை மேல்நிலைப் பொதுத் தமிழ்ப் பாடநூலில் இடம் பெற்றிருக்கிறது. கழுகுமலை இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தின் செயலராகவும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்தவர். தற்போது கழுகுமலை சங்க இலக்கியப் பேரவையின் செயலராக இருந்து வரும் இவர், இப் பேரவை மட்டுமின்றி, வள்ளுவர் கழகம் நடத்தும் மாதாந்திரக் கூட்டங்களிலும் தவறாது கலந்து கொள்கிறார்.

தலைமையாசிரியர் கழகத் திங்களிதழான ‘மேல்நிலைக் கல்வி முரசு’ என்னும் இதழை நடத்தி வருகிறார். அரசு அலுவலர்களின் பல்வேறு சங்கங்களின் திங்களிதழான, ‘அமைப்புச் செய்திகள்’, உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் நடத்தும் திங்களிதழான ‘உடற்கல்வியாளர்களின் குரல்’ இரண்டிலும் ஆசிரியராகவும் உள்ளார். அமைப்புச் செய்திகள் வெளியான புதிதில், அச்சக ஆர்வத்தில் ‘சிவா அச்சகம்’ தொடங்கினார். பழைய டெடில் முறையான அதற்கு எழுத்துக் கோர்ப்பதும், புரூப் பார்ப்பதுமான வேலைகளை குடும்பத்தோடு பார்த்ததை இன்றும் மகிழ்வுடன் நினைக்கிறார்.வை.பூ.சோ.வின் இல்லத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்திலும், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழகத்திலும் மாநில சட்ட செயலராக இருந்துள்ளார். இன்று வரை அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பிரச்சனைகள், சிக்கல்களைத் தீர்ப்பதிலும்; சலுகைகளைப் பெறுவதிலும் நேரடியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ அணுகி உதவி வருகிறார். சோமு சார், 31.05.2003-ல் பணி ஓய்வு பெற்றாலும், ‘ஓய்வூதியர் சேவை மையம்’ என்று தன் இல்லத்தில் இருந்து கொண்டு தன்னார்வத்தொடு பிறர் தொண்டு செய்து வருகிறார்.

“சிவனைப் பாடுவோம், நிலம் என்னும் நல்லாள், அருள்மிகு பரம கலியாணி அருள் வேட்டல், சூழல் காப்போம், வ.உ.சி.100, நந்திக் களபம் பாடல் தொகுதி, அருள் தந்தை மாத்யூ பத்து, முருகன்-மழை வேண்டல் பத்து, சென்னை பெண் சித்தர் மேல் பாடிய ‘சர்க்கரையம்மாள் பத்து’, கழுகுமலை விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒரு கண்ணோட்டம்,” ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.‘தினமணி’ (23.05.1947) கழுகுமலை ஸ்ரீசுப்ரமணியசாமி கோவில் ஆலயப்பிரவேசம் 20.05.1947-ல் நடந்தது. இந்த செய்தி படத்துடன் இடம்பெற்ற ‘தினமணி’ (23.05.1947) நாளிதழ், அதை ஒரு கட்டுரையாக வெளியிட்ட ‘கல்கி’ (15.06.1947) இதழ் போன்றவற்றை ஆவணமாகப் பாதுகாத்து வருகிறார்.

சோமு சார் பற்பல பாராட்டும், பரிசும், பட்டயமும் பெற்றிருந்தாலும், தமிழக அரசு வழங்கிய ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’(1997), குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வழங்கிய ‘தேசிய நல்லாசிரியர் விருது’(05.09.2002) இரண்டையும் பெற்ற ஒரே கழுகுமலைக்காரர் இவர்.‘தேசிய நல்லாசிரியர் விருது’(05.09.2002) கழுகுமலை காவடிச்சிந்து பற்றி இவர் மேற்கொண்ட ஆய்வினைப் பாராட்டி, திருவாடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சிந்து கவிப் பேரரசு அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் 150 ஆம் பிறந்த நாள் விழாவில், “சைவத் தமிழ்ச்செல்வர்”  என்ற விருதளித்து சிறப்பித்த பெருமைக்குரியவர். (திருவிடைமருதூர். 06.10.2011)“சைவத் தமிழ்ச்செல்வர்” விருதுஇவ்வாண்டு, 26.01.2013-ல் தூத்துக்குடியில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆஷிஷ்குமார் அவர்கள், சோமு சார் அவர்களுக்கு “கலைமுதுமணி விருது” வழங்கிக் கெளரவித்தார்.

தனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் ‘சீனா சானா’ என்றழைக்கப்படும் சி.சங்கரலிங்கனார், ராமகிருஷ்ண பிள்ளை ஆகியோரையும், தன் தமிழ்ச் சுற்றமாக இருந்து வரும் சான்றோர்களையும் இன்றும் மறக்காமல் நினைவு கூர்கிறார். 

நம் வட்டார எழுத்தாளர்களைத் தொகுத்த இளசை அருணா ‘கரிசல் இலக்கியம்-II’ என்ற நூலில் இவரைப் பற்றி எழுதியுள்ளார். அதில், “கழுகுமலையின் உயரம் வடிவம் என்றால், அதற்குச் சமமான உயரத்தில் உலவி வரும் நடமாடும் மானுட நேயக் கவிஞர் வை.பூ.சோ.” என்று கூறுவார்.

“தமிழ்த் துறைக்கு வெளியே இருப்பவர்களால்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது” என்று பாளை பேரா.சிவசு அவர்கள் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் சோமு அவர்களும் அடிப்படையில் தமிழ்த் துறைக்கு வெளியிலிருந்து வந்தவர் என்றாலும், தமிழன்னைக்கு அணி செய்து மகிழும் சிறந்த படைப்பாளர்.

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி” (குறள்.226)

என்ற குறளுக்கேற்ப, தான் பெற்ற பொருளைவிட மேலான அறிவுச் செல்வத்தை, நாளும் தருமம் செய்து வாழும் நற்தகைமையாளர் எங்கள் வை.பூ.சோ.

* * *

Advertisements
 

3 responses to “கழுகுமலையின் உயரம் ‘வை.பூ.சோ.’

 1. johnvictor

  09/05/2013 at 11:16 முப

  சோமு சார் நல்லவர். அவர்களால் கழுகுமலைக்குப் பெருமை!
  அவர்களின் மாணவன் ஜான் விக்டர்,
  சென்னை.

   
 2. Bro.Mariannan s.g.,

  13/06/2013 at 5:49 பிப

  நான் கழுகுமலை ஆர்.சி.சூசை மேனிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது, வை.பூ.சோ. அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது.

  அந்நாட்களில், எங்கள் பள்ளிக்கு அருகில் இருந்த அவருடைய 2¼ ஏக்கர் விளைநிலம் பாடுபட ஆளில்லாமல் இருந்ததால், அதை பிறருக்குக் கொடுப்பதை விட பல வளர்ச்சிகளைக் காண இருக்கும் எங்கள் பள்ளிக்குக் கொடுப்பதையே அவர் பெரிதும் விரும்புவதாக அடிக்கடி கூறுவார்.

  கண்மாய்க்கு மிகநெருக்கமாக இருந்த அந்நிலத்தில் ஒரு நல்ல தண்ணீர் கிணறும் இருந்தது. அப்போது எம் பள்ளி வளாகம் அதிகமான குடிநீர் தட்டுப்பாடு கொண்டிருந்ததால், அந்நிலத்தை வாங்கினால் காலகாலத்திற்கும் மாணவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்குமே என்று நினைத்தேன். மேலும், பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கும் அந்நிலம் பயன்படும் என்ற இரட்டிப்பு நம்பிக்கையோடு அந்நிலத்தை வாங்க சம்மதித்தேன்.

  அவர் கூறிய 2½ இலட்சம் விலையிலும், கணிசமான தொகையைப் பள்ளிக்காக குறைத்துத் தரவும் சம்மதித்தார். கிரயமாக்கப் பட்டாவைப் பார்த்த போது அந்நிலம் 3 ஏக்கர் என்று இருந்தது! சொன்னதை விடக் கூடுதலாக இருக்கும் அந்நிலத்திற்குக் கூடுதலாகப் பணம் பெறவும் மறுத்து விட்டார். அவரின் பெரிய மனதைக் கண்டு, பள்ளிக்காக அவர் குறைத்துக் கூறிய தொகையையும் சேர்த்துக் கொடுத்தேன்.

  இன்றும் ஆர்.சி.சூசை மாணவர்கள் தட்டுப்பாடின்றி நல்ல தண்ணீர் குடிக்கிறார்கள்.

  திரு.வை.பூ.சோ. அவர்கள், கழுகுமலையின் உயரம் அல்ல; இமயம்!

  அருட்சகோ. மரியண்ணன்,
  திருச்சி மண்டலத் தலைவர்,
  புனித கபிரியேல் சகோதரர்கள் சபை, திருச்சி.

   
 3. asin sir

  13/06/2013 at 9:19 பிப

  அருட்சகோதரருக்கு வணக்கம்.

  தங்களின் மேலான பொழுதுகளில் எங்களின் கட்டுரைகளை வாசிப்பதற்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: