RSS

Monthly Archives: மே 2013

பிறப்பு: நடைமுறைகள் – 1

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

Pulavar A.Mariadoss, Chettikurichchi

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

பதிவு : 4

வைக்கோல் படுக்கை (Straw bed) :

கிறிஸ்துமஸ் தினத்தன்று பெரும்பான்மையான கிறிஸ்தவ தேவாலயங்களிலும், வீடுகளிலும் மாட்டுத் தொழுவம் போன்று அமைத்து அதில் வைக்கோல் படுக்கையில் இயேசு படுத்திருப்பதாகக் காட்சிப்படுத்தி இருப்பார்கள். வாழ்த்துக்களைத் தெரிவிப்பவர்கள்கூட இதுபோன்ற படங்களைக் கொண்டு அஞ்சலிலோ, மின்னஞ்சலிலோ அனுப்புவதைப் பார்த்திருப்போம். இயேசு வைக்கோல் படுக்கையில் படுத்திருந்ததால் அவரைப் பெற்ற தாயாகிய மரியாவும் வைக்கோல் படுக்கையில்தான் படுத்திருப்பார் என்பது எண்ணத்தால் அறியப்படும் செய்தி. இதனாலேயே, இயேசு தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்ளவே மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல் படுக்கையில் பிறந்தார் எனக் கிறிஸ்தவர்கள் சிறப்பித்துக் கூறுவர். இது பற்றி கிறிஸ்தவ சமய நூலான விவிலியம் கீழ்க் கண்டவாறு கூறுகிறது.

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுக்குமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழி மரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்த பொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். (லூக்கா: 2:1-7)

மேலும், குழந்தையை தீவனத் தொட்டியில் கிடத்திய இச்செய்தி இவ்வதிகாரத்தில் 12, 16 வசனங்களிலும் வருகின்றன.

யோசேப்பும் மரியாவும் பெத்லகேம் வருகை

இதன்படி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்கள் பெயரைப் பதிவு செய்யவே யோசேப்பும் மரியாவும் நாசரேத்திலிருந்து பெத்லகேம் வந்தார்கள். வந்த இடத்தில் குழந்தை பெற்றெடுக்கும் நிலை ஏற்பட, விடுதிகளில் இடம் கிடைக்காததால் வேறு வழியின்றி மாட்டுத் தொழுவத்தில் இயேசுவைப் பெற்றெடுக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இதனாலேயே இயேசு தீவனத் தொட்டியில் அதாவது வைக்கோல் படுக்கையில் வைக்கப் பட்டார் என்பதை அறிகிறோம்.

ஒரு வேளை விடுதியிலோ அல்லது வேறு நல்ல இடம் கிடைத்திருந்தாலோ இயேசு நிச்சயம் மாட்டுத்தொழுவத்தில் பிறந்திருக்க மாட்டார். வைக்கோல் படுக்கையில் படுத்திருக்கும் நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்காது. அதுபோலவே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறாமல் இருந்திருந்தாலும், யோசேப்பும் மரியாவும் பெத்லகேம் வந்திருக்க மாட்டார்கள். நாசரேத்தில் தங்கள் வீட்டிலேயே நல்ல வசதியுடன் குழந்தையைப் பெற்றெடுத்திருப்பார்கள். அவர்களுக்கு வைக்கோல் படுக்கையில் படுத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது என்பது விவிலிய அடிப்படையில் நாம் பெறும் செய்தி.

வைக்கோல் படுக்கையில் குழந்தை

எப்படியோ, இயேசுவால் வைக்கோல் படுக்கை சிறப்படைந்தது உண்மைதான் என்றாலும், நம் நாட்டில் இயேசுவை அறியாத நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே நம் மக்களிடையே குழந்தை பெற்றெடுத்த தாயையும் சேயையும் வைக்கோல் படுக்கையில் படுக்க வைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

அன்று வசதிகள் பல பெற்று மாளிகையில் வாழ்ந்தவர்கள் ஆனாலும் சரி; அல்லது மண் வீடாகிய குடிசையில் வாழ்ந்தவர்களானாலும் சரி; குழந்தை பெற்ற தாயும் பிள்ளையும் மூன்று நாட்கள் வரை வைக்கோலில் தான் படுத்திருந்தார்கள். அக்காலத்தில் பெரும்பாலான வீடுகளின் தரை மண் தளமாக இருந்ததால், குழந்தை பிறந்ததும் அவ்விடத்தை மாட்டுச் சாணத்தால் சுத்தம் செய்து, வீட்டின் ஓர் ஓரத்தில் வைக்கோலால் சுமார் ஆறு அடி நீளம், நாலடி அகலம், அரையடி உயரத்தில் பரப்புவர். மேலும், அதன்மீது பழைய சாக்கு, பழைய துணி போன்றவற்றை விரித்து அவர்களைப் படுக்க வைப்பர். இவ்வாறு செய்வதால் தாயிடமிருந்து வெளிப்படும் உதிரப் போக்கு போன்றவை வைக்கோலில் தங்கும். உதிரம் பட்ட பகுதியை அகற்றவும், அவ்விடத்தில் புதிய வைக்கோலை இடுவதும் எளிது. பின் மூன்று நாட்கள் ஆனவுடன் மொத்தத்தில் வைக்கோல் முழுவதையும் அள்ளி, சுருட்டி எடுத்து ஊருக்குப் புறம்பே கொண்டு போய் தீயிட்டு எரித்து விடுவர். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட பல மாற்றங்களில் இப்பழக்கமும் இன்று முற்றிலும் மறைந்து போய் விட்டது.

திரையிடுதல் (Screening):

திரையிடுதல் என்பது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக எளிய முறையில் தற்காலிகமாக அமைக்கும் மறைப்பு ஆகும். இது குழந்தை பெற்ற தாயும் பிள்ளையும் படுத்திருக்கும் வைக்கோல் படுக்கையை மறைக்கும் வகையில் கயிறு கட்டி அதில் பழைய போர்வை, சேலை அல்லது சாக்கு போன்றவற்றைத் தொங்க விட்டு அமைப்பதாகும். இது அந்நாட்களில் நிலவி வந்த பழக்கங்களுள் ஒன்று. அதே போல குழந்தை பெற்ற மனைவியைக் குறிப்பிட்ட நாட்கள் கணவர் பார்க்கக் கூடாது என்பதும் ஒரு வழக்கம்.

ஓலை வேய்ந்த வீடு

மேலும், அன்றைய வீடுகள் தனித்தனி அறைகள் கொண்ட வீடாக இல்லாமல், ஒன்றிரண்டு அறைகள் கொண்ட ஓலை வேய்ந்த மண் வீடுகளாக இருந்த படியாலும், அதில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த படியாலும், குழந்தை பெற்ற பெண்ணும் மேலாடை இன்றி சற்று சுதந்திரமாக இருந்து கொள்வதற்கும் இத்திரை மறைப்பு அன்று தேவைப்பட்டது. வீட்டுச் சூழல் குடும்ப அமைப்பு இவற்றைப் பொறுத்து திரையிடாமல் இருப்பதுவும் உண்டு. இன்று குழந்தை பெற்ற தாய்மார்கள் மின் விசிறியின் கீழே கட்டிலின் மேலே பற்பல வசதியுடன் இருக்கும் இக்கால நிலையை ஒப்பிட்டால், ஒப்பிடமுடியா இடைவெளியுள்ளதை உணரலாம்.

விளக்கெண்ணெய் (Castor oil) தயாரித்தல்:

பிறந்திருக்கும் குழந்தையோடு அன்று அதிக தொடர்புடைய பொருளாக இருந்தது விளக்கெண்ணெய். பிள்ளைக்கும் எண்ணெய்க்கும் என்ன தொடர்பு? எனக் கேட்கலாம். ஆனால், அன்றைய நிலை அதுதான்! இவ்வெண்ணெய்யை எவ்விதம் குழந்தைக்குப் பயன்படுத்தினார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ளும் முன், இவ்வெண்ணெய்யின் தன்மையும், அதை எவ்விதம் தயாரித்தனர் என்பதையும் கூறி விடுகிறேன்.

ஆமணக்கு (Castor plant)

ஆமணக்கு (Castor plant) எனப்படும் தாவரத்திலிருந்து கிடைக்கும் விதையை ஆமணக்கு முத்து என்பர். அதாவது, புளிய மரத்து விதையை புளியமுத்து என்பது போலவும், வேப்பமரத்து விதையை வேப்பமுத்து என்பது போலவும் இதையும் கூறுவர். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், நம் நாட்டில் மண்ணெண்ணெய் உபயோகத்திற்கு வராத காலத்தில் விளக்கு எரியப் பயன்படுத்தியதால் விளக்கெண்ணெய் எனக் காரணப் பெயராயிற்று. இது அடர்த்தி குறைந்ததாகவும் அதிக பிசுபிசுப்புத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். இதை நம் முன்னோர்கள் பல நிலைகளில் பயன்படுத்தினர்.

ஆமணக்கு முத்துக்கள் (Castor seeds)

இதை தலைக்குத் தேய்த்தால் உடல் வெப்பம் குறையும் என்று கருதினர். மேலும், குடலிலுள்ள அசடுகள் சுத்தமாய் வெளியேற (பேதி போக) இதைக் குடிப்பர். இன்றும் மருத்துவ மனைகளில் இவ்வகைக்கு இதைப் பயன்படுத்துகின்றனர். சுழுக்கு, வயிற்று வலி இவற்றிக்கும் இதைத் தடவுவர். இம்முத்திலிருந்து செய்யப்படும் கரிய மையைக் கொண்டு மாட்டு வண்டியின் அச்சுகளில் தேய்மானத்தைக் குறைக்க உராய்வுப் பசை (Grease) யாகப் பயன்படுத்துவர். இன்றுவரை இறந்தவர்களின் உடலை எரிக்கவும் இம்முத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.

உராய்வுப் பசை (Greases)

இவ்வெண்ணெய் கடைகளில் கிடைத்தாலும் அன்றைய மக்கள் வீடுகளில் தாங்களாகவே தயாரித்துக் கொள்வர். என் அக்காள் குழந்தை பெற்றெடுக்க எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது என் அம்மா தயாரிப்பதைப் பார்த்திருக்கிறேன். அக்காலங்களில் ஆமணக்கு முத்துக்களைத் தோட்டக்காரர்களிடம் இருந்து இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம். இம்முத்துக்களை நன்கு வெயிலில் காய வைத்து, உரலில் போட்டு உலக்கையால் நைந்து போகும்படி இடிப்பார்கள். பின் அதை எடுத்து ஒரு பானையில் போட்டு நீர் ஊற்றி, அடுப்பில் வைத்துக் காய்ச்சுவார்கள். நன்கு சூடேற்றிய பின் நீண்ட துடுப்பாலோ அல்லது அகப்பை (தேங்காய் ஓட்டில் செய்தது) கொண்டோ, கிளரிக் கிளரி விடும்போது எண்ணெய் பிரிந்து மேலே வந்து மிதக்கும். இதை அகப்பை கொண்டு எடுத்து வேறோர் பாத்திரத்தில் சேகரிப்பர். இவ்வாறு சேகரித்ததில் நீரும் சிறிது கலந்திருக்கும். இக்கலவையை நன்கு தெளிய வைத்தால் தண்ணீர் கீழும் எண்ணெய் மேலுமாகப் பிரிந்து நிற்கும். பின் எண்ணெய்யை மட்டும் வடித்தெடுத்து, வடித்தெடுத்த எண்ணெய்யை மீண்டும் அடுப்பிலிட்டுக் காய்ச்சுவர். அப்போது தண்ணீர் முழுவதும் வெளியேறி சுத்தமான விளக்கெண்ணெய் கிடைக்கும்.

பதிவு 5 : பிறப்பு: நடைமுறைகள் – 2

 

சந்தன் பயணம் – வாழ்விலே ஒருமுறை!

‘கழுகுமலை’ மா.சட்டநாதன், டெல்லிசந்தன் பள்ளத்தாக்கு

சந்தன் பள்ளத்தாக்கு இறங்கத் தயாரானேன்.

இந்த மாதிரி இடங்களில் கயிறு கட்டி இறங்க (Rappelling ) தொழில் நுட்பம் தேவை என்பதால்தான் நாங்கள் தத்தாவைப் பிடித்தோம். நல்ல பொறுமைசாலி! பொறுமையைத் தவிர வேறு வழியும் இல்லை. கடவுளே…சில பேர் படுத்தி எடுத்து விடுவார்கள். கயிறைப் பிடித்துக் கொண்டு இறங்கும் போது ஒன்றும் ஆகி விடாது. நம்முடைய முழுக் கட்டுப்பாடும் மேலேயும் கீழேயும் இருப்பவர்களிடம் தான் இருக்கும். டொம்முனு கீழே விழ மாட்டோம், விழவும் முடியாது. ஆனாலும் பயம்! பாறை கீறை மண்டைல இடிச்சிருமோ, சிராய்த்துக் கொள்வோமோ என்று தோன்றும்.

எனக்குப் பயமெல்லாம் என் எடையைக் கயிறு தாங்குமா? கேவலத்துக்குக் கீழ விழுந்து அடிபட்டு அவமானமும் படணுமா? வேற வழியே இல்லையான்னு கேட்டேன். கிடையாதாம், எல்லாரும் இப்படித் தான் இறங்கணும். ரொம்ப நாள் கழிச்சி பயந்து போய் சாமியெல்லாம் கும்பிட்டு விட்டு இறங்கினேன். எனக்கு முன்னால் போனவர்களைப் பார்த்து அவர்கள் செய்த தவறை எல்லாம் செய்து விடக்கூடாது என்று திட்டம் போட்டு, அவர்கள் செய்த எல்லாத் தவறையும் செய்தேன்.

எங்கே காலை வைக்கக் கூடாதோ அங்கு வைப்பது, பயத்தில் பின் பக்கமாக உள்ள கயிறை இழுக்காமல் அப்படியே அந்தரத்தில் நிற்பது. இது போக முன்னாடி உள்ள கயிறை ஏனைக்குமோனை இழுத்து இரண்டு பாறைகளுக்கு நடுவில் போய் விழுந்தேன். இது நான் மட்டும் செய்த பிரத்யேக தவறு. எனக்குப் பின்னால் வந்த இரண்டு பேர் இதே தவறைச் செய்து பாறைக்கு நடுவில் போய் விழுந்த போது ஓர் அல்ப சந்தோசம். நம்ம மட்டும் இல்லை, நம்மள மாதிரி பல பேர் உண்டு என்று அறிவதில் ஓர் ஆனந்தம்.

???????????????????????????????

முதல் முதல் கயிற்றில் தொங்கும் போது அடிவயிற்றில் ஏற்படும் சிலீர் உணர்ச்சிக்காவது ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

பத்து பதினைந்து பேர் இறங்கியவுடன் நடக்க ஆரம்பித்தோம். மீண்டும் பாறைகள். அடுத்தும் இதே போல இரண்டு இறக்கங்கள், ஆனால் சிறியவை. எந்த அளவு சிறியவை என்றால் ஒரு இறக்கத்தில் நாங்கள் கயிறு கொண்டு வந்திருந்தும் பயன் படுத்தவில்லை. ஒரு மாதிரி பாறை மீது கால் வைத்து வைத்து இறங்கி விட்டோம். ஆனாலும் பலர் கயிறு கட்டித்தான் இறங்கினர் என்று பின்னால் பார்த்துத் தெரிந்து கொண்டோம்.

???????????????????????????????

மூன்றாவது இறக்கமும் சின்னது தான் என்றாலும் ஒழுங்கில்லாத பாறை. எனது கையை லேசாக சிராய்த்து விட்டது. பத்து நாள் கழித்து ஊருக்கு வந்த போது கூட அந்தக் காயம் ஆறியிருக்க வில்லை, அப்பா கேட்பாரோ என்று நினைத்தேன், நல்ல வேளை கேட்க வில்லை. மூன்று இறக்கங்களிலும் இறங்கி விட்டால் அவ்வளவு தான், மறுபடி சுமார் ஒரு ஒன்றரை மணி நேர நடை. மதியம் இரண்டரை மணிக்கு நாங்கள் இரவு தங்க வேண்டிய இடத்திற்கு வந்து விட்டோம். ஆச்சர்யமாக எனக்கு முன்னால் கிளம்பிய STF குழுவுடன் நானும் சேர்ந்து விட்டேன்.

???????????????????????????????

அங்கிருந்த சின்னத் தடாகம் ஒன்றில் அலுப்பு தீரப் புனலாடி விட்டு, முந்திய நாளே பொட்டலம் கட்டிக் கொண்டு வந்திருந்த மேத்தி ரொட்டியைப் பகிர்ந்து உண்டோம். பாறை மீது எதையும் விரிக்காமல் நிழல் பார்த்து படுத்துக் கொண்டதும் அப்படி வந்தது உறக்கம். நான்கு-ஐந்து மணி வாக்கில் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். இது பரவாயில்லை. போன வருடம் ஏழு மணி வரை ஆகி விட்டதாம். கயிறு கட்டி இறங்குவது எல்லாருக்கும் அவ்வளவு சுலபம் இல்லை.

???????????????????????????????

எல்லாரும் குளித்து விட்டு வந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். கீழே இருந்த கிராமத்தில் இருந்து வந்திருந்த இருவர் தேநீர் தந்து விட்டு இரவு சமையலை ஆரம்பித்தார்கள். இருட்ட ஆரம்பித்தது. முழு நிலவு சமயம் என்பதால் வெளிச்சம் இருந்தது. அந்தாக்ஷரி பாடி பொழுதைக் கழித்தார்கள்.

சமையல் முடிந்தது. பாக்ரி என்று அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் தனிச் சிறப்பான ரொட்டி. (இதை அரிசி, கேப்பை, சோளம் போன்ற தானியங்களில் செய்வார்கள். என்னுடைய Favorite .) நல்ல பருப்புக் குழம்பு. உருளையும் காய்கறிகளும் போட்டு செய்த காரமான கூட்டு, சாதம். சாப்பிட்டு படுத்தவுடன் தூக்கம் வந்துவிட்டது.

sandhan valley

ஆனால் தூங்க முடியவில்லை. வெட்ட வெளி, நடுக்காடு என்பதால் குளிர்காற்று அவ்வப்போது எழுப்பி விட்டு விட்டது. இப்போது அலுப்பு இல்லை என்பதால் ஒழுங்கில்லாத பாறைகள் குத்துவது தொந்தரவாக இருந்தது. என்னைப் போலவே பலருக்கும். ராத்திரி இரண்டு மணிக்கு சிலர் எந்திரிச்சி உட்கார்ந்து, விட்ட அந்தாக்ஷரியைத் தொடர்ந்தார்கள்…

“அரே..! சோ ஜாவோ.. யார்..!”

“தூங்குங்கய்யா…” என்று கெஞ்சிய குரல்களைக் கண்டு கொள்ளவில்லை.

???????????????????????????????

அடுத்த நாள் எழுந்து காலை உணவை செய்து சாப்பிட்டு முடித்து விட்டு சுமார் ஒன்பது மணி வாக்கில் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். இந்த முறை இலக்கு கீழே உள்ள தெகெனே கிராமம். அங்கு தான் மதிய உணவு. அங்கிருந்து அசன்காவ் சென்று மும்பை லோக்கல் ரயிலைப் பிடிக்க வேண்டும். இப்போது பாறைகள் குறைவு. சுமார் ஒரு மணி நேரத்திலேயே சமவெளிப் பகுதிக்கு வந்து விட்டோம். வழிகாட்டிகள் முன்னே நடக்க, நாங்கள் பின் தொடர்ந்தோம்.

இந்தப் பயணம் முழுக்க வழிகாட்டுவோர் அவசியம். ஏனென்றால், பள்ளத்தாக்கில் வருடம் தோறும் பாறைகள் விழும், உருண்டு இடம் மாறும் என்பதால் ஏற்கனவே பல முறை வந்தவர்களால் தான் ஒரு மாதிரியாக நினைவில் வைத்துக் கொண்டு செல்ல முடியும். இல்லையென்றால், எதாவது பெரிய பாறை மேல் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்து, மறுபடியும் வந்த வழியே வந்து வேறு பாதையில் போய், வழி இருக்காவென்று பார்த்துப் போக வேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. நானாவது உறைந்த நிலையில் பாம்பைப் பார்த்தேன். என்னுடைய நண்பர்கள் உயிரோடு பார்த்து கவனமாக விலகி வந்திருக்கிறார்கள்.சந்தன் பயணம் இதே போல் தண்ணீர். கொஞ்சம் அதிகமாக வைத்துக் கொள்ளலாம் அல்லது குறைவாகக் குடித்துக் கொள்ளலாம். வழி எங்கும் பாறைகள் தான். அடுத்த நாள் காலையில் கூட காட்டில் ஓடையாக ஓடிய தண்ணீரைத் தான் குடித்தோம். கையிலும் எடுத்துக் கொண்டோம். தெகெனேவிற்கு முன்னால் உள்ள வர்படி என்ற கிராமம் வரும் வரை, சுமார் மூன்று மணி நேரம் எங்கும் தண்ணீர் கிடைக்காது.

மதியம் சுமார் ஒரு மணிக்கு தெகெனே வந்து சேர்ந்தோம். எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு அருகில் இருந்த அடி பம்பில் தண்ணீர் அடித்து உடலை அலசி விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்தோம். எல்லாரும் வந்தவுடன் சாப்பிட ஆரம்பித்தோம். அக்மார்க் மராட்டிய சமையல். அந்த நேரத்திற்கு அமிர்தம்.

குறிப்பாக ‘ஆம்கடி’ என்று ஒரு குழம்பு கொடுத்தார்கள். ஆம் என்றால் மாங்காய். கடி என்றால் நம்ம ஊர் மோர்க் குழம்பு மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அப்படி ஒரு சுவை! எனக்கு மட்டுமல்ல, பல மகாராஷ்டிராக் காரர்களே சொன்னார்கள்.

???????????????????????????????

சாப்பிட்டு விட்டு கதை அடித்துக் கொண்டிருந்தோம். மூன்று மணிக்கு மேல் கிளம்ப வேண்டும். தூக்கம் வர வில்லை. ஆனாலும் படுத்து இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு. தானேவில் இருந்த கசாரா போகும் கடைசி லோக்கல் ரயிலை, முந்தாநேத்து ராத்திரி ஒரு மணிக்குப் பிடித்ததில் இருந்து ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

இனிமேல் இப்படி ஒரு பயணம் சாத்தியமா? தெரியவில்லை. மும்பையில் கொடுத்திருந்த எல்லா வேலைகளும் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டதால், அலுவலகத்தில் என்னை டெல்லிக்கு மாற்றி விடுவார்கள். இனிமேல் மும்பை வருவது எப்போது? தெரியாது.

என்னோடு வந்த பெண்கள், எங்களுக்கு சமையல் செய்து தந்தவர்களிடம் போய், எப்படி ‘ஆம்கடி’ செய்வது என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள். நானும் சமைத்து சாப்பிடுபவன் தான் என்பதால் எழுந்து போய் கேட்கலாமா? என்று நினைத்தேன்.

சட்டென்று ஒரு எண்ணம். சந்தன் – பள்ளத்தாக்குப் பயணம் இனி மேல் வாய்க்குமா என்று தெரியாத நிலை தானே அந்தப் பயணத்தை ருசியாக்குகிறது. அதே போல, இந்த ஆம்கடியும் வாழ்வில் ஒருமுறை மட்டுமே சுவைத்ததாக இருந்தால் என்ன? அது ஒரு தனி அனுபவம் தானே என்று தோன்றியது.

ஒரு சின்னப் புன்னகையோடு கண்களை மூடிக் கொண்டேன்.

* * *

 

சந்தன் பள்ளத்தாக்கு

‘கழுகுமலை’ மா.சட்டநாதன், டெல்லி.

சந்தன் பள்ளத்தாக்கு

2013 புத்தாண்டு தினத்தன்று கல்சுபாய் மலை உச்சியில் நின்று, சுற்றி உள்ள மற்ற இடங்களைச் சுற்றிக் காட்டி Mumbai Travellers  நண்பர் நீலேஷ் பேசிக் கொண்டிருந்த போது, “அது தான் சந்தன் பள்ளத்தாக்கு (Sandhan Valley)” என்றவுடன் பலரது முகத்தில் பரவசம். இந்த வருடம் எப்போது செல்வது என விசாரிப்புகள். ‘கூடிய விரைவில்’ என்று மட்டும் நீலேஷ் சொன்னார். நானும் முடிந்தால் போகலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

குடியரசு தினத்தை ஒட்டி வந்த விடுமுறை தோதாக அமைந்தது. உண்மையில் மிகவும் அலட்சியமாக இருந்தேன். கல்சுபாய் உச்சியிலே ஏறியாகி விட்டது. இப்போது பள்ளத்தாக்கில் இறங்க வேண்டும், ‘அவ்வளவு தானே’ என்று எண்ணம்.

நண்பர்கள் அனைவரையும் மும்பையில் இருந்து கசாரா செல்லும் கடைசி லோக்கல் ட்ரெயினில் ஏறுவதற்கு ஆயத்தமாக இருக்கச் சொன்னார்கள். அங்கங்கே ஏறியவர்களோடு கசாரா போய்ச் சேர்ந்த போது மணி அதிகாலை மூன்று. மலை அடிவாரம் என்பதால் நல்ல குளிர் இருந்தது. அங்கிருந்து சாம்ராத் (Samrad) கிராமத்திற்குச் செல்ல வேண்டும். ஜீப்பில் ஓட்டுனருக்கு அருகில் உள்ள முன் இருக்கை. வண்டி பல கொண்டை ஊசி வளைவுகளில் ஏறி இறங்கியதில் இருக்கைக்கு மேல் இருந்த கம்பியில் மண்டையை இடித்துக் கொண்டு தூக்கம் வராமல் ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தோம். பலருக்கும் இதே நிலைமை தான்.

ஓய்வு எடுக்க எல்லாம் நேரம் இல்லை. விடுமுறை என்பதால் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். முன்னரே சென்று இடம் பிடிக்காவிட்டால் இரவு தங்க கஷ்டப் படவேண்டியிருக்கும். இதை இரவில் நாங்கள் பாறைகள் உள்ள பகுதியிலும் மற்றவர்கள் கொஞ்சம் தள்ளி அவ்வளவு சவுகர்யம் இல்லாத இடத்திலும் தங்க நேர்ந்ததைப் பார்த்த போது நண்பர்களின் அனுபவம் புரிந்தது. இங்கும் கிராம நண்பர் தத்தாதான் வழிகாட்டி. அவரே ஏற்பாடு செய்திருந்த வீட்டில், கொஞ்சம் அவல் உப்புமா சாப்பிட்டு தேநீரும் குடித்து விட்டுக் கிளம்பி விட்டோம்.

முதல் முறை வருபவர்கள், பெண்கள், வேகமாக முன்னேற முடியாதவர்கள் மற்றும் எங்கள் வழிகாட்டிகள் எனப் பல தரப்பினர் வருவதால், முன்னரே ஒரு குழு கிளம்பியது (Special Task Force – STF). இவர்களில் ஏற்கனவே பள்ளத்தாக்கிற்கு வந்தவர்கள் உண்டு என்பதால், இவர்கள் வேலை நாங்கள் வருவதற்கு வசதியாக பாறைகளில் அடையாளமிட்டுச் செல்வது மற்றும் இரவு தங்க வேண்டிய இடத்தை முன் பதிவு செய்துவிடுவது. காட்டுக்குள் என்ன பதிவு செய்வது? போய் பாயை விரித்துப் படுத்துக் கொள்வது தான் முன்பதிவு.

சந்தன் பள்ளத்தாக்கு பள்ளத்தாக்கில் இறங்குவதற்கு முன்னர் அதைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடுகின்றேன். இந்தப் பள்ளத்தாக்கு சஹ்யாத்திரி மலைத்தொடரில், ‘அலங்-மதன்-குலங் (AMK)  ( பெயரைப் பார்த்து சிரிக்காதீர்கள், உண்மையில் இந்த மூன்று மலைகளின் மீதும் ஏறுவது மிகப் பெரிய சவால்) , கல்சுபாய் மற்றும் அஜோபா மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது சந்தன் பள்ளத்தாக்கு. இங்குள்ள பாறைகள் இயற்கையில் லேசாகப் பிளந்து, பின்னர் தண்ணீர் வரத்தால் விரிந்து இருக்கலாம் என்கிறார்கள். சில இடங்களில் மிகவும் நெருக்கமான இடைவெளி.

Sandhan Valley

சூரிய ஒளி உள்ளே வர முடியாத பல பகுதிகள் இங்கு இருப்பதால், இதற்கு “நிழல் பள்ளத்தாக்கு” ( Valley of Shadow ) என்ற பெயரும் உண்டு. சாம்ராத் கிராமத்தில் இருந்து பள்ளத்தாக்கிற்கு பத்து பதினைந்து நிமிடங்களில் நடந்து வந்து விடலாம்.

இங்கு மழைகாலத்தில் வந்தால் பிரமாதமாக இருக்கும். ஆனால் பள்ளத்தாக்கில் இறங்க முடியாது. தண்ணீர் ததும்பி ஓடும். இப்போதே பள்ளத்தாக்கில் இரண்டு நீர்த் தேக்கங்களில் இறங்கிக் கடக்க வேண்டியிருந்தது.

Sandhan Valley

முதலில் சிறிய நீர்த் தேக்கம், 2 முதல் 3 அடி இருக்கும். அதிலேயே சிலர் பாறைகளில் சரியாகக் காலை வைக்காமல் வழுக்கி விழுந்து எழுந்தனர். அடுத்த நீர்த்தேக்கம் இன்னும் ஆழம், 4 முதல் 6 அடி! காமிராவை எல்லாம் மூட்டை கட்டி பைக்குள் வைத்துக் கொண்டு தட்டுத் தடுமாறிக் கடந்தோம்.

பயணம் அதற்குப் பிறகுதான் ஆரம்பம். பாறைகள் மற்றும் பாறைகள் அவ்வளவு தான்.

சிறியவை, பெரியவை, கால் வைத்து ஏற முடிபவை,

அண்ணாந்து மட்டும் பார்க்க முடிபவை,

அழகானவை, கூர்மையானவை, ஆபத்தானவை, ………அப்பாறைகள்!

சந்தன் பள்ளத்தாக்கு

கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் பின்னடைய ஆரம்பித்தார்கள். முன்னாலேயே போய் விட்ட STF அம்புக் குறிகளை விட்டுச் சென்று இருந்தனர். ஏதோ ஒரு தைரியத்தில் நான் பாட்டுக்கு விறு விறுவென பாறைகள் மீது ஏறி ஏறிக் கடந்து முன்னேற ஆரம்பித்து விட்டேன். ஒரு இறக்கம் போலத் தெரிந்தது. சரி, அங்கு போய் விட்டால் ஆட்களைப் பிடித்து விடலாம் என்று நடந்து வந்து பார்த்தால், ஒருவரும் இல்லை. அம்புக் குறியும் கண்ணுக்குத் தட்டுப் படவில்லை. ஒரு கட்டத்தில் சுமார் அரை மணி நேரம் எனக்கு முன்னாலும் யாரும் இல்லை, பின்னாலும் யாரும் இல்லை. பாறைகளுக்கு நடுவில் அலைந்து கொண்டு இருந்தேன்.

ஆட்கள் எப்படியும் வந்து விடுவார்கள் என்று நம்பிக்கை இருந்தாலும் ஒரு சின்ன உதறல். அப்போது பார்த்து இந்தக் காட்சி கண்ணில் பட்டது. ஒரு தவளையை பாம்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது.

சந்தன் பள்ளத்தாக்கு

அய்! ஒரு நேஷனல் ஜியாகிரபி காட்சி நேரலையாக காணக் கிடைக்கிறதே… என்று கேமிராவை எடுத்துக் கொண்டே பார்த்த போதுதான் நன்கு கவனித்தேன். தவளை-பாம்பு இரண்டுமே உயிரோடு இல்லை, உறைந்து விட்டு இருந்தன. எனக்கு காரணம் புரிபட வில்லை. அந்த அளவிற்கா குளிர் இருந்தது? குளிரை உணராமலா பாம்பு இரையில் கவனம் செலுத்தியது?

எனக்குத் தொடையில் சின்ன நடுக்கம். சுற்றி தரையைப் பார்த்துக் கொண்டே வேக வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் எப்படிச் செல்வது என்று தெரியவில்லை. நல்ல வேளையாக மேலேயிருந்த பாறை மேல் ஏறி நின்று பார்த்துக் கொண்டிருந்த நீலேஷ், என்னைக் கண்டுபிடித்தார். அப்படியே எதிர் திசையில் போங்கள் என்றார். பள்ளத்தாக்கு என்பதால் இது ஒரு வசதி. மலை ஏற்றம் என்றால் முன்னால் போய் விட்டு வழி தெரியாவிட்டால் நின்று கொண்டே இருக்க வேண்டியது தான்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடந்த பிறகு முன்னால் சென்ற குழுவைக் கண்டடைந்தேன். இங்கும் பள்ளம் தான், ஆனால் சாதாரணமாக இறங்கி விட முடியாது. சுமார் நாற்பது அடி என்பதால் கயிறு கட்டித் தான் இறங்க வேண்டும். பெரும்பாலும் பலர் இவ்வளவு தூரம் தான் வருவார்கள். அப்படியே திரும்பி சாம்ராத் கிராமத்திற்கே போய் விடுவார்கள். ஆனால், எங்களுடைய திட்டம் சந்தன் பள்ளத்தாக்கு – முழு இறக்கம்! (Sandhan Valley – Full Descend )

இறங்கத் தயாராகிறேன்…

பதிவு 2: சந்தன் பயணம் – வாழ்விலே ஒருமுறை!

* * *

 

கழுகுமலையின் உயரம் ‘வை.பூ.சோ.’

அசின் சார், கழுகுமலை.கழுகுமலையின் உயரம் ‘வை.பூ.சோ.’வை.பூ.சோ. என்றும், கவிஞர் பூமதி என்றும் அறியப்பட்டவர் கழுகுமலை திரு வை.பூ.சோமசுந்தரம் அவர்கள். கழுகுமலை ஊருக்குள் நாங்கள் ‘சோமு சார்’ என்றே அன்போடு அழைத்து வருகிறோம்.

கழுகுமலை அரசு பள்ளியில் நான் +2 படித்த போது, அவரிடம் நான் தமிழ் பயின்றிருக்கிறேன். அவர் நடத்திய புதுமைப்பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’ சிறுகதை இப்போதும் என் நினைவில் நிற்கிறது. அதில் வரும் ஏழை எழுத்தாளர் முருகதாசர் ஒரு நாளை ஓட்ட என்ன பாடு பட்டார் என்பதை இயல்பு வழக்கில் பேசி நடத்திய போது, அவரே எங்களுக்கு முருகதாசராகத் தெரிந்தார். அன்றைய நாட்களில் வீட்டிலுள்ள கிழிந்த கோரைப்பாயைப் பார்க்கும் போதெல்லாம் முருகதாசரின் நினைவும், சோமு சார் நடத்திய விதமுமே மனதில் தோன்றும்.

எதையும் நகைச்சுவை உணர்வோடு சொல்லக் கூடிய பண்பாளர். நன்றாக ஞாபகம் இருக்கிறது, பதினோராம் வகுப்பில் புதிதாக நுழைந்த நேரம். அவர் சொன்ன அட்வைஸ். “நீங்க ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்கனுங்கிறதுக்காக வகுப்பில் எழுந்து நின்னு வணக்கம் சொல்லுதீங்க, சரி. அதுக்காக, சைக்கிளில் நீங்க எதிரே வரும்போது பெடலில் நின்று கொண்டு வணக்கம் சொல்லுவது சரியில்ல. உங்க சைக்கிள் லேசா ஆடும்போது எதிரே நடக்கும் எனக்கு பயமா இருக்கு. அந்த மாதிரி நேரங்களில் நீங்க ‘வணக்கம்’னு சொன்னாலே போதும்” என்றார்.

நான் பி.எட். படித்த போது இவரே எனக்கு வழிகாட்டி ஆசிரியர். படிப்பை முடித்த பின் பெ.ஆ.கழகத்தின் சார்பாக கழுகுமலை அரசு பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்ற வாய்ப்புத் தந்தவரும் இவரே. இவரில்லத்தில் இவரை சந்திக்கச் செல்லும் போதெல்லாம், வீட்டின் முன்புற வரவேற்பறையில் நமக்கு முன்னதாகவே வந்த சிலர் அவர்களின் அலுவல் பிரச்சனை குறித்துப் பேசி ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பர். அல்லது இலக்கிய ஆர்வலர்களோடு அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருப்பார். நாம் சென்றதும் நம் நலம், பெற்றோர் நலம், பணி நலம் குறித்து விசாரித்துக் கொள்வார். மேலும், புதிதாக வந்த அரசாணைகள், அரசு சலுகைகள் பற்றியும் பகிர்ந்து கொள்வார்.

ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அவர் புதிதாகப் பெற்ற விருதும், வாழ்த்துப் பட்டயமும் பற்றிக் கூறுவார். அவை நம் வாழ்வில், நம் பணியில் நாம் எட்ட வேண்டிய உச்சங்களாக முன் நிற்கும். சோமு சார் வீட்டிலிருந்து வருகிறேன் என்பதை என்னைப் பார்த்ததுமே என் மனைவி அறிவாள். அந்த அளவிற்கு ஒவ்வொரு முறை போகும் போதும் கல்வித்துறை, தமிழ்த் துறை சார்ந்த நூல்கள், இதழ்கள், இலக்கியக் கூட்ட அழைப்பிதழ்கள் என்று கை நிறையக் கொடுத்து விடுவார்.

தொலைக்காட்சி நாடகப் பிரியர். இதனாலேயே மாலையில் நாம் அவரை சந்திக்க விரும்பினால் ஏழு மணிக்கு முன்னதாகவே வந்து விடுங்கள் என்று கனிவாகக் கேட்டுக் கொள்வார்.

ஒரு சமயம் கோவில்பட்டியில் தமிழாசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி நடந்தது. அந்தப் பயிற்சி வகுப்பிற்கு நானும் சென்றிருந்தேன். எங்களுக்கு வகுப்பெடுத்த சோமு சார், பயிற்சி ஆசிரியர்களாகிய எங்களிடம் அடுத்த நாள் வரும் போது கதை, கவிதை, கட்டுரை போன்ற ஏதாவது ஒரு படைப்பை எழுதி வரக் கேட்டுக் கொண்டார். நான் கல்லூரி நாட்களில் எழுதி, வீட்டில் தூங்கிக் கிடந்த “ப்ளஸ் X மைனஸ் = மைனஸ்” சிறுகதையை அடுத்த நாள் கொடுத்தேன். சோமு சார் படைப்புகளுக்கான பரிசளிக்கும் போது எனது சிறுகதைக்கு முதல் பரிசு தந்தார். இவ்வாறெல்லாம் ஆசிரியர்களை ஊக்குவிக்கக் கூடியவர்.நான் எழுதிய “+2 தமிழ் வழிகாட்டி”யை சகோ.மரியண்ணன் வெளியிட சோமு சார் பெறுகிறார்.+2 தமிழ் இரண்டாம் தாளில் ‘இலக்கிய நயம் பாராட்டல்’ வினா ஒன்று உண்டு. அதில் பாடலின் சந்த நயத்தை மாணவர் கண்டறிந்து எழுத வேண்டும். இது குறித்த தெளிவு ஏடுகளிலும் சரியாக இல்லாததால், சோமு சாரிடம் கேட்டேன். அதை மிக எளிமையாக விளக்கினார்.

‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலடியை எடுத்துக் கொண்டார். அதை அசைப்படி ‘நல்-லதோர் வீ-ணை செய்-தே’ என்று பிரித்து, ‘நேர்-நிரை நேர்-நேர் நேர்-நேர்’ என்று அதற்குரிய அசையை எழுதினார். பின்பு அவ்வசைகளுக்கு ஏற்ப சந்த நயத்தை, ‘தன்-னன தா-னா தன்-னே’ என்று எழுதி, பாடிக் காட்டினார். என்ன ஆச்சரியம்! பாடலின் சந்தம் வெளிப்படையாக வந்தது. அப்போதுதான் கவனித்தேன். சினிமாப் பாடல்களில் கூட சந்தம் இப்படித்தான் பயன்படுத்தப் பட்டிருந்தது. ‘சிற்பி இருக்குது முத்துமிருக்குது’ என்ற ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படப் பாடல் முழுவதும், சந்தத்தைச் சொல்லிச் சொல்லி அடிகளைப் பாடுவதாக அமைந்திருப்பதை ஒத்துப் பார்த்தேன். அவர் எளிமையாக்கிச் சொன்னதை நினைத்து வியந்தேன்.

இவர் தந்தை திரு.பூசைப்பிள்ளை அவர்கள், கழுகுமலை சுதந்திரப் போராட்டத் தியாகியும், ஊர் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவரும் ஆவார். தாயார் மாரியம்மாள். இவரைப் பற்றி இளசை அருணா சொல்லும் போது, ‘இலஞ்சம் வாங்கத் தெரியாத அப்பாவி ஏட்டையா சுந்தரம்பிள்ளையின் மகள்’ என்று கூறுவார். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒரே ஆண் மகனாக சோமு அவர்கள், 20-06-1944 –ல் பிறந்தார்.

பள்ளிப் பருவத்திலேயே கவிதை, கட்டுரை படைக்கும் திறனோடு இருந்திருக்கிறார். அவ்விளம் வயதிலிருந்தே இவரின் வலப்பக்க காது கேட்கும் திறன் குறைவாக இருந்திருக்கிறது. அந்நாட்களில் தன் நண்பன் பாலசுப்பிரமணியனுடன் (வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர்), இணைந்து “இருவர்” என்ற கையெழுத்து மலரை வெளியிட்டுள்ளார். பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வில் பொதுத் தமிழ், சிறப்புத் தமிழ் இரண்டிலும் முதலிடம் பெற்றமைக்கு தலைமையாசிரியர் கையால் சோமு சார் பரிசு பெற்றிருக்கிறார்.

நெல்லை பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் புதுமுக வகுப்பில் பயின்ற போது, அக்கல்லூரி மலரில் இவருடைய பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரெழுதிய “கோலமிகு மயிலே” எனத் தொடங்கும் அக்கல்லூரியின் சிறப்பு பற்றிய பாடல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. 1959-60 ஆண்டுகளில் பேரா.பா.வளனரசு நடத்திய, “இளைஞர் குரல்” என்ற கையெழுத்து ஏட்டிற்கான போட்டிக் கவிதைகளில் முதல் பரிசு வென்றிருக்கிறார்.

பாளை தூய சவேரியார் கல்லூரியில் பி.எஸ்.சி. விலங்கியல் பட்டப்படிப்பு (1960-1963) படித்துள்ளார். ‘தேசிய ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் 150 மாணவர்கள் எழுதிய கட்டுரைகளில் சோமு அவர்கள் எழுதிய கட்டுரையைத் தேடி எடுத்துப் பாராட்டியவர் பேரா.குருசு அந்தோணி. சேவியர் கல்லூரி மலரில் இவரெழுதிய ‘கழுகுமலைப் பத்து’ என்ற வெண்பாக்களும், ‘பேசாத இரு உள்ளம்’ என்ற கதையும், ‘திருவள்ளுவர் பாடல்’ என்ற கட்டுரையும் வெளிவந்துள்ளன.பட்டிமன்ற மேடையில்முதன் முதலில் பயிற்சி பெறாத ஆசிரியராக இராமநாதபுரம் மாவட்டத்தில் (1964-65) பணியில் சேர்ந்தவர், 08.08.1966 முதல் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகக் கலிங்கப்பட்டியில் பணியைத் தொடங்கினார். 1968-லிருந்து கழுகுமலையில் 27 ஆண்டுகள் ஆசிரியப்பணி. இதனிடையே, 1970-ல் முதுகலைத் தேர்வினை எழுதியவர், 1979 முதல் முதுகலைத் தமிழாசிரியர் ஆனார். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைக் கையெழுத்து மலர் தயாரிக்க வைத்து அவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்த்திருக்கிறார். நாகலாபுரம் தமிழாசிரியர் காசாமைதீன் போன்றோரோடு சேர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் துணையோடு, கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகளை மாணவர்களுக்குத் திருவிழா போல நடத்திய பெருமை இவருக்குண்டு. தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று கயத்தாறு, இளையரசனேந்தல், நாலாட்டின்புதூர் ஆகிய அரசு பள்ளிகளில் பணியாற்றி இருக்கிறார். மாவட்டக் கல்வி அலுவலராகக் கோவில்பட்டியில் சில மாதங்கள் பொறுப்பு வகித்துள்ளார்.

ஆசிரியர் சங்கங்கள் துடிப்போடு இருந்த காலங்களில் முக்கியப் பொறுப்புகளில் சோமு சார் இருந்திருக்கிறார். ஆசிரியர்களின் அனைத்து சங்கங்கள் இணைந்து 1985-ல் நடத்திய ‘ஜாக்டி’ போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 50,000-க்கும் மேற்பட்டோர் சிறை சென்றனர். அதில் இவரும் பாளை சிறையில் 55 நாட்கள் இருந்திருக்கிறார். அந்நாட்களில் வந்த தீபாவளிப் பண்டிகையையும் சிறையிலேயே கழித்ததாகக் கூறினார். கவிஞர் முத்துராமலிங்கம் சிறையில் பாடிய “சிறைக்குயில் கூவுகிறது” பாடல் மிகவும் உணர்வுப்பூர்வமானது என்றார். மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான ‘ஜாக்டோ’ அமைப்பின் கீழும் பல போராட்டங்கள் சென்றிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு மேல்நிலைத் தமிழ்ப் பாடநூல்களின் மேலாய்வாளராகப் பணியாற்றி உள்ளார். இவரியற்றிய ‘அணி திகழ் பாரதம்’ என்ற கவிதை மேல்நிலைப் பொதுத் தமிழ்ப் பாடநூலில் இடம் பெற்றிருக்கிறது. கழுகுமலை இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தின் செயலராகவும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்தவர். தற்போது கழுகுமலை சங்க இலக்கியப் பேரவையின் செயலராக இருந்து வரும் இவர், இப் பேரவை மட்டுமின்றி, வள்ளுவர் கழகம் நடத்தும் மாதாந்திரக் கூட்டங்களிலும் தவறாது கலந்து கொள்கிறார்.

தலைமையாசிரியர் கழகத் திங்களிதழான ‘மேல்நிலைக் கல்வி முரசு’ என்னும் இதழை நடத்தி வருகிறார். அரசு அலுவலர்களின் பல்வேறு சங்கங்களின் திங்களிதழான, ‘அமைப்புச் செய்திகள்’, உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் நடத்தும் திங்களிதழான ‘உடற்கல்வியாளர்களின் குரல்’ இரண்டிலும் ஆசிரியராகவும் உள்ளார். அமைப்புச் செய்திகள் வெளியான புதிதில், அச்சக ஆர்வத்தில் ‘சிவா அச்சகம்’ தொடங்கினார். பழைய டெடில் முறையான அதற்கு எழுத்துக் கோர்ப்பதும், புரூப் பார்ப்பதுமான வேலைகளை குடும்பத்தோடு பார்த்ததை இன்றும் மகிழ்வுடன் நினைக்கிறார்.வை.பூ.சோ.வின் இல்லத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்திலும், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழகத்திலும் மாநில சட்ட செயலராக இருந்துள்ளார். இன்று வரை அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பிரச்சனைகள், சிக்கல்களைத் தீர்ப்பதிலும்; சலுகைகளைப் பெறுவதிலும் நேரடியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ அணுகி உதவி வருகிறார். சோமு சார், 31.05.2003-ல் பணி ஓய்வு பெற்றாலும், ‘ஓய்வூதியர் சேவை மையம்’ என்று தன் இல்லத்தில் இருந்து கொண்டு தன்னார்வத்தொடு பிறர் தொண்டு செய்து வருகிறார்.

“சிவனைப் பாடுவோம், நிலம் என்னும் நல்லாள், அருள்மிகு பரம கலியாணி அருள் வேட்டல், சூழல் காப்போம், வ.உ.சி.100, நந்திக் களபம் பாடல் தொகுதி, அருள் தந்தை மாத்யூ பத்து, முருகன்-மழை வேண்டல் பத்து, சென்னை பெண் சித்தர் மேல் பாடிய ‘சர்க்கரையம்மாள் பத்து’, கழுகுமலை விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒரு கண்ணோட்டம்,” ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.‘தினமணி’ (23.05.1947) கழுகுமலை ஸ்ரீசுப்ரமணியசாமி கோவில் ஆலயப்பிரவேசம் 20.05.1947-ல் நடந்தது. இந்த செய்தி படத்துடன் இடம்பெற்ற ‘தினமணி’ (23.05.1947) நாளிதழ், அதை ஒரு கட்டுரையாக வெளியிட்ட ‘கல்கி’ (15.06.1947) இதழ் போன்றவற்றை ஆவணமாகப் பாதுகாத்து வருகிறார்.

சோமு சார் பற்பல பாராட்டும், பரிசும், பட்டயமும் பெற்றிருந்தாலும், தமிழக அரசு வழங்கிய ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’(1997), குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வழங்கிய ‘தேசிய நல்லாசிரியர் விருது’(05.09.2002) இரண்டையும் பெற்ற ஒரே கழுகுமலைக்காரர் இவர்.‘தேசிய நல்லாசிரியர் விருது’(05.09.2002) கழுகுமலை காவடிச்சிந்து பற்றி இவர் மேற்கொண்ட ஆய்வினைப் பாராட்டி, திருவாடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சிந்து கவிப் பேரரசு அண்ணாமலை ரெட்டியார் அவர்களின் 150 ஆம் பிறந்த நாள் விழாவில், “சைவத் தமிழ்ச்செல்வர்”  என்ற விருதளித்து சிறப்பித்த பெருமைக்குரியவர். (திருவிடைமருதூர். 06.10.2011)“சைவத் தமிழ்ச்செல்வர்” விருதுஇவ்வாண்டு, 26.01.2013-ல் தூத்துக்குடியில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆஷிஷ்குமார் அவர்கள், சோமு சார் அவர்களுக்கு “கலைமுதுமணி விருது” வழங்கிக் கெளரவித்தார்.

தனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் ‘சீனா சானா’ என்றழைக்கப்படும் சி.சங்கரலிங்கனார், ராமகிருஷ்ண பிள்ளை ஆகியோரையும், தன் தமிழ்ச் சுற்றமாக இருந்து வரும் சான்றோர்களையும் இன்றும் மறக்காமல் நினைவு கூர்கிறார். 

நம் வட்டார எழுத்தாளர்களைத் தொகுத்த இளசை அருணா ‘கரிசல் இலக்கியம்-II’ என்ற நூலில் இவரைப் பற்றி எழுதியுள்ளார். அதில், “கழுகுமலையின் உயரம் வடிவம் என்றால், அதற்குச் சமமான உயரத்தில் உலவி வரும் நடமாடும் மானுட நேயக் கவிஞர் வை.பூ.சோ.” என்று கூறுவார்.

“தமிழ்த் துறைக்கு வெளியே இருப்பவர்களால்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது” என்று பாளை பேரா.சிவசு அவர்கள் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் சோமு அவர்களும் அடிப்படையில் தமிழ்த் துறைக்கு வெளியிலிருந்து வந்தவர் என்றாலும், தமிழன்னைக்கு அணி செய்து மகிழும் சிறந்த படைப்பாளர்.

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி” (குறள்.226)

என்ற குறளுக்கேற்ப, தான் பெற்ற பொருளைவிட மேலான அறிவுச் செல்வத்தை, நாளும் தருமம் செய்து வாழும் நற்தகைமையாளர் எங்கள் வை.பூ.சோ.

* * *