RSS

Monthly Archives: ஏப்ரல் 2013

விடுதலைப் பயணம் தந்தவரின் வாழ்க்கைப் பயணம்!

அசின் சார், கழுகுமலை.தந்தை ர.ஜார்ஜ் சே.ச., கழுகுமலை.

தந்தை ர.ஜார்ஜ் சே.ச., கழுகுமலை.

இந்து சமுதாயத்தின் அடிப்படை சாதிப்பாகுபாடு. தொடக்கத்தில் தொழில் ரீதியாகப் பகுக்கப்பட்ட சமுதாயம், நாளடைவில் மேட்டுக் குடிமக்கள், அடித்தட்டு மக்கள் என்ற இரு பெரும் பிரிவில் நிலைத்து நின்று விட்டது. இதன் விளைவு சமுதாயத்தில் பொது உபயோகத்திற்காக இருந்த கோவில், குளம், தெருக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் உரிமை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிக்கப்பட்டது. அதோடு, அவர்கள் சமுதாயத்திற்குப் புறம்பே தள்ளி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு உரிமைகள் பறிக்கப் பட்டவர்களில் சிலர் தங்கள் உரிமைகளை மீண்டும் நிலைநாட்ட வலுவின்றி அடங்கி ஒடுங்கிப் போயினர். ஆனால், 19-வது நூற்றாண்டின் மத்தியில் தென் தமிழகத்தில் நாடார் சமுதாயத்தினர் தட்டிப் பறிக்கப்பட்ட தங்கள் உரிமைகளை மீண்டும் பெற கிளர்ந்து எழுந்தனர். அப்போது, கழுகுமலையிலும் நாடார் சமுதாய மக்கள் தங்கள் உரிமைக்காகக் கழுகாசலமூர்த்தி கோவில் அறங்காவலரான எட்டயபுரம் ஜமீன்தாரையே எதிர்த்து நீதிமன்றங்கள் பல ஏறி இறங்க வேண்டியிருந்தது. அதற்காகக் தங்கள் பொருளையும், பணத்தையும், ஏன்? உயிரையுமே இழக்க வேண்டியிருந்தது. இருப்பினும், ‘தலை போனாலும் தலை வணங்கோம்’ என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்துப் போராடினர். வெற்றி கிடைக்காத நிலையில் தங்கள் தாய் மதமான இந்து மதத்தின் மீது வெறுப்புக் கொண்டு, இனம் முழுவதும் சேர்ந்து இந்து மதத்திலிருந்து வெளியேறினர். இந்தக் குழு மதமாற்றம் சமுதாய வரலாற்றில் சிறப்பான இடம் பெற்றது.

இவ் வரலாற்று நிகழ்வை அறிந்து கொள்ள முற்பட்டால், அருட்தந்தை ஜார்ஜ் அவர்கள் எழுதிய, “இரத்தத்தில் திருமுழுக்கு, கழுகுமலையில் ஒரு விடுதலைப் பயணம்” ஆகிய நூல்களைத் தவிர்த்து வேறேதும் விரிவாக உரைப்பன இல்லை. இவ் வரலாற்று நிகழ்வை வேறொருவர் முனைந்து எழுதுவதை விட, தந்தை ஜார்ஜ் அவர்கள் சிறப்பாக எழுதியதற்கு ஏற்புடைய காரணங்களுண்டு. அவர் வயதில் மூத்த கழுகுமலைக்காரராகவும், சேசுசபைத் துறவியாகவும், அச்சபையில் முக்கியப் பொறுப்புகள் வகித்தவர் என்பதினாலுமே சாத்தியமானது. இதை ஏன் பகர்கிறேனென்றால் சில முக்கிய ஆவணங்கள், கொடைக்கானல் செண்பகனூர் சேசுசபை ஆவணக் காப்பகத்தில் உள்ளவை. அவற்றை சேசு சபைத் துறவியரன்றிப் பிறிதொருவர் சுலபமாகப் பெறுவது இயலாததொன்று.

‘கழுகுமலையில் ஒரு விடுதலைப் பயணம்’ நூலிற்கு முன்னுரை எழுதிய தூத்துக்குடி ஆ.சிவசுப்பிரமணியன், “தான் பிறந்து வளர்ந்த ஊர், தமது முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அவர்கள் நிகழ்த்திய போராட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுதும் போது உணர்ச்சி வயப்படுவதும், சார்பு நிலை எடுத்தலும் தவிர்க்க இயலாதன. ஆனால், அடிகளார் மிக எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டுள்ளார்” என்று தந்தை ஜார்ஜ் அவர்களைக் குறிப்பிடுகிறார். “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” என்ற குறளுக்கு ஏற்ப தந்தையின் நூல் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. இப்படி, ஒரு வரலாற்று நிகழ்வை மிக நுட்பமாகக் கவனித்து, ஏற்புடைய ஆதாரங்களைச் சேகரித்து கண்ணும் கருத்துமாக எழுதி எதிர்கால சந்ததியினருக்குக் கல்வெட்டாய் தந்தவர் தந்தை ஜார்ஜ் அவர்கள்.

வரலாற்று நிகழ்வை ஆவணப்படுத்திய இம்மனிதரை, வரலாற்றில் ஆவணப்படுத்த நினைத்தேன். அதற்காக, நான் தந்தை அவர்களை நேரில் சந்தித்து அவர்களைக் குறித்த முழு விபரம் பெற, 23.02.2013 அன்று அவர்கள் தற்போது பணியாற்றும் திண்டுக்கல் அருகிலுள்ள புனித ஜோசப் கருணை இல்லம் நோக்கிக் கிளம்பினேன். அன்று ரயில் தாமதமாகப் போய்க் கொண்டிருந்ததால், அவ்வப்போது போன் செய்து நான் எங்கு வந்து கொண்டிருக்கிறேன் என்பதை மிகுந்த அக்கறையோடு விசாரித்துக் கொண்டார்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கியபோது, அவர் எனக்காக அனுப்பியிருந்த கார் தயாராக இருந்தது. திருச்சியிலிருந்த என் மாணவர் பிலிப்பை நான் அழைத்திருந்தேன். அவரும் மிகச் சரியாக அங்கு வந்து என்னோடு இணைந்து கொண்டார். எங்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கருணை இல்லத்தைக் கார் அடைந்தது. எந்த விதமான நகர்ப்புற நெருக்கடியோ, சப்தங்களோ, தொந்திரவோ இல்லாத அமைதியான இயற்கை எழிலோடு இருந்தது அவ்விடம்.

நான் சந்திக்கப் போறவர் கண்டிப்பானவர், கறார் பேர்வழி என்றெல்லாம் உள்ளூரில் சொல்லியிருந்தார்கள். அனைத்திற்கும் மாறானவராக அவரைக் கண்டேன். அன்புடன் எங்களை வரவேற்று உணவறைக்கு அழைத்துச் சென்றவர், அவரே எங்களுக்குப் பரிமாறினார். அவரின் அன்பிற்கு முன் நாங்கள் நெகிழ்ந்து போனோம். உணவை முடித்து விட்டு அவரின் அலுவலக அறைக்கு வந்தோம்.

“ம்…கேளுங்க” என்றார்.

“உங்களைப் பற்றி…” என்று நான் தொடங்கிய போதே, எழுதி வைத்திருந்த வீட்டுப் பாடத்தைக் காட்டும் சிறு குழந்தை போல, நான்கு பக்கக் குறிப்புத் தாளை என்னிடம் நீட்டினார். அசந்து போனேன். வருபவரின் நேரம் விரயமாகக் கூடாது, அவசரத்தில் பிழையான குறிப்புகள் இடம் பெற்று விடக் கூடாது என்ற அவரின் உயர்ந்த நோக்கம் எனக்குப் புரிந்தது.

அந்தக் குறிப்புத் தாளைப் பார்த்தேன். ஒரு வரலாற்று மாணவன் காலக்கோடு எழுதுவதைப் போல அவருடைய பிறப்பு முதல் நடப்பு வரை விலாவாரியாக எழுதியிருந்தார். அதை நான் வாசிக்க வாசிக்க அவர் விவரித்துக் கூறலானார். அதோடு நான் அவ்வப்போது கேட்ட ஐயங்களுக்கும் விளக்கமளித்தார்.

“உங்கள் வாழ்நாளில் பொதுநல ஊழியராகவே பணி செய்து வந்திருக்கிறீர்கள். இதற்குப் பின்னணி என்ன?” என்று கேட்டேன்.

“என் தந்தையின் பொது நலச் சிந்தனை இயல்பிலேயே என்னிடம் ஒட்டிக் கொண்டதில் வியப்பில்லை. கழுகுமலையில், 1936-ஆம் ஆண்டு ஆயர் பவனி மறித்து நிறுத்தப்பட்ட நாள் முதல், 1955-இல் கழுகுமலையின் பொதுத் தெருக்கள் ஊராட்சிக்குச் சொந்தம் என்றும்; நாடார் இன மக்கள் பொதுத் தெருக்களில் பவனி செல்லலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை ஊர் வழக்கைத் தன் வீட்டுக் காரியமாக நினைத்து, தன் தொழிலையும் கவனிக்காமல் சென்னைக்குப் பலமுறை பயணம் செய்து ஊருக்காக உழைத்தவர் என் தந்தை C.ரத்தினசாமி நாடார். அவர் கோவில் நிகழ்வுகளில் சேவை மனப்பான்மையுடனும், தன்னார்வத்துடனும் செயல்பட்டு ஐரோப்பியத் தந்தையர்களுக்கு வலக்கரமாக இருந்தவர். என் தாயார் ர.மரிய தங்கம்மாள். இவர்களின் மூத்த மகவாய் 23.04.1926 இல் பிறந்தவன்தான் நான்.” என்ற விளக்கப் பின்னணியுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.பெற்றோருடன் தந்தை ர.ஜார்ஜ் சே.ச., அவர் மாணவப் பருவம் சுதந்திரப் போராட்ட காலமாக இருந்ததால், நாட்டுப் பற்று அவரிடம் அதிகமாகவே இருந்திருக்கிறது. காந்தியடிகளின் உரையை மிகவும் விரும்பிக் கேட்டுள்ளார். அவர் பேசும் போதெல்லாம் ராம ராஜ்ஜியம் குறித்துப் பேசியது, இவர் மனதில் ‘கிறிஸ்து ராஜ்ஜியம்’ பற்றிய சிந்தனையை எழுப்பியுள்ளது. இதனால் துறவற எண்ணம் துளிர்த்ததாகக் கூறியவர், தன் கல்லூரி நாட்கள் அனுபவங்களிலிருந்து தொடர்ந்தார்.

பி.ஏ. பட்டப்படிப்பு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நாடு சுதந்திரம் அடைந்துள்ளது. அந்நாளில் கல்லூரிக் கட்டடத்தில் மட்டுமே தேசியக் கொடி ஏற்ற அனுமதி இருந்திருக்கிறது. அச்சூழலில் அதிகாரிகளுடன் தந்தை அவர்கள் வாதாடி மாணவர் விடுதியிலும் தேசியக் கொடி ஏற்றியுள்ளார்.

துறவறப் படிப்பை மும்பையில் படித்துக் கொண்டிருந்த போது அங்கு சிதறிக் கிடந்த தமிழ் கத்தோலிக்கர்களை ஒன்றிணைத்திருக்கிறார். கோவை மக்கள் மும்பையின் பல பகுதிகளில் நெசவாலைத் தொழிலாளர்களாக இருந்துள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து ‘பொதுச் சங்கம்’ ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவர்கள் இணைந்து செயல்பட வைத்துள்ளார். தமிழகத்திலிருந்த இந்தி எதிர்ப்புச் சூழலில் அங்கு சென்றதால் இந்தியின் மீது நாட்டமின்றி இருந்திருக்கிறார். ஆனால், ஏழு ஆண்டுகள் அங்கிருந்தும் இந்தி கற்றுக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் இன்று இவர் உள்ளத்தில் நிலையாக இருக்கிறது.

கொடைக்கானல் செண்பகனூர் திரு இருதயக் குருத்துவக் கல்லூரியில் தந்தை அவர்கள் படித்தபோது குருமாணவர்கள் மத்தியில் ‘சமூக சேவை இயக்கம்’ ஒன்று இருந்துள்ளது. மலையில் சிதறிக் கிடக்கும் கிராமங்களின் வளர்ச்சிக்காக செயல்படுவது இதன் நோக்கம். தந்தையும் அவரின் தோழர்களும் அங்கிருந்த ‘அடுக்கம்’ என்ற கிராமத்தில் பணியாற்றியுள்ளனர். அந்த அனுபவம் பற்றிக் கேட்டேன்.

அதற்கு தந்தையவர்கள், “அது செண்பகனூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் 500 அடி பள்ளத்தாக்கில் அமைந்த குக் கிராமம். மொத்தம் 75 வீடுகள் இருந்த அங்கு ஒரு சிலர் தவிர மற்றவர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள். பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் ஓராசிரியர் பள்ளி ஒன்று ஆரம்பித்தோம். இருபது சிறுவர்கள் பள்ளிக்கு வரச் சம்மதித்தனர். மாதம் இருமுறை அங்குள்ள இளைஞர்களுக்கான கூட்டம் நடக்கும். பொது அறிவு, சுகாதாரம் சம்பந்தமாகப் பேசுவோம். மாதம் ஒரு முறை ஒவ்வொரு குடும்பமும் தாங்கள் சேமித்த சிறு தொகையை தபால் நிலையத்தில் கொடுத்து வைக்க வேண்டும். ஆசிரியர் சம்பளம், விளையாட்டுப் பொருட்கள், பள்ளிக்கூட இதரச் செலவுகள் என்று அனைத்தையும் ஊர் மக்களே ஏற்றுக் கொண்டனர். (‘நமக்கு நாமே’ திட்டத்தின் முன்னோடி இது!). சமூக சேவை என்பது மக்களை இல்லாதவர்களாகக் கருதி அவர்களுக்கு நாமே பண உதவி செய்து கொண்டிருப்பதல்ல. மக்களைத் தங்கள் சொந்தக் காலில் நிற்கப் பழக்குவதும் பெரிய சேவைதானே!” என்று பெருமைப்படக் கூறினார்.

‘திரு இருதய தூதன்’ வெளியீடுகளில் அவ்வப்போது இவர் படைப்புகள் வெளி வந்திருந்தாலும், இவரின் திறனுக்குச் சான்றுகளாய் இருப்பன இவரெழுதிய ஆறு நூல்கள். 1.வாழ்க்கைப் படகினிலே(1955), 2.லொயோலா வீரன்(1956), 3.தமிழகத்தில் இயேசு சபையினர்(1960) 4.இரத்தத்தில் திருமுழுக்கு(2000) 5.கழுகுமலையில் ஒரு விடுதலைப் பயணம்(2006), 6.கழுகுமலைப் பங்கில் நூறாண்டுப் பயணம்(2010).

1984 இல் தந்தை அவர்கள் ஆசிரியப்பணியில் ஓய்வு பெற்ற நேரம், திண்டுக்கல்லில் இயேசு சபையினர் ‘வைகறைப் பதிப்பகத்தை’ ஆரம்பித்தார்கள். அதன் ‘முதல் மேலாளராக’ தந்தை நியமிக்கப்பட்டார். இதில் பணியாற்றிய 13 ஆண்டுகளில் இவர் 150 நூல்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு நூல்களும் 3000 பிரதிகள் ஆகும். ‘வளரும் இளமை’ என்ற நன்னெறிப் புத்தகத்தை ஒரு ஆண்டிற்கு ஏழு லட்சம் பிரதிகள் அச்சிட்டு தமிழகமெங்கும் கத்தோலிக்கப் பள்ளிகளிலும், பிற பள்ளிகளிலும் விற்றிருக்கிறார். இவை தவிர, பல்வேறு சபைத் துறவிகளும் இவரை விரும்பி அழைத்து இவரிடம் தியானப் பயிற்சி பெற்றுள்ளனர்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருந்தாலும், தன் நினைவில் நிற்பன ஓரியூர் அருளானந்தர் பள்ளியும், கொசவபட்டி புனித அந்தோணியார் பள்ளியும் என்று மன நிறைவோடு கூறினார். ஏனெனில் கொசவபட்டி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தி அதன் முதல் தலைமையாசிரியர் ஆகி உள்ளார். ஓரியூரில்(1966-69) தினசரி இரண்டு பேருந்துகள் மட்டும் ஓடிய காலத்தில் மூன்று ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.

“இரத்தத்தில் திருமுழுக்கு எழுந்ததெப்படி?” என்று கேட்டேன். அதற்கு அவர், “2000 – வது ஆண்டு கழுகுமலை ஆலயம் புதுப்பிக்கப்பட்ட போது மலர் ஒன்று வெளியிட இருப்பதாகக் கூறி, என்னிடம் ஒரு கட்டுரை கேட்டாங்க. அதற்காக எழுத ஆரம்பிச்சேன். அது எழுத எழுத நீண்டுக்கிட்டே போயிடுச்சி. கடைசியில மலரும் வெளியிடல. எழுதியத என்ன பண்ணனு தெரியாம நானும் வச்சிட்டேன். அத என் தம்பி பவுல்தான் தன் சொந்த செலவில் புத்தகமாக்கினான்” என்றார் மகிழ்ச்சியுடன்.தம்பி பவுலுடன் தந்தை ஜார்ஜ் அவர்கள்கழுகுமலையில் தீப்பெட்டித் தொழில் வந்தது பற்றி கேட்ட போது, “முதல் உலகப் போர் (1914-1918) வரை இந்தியாவில் தீப்பெட்டித் தொழில் கிடையாது. இதை 1925 வாக்கில் ஜப்பான் நாட்டினர்தான் கல்கத்தாவில் ஆரம்பிச்சாங்க. அதை சிவகாசிக்காரங்க போய் படிச்சிட்டு வந்தாங்க. 1933 இல் சாத்தூர், சிவகாசியிலிருந்து தொழில் தெரிஞ்சவங்களைக் கூட்டிட்டு வந்து, கழுகுமலையில் எங்க அப்பா ‘சிறிய புஷ்பம் தீப்பெட்டிக் கம்பெனி’ ங்கிற பேருல ஆரம்பிச்சாங்க. இது தான் கழுகுமலையின் முதல் தீப்பெட்டிக் கம்பெனி. என் தகப்பனார் ‘கழுகுமலை தீப்பெட்டித் தொழிலின் தந்தை’ என்பதில் எனக்குப் பெருமையுண்டு. அப்போது படிக்கிற சின்னப் பசங்கெல்லாம் பள்ளிக் கூடத்திற்குப் போவதை விட தீப்பெட்டி வேலைக்கு ஆர்வமாப் போனதால, அன்றைய பங்குத் தந்தை பாதர் பில்லிங் திட்டிக்கிட்டே இருப்பார்” என்றார்.

தொடர்ந்து, அவர் தற்போது பணியாற்றி வருகின்ற இல்லத்தைப் பற்றிக் கேட்டேன். சுருக்கமாகத் தெளிவாகப் பதிலளித்தார்.

“கடந்த நான்கு ஆண்டுகளாக (2009 – 2013) நான் பணியாற்றும் இந்த செயின்ட் ஜோசப் கருணை இல்லம் (St.Joseph’s Hospice), இறக்கும் தருவாயில் இருக்கும் முதியோர்களுக்கானது. 2006 நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் கொடை ரோடு அருகிலுள்ள மெட்டூரில் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது வயோதிகர்களைப் பராமரிக்கும் சாதாரண முதியோர் இல்லம் அல்ல. வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் எவருக்கும் இங்கு அனுமதி கிடையாது. வீதிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் முகவரி இன்றிக் கிடப்போருக்குத்தான் இது புகலிடம். மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் அனாதைகளாகக் கிடந்தோர் பலர். அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டு வாழ்நாளின் இறுதிவரை பராமரிக்கப் பட்டிருக்கிறார்கள்.செயின்ட் ஜோசப் கருணை இல்லம்தெருப் புழுதியிலும், மருத்துவமனை அழுக்கிலும் பல நாள்கள் கிடந்தவர்களை இங்கு கொண்டு வந்தவுடன் அவர்களுக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி, சுத்தமான உடை அணிவித்து கட்டிலில் மின் விசிறிக்கு அடியில் படுக்க வைக்கிறோம். இது அவர்களது புது வாழ்வின் ஆரம்பம். சுயமாகக் குளிக்க இயலாதவர்களை நாங்களே குளிப்பாட்டுகிறோம்; தினசரி உடை மாற்றுகிறோம். இறைச்சி, முட்டையுடன் சத்தான உணவும் பரிமாறப்படுகிறது. இறந்தவர்களை இங்கேயே அடக்கம் செய்கிறோம். இந்த இல்லத்தில் இப்போது 300 அனாதைகள் இருக்கிறார்கள். வாரத்தில் மூன்று அல்லது நான்கு பேர் இறக்கிறார்கள். அவர்களது பராமரிப்புக்கு அரசு உதவி எதுவும் கிடையாது. இதுவரை தர்மம் வாங்கி வாழ்ந்த இவர்களைப் பராமரிக்க இப்போது நாங்கள் தர்மம் வாங்குகிறோம். கடவுளின் பராமரிப்பும் குறைவின்றி இருக்கிறது.செயின்ட் ஜோசப் கருணை இல்லம்இங்குள்ள பராமரிப்பாளர்களுக்கான கனிவான கட்டளையே யாரையும் கடிந்துரைக்கக் கூடாது என்பதுதான். நிறுவனர் தந்தை தாமஸ் சொல்வார், ‘அவங்க இல்லாட்டி நானோ, நீங்களோ, ஏன் இந்த இல்லமோ கிடையாது. இங்குள்ள செடியும், பூவும், கனியும் அவங்களுடையதுதான். எனவே, காய்களை அவங்க பிடுங்கினாக் கூட, நீங்க அவங்களக் கடிந்து பேசக் கூடாது.’ என்பார்” என்று தந்தை ஜார்ஜ் சொன்ன போது, அவர்கள் சேவையின் தாழ்ச்சி புரிந்தது.செயின்ட் ஜோசப் கருணை இல்லம்அந்த இல்லத்தையும், அங்குள்ளவர்களையும் போய்ப் பார்த்த போது, ஒவ்வொரு மனிதனும் கர்வத்துடன் வாழ என்ன இருக்கிறது? என்ற மனநிலையே தோன்றியது. வாய்ப்புக் கிடைத்தும் பிறருக்கு உதவாமல் இருந்த நாட்களைக் குறித்து வேதனை ஏற்படுகிறது. அதற்குக் காரணம், தற்போது அந்த இல்லத்தின் பணியாளர்களாக இருப்பவர்கள்: தந்தை மத்தாய் (வயது 91), நம் தந்தை ஜார்ஜ் (வயது 88), இவர்களோடு தந்தை தாமஸ் (வயது 63). தந்தை தாமஸ், தந்தை மத்தாய், தந்தை ஜார்ஜ்இவர்களே மற்றவர்களின் பராமரிப்பில் வாழவேண்டிய முதிய வயதினராய் இருந்து கொண்டு, சேவை செய்வதில் இளைஞரைப் போல துடிப்புடன் இருப்பதைப் பார்த்து மலைத்துப் போனேன்.

துறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக்

குறைந்தாரைக் காத்தெளி யார்க்குண வீந்து குலமகளும்

அறந்தாங்கு மக்களு நீடூழி வாழ்கென அண்டமெலாம்

சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந் தவமே

– என்ற பாரதியின் வரிகள் என் மனதில் இவர்களை வாழ்த்தி நின்றன.

அவ்வளாகத்தில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களைத் தந்தை ஜார்ஜ் அவர்கள் அழைக்க, நடக்க முடியாதவரும், பேச இயலாதவரும், பிணியுற்றோரும் மெதுவாக நகர்ந்து நகர்ந்து வந்து அவரருகில் மகிழ்ச்சியோடு நின்றனர்.தந்தை ஜார்ஜுடன் அவர்களை என் காமிராவில் படம் பிடித்த போது, கள்ளமில்லா வெள்ளை மனதோடு அழகாகச் சிரிக்கும் கடவுளர்களாகத் தெரிந்தார்கள்.

“நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில் படமாடக் கோயில் பகவற்க தாமே” என்கிறார் திருமூலர். இறைவன் அருளை அடைந்தின்புற விழைந்த மஸ்தான் சாகிபு, “தொண்டு செய்ய நின்ற துறவியரே நின்னருளைக் கண்டு கொள்ளச் செய்தாய் கண்ணே றகுமானே” என்று பாடுகிறார். “ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்” (நீதி மொழி. 19:17) என்கிறது விவிலிய நூல். வாழ்க்கையில் விரக்தி என்று நினைப்பவர்கள், இங்குள்ள தந்தையர்களையும்; ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இவ்வில்லத்தில் பராமரிக்கப்படுபவர்களையும் ஒருமுறை போய்ப் பார்த்து வாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்!

பல்வேறு நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளில் தந்தை ஜார்ஜ் அவர்கள் திறம்படப் பணியாற்றி இருந்தாலும், அவரியற்றிய நூல்களையும், இன்றவராற்றி வரும் இவ்வில்லப் பணியையும் நினைக்கும் போது கழுகுமலைக் காரர்களான எங்களுக்கு மிகப்பெருமையாக இருக்கிறது.

* * *

பின்னிணைப்பு வாழ்க்கைக் குறிப்புகள்

 

முன்னேற்றம்

அசின் சார், கழுகுமலை.முன்னேற்றம்(சொல் புதிது! தளம் இன்று தன் முதல் வயதைக் கொண்டாடுகிறது.)

* * *

அதிகாலைப் பொழுது!

 

அச்சிறு வயது ஆழ்ந்த தூக்கம்

முட்டிய ஒன்னுக்கால் முழுவதும் கலைந்தது.

அருகில்…

‘கொர்ர்ர்… கொர்ர்ர்…’ அய்யாவின் குரட்டை சத்தம்.

 

அவிழ்ந்த டவுசரில்

முடிச்சுப் போட்டவாறே அங்கனக்குழி புறப்பட்டேன்.

என் காலடிச் சத்தம் கேட்டு

அரங்குவீட்டுள் அடைகாக்கும் கோழி ‘கொக்…கொக்…’ என்றது.

 

குதிர் மேலிருந்த பூனை

காதுகளை விரைத்து தலை நிமிர்த்திப் பார்க்க,

வந்தது நானென்றதும்

ஓடுபாலமாய் உடலை வளைத்து வாலை நிமிர்த்தி

வாய் பிளந்த கொட்டாவியால் சோம்பலை முறித்தது.

 

அதைப் பார்த்து மகிழ்ந்த நேரம்

என் காலில் பட்டது ஈரம்.

தொட்டி நீரை மொண்டு கைகால் முகம் கழுவின போது

பூனையின் புத்துணர்வு எனக்குள் புகுந்தது.

 

மர ஏணியில் தாவி ஏறி

அண்ணன் படிக்கும் மாடியறை சென்றேன்.

படித்த பக்கம் கவிழ்த்த புத்தகம்;

எழுதிய பக்க பேனாவோடு மூடிய ஏடு

என்றிவை எல்லாம் ஓரம் காக்க

பொழுதறியா அயர்வோடு தூங்கிக் கிடந்தான் அண்ணன்.

 

விடிவெள்ளியாய் எரிந்த

சிம்னி விளக்கை அணைத்துவிட்டு

இடுப்பளவு சிறுவாசல் கதவு திறந்து

குனிந்தபடி சென்றேன் – வெளிமச்சி!

 

அடடா! என்ன இதமான காற்று!

 

நிலவொளியில் ஊர்

சரள் விளக்காய் நட்சத்திரங்கள்.

பார்த்த முகம் பளபளக்கும் – அது

பார்த்த நிலா முகம் மறைக்கும்.

 

எங்கிருந்தோ செல்லும் பறவைகள்

அம்பாய் பறக்கும் தலைக்கு மேலே

அதன் ‘கீச்…கீச்…’ விழும் பூமி மேலே.

முற்றம் தெளிக்கும் பெண்கள்

சாணம் கலந்த நீரையும்

வளையோசை கலந்த சத்தத்தையும் தெருவில் தெளிப்பர்.

 

பெரிய பெரிய பையுடன்

மொத பஸ்ஸில் ஊருக்கு வந்தவர்கள்

தெருவுக்குள் நடக்கும் காலடிச் சத்தம்.

கூடவே, தெரு நாயின் சத்தம்.

‘ஏய்! ஆள் தெரியாம குரைக்க…சேடு!’

என்ற அதட்டலுக்குப் பணிந்த நாய்

‘உர்ர்ர்…’ எனத் தன் கோபத்தை முடித்துக் கொண்ட சத்தம்.

 

தெக்குத் தெரு, வடக்குத் தெரு

கீழத்தெரு, மேலத் தெரு என்று எல்லாப் பக்கமும்

எசப் பாட்டாய் கூவும் சேவல்கள் சத்தம்.

பக்கத்து வீட்டு பாப்பக்கா

பசுமாட்டில் பால் கறக்கும் போது

பாத்திரத்தில் விழும் பாலின் ‘சுர்ர்.. சுர்ர்…’ சத்தம்.

 

மூக்கையாத் தேவரு

வண்டியிழுக்கும் மாட்டுக்காக

பருத்திக் கொட்டையை அரைக்கும் ஆட்டு உரல் சத்தம்.

படப்பிலிருந்து உருவிப்போட்ட வைக்கோலை

தலையாட்டிக்கிட்டே தின்னும்

காளைகளின் கழுத்து மணிச் சத்தம்.

 

ஊர் கிணற்றில் நீர் இறைக்கும் வாளிச் சத்தம்.

பிள்ளையார் கோவில் அடிபம்பு ஒலிக்கும் ‘டங்கு டங்கு’ சத்தம்.

வடகாட்டு வேலைக்குப் போகும் பூலமக்கா

மத்தியானக் கஞ்சிக்கு தொவையல் அரைக்கும் அம்மிச் சத்தம்.

 

சலவைத் தொழிலாளி

செங்கி வீட்டு ரேடியோவில் செய்தி வாசிக்கும்

சரோஜ் நாராயணசாமி சத்தம்.

சடையாத்தா வீட்டு சங்கிலிப் பாட்டி

வெத்தல உழக்குல ‘லொட்டு லொட்டு’னு இடிக்கிற சத்தம்.

 

‘வெரசா வாட்டி! ஏழரைக்கே பூவ அனுப்பனும்’

பூப்பறிக்கும் ஆள அவசரப் படுத்தும் பேச்சியம்மா சத்தம்.

புதுஅம்மன் கோவில் பெரிய மரத்துல

ஓயாம ஒலிக்கும் பறவை கூட்டத்தின் ‘கியா…கியா…’ சத்தம்.

 

இச்சத்தங்கள் இருந்த ஊரை

முன்னேற்ற வந்த ‘முன்னேற்றம்’

ஊரை மட்டுமா மாற்றியது?

இருந்த சத்தங்களையும்தான் மாற்றியது.

 

இன்று – அதே அதிகாலைப் பொழுது!

 

கோடை வெப்பத்தின் புழுக்கம் தாங்காமல்

தட்டிய முழிப்பால் மொட்டை மாடி சென்றேன்.

வானத்தை வெரித்தேன்.

 

புகை மூட்டமாய் வானம்.

நட்சத்திரங்கள் ஊருக்குள் கொட்டிக் கிடந்தன மின் விளக்குகளாக.

‘மினுக் மினுக்’ கென்று சிமிட்டிக் கொள்ளும் வெளிச்சத்துடன்

‘உம்ம்ம்…’ என்ற தொலை தூர சத்தத்தோடு

வானில் பறந்து கொண்டிருந்தது ஒரு விமானம்.

 

கேட்டில் தொங்கும் பையில்

பால் பாக்கெட்டைப் போட்டுவிட்டு

பழைய டூ வீலரில் பறக்கும் பால்காரனின் சத்தம்.

மொதப் பஸ்சில் ஊருக்கு வந்தவர்

செல் போனில் பேசிக் கொண்டே

தெருவில் நடந்து போக  – அப்போது

ஒரு வீட்டிற்குள்ளிருந்து வந்த

ஒரு நாயின் தனித்த சத்தம்.

 

செய்தித்தாளை ‘சர்ர்ர்..’ரென வீட்டிற்குள் வீசி விட்டு

‘டர்ர்ர்… டர்ர்ர்…’ டிவிஎஸ் பிப்டியில் விரையும்

பேப்பர்க்காரன் சத்தம்.

செல்போனில் வைத்த அலாரம்

யார் வீட்டிலோ நிறுத்தப் படாமல்

ஒலித்துக்கொண்டிருக்கும் சத்தம்.

 

முக்கு டீக்கடையில் அந்த அதிகாலைப் பொழுதிலும்,

‘என் உச்சி மண்டைலே சுர்ர்ருங்குது…’ பாட்டுச் சத்தம்.

பள்ளிக் குழந்தை ஒன்று பிடிபடாத ஆங்கில வரியை

புரோகிதர் போல ஓதிக்கொண்டு

இல்லயில்ல, படித்துக் கொண்டிருந்த சத்தம்.

 

ஏதோ ஒரு வீட்டிலுள்ள இலவச டிவிக்குள்

ஏசுவின் பேரைச் சொல்லி பிழைப்பை ஆரம்பிக்கும்

போதகர் ஒருவரின் பிரசங்கச் சத்தம்.

கீழ்ப்புற வீடொன்றில்

‘விர்ர்ர்…’ரென இரையும் மிக்ஸி சத்தம்.

கூடவே, குக்கரின் ‘விஷ்…’ சத்தம்.

 

ஓடி முடித்த வாஷிங் மிஷினில்

தொடர்ந்து ஒலிக்கும் ‘பீப் பீப்’ சத்தம்.

அங்குமிங்கும் ‘டுப்பு டுப்பு’ வெனத் துடிக்கும்

கம்பரசர் மோட்டாரின் தொடர் சத்தம்.

 

நேற்று தொடங்கி இன்று வரை முடியாமலிருக்கும்

போர்வெல் வண்டி சத்தம்.

ஊரை ஒட்டியுள்ள மில்லிலிருந்து

பரவி வரும் மிஷினின் இரைச்சல் சத்தம்.

 

இன்னும் எத்தனையோ புதுப்புது சத்தங்கள்.

 

சத்தங்கள் விழுங்கிய

சத்தங்கள்தான் ‘முன்னேற்றம்’ என்றால்

நம்புவீர்களா நீங்கள்?

* * *

 

நெல்லையில் ஒரு நிகழ்வு

அசின் சார், கழுகுமலை.நெல்லையில் ஒரு நிகழ்வு மார்ச் 29, புனித வெள்ளி.

மாலை 3 மணி.

தேவாலயத்தில் நடைபெறும் தியான நிகழ்வுக்கு என் மனைவி கிளம்பிக் கொண்டிருந்த பொழுது, நான் பேரா.சிவசு அவர்கள் நெல்லையில் நடத்தும், “பாராட்டும் படைப்பாளியுடன் சந்திப்பும்” நிகழ்வுக்குக் கிளம்பினேன்.

நெல்லை ஜானகிராம் ஹோட்டல் அரங்கம்.

சிவசு அவர்களின் மேலும் அமைப்புடன் பேராசிரியர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கூடியிருந்தனர்.

மாலை 5 மணி.

பேரா.வேலம்மாள் அவர்களின் வரவேற்புரை தொடங்கியது. நெல்லையில் பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள் கட்டளை கைலாசம், தனஞ்செயன் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.

பேரா.மகாதேவன் தன் வாழ்த்துரையில், “நின்று கொண்டே இருப்பதைவிட, சென்று கொண்டே இருப்பது நன்று. ஊடகங்களுக்கேற்ப படைப்பாளிகள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், காகிதங்கள் இல்லா நூலகங்கள் ஆகிவிட்ட காலம் இது. அந்த வகையில் கவிஞர் கல்யாண்ஜி அவர்களும், கவிஞர் சுகுமாரன் அவர்களும் புதிய தடத்தில் பயணம் செய்கிறார்கள். வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் சிறந்தவர்கள். ஓய்வு பெறும் பேராசிரியர்கள் இவ்விருவரும் நல்ல மனிதராக, ஆசானாக வாழ்ந்து காட்டியவர்கள். தங்களின் பணிக் காலத்தில் மாணவர்களுக்குப் பல வாயில்களைத் திறந்து விடக் கூடியவர்களாய் இருந்துள்ளார்கள். தங்களை விட தங்களுடைய மாணவர்களை உயர்த்தி மகிழ்ந்த பெருமைக்குரியவர்கள். பேரா.கட்டளை அவர்கள் காமராசர் பல்கலைக் கழகத்தில் கழியலாட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்துள்ள இவர் உ.வே.சா. போன்ற பணியை மேற்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் சுவடிக் காப்பகம் அமைப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். ஓலைச்சுவடிகள் குறித்த ஆய்வு மேற்கொள்பவர்கள் கட்டளை ஐயாவை அணுகினால் மிகுந்த பயனுடையதாய் இருக்கும்” என்றார்.

பேரா.இராமச்சந்திரன் தனஞ்செயனை வாழ்த்திப் பேச வந்தார்.

“1987-ல் நாட்டார் வழக்காற்றியல் புலம் தூய சவேரியார் கல்லூரியில் தொடங்கியவுடன் பேரா.லூர்து அவர்கள் துறைத் தலைவர் ஆனார். அப்போது தமிழ்த் துறைக்கும் அவர்தான் துறைத் தலைவர். ஓராண்டு காலம் இருதுறைகளுக்கும் தலைவராகப் பணியாற்றினார். அன்றிருந்தே பேரா.தனஞ்செயன் பணியாற்றி வருகிறார்.

நாட்டார் வழக்காற்றியல் புலம் தூய சவேரியார் கல்லூரியில் உருவானதற்கு பேரா.நா.வானமாமலைக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், நாட்டார் வழக்காற்றியல் குறித்த ஆய்வுகளை அன்றவர் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பேரா.லூர்து அவர்கள் தாம் எழுதிய கட்டுரைகளைத் திருத்தி வாங்க அவரிடம் சென்றார். அவருடைய உரையாடலால், அவரிடம் எடுத்த பயிற்சியால், நாட்டார் வழக்காற்றியல் புலம் சேசு சபை குருக்கள் துணையோடு தூய சவேரியார் கல்லூரியில் உருவானது. சிலர் இதை கொட்டடிக்கிற துறை என்பார்கள். ஆனால், இத்துறை வழக்காறுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதாக இருந்தது. மொழியியல், வழக்காற்றியல், மானிடவியல், பண்பாட்டியல், அமைப்பியல் போன்றவற்றைப் பாடமாக வைத்து சொல்லிக் கொடுத்தது.நெல்லையில் ஒரு நிகழ்வு பேரா.லூர்து அவர்கள் இத்துறைக்கென ஒரு நூலகத்தை உருவாக்குவதில் முனைப்புடன் இருந்தார். ஒருவருக்கு ஏற்படும் சந்தேகத்தை மற்றொருவரிடம் கேட்டு விவாதித்து இருக்கிறோம். அப்போது எங்களிடையே முரண்பாடுகளும் உண்டு. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தறிந்தோம். ஏனெனில், அமைப்பியலோ, மொழியியலோ அவ்வளவு எளிதானதல்ல.

அமெரிக்காவிலிருந்து போர்டு பவுண்டேசன் பண்ட் வந்தது. அதைத் தொடர்ந்து பாளை, கொடைக்கானல், திரிச்சூர் போன்ற இடங்களில் உலகளாவிய பட்டறைகள் நடத்தப்பட்டன. அதே போல பின்லாந்திலிருந்து இங்கு வந்து வகுப்பெடுத்து இருக்கிறார்கள். இக்கூட்டு செயல்பாடுகளுக்குப் பேரா.லூர்து அவர்களின் பங்களிப்பு முக்கியமானது.

1996-ல் பேரா.லூர்து அவர்கள் விட்டுச் சென்றதை, பேரா.தனஞ்செயன் நம்பிக்கையோடு துறைத் தலைவராக இருந்து பணியாற்றி வந்திருக்கிறார். எப்போதும் படிப்பதும் எழுதுவதுமாக இருக்கும் இவர், 32 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். “குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்” என்ற நூலில் சுறாமுள் வழிபாட்டை ஆய்வு செய்துள்ளார். “நிகழ்த்துக் கலைஞர்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் நிகழ்த்துக் கலைஞர்களுக்குரிய பிரச்சனைகளை ஆய்வு செய்திருக்கிறார். அதிலுள்ள பூம் பூம் மாட்டுக்காரர் பற்றிய ஆய்வுக் கட்டுரையை ஏதென்ஸில் வாசித்தளித்துள்ளார். “ஆவணப் படங்களும் கோட்பாடுகளும்” என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

இவரின் பணி நிறைவுக்குப் பின், வருகைதரு பேராசிரியராகப் பணியாற்ற பல்கலைக் கழகம் அழைத்துள்ளது இன்னுமோர் மகிழ்ச்சியான விஷயம்” என்றார்.

தொடர்ந்து, கவிஞர் கல்யாண்ஜி கவிதை வாசிக்க வந்தார்.

நிகழ்ச்சி மிகச்சரியாக ஐந்து மணிக்குத் தொடங்கியதை திருநெல்வேலியில் எப்போதாவது நடக்கும் ஆச்சர்யமாக விளித்தவர், ‘மேலும்’ அமைப்பைப் பாராட்டினார்.நெல்லையில் ஒரு நிகழ்வு “தயவு செய்து எல்லோரும் ‘மேலும்’ என்ற சொல்லை உச்சரித்துப் பாருங்கள். எனக்கு முன் இருக்கிற சிறு குழந்தைக்கு மேலும் ஒரு பிஸ்கட் தேவைப்படலாம். என்னுடைய மனைவிக்கு மேலும் கொஞ்சம் தாமிரபரணித் தண்ணீர் வராதா என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம். என்னைப் போன்ற படைப்பாளிகள் மேலும் ஒரு கவிதை எழுதிவிட மாட்டோமா என்று நினைக்கலாம். இப்போது ‘மேலும்’ என்ற ஒற்றைச் சொல்லோடு இங்கு நிற்கிறேன்.

பேராசிரியர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இடைவெளி உண்டு. அதைக் குறைப்பதில் சிவசு 51 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். நான் அதிகம் வெளியில் செல்லாதவன், மேடைகளில் பேசாதவன். சிவசு, என்னை கை பிடித்து கூட்டிச் செல்கிறார். கைகளைப் பிடித்துச் செல்வது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

கவிதை வாசிப்பு நிகழ்வு மலையாளத்தில் உண்டு. கவிதையை எழுதியவரே வாசிப்பது திருநெல்வேலியில் இதுவே முதல் முறையாக இருக்கலாம். கவிஞர் சுகுமாரன் முன்னால் சற்று கூச்சத்தோடு என் கவிதைகளை வாசிக்கிறேன்.

மல்லிகை பூக்கும், மாம்பூ பூக்கும், தேக்கும் பூக்கும்.

“தேக்கும் பூக்கும்” அவ்வளவு தான் கவிதை.

பெருமாள் நகர் புறநகர்ப் பகுதியில் காலை நடை பயிற்சி செல்லும் போது நெடிய தேக்கு மரங்களைப் பார்க்கிறேன். சுவர்களுக்கு வெளியே தேக்குச் சருகுகள் உதிர்ந்து கிடப்பதைக் காண்கிறேன். முதிர்ந்த தேக்கு இலைச் சருகுகளில் மழைத் துளி விழும் போது எழும் அதிர்வுகள்; தென்னை ஒற்றைக் கிடுகு ஆடும் போது வரும் ஓசை – இவற்றை என்னைப் போன்றவர்கள், சுகுமாரன் போன்றவர்கள் அடுத்த நாள் கவிதையாக எழுதி விடுகிறோம்.

‘தேக்கு’ உறுதிக்குச் சொல்கிறோம்.

“தேக்கும் பூக்கும்” இது இன்னும் நெறைய சொல்கிறது.” என்றவர் தொடர்ந்து அவருடைய கவிதைகளை வாசித்தார். அரங்கம் அமைதியாகக் கேட்டதைக் கண்டு பாராட்டினார்.

இலக்கியங்களின் போக்கு பற்றி கவிஞர் சுகுமாரன் பேசும்போது, “மலையாள இலக்கியத்தை வரலாற்று மாணவனைப் போல ஆய்வு செய்து கூறினார். நவீனத்துவம், பின் நவீனத்துவம், ரசனை சார்ந்தவை, பெண்ணியம் என்று பகுத்துப் பார்த்தார். தகழி சிவசங்கரன் பிள்ளையின் படைப்புகளை மறுமலர்ச்சிக் காலகட்டமாகக் கூறினார். வைக்கம் முகமது பஷீர் தந்த புதுமை மாற எழுத்துக்களையும்; சக்கரியா தந்த புதுமையான நடையையும் குறிப்பிட்டவர், எண்பதுகளில் இருந்து மலையாள இலக்கியங்களில் நவீனத்துவம் வலுவிழந்தது” என்றார்.நெல்லையில் ஒரு நிகழ்வு மீடியாக்களில் உள்ளவர் என்பதால், அது குறித்து சிவசு வினவியதற்கு, “மீடியாக்கள் பற்றிய அடிப்படை அறிவு தமிழ் மீடியாக்களுக்கு இல்லை. மீடியா செயல்பட குறைந்த பட்ச சுதந்திரம் வேண்டும். அது மலையாளத்தில் இருக்கிறது, தமிழில் இல்லை” என்று பதிலுரைத்தார்.

தொடர்ந்து, பேராசிரியர்கள் கட்டளை கைலாசம், தனஞ்செயன் இருவரின் ஏற்புரையுடன் விழா சரியாக 8 மணிக்கு நிறைவுற்றது.

அக இருளகற்றும் பேராசிரியர்களோடும், சமூகத்திலுள்ள அவலங்களையும் அழகியலையும் சுட்டிக்காட்டும் படைப்பாளிகளோடும் எனது ‘புனித வெள்ளி’ முடிந்தது.

அரங்கத்தை விட்டு வெளிவரும் போது, படைப்பாளிகளின் ஏக்கமும் சிலுவைப் பாடுகளின் ஏக்கமும் ஒன்றெனப் பட்டது.

வீடு திரும்பிய போது இன்றைய தியான சிந்தனை நன்றாக இருந்தது என்றாள் என் மனைவி.

நானும் அதையே சொன்னேன்.

* * *    * * *    * * *    * * *    * * *    * * *    * * *    * * *    * * *     * * *    * * *    * * *   * * *   * * *   * * *   * * *

தொடர்புடைய பதிவுகள்:

‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை

பொதிகை அடிவாரத்தில் முஸல் பனி