RSS

பிறப்பு

03 மார்ச்

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

India-Maternal-death

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

பதிவு : 3

உலகில் தோன்றும் ஒரு புதிய உயிர் தன் தாயிடமிருந்து குழந்தை என்றோ, குட்டி என்றோ, புழு என்றோ, பூச்சி என்றோ, முட்டை என்றோ வெளிப்பட்டு இம்மண்ணிற்கு வருகிறது. இதைப் பிறப்பு என்று சொல்கிறோம்.

இது ஒவ்வோர் உயிரினத்திற்கும் கடவுள் அமைத்த விதி முறையின்படி என்றோ அல்லது இயற்கை அமைத்த விதி முறையின்படி என்றோ, இவற்றில் எதில் நமக்கு நம்பிக்கை யுள்ளதோ அதன்படி எவ்வித மாற்றமுமின்றி பிறப்பு நடைபெற்று வருகிறது. இதில் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எவ்வித மருத்துவ வசதியும் செய்து கொள்ளாமல் இயல்பாகப் பிறப்பு என்னும் செயலைச் செய்து கொள்கின்றன. அதனால்தான், “நாய்க்கொரு சூழும் அதற்கோர் மருத்துவமும் நாட்டிலுண்டோ” என்று சித்தர்களில் சிறப்புப் பெற்ற பட்டினத்தார் பாடியுள்ளார். இன்று செல்வந்தர்கள் வீட்டு நாய்களுக்கு மருத்துவம் செய்யப்படுவதை அறிவோம். ஆனால், பட்டினத்தார் வாழ்ந்த காலத்தில் எந்த நாய்க்கும் சரி, விலங்கிற்கும் சரி; நாட்டிலோ காட்டிலோ மருத்துவம் செய்யப்படவில்லை என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

ஆறறிவு படைத்த மனிதன் தன் அறிவால் வாழ்வில் பற்பல மாற்றங்களையும் வசதிகளையும் உண்டு பண்ணிக் கொண்டாற் போல, பிறப்பு சார்ந்தவற்றிலும் காலத்திற் கேற்ப, ஒவ்வோர் இனத்தாரின்(சாதிய) பழக்க வழக்கத்திற் கேற்ப கடைப்பிடிக்கும் முறை மாறுபட்டதாய் இருக்கிறது.

இக்கால நடைமுறை:

இக்காலத்தில் பெண்கள் கருத்தரித்ததிலிருந்து மருத்துவமனையோடு தொடர்பு உடையவர்களாய் இருக்கிறார்கள். மருத்துவரிடம் அடிக்கடி சென்று தன் உடலையும், கருவின் நிலைமையையும் மின் கருவிகள் மூலம் சோதித்து அவர் கூறும் அறிவுரையின்படி தன் உணவு, உடை, அன்றாட வாழ்க்கை முறை போன்றவற்றை மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். வீட்டு வேலைகளைச் செய்ய அதிகமான மின் கருவிகள் இருப்பதால் வீட்டில் பெண்களுக்குக் கடினமான வேலை எதுவும் இருப்பதில்லை. மேலும், இக்காலப் பெண்கள் ஓரிரு குழந்தைகளே பெற்றுக் கொள்வதால், கர்ப்பிணிப் பெண்களை வீட்டிலுள்ளோர் எந்த வேலையும் ஏவாமல் மிகப் பக்குவமாகப் பார்த்துக் கொள்கின்றனர்.

குழந்தை பிரசவிக்கும் நாள் நெருங்கும் போது மருத்துவமனை சென்று சுகப்பிரசவமாகவோ அல்லது அறுவை சிகிச்சை செய்தோ குழந்தையைப் பெற்றெடுத்துக் கொள்கின்றனர். குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் தாயும் சேயும் தங்களுக்கென மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள அறையில் முகப் பவுடர் போன்றவை போட்டு சுத்தமான மெத்தையிலே சொகுசாகப் படுத்து இருக்கிறார்கள். கணவர், உறவினர் உட்பட பலரும் வந்து பார்த்துச் செல்கிறார்கள். இவ்வாறு வருபவர்கள் பிறந்த குழந்தைக்கு சட்டை, ஜட்டி, கைகால் உறை, குல்லா, பவுடர், சோப்பு போன்ற பொருட்கள் அடங்கியவற்றை கொடுத்து பார்த்துச் செல்கின்றனர்.

ஓய்வற்ற கர்ப்பிணிப் பெண்கள்:

மின்சாரத்தால் உண்டான வசதிகளும், மருத்துவமனைகளும், போக்குவரத்து வசதியும், கல்வி வளர்ச்சியும் இல்லாத அக்காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட முறை முற்றிலும் மாறுபட்டவை. இன்னும் கூறுவதென்றால், அக்காலத்தில் எல்லாப் பிரசவங்களும் வீட்டில்தான் நடைபெற்றன. கருத்தரித்துள்ள பெண்களுக்கென்று எவ்விதமான சிறப்புக் கவனிப்பும் கிடையாது. மகப்பேறு நடக்கும் வரை வீட்டில் அவர்கள் தான் உணவு சமைப்பர். அதற்காக அம்மி அரைத்தல், உரலில் சோளம், கம்பு போன்ற தானியங்களை உலக்கை கொண்டு குற்றுதல்; திருகை உரலில் பருப்பு உடைத்தல், மாவு அரைத்தல்; மேலும், கிணற்றிலிருந்து வாளி மூலம் நீர் இறைத்து நிரப்பிய பானையை தலையிலும், குடத்தை இடுப்பிலும், வாளியைக் கையிலுமாகப் பிடித்து வருவர். இவை போக காட்டு வேலைக்குச் செல்லுதல் விறகு சேகரித்தல் என்று பற்பல வேலைகள் செய்வார்கள். அவர்களின் உணவோ கூழ் மற்றும் கஞ்சி போன்றவைதான்.

வளைகாப்பு:

வளைகாப்பு என்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாம் மாதத்தில் கணவர் வீட்டில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சி ஆகும். தமிழர்கள் நலம் தரும் பல அறிவியல் கருத்துக்களை சாத்திரம் என்றும், சடங்குகள் என்றும் கூறி நம்மை தவறாமல் செய்ய வைத்துள்ளனர். அவ்வாறு உள்ளவற்றுள் இதுவும் ஒன்று.

ஒரு பெண்ணுள் நிகழும் கருவளர்ச்சி சார்பான ஆய்வு, ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் கரு, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஏழாவது மாதத்தில் முழு வடிவம் அடைவதோடு, காது கேட்கும் திறனையும் பெறுகிறது என்கிறது. இந்த அறிவியல் நுட்பத்தை அறிந்த நம் முன்னோர்கள், சிறு குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பி மகிழச் செய்வது போல், வயிற்றினுள் இருக்கும் குழந்தையும் ஒலி கேட்டு மகிழ வேண்டும் என்பதற்காக ஏழாம் மாதத்தில் வளைகாப்பு என்னும் இந்நிகழ்ச்சி மூலம் கர்ப்பிணிப் பெண்ணின் இரு கைகளிலும் பீங்கான்(கண்ணாடி) வளையல்களை நிறைய அணிவிக்கின்றனர். கருவுற்ற பெண் கையை அசைக்கும் போதெல்லாம் ஒலி எழும்பும். அதனை வயிற்றினுள் இருக்கும் குழந்தை கேட்கும் என்று கூறப்படுகிறது.

இக்கருத்து அமைந்த காட்சி ரங்காராவ், அஞ்சலிதேவி நடித்த ‘பக்த பிரகலாதா’ என்னும் திரைப்படத்தில் வருகிறது. ‘தன்னையே கடவுளாக நாட்டு மக்கள் வணங்க வேண்டும்; நாராயணனை வணங்குதல் கூடாது’ என்று ஆணை பிறப்பித்து ஆட்சி செய்தான் இரணியகசிபு. அவன் மனைவிக்கு, நாரதர் ஸ்ரீநாராயணனைப் பற்றிய மந்திரங்களை உபதேசம் செய்கிறார். இதை, ‘உம்…உம்…’என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே தூங்கி விடுகிறாள். அப்போது அவள் வயிற்றில் இருந்த பிரகலாதன், நாரதர் சொல்வதற்குப் பதில் மொழியாக, ‘உம்…உம்…’ என்று சொல்வதாக அப்படத்தில் காட்சி அமைந்துள்ளது. இது புராணக் கதை என்றாலும் கூட இதிலுள்ள கருத்து வளைகாப்பு நிகழ்வுக்குத் தொடர்புடையதாக இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

மருத்துவச்சி:grandmotherமகப்பேறு சமயத்தில் மருத்துவர், செவிலி என்று இக்காலத்தில் இருப்பது போல அக்காலத்தில் இருந்தவர் ‘மருத்துவச்சி’ என்பவராவர். இவர் இதற்கென்று தனியான படிப்பு எதுவும் படிக்காதவர். தன் அனுபவங்களைக் கொண்டே இவர் அன்று நடைமுறையிலிருந்த பழக்க வழக்கத்தின்படி பிரசவம் பார்ப்பார். இவர் பெரும்பாலும் அந்தந்த இனத்திற்கு (சாதிக்கு) என்று இருக்கும் முடி திருத்தும் தொழிலாளி வீட்டுப் பெண்ணாக யிருப்பார். அனுபவம் மிக்க இவரில்லாத நேரத்திலோ, அல்லது இவர் தேவையில்லை என்று நினைத்தாலோ தங்கள் உறவினரில் பல குழந்தைகளைப் பெற்று அனுபவமுள்ளவர், கர்ப்பிணிப் பெண்ணுடன் இருந்து மகப்பேறு காரியங்களைப் பார்த்துக் கொள்வார். இவர் குழந்தை பிறந்த உடன் தொப்பூழ் கொடியை வெட்டுவது, தாயுக்கும் சேயுக்கும் செய்ய வேண்டியவற்றை செய்வது, தாயின் உடலிலிருந்து வெளிப்பட்ட தேவையற்ற கழிவுப் பொருட்களைத் தன் வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் இடையிலுள்ள கடவு என்று சொல்லப்படும் சந்துகளில் புதைப்பது போன்ற காரியங்களைச் செய்வார். அதன் பின் பத்து நாட்களுக்குத் தாயுக்கும் சேயுக்கும் செய்ய வேண்டிய உதவிகளை உடன் இருந்து செய்வார்.

சில்லாட்டை நோய்:

இது ஒரு கொடிய நோய். தொப்பூழ் கொடியைப் பாதுகாப்பற்ற முறையில் வெட்டுவதால், ஏற்படுகிறது. பிளேடு அதிகம் பயன்பாட்டிற்கு வராத காலமாக அன்று இருந்ததால், காட்டில் கதிர் அறுக்கப் பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு தொப்பூழ் கொடியை வெட்டுவர். இக்கத்தியிலுள்ள இரும்புத் துரு செப்டிக் ஆகி, ‘சில்லாட்டை நோய்’ ஏற்பட்டு விடும். மாட்டுச் சாணத்தாலும் ஏற்படுவதாகக் கூறுவர். இதனால் பிறந்த குழந்தை இடை விடாமல் அழுதும், பால் குடியாமல் இருந்தும் எட்டு நாளில் இறந்து போகும். அதாவது டெட்டனஸ் (Tetanus) நோயையே நம் மக்கள் இவ்வாறு அறிந்துள்ளனர். மருத்துவம் தெரியாத அந்நாளில் இந்நோய்க்கு செய்வதறியாது பனை மரத்திலுள்ள சில்லாட்டை என்ற வலைபின்னல் போன்ற பகுதியை குழந்தையின் அருகில் வைப்பர். இதனால் எந்தப் பயனும் இருக்காது.

இவ்வாறு, நோய் குறித்தும் மருத்துவம் குறித்தும் ஏதும் அறியாத அக்காலத்தில் நம் முன்னோர் இழந்த தாயும் சேயும் எக்கச்சக்கம். ஆனால், இன்றைய நவீன காலத்தில், ‘இந்தியாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணிப் பெண் இறக்கிறாள்’ என்று கூறும் புள்ளி விபரம்தான் மிகுந்த வேதனைக்குரியதாய் உள்ளது.

பதிவு 4 : பிறப்பு: நடைமுறைகள் – 1

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: