RSS

Monthly Archives: பிப்ரவரி 2013

பூமணியின் ‘அஞ்ஞாடி…’

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

novel_image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை காரணம் காட்டி தினம் தினம் பள்ளியில் ஆயத்தத் தேர்வுகளை எழுதிக் குமித்துக் கொண்டிருந்த காலம் அது. மன ரீதியாக கடுமையான உளைச்சலுக்கு உண்டான காலகட்டமது. முதன்முதலாக மன அழுத்தம் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்ட நேரம். அன்றைக்கும் ஒரு தேர்வு இருந்தது. முந்தின நாள் இரவு முழுவதும் வழக்கம்போல் விழித்திருக்கும் திட்டத்துடன் புத்தகத்தை எடுத்தேன். வீட்டிற்கு வடக்கே தூரத்தில் உள்ள கோயிலின் கொடை விழாவிற்காக ஒரு ஒலிபெருக்கி எங்கள் வீட்டருகில் கட்டியிருந்தார்கள். ஏதோ கூத்து தொடங்கியது. எவ்வளவோ முயன்று பார்த்தும் அந்த சத்தத்தை மீறி படிப்பதில் கவனம் போகவில்லை. புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அந்தக் குரலுக்கு காதுகொடுத்தேன். என்ன வகையான கூத்து அது என்பது தெரியவில்லை. ஒரு கதை மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டிருந்தது.

மனிதனைப்பற்றி, தெய்வத்தைப்பற்றி, மனிதர்கள் தெய்வமானதைப் பற்றி என பெரும் பாய்ச்சலுடன் கதை நகர்ந்தது. கதைக்குள் வரும் ஒரு சின்ன விஷயத்தை விளக்க இன்னொருகதை பிறக்கும். அது இன்னொரு கதையை உருவாக்கும். மீண்டும் முதல் கதையில் விட்ட இடத்திற்கே வந்து அக்கதை தொடரும். இதே பாணியில் அந்தக் கூத்து தொடர்ந்து பாடலும் வசனமுமாக ஓடிக்கொண்டிருந்தது. அதிகாலையில் ஒலிபெருக்கி
மெளனமான பின் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு மீண்டும் உடம்பிற்குள் நான் வந்து குடியேறியது போன்ற பிரமை. கதைகள் பேய்களாய் மாறி உடம்பை ஆட்டிப்படைத்துவிட்டு நீங்கியது போன்ற ஒரு பெரும் சோர்வையும் மனம் உணர்ந்தது.

அதே போன்ற ஒரு உணர்வு பல வருடங்களுக்குப் பிறகு ‘அஞ்ஞாடி…’ நாவலை படித்து முடித்ததும் தோன்றியது. அம்மாவைக் குறிக்கும் அக்காலச் சொல் ‘அஞ்ஞ’. அஞ்ஞாடி.. என்பது அம்மாடி.. என்ற அர்த்தத்தில் வருவது.

22 படலங்கள் கொண்டது அஞ்ஞாடி. இந்த 1050 பக்க நாவல் முதலில் மலைப்பை ஏற்படுத்தும். ஆனால் படித்து முடித்தபின் இத்துனூண்டு பொந்திற்குள் ஆளுயரப் பாம்பு சுருண்டு கிடப்பதைப் போல, வெறும் ஆயிரம் பக்கத்திற்குள்தானா இவ்வளவு விஷயங்கள் என்ற வியப்பு தோன்றும். ஒரு குறிப்பிட்ட கரிசல் பிரதேசத்தின் வரலாறு என்ற ஒரு பெரிய பாம்பு, அதற்குச் சமமான அளவிலான பூமணியின் புனைவு அம்சம் என்ற ஒரு பாம்பு, தேச வரலாறு என்ற ஒரு குட்டிப் பாம்பு. இம்மூன்று பாம்புகளும் பின்னிப்பிணைந்து சுருண்டு கிடக்கும் சின்னப் பொந்துதான் இந்த அஞ்ஞாடி.

நாவலின் மையக் கதை என்பது கலிங்களைச் சேர்ந்த ஆண்டிக் குடும்பன், மாரி என்ற வண்ணான், கழுகுமலை பெரிய நாடார் ஆகிய மூவரைப் பற்றியும் அவர்களின் தலைமுறைகள் பற்றியதும்தான். இந்த மையக் கதையின் பின்புலத்தில் தென்கரிசல் பூமிகளான கழுகுமலை வரலாறும், சிவகாசி வரலாறும் விரிவாக வருகின்றது. குறிப்பாகச் சொல்வதென்றால் கழுகுமலை நாடார்கள் பல்லக்கு ஊர்வல உரிமைக்காக நடத்திய போராட்டங்களும், அதற்காக கிறித்தவம் தழுவியதும், சிவகாசி நாடர்களின் மீது நடந்த பெரும் கொள்ளைச் சம்பவமும் மிக விரிவாக நம்முன் வைக்கப்படுகிறது.

இதற்கிடையில் தெற்கில் அமணர் வரலாறு, அப்பர் மற்றும் பிள்ளையாண்டர் வரலாறு, எட்டயபுரம் வம்ச வரலாறு, காமநாயக்கன்பட்டிக்கு கிறித்தவம் வந்த கதை, கான்சாகிப் என்ற மருதநாயகத்தின் கதை, பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன், ஊமைத்துரை மற்றும் சிவகங்கை மருது சகோதரர்கள் ஆகியோர்களின் வரலாறு, வட நெல்லை கரிசல் பிரதேசங்களில் கிறித்தவம் தழைக்க உழைத்தவர்களின் கதை என வெவ்வேறு காலகட்டங்கள் நம்முன் அணிவகுத்துச் செல்கின்றது. முத்துக்குட்டிசாமி என அழைக்கப்பட்ட அய்யா வைகுண்டர் வரலாற்றையும் கொஞ்சம் தொட்டுச் செல்கிறார் பூமணி. முடிவை நோக்கி நாவல் பயணிக்கும் போது இந்தியச் சுதந்திர வரலாறு கதைகளாக வந்துபோகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கும் நாவல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட காலத்தோடு முடிகின்றது.

நாவலின் முதன்மை அம்சமாக எனக்குப் பட்டது பூமணியின் மொழிநடை கொள்ளும் வெவ்வேறு ரூபங்கள்தான். ஏசலும், சொலவடைகளும், தெம்மாங்கும் பூடகமற்ற நேரடியான பேச்சும் ததும்பி வழியும் பூமணிக்கே உரிய தனித்த கரிசல் மொழி நடை ஒருவிதம். கழுகுமலை பூர்வீகத்தையும், சிவகாசியின் பூர்வீகக் கதையையும் சொல்லத் தொடங்கும் போது இந்த கரிசல் நடை திடீரென உருமாறி ஒரு வகை சுத்தத் தமிழ் நடைக்குத் தாவுகிறது. இந்தப் பகுதிகளனைத்தும் மூச்சு விடாமல் படித்தது போன்றதொரு அனுபவத்தைக் கொடுத்தது. இந்நடைக்கு ஒரு சின்ன உதாரணமிது:

“குடபுலம் செல்லும் கடைமகன் இடர் நிறைந்த தொடர் மழைக் காடுகளில் வழி மயங்கித் தவிக்கிறான்”

ஐவகை நிலம் தேடிச் செல்லும் ஐவருள் கடைசி ஆள் செல்லும் குறிஞ்சி நிலம் பற்றிய படலத்தில் தொடக்க வரி இது.

பூர்வீகம் சொல்லி முடித்தபின் அப்படியே வரலாற்றைச் சொல்லும் சாதாரண உரைநடை போல மாற்றம்கொண்டு எப்போது மீண்டும் கரிசல் மொழிக்கு வந்து சேர்ந்தது என்பது தெரியாவண்ணம் ஒரு மந்திர மொழி நடை கலந்து வருகின்றது.

கொடுமையான பஞ்சம் நிலவும் காலம் நாவலில் விவரிக்கப்பட்டுள்ள விதமும், சிவகாசி கொள்ளையின் போது உயிர்கள் வேட்டையாடப்படும் சூழலை விளக்கும் விதமும் நம்மை சில்லிடச் செய்பவை. மொழியின் கூர்மையான கரங்கள் பஞ்சம் நிலவும் பரப்பில் ஊடுருவித் துளைத்துச் செல்கிறது. பாடைகளைச் சுமந்து அலுப்பதும், தான் சுமந்த பாடையில் தானே செல்ல நேர்வதும், பாவநாசம் சென்று பஞ்சம் பிழைத்துக் கொண்டு வந்த தானியங்களை நாசூக்காய் கொள்ளையடிக்கும் பெரிய மனுஷனையும் பூமணி தன் மொழியால் பிடித்துக்
கட்டி நம்முன் காட்சிக்குத் தொங்கவிடுகிறார்.

செல்லக் குடும்பனும் சுப்பக் குடும்பனும் மீனாட்சி கோயிலுக்குள் சித்திரங்களைப் பார்க்க நுழைந்த கதையில் வெளிப்படும் வேடிக்கை தொனியும் முக்கியமான அம்சம். பல இடங்களில் இத்தன்மை வருகின்றது.

குறிப்பாக சர்ரியலிசத் தன்மை கொண்ட நாவலின் பகுதிகளான கனவுகளும், பேய்களின் உரையாடல்களும், கோடங்கிப் பாடலும், கழுதைகள், எறும்புகள் மற்றும் பட்சிகளின் பேச்சுக்களும், அரவக் கருடனார் உலா என்ற படலமும் மொழியின் உச்சங்களைத் தொட்டு நம்மை கிரங்கடிக்க வைக்கின்றன.

ஆண்டிக் குடும்பன் தன் நண்பன் மாரி வண்ணானைப் பற்றி காணும் கனவு, கொடுமையான பஞ்ச காலத்தில் மருதன் காணும் கனவு, வேதமுத்து நாடார் காணும் பைபிள் கதைகளின் கனவு, பள்ளர்குடி மூக்காயி காணும் கனவு என நிறைய கனவுகள் இடையில் வந்து போகின்றன. இந்தக் கனவுகள் கதைமாந்தர்களின் உளவியலையும், சம்பவங்களையும் நம்முன் வெட்டிப் போட்டுக் காட்சிப்படுத்தி கதையுடனான நம் அனுபவத்தை மெருகேற்றி
விடுகின்கிறது.

எனக்கு மிகப்பிடித்த கனவு கழுகுமலை பள்ளர்குடியில் வசிக்கும் மூக்காயி காணும் கனவுதான். பங்குனி உத்திரத் திருநாளன்று கழுகுமலை கலவரத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எட்டயபுரத்து சமீன் மேனேஜர் கொலை செய்யப்படுகிறார். கேட்பாரற்று முருகனின் தேர் வீதியில் கிடக்கிறது. எதிரில் கிறித்தவ நாடார்களின் கோயில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் மூக்காயி கனவு காண்கிறாள். எரிந்து கொண்டிருக்கும் வேதக் கோவிலை விட்டு மேரி மாதா வெளியேறி மூக்காயி வீட்டில் தஞ்சம் அடைகிறாள். மூக்காயிக்கு சந்தோசம் சொல்லி மாளவில்லை. அவளால் கோவிலுக்குள் வந்து பார்க்கமுடியாத மாதா அவளுடைய வீட்டிற்கே வந்த ஆனந்தத்தை எல்லோருக்கும் சொல்கிறாள். அமைதியான இடம் தேடி அலைவதாய் மேரி மாதா சொல்ல மூக்காயும் இன்னும் சிலரும் மாதாவை யார் கண்ணிலும் படாமல் மலையைச் சுற்றி அனுப்பி வைக்கிறார்கள். அந்த வழியில் ஆம்பலூரணிக்கருகில் உள்ள மண்டபத்தில் ஒரு கூட்டம் இருக்கின்றது. அக்கூட்டத்தில் தேரை விட்டு இறங்கி வந்த முருகனும் வள்ளியும் நிற்கிறார்கள். முருகனைப் பார்த்ததும் மாதாவுக்கு தன் மகனைப் பார்த்தது போன்ற சந்தோசம். முருகன் தன் வாகனமான மயிலை மாதாவுக்குக் கொடுத்து பத்திரமாக வேறு ஊருக்கு அனுப்பி வைக்கிறான்.

வேதமுத்து நாடாரின் கனவில் கழுகுமலையின் மலையில் நோவாவின் கதை நிகழ்கிறது. மலையை சுற்றிய பகுதிகளில் ஏசு புதுமைகள் செய்கிறார். மலையின் சமணக் குகை இருக்கும் இடம் யூத மதகுருக்களின் தலைமைச் சங்கமாக இருக்கின்றது. மலையடிவார மரத்தில் யூதாஸ் தற்கொலை செய்கிறான். பைபிள் கதைகள் கழுகுமலையில் நிகழ்கின்றன.

வண்ணான் மாரி மிகச் சிறந்த கதை சொல்லி. வேத்து சாதிகளைச் சேர்ந்த மாரிக்கும் ஆண்டிக்கும் உள்ள நட்பின் ஆதாரம் மாரி சொல்லும் கதைகள்தான். அவன் சொல்லும் கதைகள் எங்கோ யாருக்கோ நடக்கும் கதைகளல்ல. தன்னை ஒரு பாத்திரமாக வைத்தே எல்லா கதைகளையும் சொல்கிறான். அவற்றை கதைகளாக அல்லாமல் நடந்த சம்பவம் போலவே சொல்கிறான். மரணத்திற்கு வெகு அருகில் நிற்கும் போது கூட கிணற்றில் சந்தித்த
முனியசாமி அனுப்பிய முனிப் பேய்களைப் பற்றி கதையாகச் சொல்கிறான். ஆண்டியின் கனவில் வரும் இறந்து போன மாரி கதைகளோடு ஆமையின் மீதேறி வருகிறான்.

ஆண்டி, மாரி இருவரின் நட்பும் தலைமுறைகள் தாண்டி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆண்டிக் குடும்பன்தான் மொத்த நாவலின் மையப் பாத்திரம். வரலாற்றின் ஈவிரக்கமற்ற பக்கங்களை படித்துக் கொண்டிருக்கும் போது ஆண்டியின் வழியாக இரக்கத்தையும் அன்பையும் தரிசித்துக் கொண்டே செல்கின்றோம். நாவலில் விரவியிருக்கும் உண்மை வரலாறின் கசப்பிற்கு மாற்று அல்லது தீர்வு என்றே ஆண்டியின்
ஆளுமையைச் சொல்லலாம்.

இந்நாவல் எதைத் திரும்பத் திரும்ப பேசுகிறது எனக் கவனித்தால் ஒரு விஷயம் தனித்துத் தெரிந்து கொண்டே இருக்கிறது. அது ஆண்டி மனிதர்களை கையாளும் விதம்தான். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதன் மீதும் கொள்ளும் நேசம். இந்த நாவல் பேசும் முதன்மையான விஷயம் இதுதான் என்பது என் எண்ணம். விரிவாக வியாபித்திருக்கும் பிரமாண்டமான வரலாறுகள் கூட இரண்டாம் பட்சமாகத்தான் படுகிறது.

பூமணி புனைந்து காட்டும் இடங்களிலும் இந்த மனித நேயம்தான் நிரம்பிக் கிடக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி போரில் நுட்பமாகக் காட்டப்படும் வெள்ளை அதிகாரியின் கருணை மனது, சிவகாசி கொள்ளையின்போது மறவர்-நாடார் பகை கொழுந்து விட்டு எரியும் போது சோலைத் தேவர் தங்கையா நாடார் குடும்பத்துக்கு பாதுகாப்பாய் பக்க பலமாய் இருப்பது, மருத்துவச்சியாக மாறும் நெத்திலி வேலம்மா என பல இடங்களைச் சொல்லலாம்.

நாவலின் பிற்பகுதிகளில் இந்த மனிதனைக் கையாளும் வித்தை தெரியாதவர்கள் அடையும் வீழ்ச்சிதான் முக்கியமாகப் பேசப்படுகிறது. வாழ்க்கை முழுவதையுமே கொண்டாட்டமாய் வாழும் ஆண்டி வம்சத்துக் கோயிந்தன் வீட்டில் ஏற்படும் சின்ன முகச் சுழிப்பினால் வீட்டை விட்டு வெளியேறி எங்கோ சென்று மடிகிறான். படித்து முன்னேறும் வண்ணான் மாரியின் வம்சத்தைச் சேர்ந்த மாரிமுத்து தன் தாயின் உறவைத் துண்டிக்கிறான். முதல் மனைவியை பேதலிக்க விடும் சக்கரை நாடார் தன் சொந்த ரத்தத்தாலேயே மனதுடைந்து வீழ்கிறார். உறவின் சிக்கல்களுக்குள் தவித்து தப்பி ஓடும் சுந்தர நாயக்கர் தனித்துப் புழுங்கி சாமியாராய் செத்து மடிகிறார்.

ஒட்டுமொத்த நாவலில் எனக்கு மிகப் பிடித்த பகுதி கருத்தையன் மற்றும் வீரம்மாவின் கதை. வீரம்மா ஆண்டியின் மகள். கருத்தையனைக் கண்டு காதல் மிகுந்து அவனைத் திருமணம் செய்து வாழ்கிறாள். கருத்தையன் கூட்டம் சேர்த்துக் கொண்டு காடுகளில் வாழ்ந்து திரியும் வீரன். ஊரைக் காக்கும் பெரிய சண்டியர். எதிரிகளைச் சம்பாதித்து வாழ்பவன். எதிரிகளால் அவனுக்கு சம்பவிக்கும் மரணம் நாவலில் சொல்லப்படும் விதம் அற்புதமான உத்தி. அந்த இடத்தில் வரும் கோடங்கிப் பாடல் அற்புதமானது.கருத்தையன் தெய்வமாவது. அவனும்
அவன் மனைவி வீரம்மா மற்றும் அவனது கூட்டாளி நொண்டியன் ஆகியோர் முனிப்பேய்களாய் மாறி கரடுகளுக்குள் வாழ்வது என கருத்தையன் வரும் படலங்கள் அத்தனையும் கிறங்கடிக்கும் கதைகள்.

சுதந்திரம் கிடைக்கும் வரலாறு, அதை ஒட்டி நிகழும் பிரிவினை வன்முறைகள் ஆகியவற்றை சொல்லும் பகுதியும் பூமணியின் மொழிச் சாதுர்யம் வெளிப்படும் இடங்களாகும். விடுதலையைப் பற்றி சொல்லும் போது

“வெள்ளைத் துரைக்கோ நெருப்புத் துண்டுகளைக் கைமாற்றிவிட்ட ஆசுவாசம். ஊதிஊதி வலியைத் தணித்துக்கொண்டார்” என வருகின்றது.

இந்தப் பகுதிகளில் வரும் தலைவர்களின் பெயர்கள் சொல்லப்படுவதில்லை. அடையாளங்கள் மட்டுமே சொல்லப்படுகின்றன. நேருவின் சட்டை ரோஜா பற்றி இப்படி சொல்லப்படுகிறது:

“ஒரு வேளை செடிக்கு ரத்த நீர் பாய்ந்த செழிப்பில் பூத்ததாக இருக்கலாம்”.

இந்த விடுதலைக் கதை காந்தி அந்த நாளன்று கொண்டிருந்த மனநிலையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இடி விழுந்து கருகிய பனையை அறுக்கும் மனிதர்கள் குறியீடாக இங்கு காட்டப்படுகிறார்கள்.

சுத்துப்பட்டி ஊர்களின் வண்ணான் குடிகளின் வம்ச பட்டியல் பைபிள் பாணியில் அடுக்கப்படுகின்றன. நாவலின் முற்பகுதியில் மாரி தன் தலைமுறைகள் தழைக்க வேண்டுமென வெளிப்படுத்தும் ஆசை நிறைவேறுகிறது. இறந்து போய் பேயாக இருக்கும் ஆண்டி, அவன் மனைவி கருப்பி, பேத்தி வள்ளி ஆகியோர் தங்கள் தலைமுறைகள் பற்றி பேசி மாய்கிறார்கள். ஆண்டியின் பதினாறாம் நாள் காரியத்தன்று பந்தி முடிந்தவுடன் இப்படி ஒரு வரி வரும்:

“ஒரு வழியாக ஆண்டி எல்லா வயிறுகளையும் நிரப்பிவிட்டான்”

என்றைக்கோ வரப்போகும் தலைமுறைகளுக்காய் இன்றைக்கு பாடுபட்டு, சக மனிதர்களோடு உறவு கொண்டாடி வாழ்ந்து மடியும் ஆண்டிக் குடும்பனைப் பற்றி பூமணி சொல்லும் இந்த வார்த்தைகள் உள்ளுக்குள் அர்த்தங்கள் பலவற்றை கொண்டுள்ளது. அந்த ‘எல்லா வயிறுகளையும்’ என்பது அஞ்ஞாடி நாவலை வாசிக்கும் வாசகனையும் சேர்த்துத்தான்.

இந்நாவல் பல காலகட்டங்களின் கதை. பல ஊர்களின் கதை. பல சாதிக் குழுக்களின் கதை. பல தலைமுறைகளின் கதை. மதங்களைப் பற்றிய கதை. பலவிதமான மனிதர்களின் கதை. மனிதப் பிணக்குகளின் கதை. மனிதர்கள் தெய்வங்களாவதைப் பற்றிய கதை. மனிதர்கள் பேய்களாவதைப் பற்றிய கதை. மனிதர்கள் மனிதர்களாவதைப் பற்றிய கதை. கதைகளைப் பற்றிய கதை. பெருங்கனவுகள் பற்றிய கதை. மிகச் சின்ன கரிசல் பிரதேசத்தின் மிகப் பெருங்கதை.

இவ்வளவு பெரிய நாவலுக்குப் பின்னுள்ள பூமணியின் உழைப்பும் க்ரியா பதிப்பகத்தாரின் உழைப்பும் மலைக்க வைக்கின்றன.

* * *

அஞ்ஞாடி படங்கள்

பூமணியின் ‘பிறகு’

 

மயக்குறு மக்கட் செல்வம்!

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

மயக்குறு மக்கட் செல்வம்

(புதிதாகப் படிப்பவர்கள் “முதல் பதிவில்” இருந்து படிக்கவும்.)

பதிவு : 2

உலகில் வாழும் ஒவ்வோர் உயிரினமும் தனது இனப் பெருக்கத்தின் மூலம் அதன் இனத்தை இவ்வுலகிற்குத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. அப்படி வரும் எல்லா உயிரினங்களும் பிறப்பு அல்லது தோற்றம் என்று சொல்லக் கூடிய ஆரம்பமும்; இறப்பு அல்லது மறைவு என்று சொல்லக் கூடிய முடிவும் கொண்டுள்ளது. இந்த பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டு மரணத்தை நோக்கி நகர்தலின் காலத்தை ‘வாழ்வு அல்லது வாழ்க்கை’ என்கிறோம்.

இம்முறையே உலகில் தோன்றி மறையும் உயிரினங்களை அதன் செயல்பாடு மற்றும் அறிவு அடிப்படையில் பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் கீழ்க்காணும் முறையில் ஆறு பிரிவாகப் பிரித்துள்ளார் தொல்காப்பியர்.

             “புல்லும் மரனும் ஓர் அறிவினவே

              பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே;

              நந்தும் முரளும் ஈர் அறிவினவே

              பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே;

              சிதலும் எறும்பும் மூ அறிவினவே

              பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே;

              வண்டும் தும்பியும் நான்கு அறிவினவே

              பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே;

              மாவும் மாக்களும் ஐ அறிவினவே

              பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே;

              மக்கள் தாமே ஆறு அறிவுயிரே

              பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (தொல்.நூற்பா:1527-1532)

இதில் தாவரங்கள் தவிர, இடம் விட்டு இடம் நகரும் உயிரினங்கள் தன் தாய் அல்லது பெற்றோரின் பராமரிப்பின் கீழ் வளர்ந்து, யாரையும் எதிர் பாராமல் சுயமாக வாழக்கூடிய நிலையை அடைகின்றன. ஒவ்வோர் உயிரினமும் இந்நிலையை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு ஆகிறது. இந்தக் கால அளவு மனித குலத்தைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு சில வாரங்களோ, மாதங்களோ அல்லது ஓரிரு ஆண்டுகளோ ஆகின்றன. அவ்வாறு அவை தன் தாயுடன் இணைந்து வாழும் வாழ்வு மிகக் குறுகிய காலமாக இருப்பதாலும், அதற்கமைந்த அறிவினாலும் தாய்-சேய் உறவும் விரைவில் முடிந்து, அதன்பின் ஒன்றோடொன்று தொடர்பற்றதாகி விடுகிறது. ஆனால், மனித வாழ்வில் தாய் தந்தையின் பராமரிப்பின் கீழ் வாழும் காலம் சுமார் பதினைந்து முதல் பதினெட்டு ஆண்டுகள் வரை நீண்டு இருக்கிறது. இதனால் இவர்களிடையே ஏற்படும் பாசப் பிணைப்பு வலுவாகி இறுதி வரை இணைந்து இருக்கிறது. இக்கருத்தை வலியுறுத்தும்,

              “கூட்டிலே குஞ்சு பறக்க நினைத்தால்

               குருவியின் சொந்தம் தீருமடா

               ஆட்டுலேகுட்டி ஊட்ட மறந்தால்

               அதோட சொந்தம் மாறுமடா – காலை

                நீட்டியே வைத்து நெருப்பிடும் போது

                நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்

                காட்டிய ஒரு பிடி வாய்க்கரிசியிலே

                கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா” (படம்:பாசவலை, ஆண்டு: 1956)

என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகளை இவ்விடத்தில் நினைத்தல் பொருத்தமானதாகும்.

‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’, ‘கழுதையும்கூட குட்டியில் அழகு’ என்பதற்கிணங்க மனித குலத்தில் சிறு குழந்தைப் பருவம் மிக மகிழ்வு தரும் பருவமாகும். இப்பருவத்திலுள்ள சிறு குழந்தைகள் உருளுவதும் புரளுவதும், தட்டுத் தடுமாறி நடப்பதும்; சின்னஞ்சிறு கைகால்களை ஆட்டி ஆட்டி, ஆ…ஊ… வென ஒலி எழுப்புவதும், மழலை மொழியில் பேசுவதும் – அவற்றைக் காணும் கேட்கும் பெற்றோருக்கு மட்டுமின்றி, மற்றோருக்கும் கூட பேருவகை தருவதாக அமைகிறது. இதனால்தான், திருவள்ளுவரும் திருக்குறளில் ‘மக்கட்பேறு’ என ஓர் அதிகாரம்(அதி.7) அமைத்து அதில்,

              “அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

               சிறுகை அளாவிய கூழ்” (குறள்:64) என்றும்,

              “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்(று)அவர்

               சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (குறள்:65) என்றும்,

              “குழலினிது; யாழினிது என்பர்தம் மக்கள்

               மழலைச்சொல் கேளா தவர்” (குறள்:66) என்றும்

குழந்தைகளின் உயர்வை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். எனவேதான், எவ்வளவு பெரிய செல்வந்தராகவோ, ஏன் அரசராக இருந்தாலும் கூட குழந்தைப் பேறு இல்லாத வாழ்வு குறைவுபட்ட வாழ்வென்றும், பயனற்ற வாழ்வென்றும் கூறுவர். இக்கருத்தை சங்ககாலத்தில் வாழ்ந்த பாண்டியன் அறிவுடை நம்பி எழுதிய,

              “படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும்

               உடைப் பெருஞ் செல்வராயினும் இடைப்படக்

               குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

               இட்டுந் தொட்டுங் கவ்வியும் துழந்தும்

               நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்

               மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

               பயக்குறை யில்லைத் தாம் வாழுநாளே” (புறம்.188)

என்னும் புறப்பாடல் மூலம் அறியலாம். ஆகவே, பெற்றோர்கள் தம் பிள்ளைகளை செல்வங்களிலெல்லாம் உயர்ந்த செல்வமாகக் கருதுகின்றனர்.

அக்காலங்களில் சர்வ சாதாரணமாக ஒரு குடும்பத்தில் பத்துப் பன்னிரெண்டு குழந்தைகள் வரை இருந்தனர். திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்தும் போதும், ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்றே வாழ்த்துவர். இதில் அவர்கள் குறிப்பிடும் பதினாறு செல்வங்களான,

1.புகழ், 2.கல்வி, 3.வலி, 4.வெற்றி, 5.நன்மக்கள், 6.பொன், 7.நெல், 8.நல்லூழ், 9.நுகர்ச்சி, 10.அறிவு, 11.அழகு, 12.பொறுமை, 13.இளமை, 14.துணிபு, 15.நோயின்மை, 16.நீடிய வாழ்நாள் ஆகியவற்றுள் ‘நன்மக்கள்’ என குழந்தைச் செல்வம் சொல்லப்படுவது அதன் சிறப்பு கருதியே. இது போன்ற பல சிறப்புகளைக் கொண்டு குடும்ப வாழ்வில் முக்கிய அங்கமாக விளங்குவது குழந்தைச் செல்வமாகும்.

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தை பெற்றெடுக்கும் காலத்தில் கையாண்ட முறை இன்றைய முறைக்கு முற்றிலும் மாறுபட்டது. அதைக் கேட்டால், “இப்படியா செய்தார்கள்? இப்படியா வாழ்ந்தார்கள்?” என்று வியப்படைவீர்கள். மின்சாரத்திற்கும் குழந்தைப் பேற்றிற்கும் தொடர்பில்லை என்றாலும், மின்சார வருகைக்குப் பின் பல மாற்றங்களைப் பெற்றுள்ள மனித குலம் இதிலும் அடைந்ததாக அறிகிறேன்.

பதிவு 3 : பிறப்பு

 

ஒனக்கான எடம்

சிறுகதை: அசின் சார், கழுகுமலை.வானோக்கிப் பாக்கும் பொண்ணு காதுல ஆடுற ஜிமிக்கியப் போல வானோக்கி விரிஞ்சிருக்கும் செடியில கத்தரிக்கா ஆடிக்கிட்டிருந்துச்சி அழகா.

அதுக்கு அப்படியொரு சந்தோசம்.

குபேரன் வீடானாலும் சரி, ஏழை குயவன் வீடானாலும் சரி; இல்ல, ஊருல நடக்கும் கொடை விழானாலும் சரி. திதி விழானாலும் சரி! எங்கெங்க என்ன விசேசம் நடந்தாலும் அங்கெல்லாம் தவறாமப் பயன்படுவது கத்தரிக்கா.

முட்டை வாங்க முடியாத ஏழை வீட்டுப் புள்ளைய கூட தன்னை முட்டையா நெனச்சி சாப்பிடுதுக. ‘கத்தரிக்காவுல காம்பு ருசி; வெள்ளரிக்காவுல வெத ருசி’ங்கிற சொலவட சும்மாவா வந்துது, எல்லாம் ருசிய வச்சுத்தான?

நெனச்சி நெனச்சி சந்தோசப்பட்டுச்சி கத்தரிக்கா.

அப்பிடி என்ன எங்கிட்ட இருக்குங்கிற நெனப்பு இப்ப அதுக்குள்ளாற வந்துடுச்சி. சனங்க விரும்புறது தன்னோட அழகா, சுவையா, இல்ல எதுலயும் இருக்கனுங்கிற சம்பிரதாயமான்னு அதுக்கு வெளங்கல.

பக்கத்துச் செடி வெண்டைக்கா கிட்ட வெக்கங்கெட்டு இத வாயார கேட்டுப்புடுச்சி.

“ஏல தம்பி, நாம ரெண்டு பேரும் எம்புட்டு நாளு சேக்காளிங்க! ஒங்கிட்ட நா ஒரு சங்கதி கேக்கட்டுமா?”ன்னுது.

“அப்டி என்ன ரோசிச்சிக் கேக்குற சங்கதி? சும்மா கேளும்”னுது வெண்டைக்கா.

“வேற ஒன்னுமில்ல, எ… எங்கிட்ட ஒனக்குப் புடிச்சது என்னனு சொல்லேன்”னு கேட்டுட்டு வெக்கத்துல கவுந்துக்கிச்சி கத்தரிக்கா.

“இதுக்கெதுக்கு இவ்ளோ வெக்கப்படுறீரு.

இல்லாதது பொல்லாததையா கேட்டுப்புட்டீரு.

ம்…உண்மையச் சொல்லுதேன் கேளும்.

சனங்களுக்கு நீருன்னா ரொம்ப இஷ்டம்!

பெருமைக்குச் சொல்லுதேன்னு நெனைச்சுக்காதீரும். நெசமாத்தான் சொல்லுதேன். சாம்பாராட்டும், புளிக் குழம்பாட்டும், இல்ல கெடா வெட்டி பிரியாணியே வெச்சாலும் ஒம்ம ‘தொக்கு’தான் அவங்களுக்கு உசிரு!”

“அப்பிடியா, தம்பி சொல்லுத?”

“ஆமா! பின்னே என்ன மாதிரியா நீரு?”னு சொன்ன வெண்டைக்கா சலிச்சுக்கிட்டே,

“ஹூம்…நானுந்தா இருக்கேனே, ஒன்னுக்கும் ஆகாத வழவழத்த பயலா! என்னதா இருந்தாலும் சூரிய வெளிச்சமோ, நெலா வெளிச்சமோ பட்டாலே பளபளக்குற ஒம்ம மாதிரி நா அழகா வர முடியுமா?”ன்னு தன்னத்தான இழிவா நெனச்சு வருத்தப்பட்டுச்சு.

“என்னடா தம்பி, இப்பிடி சொல்லிட்ட! நீ எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா? வெண்டைக்கா சாப்பிட்டா மக்கு மண்டைக்கும் கணக்கு வரும்னு சொல்றத நீ கேக்கல? இந்த சனங்க உன்ன அறிவ வளக்குற அறிவாளினுல பேசிக்கிறாங்க. அது உனக்குத் தெரியாதா?”ன்னு கேட்டுச்சு கத்தரிக்கா.

“அடடே! இதக் கேட்டதில்லியே,!”னு ஆசையா கேட்டதும்,

“இதென்ன பிரமாதம், இன்னுஞ் சொல்லுதேன் கேட்டுக்க. எதையும் ஆக்குறதும் அணைச்சு காக்கிறதமா இருக்குற தாய்மார்களோட கைவெரல் அச்சா நீ இருக்கதனாலத்தான் உன்ன வெள்ளக்காரன் ‘லேடிஸ் பிங்கர்’னு கூப்பிடுதான்!”

“அட! நீரு சொல்றதப் பாத்தா சோக்கா இருக்கே…ஓய்! ”

வெண்டைக்கா இப்பிடி சொல்லிக்கிட்டிருக்கும் போதே…

“ஏலேய்! என்னடா அங்க நொய்யி நொய்யின்னு சத்தம்!

ஒரு புழுவு வந்தாலே உங்க கத பொத்தலாயி ரெண்டு பேரும் நோஞ்சி போயிருவீக. இதுல வேற அவரு அழகுல பளபளக்குறாராம்; இவரு அறிவ வளக்குறாராம். அப்..பப்..பப்..பா.. பொழப்பத்ததுக பேசுற பேச்சப் பாரு!” கரகரத்த குரலில் வண்ணாந்தாழி சைசிலிருந்த பூசணிக்கா இடைமறிச்சுது. தொடந்து தொண்டையக் கனைச்சி சரிசெஞ்சுக்கிட்டே,

“இங்க பாருங்கடா!

எப்பேர்ப்பட்ட ஆளு பக்கத்துல இருக்குனு தெரியாம பேசிக்கிட்டிருக்கீக.

என் உடம்புல பாத்தியளா எத்தன கட்டிங்க்ஸ் இருக்குதுனு!

ம்..ம்.. அம்புட்டும் பலம்.

தம்மாத்துண்டு உருண்டேன்னு வச்சுக்கோ, புஸ்சுனு வளந்திருக்கிற ஒங்க செடியே அவுட்!

லேசா வீசுற காத்துக்கே பொசுக்கு பொசுக்குன்னு மண்ணக் கவ்வுதியலே, என்னப் பாத்தியளா எவ்ளோ ஸ்ட்ராங்கா நாடாளுற ராசா மாதிரி உக்காந்திட்டு இருக்கேனு!

இதோ என்னோட இலை அகலத்தப் பாருங்க…,

அதோ… அங்க வர… பரவிக் கெடக்கும் என் கொடியோட நீளத்தப் பாருங்க..”ன்னு நீட்டி நீட்டி காண்பிச்சிக்கிட்டு இருந்துச்சி பூசணிக்கா.

ரெண்டு கண்ணையும் மூடிக்கிட்டு புருவத்த மேலயும் கீழயும் அசைச்சு அசைச்சுப் பேசும் பூசணிக்காயப் பாத்தா அது முகத்துல அப்பிடியொரு பெருமிதம் பரவிச்சு.

தேரம் ஆக ஆக, கத்தரிக்காவுக்கும் வெண்டைக்காவுக்கும் இம இமைக்க மறந்து, கண்ணெல்லாம் விரிய ஆரம்பிச்சிச்சி.

பூசணிக்காவோட வலிமைக்கும், பெருமைக்கும் முன்ன இதுக ரெண்டும் வெறுமைன்னு நெனச்சுதுக. அப்போ…

தூரத்துல புழுதியக் கெளப்பிக்கிட்டு குதிரையொன்னு வந்துச்சு. அதுல வந்த ரெண்டு பேர் சரியா அந்தச் செடிக இருக்கிறயிடப் பக்கம் வந்ததும் இறங்குனாங்க. பார்வையிலயும் பேச்சுலயும் அந்நிசக்காரங்க மாதிரி இருந்தாங்க.

அதிலொருத்தன் சொன்னான், “போனமுற நம்ம தேசத்துக்கு வந்த விருந்தாளிகெல்லாம் ‘நல்லாருக்கு நல்லாருக்கு’னு கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டாகளே! அது இங்கின இருக்கிற கத்தரிக்காவும் வெண்டைக்காவும்தான்!”னான்.

“அப்பிடியா?”னு திறந்த வாய் மூடாமல் நின்னான் கூட வந்தவன்.

“ம்! அத்தன பேரும் அவ்வளவு ரசிச்சி சாப்பிட்ட இந்தக் காய்கள, நம்ம தேசத்து சனங்கெல்லாம் சாப்பிட்டா என்னாகும்னு யோசிச்சீரா?”ன்னான்.

“என்னாகும்?” மோவாயை சொரிஞ்சுக்கிட்டே அதையே திருப்பிக் கேட்டான்.

“இந்தச் செடிய நம்ம தேசத்துக்குக் கொண்டு போயி அங்க இருக்கிற அத்தன சனங்களையும் வளக்கச் சொல்லுவோம். செடி வளர வளர இதோட காய்க நெறையக் கிடைக்கும். அப்போ, நம்ம தேச சனங்க அத்தன பேரும் இத விரும்பி விரும்பி சாப்பிடுவாக. இந்த சுவை தரும் சந்தோசமிருக்கே… அது அவங்க துன்பத்த மறக்கடிச்சிடும்”னான்.

“அடடே! அப்புறம்?”னு கூடயிருந்த பய கேக்க,

“அப்புறமென்ன, துன்பத்த மறந்தா… உழைப்பு உயரும்”னு சொன்னான்.

“உழைப்பு உயர்ந்தா…?”

“தேசமே செல்வங் கொழிக்கும். யாரும் யாருக்கும் அடிமையில்ல, எப்டி!” ன்னதும்,

“ஒங்க ரோசனை எந்த சீமையிலயும் இல்லாததால யிருக்கு. இத ஒடனே செஞ்சுபுடுவோம்.”ன்னு சொன்னதுதான் தாமசம்.

செடிகள எடுத்துப் பத்திரப்படுத்திக்கிட்டே கேட்டான், “ஆமா, இங்க மொக்கையாக் கெடக்கே இந்த பூசணிக்கா, இத என்ன பன்றது?”னான்.

“திருஷ்டி பொம்ம செய்ய ஒன்னும் இல்லியேனு ரோசனப்பட்டீரே, இது மூஞ்சுல சாயத்தப் பூசித் தொங்கப் போடும், ஜம்முனு இருக்கும்!”னு சொல்ல,

“அட, அதுவும் சர்தான்!”னு சிரிச்சிபுட்டான் பயபுள்ள.

* * *

 

மி.மு., மி.பி.

புலவர் அ.மரியதாஸ், செட்டிகுறிச்சி.

Pulaver A.Mariadoss

பதிவு : 1

உலகிலுள்ள மக்கள் பல நாட்டினராகவும், பல மொழியினராகவும், பல மதத்தினராகவும் உள்ளனர். இப்படி உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தாம் வாழும் நாடு, பேசும் மொழி, வழிபடும் கடவுள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தமக்குத் தாமே ஒரு காலண்டரை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெரும் பீதியைக் கிளப்பிய மாயன் காலண்டர் மாதிரி எகிப்தியர், சீனர், பாபிலோனியர், பண்டைக்கால இந்தியர் என ஒவ்வொருவரும் தனித்தனி காலண்டர்களைப் பின்பற்றியுள்ளனர். ஆனால், உலகம் முழுவதும் ஒட்டு மொத்தமாகப் பின்பற்றப்படும் காலண்டர் முறை, தற்போது நடப்பிலிருக்கும் கிறிஸ்து பிறப்பை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடும் முறையேயாகும். இது உலக வரலாற்றை ‘கிறிஸ்து பிறப்பிற்கு முன்(கி.மு.), கிறிஸ்து பிறப்பிற்குப் பின்(கி.பி.)’எனப் பிரிக்கிறது.

மனித சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சியைக் குறிப்பிடும் ஆய்வாளர்களோ பழைய கற்காலம், புதிய கற்காலம் என்று இரு கூறுகளாகப் பிரித்து கணக்கிடுகிறார்கள். இதில் பழைய கற்காலம் என்பது மனிதன் காட்டு விலங்குகளைப் போல இயற்கையோடு இயற்கையாக நெருப்பின் பயன் தெரியாமல் வாழ்ந்த காலமாகும். புதிய கற்காலம் என்பது நெருப்பின் பயன் தெரிந்த பின்புள்ள காலமாகும். நெருப்பை பயன்படுத்திய பின்பே மனிதன் தனது நாகரிக வளர்ச்சியைத் தொடங்கினான். நெருப்பைக் கொண்டு உணவு சமைத்தான். சுட்ட செங்கல், சுட்ட சுண்ணாம்பு போன்றவற்றைத் தயாரித்து தனது வாழ்விடமாகிய வீட்டைக் கட்டினான். இரும்பு, செம்பு, தங்கம் போன்ற கனிமப் பொருட்களை எடுத்து கருவிகள், பாத்திரங்கள், ஆபரணங்கள் உருவாக்கி மனிதன் தனது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தான்.

அவன் எவ்வளவுதான் கண்டுபிடித்து தன் வாழ்வின் வசதிகளைப் பெருக்கிக் கொண்டாலும் அவையெல்லாம் ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே இருந்தன. அழகிய பரந்த அரண்மனைகள் கட்டி வாழ்ந்த அரசர்களும், ஜமீன்தார்களும், மிட்டா மிராசுதாரர்களும் கூட எண்ணெய்விளக்கு கொண்டே இரவைக் கழிக்க நேர்ந்தது. கால்நடைகளை நம்பியே போக்குவரத்தும் இருந்தது. இப்படி பற்பல ஆயிரம் ஆண்டுகளாக மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று வந்த மனித சமுதாயம், கடந்த ஒரு நூற்றாண்டில்தான் எல்லையில்லா வளர்ச்சியை அடைந்தது. அந்த அளவிலா வளர்ச்சியைத் தந்து மனிதனை உயர்த்திய அற்புதம்தான் ‘மின்சாரம்’.

கடவுளைக் கண்ணால் காண முடியாது. ஆனால் உலகிலுள்ள பல கோடி உயிரினங்கள் மூலமாகவும், அண்டவெளியின் அதிசயங்கள் மூலமாகவும், நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் அளவிட முடியாத சக்தி செயல்பாட்டின் மூலமாகவும் அவரை அறியலாம் என்பர். அதே போல மின்சாரமும் கண்ணுக்குத் தெரியாத ஒன்று. அது செயல்படுத்தும் செயல்பாட்டைக் கொண்டுதான் நாம் அதை அறிகிறோம்.

இன்றைய மனித வாழ்க்கைக்கு மின்சாரம் ஆதாரமாகவும் ஆணி வேராகவும் இருப்பதால், மின்சாரம் இல்லையேல் மனித வாழ்வே இல்லை என்றுள்ளது. ஆகவே, மனிதனின் நாகரிக வளர்ச்சியைக் குறிப்பிடும் போது பழைய கற்காலம், புதிய கற்காலம் என்று பிரிக்கும் முறை ஒரு புறம் இருந்தாலும், குறுகிய காலத்தில் அரிதான பெரிய வளர்ச்சியைத் தந்து இன்றும் வளர்த்துக் கொண்டிருக்கும் மின்சாரத்தை மையமாக வைத்து ‘மின்சார வருகைக்கு முன்(மி.மு.), மின்சார வருகைக்குப் பின்(மி.பி.)’எனப் பிரித்துப் பார்ப்பது நன்றென நினைத்து மி.மு., மி.பி. எனத் தலைப்பிட்டுள்ளேன். இந்த அடிப்படையிலேயே இக்கட்டுரையைத் தொடரப் போகிறேன்.

நான் மின்சாரம் இல்லாத இறுதிக் காலத்தையும், மின்சாரம் நம் பகுதிக்கு வந்தது முதல் இன்று வரையிலுமாக அடைந்த மாற்றங்களையும் கண்டவன். இவ்வேறுபாடோ ஆண்டிக்கும் அரசனுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. சிறு வயதில் நான் கண்ட அன்றைய வாழ்க்கையும், சமூக அமைப்பும் இன்றுள்ள இளைய தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதைச் சொன்னால், இன்றுள்ளோர் ஆச்சர்யப்படுவர்.

தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி வட்டத்திலுள்ள கழுகுமலையில், 1943ஆம் வருடம் பிறந்தவன் நான். இவ்வூர் பழங்காலந்தொட்டே வரலாற்று முக்கியம் பெற்ற பழம்பெரும் ஊர். சமண சமயம் தமிழகத்தில் தலை சிறந்து விளங்கிய காலத்தில் சமணர்கள் இவ்வூரில்தான் சமணப்பள்ளி அமைத்து தங்களின் சமயத்தை வளர்த்துள்ளனர். அவர்கள் இங்குள்ள கற்பாறைகளில் செதுக்கி வைத்துள்ள தீர்த்தங்கரர்களின் சிலைகளும், கல்வெட்டு எழுத்துக்களும், அவர்கள் வாழ்ந்த குகைகளும் இன்றும் சான்றாக உள்ளன.மலையை வெட்டிச் செதுக்கிய ‘வெட்டுவான் கோவில்’ என்ற ஒற்றைக்கல் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்று இவையனைத்தும் இந்தியத் தொல்பொருள்துறையினரின் பாதுகாப்பிலுள்ளன. அரசும் இவ்வூரைச் சுற்றுலாத் தளமாக்கி சிறப்புச் செய்துள்ளது. மலையடிவாரத்திலுள்ள குடைவரையிலிருக்கும் முருகன் சந்நிதி புகழ் பெற்ற சைவ தலமாகும். இது தவிர, வைணவக் கோவில்களும், கிறிஸ்தவ ஆலயமும், இஸ்லாமியர்களின் பள்ளி வாசலும் இங்குள்ளன.இவ்வூர் அக்காலம் தொட்டே இப்பகுதியினருக்கு முக்கிய ஊராகத் திகழ்ந்திருக்கிறது என்பதை மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள மாட்டுத்தாவணியும் (மாட்டுச்சந்தை), ஆட்டுச் சந்தையும் மற்றும் பல்பொருள் விற்கும் சந்தையும் தனித்தனியாக அமைந்திருந்ததன் மூலம் அறிய முடிகிறது.

மின்சாரம் இல்லாத காலத்தில் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் கூற வந்த நானேன் கழுகுமலையின் சிறப்பைக் கூறினேன் என்றால் அதற்குக் காரணம் உண்டு. அக்காலத்திலேயே இவ்வூர் சிறப்பு பல பெற்ற பெருநகராகத் திகழ்ந்ததால், தமிழகத்திலுள்ள பெருநகரங்களுக்கு மின்சாரம் வரும் போதே கழுகுமலைக்கும் வந்தது என்பதைக் கூறுவதற்காகவே விளக்கினேன்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த எங்களூருக்கு 1950 இல் மின்சாரம் வந்தது.  அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில்தான் இரும்புக் கம்பங்களைத் தெருக்களில் நட்டி, அதில் மின் கம்பிகளை இழுத்தார்கள். மின்கம்பம் என்றவுடன் இவ்வூரிலுள்ள லூர்து மாதா ஆலய வளாகத்தில் மேற்குப் பக்கமிருந்த சின்னக் கேட் அருகில், மின்கம்பி இழுப்பதற்காகத் தெருவில் நட்டியிருந்த கம்பத்தில், அந்தச் சிறு வயதிலேயே உச்சி வரை ஏறி இறங்கியது இன்றும் நினைவில் உள்ளது. மின்சாரம் வந்ததும் தெரு விளக்குகள் ஒளிர்ந்தன. எண்ணெயும் இன்றி, திரியும் இன்றி எரியும் விளக்கைப் பார்த்து அனைவரும் வியந்தனர். இருந்தாலும் மின்சாரம் தெரு விளக்குகளிலும், விரல் விட்டு எண்ணும் ஒரு சில செல்வந்தர்களின் வீடுகளிலும்தான் இருந்தது. அது சாதாரண மக்களின் வீடுகளுக்குச் சென்று சேர பல ஆண்டுகளாயின.

இன்று மனித சமுதாயத்தின் ஒவ்வொரு நொடிப் பொழுதுக்கும் ஏதோ ஒரு வகையில் மின்சாரம் தேவைப்படுகிறது. உடல் வாழ இரத்தோட்டமும் உயிர் வாழ மின்னோட்டமும் தேவை என்றாகி விட்டது. இத்தகைய மின்சாரம் மக்களின் பயன்பாட்டிற்கு வராத காலத்தில் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை நிலையைத் தெரிவது எவ்வளவு சுவையான செய்திகள்! அவற்றையே வரும் நாட்களில் இக்கட்டுரை சொல்லப் போகிறது.

இது பழமையை அறிவதற்கு மட்டுமின்றி, புதுமைக்குள் புதைந்து மீள முடியாமல் சிக்கிக் கிடப்போர்க்கு ஏதோ ஒரு வகையில் உதவினால் அதுவே எனக்கு மகிழ்ச்சியும், இக்கட்டுரையின் வெற்றியும்.

பதிவு 2 : மயக்குறு மக்கட் செல்வம்

* * *