RSS

கழுகுமலையில் ஒளிர்ந்த தியாகச் சுடர்கள்

25 ஜன

‘தேசிய நல்லாசிரியர்’ திரு.வை.பூ.சோமசுந்தரம், கழுகுமலை.republic dayபாரதி சொன்ன நல்லதோர் வீணையாய் இம்மாநிலம் பயனுற, கழுகுமலை மண்ணில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர். அவர்களைப் பற்றி கழுகுமலை திரு.வை.பூ.சோமசுந்தரம் அவர்கள், தான் சேகரித்த செய்திகளைக் கொண்டு எட்டு வீரர்களின் தியாக வாழ்வை எழுதியுள்ளார். இது, 1976-இல் ந.சோமயாஜீலு அவர்கள் தொகுத்த நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு என்னும் நூலில் வெளியானது. அதன் பின் கிடைத்த, அத்தொகுப்பில் இல்லாத சில குறிப்புகளையும் சேர்த்து இக்கட்டுரையில் திரு.வை.பூ.சோ. அவர்கள் இங்கு தந்துள்ளார்கள். – அசின் சார், கழுகுமலை.

1. சங்கரலிங்க மேஸ்திரி:

தினகரமுத்து என்பவரின் மகனான இவர், 1898 -இல் பிறந்தவர். தனிப்பட்ட சத்தியாக் கிரகத்தில் 1941 -இல் கலந்து கொண்டு செக்சன் 38(5) இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி ஆறு மாதங்கள் தண்டனை பெற்று அலிப்புரம் சிறையில் இருந்துள்ளார்.

2. பி.ஆர்.சிவசுப்பிரமணிய ஐயர்:

இவர் 1902 – இல் பிறந்தவர். மனைவி பெயர் சாரதாம்பாள். ஐயரவர்கள், 1920 -முதல் காங்கிரஸில் பணியாற்றி வந்தார். 1930-ல் நடந்த கள்ளுக் கடை மறியலின் போது, இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் இருந்துள்ளார். ராக்கேல் அம்மையாரின் தலைமையில் நடைபெற்ற மறியலின் போது தடியடி பட்டுத் துன்புற்றார். கழுகுமலை காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாகவும் கோவில்பட்டி தாலுகா காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினராகவும் பணியாற்றினார். 1935-ஆம் ஆண்டு பழனியில் பத்து நாட்கள் சிறையில் இருந்தார். 1939 செப்டம்பரில் ஆரம்பித்த உலக யுத்தத்தின் போது யுத்த எதிர்ப்புப் பிரச்சாரமும் செய்தார்.

மேலும், கழுகுமலை ஆலயப்பிரவேசத்தை ஒட்டி இவரின் கட்டுரை ‘தினமணி’ நாளிதழில் வந்தது. கழுகுமலையில் உள்ள ராஜபாளையம் ராஜாக்கள் சத்திரத்தின் மேலாளராகத் திறம்படப் பணியாற்றியவர். அரசிடமிருந்து உதவித் தொகையோ, நில மான்யமோ பெறவில்லை.

3. வை. பூசைப் பிள்ளை:

கழுகுமலை வைத்தியலிங்கம் பிள்ளையின் மகனான இவர், 1903-இல் பிறந்தவர். இவர் மனைவி பெயர் மாரியம்மாள்.poosai pillaiகள்ளுக்கடை மறியல், கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேசம், பூமிதானம், பஞ்ச நிவாரணம் முதலிய கொள்கைகளுக்காக முன்னின்று தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்தார். 20.05.1947–இல் கழுகுமலை முருகன் கோவிலில் நடைபெற்ற ஆலயப் பிரவேச விழாவிற்காக, தீன தயாள லாலாவுடன் தோளோடு தோளாக நின்று செயல்பட்டார். விழாவிற்கு வந்திருந்த ‘கல்கி’  கிருஷ்ணமூர்த்தி இவரைப் பெரிதும் பாராட்டினார். கழுகுமலையில் ஊராட்சி மன்றம், நூலகம், உயர்நிலைப் பள்ளி போன்றவை அமையத் துணை நின்றார்.

சுதந்திரத்திற்காக நடைபெற்ற எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொண்டாலும் இவர் சிறை செல்லவில்லை. இவர் 24.05.1955 அன்று இறைவனடி சேர்ந்தார். இவரின் தம்பி பிச்சையா பிள்ளையும் தியாகி ஆவார்.

4. கே.தீன தயாள லாலா:

சிறந்த தேசபக்தர், காந்தியவாதி, சமூகநலத் தொண்டர் என்றெல்லாம் போற்றப்படும் தீன தயாள லாலா அவர்கள், 1905-இல் பிறந்தார். இவரது மனைவி பெயர் ஜானகிபாய்.Theena thayala lalaபள்ளிப் பருவத்திலேயே விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். கழுகுமலையில் நடை பெற்ற கதர் வளர்ச்சியிலும், திரு.சோமயாஜீலுவின் தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

1923 -இல் நாகபுரியில் நடைபெற்ற கொடி சத்தியாக்கிரகத்திற்கு தமிழகத்திலிருந்து சென்ற தொண்டர்களுள் இவரும் ஒருவர். எனவே, ஓராண்டு காலம் நாகபுரிச் சிறையில் கைதியாக இருந்தார். அங்கிருந்து விடுதலை பெற்று கோவில்பட்டி வருவதற்கு, ஜில்லா காங்கிரஸ் கமிட்டி பண உதவி செய்தது. 12.02.1947-இல் கழுகுமலையில் காங்கிரஸ் கமிட்டியால் அமைக்கப் பட்ட ஆலயப் பிரவேசக் கமிட்டியில் திரு.சோமயாஜீலுவின் தலைமையில் காரியதரிசியாகப் பணியாற்றினார்.

கழுகுமலை ஆலயப் பிரவேசப் போராட்டக் குழு செயலாளராக இருந்து செயல்பட்டார். இதற்கு ஆதரவாக பொது மகஜரில் கையொப்பம் வாங்கி, சட்டசபைத் தலைவர் சிவசண்முகம் பிள்ளையின் தலைமையில் 20.05.1947-இல் ஆலயப் பிரவேசம் நடத்தினார். இவ்விழாவிற்கு வந்திருந்த எட்டயபுரம் மகாராஜா அவர்கள், அரிசனங்களுக்குப் பெரிதும் தொண்டு செய்த லாலா அவர்களைப் பாராட்டினார்.

தன் இறுதி மூச்சு வரை தம்மால் இயன்ற சமூகப் பணிகளைச் செய்து வந்த இவர், 05.12.1965-இல் இறைவனடி சேர்ந்தார். இறக்கும் வரை அரசின் உதவித்தொகையோ நிலமான்யமோ இவர் பெறவில்லை.

பூசைப் பிள்ளையும், இவரும் “கழுகுமலை இரட்டையர்களாக” இருந்து போராட்ட உணர்வை மக்களிடம் தூண்டியுள்ளனர்.

5. ஜி.ராமானுஜ நாயக்கர்:

இவர் சாத்தூர் தாலுகாவில் உள்ள நடையனேரியில் 1914-இல் பிறந்தார். கழுகுமலை, நடுத்தெருவிலுள்ள கதவு எண்.11-இல் வசித்து வந்தவர். மனைவி பெயர் சுப்பம்மாள்.Ramanujam1932 லிருந்து தேசத் தொண்டில் ஈடுபட்டார். 1941 -சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு நான்கு மாதங்கள் அலிப்புரம் சிறைவாசம் சென்றார். காமராசரை விருதுநகரில் தங்கக் கூடாது என உத்தரவு போடப்பட்ட பொழுது, இவரது ஊருக்கு மேற்புறம் உள்ள கோபால்சாமி பரம்பில் தலை மறைவாக இருந்தார். அப்போது அவருக்கு உணவு முதலியவற்றை இவர்தான் கொடுத்து வந்தார். பின் இருவரும் ஒன்பது மாதங்கள் தலைமறைவாக இருந்தனர்.

கழுகுமலை சர்வோதயா சங்கத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றார். சர்வோதயா மாநாடு, காந்தியடிகளின் பிறந்த நாள் விழா போன்றவற்றை சிறப்பாக நடத்தியவர். மாநில அரசின் தியாகி பென்சன் பெற்றவர்.

6. கே.அழகிரித் தேவர்:

1916-இல் கழுகுமலையில் பிறந்த இவர் டிப்போ தெருவில் வாழ்ந்தவர். இளமையிலேயே விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1934 முதல் 1935 வரை கிராம காங்கிரஸ் கமிட்டியில் தொண்டராக சேவை செய்தார். 1936 முதல் 1940 வரை கமிட்டியில் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.K.Alakiri Theverபிரசித்தி பெற்ற திருநெல்வேலி பொதுவுடைமை சதி வழக்கில் சம்பந்தப்பட்டு, 1940-இல் கொக்கிரகுளம் சப் ஜெயிலில் ஓராண்டு ரிமாண்டில் இருந்தார். வழக்கு முடிந்த பின் ஒன்றரை ஆண்டு தண்டிக்கப்பட்டு அலிப்புரம் சிறையில் இருந்தார். நெல்லை மாவட்ட இரண்டாம் பொதுவுடைமை சதி வழக்கில் முதல் எதிர் பால தண்டவாணர் – இந்த வழக்கிலும் விசாரணைக் கைதியாக இரண்டு ஆண்டுகள் கோவில்பட்டி, விளாத்திகுளம், கொக்கிரகுளம், மதுரை சிறைகளில் இருந்தார். 1942-இல் இருந்து தன்னை காங்கிரஸ் அரசியலில் முழுக்க முழுக்க ஈடுபடுத்திக் கொண்டார்.

பின்னர் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, கோவில்பட்டி தாலுகாவின் உறுப்பினராகவும், மாவட்ட உறுப்பினராகவும், கழுகுமலை காரியதரிசியாகவும் இருந்து பணியாற்றினார். மத்திய, மாநில அரசுகளின் தியாகி பென்சன் பெற்று வந்தார். தியாகிகள் I.N.A. வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் செயல்பட உழைத்தார்.

எளிய மக்களுக்காக “பாரதி காலனி” என்ற குடியிருப்பு உருவாக்க முனைந்தார். தன் இறுதிநாள் வரை பொதுத் தொண்டே இலட்சியமெனக் கொண்டு வாழ்ந்தார்.

7. எஸ்.கோபால கிருஷ்ண யாதவ்:

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில், 15.11.1917-இல் பிறந்தவர். தந்தையின் பெயர் சின்னான் சேர்வை, தாய் சிவனியம்மாள். மனைவி இலக்குமி அம்மாள். கழுகுமலை, நடுத்தெருவிலுள்ள கதவு எண்.9/118-ல் வாழ்ந்த இவர், ‘கோபால் கோனார்’ என்று அனைவராலும் அறியப்பட்டவர்.Gopala kirishna yadhavஇவர், 1933-முதல் தேசப்பணி இயக்கங்களில் ஈடுபட்டார். படித்துக் கொண்டிருக்கும் பொழுதே கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி பகிஷ்காரம் முதலிய போராட்டங்களில் ஈடுபட்டிருந்த தொண்டர்களுக்குப் போலீசாருக்குத் தெரியாமல் உணவு, உடை போன்ற வசதிகள் செய்து கொடுத்ததால் இவரைப் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டார்கள். எனவே, கடைகளில் வேலை பார்த்துக் கொண்டே தேசியப் பணிகளில் கலந்து கொண்டார்.

1941 – சத்தியாக்கிரகத்தின் போது சென்னை வரை கால் நடையாகவே நடந்து சென்றார். சென்னை ராயப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, எட்டு வார காலம் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி வெளியே வந்த பின், காந்திஜியின் ஆணைப்படி மீண்டும் பாத யாத்திரை தொடங்கினார். அப்போது, மதுரை 2 நிர். காவல் நிலையத்தினர் கைது செய்து பெல்லாரி, அலிப்புரம் சிறைகளில் எட்டு மாதங்கள் தண்டனை விதித்தனர். மீண்டும் விடுதலையான பின், தான் செய்து வந்த வேலைகளை உதறி விட்டு முழுநேர தேச ஊழியனாக மாறினார்.

1942 – புரட்சியில் கலந்து கொண்டு தலை மறைவாகத் திரிந்தவரை, 1943-சனவரி 26-இல் சாத்தூர் காவல் நிலையத்தினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் இரண்டு மாதங்கள் வைத்திருந்தனர். மேலும், சிவகாசி டெபுடி சூப்பிரெண்டால் சித்திரவதைக்கு ஆட்பட்டு இவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 1947 – ஜனவரி 26-இல் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரால் தேசிய எழுச்சிப் பணிகளில் இவர் தாமிரப் பட்டயம் பெற்றுள்ளார்.

விடுதலைக்குப் பின் கழுகுமலையில் தீப்பெட்டித் தொழில் அதிபராக உயர்ந்து பலருக்கும் உதவினார். மேலும், மதுரை யாதவர் மகளிர் கல்லூரித் தலைவராகவும் இருந்துள்ள இவர், 23.11.2004-இல் இறைவனடி சேர்ந்தார்.

இவரது சகோதரர்களில் ஒருவரான சுப்பையா என்பவரும் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை அடைந்தவர். இவர்களிருவரும் அரசிடமிருந்து உதவித்தொகையோ நிலமான்யமோ பெறவில்லை.

8. கே. எம். சுப்பையா:

பிறந்த ஆண்டு தெரியவில்லை. கழுகுமலையைச் சார்ந்த இவர் 1940-இல் யுத்த எதிர்ப்பு வெளியீடுகளை வைத்திருந்தமைக்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார். தன் இறுதி நாட்களில் குன்றக்குடியில் வாழ்ந்து மறைந்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்றவர்.

மேலும், க.குமாரபுரம் சஞ்சீவி நாயக்கர், தியாகி சுப்பையாக் குருக்கள், மகாலிங்கத் தேவர், சங்கரதாஸ் போன்ற தியாகச் செம்மல்களும் மண்ணிற்குள் வேராய் இருந்து கழுகுமலையில் சுதந்திர வேட்கையை வளர்த்துள்ளனர். இவ்வாறு, கரிசல் பூமியான கழுகுமலையில் ஒளிர்ந்த தியாகச் சுடர்களான இவர்கள், சுதந்திரப் பயிரைக் கண்ணீராலும் செந்நீராலும் காத்த பெருமக்கள் ஆவர்.

* * *

Advertisements
 

2 responses to “கழுகுமலையில் ஒளிர்ந்த தியாகச் சுடர்கள்

 1. சட்டநாதன்

  25/01/2013 at 10:35 முப

  கோபால் கோனார் ஐயாவைத் தவிர யாரையும் கேள்விப் பட்டதில்லை.

  மாலிக்காபூர் படையெடுப்பின் போது அவன் மதுரை வரை வந்ததை அறிந்து , நமது முருகனுக்கு ‘ கல்திரை ‘ எழுப்பப் பட்டது என்று கிருஷ்ணசாமி ரெட்டியார் ஐயா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

  கழுகுமலையின் ஆலயப்பிரவேசம் பற்றி இப்போது தான் கேள்விப் படுகின்றேன். கோவிலிலேயே அதிக நேரம் செலவிட்டிருந்தாலும் , யாரும் சொன்னதில்லை.

  மிகவும் முக்கியமான பதிவு.

   
 2. vidhaanam

  25/01/2013 at 12:17 பிப

  இந்தப் பழைய தகவல்கள் அத்தனையும் எனக்கு ரொம்பப் புதுசு.
  இதுபோன்ற முக்கியமான கழுகுமலைத் தகவல்கள் பல இன்னும் அதிகமாக வரவேண்டும்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: