RSS

பூமணியின் ‘பிறகு’

21 ஜன

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.piraguகோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களின் வட்டார மொழி வழக்கை அறியாதவர்களுக்கு கொஞ்சம் சவாலான நாவலிது. ‘வட்டார வழக்கில் எழுதப்படும் நாவல்கள் எல்லாத்திலயுமே இந்த சவால் இருக்கத்தானே செய்யும்’ என நீங்கள் சொல்லலாம்.

ஆனால் ‘பிறகு’ நாவலெங்கும் வியாபித்திருப்பது உரையாடல்களே. அதனால்தான் இந்த சவால் கொஞ்சம் அதிகம். கதை சொல்பவர் நாவலுக்குள் வருவது ரொம்ப சொற்பம். அதை இப்படிச் சொல்லலாம்: கதை சொல்பவர் இடையில் வந்து போவதே நமக்குத் தெரிவதில்லை.

கதைமாந்தர்கள் ஆக்கிரமித்திருக்கும் நாவல் இது. அதனால்தான் அதிக வர்ணனைகளோ மிக நீண்ட காட்சிச் சித்தரிப்புகளோ நாவலில் பார்க்க முடிவதில்லை. இயல்பாகவே இந்த வகை நாவல்கள் எனக்குப் பட்டெனப் பிடித்துவிடும். இந்த வட்டார வழக்கு எனக்குக் கொஞ்சம் பரிட்சயம் என்பதால் தடை எதுவும் இருக்கவில்லை.

கொஞ்சம் தெலுங்கும் நாவல் உரையாடல்களில் கலந்து வரும். என் பள்ளி காலங்களில் என்னை நடுவில் வைத்துக் கொண்டு தெலுங்கிலேயே உரையாடும் நண்பர்கள் மீது அநியாயத்திற்கு கோபம் வரும். ‘சும்மா கெடங்கடா ‘தீஸ்கோ மண்டிகளா’ எனத் திட்டுவேன். அப்படி ஒரு வார்த்தையெல்லாம் கிடையாது. அவர்கள் மீது உள்ள கோபத்தில் அப்படித் திட்டுவேன். இந்த நாவலைப் படித்த போது அவர்களை நன்றியோடு நினைத்தேன்.

இந்த நாவல் சம்பவங்களின் கோர்வையால் இல்லாமல், கதைமாந்தர்களின் தொகுப்பாகத்தான் என் மனதில் ஆழப் பதிந்துள்ளது.

மையப் பாத்திரம் ‘அழகிரி’. தன்னைத் தவிர தன்னைச்சுற்றியுள்ள அனைத்தும் கொள்ளும் மாற்றங்களையும் மனிதர்களின் போக்கையும் வெறுமனே சாட்சியாக இருந்து பார்த்து தன் போக்கில் வேம்படியில் செருப்போ, கமலை வாரோ தைத்துக் கொண்டு, சின்னச்சின்ன காட்டு வேலைகள் செய்து கொண்டு காலந்தள்ளும் பாத்திரம்.

கிட்டத்தட்ட இந்த நாவலின் நடை எப்படியோ அப்படித்தான் அழகிரியின் தன்மையும். மிகத்தீவிரமான உணர்ச்சி வெளிப்பாடும் கிடையாது. மிகக் கமுக்கமான நிலையும் கிடையாது. ஒரு சலனமற்ற நடுநிலைத் தன்மையுடையது. விதிவிலக்காக, ரெண்டே இடத்தில்தான் அவனது தீவிர உணர்ச்சி வெளிப்பாட்டைப் பார்க்க முடியும். அப்பையாவை அடிக்கும் போதும், காவக்கார கந்தையாவின் இறப்பின் போதும்.

அழகிரியின் முதல் மனைவி காளி, கிழவன் சக்கணன், அழகிரியின் முதல் சம்பந்தி முத்துமுருங்கன், மகள் முத்துமாரி, காவக்கார கந்தையா என கதையில் தொடர்ச்சியாக பல இறப்புகள் வருகின்றன. ஆனால் கந்தையாவின் மரணம் போல மற்ற எந்த மரணமும் அழகிரியை அந்த அளவுக்குப் பாதிப்பதில்லை. கதையின் போக்கில் வாசகனும் நிலை குலையும் இடம் அது. மகள் முத்துமாரியின் மரணமும் நம் நெஞ்சுரத்தை அசைத்துப் பார்த்து விடும்.

சினிமாவும், ஊடகமும், சமூகமும் போட்டுத் தேய்த்து சக்கையாக்கிய வார்த்தைகளுள் முக்கியமான ஒன்று ‘நட்பு’. வழியின்றி அந்தச் சொல்லை இங்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இக்கதையில் ஒரு நட்பு காட்டப்படுகிறது. கிழவன் சக்கணனுக்கும் சித்திரனுக்குமான நட்பு. இவர்களை வைத்து நகரும் காட்சிகள் ரொம்ப சுவாரசியமாக இருக்கும். சக்கணன் இறப்பிற்குப் பின் அந்த இடத்தை ஊரிக்காலிமாட்டுக் கருப்பன் பிடித்துக் கொள்வான். அந்த
நட்பு கருப்பனுக்கும் சித்திரனுக்கும் எனத் தொடர்கிறது. நிகழ்வுகள் மாற்றம் கொள்ளாமல் பாத்திரங்கள் மட்டும் மாறிக் கொள்ளும் ஒரு நுட்பமான நாடகத்தை அங்கு நாம் தரிசிக்கலாம்.

பூமணி நட்பைக் காட்டும் விதம் ரொம்ப யதார்த்தமாக, ரொம்ப அந்நியோன்யமாகத் தெரிகிறது. தற்போது அஞ்ஞாடி படித்து வருகிறேன். அதில் வரும் மாரிக்கும் – ஆண்டிக்குமான நட்பு இந்த எண்ணத்தையே எனக்குத் தந்தது.

‘விட்டு விடுதலையாகி நிற்பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே’

பாரதியின் இந்தக் கவிதையின் சாரம்தான் கருப்பனின் பாத்திரப்படைப்பு. ஒருவகை விடுபட்ட மனநிலையைக் கொண்டவன் கருப்பன். அவன் முத்துமாரியின் மீது வைத்திருக்கும் பாசம் புரிந்து கொள்ள முடியாத நுட்பம் கொண்டது. எல்லா உறவுக்கும் ஒரு பெயரிட்டு அதை குறுக்கி விடுகிறோமோ எனத் தோன்றியது.

ஒவ்வொரு கதைமாந்தர்கள் பற்றியும் இன்னும் பக்கம்பக்கமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இக்கதை நிகழும் களம் – இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகான உடனடிச் சுழலில். இந்தியா முழுக்க நிகழ்ந்த பெரிய மாற்றங்களின் சின்னச் சின்னத் துளிகள் அந்தக் கடைக்கோடிக் கிராமத்தில் கொஞ்சமாய் விழுகின்றன – மின்சாரம் வழியாக, தேர்தல் வழியாக. ஆனால் நாவல் அத்திசையில் பயணிக்கவில்லை.

பூமணி இவ்விஷயத்தில் ரொம்பத் தெளிவாக இருக்கிறார். அவர் தன் கதை வழியாக ஒரு திசையில் செல்லும் போது இடையில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான வாய்ப்பு வருகிறது – தவிர்க்கிறார். அவலங்களுக்கு எதிராக பிரச்சாரக் குரல் எழுப்ப வாய்ப்பிருக்கிறது -தவிர்க்கிறார். கரிசல் பூமியை நின்று நிதானித்து வருணிக்க வாய்ப்பு கிடைக்கிறது – அதையும் தவிர்க்கிறார். தன் கதையிடமும், பாத்திரங்களிடமும் தன்னை முழுதாய் ஒப்படைக்கிறார். அவை இழுத்துச் செல்லும் திசையில் பயணம் செய்கிறார். இந்த தேர்ந்த கதை செய்யும் நேர்த்தி பூமணியினுடையது.

எனவேதான், நாவலில் வரும் கோடைகாலச் சித்தரிப்பும், பொங்கல் திருநாள் சித்தரிப்பும் நமக்கு வருணனையாகத் தெரிவதில்லை. ஆனால் வருணனை செய்ய வேண்டிய வேலையை செய்துவிடுகிறது.

சாதாரண மனிதர்கள் ஓட்டுப் போட்ட விதத்தைச் சொல்லும் போது அது அரசியல் விமர்சனமாக நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அரசியல் விமர்சனம் செய்யவேண்டியதை அது செய்துவிடுகிறது.

“வெவ்வேறு கிணற்றில் தண்ணீர் எடுத்துவிட்டு ஊருணிக்கருகில் லட்சுமியும் ஆவடையும் சந்தித்தார்கள்” என்று சொல்லும் போது நமக்கு அது பிரச்சாரக் குரலாகத் தெரிவதில்லை. அதற்குள் பொதிந்திருக்கும் விஷயம் நமக்கு விளங்கி விடுகிறது.

நாவலைப் படிக்கும் போது நமக்கு விளங்கும் இன்னொரு முக்கியமான ஒன்று ‘ஊர்க்கட்டு’ என்ற விஷயம். வெவ்வேறு சமூகங்களை வைத்து வடிவமைத்தது போன்ற ஒரு கிராம அமைப்பு. ஒரு மனிதக் கூட்டமின்றி இன்னொன்றில்லை எனும்படியான ஒரு கட்டமைப்பு. அழகிரி கதாப்பாத்திரமே, இந்த வடிவமைப்பில் வரும் சின்ன இடைவெளியை நிரப்பவே வெளியூரிலிருந்து அழைத்து வரப்படுகிறான். தோல் சம்பந்தமான பொருட்களை
தைப்பதற்காக அழகிரி அவனது சொந்த ஊரான துரைச்சாமிபுரத்திலிருந்து மணலூத்துக்கு அழைத்து வரப்படுகிறான். அவனது சமூகத்தில் ஓர் அங்கமாக, அதன் மூலம் அவ்வூரின் அங்கமாகப் பின் மாறுகிறான்.

எல்லா வகையிலும் எளிமையான படைப்புதான் ‘பிறகு’. ஆனால் எளிமையை உள்வாங்குவதுதான் மிகக் கடினம். எளிமைக்கு நிகரான பிரமாண்டம் வேறொன்றுமில்லை!

* * *

Advertisements
 

2 responses to “பூமணியின் ‘பிறகு’

  1. சித்திரவீதிக்காரன்

    17/02/2013 at 1:52 பிப

    பிறகு’ நாவலை சமீபத்தில் நூலகத்தில் பார்த்தேன். கொற்கை’யை வாசித்ததும் அதை எடுக்க வேண்டும். தங்கள் பதிவு பூமணியின் ‘பிறகு, அஞ்ஞாடி’ நாவல்கள் மீதான ஆர்வத்தை அதிகமாக்கவிட்டது. நன்றி.

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: