RSS

சென்னை புத்தகக் கண்காட்சி:நான் தேடிய-என்னைத் தேடிய புத்தகங்கள்

14 ஜன

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.ருடந்தோறும் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதுண்டு. சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது இதுவே முதல்முறை. நான் சென்றது கண்காட்சி ஆரம்பித்த முதல் நாளில். புத்தகக் கண்காட்சிக்கு கிளம்பும் முன்பே என் மனதில் சில புத்தகங்கள் இருந்தன; சில புத்தகங்கள் என் பட்டியலில் இல்லை. ஆனால், வாங்கத் தூண்டியதால் வாங்கிய புத்தகங்கள் அவை.

பூமணி அவர்களுடைய ‘அஞ்ஞாடி’ (க்ரியா பதிப்பகம்):

எஸ்.ரா வின் பரிந்துரையினால் மட்டுமல்ல, அதற்கு முன்பிருந்தே அஞ்ஞாடியை படிக்க வேண்டுமென்ற ஆவலுக்கு காரணமாயிருந்தது ஒன்றுதான். கழுகுமலை கிறித்தவர்களுக்கும் உயர் சாதி இந்துக்களுக்கும் அக்காலத்தில் மூண்ட பிணக்கு நாவலின் மையங்களுள் ஒன்று என்பதை அறிந்தேன். பல்லக்கு ஊர்வலத்தை மையமாக வைத்து நிகழ்ந்த கலவரம் கழுகுமலை வரலாற்றில் முக்கியமான நிகழ்வு. கழுகுமலையைச் சொந்த ஊராகக் கொண்டவன் என்ற முறையில் இந்த நிகழ்வு குறித்து நான் அறிந்த சம்பவங்கள், ஆ.சிவசுப்ரமணியன் மற்றும் ர.ஜார்ஜ் அடிகளார் ஆகியோரின் புத்தகங்கள் மூலமாக அறிந்தவை என இந்த நிகழ்வு குறித்து ஒரு பரிச்சயமிருக்கிறது. கழுகுமலையின் இச்சம்பவம் குறித்து பாரதிக்கு இருந்த மனச் சஞ்சலம் பற்றி செல்லம்மா பாரதி கூட ஒரு பதிவைச் செய்துள்ளார்.

எனக்கு மிக நெருக்கமாக இருக்கும் இந்த நிகழ்வின் இலக்கிய அனுபவத்தை இந்தப் புனைவின் மூலம் உணர வேண்டும் என்பதே என் நோக்கம். பூமணியின் எழுத்துக்களை இதுவரை நான் படித்ததில்லை. இனிதான் ஆரம்பிக்கவிருக்கிறேன். இந்நாவலோடு சேர்த்து பூமணியின் ‘பிறகு’ நாவலையும் (காலச்சுவடு) வாங்கியிருக்கிறேன்.

* * *

ஆனந்த குமாரசாமியின் புத்தகங்கள்:

இந்தியக் கலைகள் சார்ந்து, குறிப்பாக சிற்பக்கலை சார்ந்து எழுதியவர்களில் ஆனந்த குமாரசாமி மிக முக்கியமானவர். இங்கிலாந்து பயணத்தின் போதுதான் இவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். பைசாந்திய பாணியிலமைந்த ‘வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்றலில்’ எரிக் கில் செய்த சிலுவைப்பாடு ஸ்தலங்கள் உண்டு. அவை யாவும் புடைப்பு பாணி -low relief- சிற்பங்கள். முதலில் பார்த்த போதே எனக்கு மிகப்பிடித்துப் போனது. யதார்த்த பாணியிலிருந்து விலகிய(மேலை ஆலயச் சிற்பக்கலையில் இது அபூர்வம்), மரபின் வடிவம் கொஞ்சம் கலந்த சிற்பங்கள் அவை. எரிக் கில் பற்றி கொஞ்சம் படித்தேன். அப்போதுதான், ஆனந்த குமாரசுவாமியும் எரிக் கில்லும் நண்பர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஆனந்த குமாரசுவாமியுடனான பழக்கத்தால் எரிக் கில்லுக்கு இந்தியச் சிற்பக்கலைகள் குறித்த ஆழ்ந்த புரிதல் கிடைத்துள்ளது. எரிக் கில்லின் சிற்பங்களில் இந்திய மரபின் சாயலைக் கொஞ்சம் பார்க்க முடியும். முதல் பார்வையிலேயே அந்தச் சிற்பங்கள் பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை. சிற்பங்கள் குறித்து மிகச் சரியான பார்வையைக் கொண்டிருந்தவர் ஆனந்த குமாரசுவாமி.

சங்க இலக்கியங்களை கவிதையாக அணுகாமல் வரலாறு பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள பயன்படுத்தும் கருவியாக – தொல்பொருளாக மட்டுமே சங்கக் கவிதைகளை பார்க்கும் மனோபாவத்தை கடுமையாக ஆட்சேபிப்பார் ஜெயமோகன். சிற்பங்களை அணுகுவது குறித்து இதே கருத்தைத்தான் ஆனந்த குமாரசுவாமி கொண்டிருந்தார். சுருக்கமாகச் சொன்னால் ஒரு சிற்பியின் கண்கொண்டு சிற்பத்தையும், ஓவியனாக ஓவியத்தையும் பார்க்க வேண்டும்.

சிற்பம், ஓவியம் குறித்து ஒரு சாதாரண பார்வையே இங்கு இன்றளவும் உள்ளது. மிஞ்சிப் போனால் ஓவியத்தில் வண்ணங்கள் பற்றியும், சிற்பத்தில் வில்லோ, அம்போ பிடிமானம் இல்லாமல் நிற்பதைப் பற்றியும் சொல்வார்கள். அதைத் தாண்டி படைப்பு மன நிலை பற்றிய பேச்சிருக்காது. அப்படைப்பு நமக்களிக்கும் அனுபவம் பற்றியும் பேச்சிருக்காது. வடிவங்கள் பற்றி, composition பற்றி, வெவ்வேறு பாணியோடு ஒப்பிட்டுப் பார்ப்பது பற்றி என எந்தக் குறிப்புமே இருக்காது. ஒரு சிற்பத் தொகுதியிலோ, ஓவியத் தொகுதியிலோ உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி ஒட்டு மொத்த படைப்பில் என்ன பங்களிக்கிறது எனப் பார்க்கும் பார்வை மிக முக்கியமான ஒன்று. ஒரு தொகுப்பில் என்ன மாதிரியான pattern திரும்பத் திரும்ப கையாளப் படுகிறது எனப் பார்ப்பது. நுட்பங்கள் சார்ந்து இப்படி கணக்கற்ற விஷயங்கள் உள்ளன. கலைஞனின் நோக்கில் கலையைப் பார்க்கும் பார்வை ஆனந்த குமாரசுவாமியினுடையது. எனவேதான் அவரது புத்தகங்கள் மேல் எனக்குப் பெரும் ஆர்வம் வந்தது.

சென்னை கண்காட்சியில் நான் வாங்கிய ஆனந்த குமாரசாமியின் புத்தகங்கள்:

The dance of siva
The Transformation of Nature in Art
The Indian Craftsman
Yaksas

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் ‘முன்ஷிராம் மனோகர்லால்’ ஸ்டாலில் கிடைத்தது. டெல்லியைச் சேர்ந்த பதிப்பகம் இது.

* * *

அர்ச்சுனன் தபசு – மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம், சா.பாலுசாமி, காலச்சுவடு பதிப்பகம்:

புடைப்புச் சிற்பம் சார்ந்து நான் வாங்கிய முக்கியமான புத்தகம். அர்ச்சுனன் தபசில் உள்ளது அர்ச்சுனன் கதையா? பகீரதன் கதையா? என்ற இரு வேறு விவாதங்கள் உண்டு என்பதை அறிவீர்கள். ஆனந்த குமார சுவாமியின் அனுமானங்கள் சிலவற்றை இந்தப் புத்தகம் மறுப்பதாகத் தெரிகிறது. படித்து முடித்தால் என்னவென்று தெரியும்.

* * *

உயிர்மை ஸ்டாலில் மனுஷ்யபுத்திரனிடம் நானும் என் மனைவியும் அறிமுகம் செய்துகொண்டு அவரது இரு கவிதைப் புத்தகங்களை அவரின் கையொப்பத்துடன் வாங்கிக் கொண்டோம். பிறகு அவருடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். புத்தகத்தை திறந்ததும் முதல் கவிதையாக இருந்தது எது தெரியுமா?

மறுபடியும்

அடுத்த வருடமும்
இதே நாளில்
இதே இடத்தில்
இதே பின்புலத்தில்
இதே போல
நாம் ஒரு புகைப்படம்
எடுத்துக்கொள்வோமா?

நிச்சயம் எடுத்துக்கொள்வோம்
ஆனால்
கொஞ்சம் வேறு சாயல்களுடன்
கொஞ்சம் வேறு ரகசியங்களுடன்.

மனுஷ்யபுத்திரனின் அந்தப் புத்தகங்கள்:
பசித்த பொழுது
நீராலானது

* * *

வழக்கமாக புத்தகக் கண்காட்சிகளில் பாரதி குறித்தும் ஓவியங்கள் குறித்தும் எப்படியாவது புத்தகங்கள் வாங்கிவிடுவேன். அப்படி வாங்கிய சில புத்தகங்கள்:

பாரதி “இந்தியா”, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்(இந்தியா இதழ் பற்றியும் அதில் வந்த கருத்துப் படங்கள் பற்றியுமான புத்தகம்)
தஞ்சைப் பெரிய கோயில் சோழர்கால ஓவியங்கள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
சித்திரமாடம், தமிழ்ச் சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள் – பாரதி புத்திரன், மாற்று பதிப்பகம்
தமிழ்நாட்டு ஓவியங்கள் – ஏ.எஸ்.இராமன்,தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

* * *

என்னை வாங்கத் தூண்டிய புத்தகங்கள் சில:

என் சரித்திரம், மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்
அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை, காலச்சுவடு பதிப்பகம்
வாடிவாசல், சி.சு.செல்லப்பா, காலச்சுவடு
வெட்டுப்புலி, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம்

இதில் வாடிவாசல் படித்து முடித்தாகிவிட்டது. அக்குறு நாவல் பற்றி எழுதுவதைவிட அதன் காட்சிகள் சிலவற்றை ஓவியமாக வரையலாம் எனத் தோன்றியது. விதானத்தில் அவ்வோவியங்களைக் காணலாம்.

* * *

Advertisements
 

4 responses to “சென்னை புத்தகக் கண்காட்சி:நான் தேடிய-என்னைத் தேடிய புத்தகங்கள்

 1. சட்டநாதன்

  14/01/2013 at 7:00 பிப

  இவ்வளவு புத்தகங்களையும் வாங்க அனுமதித்த மனைவி பாராட்டுக்குரியவர். பலருக்கு கிடைக்காத கொடுப்பினை.

  டெல்லியில் இருந்த போது , பிரகதி மைதானில் நடந்த புத்தகக் கண்காட்சிக்குப் போனேன். சென்னையில் நடந்த எந்த வருடக் கண்காட்சியிலும் கலந்து கொண்டதில்லை.

  இருந்தாலும் தம்பியும் தங்கையும் இப்போது சென்னையில் உள்ளதால் , அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும் , பாரதி மணியின் ‘ பல நேரங்களில் பல மனிதர்கள் ‘ , நித்ய சைதன்ய யதியின் ‘ அனுபவங்கள் அறிதல்கள் ‘ – ஆகியவற்றை வாங்கச் சொல்லியிருக்கிறேன்.

  நிரந்தரமாக ஒரே ஊரில் இருக்க முடிவதில்லை என்பதால் புத்தகங்களை தூக்கிக் கொண்டு அலைவது சிறிது அயர்வு. தேவைப்படும் புத்தகங்களை கிழக்கு பதிப்பகத்தின் Dial For books மூலம் வாங்கினாலும் கண்காட்சியை ரொம்பவே Miss பண்றேன்.

   
 2. Ramesh D

  19/01/2013 at 7:58 பிப

  இன்று வரை நான் ஒரு புத்தகக் கண்காட்சிக்கும் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை.

  வண்ணதாசன் / கல்யாண்ஜி புத்தகங்களைப் படித்திருக்கிறேன். வாழ்வின் ஒவ்வொரு சிறு நிகழ்வுகளையும் அவர் பதிவு செய்திருப்பார். உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன், வாசித்துப் பாருங்கள்.

   
 3. சித்திரவீதிக்காரன்

  17/02/2013 at 2:00 பிப

  மனுஷ்யபுத்திரனின் கவிதையும் அதையொட்டிய சூழலும் ஆச்சர்யமூட்டுகின்றன. நிறைய புத்தகங்கள் நீங்கள் வாங்கியது மகிழ்வளிக்கிறது. அதைக்குறித்த பதிவுகள் எங்களுக்கு கிடைக்குமல்லவா?

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: