RSS

மகாராஷ்டிராவின் உச்சியில் புத்தாண்டு!

09 ஜன

கழுகுமலை’ மா.சட்டநாதன், மும்பை.

மகாராஷ்டிராவின் உச்சியில்

இதுவரை வாழ்க்கையில் நான் புத்தாண்டு கொண்டாடியதே கிடையாது.

தற்போது திரு.தியோடர் பாஸ்கரன் அவர்களின் கானுயிர் சார்ந்த எழுத்துக்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அவர் ஒவ்வொரு புத்தாண்டையும் ஏதாவதோர் கானகத்தில் அல்லது இயற்கைச் சூழலில் கழிப்பதாகக் கூறியுள்ளதைப் படித்தவுடன் , நானும் முடிந்தவரை அவரைப் பின்பற்ற முடிவு செய்தேன்.

அதற்குத் தோதாக ஒரு வாய்ப்பும் வந்தது.

கல்சுபாய் உச்சி

மும்பை டிராவல்லர்ஸ் (Mumbai Travellers) என்ற நண்பர்கள் குழு ஒன்று தன்னுடைய முதல் வருட நிறைவை சஹாயாத்ரி மலைத்தொடரின் உச்சியான கல்சுபாய் ( Kalsubai) மலையில் கொண்டாட, கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது. கலந்து கொண்டேன். அந்த அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

சஹாயாத்ரி மலைத்தொடர்

மேற்குத்தொடர்ச்சி மலையை வடக்கு, தெற்காகப் பிரிக்கும் போது மகாராஷ்டிரா, கர்நாடகா பகுதியில் உள்ள மலைத்தொடரை சஹாயத்ரி என்றும்; கேரளப் பகுதியை மலபார், சஹய பர்வதம் என்றும் அழைக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உச்சி கேரளாவின் இடுக்கியில் உள்ள ஆனைமுடி. அந்த வரிசையில் அஹ்மத் நகர் மாவட்டத்தில் அமைந்த கல்சுபாய் உச்சி – மகாராஷ்டிராவின் மிக உயரமான இடம். அதன் உயரம் 1646 மீட்டர் (5600 அடி) ஆகும்.

சஹாயத்ரி மலைத்தொடர்

மும்பையில் இருந்து 31 ஆம் தேதி இரவு, நாங்கள் 36 பேர் கிளம்பி கசாரா (Kasara)  என்ற நிலையத்தில் இறங்கினோம். அங்கிருந்து பாரி (Baari ) என்ற கிராமத்திற்கு தனி வாகனம் ஒன்றில் பயணம். அந்த ஊர் கல்சுபாவின் ஓர் அடிவாரம், அங்கு இரவு உணவை முடித்தோம். புத்தாண்டையும் மும்பை டிராவல்லர்ஸின் முதல் வருட பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடி முடித்து விட்டு இரவு சுமார் ஒரு மணியளவில் மலை ஏற ஆரம்பித்தோம்.

கல்சுபாய் உச்சி

சென்ற வருடத்தின் (2012) தொடக்கத்தில் மலை ஏறுவது, ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொண்ட ஆறேழு பேர், வருட முதல் நாளில் மகாராஷ்டிராவின் உச்சியில் இருக்க வேண்டும் என நினைத்து இந்த கிராமத்திற்கு வந்து இரவு மலை ஏற முடியுமா என விசாரித்துள்ளனர். இதுவரை யாரும் இரவில் ஏறாத போதும், இவர்களின் உறுதியைக் கண்ட கிராமவாசிகள் கோரக் ஷா என்ற வாலிபரை, இந்த மலையைப் பற்றி நன்கு அறிந்தவர் என்ற முறையில் வழி நடத்தும்படி அனுப்பி வைத்துள்ளனர். அவர் இப்போது வரை உதவுகிறார். எங்களை வரவேற்று அழைத்துச் செல்ல கசாராவிற்கே வந்திருந்தார்.

முதல் வருட நிறைவினையும் அதே போல் மகாராஷ்டிரத்தின் உச்சியில் கொண்டாட முடிவு செய்தனர். இந்த ஒரு வருட காலத்தில் இந்த Mumbai Travellers நண்பர்கள் குழு சுமார் ஐயாயிரம் நண்பர்களுடன் விரிவடைந்து, எண்பதிற்கும் மேற்பட்ட தனித்துவமான பயணங்களை ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றுள்ளது.

மலை ஏற ஆரம்பித்து இருபது நிமிடங்களிலேயே நமக்கு கடினம் தெரிய ஆரம்பித்து விடுகிறது. காரணம் பாதையே கிடையாது. அங்கங்கே பாறைகளைப் படிகளாக வெட்டி உள்ளனர். மற்றபடி நாமாகவே பார்த்து நிதானமாக ஏறிக்கொள்ள வேண்டும். குழுவில் சுமார் பதினைந்து பெண்களும் உண்டு என்பதால் அவ்வப்போது சிறு ஓய்வு எடுத்துக்கொண்டு தொடர்ந்தோம்.

சிறு ஓய்வு - Photo courtesy : Jogi Prajapati

நடுவில் கல்சுபாய் மலையின் கதையை ஒருவர் கூறினார்:

“மலை உச்சியில் ஒரு சிறிய அம்மன் கோவில் உண்டு, அந்த அம்மனின் பெயர்தான் ‘கல்சுபாய் மாதா’. ஒரு நாள் காட்டிற்கு விறகு பொறுக்கச் சென்ற சிறுவனின் காதுகளில் ‘நான் வரட்டுமா?’ என்ற குரல் கேட்டுள்ளது. பையன் அலறி அடித்து வீட்டிற்கு ஓடி விட்டான். அடுத்த நாளும் இது தொடரவே வீட்டில் சொல்லி இருக்கிறான். அவர்கள் சொன்ன படி, இந்த முறை ‘நான் வரட்டுமா?’ என்ற குரலுக்கு “சரி வா” என்று பதில் சொன்னான். ஒரு சிறுமி வந்திருக்கிறாள். அவளை வீட்டிற்கு கூப்பிட்டபோது, எனக்கு திருமணம் செய்து வைக்க முயலக்கூடாது. என்னை பாத்திரம் தேய்க்கச் சொல்லக்கூடாது என்று சிறுமி நிபந்தனைகள் விதித்துள்ளாள். ஒப்புக்கொண்டு அழைத்துச் சென்றாலும், வயது ஆனவுடன் வீட்டு வேலை செய்ய, திருமணத்திற்கு வற்புறுத்த என்று ஆரம்பித்தவுடன் அந்தப் பெண் கிளம்பி இங்கு வந்து தெய்வமாகி விட்டாள் என்பது ஐதீகம்” என்று சொல்லி முடித்தார்.

பெண்கள் திருமணத்திற்கு மட்டும்தான், வீட்டு வேலை செய்ய மட்டும்தான் என்ற ஆணாதிக்க சிந்தனைக்கு எதிரான கலகக்குரல் ஒன்று இங்கு தெய்வமாகி உள்ளது என்று புரிந்து கொண்டேன்.எல்லா கிராம தேவதைகளும் நம்மிடையே நடமாடியவர்கள் தானே.

கல்சுபாய் மாதா கோவில்

கதைகளில் வருவது போல ஏழு மலை, ஏழு கடல் கடந்து போவது போலத்தான், முதலில் இங்கு மலையேற  வருபவர்களுக்கு இருக்கும். சில இடங்களில் படிகளாக வெட்டப்பட்ட பாறைகளின் உயரம் அதிகமானது. அதாவது பரவாயில்லை, மூன்று நான்கு இடங்களில் இரும்பாலான ஏணியில் ஏற வேண்டும். ஒவ்வொன்றும் சுமார் பத்து முதல் இருபது மீட்டர் உயரமானவை. அங்கங்கே ஏணிகளின் கைப்பிடிகள் உடைந்து சிறு மூங்கில்களால் இரும்புக் கம்பி கொண்டு கட்டப்பட்டு இருந்தன.

இரும்பு ஏணிகள்

அவ்வளவையும் கடந்தால் நமக்குப் பரிசாக இயற்கை அன்னை வழங்கும் மன மகிழ்ச்சியையும், சுத்தமான காற்றையும், சுற்றியுள்ள மலைத்தொடர்களின் உச்சிகளின் தரிசனத்தையும் பெறலாம்.

மலை உச்சியில்

இன்னொன்றை சொல்ல வேண்டும். நம்மைப் போல முதல் மாடிக்குக்கூட லிப்டில் செல்பவர்களுக்குத் தான் இது சாகசப் பயணம். கோரக் ஷா ஒன்றரை மணி நேரத்தில் ஏறி இறங்கி விடுகிறார். காலையில் சாரை சாரையாக குழந்தைகளுடன் குடும்ப சகிதம் மலையேற மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். நவராத்திரி சமயத்தில் உச்சியில் இருந்து அடிவாரம் வரை வரிசை நிற்கும் என்கின்றனர்.

கல்சுபாய் கோவில் முன்

அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் ஒரு சிறு சமதளத்தை அடைந்தோம். சுள்ளிகளைப் பொறுக்கி சிலர் தீக் காய்ந்தனர். சிலர் பகலில் தேநீர், வடா பாவ் விற்கும் கடையாகச் செயல்படும் இடத்தில் சிறு ஓய்வு எடுத்தனர். மலை உச்சி, அதுவும் பனிக்காலம் என்பதால் குளிர் நடுங்க வைத்தது.

மலை உச்சியில்

அவ்வளவு நேரம் மலை ஏறியதால், என் உடலில் குளிரை மீறி கொப்பளித்திருந்தது வியர்வை. அப்போது மெல்லியதாய் வீசிய காற்று உடலை மயிர்கூச் செரியச் செய்தது. காலை ஏழு மணிக்குப் பின்னர்தான் சூரியன் தெரிந்தது. புத்தாண்டின் முதல் சூரிய உதயம் – ஓர் அருமையான மலைத்தொடரின் பின்னணியில்.

புத்தாண்டின் முதல் சூரிய உதயம்

கையில் கொண்டு வந்திருந்த Maggi-யை சமைத்து சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு ஏறினோம். சின்ன அறையில், பாறையில் உருவகப் படுத்தப்படும் தெய்வமாக கல்சுபாய் மாதா. குழு நண்பர்கள் சுற்றியுள்ள மலைதொடர்களையும் கோட்டைகளையும், பள்ளதாக்குகளையும் சுட்டிக் காட்டி விளக்கினார்கள். திடீரென்று மிகுந்த உயரத்தில் மட்டுமே வரும் வல்லூறு ஒன்று காட்சி கொடுத்து எங்களை மகிழ்வித்தது.

Photo courtesy : Jogi Prajapati

ஓர்  அரிய பறவையின்  காட்சியைக் கண்ட திருப்தியோடு எமது புத்தாண்டு ஆரம்பித்தது.

* * *

Advertisements
 

3 responses to “மகாராஷ்டிராவின் உச்சியில் புத்தாண்டு!

 1. vidhaanam

  10/01/2013 at 10:03 முப

  Nice way to start a year.

   
 2. Alex Ambrose

  10/01/2013 at 10:27 பிப

  //ஓர் அரிய பறவையின் காட்சியைக் கண்ட திருப்தியோடு எமது புத்தாண்டு ஆரம்பித்தது// மிக அழுத்தமான வரிகள்.

   
 3. Ramesh D

  19/01/2013 at 8:06 பிப

  அருமை!!! இந்த வருடம் புது வருட பிறப்பு எனக்கு ஆகாயத்திலே முடிந்தது……. 🙂

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: