RSS

கழுகுமலை ‘தியேட்டர்’

28 டிசம்பர்

‘கழுகுமலை’ ஜெ.மரிய தங்கராஜ்Balasubramaniam Theatreகோழிக்கறி வாங்கி வரச் சொல்லி அம்மா பையைக் கொடுத்தாள்.

“கெழக்க வாங்கிராத, வெல சாஸ்தியா இருக்கும். மேற்க பண்ணையில போயி வாங்கு.”

அம்மாவின் அட்வைஸை காதில் போட்டுக் கொண்டு சைக்கிளில் கிளம்பினேன். அவள் சொன்ன பண்ணை என்பது ஒரு காலத்தில் எங்க ஊர் மக்களுக்கு பெரும்பங்கு சந்தோசத்தை அளித்த ‘ஸ்ரீபாலசுப்ரமணியம் டாக்கீஸ்’தான் அது.

அந்தத் தியேட்டரில் திரைப்படங்கள் திரையிடுவதை நிறுத்தி இரண்டு வருடமாகிறது. மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது அந்தப் பிரமாண்ட அரங்கம். டிக்கெட் கவுண்டருக்குச் செல்லும் பகுதியை ஆல்டர் செய்து கோழிப் பண்ணை அமைத்திருந்தார்கள்.

அருகில் சென்றேன்.

“தம்பிக்கு எவ்ளோ?” என்றார் உள்ளிருந்தவர்.

“ஒரு கிலோ” என்றவாறே, “ஆமா, தியேட்டருக்குள்ளே என்னண்ணே இருக்கு?” என்றேன். கோழியின் தலையை வெட்டிக் கொண்டே, “இது குடோனாயிருச்சி தம்பி” என்றார். எனக்கு உயிர் போனது.

அதன் அழுக்கடைந்த வெளிப் புறச் சுவரில் சங்கரன்கோவில் தியேட்டர் வால்போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தியேட்டர் ஆபரேட்டர் கோழிகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருந்தார். கோழிப் பண்ணைக்கு வருபவர்கள் உட்காரப் போட்டிருந்த பெஞ்சு, தியேட்டரில் கிடந்த எத்தனையோ பெஞ்சுகளில் ஒன்று. அதில் உட்கார்ந்து பார்த்தேன். மனம் எங்கும் நிலை கொள்ளாமல் சுற்றித் திரிந்தது.

சிறு வயதில் தியேட்டருக்குப் போவதென்றாலே திருவிழாவுக்குப் போவது போல் இருக்கும். ஏதோ போருக்குப் போவது போல பெண்களின் கூட்டம் படையெடுக்கும். போர்க் கருவிகள் மாதிரி கையில் வாட்டர் கேன்களும் நொறுக்குத் தீனிகளும் அடங்கிய பைகளுடன் விரைவது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.

அப்பா எங்களைத் தியேட்டருக்கு அனுமதிப்பது அபூர்வம். சில நேரங்களில் அந்த அபூர்வம் நிகழ்ந்து விடும். தெருவோடு ஒரு பெரிய கூட்டமாய் போவோம். சாலையில் போகும் போது அம்மாவின் ஓட்ட நடைக்கு ஈடு கொடுத்து நடந்து போவேன். தியேட்டருக்குள் நுழைந்ததும் அம்மா என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்வாள். ‘இடுப்பில் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்க மாட்டார்கள்’ என்பது எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது.

அப்பெரிய அரங்கத்தில் மிகப் பெரிய ஜனத்திரளை பார்ப்பது அந்த வயதில் எனக்கு ஆச்சர்யம் கலந்த பயம். அங்கு தரை டிக்கெட், பெஞ்சு டிக்கெட், சோபா டிக்கெட் என்று வரிசைப்படுத்தப் பட்டிருக்கும். நாங்கள் எப்போதும் தரை டிக்கெட்தான். சரியான இடம் பார்த்து அம்மா உக்கார வைப்பாள். திரைக்கு அருகில் சென்று கதாநாயகன் வரும் நேரத்தில் கிழித்து வைத்திருந்த பேப்பரைத் தூவ அண்ணன் போய் விடுவான். கொண்டு வந்த தின்பண்டங்களை பங்கிடுவதில் எனக்கும் அக்காவுக்கும் சண்டைகள் அரங்கேறும்.

அம்மா பக்கத்து வீட்டு அத்தைகளை எல்லாம் அருகில் கூட்டி வைத்துக் கொள்வாள். தட்டு முறுக்கு விற்கும் சிறுவர்களின் சத்தமும், கூட்டத்தின் ஆர்ப்பரிப்பும், ஒலிபெருக்கியில் வரும் பாடலின் சத்தமும், வியர்வையின் நாற்றமும், மல்லிகைப்பூ வாசமும் அந்தத் தியேட்டரில் நிரம்பி வழியும்.

எந்தப் படம் ஆரம்பித்தாலும் பத்து நிமிடத்திற்கு மேல் நான் தூங்காமல் இருந்ததில்லை. “தூங்காமல் படம் பாரு…படம் பாரு…” என்று அம்மா எழுப்புவாள். ஆனால், சினிமாவுக்குப் போய் வந்தது பற்றி பள்ளிக்கூடத்தில் ஒரு வாரத்திற்கு கதை பேசுவேன்.

பக்கத்துவீட்டு அந்தோணியம்மா அத்தை வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் மாலை நேரக் காட்சிக்குப் போய் விடுவாள். ஜெயரத்தினம் அத்தை சிவாஜியின் பரம ரசிகை. சிவாஜி நடித்த படமென்றால் தினமும்கூட சினிமாவுக்குப் போவாள். ஆனால், எம்.ஜி.ஆர்., சிவாஜி காலமெல்லாம் போய், ரஜினி, கமல் என்று வந்த பின் சினிமாவுக்குப் போவதையே நிறுத்திக் கொண்டாள்.

மேரி மதினியோடு போன ‘மூவேந்தர்’ படத்தைத்தான் முதல் முறையாக முழுவதும் பார்த்தேன். வீட்டிற்கு வந்ததும், “அத்தே இன்னைக்கு தங்கராசு தூங்காம படம் பாத்தான்த்தே!” என்று அம்மாவிடம் மதினி சொன்னதும் பெரிய மனுஷன் ஆகி விட்டது போல உணர்ந்தேன்.Balasubramaniam Theatreமூன்றாவது படிக்கும் போது பள்ளிக் கூடத்திலிருந்து ‘சுட்டிக் குழந்தை’ படத்திற்கு கூட்டிட்டுப் போனாங்க. காணாமல் போகும் குழந்தையைப் பற்றி வரும் அந்தப் படம். படம் முடிந்து வரும் போது நானும் காணாமல் போய் விடுவேனோ என்ற பயத்தில் ரஷ்யா டீச்சர் பின்னாலேயே ஒண்டி வந்தது, இன்னும் நினைவில் இருக்கிறது.

கொஞ்சம் விபரம் தெரிந்த பிறகு அண்ணனோடு பார்த்த படங்கள், நண்பர்களோடு பார்த்த படங்கள் என்று நான் பார்த்த படங்களின் பட்டியல் நீளும்.

ஒரு ருசிகரமான விஷயம் என்னவென்றால் அந்தத் தியேட்டரில் எந்தப் படம் தொடங்கும் முன்னரும் ஒரு முருகர் பாடல் போட்ட பின்பே படத்தைத் தொடங்குவர். “கல்லானாலும்…” என்ற அந்தப் பாடல் தொடங்கியதும் மொத்தக் கூட்டமும் அமைதியாகி படம் பார்க்கத் தயாராகிவிடும். இப்போது அங்கு ஆட்களில்லா அமைதியே நிலவுகிறது. அந்த முருகர் பாடல் மட்டும் என் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இடைவேளையின் போது போடப்படும் விளம்பர சிலைடுகளில் சைக்கிள் கடை, கலர் கம்பெனி, பலசரக்குக் கடை, மெடிக்கல் கடை என ஊரில் உள்ள அத்தனை கடைகளும் வலம் வரும்.

தீப்பெட்டித் தொழில் செல்வாக்கோடு இருந்த காலத்தில் ஊருக்குக் கிழக்கே ஸ்ரீராமசாமி டூரிங் டாக்கீசும் இருந்திருக்கிறது. இரண்டிலும் போட்டி போட்டு படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

தியேட்டரின் அந்திமக் காலங்களில் இரண்டு நபர்களுக்குக் கூட காட்சி நடத்தியது பற்றி கோழிப் பண்ணைக்காரர் கூறினார். இந்தத் தியேட்டரின் முடிவுக்குப் பின்னால் பல பொருளாதாரத் தொழில் நுட்பக் காரணங்கள் ஒழிந்துள்ளன.

தொலைக்காட்சி தொடர்கள் 90-களின் இறுதிக்குப் பின்னால் பெண்களின் கூட்டம் திரைப்படத்தை விடுத்து, தொலைக்காட்சித் தொடர்களில் தங்களை இணைத்துக் கொண்டனர். எனவே இயக்குனர்களும் பெண்களை மறந்து இளைஞர்களுக்காகவும், காதலர்களுக்காகவும் படம் எடுக்கத் தொடங்கினர். மேலும், குறுந்தட்டுகளின் பலவித வரவால், எந்தப் படத்தையும் குறைந்த செலவில் மக்கள் வீட்டிலேயே பார்க்கத் தொடங்கினர்.

ஒரு திரைப்படத்தை அரங்கில் தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை. நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் அலை பேசியிலோ, ஐ-பேடிலோ, மடிக் கணினியிலோ, இணைய வழியிலோ பார்த்துக் கொள்ளலாம். இத்தகைய சாதனங்கள் நமது விருப்பத்தை எளிதில் தீர்த்து வைத்தாலும், நமக்கும் சமூகத்துக்குமான உறவை ரகசியமாகத் துண்டித்து விடுகின்றன.

திரையரங்கம் என்பது வெறும் திரைப்படங்களை திரையிடுவதற்கான அரங்கம் மட்டுமல்ல; அது மகிழ்ச்சியின் ஒரு வெளி. சாதி, மத வேற்றுமைகளைக் கடந்து, உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாகுபாடின்றி கூடி மகிழ்கிற ஒரே இடம் திரையரங்கம் மட்டுமே. எனவே, திரையரங்கை ஒரு முற்போக்கு சமுதாயத்தின் குறியீடு எனலாம். கழுகுமலை இந்தக் குறியீட்டை இப்போது இழந்து நிற்கிறது.Balasubramaniam Theatre‘சினிமா பாரடைசோ’ என்ற இத்தாலியப் படத்தில், ஒரு திரைப்பட இயக்குனர் தன் வாலிப வயதில் தான் மிகவும் நேசித்த ஒரு திரையரங்கையும் அதன் ஆபரேட்டரையும் நினைத்துப் பார்ப்பதே படத்தின் கதை. படத்தில் வரும் அந்த இயக்குனருக்கு அந்தத் தியேட்டர் என்பது கல், மணலால் கட்டிய ஒரு கட்டடம் அல்ல. உயிருள்ள ஒரு ஜீவன். அதனால்தான், படத்தின் முடிவில் அந்தத் தியேட்டர் இடிக்கப்படும் போது அவரால் அழ முடிகிறது. எனக்கும் கூட இதை வெறும் கட்டடமாகப் பார்க்க மனம் வரவில்லை. வயதான காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு தாயைப் பார்ப்பது போலத்தான் இருந்தது.

“தம்பி, கறி ரெடி!”

‘கனீரென்று’, என் நினைவுகளை உடைத்துக் கொண்டு வந்த குரலின் பக்கம் திரும்பினேன்.

பணத்தைக் கொடுத்து, அவர் நீட்டிய கருப்பு கேரி பேக் பார்சலை வாங்கிக் கொண்டேன். மறக்க முடியாத மனதோடு என் சைக்கிளில் கிளம்பினேன்.

கம்மவார் ஸ்கூல் முக்குத் திரும்பும்போது என்னை அறியாமல் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன்.

‘தியேட்டர்’ என்னையே பார்த்துக் கொண்டிருந்தது!

* * *

Advertisements
 

8 responses to “கழுகுமலை ‘தியேட்டர்’

 1. Asin sir

  28/12/2012 at 6:21 பிப

  தங்கராஜ் உன் கட்டுரை என்னையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

  தாய்மார்கள் ஓட்டமும் நடையுமாகத் தியேட்டருக்குச் செல்வதை நானும் பார்த்திருக்கிறேன்.

  கழுகுமலை ஸ்ரீராமசாமி தியேட்டரில் தரை டிக்கெட் எடுத்தவர்கள் உட்கார ஆற்று மணலைப் பரப்பி வைத்திருப்பார்கள். மறைக்காமல் படம் பார்ப்பதற்காக மணலைக் கூட்டி வைத்து அதில் உட்கார்பவரும், பின்னால் இருப்பவர் அந்த மணல் திட்டை அடியில் சுரண்டி, கம்பீரமாக அமர்ந்திருப்பவரை கமுக்கமாகக் கீழே இறக்கி விடுவதும் சுவாரஸ்யமாக நிகழும் அங்கே. மேலும், தரை டிக்கெட்டில் ஆண்-பெண் பகுதியைப் பிரிக்கும் மரத்தட்டிகள் உண்டு. யார் கூட்டம் பெரும்பான்மையோ அதற்கேற்ப தட்டிகளை நகர்த்தி வைப்பர்.

  இடைவேளையின் போது போடப்படும் விளம்பர சிலைடுகள் தவிர, படம் ஓடிக்கொண்டிருக்கும் போது போடப்படும் “பொய்யாமணி, சேசு வாத்தியார் உடனே வெளியே வரவும்” போன்ற எமர்ஜென்சி அழைப்பு சிலைடுகளும் கவனத்தைத் திருப்பும்.

  தீபாவளி, பொங்கல் என்றால் கிராமங்களில் இருந்து டிராக்டர் வண்டிகளில் கூட்டங் கூட்டமாகப் படம் பார்க்க வரும் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து நானே மலைத்திருக்கிறேன்.

  ‘முந்தானை முடிச்சு, விதி, எங்க ஊரு பாட்டுக்காரன்’ – இவையெல்லாம் டிக்கெட் எடுத்தும் தியேட்டருக்குள் நுழைய முடியாமல் நான் வாசலிலேயே நின்று பார்த்த படங்கள்.

  விசாகம் போன்ற விழா நாள்களில் ‘நடு இரவு’ காட்சியும் உண்டு.

  ‘ம்ம்ம்… இதெல்லாம் இழந்த சொர்க்கமாகி விட்டது!’

   
 2. சட்டநாதன்

  29/12/2012 at 9:53 முப

  கிழக்கே இருந்த தியேட்டர் தீயில் எரிந்து போவதற்கு முன்னால் ‘திருவருட்செல்வர்’ படம் பார்த்தேன்.

  இந்த பாலசுப்ரமணியம் தியேட்டர்ல கடைசியா நான் பார்த்த படம் “படையப்பா”, டிக்கட் வாங்குனவங்களுக்கு குலுக்கல் முறையில் தங்க மோதிரம் என்றெல்லாம் அறிவித்தார்கள். இந்தத் தியேட்டரை மூடிவிட்டது தெரியாது, உண்மையில் நீங்கள் சொல்லிய அத்தனை வழிகளிலும் படம் பார்ப்பதால், கழுகுமலை வந்தால் தியேட்டர் பக்கமே போவதில்லை.

  எவ்வளோவோ சுவாரஸ்யமான நிகழ்வுகளை கிளறி விட்டு விட்டது இந்தப் பதிவு.
  பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது, ‘வெள்ளத்துரை சார் ஸ்டடியை’-கட் அடிச்சிட்டு படம் பாக்கப் போய் மாட்டிக்கிட்ட கதையை எல்லாம் அலெக்ஸ் எழுதினால் சுவாரஸ்யமாக இருக்கும். நமக்கு அந்த அளவுக்கு தைரியம் கிடையாது என்பதால் அந்த குரூப்போடு நான் போகவில்லை.

   
 3. rejira

  29/12/2012 at 10:43 பிப

  நானும் ஸ்கூலில இருந்து போய் இந்தத் தியேட்டருல ‘கிங் காங்’ படம் பாத்திருக்கிறேன். இப்போ உள்ள ஸ்டூடண்சுக்கு எஜுகேட்டிவ் மூவிஸ் தியேட்டருல போய் பாக்க உள்ளூரில வாய்ப்பில்ல, வெளியூருக்குதான் போகணும்.

   
 4. Alex Ambrose

  03/01/2013 at 2:27 முப

  நிறைய ஞாபகங்களை நினைவூட்டுகிறது இந்தப் பதிவு. சட்டநாதன் சொல்வது உண்மைதான். ஆனால் வெள்ளத்துரை சார் ஸ்டடி அல்ல. ராஜேந்திரன் சார் ஸ்டடியை கட் அடிச்சுட்டு, எல்லா குரூப் லீடர்கள் உட்பட அனைவரும் “படையப்பா” படம் பார்க்க போனோம். வள்ளிநாயகத்துடன் திடீர் விசிட் வந்த ராஜேந்திரன் சார் எல்லோரையும் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களை முன்னரே பார்த்த நாங்களோ, பயத்தில் தரை டிக்கெட்க்கு உள்ள சுவற்றின் பின்புறம் ஒளிந்து கொண்டிருந்தோம். அதன் பின்னர், எங்களைக் கண்டு பிடித்து, தேனுமணி கட்டடம் கட்டுவதற்கு செங்கல் சுமக்க, செடிக்கு தண்ணீர் எடுத்து ஊற்ற சொல்லிவிட்டனர். 🙂 🙂

   
 5. Thadeus Anand

  05/01/2013 at 8:19 முப

  அப்பா, அம்மா, அக்கா, தம்பி என முழுக் குடும்பமும் சேர்ந்து 1970-களில் படம் பார்க்கப் போனது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. இருந்த ஒரு வரிசை சேர்களில் கயிறு கட்டி ரிசர்வேஷன் செய்து வைத்திருப்பார்கள். எனக்கோ, என்ன படம் பார்க்கப் போகிறோம் என்பதை விட, இடைவேளை எப்போது வரும், முறுக்கும் கலரும் எப்போது கிடைக்கும் என்பதிலேயே கவனம் இருக்கும். தரையில் படுத்துக்கொண்டு படம் பார்ப்பவர்களைப் பார்த்துப் பொறாமையாக இருக்கும். பின்னர் ஒரு நாள் முதன்முதலாகத் தரையில் உட்கார்ந்து (படுத்து) படம் பார்த்தபோது பட்டாபிஷேகம் பெற்றதுபோன்ற உணர்வு வந்தது.

  சிறு வயதில் ஜெய்சங்கரின் பரம விசிறி நான். தமிழகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்ற பட்டப் பெயர் அப்போது அவருக்கு உண்டு. ஞாயிற்றுக் கிழமை மதியக் காட்சியில் அவர் நடித்த சண்டைப் படம் போடுவார்கள். அதற்கு அப்பாவிடம் அனுமதியும், ஒரு ரூபாய் காசும் வாங்கிக்கொண்டு குறுக்கு வழியில் ஓடிய நினைவு இருக்கிறது. குறுக்கு வழி என்பது இன்றைய பஸ் ஸ்டாண்ட் பக்கம் துவங்கி நேராக ஓடை வழியாகச் சென்று திரை அரங்கில் முடியும். இப்போது அந்த ஓடை உயிருடன் இருக்கிறதா அல்லது ரியல் எஸ்டேட் பூதத்தால் விழுங்கப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை.

  சிறு வயதில் ஒரு தீபாவளி நேரம். எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் படம் ரிலீஸ். மனதில் துப்பாக்கியுடன் சிங்கத்தை அவர் துரத்துவது போல் எனக்கு நானே ட்ரெய்லர் ஓட்டிக்கொண்டு மேட்னி ஷோவுக்கு ஓடினேன். உள்ளே ஏற்கெனவே படம் ஓடிக்கொண்டிருக்க, வெளியே கேட் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. கேட்டைப் பிடித்துக்கொண்டு ஆவலுடன் காத்திருந்த நான், சில நிமிடங்கள் கழித்துத் திரும்பிப் பார்த்தால் என்னைச் சுற்றிப் பெரும் கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. எல்லோரும் கேட்டை நெருங்க முயற்சி செய்ய, அசுரர்களின் நடுவில் மாட்டிக்கொண்ட குள்ளன் போல் ஆனேன். கொஞ்ச நேரத்தில் நசுங்கி மூச்சு விட முடியாமல் போய் மிரண்டு நான் கூச்சலிட ஆரம்பிக்க, இரக்க குணத்துடன் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கூட்டத்திற்கு வெளியே கொண்டு போய் விட்டார்கள். திரும்பிப் பார்த்தால் கேட்டுக்கும் எனக்கும் இடையில் முப்பதடி தூரமும், முன்னூறு பேர் கொண்ட கூட்டமும் இருந்தது. டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன். அதற்குப் பின் இன்று வரை தீபாவளி ரிலீஸ் படம் பார்க்க தீபாவளி அன்று நான் போனது இல்லை.

  முருகன் கோவிலை நெருங்கும்போதே மருத மலை மாமணியே முருகய்யா என்று மதுரை சோமு பாடல் தியேட்டரில் இருந்து கேட்கும். மேற்கே ஒலிக்கும் சங்கொலி கிழக்கே எங்கள் வீட்டில் தெளிவாகக் கேட்கும். யோசித்துப் பார்த்தால் இன்று இவ்வளவு தூரம் எந்த ஒலியும் பரவுவது இல்லை என்பது வியப்பளிக்கிறது. Noise pollution என்பது நகரங்களின் பிரச்சினை மட்டும் இல்லை.

  1990-குப் பிறகு கழுகுமலையில் நான் பார்த்த படங்களின் எண்ணிக்கை நிச்சயம் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாது. கடைசியாக ஸ்ரீ பாலசுப்ரமணியா டாக்கீஸில் என்ன படம் பார்த்தேன் என்றுகூட நினைவில்லை. ஆனால் பஸ் பிடித்து கோவில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் சென்று படம் பார்க்கும் அளவு ஆர்வம் உள்ளவர்கள் இன்னும் இருக்கும் காலத்தில் உள்ளூரில் ஒரு திரை அரங்கு நிலைக்காமல் போனது நிச்சயம் வருத்தம் அளிக்கிறது.

  தரை – 40 பைசா என்று டிக்கெட் கவுண்டருக்குச் செல்லும் வழியில் எழுதி வைத்திருப்பார்கள். சாய்வான அந்த எழுத்து வடிவம் கூட இன்னும் நினைவிருக்கிறது. இன்று சத்யம் அல்லது ஐநாக்ஸ் தியேட்டரில் நூற்றிருபது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும்போது நாற்பது பைசாவில் இருந்த வேகமும் ஆர்வமும் எங்கே போயின என்று தெரியவில்லை. ஒரு வேளை சத்யம் தியேட்டரில் ஜெய்சங்கர் படம் போட்டால் திரும்ப வருமோ என்னவோ.

   
  • Asin sir

   05/01/2013 at 4:30 பிப

   தங்களின் விரிவான பகிர்வுக்கு நன்றி ஆனந்த்.

    
 6. jeevaraj

  16/06/2013 at 3:25 பிப

  i got some money from theater sand so i got very happy that time

   
 7. jeevaraj

  06/07/2013 at 10:17 பிப

  தங்கராஜ் உன்னுடைய தியேட்டர் நினைவுகள் என்னையும் திரும்பி பார்க்க வைத்தது.
  இப்படிக்கு,
  என்றும் “கழுகுமலை” மண் வாசனையில் ஜீவராஜ்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: