RSS

கழுகுமலை: அகநகர் முகவலம்

19 டிசம்பர்

அசின் சார், கழுகுமலை.கழுகுமலைஇப்பகுதியில் கழுகுமலையைச் சார்ந்த சில மனிதர்களைப் பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். காலம் விழுங்கியும் விழுங்காமலும் இருக்கும் இம்மனிதர்கள் கால ஓட்டத்தில் கரைந்து போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இப்பதிவுகள். இவை கழுகுமலைக் காரர்களுக்கு நெருக்கமானதாக இருக்கலாம். மற்றவர்களுக்கு இப்பதிவுகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் ஒரு செய்தியைத் தரும் என்று நம்புகிறேன். இந்தப் பதிவில்…

முகவலம்: கி. முத்து

ஓர் அறிவியல் அறிஞர், ஒரு தத்துவ ஞானி, ஒரு முதிர்ந்த சந்நியாசி… இப்படியெல்லாம் சொல்லும் போதே உங்களுக்குள் ஒரு தோற்றம் வருகிறதே, அப்படி ஒருவர். அவரின் தலை முடி அத்தனையும் நரைத்துப் போய் எண்ணைப் பசையற்று இருக்கும். அவற்றோடுள்ள மீசையும், அதோடு வழிந்து தொங்கும் தாடியும் கொண்ட பெரியவர் அவர். பெயிண்டின் வண்ணங்கள் கொட்டி அங்குமிங்கும் அழுக்காகப் படிந்திருக்கும் வெள்ளை(?) ஜிப்பா, வேஷ்டி! கையில் எப்போதும் புகையைக் கக்கிக் கொண்டிருக்கும் பீடி. இவர்தான் கழுகுமலையின் பிரபல ஓவியர் கி.முத்து.

ஓவியர் கி.முத்து.கி.பி.1927- ல் கழுகுமலை கிருஷ்ணன்-முத்தம்மாள் தம்பதியினருக்கு தலை மகவாய்ப் பிறந்தவர் முத்து. இவர் கழுகுமலை ஏட்டுப்பள்ளியில் தன் படிப்பை முடித்துவிட்டு, தேனி பிரசிடென்ட் கான்வென்டில் சேர்ந்தார். அங்கு தேர்ட் பார்ம் (அப்போதிருந்த படிப்பு) முடித்தார். அந்த நேரத்தில் இது ஆசிரியப் பணிக்குச் செல்லத் தகுதியான படிப்பாம். அப்போது தேனியில் உதவித் தந்தையாக இருந்த அருட்திரு. அருளானந்தரின் தொடர்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இதன் பின் கிறிஸ்தவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு, 1936-ல் கத்தோலிக்க சபையில் ‘ஞானப்பிரகாசம்’ என்ற பெயரில் ‘திருமுழுக்கு’ பெற்றிருக்கிறார்.

இவருடைய இளம் வயதில் ஓவியம் வரையும் திறனை இயல்பாகவே பெற்றிருந்ததால், அதனை மேலும் வளர்த்துக் கொள்ள கோவில்பட்டி கொண்டல்ராஜ் ஓவியப் பள்ளிக்குச் சென்றுள்ளார். இவரது ஓவியத் திறனைப் பார்த்த அங்குள்ள ஆசிரியர், “உனக்கு இதற்கு மேலும் சொல்லிக் கொடுக்க ஒன்னுமில்ல” என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். அதன்பின் மதுரை சோணமுத்து என்பவரிடம் முறைப்படி சித்திரம் மற்றும் சிற்பக்கலை கற்றுள்ளார். அப்படிப்பில் உள்ள பாடங்கள் குறித்தும், சித்திர சிற்ப வேலையின் போது கையாள வேண்டியவை குறித்தும் நம்மிடம் விளக்கினார். சான்றாக, மனித மூக்கின் நீளமே புருவத்தின் நீளமாக இருக்கும் என்று சொல்லி அளந்து காட்டினார். சரியாக இருந்தது.முத்து வரைந்த கந்த புராண ஓவியம். கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் அவர் வரைந்துள்ள கந்த புராண ஓவியங்கள் குறித்துக் கேட்டோம். அவற்றை வரைவதற்கு முன், கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் முழுவதும் படித்து முடித்ததாகக் கூறினார். ஏனெனில், அதில் வருகின்ற சூழல்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள், அணிகின்ற ஆபரணங்கள், செய்யப்படும் அலங்காரங்கள் போன்றவற்றை மனதிற் கொண்டு, அவற்றை 27 படங்களில் வரைந்ததாகக் கூறினார். மேலும், மகாபாரதம், இராமாயணம், கிறிஸ்தவர்களின் திருவிவிலியம் ஆகியவற்றை முழுமையாகப் படித்துள்ளதாகக் கூறினார். ஓர் ஓவியன் புராண, தெய்வப் படங்களை வரையும் முன், அவை சார்ந்த நூல்களைப் படித்து விட்டு வரைவது மிக முக்கியம் என்றார்.

ஜெமினி, வாஹினி போன்ற ஸ்டுடியோக்களில் இருந்து சினிமாத்துறைக்கு இவரை அழைத்த போது, அதில் நாட்டமின்றி போக மறுத்து விட்டார். ஆரம்ப காலத்தில் சினிமா நடிகர், நடிகைகளை விளம்பரப் பலகையில் வரைந்து வந்தவர், காலப் போக்கில் தெய்வப் படங்கள் தவிர பிற படங்கள் வரைவதை நிறுத்திக் கொண்டார். இவரிடம் ஓவியம் கற்ற பலர் இன்றும் கமர்ஷியல் ஓவியர்களாகத் திகழ்கின்றனர்.ஒரு கால கட்டத்தில், கழுகுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள கோவில்கள் அனைத்திலும் இவருடைய ஓவியங்களே பக்திச் சுவையுடன் அனைவர் கண்களையும் ஈர்த்தன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவருடைய ஓவியங்களைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியுள்ளார். தமிழக அரசு இவரது பணியைப் பாராட்டி மாதந்தோறும் இவருக்கு உதவித் தொகை தந்துள்ளது.

நூற்றாண்டுப் பழமையுடைய கழுகுமலை ஆர்.சி.சர்ச் கட்டுமானப் பணியில் இவரது தந்தை கிருஷ்ணன், சித்தப்பா இரகுராமன் ஆகியோர் ஈடுபட்டிருந்ததாகக் கூறினார். கழுகுமலையில் ஒரே சமயத்தில் அநேகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிய வரலாற்று நிகழ்வு குறித்துக் கேட்டதற்கு, அதை நம்ம ஊர் ஜார்ஜ் பாதர் “இரத்தத்தில் திருமுழுக்கு” என்ற நூலில் நன்றாக எழுதியுள்ளார். ‘அதெல்லாம் உண்மைதான்’ என்றார்.

1935-ல் கழுகுமலை வந்த காந்தியடிகள், சரஸ்வதி வாசகசாலை ஸ்தூபியை நிறுவி, கீழபஜாரின் தென் மூலையில் நின்று சொற்பொழிவாற்றிச் சென்றார். அதற்குப் பின்பே அவ்விடம் ‘காந்தி மைதானம்’ என்று அழைக்கப்படுவதாகக் கூறினார்.

1942 -ல் முத்து, கொழும்பில் உள்ள ‘யூனியன் பிளேஸ்’ என்ற இடத்திலுள்ள ஒரு கம்பெனியில் சேல்ஸ் மேனாக வேலை செய்துள்ளார். அப்போது இவருடன் நடிகர் சந்திரபாபுவும் வேலையில் இருந்துள்ளார். பின்புதான் சந்திரபாபு சினிமாவுக்குப் போனதாகக் கூறினார். எப்போதும் ஆட்டம் பாட்டம்னு இருக்கும் அவன் எனக்குக் குத்திய பச்சை இது என்று தன் வலக்கை மணிக்கட்டைக் காண்பிக்க, அதில் சிலுவையின் படம் இருந்தது.

முத்து, சந்திரபாபு இருவரில், சந்திரபாபு தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உலகமே அறியும் படி உயர்ந்தார். வசதியான வாழ்க்கையையும் அனுபவித்தார். ஆனால், முத்து தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதால், அவருடைய கலைத்திறனை அதற்கு மேல் வளர்க்க முடியவில்லை; வறுமை வாழ்க்கையையும் அவரால் விரட்ட முடியவில்லை. தன்னுடைய இறுதிக் காலத்தை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலிலேயே வாழ்ந்து முடித்தார்.ஓவியர் கி.முத்து.2010-ல் அவரிறந்த பின், இன்றுள்ள இளையோருக்கு இப்படியொரு கலைஞர் கழுகுமலையில் வாழ்ந்தார் என்பதே தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காகவே இச்சிறு பதிவு.

“திறமை நமக்குக் கடவுள் தந்த கொடை. அதை நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளோடு வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து, காலத்தோடு கை கோர்த்து நவீனப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இதைத் தவற விட்டவர்களைக் காலம் தவற விட்டுவிடும் என்பதே உண்மை!”

(2003 –ல் என் வகுப்பு மலருக்காக மாணவர்களுடன் கி.முத்து அவர்களைச் சந்தித்த போது, அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட செய்திகளே இவை.)

 

9 responses to “கழுகுமலை: அகநகர் முகவலம்

 1. சட்டநாதன்

  20/12/2012 at 6:50 முப

  இவரைப் பார்த்திருக்கிறேன், இவர் வரைந்த ஓவியங்களை ரசித்திருக்கிறேன். அதைத் தவிர நீங்கள் சொன்ன அத்தனை தகவல்களும் முற்றிலும் புதியவை. இவர் கிறிஸ்தவத்தில் இருந்திருக்கிறார் என்பது ஆச்சர்யம். எந்நேரமும் முருகன் கோவிலில் தான் இருந்தார் என்பதால் யாருக்கும் தெரிந்திருக்காது.

  சிறு குறிப்பு போல இருந்தாலும் புதிய செய்திகளைச் சொல்லும் நல்ல பதிவு. இன்னும் நிறைய பேரை அறிமுகப் படுத்துங்கள்.

   
 2. Alex Ambrose

  03/01/2013 at 2:44 முப

  இவரைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை நான். “இவரைப் போன்ற கலைஞர்களை தெரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று” என்ற தெளிவினைக் கொடுத்தது இந்தப் பதிவு. நிச்சயம் வரவேற்க வேண்டிய பதிவு இது.

   
 3. johnvictor

  23/02/2013 at 3:50 பிப

  டியர் அசின்,
  இது ஒரு கலைக்கூடம்.
  என்னால் கழுகுமலையை மறக்க முடியாது.
  அங்குள்ள மக்களின் பங்கு அப்படிப்பட்டது.
  – விக்டர், சென்னை.

   
 4. சித்திரவீதிக்காரன்

  10/04/2013 at 10:08 பிப

  ஓவியர் முத்து அய்யாவைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. அவருடைய ஓவியங்களைப் பார்ப்பதற்காக கழுகுமலை கோயிலுக்கு ஒருமுறை வரவேண்டும். எளிமையாக வாழ்ந்த நல்ல மனிதரைக் குறித்த தங்கள் பதிவு அருமை. நன்றி.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: