RSS

Monthly Archives: திசெம்பர் 2012

கழுகுமலை ‘தியேட்டர்’

‘கழுகுமலை’ ஜெ.மரிய தங்கராஜ்Balasubramaniam Theatreகோழிக்கறி வாங்கி வரச் சொல்லி அம்மா பையைக் கொடுத்தாள்.

“கெழக்க வாங்கிராத, வெல சாஸ்தியா இருக்கும். மேற்க பண்ணையில போயி வாங்கு.”

அம்மாவின் அட்வைஸை காதில் போட்டுக் கொண்டு சைக்கிளில் கிளம்பினேன். அவள் சொன்ன பண்ணை என்பது ஒரு காலத்தில் எங்க ஊர் மக்களுக்கு பெரும்பங்கு சந்தோசத்தை அளித்த ‘ஸ்ரீபாலசுப்ரமணியம் டாக்கீஸ்’தான் அது.

அந்தத் தியேட்டரில் திரைப்படங்கள் திரையிடுவதை நிறுத்தி இரண்டு வருடமாகிறது. மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது அந்தப் பிரமாண்ட அரங்கம். டிக்கெட் கவுண்டருக்குச் செல்லும் பகுதியை ஆல்டர் செய்து கோழிப் பண்ணை அமைத்திருந்தார்கள்.

அருகில் சென்றேன்.

“தம்பிக்கு எவ்ளோ?” என்றார் உள்ளிருந்தவர்.

“ஒரு கிலோ” என்றவாறே, “ஆமா, தியேட்டருக்குள்ளே என்னண்ணே இருக்கு?” என்றேன். கோழியின் தலையை வெட்டிக் கொண்டே, “இது குடோனாயிருச்சி தம்பி” என்றார். எனக்கு உயிர் போனது.

அதன் அழுக்கடைந்த வெளிப் புறச் சுவரில் சங்கரன்கோவில் தியேட்டர் வால்போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தியேட்டர் ஆபரேட்டர் கோழிகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருந்தார். கோழிப் பண்ணைக்கு வருபவர்கள் உட்காரப் போட்டிருந்த பெஞ்சு, தியேட்டரில் கிடந்த எத்தனையோ பெஞ்சுகளில் ஒன்று. அதில் உட்கார்ந்து பார்த்தேன். மனம் எங்கும் நிலை கொள்ளாமல் சுற்றித் திரிந்தது.

சிறு வயதில் தியேட்டருக்குப் போவதென்றாலே திருவிழாவுக்குப் போவது போல் இருக்கும். ஏதோ போருக்குப் போவது போல பெண்களின் கூட்டம் படையெடுக்கும். போர்க் கருவிகள் மாதிரி கையில் வாட்டர் கேன்களும் நொறுக்குத் தீனிகளும் அடங்கிய பைகளுடன் விரைவது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.

அப்பா எங்களைத் தியேட்டருக்கு அனுமதிப்பது அபூர்வம். சில நேரங்களில் அந்த அபூர்வம் நிகழ்ந்து விடும். தெருவோடு ஒரு பெரிய கூட்டமாய் போவோம். சாலையில் போகும் போது அம்மாவின் ஓட்ட நடைக்கு ஈடு கொடுத்து நடந்து போவேன். தியேட்டருக்குள் நுழைந்ததும் அம்மா என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்வாள். ‘இடுப்பில் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கேட்க மாட்டார்கள்’ என்பது எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது.

அப்பெரிய அரங்கத்தில் மிகப் பெரிய ஜனத்திரளை பார்ப்பது அந்த வயதில் எனக்கு ஆச்சர்யம் கலந்த பயம். அங்கு தரை டிக்கெட், பெஞ்சு டிக்கெட், சோபா டிக்கெட் என்று வரிசைப்படுத்தப் பட்டிருக்கும். நாங்கள் எப்போதும் தரை டிக்கெட்தான். சரியான இடம் பார்த்து அம்மா உக்கார வைப்பாள். திரைக்கு அருகில் சென்று கதாநாயகன் வரும் நேரத்தில் கிழித்து வைத்திருந்த பேப்பரைத் தூவ அண்ணன் போய் விடுவான். கொண்டு வந்த தின்பண்டங்களை பங்கிடுவதில் எனக்கும் அக்காவுக்கும் சண்டைகள் அரங்கேறும்.

அம்மா பக்கத்து வீட்டு அத்தைகளை எல்லாம் அருகில் கூட்டி வைத்துக் கொள்வாள். தட்டு முறுக்கு விற்கும் சிறுவர்களின் சத்தமும், கூட்டத்தின் ஆர்ப்பரிப்பும், ஒலிபெருக்கியில் வரும் பாடலின் சத்தமும், வியர்வையின் நாற்றமும், மல்லிகைப்பூ வாசமும் அந்தத் தியேட்டரில் நிரம்பி வழியும்.

எந்தப் படம் ஆரம்பித்தாலும் பத்து நிமிடத்திற்கு மேல் நான் தூங்காமல் இருந்ததில்லை. “தூங்காமல் படம் பாரு…படம் பாரு…” என்று அம்மா எழுப்புவாள். ஆனால், சினிமாவுக்குப் போய் வந்தது பற்றி பள்ளிக்கூடத்தில் ஒரு வாரத்திற்கு கதை பேசுவேன்.

பக்கத்துவீட்டு அந்தோணியம்மா அத்தை வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் மாலை நேரக் காட்சிக்குப் போய் விடுவாள். ஜெயரத்தினம் அத்தை சிவாஜியின் பரம ரசிகை. சிவாஜி நடித்த படமென்றால் தினமும்கூட சினிமாவுக்குப் போவாள். ஆனால், எம்.ஜி.ஆர்., சிவாஜி காலமெல்லாம் போய், ரஜினி, கமல் என்று வந்த பின் சினிமாவுக்குப் போவதையே நிறுத்திக் கொண்டாள்.

மேரி மதினியோடு போன ‘மூவேந்தர்’ படத்தைத்தான் முதல் முறையாக முழுவதும் பார்த்தேன். வீட்டிற்கு வந்ததும், “அத்தே இன்னைக்கு தங்கராசு தூங்காம படம் பாத்தான்த்தே!” என்று அம்மாவிடம் மதினி சொன்னதும் பெரிய மனுஷன் ஆகி விட்டது போல உணர்ந்தேன்.Balasubramaniam Theatreமூன்றாவது படிக்கும் போது பள்ளிக் கூடத்திலிருந்து ‘சுட்டிக் குழந்தை’ படத்திற்கு கூட்டிட்டுப் போனாங்க. காணாமல் போகும் குழந்தையைப் பற்றி வரும் அந்தப் படம். படம் முடிந்து வரும் போது நானும் காணாமல் போய் விடுவேனோ என்ற பயத்தில் ரஷ்யா டீச்சர் பின்னாலேயே ஒண்டி வந்தது, இன்னும் நினைவில் இருக்கிறது.

கொஞ்சம் விபரம் தெரிந்த பிறகு அண்ணனோடு பார்த்த படங்கள், நண்பர்களோடு பார்த்த படங்கள் என்று நான் பார்த்த படங்களின் பட்டியல் நீளும்.

ஒரு ருசிகரமான விஷயம் என்னவென்றால் அந்தத் தியேட்டரில் எந்தப் படம் தொடங்கும் முன்னரும் ஒரு முருகர் பாடல் போட்ட பின்பே படத்தைத் தொடங்குவர். “கல்லானாலும்…” என்ற அந்தப் பாடல் தொடங்கியதும் மொத்தக் கூட்டமும் அமைதியாகி படம் பார்க்கத் தயாராகிவிடும். இப்போது அங்கு ஆட்களில்லா அமைதியே நிலவுகிறது. அந்த முருகர் பாடல் மட்டும் என் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இடைவேளையின் போது போடப்படும் விளம்பர சிலைடுகளில் சைக்கிள் கடை, கலர் கம்பெனி, பலசரக்குக் கடை, மெடிக்கல் கடை என ஊரில் உள்ள அத்தனை கடைகளும் வலம் வரும்.

தீப்பெட்டித் தொழில் செல்வாக்கோடு இருந்த காலத்தில் ஊருக்குக் கிழக்கே ஸ்ரீராமசாமி டூரிங் டாக்கீசும் இருந்திருக்கிறது. இரண்டிலும் போட்டி போட்டு படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

தியேட்டரின் அந்திமக் காலங்களில் இரண்டு நபர்களுக்குக் கூட காட்சி நடத்தியது பற்றி கோழிப் பண்ணைக்காரர் கூறினார். இந்தத் தியேட்டரின் முடிவுக்குப் பின்னால் பல பொருளாதாரத் தொழில் நுட்பக் காரணங்கள் ஒழிந்துள்ளன.

தொலைக்காட்சி தொடர்கள் 90-களின் இறுதிக்குப் பின்னால் பெண்களின் கூட்டம் திரைப்படத்தை விடுத்து, தொலைக்காட்சித் தொடர்களில் தங்களை இணைத்துக் கொண்டனர். எனவே இயக்குனர்களும் பெண்களை மறந்து இளைஞர்களுக்காகவும், காதலர்களுக்காகவும் படம் எடுக்கத் தொடங்கினர். மேலும், குறுந்தட்டுகளின் பலவித வரவால், எந்தப் படத்தையும் குறைந்த செலவில் மக்கள் வீட்டிலேயே பார்க்கத் தொடங்கினர்.

ஒரு திரைப்படத்தை அரங்கில் தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை. நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் அலை பேசியிலோ, ஐ-பேடிலோ, மடிக் கணினியிலோ, இணைய வழியிலோ பார்த்துக் கொள்ளலாம். இத்தகைய சாதனங்கள் நமது விருப்பத்தை எளிதில் தீர்த்து வைத்தாலும், நமக்கும் சமூகத்துக்குமான உறவை ரகசியமாகத் துண்டித்து விடுகின்றன.

திரையரங்கம் என்பது வெறும் திரைப்படங்களை திரையிடுவதற்கான அரங்கம் மட்டுமல்ல; அது மகிழ்ச்சியின் ஒரு வெளி. சாதி, மத வேற்றுமைகளைக் கடந்து, உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாகுபாடின்றி கூடி மகிழ்கிற ஒரே இடம் திரையரங்கம் மட்டுமே. எனவே, திரையரங்கை ஒரு முற்போக்கு சமுதாயத்தின் குறியீடு எனலாம். கழுகுமலை இந்தக் குறியீட்டை இப்போது இழந்து நிற்கிறது.Balasubramaniam Theatre‘சினிமா பாரடைசோ’ என்ற இத்தாலியப் படத்தில், ஒரு திரைப்பட இயக்குனர் தன் வாலிப வயதில் தான் மிகவும் நேசித்த ஒரு திரையரங்கையும் அதன் ஆபரேட்டரையும் நினைத்துப் பார்ப்பதே படத்தின் கதை. படத்தில் வரும் அந்த இயக்குனருக்கு அந்தத் தியேட்டர் என்பது கல், மணலால் கட்டிய ஒரு கட்டடம் அல்ல. உயிருள்ள ஒரு ஜீவன். அதனால்தான், படத்தின் முடிவில் அந்தத் தியேட்டர் இடிக்கப்படும் போது அவரால் அழ முடிகிறது. எனக்கும் கூட இதை வெறும் கட்டடமாகப் பார்க்க மனம் வரவில்லை. வயதான காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு தாயைப் பார்ப்பது போலத்தான் இருந்தது.

“தம்பி, கறி ரெடி!”

‘கனீரென்று’, என் நினைவுகளை உடைத்துக் கொண்டு வந்த குரலின் பக்கம் திரும்பினேன்.

பணத்தைக் கொடுத்து, அவர் நீட்டிய கருப்பு கேரி பேக் பார்சலை வாங்கிக் கொண்டேன். மறக்க முடியாத மனதோடு என் சைக்கிளில் கிளம்பினேன்.

கம்மவார் ஸ்கூல் முக்குத் திரும்பும்போது என்னை அறியாமல் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன்.

‘தியேட்டர்’ என்னையே பார்த்துக் கொண்டிருந்தது!

* * *

 

கழுகுமலை: அகநகர் முகவலம்

அசின் சார், கழுகுமலை.கழுகுமலைஇப்பகுதியில் கழுகுமலையைச் சார்ந்த சில மனிதர்களைப் பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். காலம் விழுங்கியும் விழுங்காமலும் இருக்கும் இம்மனிதர்கள் கால ஓட்டத்தில் கரைந்து போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இப்பதிவுகள். இவை கழுகுமலைக் காரர்களுக்கு நெருக்கமானதாக இருக்கலாம். மற்றவர்களுக்கு இப்பதிவுகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் ஒரு செய்தியைத் தரும் என்று நம்புகிறேன். இந்தப் பதிவில்…

முகவலம்: கி. முத்து

ஓர் அறிவியல் அறிஞர், ஒரு தத்துவ ஞானி, ஒரு முதிர்ந்த சந்நியாசி… இப்படியெல்லாம் சொல்லும் போதே உங்களுக்குள் ஒரு தோற்றம் வருகிறதே, அப்படி ஒருவர். அவரின் தலை முடி அத்தனையும் நரைத்துப் போய் எண்ணைப் பசையற்று இருக்கும். அவற்றோடுள்ள மீசையும், அதோடு வழிந்து தொங்கும் தாடியும் கொண்ட பெரியவர் அவர். பெயிண்டின் வண்ணங்கள் கொட்டி அங்குமிங்கும் அழுக்காகப் படிந்திருக்கும் வெள்ளை(?) ஜிப்பா, வேஷ்டி! கையில் எப்போதும் புகையைக் கக்கிக் கொண்டிருக்கும் பீடி. இவர்தான் கழுகுமலையின் பிரபல ஓவியர் கி.முத்து.

ஓவியர் கி.முத்து.கி.பி.1927- ல் கழுகுமலை கிருஷ்ணன்-முத்தம்மாள் தம்பதியினருக்கு தலை மகவாய்ப் பிறந்தவர் முத்து. இவர் கழுகுமலை ஏட்டுப்பள்ளியில் தன் படிப்பை முடித்துவிட்டு, தேனி பிரசிடென்ட் கான்வென்டில் சேர்ந்தார். அங்கு தேர்ட் பார்ம் (அப்போதிருந்த படிப்பு) முடித்தார். அந்த நேரத்தில் இது ஆசிரியப் பணிக்குச் செல்லத் தகுதியான படிப்பாம். அப்போது தேனியில் உதவித் தந்தையாக இருந்த அருட்திரு. அருளானந்தரின் தொடர்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இதன் பின் கிறிஸ்தவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு, 1936-ல் கத்தோலிக்க சபையில் ‘ஞானப்பிரகாசம்’ என்ற பெயரில் ‘திருமுழுக்கு’ பெற்றிருக்கிறார்.

இவருடைய இளம் வயதில் ஓவியம் வரையும் திறனை இயல்பாகவே பெற்றிருந்ததால், அதனை மேலும் வளர்த்துக் கொள்ள கோவில்பட்டி கொண்டல்ராஜ் ஓவியப் பள்ளிக்குச் சென்றுள்ளார். இவரது ஓவியத் திறனைப் பார்த்த அங்குள்ள ஆசிரியர், “உனக்கு இதற்கு மேலும் சொல்லிக் கொடுக்க ஒன்னுமில்ல” என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். அதன்பின் மதுரை சோணமுத்து என்பவரிடம் முறைப்படி சித்திரம் மற்றும் சிற்பக்கலை கற்றுள்ளார். அப்படிப்பில் உள்ள பாடங்கள் குறித்தும், சித்திர சிற்ப வேலையின் போது கையாள வேண்டியவை குறித்தும் நம்மிடம் விளக்கினார். சான்றாக, மனித மூக்கின் நீளமே புருவத்தின் நீளமாக இருக்கும் என்று சொல்லி அளந்து காட்டினார். சரியாக இருந்தது.முத்து வரைந்த கந்த புராண ஓவியம். கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் அவர் வரைந்துள்ள கந்த புராண ஓவியங்கள் குறித்துக் கேட்டோம். அவற்றை வரைவதற்கு முன், கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் முழுவதும் படித்து முடித்ததாகக் கூறினார். ஏனெனில், அதில் வருகின்ற சூழல்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள், அணிகின்ற ஆபரணங்கள், செய்யப்படும் அலங்காரங்கள் போன்றவற்றை மனதிற் கொண்டு, அவற்றை 27 படங்களில் வரைந்ததாகக் கூறினார். மேலும், மகாபாரதம், இராமாயணம், கிறிஸ்தவர்களின் திருவிவிலியம் ஆகியவற்றை முழுமையாகப் படித்துள்ளதாகக் கூறினார். ஓர் ஓவியன் புராண, தெய்வப் படங்களை வரையும் முன், அவை சார்ந்த நூல்களைப் படித்து விட்டு வரைவது மிக முக்கியம் என்றார்.

ஜெமினி, வாஹினி போன்ற ஸ்டுடியோக்களில் இருந்து சினிமாத்துறைக்கு இவரை அழைத்த போது, அதில் நாட்டமின்றி போக மறுத்து விட்டார். ஆரம்ப காலத்தில் சினிமா நடிகர், நடிகைகளை விளம்பரப் பலகையில் வரைந்து வந்தவர், காலப் போக்கில் தெய்வப் படங்கள் தவிர பிற படங்கள் வரைவதை நிறுத்திக் கொண்டார். இவரிடம் ஓவியம் கற்ற பலர் இன்றும் கமர்ஷியல் ஓவியர்களாகத் திகழ்கின்றனர்.ஒரு கால கட்டத்தில், கழுகுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள கோவில்கள் அனைத்திலும் இவருடைய ஓவியங்களே பக்திச் சுவையுடன் அனைவர் கண்களையும் ஈர்த்தன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவருடைய ஓவியங்களைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியுள்ளார். தமிழக அரசு இவரது பணியைப் பாராட்டி மாதந்தோறும் இவருக்கு உதவித் தொகை தந்துள்ளது.

நூற்றாண்டுப் பழமையுடைய கழுகுமலை ஆர்.சி.சர்ச் கட்டுமானப் பணியில் இவரது தந்தை கிருஷ்ணன், சித்தப்பா இரகுராமன் ஆகியோர் ஈடுபட்டிருந்ததாகக் கூறினார். கழுகுமலையில் ஒரே சமயத்தில் அநேகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிய வரலாற்று நிகழ்வு குறித்துக் கேட்டதற்கு, அதை நம்ம ஊர் ஜார்ஜ் பாதர் “இரத்தத்தில் திருமுழுக்கு” என்ற நூலில் நன்றாக எழுதியுள்ளார். ‘அதெல்லாம் உண்மைதான்’ என்றார்.

1935-ல் கழுகுமலை வந்த காந்தியடிகள், சரஸ்வதி வாசகசாலை ஸ்தூபியை நிறுவி, கீழபஜாரின் தென் மூலையில் நின்று சொற்பொழிவாற்றிச் சென்றார். அதற்குப் பின்பே அவ்விடம் ‘காந்தி மைதானம்’ என்று அழைக்கப்படுவதாகக் கூறினார்.

1942 -ல் முத்து, கொழும்பில் உள்ள ‘யூனியன் பிளேஸ்’ என்ற இடத்திலுள்ள ஒரு கம்பெனியில் சேல்ஸ் மேனாக வேலை செய்துள்ளார். அப்போது இவருடன் நடிகர் சந்திரபாபுவும் வேலையில் இருந்துள்ளார். பின்புதான் சந்திரபாபு சினிமாவுக்குப் போனதாகக் கூறினார். எப்போதும் ஆட்டம் பாட்டம்னு இருக்கும் அவன் எனக்குக் குத்திய பச்சை இது என்று தன் வலக்கை மணிக்கட்டைக் காண்பிக்க, அதில் சிலுவையின் படம் இருந்தது.

முத்து, சந்திரபாபு இருவரில், சந்திரபாபு தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உலகமே அறியும் படி உயர்ந்தார். வசதியான வாழ்க்கையையும் அனுபவித்தார். ஆனால், முத்து தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதால், அவருடைய கலைத்திறனை அதற்கு மேல் வளர்க்க முடியவில்லை; வறுமை வாழ்க்கையையும் அவரால் விரட்ட முடியவில்லை. தன்னுடைய இறுதிக் காலத்தை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலிலேயே வாழ்ந்து முடித்தார்.ஓவியர் கி.முத்து.2010-ல் அவரிறந்த பின், இன்றுள்ள இளையோருக்கு இப்படியொரு கலைஞர் கழுகுமலையில் வாழ்ந்தார் என்பதே தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காகவே இச்சிறு பதிவு.

“திறமை நமக்குக் கடவுள் தந்த கொடை. அதை நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளோடு வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து, காலத்தோடு கை கோர்த்து நவீனப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இதைத் தவற விட்டவர்களைக் காலம் தவற விட்டுவிடும் என்பதே உண்மை!”

(2003 –ல் என் வகுப்பு மலருக்காக மாணவர்களுடன் கி.முத்து அவர்களைச் சந்தித்த போது, அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட செய்திகளே இவை.)