RSS

உயிரின் வலி

10 நவ்

சிறுகதை: ரஞ்சித் பரஞ்சோதி, பெங்களூர்.

அப்போது எனக்குப் பன்னிரெண்டு வயது இருக்கும்.

ரெண்டு நாட்களாக விடாத மழை. அன்றுதான் சுத்தமாக வெரித்திருந்தது.

பட்டாசுகள் அத்தனையும் ஈரக்காற்றில் பதத்துப் போயிருந்தன. பதத்துப் போன பட்டாசுப் பாக்கெட்டுகளை கரி அடுப்பின் திண்டில் வைத்து சூடேற்றி எடுத்துக் கொண்டேன். பட்டாசைப் பகிர வேண்டி வருமென்பதால் கூட்டாளிகள் யாரையும் சேர்த்துக் கொள்ளவில்லை.

வீட்டு முற்றத்தில் தனிமையில் எனது தீபாவளிக் கொண்டாட்டம் ஆரம்பித்தது.

எங்கள் ஊரில் கார்த்திகைத் திருநாளையும், தீபாவளியையும் கொண்டாடச் சிறந்த இடம் – ஊருக்கு நடுவில் உள்ள மலைதான். மிகச் சிறப்பு வாய்ந்த மலை அது. ஒரு காலத்தில் சமணர் பள்ளி அந்த மலையில் இருந்தது. அந்த வரலாற்றைச் சொல்லும் சமணச் சிற்பங்கள் அந்த மலையின் ஒரு பகுதியில் நிறைய உண்டு. மற்ற சிறுவர்களைப் போல நானும் மலை ஏறிச் சென்று அங்கு வெடிகள் வெடிக்க வேண்டும் என்பது எனது தீராத ஆசை. ஆனால், மலைக்குச் செல்வது எங்கள் வீட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. அதற்குக் காரணம் உண்டு…

மலையடிவாரத்தில் உள்ள ஆம்பூர்ணி(ஆம்பலூரணி) என்ற குளத்தில் என் பெரியப்பா மகன் மூழ்கி  இறந்து போனான். எங்கள் குடும்பத்தை ஆட்டம் காணச் செய்த சம்பவம் அது. அன்றிலிருந்து மலைக்கோ அந்தக் குளத்திற்கோ செல்வது தண்டனைக்குரிய குற்றமாக எங்கள் வீட்டில் கருதப்பட்டது.

‘செத்துப் போன அண்ணன் என்னையும் அழைத்துக் கொள்வானோ’ என்ற பயம் எனக்கும் உள்ளூர இருந்தது. அதே நேரத்தில் மலையில் தீபாவளி கொண்டாடும் ஆசையும் என்னை விடவில்லை.

வேறு வழியின்றி வீட்டு முற்றத்தை சத்தத்தாலும் குப்பையாலும் நிரப்பிக் கொண்டிருந்தேன்.

வீட்டிலிருந்த ‘மணி’ வெடிச் சத்தத்தைக் கேட்டுக் குரைத்துக் கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் வெடிச் சத்தம் மணியை பயத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. சங்கிலியின் பிடியிலிருந்து அது தப்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. நான் விடாமல் பட்டாசுகளைக் கொளுத்திக் கொண்டிருந்தேன். மணியின் குரைப்புச் சத்தம் ஊழையாய் மாறி, பின் அடி வயிற்றிலிருந்து எழுந்த முணகலாக மாறியது.

லட்சுமி வெடி ஒன்றையும் பச்சை நிற அணு குண்டு ஒன்றையும் சேர்த்து, அதன் திரிகளை இணைத்துத் திருகி ரோட்டின் நடுவில் வைத்தேன். யாரும் வரவில்லை என உறுதி செய்து கொண்டு திரியைப் பற்ற வைத்தேன். வேகமாக வீட்டிற்குள் வந்து கதவோரம் நின்று கொண்டேன்.

சுறுசுறுவென நெருப்பு எழுந்தது. பின் சாந்தமானது. நெருப்பு அணைந்து விட்டதோ என்ற சந்தேகம் வந்தது. பக்கத்தில் போகவும் பயம். தூரத்தில் ஒரு ஆள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சைக்கிள் கேரியரில் கரும்பன்றி ஒன்றை தலைகீழாய் கவிழ்த்து கட்டி வைத்திருந்தார். அதன் நான்கு கால்களும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. தலை கேரியருக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்தது.

வாயும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. அதன் கீச்சென்ற கதறல் தெருவெங்கும் இரைந்தது. சைக்கிள் நெருங்க நெருங்க எனக்குப் பயம் அதிகரித்தது. மணி குரைத்துக் கொண்டே இருந்தது.

தெருவுக்கு வந்து ஒரு கல்லை எடுத்து தூரத்தில் நின்று கொண்டு வெடிகளின் மீது எறிந்தேன். மீண்டும் நெருப்பு சுர்ரென்று பிடிக்கவே வேகமாக ஓடி வீட்டிற்குள் நுழைந்தேன். சரியாக சைக்கிள் வெடிகளை நெருங்கும் போது முதலில் லட்சுமி வெடி வெடித்துச் சிதறியது. சைக்கிளில் வந்தவர் தள்ளாடி குதித்து இறங்கினார். கேரியரில் இருந்த பன்றி நழுவி தரையில் விழுந்தது. மணியின் குரைப்புச் சத்தம் அதிகமானது.

பச்சை அணு குண்டு தூக்கி எறியப்பட்டு மணிக்கு அருகில் சென்று விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்தது. மணி எம்பிக் குதித்து பெருங்கூச்சலிட்டது.

வீட்டின் உள் அறைக்குச் சென்று ஒளிந்து கொண்டேன். தரையில் தலை கீழாகக் கிடந்த பன்றியின் கதறல் உள் அறை வரை வந்து காதைப் பிளந்தது. அதை விடப் பேரிரைச்சலாய் ஒலித்தது அந்த ஆளின் வசைகள். அவரின் சப்தமும் பன்றியின் சப்தமும் தேய்ந்து நின்ற பின்னரே வெளியில் வந்தேன்.

மழைக்கால ஈசல் குவியல் போல பட்டாசுக் குப்பைகள் முற்றமெங்கும் நிரம்பிக் கிடந்தது. மணியின் தேம்பல் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. எரிச்சலூட்டும்படியான அதன் முணகல் சப்தம் முற்றமெங்கும் குப்பையோடு குப்பையாகக் கலந்திருந்தது.

மீண்டும் தொடர்ந்தேன். மணியின் முணகலை அடக்கி ஆண்டது பட்டாசின் இரைச்சல். சாப்பிட வரும்படி அம்மா கத்தினாள். சப்தங்கள் அடங்கின. முற்றத்தை விட்டு புகை மண்டலம் மெது மெதுவாய் நகர்ந்து சென்றது.

அப்படியே சென்று தட்டின் முன் அமர்ந்தேன். கை முழுவதும் பட்டாசு மருந்து அப்பியிருந்தது. சாப்பாட்டில் கை வைக்கும் போது தலையில் கரண்டியால் ஓங்கி அடி விழுந்தது. கையை இழுத்து பாத்திரத்தில் நுழைத்து கழுவினாள் அம்மா. அவளது வாய் என்னை திட்டிக் கொண்டிருந்தது. கையை வேகமாக இழுத்துக் கொண்டு நான் சாப்பிட ஆரம்பித்தேன்.

அம்மா மணிக்கு சோறு வைக்கச் சென்றாள்.

மிச்சமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வேக வேகமாய் சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடித்து அரை குறையாய் கைகளைக் கழுவிக் கொண்டு வெளியே ஓடினேன். ஓரத்தில் மணி இன்னும் பயந்த நிலையிலேயே கிடந்தது. அம்மா வைத்துச் சென்ற சாப்பாடு திண்ணப்படாமல் அப்படியே இருந்தது.

சாப்பாட்டுக் கிண்ணத்தை கையில் எடுத்துக் கொண்டு மணிக்கு பக்கத்தில் சென்றேன். எப்போதும் என் மீது விழுந்து என்னை நக்கி பாசமாய் விளையாடும் மணி, முதல் முறையாய் என்னைக் கண்டு பயந்தது. நான் அருகில் செல்லச் செல்ல அதன் பயமும், முணகல் சத்தமும் அதிகமாயின. நான் மணியைத் தொட முயன்ற போது அது பின்வாங்கி, உடல் நடுங்கி, ஒடுங்கிப் போனது.

பல வருடங்கள் கடந்தன. தப்புகளுக்காக வீட்டில் அடி வாங்கும் பழக்கம் நின்று போனது. மணி இறந்து போனது. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடும் வயது கடந்தது.

பின் ஒரு தீபாவளி நாள் வந்தது.

மலையில் தீபாவளி கொண்டாடும் சிறுவயது ஆசைதான் நிறைவேறவில்லை. அதைப் பார்க்கவாவது போகலாமே எனத் தோன்றியது.

மலையேறினேன்.

மலை எங்கும் வெடிச் சத்தம்.

மலை மேலிருந்து ஆம்பூர்ணி குளத்தைப் பார்த்தேன். என் பெரியப்பா மகன் – என் அண்ணனின் உயிர் குடித்த நீர் பச்சை நிறத்தில் அலையாடியது.

இவ்வளவு அமைதியான நீர்தான் மூர்க்கத் தனமாய் ஒரு உயிரைப் பறித்ததா? உயிரைத் தக்கவைத்துக் கொள்ள தண்ணீருக்குள் என்ன பாடு பட்டிருப்பான். உறைந்து நின்றேன்.

தொடர்ந்து மலையேறினேன்.

ஒரு பாறையில் நின்ற நிலையில் ஒரு தீர்த்தங்கரர் சிலை இருந்தது. அதன் பின்னணியில் மரம் போன்ற ஆழகிய கல் வேலைப்பாடு என்னைக் கவர்ந்தது. அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த போது அந்த தீர்த்தங்கரரின் காலடியில் புகைவது போலத் தெரிந்தது. என்னவென்று பார்ப்பதற்குள் அது வெடித்துச் சிதறியது.

தீர்த்தங்கரரின் கட்டை விரல் என் காலடியில் வந்து விழுந்தது.

அந்தக் கட்டை விரலை நான் கையில் எடுக்கும் நேரத்திற்குள் இன்னொரு பட்டாசு தீர்த்தங்கரர் காலடியில் வைக்கப்பட்டது. அதுவும் புகைந்து வெடித்துச் சிதறியது. கணப்பொழுதில் அந்தக் காலடி முழுதும் கருத்துப் போனது.

ஏனோ தெரியவில்லை, என் அண்ணன் நீரோடு நடத்திய உயிர்ப் போராட்டமும், மணியின் முணகலும், வாயும் கால்களும் கட்டப்பட்ட பன்றியின் கத்தலும் எனக்குள் அப்போது தோன்றி மறைந்தன.

Advertisements
 

2 responses to “உயிரின் வலி

 1. Asin sir

  10/11/2012 at 5:42 பிப

  படித்தவுடன், சிறுவயதில் நான் கொண்டாடிய தீபாவளியும் எனக்குள் ஏற்படுத்திய வலியை உணர்ந்தேன். என்னைப் போலவே அனைவரும் உணர்வார்கள் என்பதில் ஐயமில்லை.

  உயிரின் வலி, ‘உணர்வின் வலி உண்மையின் வலி.’

  ரஞ்சித், ‘எழுது புதிதில்’ முதல் படைப்பே முதிர்ந்த கனியாக இனிக்கிறது.
  வாழ்த்துக்கள்!

   
 2. Alex Ambrose

  03/01/2013 at 3:03 முப

  காலம் கடந்து, தற்போது பட்டாசுகள் வெடிப்பதில்லையென்றாலும், அய்யனார் காலடிகளில் பட்டாசு வைத்து விளையாடிய அனுபவம் எனக்கும் இருக்கிறது. அந்த விளையாட்டை தவறெனச் சுட்டிக்காட்டி, அனைத்து வலிகளையும், மிக அருமையாக பதிவு செய்திருக்கிறது இந்தச் சிறுகதை.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: