RSS

வண்ணத்துப் பூச்சிகளை வரவேற்போம்!

04 நவ்

‘கழுகுமலை’ மா.சட்டநாதன், மும்பை.Ovaleker Wadi Butterfly Gardenமகாராஷ்டிர மாநிலத்தில் தானே (Thane) மாவட்டத்திலுள்ளது ‘ஓவ்லா’ கிராமம். அங்கு நான்கு தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த ‘ஓவலேகர்’ குடும்பம், சூழ்நிலை காரணமாக தங்களுக்குரிய இரண்டு ஏக்கர் நிலத்தைத் தரிசாக விட நேர்ந்தது. ‘ஓவலேகர்’ என்பது காரணமாக அமைந்த Sur Name. அதாவது, ஓவ்லா(Owla) கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள். இதே போல நாக்பூர்கர், பீஜப்பூர்கர், சஹாபூர்கர் என்றும் உண்டு. மேற்படி ‘ஓவலேகர்’ குடும்பத்தில் பிறந்த ராஜேந்திர ஓவலேகர் என்பவர், ஓவ்லா கிராமத்திலிருந்து தானே(Thane) அருகிலுள்ள முலுந்த்(Mulund) என்னும் இடத்தில் உடற்கல்வி ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கியுள்ளார்.அந்த நிலம் ராஜேந்திர ஓவலேகருக்குக் கிடைத்தது. இவர் சிறுவயதிலிருந்தே இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் கொண்டவர். 90 களிலேயே Nectar Plant எனப்படும் வண்ணத்துப் பூச்சிகள் தேன் எடுக்கும் செடிகளை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். தொடர்ந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் மூலம் தன்னுடைய அறிவைவளர்த்துக் கொண்டு, வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி வளர்ப்பதைத் தன்னுடைய முக்கியப் பொழுது போக்காகக் கொண்டிருக்கிறார்.

இவரின் ஆர்வத்தேடலின் போது, 2004 ஆம் ஆண்டு மும்பையின் புராதன அமைப்பாகிய “மும்பை இயற்கை வரலாற்றுக் கழகம்” (Bombay Nature History Society BNHS) ஏற்பாடு செய்த Breakfast With Butterfly என்ற நிகழ்ச்சி இவர் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் முதல் பகுதியில் வண்ணத்துப் பூச்சிகளின் வகைகள் பற்றி கூறி விட்டு, இரண்டாவது பகுதியில் அவை வளர்வதற்கான சூழல் பற்றியும் கூறிய போது, ராஜேந்தர் தன்னுடைய நிலம் எல்லாவகையிலும் பொருத்தமானதாக இருந்ததை உணர்ந்துள்ளார். மேலும், அந்நிகழ்ச்சியில் பேசிய ஓர் ஆய்வாளர், “ஓவ்லா என்ற கிராமத்தில் நிறைய வண்ணத்துப் பூச்சி வகைகள் காணப்படுகின்றன” என்று குறிப்பிடும் போது, அவர் சொன்னது தன்னுடைய நிலத்தைத்தான் என்பதை அறிந்து மகிழ்ந்துள்ளார்.ரோட்டோரங்கள், ரயில்வே டிராக்குகள், நதிக்கரைகள், மலைகள், தனியார் நர்சரிகள் எனப் பல்வேறு இடங்களில் இருந்தும், வண்ணத்துப் பூச்சிகளின் சேகரிப்பை அதிகரித்துள்ளார். அவருக்கு, ‘இந்திய வண்ணத்துப் பூச்சி பார்வையாளர்களின் தந்தை’ எனப்படும் ஐசக் கேகிம்கர் (BNHS) அவர்களின் வழிகாட்டுதல் கிடைத்துள்ளது. அவரது மேற்பார்வையில் தொடர்ந்து எட்டாவது வருடமாக இப்போது, Ovalekar Wadi Butterfly Garden இந்திய அளவில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை எட்டியுள்ளது.பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியும் அதிகமான வண்ணத்துப் பூச்சி வகைகளைக் கொண்டவை.  உலகம் முழுவதும் 18,000 வகையான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. 1,500 வகைகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன. மும்பை பகுதியில் 150லிருந்து 180 வரை உள்ளன. ஓவலேகர் தோட்டத்தில் மட்டும் 130 வகைகளைக் காணலாம் என்கின்றனர். நாம் அங்கு செல்லும் எந்த நேரத்திலும் குறைந்தது 30 வகைகளைக் காண முடியும்.வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஹோஸ்ட் (Food), நெக்டார் (Nectar) என இரண்டு செடிகள் தேவை. பலவிதமான பழக்கலவைகளையும் ராஜேந்தர் வைத்திருந்தார். வண்ணத்துப் பூச்சி பசுமையான செடிகளில் முட்டையிடும்.முட்டை பொரிந்து வெளியே வருகின்ற லார்வாக்கள் அந்த இலையையே சாப்பிட்டு வளரும் லார்வாப் பருவத்தில் மட்டும் தான் சாப்பாடு. Pupas பருவத்தில் வெளியே வருவதற்கான தவம் மட்டுமே.சில வண்ணத்துப் பூச்சிகளின் ஆயுளே இரண்டு வாரங்கள்தான் என்பதால் பிறந்து ஓரிரு நாட்களிலேயே அதன் துணையைத் தேட வேண்டிய கட்டாயம். ராஜேந்தர் நம்மை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் நமக்கு சுட்டிக்காட்டி விளக்கினார். அவர் இல்லாவிட்டால் நமக்குப் பல விஷயங்கள் தெரியாமலே போய்விடும்.இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ணத்துப் பூச்சியான Blue Marmon மட்டுமல்ல, சிறு வயதில் நாம் பிடித்து விளையாடிய வகைகளின் பெயரும் நம்மை மகிழ்விக்கும். விரித்த சிறகுகளுடன் அழகாக உள்ள Blue Oak leaf Butterfly, சிறகை மூடியவுடன் காய்ந்த இலை போலக் காட்சியளிக்கிறது. Sailor, Skipper, Commander, Common Baron and Gaudy Baron எனப் பெரும்பாலான பெயர்கள், ஆங்கிலேய அதிகாரிகள் மிக விரிவாக இவற்றை ஆராய்ந்த பின்னர் குண நலன்களுக்கேற்ற வகையில் வைத்த பெயர்கள்.

வண்ணத்துப் பூச்சிகளுக்கான சீசன் என்பது மார்ச் முதல் மே முதல் வாரம் வரையும்; செப்டம்பர் இறுதி முதல் நவம்பர் மாதம் வரையும் இருக்கும் என்று சொல்கிறார்கள். நான் அங்கு சென்றிருந்த போது எங்களுடன் பேசிய ஒருவர், ஓராண்டில் மூன்று நான்கு முறைகள் இங்கு வந்தால், கிட்டத்தட்ட இப்பூங்காவிற்கு வருகை தரும் எல்லா வகையான வண்ணத்துப் பூச்சிகளையும் பார்த்து விடலாம் என்றார். அவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்னைப் போல சும்மா பார்க்க வந்தவர். இப்போது வண்ணத்துப் பூச்சிகள் மீது தீவிரமாகி மேகாலயாவிற்குப் போய் விட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் திரும்பியிருக்கிறார். வடகிழக்கு இந்தியாவில் மிக அபூர்வமான வகைகள் உண்டாம்.

ராஜேந்தர் அங்கு வரும் குழந்தைகளையும், நம்மையும் வண்ணத்துப் பூச்சிகளை வளர்க்க நிறையவே ஊக்கப்படுத்துகிறார். ஹோஸ்ட், நெக்டார் செடிகளை மட்டும் வளர்த்தால் போதும், வண்ணத்துப் பூச்சிகள் வந்தே தீரும். அவ்வளவு சுலபம். சிறிய அளவில் செய்யும் போது பராமரிப்பு எல்லாம் கஷ்டமே கிடையாது. நான் சென்றிருந்த போது, சிலர் சில கருவேப்பிலைக் கன்றுகளை அங்கே பதியம் போட்டு ஒரு சிறு பெண்ணின் பிறந்த நாளைக் கொண்டாடினர். இது வழக்கமான ஒன்று தானாம். பூங்காவிலுள்ள பெரும்பாலான செடிகளை இப்படி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வளர்த்திருக்கிறார்கள்.தானேவிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் கோட்பந்தர் (Godbandhar) ரோட்டில் போரிவலி (Borivli) செல்லும் சாலையில் ‘ஓவ்லா கிராமம்’ அமைந்துள்ளது. தானேவிலிருந்து போரிவலி, பயந்தர், மிரா ரோடு போவதெற்கென உள்ள பேருந்துகள் அடிக்கடி உண்டு. ஓவலாவில் இறங்கி யாரிடம் வழி கேட்டாலும் சொல்வார்கள்.

நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு நூறு ரூபாய். பார்க்கிங் வசதி உண்டு. வாரத்தில் ஒரே ஒரு நாள், ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் அனுமதி. பார்வையாளர்களுக்கான நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை. முப்பது ரூபாய்க்கு ஒரு வடபாவும் சின்ன டம்ளரில் தேநீரும் தருவார்கள். அதனால், நீங்களே சாப்பிட ஏதாவது கொண்டு வந்து விடுங்கள்.

நாம் தனியாகச் சென்று பார்த்தாலும், ராஜேந்தர் இருப்பதால் நமக்கு  விளக்கமாகச் சொல்வார். ஆனாலும், என்னுடைய பரிந்துரை BNHS ஏற்பாடு செய்யும் பயணம் வழியாகச் சென்றால் மிகவும் விரிவாக அறியலாம் என்பதே. நான் அங்கு சென்ற போது BNHS ஆள் ஒருவரிடம் பேசியதில் பல செய்திகளை அறிந்ததால் கூறுகிறேன்.

பார்க்கப் பார்க்க அழகாக இருப்பது மட்டுமல்ல, மகரந்தச் சேர்க்கைக்கு வண்ணத்துப் பூச்சிகள் மிகமிக அவசியமானவையும் கூட.  கண்டிப்பாக குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். தொலைக்காட்சி முன் தொலைந்து போகும் நம் குழந்தைகளுக்கு, இயற்கையை அறிமுகப்படுத்த அழகான இடம். படையெடுக்கும் பட்டாளமாகத் திரியும் பட்டாம்பூச்சிகளைப்  பார்க்க இங்கே வரலாம்.ஒரு தனி மனிதரின் சாதனைதான் இந்தப் பூங்கா. இதற்காக அரசிடமிருந்து எவ்வித உதவியும் பெறுவதாகத் தெரியவில்லை. இந்த அவசர உலகில் வண்ணத்துப் பூச்சிகளுக்காக ஒருவர் வாழ்கிறார் என்பதே ஆச்சர்யப்படவைக்கும் அதிசயம் தானே!

Advertisements
 

4 responses to “வண்ணத்துப் பூச்சிகளை வரவேற்போம்!

 1. vidhaanam

  04/11/2012 at 1:39 முப

  அருமையான பயணம்.

  இரண்டு வார ஆயுள் இருந்தாக் கூட போதும். அடுத்த பிறவியில ஓவியத்த சிறகுல சுமந்துக்கிட்டு பிறக்கனும்.

   
  • சாக்பீஸ்

   04/11/2012 at 12:17 பிப

   அருமையான கட்டுரை. விதானம் அவர்களின் கருத்தே என்னுடைய கருத்தும்.

    
 2. சட்டநாதன்

  04/11/2012 at 10:40 பிப

  விதானம் , சாக்பீஸ் – உங்கள் இருவரின் பார்வையும் கலைஞர்களின் பார்வை.
  “இந்த மஹா பிரபஞ்சத்தில் ஒவ்வொரு சிறு அசைவும் ஏதேனும் காரணத்திற்காகவே” என்ற எண்ணம் எனக்கு இங்கு சென்று வந்த பின்னர் வலுவானது. நன்றி

   
 3. Alex Ambrose M

  12/11/2012 at 12:58 முப

  “இயற்கையையே ரசிக்கும் மனிதர்கள் குறைந்துகொண்டே வரும் இந்த அவசர யுகத்தில், வண்ணத்துப் பூச்சிகளுக்காக ஏன் ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்?” என்ற பெரும்பான்மையான மனிதர்களின் மனநிலையிலேயே, இக்கட்டுரையின் ஆரம்பப் பகுதிகளை வாசித்த போது சிந்தித்தேன். ஆனால் கட்டுரையில் உள்ள இறுதி பாராவும், ரஞ்சித் மற்றும் உன்னுடைய கமெண்ட்களும் நீ சொல்லவிருந்த கருத்துக்களை மேலும் வலுவாக்கி அழகு கூட்டியது.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: