RSS

“செம்புலப் பெயல் நீர்” – வாழ்க்கை விளக்கம்

26 அக்

இராசை.இரா.முகிலன்பன்.உலகையும் உலக உயிரினங்களையும் படைத்த கடவுள், மனிதனையும் படைத்து, அவன் வாழ்வதற்குத் தேவையான பல்வேறு இயற்கை வளங்களையும் உடனளித் துள்ளான். அவற்றை மனிதனின் வெறும் உடல் வளர்ச்சிக்காக மட்டும் படைக்காமல், மனிதன் எப்படி எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதை அறிவுறுத்துவதைத் துணை நோக்கமாகவும் கொண்டே இயற்கையைப் படைத்துள்ளான் என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம், இயற்கையில் நிகழும் ஒவ்வொரு செயல்பாடும் இதனைத் தெளிவுபடுத்துகிறது. அதனால்தான், ‘இயற்கையே சிறந்த ஆசான்’ என்ற முதுமொழி தோன்றியது போலும். இதனடிப்படையில், சங்க இலக்கியத்தில் குறுந்தொகைப் புலவன் ஒருவன் குறித்த இயற்கை நிகழ்வு உணர்த்தும் செய்திகள் நமக்கு நல்லதோர் வாழ்க்கைப் பாடத்தை விளக்குவதைக் காணலாம்.

இயற்கையைப் புரிதல்:

நம் முன்னோர் இயற்கையை முழுமையாகப் புரிந்து கொண்டே தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். இயற்கைக்கு மாறாக அவர்கள் ஒருபோதும் செயல்பட்டதில்லை. ஆனால், இன்றோ பெரும்பான்மையான மக்கள் எதற்கெடுத்தாலும், “ஏன் இப்படி வாழ வேண்டும்? எப்படியும் வாழ்ந்தால் என்ன?” என்ற மறுதலையான சிந்தனைகளோடு வாழ்கிறார்கள். இதை விடுத்து, இயற்கை நியதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டு வாழ்ந்தால், இல்லறம் நல்லறமாகும் என்பதையே இக்கட்டுரை பகர்கிறது.

மழையும் மண்ணும்:

மழை பொழிவது ஓர் இயற்கை நிகழ்வு. அது வானத்திலிருந்து பொழிகின்ற போது தனக்கென எவ்விதமான மணமோ, சுவையோ, நிறமோ இல்லாமல் ‘மென்மை’ என்னும் ஒரேயொரு பண்பை மட்டும் இயல்பாகக் கொண்டு நிலத்தை வந்தடைகிறது. இயல்பாக ‘வன்மைத்’ தன்மையோடு இருந்த நிலம், மழைநீர் வந்து சேர்ந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாகக் குழைவுத்தன்மை பெறுகிறது. இந்நேரத்தில் நீர் நிலத்திடமிருந்து நிறத்தையும், மணத்தையும், சுவையையும் பெற்று செம்புல நீர், வண்டல்மண் நீர், கரிசல்மண் நீர் என்று நிலத்தின் தன்மைக் கேற்ப பல்வேறு வண்ணம் சார்ந்த பெயர்களைப் பெறுகிறது.

பரிமாற்றங்கள்:

வெறும் தரிசாகக் கிடந்த மண்ணில் மழைநீர் பெய்த அடுத்த நாளே பச்சைப் போர்வை போர்த்தியது போன்று சிற்சிறு புற்களும், தாவரங்களும் தலைதூக்கி விடுகின்றன. இப்போது மண்ணும் மழைநீரும் தங்களுக்குள் பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொள்கின்றன. அதாவது மழை நீரின் மென்மையை மண் வாங்கிக் கொள்ள, மண்ணின் மூன்று குணங்களை மழைநீர் பெற்றுக் கொள்ள இரண்டும் இணைந்ததால் “விளைநிலம்” என்னும் சிறப்புப் பெயரை நிலம் பெறுகிறது. அதுவரை ‘தரிசு’ என விளிக்கப்பட்டிருந்ததைச் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்.

மழைநீரால் நிலத்தில் பல்வேறு தாவரங்கள் தோன்றுகின்றன. அவை இதுவரை பூமிக்குள் கிடந்த பல்வேறு சத்துக்களையும், தாதுக்களையும் இன்னும் எத்தனையோ அரிய பல மருத்துவம் சார்ந்த குணங்களையும் வெளிப்படுத்திப் பூமிக்குப் பெருமை சேர்க்கிறது. மேலும், உலக உயிரினங்களுக் கெல்லாம் உணவாகி உதவுகிறது. இவ்விடத்தில் சற்று கூர்ந்து கவனித்தால், நீர் நிலத்தை அடையாதவரை மேற்கூறிய சிறப்புகள் நிலத்திற்குள் மறைந்திருந்தன என்ற உண்மையையும், மழைநீர் வந்த பிறகே அவை வெளிப்பட்டன என்பதையும் அறியலாம். எனவே, மழைநீரால்தான் மண்ணிற்குப் பெருமை என்பதும், இதுவே ‘இயற்கை’ சொல்லும் பாடம் என்பதும் தெளிவு.

மண்ணிற்கேற்ற மாண்பு: 

“மதுரை மல்லிகை, சேலத்து மாம்பழம், பண்ணுருட்டி பலாப்பழம், உதகை வண்ணப் பூக்கள்” என்று சொல்கிறார்களே! என்ன காரணம்? உற்பத்தியில் ஒரே பொருளாக இருந்தாலும், அவை அந்தந்த மண்ணின் தன்மைக்கேற்ப மகத்துவம் பெறுவதால்தானே இவ்வாறு கூறுகின்றனர். இவ்வாறு ஊரின் பெயரை விளைபொருட்களுக்கு முன் இட்டுக்கூறுவது எவ்வாறு இருக்கிறதென்றால், மனிதர்களில் பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்னால் தந்தை பெயரின் முதல் எழுத்தை இடுவதற்கு ஒப்பானதாகக் கருதலாமல்லவா?

இச்செய்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வாமன அவதாரமாய் விளங்கிய ஒரேயொரு தொடர், ‘செம்புலப் பெயல் நீர்’ என்பதாகும். இவ்வரி, சங்க இலக்கியத்தில் குறுந்தொகை என்னும் அகத்திணை நூலுள், பா எண்.40-இல் ஒரு தலைவன் தான் சந்தித்த தலைவியை நோக்கிக் காதல் மீதூரக் கூறிய கூற்று. இவ்வுவமைத் தொடர் எவ்வளவு விரிந்த வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிற தென்பது நாம் அறியத்தக்கது.

மேலே காட்டிய விளக்கத்துள் மழை என்பது தலைவியையும், நிலம் என்பது தலைவனையும் குறிப்பதாகக் கொண்டு வாழ்க்கைத் தத்துவத்தை அறிய முயல்வோம்.

இயற்கையும் மனித வாழ்க்கையும்:

வானத்திலிருந்து வரும் மழைநீர் ‘மென்மை’ என்பதைத் தவிர வேறு எந்த விதமான குணங்களையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் வருகின்றதல்லவா? அதுபோல திருமணமாகும் ஒரு பெண் தனது பிறந்த வீட்டிலிருந்து புகும் வீட்டிற்கு வரும் போது, தனக்கெனக் கொண்டிருந்த பழக்க வழக்கங்களை யெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, ‘அன்பு’ என்ற ஒன்றை மட்டுமே தன் இயல்பாகக் கொண்டு தலைமகன் வீட்டிற்கு வருகிறாள். அதன்பின் அங்குள்ள சூழலுக்கேற்ப தன் குணங்களை மாற்றிக் கொண்டு வாழத் தொடங்குகிறாள். மாறாக, “நான் என் அம்மா வீட்டில் எப்படி இருந்தேன்? எவ்வளவு செல்வச் செழிப்பாக வாழ்ந்தேன், இங்கென்ன இப்படி?” என்று அங்கலாய்த்துக் கொண்டால் வாழ்க்கை கசப்பானதாகி விடும். இந்த உண்மையை மழைநீர் நமக்குக் கற்றுத் தருகிறது.

வன்மையும் மென்மையும்:

மழைநீர் வந்து சேர்ந்தவுடன், நிலம் தன் வன்மைத் தன்மையை விட்டுவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மென்மைத் தன்மை அடைகிறதல்லவா? அது போல, மணமாவதற்கு முன்புவரை கட்டிளங் காளையாகத் துள்ளித் திரிந்த ஒருவன், திருமணத்திற்குப் பின் தலைவியின் அன்புப் புனலில் நனைந்து ‘மென்மை’ உடையவனாக மாறுகிறான். மழையால் நிலம் விளைநிலமாவது போல ஓர் ஆண் ‘குடும்பத் தலைவன்’ என்ற தகுதியைப் பெறுகிறான். அங்கே விளைச்சல், இங்கே பிள்ளைகள். அதுவரை குடும்பத்தில் பற்றற்று வாழ்ந்தவன், திருமணத்திற்குப் பின் இல்லறம் நடத்த மனைவியோடு ஆலோசித்து செயல்படுபவ னாகிறான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னரும் ஒரு பெண் துணையிருக்கிறாள்; நல்ல மனைவி கணவனுக்கு மந்திரியாகவும் இருக்கிறாள் என்பன போன்ற கருத்துக்கள் இதனை உறுதிப்படுத்தும்.

இவ்விடத்தில் இன்னொரு உண்மையைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. நிலமும் நீரின் இயல்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். அதை விடுத்து நிலம் கருங்கற் பாறையாக இருக்குமானால் நீர் எவ்வாறு மண்ணின் தன்மைகளைப் பெறுதல் இயலும்? வளமிக்க விளைநிலமாக மாறும்? அது போல, தலைவனும் வன்மையான குணங்கள் இல்லாமல் நெகிழ்வுத் தன்மை உடையவனாக, அதாவது குடும்பத்தை அனுசரித்துச் செல்லும் பக்குவமுடையவனாக இருத்தல் வேண்டும்.

நிறைவாக:

பெய்கின்ற மழை ஒன்று போல்தான் பெய்கின்றது. ஆனால், அது எவ்வாறு நிலத்திற்குப் பல்வேறு விதங்களிலெல்லாம் துணை நிற்கின்றதோ அது போல ஒரு பெண் தன் கணவனுக்கும், தான் கொண்ட பெரியோர்களுக்கும், பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் உறுதுணையாக இருத்தல் வேண்டும். ஓர் ஆணும் மழை சேர்ந்தவுடன் பலமடங்கு விளைச்சலைத் தரும் ஒரு நிலத்தைப் போல குடும்பத்தில் இல்லறம் பேணவும், சமுதாயத்தில் நல்லறம் போற்றவும் வழிகோல வேண்டும். இவை போன்ற பல செய்திகளைக் குறுந்தொகை வரி நமக்கு விளக்கிக் காட்டினாலும், இன்னும் நுணுகி ஆராய்வோமாயின் பல வாழ்க்கை நெறிமுறைகள் நமக்கு வெளிப்படலாம்.

Advertisements
 
1 பின்னூட்டம்

Posted by மேல் 26/10/2012 in நோக்கு

 

One response to ““செம்புலப் பெயல் நீர்” – வாழ்க்கை விளக்கம்

 1. சட்டநாதன்

  06/11/2012 at 8:54 பிப

  வித்தியாசமான கோணத்தில் எழுதப் பட்டுள்ள நல்ல கட்டுரை.

  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சரியான முறையில் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதை முதிர்ச்சியான பார்வையோடு விளக்கிய விதம் அருமை. ஒவ்வொரு Paragraph பிலும் மேற்கோளாகச் சொல்லத்தக்க கருத்துக்கள் உள்ளன. குறிப்பாக ஊர் பெயரையும், Initial ஐயும் ஒப்பிட்டு எழுதியிருப்பது ஒரு நல்ல கற்பனை.

  எனக்கு இந்தக் கட்டுரை பிடித்திருப்பதற்குக் காரணம், மருந்திற்குக் கூட ‘சகிப்புத்தன்மை’ என்ற வார்த்தை பயன்படுத்தப் படவில்லை. சகித்துக் கொண்டெல்லாம் யாராலும் வாழ்நாள் முழுக்க இருக்க முடியாது. “புரிந்து கொள்ள வேண்டும், பக்குவமுடையவனாக இருத்தல் வேண்டும்” என்றெல்லாம் தான் கூறுகிறீர்கள். இது தான் சரியான பார்வை.

  தனிப்பட்ட முறையில் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனந்த விகடனில் ஜெயமோகன் எழுதிய ‘சங்கச் சித்திரங்கள்’ தொடரில் இந்தப் பாடலை விளக்கி, செம்புலம் என்பதற்கு வன்புலம், பாலை நிலம் என்ற பொருளை எடுத்துக் கொண்டு, நீர் மண்ணோடு கலந்து ஒன்றாகி விடுவதைப் போல, தலைவன் தலைவி மனங்கள் பிரிக்க முடியாதபடி ஒன்றாகி விட்டன என்று கூறுவார். செம்புலப் பெயல்நீரார் ஒருவேளை சாத்தூர்க் காரராகக் கூட இருக்கலாம் என முடித்திருப்பார். சங்கப் பாடலை வழிபடவேண்டிய அவசியமில்லாமல் நம்முடைய பார்வையில் பார்க்கலாம்.

  கவிஞர் மீராவின் இந்தக் கவிதையைப் பாருங்கள்:

  என் தந்தையும் உன் தந்தையும்
  ஒரே ஊர்
  வாசுதேவ நல்லூர்
  என் தந்தையும் உன் தந்தையும்
  ஒரே ஜாதி
  திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
  நானும் நீயும் உறவின்முறை
  எனது ஒன்று விட்ட
  அத்தை பெண் நீ
  எனவே
  அன்புடை நெஞ்சம்
  தாம் கலந்தனவே!

  சங்கப் பாடலை பகடி செய்யலாம் என்ற எண்ணத்தையும் இந்தப் பாடல் மூலமாகத் தான் பெற்றேன்.

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: