RSS

மழை பற்றிய க(வி)தை!

06 அக்

“தென் மேற்குப் பருவக் காற்று

வட கிழக்குப் பருவக் காற்று

மழை பொய்யும்;

புயல் சின்னமும்

வெப்ப சலனமுமே

மழை பெய்யும்”

என்கிறான் மாணவன்.

            மழை வரும் காலத்தை

            மன நுகர்வாலே கணித்து

            மறைவான இடம் பெயரும்

            மழையெறும்புகள் – இன்று

            பிழையெறும்புகள்!

மாணவனும் மழையெறும்பும்

மண்ணின் மாறாத இளமையையும்

மழையின் வற்றாத காதலையும்

அறிவரோ?

           மழைக் காலத்தில்

           மழலைப் பருவத்தில்

          ஆறுகளின் சிறு வடிவத்தை

          தெருவிலே கண்டேன்.

வளைந்து, நெளிந்து,

குதித்து ஓடுமதில்

சாதாக் கப்பல், கத்திக் கப்பல்,

குடைக் கப்பல் என்று

விதவிதமாய் காகிதத்தில் செய்து

மிதக்க விட்டேன்.

          அவை போகும் தூரத்தை

          எங்கள் வீட்டுப் படியிலிருந்தே

          பார்த்திருப்பேன்.

திடீரெனத் தெருவில்

வந்த மாட்டு வண்டியால்

எழுந்த அலைகளில்

கவிழ்ந்து போன கப்பல்களைப்

பார்த்து கவிழ்ந்திருப்பேன்.

          “கப்பலா கவுந்து போச்சு? வீட்டுக்குள்ள வால”ன்னு

          வெவரந் தெரியாத ஆத்தா சத்தம்

          அடுப்படியிலிருந்து வரும்!

தீபாவளித் திருநாளில்

பொம்ம சுடப் போகும் சிறுசுக –

சோளத் தட்டை பருப்புல

அழகழகா பொம்ம,

மாட்டு வண்டி செய்வாக;

வண்டிக்குப் பைதா

ஒடஞ்ச மண்பான ஓடு!

         “சோளப் பொறி சொங்குப் பொறி…”

          என்று கார்த்திகைத் திருநாளில்

          நெருப்பில் வைத்த

          வரிச்சிக் கட்டைகளால்

          அடித்து மகிழ்ந்தது –

          ஆயிரம் கம்பி மத்தாப்பு தராத

          அழகுப் பொறிகள்!

மாலை நிலவொளியில்

கூட்டாஞ் சோறு:

ஆவுடத்தாய், மாரியப்பன்,

வெயிலாட்சி, தங்கப்பாண்டி,

நவண்டா, கோணன்,

மூக்கம்மா, முப்புடாதி

எல்லாரும் ஒன்னாத்தான்!

          அப்புறம் விளையாட்டு:

          ஒருபுறம் –

          நண்டூருது நரியூருது…

          மறுபுறம் –

          கொல கொலயா முந்திரிக்கா…

          இன்னொரு புறம் –

          ஒருகுடம் தண்ணி எடுத்து…

காட்டு வேலைக்குப் போயிட்டு வந்த

ஐயாவும் ஆத்தாளும்

வீட்டுப் படியில உக்காந்து சாப்பிட்டுக்கிட்டே

எங்கள ரசிப்பாக!

          அவுக முன்னாடி

          சிவன் கோயில் நந்தி மாதிரி

          முன்னங் கால நீட்டிப் படுத்திருக்கும்

          ராசு வீட்டு நாயி!

          சாப்பிட்டுக்கிட்டே

          அப்பப்ப சோறு போடுவா எங்காத்தா,

          அது வால ஆட்டிக்கிட்டே தின்னும்.

வீட்டில் அழுத தம்பிய

முதுகில் சுமந்து கொண்டு

உப்பு மூட்டை வியாபாரம் செய்யும் முருகன்.

கொஞ்ச நேரம் கழித்து

அவன் வலக்காலை நீட்டிப் பிடித்து

தோட்டத்தில்

மருந்தடிக்கும் மிசினாய் மாற்றுவான்.

          மாலை ஏழு மணிக்கு மேல

          ஊர்க் கிணற்றில்

          தண்ணி எடுக்கப் போகும்

          மாரியக்கா, வேலமக்கா, பொன்னமக்கா.

தெரு விளக்குக்குக் கீழே

ஒன்னு கூடி

வீட்டுப் பாடத்தை எழுதிக் கொண்டிருக்கும்

எட்டாம் வகுப்புப் படிப்பாளிங்க!

          காரவீட்டு மொட்டமாடியில்

          வேப்பம்பழம் சாப்பிட்ட பறவைகளின்

          எச்சத்தில் வந்த கொட்டைகள்

         அங்கிட்டும் இங்கிட்டும் நெறைய கெடக்கும்.

மண் வீட்டுத் தரையை

பசுமாட்டுச் சாணம் வைத்து

மெழுகும் ராமாத்தா.

அவுக வீட்டு ஓலைக் கூரைகளுக்கு இடையே

கூடு கட்டி வாழ்ந்த குருவிகள்

கூட்டம் கூட்டமாய் பறக்கும்.

          மின்னல் இடியுடன் பெய்த மழையிரவு

          விடியுமுன்னே

          எங்கய்யா காளான் பிடுங்க

          காட்டுக்குக் கூட்டிட்டுப் போய்டுவார்.

          “அட, நமக்கு முன்னாலயே நயினாரு வந்துட்டான்,

          சீக்கிரந் தேடுல” என்பார்.

வேக வேகமா

வழுவழுப்பான வெள்ளைக் காளான்களை

தேடித் தேடி பிடுங்கி

கயிற்றில் கட்டிக் கொண்டு

வீடு திரும்புவோம்.

          வெயிலு ஏறுமுன்னே

          குழம்பு வெச்சிரணும், இல்ல கெட்டுடும்.

          ஆத்தா கைப் பக்குவம்

          தெருவே மணக்கும்.

கூனை கட்டி

கிணற்றுத் தண்ணீரை இறைக்கும்

மாடுகளுக்கு

பகலில் பசும்புல் மேய்ச்சல்;

மாலையில்

அரைச்ச பருத்திக் கொட்ட, புண்ணாக்கு;

அவ்வப்போது வைக்கோல்.

         ஆடுகளுக்கோ

         அகத்திக் கீரக் கட்டும், ஆமணக்கு இலையும்!

கணக்குப் பாராம உழைப்போர் உணவோ

கம்பு, சோளம், கேப்பக் கூழ்

கருவாட்டுக் குழம்புக்கு இழுக்கும்.

சாமி குருதோளின்னா

சாம்பாரே போதும்.

          கசக்கிச் சாப்பிடும் கம்மங் கருது,

          பல்லுல வழிச்சிச் சாப்பிடும்

          உளுந்தங் காயும் தட்டாங் காயும்.

          சுட்டுச் சாப்பிடும் சீனிக் கிழங்கு

          பொறியாக்கிச் சாப்பிடும் சோளக் கருது.

          தித்திக்கும் தின்பண்டம், திகட்டாது தினந்தோறும்.

அழகையாத் தேவருக்கு பருத்தியெடுக்க

போஸ்டாபீஸ் நாயக்கருக்கு பூப்பறிக்க

செல்லையா நாடாருக்கு கடலை ஆய

கிராம்சு வீட்டுக்கு களை பிடுங்க

இன்னும்…

பெருமாள் கோயிலு பக்கம்

தெக்கோயிலு பக்கமுனு

தெனந் தோறும் வேலை;

          காட்டு வேலைக்குப் போகாதவுகளுக்கோ

          குழந்தையம்மா தீப்பெட்டி.

வெறகு பெறக்கப் போன

வேம்பையாத் தேவரு

தண்ணி தவிச்சா

உப்போடை மண்ணுல

நாழியளவு தோண்டி வரும் தண்ணிய

தெளிய வச்சிக் குடிப்பாரு.

         பங்குனி சித்திரை வைகாசியில்

         ஊருக்கு வெளியே முகாமிடும்

         குறவர் கூட்டம்.

காலையில்…

சாமியோவ்! காடை கெளதாரி.

பகலில்…

சாமியோவ்! பாசி ஊசி.

இரவில் பாவக்கூத்து.

          ராமகதை, நல்ல தங்காள் கதை எல்லாம்

          அங்குதான் தெரியும்.

          உழுவாத்தலையனும் உச்சிக் குடுமியனும்தான்

          அந்த வயதிலறிந்த

          நகைச்சுவை இரட்டையர்கள்!

இவற்றோடு

குண்ணாங் குண்ணாங் குர்ர்ர்ர்… காத்தாடி

களிமண்ணில் செய்த ராட்டினம்

கருப்பு செவப்பு மண் சட்டிகள்

இன்னும் காணாமல் போனவை ஏராளம்!

          இவைகளுக்கும்

          மழைக்கும் சம்பந்தமுண்டு;

          இவை

          இல்லாமல் போனதற்கும்

          மழைக்கும் சம்பந்தமுண்டு.

ஆனால்,

மழை இல்லாமல் போனதற்கு

மனிதனுக்கு மட்டுமே சம்பந்தமுண்டு!

          மாணவனும் மழையெறும்பும்

          மண்ணின் மாறிய இளமையையும்

          மழையின் வற்றிய காதலையும்

         அறிவரோ?

செட்டிகுறிச்சி நினைவுகளுடன்,

அசின் சார், கழுகுமலை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

ரஞ்சித் எழுதிய “மும்மாரி” கட்டுரை.

Advertisements
 

6 responses to “மழை பற்றிய க(வி)தை!

  1. vidhaanam

    06/10/2012 at 7:52 பிப

    நான் இதுவரை படித்த உங்கள் எழுத்துக்களில் இதுவே தலைசிறந்தது.

    நவீன உலகம் இம்மியளவு கொடுத்துவிட்டு எக்கச்சக்கமாக நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டது. அப்படி நாம் இழந்த பொக்கிஷங்களின் பட்டியல் இந்த எழுத்தில் கொட்டிக்கிடக்கிறது.

    நிஜமாக இருந்த இதுபோன்ற உலகம் இப்போது கற்பனை போலத் தோன்றுகிறது.

    ‘சிவன் கோயில் நந்தி மாதிரி
    முன்னங் கால நீட்டிப் படுத்திருக்கும்
    ராசு வீட்டு நாயி!’ – மிக நுட்பமான காட்சிப் பதிவு இது.

     
    • சட்டநாதன்

      06/10/2012 at 10:18 பிப

      “மழை இல்லாமல் போனதற்கு

      மனிதனுக்கு மட்டுமே சம்பந்தமுண்டு!” – 101 % Agree

      பொருத்தமான புகைப்படம்.

      சங்ககாலத்தில் இருந்து சமீப காலத்தை நெருங்க நெருங்க மாறுகிறது இயற்கை (எழுத்து நடையும் தான் – குறியீடா? உத்தியா?)

      மூணு வேளையும் ரொட்டியும் பருப்பும் மட்டும் சாப்பிட்டு காய்ந்து கிடக்கும் என் போன்றோரை, இப்படி ஏங்க வைப்பது ஞாயமா?

      உங்களுடைய சிறுவயது சந்தோசங்களில் பாதியாவது எங்களுக்கு கிடைத்தது. இனி வரப் போறோருக்கு இந்தக் கவிதையே புரியுமா? என்று தெரியவில்லை.

      ரஞ்சித் சொல்வதைப் போல உங்களுடைய மிகச் சிறந்த படைப்பு இது.

       
      • Asin sir

        07/10/2012 at 8:47 பிப

        “இனி வரப் போறோருக்கு இந்தக் கவிதையே புரியுமா? என்று தெரியவில்லை.”

        நிச்சயம் புரியாதுதான். அதான், சில நினைவுகளை எழுதி வைத்தேன்.(கவிதையானு தெரியல.)
        விடுபட்டவை ஏராளம்.

        என்ன செய்ய, இழந்த சொர்க்கம் மீளாது என்று தெரிந்த பின்பும் பழைய நினைவுகளாலேயே இன்றைய வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறோம்.(வெப்பம் என்பது நம்மைச் சுடும் எல்லாமும்தான்.)

        உங்க இருவரின் பின்னூட்டம் பழைய கிராம வாழ்க்கைக்குக் கிடைத்த அங்கீகாரம்.

         
  2. vivi

    13/01/2013 at 12:50 பிப

    migavum nandragha irukirathu!!

     
  3. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்

    06/02/2014 at 4:06 பிப

    வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4.html?showComment=1391682719302#c5863664444865775074

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

     
  4. Jayasaraswathi

    14/02/2014 at 12:09 பிப

    வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ..!!!

    அருமை …!!!

    எழுத்து பணி …தொடர வாழ்த்துக்கள் …!!!

    அழகான கவிதை …

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: