RSS

Monthly Archives: ஒக்ரோபர் 2012

“செம்புலப் பெயல் நீர்” – வாழ்க்கை விளக்கம்

இராசை.இரா.முகிலன்பன்.உலகையும் உலக உயிரினங்களையும் படைத்த கடவுள், மனிதனையும் படைத்து, அவன் வாழ்வதற்குத் தேவையான பல்வேறு இயற்கை வளங்களையும் உடனளித் துள்ளான். அவற்றை மனிதனின் வெறும் உடல் வளர்ச்சிக்காக மட்டும் படைக்காமல், மனிதன் எப்படி எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதை அறிவுறுத்துவதைத் துணை நோக்கமாகவும் கொண்டே இயற்கையைப் படைத்துள்ளான் என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம், இயற்கையில் நிகழும் ஒவ்வொரு செயல்பாடும் இதனைத் தெளிவுபடுத்துகிறது. அதனால்தான், ‘இயற்கையே சிறந்த ஆசான்’ என்ற முதுமொழி தோன்றியது போலும். இதனடிப்படையில், சங்க இலக்கியத்தில் குறுந்தொகைப் புலவன் ஒருவன் குறித்த இயற்கை நிகழ்வு உணர்த்தும் செய்திகள் நமக்கு நல்லதோர் வாழ்க்கைப் பாடத்தை விளக்குவதைக் காணலாம்.

இயற்கையைப் புரிதல்:

நம் முன்னோர் இயற்கையை முழுமையாகப் புரிந்து கொண்டே தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். இயற்கைக்கு மாறாக அவர்கள் ஒருபோதும் செயல்பட்டதில்லை. ஆனால், இன்றோ பெரும்பான்மையான மக்கள் எதற்கெடுத்தாலும், “ஏன் இப்படி வாழ வேண்டும்? எப்படியும் வாழ்ந்தால் என்ன?” என்ற மறுதலையான சிந்தனைகளோடு வாழ்கிறார்கள். இதை விடுத்து, இயற்கை நியதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டு வாழ்ந்தால், இல்லறம் நல்லறமாகும் என்பதையே இக்கட்டுரை பகர்கிறது.

மழையும் மண்ணும்:

மழை பொழிவது ஓர் இயற்கை நிகழ்வு. அது வானத்திலிருந்து பொழிகின்ற போது தனக்கென எவ்விதமான மணமோ, சுவையோ, நிறமோ இல்லாமல் ‘மென்மை’ என்னும் ஒரேயொரு பண்பை மட்டும் இயல்பாகக் கொண்டு நிலத்தை வந்தடைகிறது. இயல்பாக ‘வன்மைத்’ தன்மையோடு இருந்த நிலம், மழைநீர் வந்து சேர்ந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாகக் குழைவுத்தன்மை பெறுகிறது. இந்நேரத்தில் நீர் நிலத்திடமிருந்து நிறத்தையும், மணத்தையும், சுவையையும் பெற்று செம்புல நீர், வண்டல்மண் நீர், கரிசல்மண் நீர் என்று நிலத்தின் தன்மைக் கேற்ப பல்வேறு வண்ணம் சார்ந்த பெயர்களைப் பெறுகிறது.

பரிமாற்றங்கள்:

வெறும் தரிசாகக் கிடந்த மண்ணில் மழைநீர் பெய்த அடுத்த நாளே பச்சைப் போர்வை போர்த்தியது போன்று சிற்சிறு புற்களும், தாவரங்களும் தலைதூக்கி விடுகின்றன. இப்போது மண்ணும் மழைநீரும் தங்களுக்குள் பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொள்கின்றன. அதாவது மழை நீரின் மென்மையை மண் வாங்கிக் கொள்ள, மண்ணின் மூன்று குணங்களை மழைநீர் பெற்றுக் கொள்ள இரண்டும் இணைந்ததால் “விளைநிலம்” என்னும் சிறப்புப் பெயரை நிலம் பெறுகிறது. அதுவரை ‘தரிசு’ என விளிக்கப்பட்டிருந்ததைச் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்.

மழைநீரால் நிலத்தில் பல்வேறு தாவரங்கள் தோன்றுகின்றன. அவை இதுவரை பூமிக்குள் கிடந்த பல்வேறு சத்துக்களையும், தாதுக்களையும் இன்னும் எத்தனையோ அரிய பல மருத்துவம் சார்ந்த குணங்களையும் வெளிப்படுத்திப் பூமிக்குப் பெருமை சேர்க்கிறது. மேலும், உலக உயிரினங்களுக் கெல்லாம் உணவாகி உதவுகிறது. இவ்விடத்தில் சற்று கூர்ந்து கவனித்தால், நீர் நிலத்தை அடையாதவரை மேற்கூறிய சிறப்புகள் நிலத்திற்குள் மறைந்திருந்தன என்ற உண்மையையும், மழைநீர் வந்த பிறகே அவை வெளிப்பட்டன என்பதையும் அறியலாம். எனவே, மழைநீரால்தான் மண்ணிற்குப் பெருமை என்பதும், இதுவே ‘இயற்கை’ சொல்லும் பாடம் என்பதும் தெளிவு.

மண்ணிற்கேற்ற மாண்பு: 

“மதுரை மல்லிகை, சேலத்து மாம்பழம், பண்ணுருட்டி பலாப்பழம், உதகை வண்ணப் பூக்கள்” என்று சொல்கிறார்களே! என்ன காரணம்? உற்பத்தியில் ஒரே பொருளாக இருந்தாலும், அவை அந்தந்த மண்ணின் தன்மைக்கேற்ப மகத்துவம் பெறுவதால்தானே இவ்வாறு கூறுகின்றனர். இவ்வாறு ஊரின் பெயரை விளைபொருட்களுக்கு முன் இட்டுக்கூறுவது எவ்வாறு இருக்கிறதென்றால், மனிதர்களில் பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்னால் தந்தை பெயரின் முதல் எழுத்தை இடுவதற்கு ஒப்பானதாகக் கருதலாமல்லவா?

இச்செய்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வாமன அவதாரமாய் விளங்கிய ஒரேயொரு தொடர், ‘செம்புலப் பெயல் நீர்’ என்பதாகும். இவ்வரி, சங்க இலக்கியத்தில் குறுந்தொகை என்னும் அகத்திணை நூலுள், பா எண்.40-இல் ஒரு தலைவன் தான் சந்தித்த தலைவியை நோக்கிக் காதல் மீதூரக் கூறிய கூற்று. இவ்வுவமைத் தொடர் எவ்வளவு விரிந்த வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிற தென்பது நாம் அறியத்தக்கது.

மேலே காட்டிய விளக்கத்துள் மழை என்பது தலைவியையும், நிலம் என்பது தலைவனையும் குறிப்பதாகக் கொண்டு வாழ்க்கைத் தத்துவத்தை அறிய முயல்வோம்.

இயற்கையும் மனித வாழ்க்கையும்:

வானத்திலிருந்து வரும் மழைநீர் ‘மென்மை’ என்பதைத் தவிர வேறு எந்த விதமான குணங்களையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் வருகின்றதல்லவா? அதுபோல திருமணமாகும் ஒரு பெண் தனது பிறந்த வீட்டிலிருந்து புகும் வீட்டிற்கு வரும் போது, தனக்கெனக் கொண்டிருந்த பழக்க வழக்கங்களை யெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, ‘அன்பு’ என்ற ஒன்றை மட்டுமே தன் இயல்பாகக் கொண்டு தலைமகன் வீட்டிற்கு வருகிறாள். அதன்பின் அங்குள்ள சூழலுக்கேற்ப தன் குணங்களை மாற்றிக் கொண்டு வாழத் தொடங்குகிறாள். மாறாக, “நான் என் அம்மா வீட்டில் எப்படி இருந்தேன்? எவ்வளவு செல்வச் செழிப்பாக வாழ்ந்தேன், இங்கென்ன இப்படி?” என்று அங்கலாய்த்துக் கொண்டால் வாழ்க்கை கசப்பானதாகி விடும். இந்த உண்மையை மழைநீர் நமக்குக் கற்றுத் தருகிறது.

வன்மையும் மென்மையும்:

மழைநீர் வந்து சேர்ந்தவுடன், நிலம் தன் வன்மைத் தன்மையை விட்டுவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மென்மைத் தன்மை அடைகிறதல்லவா? அது போல, மணமாவதற்கு முன்புவரை கட்டிளங் காளையாகத் துள்ளித் திரிந்த ஒருவன், திருமணத்திற்குப் பின் தலைவியின் அன்புப் புனலில் நனைந்து ‘மென்மை’ உடையவனாக மாறுகிறான். மழையால் நிலம் விளைநிலமாவது போல ஓர் ஆண் ‘குடும்பத் தலைவன்’ என்ற தகுதியைப் பெறுகிறான். அங்கே விளைச்சல், இங்கே பிள்ளைகள். அதுவரை குடும்பத்தில் பற்றற்று வாழ்ந்தவன், திருமணத்திற்குப் பின் இல்லறம் நடத்த மனைவியோடு ஆலோசித்து செயல்படுபவ னாகிறான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னரும் ஒரு பெண் துணையிருக்கிறாள்; நல்ல மனைவி கணவனுக்கு மந்திரியாகவும் இருக்கிறாள் என்பன போன்ற கருத்துக்கள் இதனை உறுதிப்படுத்தும்.

இவ்விடத்தில் இன்னொரு உண்மையைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. நிலமும் நீரின் இயல்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். அதை விடுத்து நிலம் கருங்கற் பாறையாக இருக்குமானால் நீர் எவ்வாறு மண்ணின் தன்மைகளைப் பெறுதல் இயலும்? வளமிக்க விளைநிலமாக மாறும்? அது போல, தலைவனும் வன்மையான குணங்கள் இல்லாமல் நெகிழ்வுத் தன்மை உடையவனாக, அதாவது குடும்பத்தை அனுசரித்துச் செல்லும் பக்குவமுடையவனாக இருத்தல் வேண்டும்.

நிறைவாக:

பெய்கின்ற மழை ஒன்று போல்தான் பெய்கின்றது. ஆனால், அது எவ்வாறு நிலத்திற்குப் பல்வேறு விதங்களிலெல்லாம் துணை நிற்கின்றதோ அது போல ஒரு பெண் தன் கணவனுக்கும், தான் கொண்ட பெரியோர்களுக்கும், பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் உறுதுணையாக இருத்தல் வேண்டும். ஓர் ஆணும் மழை சேர்ந்தவுடன் பலமடங்கு விளைச்சலைத் தரும் ஒரு நிலத்தைப் போல குடும்பத்தில் இல்லறம் பேணவும், சமுதாயத்தில் நல்லறம் போற்றவும் வழிகோல வேண்டும். இவை போன்ற பல செய்திகளைக் குறுந்தொகை வரி நமக்கு விளக்கிக் காட்டினாலும், இன்னும் நுணுகி ஆராய்வோமாயின் பல வாழ்க்கை நெறிமுறைகள் நமக்கு வெளிப்படலாம்.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் 26/10/2012 in நோக்கு

 

என் பார்வையில் “இங்கிலிஷ் விங்கிலிஷ்”

எம்.அலெக்ஸ் அம்புரோஸ், சென்னை.“பூ” படத்திற்கு பின்னர்,  ஹீரோயினை சார்ந்து எடுக்கப்பட்ட சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.

நாம் மிகச் சாதாரணமாக உதாசீனப்படுத்திவிடும் குடும்பத் தலைவிகளின் உணர்வுகளை, அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்தக் கதை. கொஞ்சம் சொதப்பியிருந்தால் கூட, “விக்ரமன் பாணி” சினிமாவாக மாறியிருக்கக் கூடும். அந்த அபாயத்திலிருந்து படத்தை தப்புவிப்பதே திரைக்கதையும், அட்டகாசமான வசனங்களும் தான்.

மிக நுணுக்கமாக ரசிக்க இப்படத்தில் ஏராளமான விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன. “ஒருவொருக்கொருவர் புரிதலை ஏற்படுத்தக்கூடிய அடையாளம் மொழி மட்டுமேயன்றி, அதையே குறையாக பாவித்து ஒருவரை காயப்படுத்த வேண்டாமே” என்று பாசிடிவ் விஷயங்களை நமக்குள் பதிய வைக்கிறது.

“உனக்கு ஏ.பி.சி-ன்னாலே என்னன்னு தெரியாது” என்று மூளையோடு பேசும் தன் பிள்ளையிடம், “ஆனா பேரண்ட்ஸ்ன்னா என்னன்னு தெரியும், அவங்க கடமை என்னன்னு தெரியும்” என்று மனதிலிருந்து வார்த்தைகளைப் பேசுவதும்,

“எனக்கு என் குழந்தைகளை விட, என்னுடைய இங்கிலீஷ் முக்கியமாப் போச்சே” என்று கலங்குவதும்;

“லட்டு செய்வதற்காகவே பிறந்திருக்கா” என்று கணவன் கலாய்க்கும் போதும்;

பார்வைகளிலேயே உதாசீனங்களை மறைத்து தன்னை இயல்பாக்கிக் கொள்வதும்;

“ஆளாளுக்குத் தூக்கி எறிய நான் என்ன குப்பைத் தொட்டியா? எப்பவும் குறை சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி?” என்று பொருமுவதும்;

“மற்ற சப்ஜெக்டை விட, என்னுடைய பேவரைட் சப்ஜெக்ட்ல நான் பெயில் ஆகாம இருக்குறதுதான் முக்கியம்” என்று விரக்தியின் போது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதும்;

டியூஷன் கிளாசில் ஆசிரியரின் செயல்முறைகளைப் பற்றி மற்றவர்கள் குறை சொல்லும்போது, ஷாஷி சொல்லும் பதில்களும்;

“இடத்திற்குத் தகுந்தாற்போல பயன்படுத்துவதற்குத் தான் மொழியே” என்பது போல இந்தியா திரும்பும் இறுதிக் காட்சியில், “ஏதாவது தமிழ் நியூஸ் பேப்பர் இருக்கா” என்று கேட்பதும் என எல்லா ப்ரேம்களிலும் Applause(கைதட்டுதலை) அள்ளுகிறார் “ஷாஷி” கதாபாத்திரமான ஸ்ரீதேவி.

“சர்ப்ரைஸ் அஜித்” உட்பட, மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக இயல்பு. “பெண் என்றாலே ஏமாற்றுக்காரி” என்று கண்மூடித்தனமாக நம்பி, “அடிடா அவளை, கொலை வெறி, வேணாம் மச்சான், …” போன்ற பாடல்களை ரிங்டோனாக வைத்து விஷமத்தை பரப்புபவர்கள், அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு இது.

“குடும்பத்திலிருக்கிற ஒவ்வொருத்தரையும் சின்னதா சந்தோஷப்படுத்த நான் எவ்வளவு கஷ்டப்படுறேன். ஆனா, அவங்க என் மனசை நோகடிச்சுடுராங்களே” என அனுதினமும் புலம்பித் தவிக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, இப்படம் ஒரு சமர்ப்பணம்.

 

லோனாவாலா – பாஜா குகைகள்

“கழுகுமலை” மா.சட்டநாதன், மும்பை.கர்லா அடிவாரத்தில் இருந்து, வந்த வழியே திரும்பி ரோட்டைக் கடந்து ஒரு சிறு கிராமத்தின் வழியே இந்திரயாணி நதியைத் தாண்டினால் மாளவ்லி ரயில் நிலையத்தை அடைகிறோம். அங்கிருந்து மும்பை – புனே விரைவு நெடுஞ்சாலையை சிறு மேம்பாலம் மூலம் கடந்தால், மீண்டும் ஒரு சிறுகிராம சாலை மூலம் பாஜாக் குகை அடிவாரம் வரை வந்து விடலாம். மோசமில்லாத நல்ல சாலைதான்.

நான் சென்ற போது நல்ல மழை. சுற்றிலும் சஹயாத்ரி மலைத்தொடர். அங்கங்கே கொட்டும் சிறு அருவிகளுடன், பளீரென்று கழுவி விடப்பட்ட குகைகள் எனப் பரவசம் தரும் சூழல். இந்த இடத்திற்கு கல்லூரி மாணவ மாணவியர் ட்ரெக்கிங் வருகிறார்கள். பாஜா அடிவாரத்தில் விழுகின்ற சிறிய நீர் வீழ்ச்சியில் குளிக்கிறார்கள். மும்பை, புனே வாசிகளுக்கு அருகிலேயே அருமையான ஒரு பிக்னிக் ஸ்பாட்.பாஜாக் குகைகளின் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு. எல்லாம் மேற்கு பார்த்த குகைகள். அதனாலேயே மாலையில் இந்தக் குகைகளைப் பார்க்க பரிந்துரைக்கின்றனர்.சூரிய ஒளி நேரடியாக குகைகளுக்குள் விழுவதால் நுட்பமான வேலைப்பாடுகளும் நன்கு தெரிகின்றன. முன்புறம் பரவிக் கிடக்கும் வெட்டவெளி, சைதன்யத்தை துல்லியமாக எடுத்துக் காட்டி பிரமிக்க வைக்கிறது. சைதன்யத்தின் உட்புறம் எளிமையான எண்கோணத் தூண்கள், அவற்றின் மீது அமைந்த அரை நீள் வட்ட கூரை, கர்லாக் குகை போன்றே இங்கேயும் மர வளைவுகள். ஆனால், வெளிப்புறம் சாளரங்கள் போன்ற அழகிய வேலைப்பாடுகள்.துறவிகள் தண்ணீர் குடிக்க என்றிருக்கும் அமைப்புகள், தங்குவதற்கான சிற்றறைகள் எனப் பொதுவான குகைகள் போன்று இருந்தாலும், பாஜாக் குகைகளின் சிறப்பு – அங்கிருக்கும் சிற்பத் தொகுதிகள். யவன வணிகர்(பிரமுகர்), நான்கு குதிரைகள் மீது, தன்னிரு துணைவர்களுடன் வரும் தலைவன், யானை மீது அமர்ந்து வரும் கந்தர்வன்.அவனுக்கு கீழே ஒரு பெண் தபேலா வாசிக்க, மற்றொருத்தி நடனமாடும் சிற்பமானது, இந்தியாவில் 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தபேலா என்னும் இசைக் கருவி இருந்து வருவதை நமக்குத் தெரிவிக்கிறது.இங்கிருக்கும் இன்னொரு விநோதம் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் கல்லினாலான 14 ஸ்தூபிகள். சாஞ்சியிலும் மகா ஸ்தூபிக்குப் பின்புறம் நிறைய புத்தத் துறவிகளின் ஸ்தூபிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவை தனித்தனிக் கோவில்களைப் போன்றவை. பாஜாவிலோ இவை ஒரு சிறு குகைக்குள் ஒன்பதும், குகைக்கு வெளியே ஐந்துமாக நெருக்கமாக உள்ளன. ஸ்தூபிகளின் அமைப்புகளிலும் வேறுபாடுகள் உள்ளன. விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை.மொத்தத்தில் கர்லா, பாஜாக் குகைகள் தவற விடக்கூடாதவை என்பதில் ஐயமில்லை. லோனாவாலாவில் ஒரு முழு நாளையும் செலவிட இடங்கள் உண்டு. ஆகையால், லோனாவாலாவிற்கு ஒருநாள், இந்த குகைகளுக்கு அரை நாள் என்ற அளவிலாவது ஒதுக்கி நல்ல முறையில் பாருங்கள்.இந்த முறை குகைகளை மட்டும் மனதில் வைத்துச் சென்றதால், லோனாவாலாவை முழுமையாக என்னால் சுற்றிப் பார்க்க முடியவில்லை. அது ஒரு கோடை மலைவாச ஸ்தலம். வழக்கம் போல நம்ம ஊர் வெயிலைத் தாங்க இயலாத வெள்ளைக்கார துரைகளால் கண்டறியப்பட்டது. மீண்டும் அங்கே செல்ல ஒரு திட்டம் இருக்கிறது. விரிவான தகவல்களுடன் லோனாவாலாவைப் பற்றி அப்போது எழுதுகிறேன்.

 

மழை பற்றிய க(வி)தை!

“தென் மேற்குப் பருவக் காற்று

வட கிழக்குப் பருவக் காற்று

மழை பொய்யும்;

புயல் சின்னமும்

வெப்ப சலனமுமே

மழை பெய்யும்”

என்கிறான் மாணவன்.

            மழை வரும் காலத்தை

            மன நுகர்வாலே கணித்து

            மறைவான இடம் பெயரும்

            மழையெறும்புகள் – இன்று

            பிழையெறும்புகள்!

மாணவனும் மழையெறும்பும்

மண்ணின் மாறாத இளமையையும்

மழையின் வற்றாத காதலையும்

அறிவரோ?

           மழைக் காலத்தில்

           மழலைப் பருவத்தில்

          ஆறுகளின் சிறு வடிவத்தை

          தெருவிலே கண்டேன்.

வளைந்து, நெளிந்து,

குதித்து ஓடுமதில்

சாதாக் கப்பல், கத்திக் கப்பல்,

குடைக் கப்பல் என்று

விதவிதமாய் காகிதத்தில் செய்து

மிதக்க விட்டேன்.

          அவை போகும் தூரத்தை

          எங்கள் வீட்டுப் படியிலிருந்தே

          பார்த்திருப்பேன்.

திடீரெனத் தெருவில்

வந்த மாட்டு வண்டியால்

எழுந்த அலைகளில்

கவிழ்ந்து போன கப்பல்களைப்

பார்த்து கவிழ்ந்திருப்பேன்.

          “கப்பலா கவுந்து போச்சு? வீட்டுக்குள்ள வால”ன்னு

          வெவரந் தெரியாத ஆத்தா சத்தம்

          அடுப்படியிலிருந்து வரும்!

தீபாவளித் திருநாளில்

பொம்ம சுடப் போகும் சிறுசுக –

சோளத் தட்டை பருப்புல

அழகழகா பொம்ம,

மாட்டு வண்டி செய்வாக;

வண்டிக்குப் பைதா

ஒடஞ்ச மண்பான ஓடு!

         “சோளப் பொறி சொங்குப் பொறி…”

          என்று கார்த்திகைத் திருநாளில்

          நெருப்பில் வைத்த

          வரிச்சிக் கட்டைகளால்

          அடித்து மகிழ்ந்தது –

          ஆயிரம் கம்பி மத்தாப்பு தராத

          அழகுப் பொறிகள்!

மாலை நிலவொளியில்

கூட்டாஞ் சோறு:

ஆவுடத்தாய், மாரியப்பன்,

வெயிலாட்சி, தங்கப்பாண்டி,

நவண்டா, கோணன்,

மூக்கம்மா, முப்புடாதி

எல்லாரும் ஒன்னாத்தான்!

          அப்புறம் விளையாட்டு:

          ஒருபுறம் –

          நண்டூருது நரியூருது…

          மறுபுறம் –

          கொல கொலயா முந்திரிக்கா…

          இன்னொரு புறம் –

          ஒருகுடம் தண்ணி எடுத்து…

காட்டு வேலைக்குப் போயிட்டு வந்த

ஐயாவும் ஆத்தாளும்

வீட்டுப் படியில உக்காந்து சாப்பிட்டுக்கிட்டே

எங்கள ரசிப்பாக!

          அவுக முன்னாடி

          சிவன் கோயில் நந்தி மாதிரி

          முன்னங் கால நீட்டிப் படுத்திருக்கும்

          ராசு வீட்டு நாயி!

          சாப்பிட்டுக்கிட்டே

          அப்பப்ப சோறு போடுவா எங்காத்தா,

          அது வால ஆட்டிக்கிட்டே தின்னும்.

வீட்டில் அழுத தம்பிய

முதுகில் சுமந்து கொண்டு

உப்பு மூட்டை வியாபாரம் செய்யும் முருகன்.

கொஞ்ச நேரம் கழித்து

அவன் வலக்காலை நீட்டிப் பிடித்து

தோட்டத்தில்

மருந்தடிக்கும் மிசினாய் மாற்றுவான்.

          மாலை ஏழு மணிக்கு மேல

          ஊர்க் கிணற்றில்

          தண்ணி எடுக்கப் போகும்

          மாரியக்கா, வேலமக்கா, பொன்னமக்கா.

தெரு விளக்குக்குக் கீழே

ஒன்னு கூடி

வீட்டுப் பாடத்தை எழுதிக் கொண்டிருக்கும்

எட்டாம் வகுப்புப் படிப்பாளிங்க!

          காரவீட்டு மொட்டமாடியில்

          வேப்பம்பழம் சாப்பிட்ட பறவைகளின்

          எச்சத்தில் வந்த கொட்டைகள்

         அங்கிட்டும் இங்கிட்டும் நெறைய கெடக்கும்.

மண் வீட்டுத் தரையை

பசுமாட்டுச் சாணம் வைத்து

மெழுகும் ராமாத்தா.

அவுக வீட்டு ஓலைக் கூரைகளுக்கு இடையே

கூடு கட்டி வாழ்ந்த குருவிகள்

கூட்டம் கூட்டமாய் பறக்கும்.

          மின்னல் இடியுடன் பெய்த மழையிரவு

          விடியுமுன்னே

          எங்கய்யா காளான் பிடுங்க

          காட்டுக்குக் கூட்டிட்டுப் போய்டுவார்.

          “அட, நமக்கு முன்னாலயே நயினாரு வந்துட்டான்,

          சீக்கிரந் தேடுல” என்பார்.

வேக வேகமா

வழுவழுப்பான வெள்ளைக் காளான்களை

தேடித் தேடி பிடுங்கி

கயிற்றில் கட்டிக் கொண்டு

வீடு திரும்புவோம்.

          வெயிலு ஏறுமுன்னே

          குழம்பு வெச்சிரணும், இல்ல கெட்டுடும்.

          ஆத்தா கைப் பக்குவம்

          தெருவே மணக்கும்.

கூனை கட்டி

கிணற்றுத் தண்ணீரை இறைக்கும்

மாடுகளுக்கு

பகலில் பசும்புல் மேய்ச்சல்;

மாலையில்

அரைச்ச பருத்திக் கொட்ட, புண்ணாக்கு;

அவ்வப்போது வைக்கோல்.

         ஆடுகளுக்கோ

         அகத்திக் கீரக் கட்டும், ஆமணக்கு இலையும்!

கணக்குப் பாராம உழைப்போர் உணவோ

கம்பு, சோளம், கேப்பக் கூழ்

கருவாட்டுக் குழம்புக்கு இழுக்கும்.

சாமி குருதோளின்னா

சாம்பாரே போதும்.

          கசக்கிச் சாப்பிடும் கம்மங் கருது,

          பல்லுல வழிச்சிச் சாப்பிடும்

          உளுந்தங் காயும் தட்டாங் காயும்.

          சுட்டுச் சாப்பிடும் சீனிக் கிழங்கு

          பொறியாக்கிச் சாப்பிடும் சோளக் கருது.

          தித்திக்கும் தின்பண்டம், திகட்டாது தினந்தோறும்.

அழகையாத் தேவருக்கு பருத்தியெடுக்க

போஸ்டாபீஸ் நாயக்கருக்கு பூப்பறிக்க

செல்லையா நாடாருக்கு கடலை ஆய

கிராம்சு வீட்டுக்கு களை பிடுங்க

இன்னும்…

பெருமாள் கோயிலு பக்கம்

தெக்கோயிலு பக்கமுனு

தெனந் தோறும் வேலை;

          காட்டு வேலைக்குப் போகாதவுகளுக்கோ

          குழந்தையம்மா தீப்பெட்டி.

வெறகு பெறக்கப் போன

வேம்பையாத் தேவரு

தண்ணி தவிச்சா

உப்போடை மண்ணுல

நாழியளவு தோண்டி வரும் தண்ணிய

தெளிய வச்சிக் குடிப்பாரு.

         பங்குனி சித்திரை வைகாசியில்

         ஊருக்கு வெளியே முகாமிடும்

         குறவர் கூட்டம்.

காலையில்…

சாமியோவ்! காடை கெளதாரி.

பகலில்…

சாமியோவ்! பாசி ஊசி.

இரவில் பாவக்கூத்து.

          ராமகதை, நல்ல தங்காள் கதை எல்லாம்

          அங்குதான் தெரியும்.

          உழுவாத்தலையனும் உச்சிக் குடுமியனும்தான்

          அந்த வயதிலறிந்த

          நகைச்சுவை இரட்டையர்கள்!

இவற்றோடு

குண்ணாங் குண்ணாங் குர்ர்ர்ர்… காத்தாடி

களிமண்ணில் செய்த ராட்டினம்

கருப்பு செவப்பு மண் சட்டிகள்

இன்னும் காணாமல் போனவை ஏராளம்!

          இவைகளுக்கும்

          மழைக்கும் சம்பந்தமுண்டு;

          இவை

          இல்லாமல் போனதற்கும்

          மழைக்கும் சம்பந்தமுண்டு.

ஆனால்,

மழை இல்லாமல் போனதற்கு

மனிதனுக்கு மட்டுமே சம்பந்தமுண்டு!

          மாணவனும் மழையெறும்பும்

          மண்ணின் மாறிய இளமையையும்

          மழையின் வற்றிய காதலையும்

         அறிவரோ?

செட்டிகுறிச்சி நினைவுகளுடன்,

அசின் சார், கழுகுமலை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

ரஞ்சித் எழுதிய “மும்மாரி” கட்டுரை.