RSS

‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை

28 செப்

அசின் சார், கழுகுமலை.

முதலில் ‘சிவசு’ பற்றி…

பாளை. தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேரா.நா.சிவசுப்பிரமணியன் அவர்கள். அனைவராலும் ‘சிவசு’ என்றே அறியப்பட்டவர். பணி ஓய்வு பெற்றிருந்தாலும், இலக்கியத்திற்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் பணியாளர் அவர். ஓய்வு பெறும் முன்பும் சரி, பின்பும் சரி, இலக்கியம் சார் கூட்டங்கள் எங்கு எப்போது நிகழ்த்தினாலும் தவறாமல் எனக்கு அழைப்பிதழ் அனுப்பி விடுவார். இன்று வரை எனக்குத் தெரிந்த அளவில், தன் சொந்தப் பணத்தை செலவழித்து, மாணவர்களுக்கு இலக்கியப் பயிற்சிப் பட்டறைகளை நடத்திவரும் ஓர் அற்புத மனிதர் அவர் மட்டுமே. நான் அன்னாரின் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

எந்த ஓர் இலக்கியத்தையும் மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். மார்க்சிய, பெண்ணிய, தலித்திய உத்திகளோடும் பார்க்க வேண்டும் என்பார். கல்லூரி நாட்களில் அவரது ஒவ்வொரு வகுப்பும் எங்களுக்கு இலக்கிய ஆய்வரங்கு போலவே இருக்கும். ஒரு படைப்பு அச்சில் ஏறும் வரைதான் எழுத்தாளனுக்குச் சொந்தம். அதன் பின்பு அது வாசகனுக்கு உரியது. வாசகன் அதை எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பார். நவீன விமர்சன உத்தி, மேடைப் பேச்சு, புத்தகம், புத்தகக் கடை, ‘மேலும்’ இதழ், வெளியீட்டகம் என்று படிப்பிலும் படைப்பிலும் அவரிடம் இருந்த ஆர்வத்தை நான் அவரிடம் படித்த நாட்களிலேயே பார்த்திருக்கிறேன்.

இன்றும் எழுத்து, வாசிப்பு, பயிற்சி, பட்டறை என்று தொடர்ந்து தன் வயதை இலக்கியப் பணியால் நிரப்பிக் கொண்டிருக்கும் ‘சிவசு’ அவர்கள், சமீபத்தில் ஓர் அழைப்பிதழை எனக்கு அனுப்பி இருந்தார்கள்.

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 2012 செப்டம்பர் 15,16 ஆகிய இரு தினங்கள் “சிறுகதை வாசிப்பும் படைப்பும் – பயிற்சிப் பட்டறை” என்றிருந்தது. நான் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டேன். பல்வேறு கல்லூரிகளில் இருந்து அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். மாணவிகள் அதிகமாகத் தெரிந்தது.

‘கூகை’ நாவலாசிரியர் சோ.தர்மன், தன் தொடக்க உரையில், “சங்கீதம், பரதம் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். இலக்கியம் படைப்பதை அப்படிக் கற்றுக் கொள்ள முடியாது. பணம் கொடுத்தும் படைப்பாளியாக ஆக முடியாது. பட்டப் படிப்பு தகுதியுடன் வேலைக்குச் செல்வது போன்ற அவசியமும் இதற்கு இல்லை. படைப்பாளிக்குத் தேவையான ஒரே ஒரு தகுதி – எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாப் போதும்! நான் படிக்கவில்லை. ஆனால், என்னுடைய படைப்பைப் பல்கலைக் கழகங்கள் பாடமாக வைத்திருக்கின்றன. அனைவரும் படிக்கிறாங்க. உங்களுக்கு நான் சொல்வது, எது கிடைத்தாலும் வாசியுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துக் கொண்டே இருங்கள். வாசிக்க வாசிக்க, எதை வாசிக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எப்போது இதைப் புரிந்து கொள்கிறீர்களோ, அப்போது நீங்கள் படைப்பாளி. பார்த்தது, கேட்டது, ரசித்தது என்று எதையும் எழுதலாம். திருவிளையாடல் படத்தில், ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்ற பாடல் வரும். அது திருவிளையாடல் புராணத்தில் உள்ளதன்று, குறுந்தொகைப் பாடல். ஆனால், அதைக் கொண்டு போய் அந்த சினிமாவில் சொருவியதுதான் கிரியேட்டிவிட்டி! அந்த கிரியேட்டிவிட்டிதான் நமக்கு வேணும்” என்றார்.

முதலாம் அமர்வில் எழுத்தாளர் வண்ணதாசன் முன்னிலையில் அவரின் ‘ஈரம்’ சிறுகதை வாசிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் புரிதலை முன் வந்து பகிர்ந்து கொண்டனர். இறுதியில் அவர் பேசினார். “இன்று செப்டம்பர் 16. கி.ரா.வின் பிறந்த நாள்” என்பதை நினைவு படுத்தியவர், தொடர்ந்து பேசியதில் சில பகுதிகள்: “கதாசிரியன் பெரும்பாலும் யூகிக்கிறவனும், அநுமானிக்கிரவனுமாய் இருக்கிறான். ஈரம் கதையில் வரும் அண்ணாச்சி, லோகு மதினி, முருகேசன், வாழை, ஈரம் எல்லாம் அவர்களல்ல, நாம் தாம். நாம் தாம் எல்லாம். அது போல உங்கள் கதை மாந்தர்களை உங்கள் வாழ்விலிருந்து தேர்ந்து கொள்ளுங்கள். கதையின் ஆரம்ப வரிகளைத்தான் நான் எழுதுகிறேன். முடிவு தானாக எழுதிக் கொள்கிறது. சமையல் குறிப்பு போல அளவு சொல்ல முடியாது. ஆனால், அக்குறிப்பின் கடைசியில் “தேவையான அளவு உப்பு” என்றிருக்கும். எது தேவையான அளவு? என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது ‘கதை’ எழுதி விடலாம். ஐம்பது வருடம் கதை எழுதிய எனக்கு, காதல் கதை எழுதவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு” என்றார். மேலும் அவர், வ.உ.சி.கல்லூரியில் பி.காம். படித்த நாட்களையும், அந்நாட்களில் தனக்கு கிடைத்த கதைக் களங்கள், கதைமாந்தர்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த சிவசு அவர்கள், “ஒரு நல்ல டெக்ஸ்ட் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிந்தனையைத் தரவேண்டும். அந்த வகையில், வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயமோகன் இக்காலகட்டத்தின் முக்கிய எழுத்தாளர்கள்” என்றார்.

அடுத்ததாக, லா.ச.ராமாமிருதம் எழுதிய ‘அபிதா’ நாவல் குறித்து பேரா.தனஞ்செயன் பேசினார். “அபிதா நாவல் படித்த பின், ரொம்ப நாளாக நான் அதிலேயே வாழ்ந்தேன். என் மகளுக்கும் அதனால் தான் ‘அபிதா’ என்ற பெயரை வைத்தேன்” என்றவர், “எந்த ஒரு கலையும் சமூகத் தொடர்பின்றி இருக்க முடியாது. மேலும், இந்த மாதிரிப் பட்டறைகள் நம்முடைய கிரியேட்டிவிட்டியை இன்னும் கொஞ்சம் தூண்டி விடுகின்றன.” என்றார்.

மீண்டும் சோ. தர்மன் பேசும் போது, இவ்வாண்டு கல்கி தீபாவளி மலருக்காகத் தான் எழுதிய ‘பட்சிகள்’ சிறுகதையைக் கூறிவிட்டு, “மூடநம்பிக்கைகளை முழுசா நிராகரிக்கவும் முடியாது, முழுசா ஏத்துக்கவும் முடியாது” என்றார். மேலும், “படைப்புக்கான கரு வாழ்வில் காணும் நிகழ்வுகளின் கோர்வைதான். நேற்று நான் இங்கு வரும் போது, சாலையில் ஒரு கழுதை அடிபட்டுக் கிடந்தது. பக்கத்தில் குட்டிக் கழுதை பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பாவம், அதற்கு கார் கண்ணாடியை உடைக்கத் தெரியாது; கம்ப்ளெயின்ட் பண்ணத் தெரியாது; மறியல் பண்ணவும் தெரியாது. ஏதும் சொல்லவோ, செய்யவோ தெரியாத அது நின்னுக்கிட்டே இருந்தது. இந்த நிகழ்வு என் மனதில் ஆழமா பதிஞ்சிருச்சு. என்றாவது ஒரு நாள் இது ஒரு படைப்பாக வடிவம் பெறும்” என்றார்.

சிவசு அவர்கள், “தமிழ்த் துறைக்கு வெளியே உள்ளவர்களால்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது. வல்லிக்கண்ணன் இதற்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை” என்ற கருத்தையும் கூறினார்.

அடுத்த அமர்வில், சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘மாபெரும் சூதாட்டம்’ சிறுகதை அவர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. மாணவர்களின் கருத்துரைகளைத் தொடர்ந்து இந்திரஜித் பேசினார். எந்தப் போக்கும் வாழ்வினுடைய, காலத்தினுடைய சூதாட்டங்களினால் கணிப்பிற்குட்படுவதில்லை. நடந்த காரியத்தின் காரணங்களை ஆராய்ந்து அடுக்குவது சுலபம். வலுவான காரணங்கள் இருக்க, அவற்றிற்கான காரியங்கள் ஏன் நடக்கவில்லை என்பதை எவரும் அறிய முடியாது. நடந்ததை நடக்க விதிக்கப்பட்டதாக நினைத்து ஏற்றுக்கொள்ள சூதாட்டம் வெற்றிகரமாக ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. என்ற அவர் கதையிலுள்ள வரிகள் அவரின் உரைக்குப் பின்புதான் புரிந்தது.

நாறும்பூநாதன் மார்க்சியப் பார்வை பற்றிப் பேசும்போது, “மார்க்சியம், சமமற்ற தன்மையை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறது” என்றார்.

நிறைவு விழாவில் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் தன் உரையில், “கலை உணர்வு இல்லாதவர்கள் படைப்பாளியாக முடியாது. பயிற்சிப் பட்டறை மட்டுமே ஒருவனை படைப்பாளி ஆக்கி விடாது. நீங்கள் பயிற்சிப் பட்டறை செல்லும் போது, படைப்பாளி கூலி வேலைக்குச் செல்கிறான். மேலும், படைப்பாளி எப்போதும் நிகழ்கால நிகழ்வுகளையே எழுத வேண்டும். கூடங்குளத்தை பற்றி, சிவகாசி வெடி விபத்தைப் பற்றி எழுத வேண்டும். அரசுக்குப் பின் வால் பிடித்துச் செல்பவனாக படைப்பாளி இருக்கக் கூடாது. நான் எழுதிய ஐந்து நாவல்களும் பரிசு பெற்றுள்ளன. எழுதுவதை ஆத்மார்த்தமாக எழுத வேண்டும். நான் தமிழ் படிச்சதே கிடையாது. தமிழ் நாட்டில், தமிழ் படிக்காத நான் எழுதியவை பரிசு பெற்றுள்ளன என்றால், அவை ஆத்மாவின் மொழிக்குக் கிடைத்த பரிசு. இலக்கணத்திற்கும், படைப்பிலக்கியத்திற்கும் சம்பந்தமே கிடையாது. படைப்பாளி மொழி ஆத்ம மொழி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அந்நிய சக்திகளின் தூண்டுதலோடு இயற்கை, காடு, நதி எல்லாம் அழிக்கப்படுகிறது. உலக உயிரினங்கள் எல்லாம் மனிதனுக்குத் தேவை. ஆனால், அவைகளுக்கு மனிதன் தேவை இல்லை. எனவே, மனித நேயம் வளரவும், அதைப் பேசவும் நிர்வாகம் இது போன்ற பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.” என்றார்.

ம.தி.தா.இந்து கல்லூரி பேரா.கட்டளை கைலாசம், “பேராசிரியர்களால் படிப்பாளிகளை உருவாக்க முடிகிறது. ஆனால், படைப்பாளிகளை உருவாக்க முடிவதில்லை” என்றார்.

தமிழக அளவில் 146 கல்லூரி மாணவர்கள் அனுப்பியிருந்த சிறுகதைகளில், சிறந்த பத்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பரிசு வழங்கினர்.

விழாவிற்கு திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்களும், சிவசுவும் பொருளுதவி செய்திருந்தனர். கல்வியாளர்களின் உதவியோடு நடந்த கல்வி சார் விழாவை இங்குதான் கண்டேன். இது நல்ல முன்மாதிரி. இப்படிப்பட்ட விழாக்களால்தான் எந்த ஒரு பிரச்சினையையும் துணிச்சலாகப் பேச முடியும். நிர்வாகத்திற்கும் கல்லூரி முதல்வருக்கும் நம் வாழ்த்துகள்.

இன்றைய இளைய தலைமுறை மாணவர்கள் கூட்டமாக நின்று எழுத்தாளர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை முதன் முறையாகப் பார்த்தேன்.

பொதிகை மலை அடிவாரம், மூலிகைக் காற்று, சிலிர்க்கச் செய்யும் சிறு தூறல், படரும் மேகங்களூடே அவ்வப்போது வரும் வெம்மை தராத வெயில், உணவு, படுக்கை வசதியுடன் பாரம்பரியம் மிக்க கல்லூரியில் இரண்டு நாள்கள். படைப்பாளி, படைப்பு, வாசகன், திறனாய்வாளன், பேராசிரியர்கள் என்று எல்லோரையும் ஓரிடத்தில் சந்தித்த மகிழ்ச்சி – அனைவர் முகத்திலும் அகஸ்தியர் அருவியாய்க் கொட்டியது.

வந்த வாசகரெல்லாம் படைப்பாளியாய் திரும்பிக் கொண்டிருந்தனர் வீட்டுக்கு!

* * *

தொடர்புடைய பதிவுகள்:

நெல்லையில் ஒரு நிகழ்வு

பொதிகை அடிவாரத்தில் முஸல் பனி

Advertisements
 

4 responses to “‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை

 1. பேரா.சு.தளபதி.

  16/10/2012 at 6:12 பிப

  சிவசு- பயிற்சிப் பட்டறை, தகவல் பதிவு கண்டு பெரு மகிழ்வு அடைகிறேன். அம்மகிழ்வுக்கு பின் வரும் காரணங்கள் எதுவும் ஏன் எல்லாமும் இருக்கலாம். நான் அக்கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறை மாணவன். அப்பயிற்சியில் பங்கேற்ற என் மனம் கவர்ந்த படைப்பாளிகள். அண்மைக் காலமாய் பரிசுகள் பெறும் சிறுகதைப் படைப்பாளீ… தமிழ்த்துறை, கல்லூரி, பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.பேரா.சு. தளபதி, தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.ஏம். சென்னை.

   
  • Asin sir

   16/10/2012 at 7:44 பிப

   தங்களின் பின்னூட்டம் பேரா.சிவசு அவர்களுக்கு உற்சாக பானம் போன்றது.
   இதை உடனே அலைபேசியில் அவர்களுக்கு வாசித்துத் தெரிவித்து விட்டேன்.
   மிக்க மகிழ்ச்சி கொண்டார்.
   உங்களுக்கு என்னுடைய நன்றி.

    
   • பேரா.சு.தளபதி.

    17/10/2012 at 10:03 பிப

    மீண்டும் எளிதாகச் சொல்லிவிடும் நன்றியைக் கடந்த கனிவான பணிவுடன் வணக்கம். சிவசு ஐயாவின் தமிழ்ப்பணி வணக்கத்துக்குரியது. அந்தச் சிரிப்பில் செந்தமிழ் மகிழ்வைக் கண்டது என் மனம். தங்களது தகவல் வலையூட்டம் மேலும் ஒரு தமிழ்ப்பணியாகி, பயனளிக்கிறது.

     
 2. செ.ஏக்நாத் ராஜ்

  22/06/2013 at 12:54 பிப

  தாமதமாகத்தான் வாசிக்க நேர்ந்தது. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நான் பாபநாசம் கல்லூரியில் இளங்கலை படித்தேன். அப்போது எழுத்தாளர்களை அழைத்து வந்து பேசச் செய்திருக்கிறேன். முதுகலையில் நானும் சிவசு சாரின் மாணவன்தான். அவரது ‘மேலும்’ இதழில் கட்டுரை ஒன்றை எழுதிவிட வேண்டும் என்று துடியாகத் துடித்தேன். அது நிறைவேறவே இல்லை.
  இக்கட்டுரை என் நினைவுகளை கிளறியது.
  நன்றி

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: