RSS

லோனாவாலா – கர்லா குகைகள்

22 செப்

கழுகுமலை” மா.சட்டநாதன், மும்பை.            “மூலம் தாரோ கேவலம் அஷ்ராயந்த,

            பணித்வயம் போக்துமா மந்த்ரயந்த,

            கந்தமிவ ஸ்ரீமபி குத்சயந்த,

            கெளபீனவந்த காலு பாக்யவந்த!” (கெளபீன பஞ்சகம் – பாடல் 2 )

“மரத்தடியை வசிப்பிடமாகக் கொண்டு, இரு கைகளாலும் பிச்சை எடுத்துண்டு, கந்தலைப் போல செல்வத்தை நினைக்கும் கௌபீன தாரிகளான துறவிகள் பாக்கியசாலிகள்.” ஆதி சங்கரர் ஏழாம் நூற்றாண்டில் துறவிகளின் பெருமையாகப் பாடியதை, அவருக்கு ஆயிரம் வருடங்கள் முந்திய புத்தர், தன்னுடைய துறவற சீடர்களுக்கு கட்டாயமாக்கி இருந்தார்.

ஒரு பிக்கு மூன்று நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில தங்கி இருக்கக் கூடாது. ஆனாலும் மழைக்காலங்களிலும் நோய்வாய்ப் பட்டிருக்கும்போதும் ஒரே இடத்தில் தங்க அனுமதி உண்டு. அதுவும் மக்களால் எளிதில் அணுக முடியாத இடமாக இருப்பது நல்லது. அதனால் தான் அஜந்தா போன்ற குகைகள் காட்டிற்குள் இருந்தன.

புத்தரே அப்படித் தான் இருந்தார், தன்னை அவர் ததாகதர் என்றே அழைத்துக்கொண்டார். ததாகதர் என்ற வார்த்தைக்கே “இந்த வழியே வந்து, இந்த வழியாகவே போனவர்” என்று தான் பொருள். மெய்யியல் ரீதியாக, தான் சொன்ன பாதையில் தானே நடந்து காட்டியவர் என்று பொருள் சொன்னாலும், உலகியல் ரீதியிலும் அதிக ஒட்டுதல் இன்றி இருக்கும் நிலையை இவ்வார்த்தை குறிக்கிறது. சீடர்களுக்கும் பாதை அதுவே.

ஆரம்ப காலங்களில் மிகவும் எளிமையாக ஒரு சிறு அறை, அதில் படுக்க ஒரு சின்ன மேடை என்று இருந்த குகைகள், பின்னர் வணிகர்கள், அரசர்கள் ஆதரவுடன் கலை ஆர்வத்துடன் அழகு மிளிர வெட்டப்பட்டன. இப்போது நாம் பார்க்கப் போவதும் அவற்றில் சிலவற்றையே.

புத்தர் நிர்வாணம் அடைந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்னர்  வைசாலியில் நடந்த இரண்டாவது மாநாட்டில் பௌத்தம் இரண்டாகப் பிரிந்தது. மகாசாங்க்யம், ஸ்தவிரவாதம் – இவற்றில் இருந்தே முறையே மகா யானம், தேராவாதம் போன்ற பிரிவுகள் தோன்றின. இதில் மகாசாங்க்யம் தான் ஏராளமான புரவலர்களைப் பெற்றிருந்தது. கர்லாக் குகைகள் ஸ்தவிரவாதம், மகாசாங்க்யம் இரண்டு பிரிவுகளையும்  சேர்ந்தவை.லோனாவாலாவில் இருந்து 10 – 15 கிலோமீட்டர் தூரத்தில்  மும்பை புனே தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிளுமாக கர்லா, பாஜாக் குகைகள் அமைந்துள்ளன. தனி வாகனம் இன்றி வருபவர்களும் எளிதில் அணுகக் கூடிய இடங்கள்தான். லோனாவாலாவில் இருந்து பேருந்து மூலம் கர்லா கிராமத்தை அடைந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் மேலே செல்லலாம். அல்லது, லோக்கல் ரயில் மூலம் புனே செல்லும் பாதையில் லோனா வாலாவிற்கு அடுத்த நிறுத்தமான மாளவ்லி நிலையத்தை அடைந்து, அங்கிருந்து ஆட்டோ அமர்த்திக் கொள்ளலாம். பாஜாக் குகைகள் மாளவ்லியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரம்தான்.கர்லாகுகைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையும், பின்னர் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையும் இரண்டு காலகட்டங்களில் வெட்டப்பட்டுள்ளன. குகைகளுக்கு வெளிப்புறம் நான்கு சிங்கங்கள் நாலா பக்கத்தையும் நோக்கி நிற்கும் உயர்ந்த ஸ்தூபி நிற்கிறது. அதில் எழுத்துக்களும் வெட்டப்பட்டுள்ளன. புத்தரைத் தான் சிங்கமாக உருவகிப்பார்கள். சாக்கிய சிங்கம் நான்கு திசைகளிலும் நடைபோட ஆரம்பித்து விட்டது; பௌத்த ஞானம் உருள ஆரம்பித்து விட்டது என்பதைத் தான் தர்மச் சக்கரம் குறிக்கிறது.இரும்பு கிராதியைத் தாண்டினால் நம்மை குகைக்குள் நுழைய அனுமதிக்காத அளவிற்கு அற்புதமான வேலைப்பாடுகள். தத்தம் துணைகளுடன் நிற்கின்ற யவனர்கள், மாளிகைகளின் ஜன்னல் போன்ற அமைப்புகள், யானைகள், புத்தரின் சாரநாத் உபதேச அனுக்கிரகம். கீழே மான்கள் உள்ளன, புத்தரின் கைகள் காட்டும் முத்திரை – உபதேச முத்திரை. பார்த்துக் கொண்டே நிற்கலாம். மெல்ல உணர்வு பெற்று மூன்று நுழைவாயில்களில் நடுவே உள்ள வாசல் வழியே நுழைந்தால், இந்தியாவின் மிகப் பெரிய புத்த சைதன்யத்தைத் தரிசிக்கலாம்.எல்லோராவை விட இது பெரியதா? என்னால் நினைவு கூற முடியவில்லை. எல்லோராவைப் பார்த்து பிரமித்து நின்றது மட்டும் நினைவில் உள்ளது. எல்லோரா என்றதும் கைலாசநாதர் குடைவரை தான் நினைவுக்கு வரும். ஆனால், அங்கே புத்தம், சமணம், சைவம் ஆகிய மூன்று பெரு மதங்களுக்கும் குடை வரைகள் உண்டு. ஆனால், இது தான் இந்தியாவின் மிகப் பெரிய சைதன்யம் என்கிறார்கள்.

இரண்டு சிறிய உயரமுடைய சதுர வடிவத் தாங்கு தளங்களின் மீது அமைந்த, உருளையான அடிப்புறத்தில் இருந்து உயரே எழும் எண்கோண தூண்கள். தூண்களின் உச்சியில் யானைகளின் மீது அமர்ந்த யவனர்கள், வணிகர்கள். இரண்டிரண்டு யானைகள் இரண்டிரண்டு ஜோடிகள். இங்குள்ள எல்லாத் தூண்களிலும் ஏதோ எழுத்துக்கள் உள்ளன.நான் வந்த நேரம் பள்ளி மாணவர்கள் பலர் உள்ளே நுழைந்து ஓ வென கத்திக் கொண்டு இருந்தனர். எனக்கு எரிச்சல் வந்தது. அவர்களின் ஆசிரியர் யாரோ ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “இந்த குகைக்குள் எவ்வளவு கத்தினாலும் எதிரொலிக்காது. மேலே உள்ள வளைவான மர வேலைப்பாடுகள்  அவற்றைக் கிரகித்துக் கொள்கின்றன. குழந்தைகள் அதைதான் சோதித்துப் பார்க்கிறார்கள்” என்றார். அட ஆமாம்! அந்தக் காலத்து “Acoustics Engineering”, ஆயிரம் ஆண்டுகளாக எந்த சிதைவுக்கும் ஆளாகாமல் நிற்கும் மர வளைவுகளைக் கண்டேன்.சைதன்யம் அவர்களின் வழிபாட்டு இடம், வலம் வருவதற்காக சுற்றி பாதையும் உண்டு. நல்ல விசாலமான அறை, வெளிச்சம் வருவதற்காக நுழைவாயிலுக்கு மேல் அகன்ற சாளரம். மழைக்காலம் முடிந்த பின்னரும் துறவிகளுக்கு புறப்பட மனம் வரக்கூடாது என்று இந்த வணிகப்பாதை விகாரங்களை அமைத்தவர்கள் நினைத்தார்களோ?வெளியே வந்தவுடன் இவ்வளவு நேரம் பௌத்தத்தின் சிறப்பைப் பார்த்தாய், இப்போது அது சந்தித்த சோதனைகளைப் பார் என்பது போல் ஒரு கோவில். மகாராஷ்டிராவின் “கோலி” இன மீனவர்கள் வழிபாட்டுக்குரிய ஏக்வீர மாதா கோவில். நானூறு ஆண்டுகள் பழமையானது என்றார் ஒருவர். பார்த்தால் அப்படி தெரியவில்லை. அந்த இடத்தில துருத்திக் கொண்டு நிற்கிறது. நல்ல கூட்டம் வரக்கூடிய கோவில். நான் இந்த இடத்திற்கு செல்வதற்கு முன் இணையத்தில் தேடிப் பார்த்ததில் சில பதிவர்கள், இந்தக் கோவிலை பிரமாதமாகவும், கோவிலுக்குப் பக்கத்தில் பழையகாலத்துக் குகை ஒன்று உண்டு, அதையும் பார்க்கலாம் என்றும் எழுதி இருந்தார்கள். நல்ல வேளை பத்திரமாக விட்டு வைத்தார்களே. தெளிவாக ஒரு திணிப்பைப் பார்க்கலாம். அந்த குகைக்கு நேர் எதிரே, பழங்கால அலங்கார வளைவு ஒன்று உண்டு. அதன் நிலைப்படியை மட்டும் விநாயகரும், இரண்டு பூக்களும் பொறிக்கப்பட்ட சிறிய பாறைத் துண்டினால் பின்னாளில் மாற்றி இருக்கிறார்கள்.

ஹ்ம்! புத்தரையே மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக மாற்றி, கோவில்களில் தசாவதார வரிசைகளில் சிலையாக வைக்கிறார்கள். பெரும்பாலான வட இந்தியர்கள் அதை நம்பவும் செய்கிறார்கள். இது ஒரு பெரிய விஷயமா என்று எண்ணியபடியே கீழே இறங்கி, பாஜா குகைகள் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறினேன்.

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: