RSS

வேதபுரம்: காலைப் பிடித்தேன் கணபதி!

18 செப்

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

வேதபுரம் பதிவுகளின் வரிசையில் முன்னரே வர வேண்டிய பதிவிது. நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் அதற்கு முந்தின நாள் விநாயகர் பற்றிய இப்பதிவை போட்டால் பொருத்தமாக இருக்குமென நினைத்து இன்று இப்பதிவை இடுகிறேன். விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

புதுச்சேரி போவதற்கு முந்தின நாள்தான் ‘ஸ்ரீ தத்வ நிதி’யின் ‘சிவநிதி’யை படித்து முடித்திருந்தேன். கழுகுமலை ஓவியத் தொகுப்பில் உள்ள விநாயகர் வடிவங்களை சிவநிதியோடு ஒப்பிட்டு பல குறிப்புகளை எழுதி வைத்திருந்தேன். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் சென்றால் ஏதாவது கூடுதல் ‘விநாயக விபரங்கள்’ கிடைக்கும் என்றெண்ணி மணல்+குளத்து விநாயகர் கோவிலை நோக்கி நடந்தேன்.

ஆனந்த ரங்கர் வைத்திருந்த ‘பாக்கு’ மண்டி, மணக்குள விநாயகர் கோவிலை அடுத்துத்தான் இருந்ததாக பிரபஞ்சன் நாவலில் படித்தது ஞாபகம் வந்தது. இன்று அந்த இடத்தில் ஓரிரு ஆன்மீகப் புத்தகக் கடையும் உணவகங்களும் உள்ளன. ஆனந்த ரங்கர் தன் நாட்குறிப்பில் இக்கோவிலை ‘மணக்குளத்தங்கரை’ விநாயகர் கோவில் எனக் குறிப்பிடுகிறார்.

ம.கு.வி. கோவிலின் ‘லட்சுமி’ என்ற யானையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு. நான் புதுச்சேரி வந்த நேரம் பார்த்து ‘லட்சுமி’ முதுமலை காட்டுக்கு ஓய்வுக்காக சென்றிருந்தாள். தமிழக அரசுக்கு லெட்டர் போட்டு அனுமதி பெற்றாளாம்.

பக்தர்களுக்கு மிகப் பிரியமான யானை இந்த ‘லட்சுமி’ என கேள்விப்பட்டிருக்கிறேன். பொதுவாகவே யானையிடம் ரசிக்கும் படியான ஒரு ‘cuteness’ உன்டு. என்னதான் பிரமாண்டமான உருவமாக இருக்கட்டும், அதன் நடவடிக்கைகளில் ஒரு குழந்தையை பார்ப்பது போல இருக்கும். உருவத்திற்குச் சம்பந்தமில்லாத மிகச் சாதுவான சுபாவம் கூடுதல் ஈர்ப்பைத் தரும். இதே காரணத்தால்தான் விநாயகரையும் எல்லோருக்கும் மிகப் பிடித்து விடுகிறது போல.

கோவிலினுள் நுழைந்ததும் இடது பக்க சுவரில் ஒரு போர்டு இருந்தது. அரவிந்தர் ஆசிரமம் சார்பாக மணக்குள விநாயகர் கோவிலுக்கு இடம் வழங்கப்பட்டதைச் சொல்லியது அந்த போர்டு. ஸ்ரீ அன்னைக்கு மணக்குள விநாயகர் கனவில் தோன்றி இந்த கோவிலை பராமரிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மிகச் சிறிய இந்தக் கோவில் சுத்தமாக நவீன உருக் கொண்டிருந்தது. கோவிலின் தோற்றத்தில் பழமையின் அம்சம் இல்லாவிட்டாலும், இங்கு விநாயக வழிபாடென்பது பிரெஞ்சியர்களின் வரவிற்கு முன்பிருந்தே நடந்து வந்துள்ளது. அதாவது 1666க்கு முன்பிருந்தே.

வேதபுரீஸ்வரர் கோவில் மீது பிரெஞ்சுக் கிறித்தவர்களுக்கு இருந்த வெறுப்பு மணக்குள விநாயகர் கோவில் மீதும் இருந்துள்ளது. கவர்னர் மார்த்தேன் காலத்தில்தான் ம.கு.வி கோவிலில் தடையின்றி வழிபாடு நடத்த வழிசெய்யப்பட்டுள்ளது. அதற்கு முன் பூஜைகள் நடத்தவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் ‘தமிழர்கள்’ ஆங்கிலக் காலனிப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ‘இந்துக்கள்’ எனச் சொல்லாமல் ‘தமிழர்கள்’ எனச் சொல்ல காரணமிருக்கிறது. அக்காலத்தில் ‘இந்துக்கள்’ எனக் கூறும் வழக்கமில்லை. இந்துக்களைக் குறிக்க ‘தமிழர்கள்’ என்ற சொல்லே வழக்கில் இருந்துள்ளது. அதுவும் உயர்சாதி எனச் சொல்லிக்கொள்கின்றவர்களை மட்டுமே அவ்வாறு அழைத்துள்ளனர். கீழ்சாதி எனச் சொல்லப்படுகிறவர்களையும், கிறித்தவர்களாய் மதம் மாறியவர்களையும் ‘தமிழர்கள்’ எனக் குறிப்பிடும் வழக்கமில்லை. ‘வானம் வசப்படும்’ நாவலில் பிரபஞ்சன் இத்தகவலை அடிக்குறிப்பாகக் கொடுத்துள்ளார். ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் மூலம் தெரியவரும் முக்கியமான சமூகப் படிநிலை குறித்த தகவலிது.

நான் முக்கியமாக தேடிச் சென்ற விநாயக மூர்த்தங்களை வரிசையாக பார்த்தபடி நடந்தேன். 32 வடிவங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வடிவங்கள் என சுவர் முழுக்க புடைப்பு பாணியில் விநாயகர் நிரம்பி வழிந்தார்.

ஒவ்வொரு விநாயகரின் பெயரும் அதன் உபயதாரரின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. நல்ல வேளை, எது விநாயகரின் பெயர் என கண்டறிவதில் சிக்கல் இருக்கவில்லை.

‘உச்சிஷ்ட கணபதியும்’, ‘வர(க) கணபதியும்’ பெண்தெய்வம் மடியில் அமர்ந்த நிலையிலேயே காட்டப்படும். ஆனால் இங்கு தனித்த விநாயகராகவே அமைக்கப்பட்டிருந்தன. ஒருவேளை இந்த வடிவங்களின் ‘erotic symbolization’ஐ மனதில் கொண்டு இம்மாதிரி அமைத்திருக்கக்கூடும். இன்னொரு காரணமும் இருக்கலாம். இங்குள்ள 32 வடிவங்கள் ‘தயன சுலோகங்கள்’ அடிப்படையிலமைந்தது எனச் சொல்கிறார்கள். ஒருவேளை ‘முத்கல புராண’ விளக்கத்திலிருந்து ‘தயன சுலோகத்தின்’ விளக்கம் மாறுபட்டும் இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. தயன சுலோகம் பற்றி படித்தால் தெரியும்.

நம்ம பாரதியும் புதுச்சேரி மணக்குள விநாயர் மீது நாற்பது பாடல்கள் இயற்றியுள்ளார் எனத்தெரிந்து கொண்டேன். ‘விநாயகர் நான்மணிமாலை’ என்ற பெயரில் அவர் பாடிய ‘அந்தாதி’ வகையிலமைந்த கவிதைகளவை.

‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’, ‘பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்’ போன்ற புகழ்பெற்ற வரிகள் இந்த ‘விநாயகர் நான்மணிமாலை’யில்தான் உள்ளது.

‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற வரி அருமையானதொரு ‘பக்தி’ context-ல் வருகின்றது என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். பேச்சுப் போட்டிகளில், சொற்பொழிவு மேடைகளில் பாரதியின் கவிதைகளை துண்டுதுண்டாய் பயன்படுத்தி உண்மை அர்த்தத்தையே தெரிய விடாமல் சாகடித்து விடுகிறார்கள்.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராது இருத்தல் – உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.

‘குடிகாக்கும் வேலையை உமையவள் மகன் விநாயகன் செய்வான். மனமே நீ உன் வேலையான கவிதை, நாட்டிற்கு உழைத்தல், சோராதிருத்தல் ஆகியவற்றை செய்வாயாக’ என்கிறான்.

விநாயகர் உட்பட அத்தனை கடவுளர்களின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களிடம் தனக்கு ‘வேண்டியன’ என்று ஒரு பட்டியலிடுகிறான் பாரதி.
அதில் ஒரு வேண்டுதலாக,

‘நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்!’ என்கிறான்.

அவனது இந்த ஒரு வேண்டுதலையாவது அந்தக் கடவுளர்கள் நிறைவேற்றியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
‘வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே’ என கடவுளைப் பார்த்தே கட்டளையிடும் அந்த ஞானத்திமிர் கடவுளர்களைக் கோபமூட்டிவிட்டதோ?

மிகப் பெரும் அனுபவத்தை தரும் கவிதை இந்த ‘விநாயகர் நான்மணிமாலை’. தவற விடாதீர்கள். மணக்குள விநாயகர் கோவிலின் சிறப்பம்சம் என்பது ‘எங்கும் தங்கமயம்’. பொன்தேர், பொன் விமானம், விநாயகரின் பொற்கவசம் என எங்கும் பொன்தான். பாரதி மணக்குள விநாயகர் மீது பாடிய பாடலில் தன் மனதிற்கு ‘பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்’ என்கிறான்.

மணக்குள விநாயகர் கோவிலுக்கு நீங்கள் சென்றால் பாரதியின் நான்மணிமாலையால் வழிபடுங்கள். குறிப்பாக கீழ்கண்ட வரிகளை:

தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய்
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
தன்னைத்தான் ஆளும் தன்மைநான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்.

Advertisements
 

3 responses to “வேதபுரம்: காலைப் பிடித்தேன் கணபதி!

  1. mahakavi2013

    16/06/2016 at 7:37 பிப

    Nice write-up. I was aware of this anthology “vinAyakar nAnmaNi mAlai” but did not know all the 40 were composed on PuduchchEry maNakkuLa vinAyakar.

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: