RSS

மூணார் – தெவிட்டாத தேனாறு!

17 செப்

கேரள மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள இடுக்கி மாவட்டத்திலுள்ள ஊர் மூணார் ( Munnar ). தமிழ்நாட்டிலிருந்து போடிநாயக்கனூர் என்ற ஒரு மழைக் கடவு ஊரிலிருந்து பேருந்தில் சென்றால் மூன்று மணி நேரம் ஆகும். போடியிலிருந்து மூணார் சுமார் 68 கி.மீ. தொலைவில் உள்ளது.தேனி அல்லது போடியில் தங்கியிருந்து அதிகாலையில் எழுந்து கிளம்பிச் சென்றால் மலையின் இயற்கை அழகை கண்டு களித்துக் கொண்டே செல்லலாம். போடியிலிருந்து மூணார் செல்லும் போது மலை ஏறிய பின்பும், ரொம்ப நேரம் போடிப் பகுதியின் நிலப்பரப்பு நமக்கு மலைக் கடவில் தெரிகிறது. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் தெரியும் அந்தப் பள்ளத்தாக்கு அதலபாதாளமாக இருக்கிறது. புதிதாக வருபவர்களுக்குப் பார்த்தாலே தலை சுற்றும்.37 கிலோமீட்டர் கடந்த பின் பூ பாரா ( Poopara ) என்ற ஓர் இடம் வருகிறது. தேநீர், டிபன் எடுத்துக் கொள்ளலாம். அங்கிருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் மூணார் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்பகுதியின் இயற்கை அழகு நம் கண்களை இமைக்காமல் காண ஈர்க்கும். ஏதாவதொரு மலைப்பாதையில் நின்று மலையின் அழகையும், வளைந்து செல்லும் சாலைகளையும், அதில் மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படியொரு அழகு.முத்தரப்புழா, நல்லதண்ணி, குண்டலா ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்தையே மூன்றாறு என்றிருந்து பின்னர் மூணாறாகியுள்ளது என்கின்றனர். மேலும், ஜான் முன்றே டேவிட் என்ற ஆங்கிலேயர் முதன் முதலில் இங்கே வந்தாகவும், அவர் பெயரில் உள்ள முன்றே என்ற சொல்லே மருவி பின்பு மூணாறு என வழக்கிலானதாகக் கூறுவாரும் உளர். இருந்தாலும், பேருந்திலும், பெயர்ப் பலகையிலும், வழிகாட்டிப் பலகையிலும் மூணார் ( Munnar ) என்றே எழுதப்படுகிறது.தேயிலை தயாரித்தலே இங்கு முதன்மையான தொழிலாக இருக்கிறது. பெரும்பான்மையான தேயிலைத் தோட்டம் டாட்டா நிறுவனத்திற்குச் சொந்தமானது. இங்கு தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்.தமிழகத்தின் உயரமான சிகரம் தொட்டபெட்டா என்பதை நாம் அறிவோம். 2623 மீட்டர் உயரமுள்ள அது ஊட்டியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அதை விட உயரமான ஆனைமலை சிகரம் இங்குள்ள ராஜமலைத் தொடரில்தான் உள்ளது. இதன் உயரம் 2,695 மீட்டர். இதுதான் தென்னாட்டின் மிக உயர்ந்த சிகரம்.இந்த ராஜமலைத் தொடரில்தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு உள்ளது. ஷங்கர் பட டூயட் பாடல்களில், அநியாயத்துக்குப் பூத்துக்கிடக்கும் கிராபிக்ஸ் பூக்களைப் போல இங்கு உண்மையான குறிஞ்சிப் பூக்கள் கணக்கற்றுப் பூத்துக் கிடக்கும். இதற்கு முன் 2006 செப்டம்பரில் பூத்திருந்தது. அப்போது அங்கு நான் சென்றிருந்தேன்.மலை முழுவதும் நீல வண்ணப் போர்வையால் போர்த்தியது போன்ற அழகைக் கண்டேன். இம்மலையில் தான், அழிந்துவரும் வன விலங்கான வரையாடு ஏராளமாக உள்ளன.கொம்பு சற்று வளைந்து காணப்படும் இந்த மலை ஆடுகள் நம் நாட்டுப் பகுதியில் உள்ள ஆடுகளைப் போலவே சாதுவானதாக இருக்கின்றன.அவை குறிஞ்சி மலர்களுக்கிடையே கூட்டம் கூட்டமாய் திரிந்தன. அருகில் சென்று ஒன்றைத் தொட்டுப் பார்த்தேன். அது புல் மேய்வதிலேயே மும்முரமாக இருந்தது. சுற்றுலா வந்திருந்த அநேகர் அவற்றின் அருகில் சென்றும், நின்றும் படம் எடுத்துக் கொண்டார்கள். ஆடுகள் இவர்களையும், இவர்கள் ஆடுகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொள்ளும் காட்சியையும் ரசித்துக் கொண்டேன்.மூணார் அருகில் மாட்டுப்பட்டி அணை என்று ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இவ்வணை அருகில் மாட்டுப் பண்ணை இருந்ததாகவும், அதனால், மாட்டுப்பட்டி அணை என்று அழைக்கப்பட்டு, அதுவே நிலைத்ததாகவும் கூறுகின்றனர். இது நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய கட்டப்பட்ட நீர்த்தேக்கமாகத் தெரிகிறது.2006 இல் நான் சென்ற போது அணை நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அணையைச் சுற்றியுள்ள பசுமையான காடுகள், காட்டில் இயற்கையாக மேய்ந்து கொண்டிருக்கும் யானைக் கூட்டம், நீரை வேகமாகக் கிழித்து சீறிப்பாயும் மோட்டார் படகு, அனைத்தையும் தழுவிச் செல்லும் வெண்மையான பனிமூட்டம். இவற்றை எல்லாம் அந்தப் படகிலிருந்து காணும் போது, கடவுளின் படைப்பை நினைத்து ஒவ்வொரு நொடிப்பொழுதும் நன்றி சொல்லத் தோன்றியது.இங்கிருந்து சிறிது தூரத்தில் எதிரொலி முனை (Echo point)உள்ளது. நாம் என்ன பேசினாலும் எதிரொலித்துக் கேட்கிறது. எதிர் புறத்தில் மலைச் சரிவில் மேன்மேலே வரிசையாக உயர்ந்து நிற்கும் மரங்கள், பள்ளியில் மாணவர்களை குரூப் போட்டோவிற்கு நிறுத்துவது போல இருந்தன. மூணாரிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குண்டலா அணை, சுற்றுலாப் பிரியர்களுக்கு இன்பம் தரும் இன்னொரு படகுசவாரி உள்ள அணை. மூணாரின் மத்தியப் பகுதியில் நூற்றாண்டுப் பழமையான மவுண்ட் கார்மெல் சர்ச்சும், பிரசித்தி பெற்ற முருகன் கோவிலும், சற்று தள்ளி இரண்டாண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்ட அழகிய மசூதியும் உள்ளன.இங்கு சுற்றிப் பார்க்க வாடகை ஆட்டோ அல்லது ஜீப் நிறையவே கிடைக்கின்றன. சுற்றுலா செல்வோர் தங்களின் எண்ணிக்கைக் கேற்ப வண்டியை எடுத்துக்கொண்டால், நினைத்த இடத்தில் நிறுத்தி இயற்கை அழகை ரசிக்கலாம். சாலையில் செல்லும் போதே எங்கிருந்தோ கிளம்பி வரும் பனிமூட்டம், நாம் நினைக்கும் நேரத்தை விட விரைவாக வந்து நம்மைச் சூழ்ந்து கொள்ளும். பத்தடித் தூரத்தில் உள்ளது கூட நம் கண்ணுக்குப் புலப்படாது. இது போன்ற பனிமூட்டத்தை வால்பாறையில் அனுபவித்திருக்கிறேன்.தமிழக, கேரள எல்கையில் மலைவாச ஸ்தலங்களில் இயற்கை எழிலோடு, தேயிலைத் தோட்ட அழகும் சேர்ந்து என்னை அகமும் புறமும் சிலிர்க்கச் செய்த இடங்கள் மூன்று. ஒன்று: மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து மற்றும் அதற்கு மேலே குதிரைவெட்டி வரையுள்ள பகுதிகள். இரண்டாவது, வால்பாறை, சோலையாறு மற்றும் நீராறு வரையுள்ள பகுதிகள். மூன்றாவது, இந்த மூணார்.

செயற்கை அதிகம் கலந்து விட்ட ஊட்டி போன்ற இடங்கள் பிடிக்காத இயற்கைப் பிரியர்களுக்கு இந்த மூன்று இடங்களும் இன்பவனமாகத் திகழும். இவ்விடங்களில் இயற்கை வளம் சிதைவுக்கு ஆட்படாமல் இருப்பது, அதிகமான தேயிலைத் தோட்டங்கள் தனியாருக்குச் சொந்தமானவையாக இருப்பதனால்கூட இருக்கலாம். இம்மூவிடங்களில் மாஞ்சோலை, ஊத்து பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் கிடையாது. முழுக்க முழுக்க தனியார் பகுதி. வால்பாறையில் விடுதிகள் உள்ளன. ஆனால், நல்ல சொகுசானவற்றை நாம் எதிர் பார்க்க முடியாது. ஆனால், மூணாரில் நல்ல அறைகளே கிடைகின்றன. நகர்ப்புறம் போல வசதியான சொகுசு விடுதி அறைகளும் உள்ளன.

நண்பர்களோடு செல்வதற்கும், குடும்பமாக செல்வதற்கும், புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வதற்கும் மூணார் எல்லையில்லாத் தேனாறு என்று சொல்வேன். அங்கு மழைக் காலம் முடியும் செப்டம்பர் இறுதியோ அல்லது அக்டோபர் முதலிலோ செல்வது நல்ல இதமான அழகான காலம்.நான் இந்த செப்டம்பர் முதல் நாள் சென்றிருந்தேன். கடந்த நான்கு நாட்களாகத்தான் மழை பெய்கிறது என்றனர் அங்குள்ளவர்கள். அணைகளில் நீர் குறைவாகவே இருந்தது. பகற்பொழுதெல்லாம் தொடந்து மழை. போகும் வழியில் மூன்று யானைகள் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன.எதிரொலி முனை செல்லும் போது மழை கொஞ்சம் வெரித்திருந்தது. காமிராவை வைத்துக் கொண்டு மக்கள் படும் பாட்டை, என் காமிரா – தன் பார்வையால் படமாக்கிக் கொண்டது.

நீங்களும் அவசியம் சென்று வாங்க. அப்புறம் சொல்வீங்க, “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று!

அசின் சார், கழுகுமலை.

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: