RSS

வேதபுரம்: மியூசியம்

15 செப்

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

நிர்வாக ரீதியாக புதுச்சேரி ஒன்றியப் பிரதேசமாக இருக்கலாம். தமிழ் மனநிலை என்பது அங்கும் தமிழகத்திலும் ஒன்றுதான். அதனால் ‘நாம்’ என்று நான் சொல்லும் போதெல்லாம் அவர்களையும் சேர்த்துத்தான் எனப் பொருள்கொள்ள வேண்டுகிறேன்.
‘ஒரே குட்டையில் ஊறிய..’ என்ற பழமொழியை நினைவில் கொள்க.

புதுச்சேரி மியூசியத்திற்கு சென்ற அனுபவம் மிகக் கொடுமையானது.

மியூசியத்திற்குண்டான தகுதி இந்த மியூசியத்திற்கு உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. புரியும்படி சொன்னால், மியூசியமல்ல- இது ஒரு வகை ஸ்டோர் ரூம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதற்கான பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கான முறையான படிப்புகளை படித்துத்தான் வந்தார்களா என சந்தேகமாய் உள்ளது.

200 மில்லியன் வருஷங்களுக்கு முந்தைய மரத்தின் படிமப் பதிவுகள் சில, மியூசிய நுழைவுக் கதவருகில் வெட்டவெளியில் இருந்தன. நம்மை விட மூத்த அந்த பொருட்களுக்கு நாம் தரும் இடம் அதுதான். வழக்கமாக இது போன்ற இடத்தை நாம் செருப்பை கழட்டிப்போடத்தான் பயன்படுத்துவோம்.

தோட்டம் போன்ற அந்த திறந்த வெளியில் இன்னும் நிறைய கலைப்பொருட்கள் இருந்தன. அவை அழகுக்காக தற்காலத்தில் உருவாக்கப்பட்டவையா, இல்லை தொல்பொருளா? யாருக்குத் தெரியும். தற்கால கலைப்பொருட்களாய் இருந்தாலும் அதை பராமரிப்பின்றி போட்டு வைத்தல் அறிவற்ற செயலே.

ஒரு மூலையில், சேஷன் மீது இரண்டு கால்களும் அற்ற நிலையில் சயனித்திருந்தார் விஷ்ணு. ஸ்ரீ பாதங்கள் இல்லாததால் அதற்குச் சேவகம் புரியும் தேவியர்களான ஸ்ரீயும், பூமியும் அங்கு இல்லை. இன்னும் சில சிற்ப உருவங்கள் ஆங்காங்கே சிதறிய நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

சேலை கட்டிய ஃபிரெஞ்சுப் பெண்மணி மியூசியத்திற்குள் நுழையும்போது, ஃபிரெஞ்சு ஸ்டைல் கவுன் அணிந்த தமிழ்ப் பெண்மணி உள்ளிருந்து வெளியே வந்தாள்.
அங்கிருந்த சிற்பத்தூண் ஒன்றில் சாய்ந்த படி, வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு அந்தப் பெண் போஸ் கொடுத்து நிற்க, அவளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான் ஒரு அப்பாவி. அவன் டி-ஷர்ட்டில் ‘y this kolaveri D?’ என எழுதியிருந்தது. இந்நேரம் முகநூலிலோ, வலைப்பக்கத்திலோ profile picture-ஆக மாறியிருக்கும் அவளது புகைப்படம்.

‘sweet smile’, ‘u r aaaawesome!!!’, ‘excellent snap’ என மாய்ந்து மாய்ந்து கமெண்ட் வேறு எழுதுவார்கள். கல்லிலிருந்து கலையாக மாறிய அந்தச் சிற்பத் தூணை, மீண்டும் இவர்கள் கல்லாக மாற்றிக்கொண்டிருப்பார்கள்.

டிக்கெட்டையும், ‘புகைப்படம் எடுத்தல் கூடாது’ என்ற எச்சரிக்கையையும் வாங்கிக்கொண்டு மியூசியத்திற்குள் நுழைந்தேன்.

எனக்கு முன் நடந்தவர், காலில் ஏதோ தடுக்கி விழப்போனார். பெரும் சப்தம் கேட்டது. கீழே பார்த்தபோது பெரும் அதிர்ச்சி. அவர் காலில் தடுக்கியது ஒரு ‘கலோனியல்’ ஓவியம். அது போன்ற பல ஓவியங்களை தரையில் வெறுமனே பரப்பி வைத்திருந்தார்கள்.

கண்காணிப்பில் இருந்த பெண், ‘பார்த்து போங்க சார். முக்கியமான பொருள்லாம் கீழே இருக்குல்ல’ என்றார். கீழே விழுந்த ஓவியத்தை நிமிர்த்தி வைத்து விட்டு அவர் நடந்தார்.

ஆளுயரத்துக்கும் மேல் ஒரு பெரிய கண்ணாடி, அக்கால நாணயங்கள் என பல பொருட்கள் அந்த அறையில். அதைப்பற்றி என்னால் ஒன்றுமே சொல்ல முடியாது. ஏனென்றால் அவற்றைப்பற்றிய எந்த விவரங்களையும் அவர்கள் ஒரு வரி கூட எழுதி வைக்கவில்லை. மற்றொரு அறையில் எண்ணற்ற அரிக்கமேட்டுப் புதை படிவங்கள், தாழிகள், அதன் மாதிரித் துகள்கள் என நிறைந்திருந்தன. இவற்றை ஓரளவு முறைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

அடுத்த அறை என்னை சட்டென உள்ளே இழுத்துக்கொண்டது. அங்கு பல சிலைகள் இருந்தன. அத்தனையும் உலோகச் சிலைகள். எந்த காலகட்டம், என்ன சிலை என்பது மட்டும் எழுதப்பட்டிருந்தது.

சிவகாமி அம்மன் என்ற பெயர் போட்டு ஒரே மாதிரியான பல சிலைகள் இருந்தன. பெரும்பாலும் காரைக்காலைச் சேர்ந்த சோழர் காலத்தியது. மையத்தில் ஒரு நடராஜர் சிலை இருந்தது. அந்த சிவகாமி அம்மன் வடிவம் ஏனோ என்னை மிக ஈர்த்தது. அவற்றில் நேர்த்தியான ஒரு சிலையை தேர்ந்தெடுத்து, அதை வரைவதற்காக அதன் வடிவம் முழுதையும் மனப்பாடம் செய்வது போல மனதில் இருத்திக் கொண்டேன். பின்னர் அன்று கனகராய முதலியார் கட்டிய ‘புனித அந்திரேயா ஆலயத்திற்கு’ சென்ற போது, அங்கு அமர்ந்து சிவகாமி அம்மனை நினைவில் கொண்டுவந்து வரைந்தேன். அந்தப் படம்தான் கீழுள்ளது.

சிலையின் உலோகம் பச்சை பூத்து ஒரு தனி ஆழகுடன் இருந்தது.

படியேறி மேல்தளத்திற்குச் சென்ற போது அங்கும் ஓர் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அந்த அறை முழுதும் 18-ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சுச் சாமான்கள் நிறைந்திருந்தது. அந்தப் பொருட்களை யாரும் தொடக் கூடாதென அங்கு சங்கிலி போட்டிருந்தார்கள். அந்தச் சங்கிலியின் ஒரு பக்கம் சுவரிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்திருந்ததால் அந்தச் சங்கிலியை அங்கு காட்சிக்கென வைத்திருந்த 18-ஆம் நூற்றாண்டு ‘ரெட்டைக்கால் மேசையின்’ காலில் கட்டி வைத்திருந்தார்கள். வெறுத்தே போனது. போதும் என நினைத்து இறங்கி வந்து விட்டேன்.

அங்குள்ள நிர்வாகியிடம் ‘இங்குள்ள பொருட்கள் பற்றி ஏதாவது புத்தகம் இருக்கிறதா?’ எனக் கேட்டேன். ‘புத்தகமெல்லாம் இங்க கிடையாது. மணக்குள விநாயகர் கோயில் பக்கமா போனீங்கன்னா அங்க ஒரு புத்தகக் கடை இருக்கும். அங்க எதுனா கேளுங்க’ அப்படின்னாரு. அவர் சொன்னது ஹிக்கின்பாதம்ஸ் எனப் புரிந்தது. புதுச்சேரி வரலாற்று நாவலின் தொடர்ச்சியான ‘கண்ணீரால் காப்போம்’ கூட அங்கு கிடைக்கல. வேற எந்த புத்தகம் கிடைக்கப் போகுது’ என நொந்து கொண்டேன். இப்பல்லாம் இது போன்ற கடைகளில் கிழக்கு பதிப்பக புத்தகங்கள்தான் குமிஞ்சு கிடக்குது. முக்கியமான நிறைய புத்தகங்கள் கிடைக்குறதே இல்ல.

பழம்பொருட்களை பாதுகாத்து, காட்சிப்படுத்தி, அவற்றைப் பற்றி நூல்களை வெளியிடுவதுதான் மியூசியத்தின் பணி. இதில் எதையுமே உருப்படியாகச் செய்யாதது எப்படி மியூசியமாகும்.

அது சரி.. மருத்துவம், பொறியியல்(அதிலும் ரெண்டு துறை மட்டுமே) தவிர வேறு படிப்பே உலகத்தில் கிடையாது என நம்பிக் கொண்டிருக்கும் ஒரு சமூகக் கூட்டத்தில் இதையெல்லாம் பேசிப் புண்ணியமில்லைதான்.

மியூசியம் சார்ந்து மட்டும் எவ்வளவு விதமான படிப்புகள் உள்ளன. முக்கியமாக, தொல்பொருட்களையும், கலைச்செல்வங்களையும் பராமரிக்கவும் பாதுகாக்கவுமான தொழில்நுட்பப் படிப்பு எவ்வளவு சுவாரசியமான படிப்பு. பல அறிவியல் தொழில்நுட்பத் துறையறிவு தேவைப்படும் சவாலான படிப்பும் கூட. கலைச்செல்வங்கள் கொட்டிக்கிடக்கும் நம் நாட்டில், முக்கியமான இந்த conservation துறையில் சொற்பமான மேதைகளே உண்டு. அதனால்தான் மியூசியம்கள் இந்த லட்சணத்தில் உள்ளன.

பத்தாவது, பன்னிரண்டாவது தேர்வில் முதலிடம் வருபவர்கள் ‘மருத்துவராகி கிராமத்தில் சேவை செய்யப் போகிறேன்’ என்று பாடும் வழக்கமான பல்லவியை எவ்வளவு நாள்தான் பல்லைக் கடித்துக் கேட்டுக் கொண்டிருப்பது. கொஞ்சம் வித்தியாசமாக ‘heritage and art conservation’ படிப்பை முடித்து நாட்டின் கலைச் செல்வங்களை பாதுகாப்பேன்’ என்று யாராவது சொல்லுங்களேன்.
அட.. பொய் சொல்வதென்று முடிவானபின் இதை பொய்யாகவாவது சொல்லலாமே! என்ன செய்வது, பொய்யில் கூட, கெளரவமான பொய் சொல்லத்தான் எல்லோருக்கும் பிடிக்கிறது.

Advertisements
 

2 responses to “வேதபுரம்: மியூசியம்

 1. சட்டநாதன்

  15/09/2012 at 6:01 முப

  வருத்தமாக உள்ளது.

  டெல்லியிலுள்ள நேஷனல் Museum , கல்கத்தாவில் உள்ள இந்தியன் Museum , சென்னையில் உள்ள Government Museum , மும்பையில் உள்ள Prince of Wales Museum ( தற்போது சத்ரபதி சிவாஜி ) போன்ற பெரிய அருங்காட்சியகங்கள் மட்டுமில்லாமல் , திருச்சி , ஜபல்பூர் போன்ற சிறு நகரங்களிலும் உள்ள Museum களையும் பார்த்திருக்கிறேன் .

  சாரனாத்தின் அருங்காட்சியகம் தான் நமது இந்திய அரசின் சின்னமான அசோகர் தூணைக் கொண்டுள்ளது . பிரமாதமாக இருக்கும் . புத்தர் தனது பிரசாரத்தைத் தொடங்கிய மான் பூங்காவின் வெளியிலேயே உள்ளது . Alexander Cunningham அவர்களுக்கு நாம் அனைவரும் கடமைப் பட்டிருப்பதை நன்றாக உணர வைக்கும் ஒரு புகைப்பட காட்சியகமும் உண்டு .

  குறிப்பாக வாரணாசியில் உள்ள ” பனராஸ் ஹிந்து யுனிவர்சிட்டியின் ” உள்ளே ஒரு சின்ன Museum ( Bharat Kala Bhavan ) உண்டு . அதில் லாக்கர் வசதி பொருத்தப் பட்ட அறையில் பல விலை உயர்ந்த முகலாயர் கால ரத்தினங்கள் , வைரங்கள் பதித்த ஆபரணங்களைப் பார்க்கலாம் . எப்போதாவது காசி போக வாய்ப்பு கிடைத்தால் , விசாரித்து வைத்துப்பாருங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாக , இரண்டு முறை தான் திறப்பார்கள் .

  எந்த ஊருக்குப் போனாலும் முதலில் பார்க்க விரும்புவது மியுசியத்தைத்தான் . அதே சமயம் பல உள்ளூர் வாசிகளுக்குத் தெரியாத இடமும் அதுவே.

  ” பழையன கழிதலும் ” என்பதை நம்மாளுங்க புரிஞ்சுகிட்ட லட்சணம் இதுதான் போல .

   
 2. சட்டநாதன்

  15/09/2012 at 7:56 முப

  சாரனாத்தின் அருங்காட்சியகம் தான் நமது இந்திய அரசின் சின்னமான அசோகர் தூணைக் கொண்டுள்ளது .
  – ” அசோகர் தூணின் நான்கு சிங்கங்கள் சிலையினைக் கொண்டுள்ளது ” என்று திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள் .

  ரஞ்சித் , சொல்புதிது தளத்தினை ” தமிழ்மணம் ” போன்ற திரட்டியில் இணைக்கலாமா ? நிறைய பேருக்கு சென்று சேரும் இல்லையா ?

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: