RSS

வேதபுரம்: ‘ரெட்டியார்’பாளையத்தில் ‘முதலியார்’ கட்டிய ‘கிறித்தவ’ ஆலயம்

13 செப்

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

புதுச்சேரி மியூசியத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பி ரெட்டியார் பாளையத்தை அடைந்தேன். புதுச்சேரி மியூசியம் பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

நான் ரெட்டியார் பாளையத்துக்கு சென்ற காரணம் அங்குள்ள ‘புனித அந்திரேயா’ ஆலயத்தைப் பார்ப்பதற்கே. அது 1745-ல் கனகராய முதலியாரால் கட்டப்பட்டது.

ஆனந்த ரங்கருக்கு முன் தலைமை துபாஷாக இருந்தவர் கனகராய முதலியார். ஆனந்த ரங்கருக்கு சுத்தமாக ஆகாத ஆளும் கூட. கனகராயருக்கும் ஆனந்த ரங்கர் என்றால் ஆகாது.

ஆனந்த ரங்கருக்கு அவரது தந்தை மற்றும் மாமா வழியிலும், கனக ராயருக்கு அவரது தந்தை மற்றும் தாத்தா வழியிலும் துபாஷ் பதவிக்கான பாத்யதை இருந்துள்ளது. கனகராய முதலியார் ஒரு கிறித்தவர். அவர் கிறித்தவர் என்ற காரணத்திற்காகவே, துபாஷ் பதவி ஆனந்த ரங்கருக்குப் பதில் அவருக்கு சென்றதாக அன்றைய புதுச்சேரியில் பேச்சு இருந்துள்ளது.

பிரபஞ்சனின் நாவலைப் படிக்கும் போது கனகராய முதலியாரின் வாழ்க்கை தொடர்ந்து பல துயரங்கள் படர்ந்ததாக ஒரு தோற்றம் கிடைக்கிறது.
நீரழிவு நோயால் சாகும் வரை அவதிப்பட்டவர், தனது ஒரே மகன் வேல்வேந்திரனை, அவனுக்கு 21 வயதாகும்போது பறிகொடுத்தவர், அவருக்கு மிச்சமிருந்த ஒரே துணை அவரது மனைவி நட்சத்திரம் அம்மாள். அவளிடமும் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டு ஒரே வீட்டில் அவளைப் பார்க்காமல் தனி அறையில் வாழ்ந்தவர். தன் மனைவியின் கையால் உணவு உண்ணாமலும் இருந்துள்ளார்.

மிகுந்த செல்வந்தர் புத்திர சோகத்தால் தவித்துள்ளார்.

‘மானுடம் வெல்லும்’-ல் வரும் ஒரு சம்பவத்தை இங்கு சொல்ல வேண்டும். மகனின் நோய் தீர்க்க ‘மாந்திரீகர்களை’ வைத்து சடங்குகள் செய்கிறான் ஒரு கிறித்தவன். இதை பெரும் குற்றமெனக் கூறி வழக்காக கனக ராயரிடம் கொண்டு வருகிறார்கள் சில கிறித்தவர்கள். கனக ராயர் ஒரு கிறித்தவராக இருந்தாலும் புத்திர சோக வலி உணர்ந்து அந்த தந்தைக்கு சாதகமாக தீர்ப்பைச் சொல்கிறார்.

இறந்த தன் மகன் வேல்வேந்திரன் நினைவாகவே ‘புனித அந்திரேயா’ ஆலயத்தை அவர் கட்டிக்கொடுத்துள்ளார். இதைப் பற்றிய அனைத்து விவரங்களும் ஆனந்த ரங்கர் நாட்குறிப்பில் உள்ளது. ஆலய அர்ச்சிப்பு தினத்தன்று அனைத்து சாதியினருக்கும் விருந்து அளிக்கப்பட்டுள்ளது. பதிவில் உள்ள முதல் ‘சம பந்தி விருந்து’ இதுவாகத்தான் இருக்கும்.

கனக ராயர் குறித்த சில முக்கிய தகவல்கள் விக்கிபீடியாவில் கிடைக்கிறது.

குபேர் அங்காடி மணிக்கூண்டில் பார்த்த அதே எழுத்துவடிவில் இந்த ஆலயத்திலும்  கல்வெட்டு உள்ளது. சில அடிப்படைத் தகவல்களை இக் கல்வெட்டு மூலம் அறியலாம்.

அன்றைய பிரெஞ்சுக் காலகட்ட தமிழ் கல்வெட்டுக்கள் ஒரு தனித்தன்மையுடன் இருக்கிறது. ‘ரெட்டைக்’ கோடு நோட்டில் எழுதிய எழுத்துக்கள் போல அத்தனை வார்த்தைகளும் இரண்டு கோடுகள் வெட்டப்பட்டு அதற்குள் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல ஒற்றுப் புள்ளிகள் இல்லாத எழுத்துக்கள். ரெட்டைக் கொம்பு ஒற்றைக் கொம்பு போலவே செதுக்கப்பட்டுள்ளன. ‘ர’ என்ற எழுத்து துணையெழுத்து போலவே எழுதப்பட்டிருக்கும். தமிழ் உரைநடை வளராத காலகட்டம் என்பதால் பேச்சு நடையிலான எழுத்துமுறையே காணப்படுகிறது.

உதாரணமாக இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டின் ஒரு வரியை இங்கு குறிப்பிடலாம்.

“…மரணமடைந்த தனது யேக புத்திரனாகிற பிலேந்திர முதலியாருக்காக வேண்டிக் கொள்ளக் கிறிஸ்துவர்கள் யாவரையும் மன்றாடுகிறாரிந்தக் கோவிலை சேசு சபை பிறஞ்சு சன்னியாசிமார்களுக்குக் குடுத்தார்”.

ஆனந்த ரங்கரின் மொழி நடையும் இத்தகையதே.

கனக ராயர் மரணப்படுக்கையில் இருந்த போது, அவரது மனைவி சொத்துகள் அனைத்தையும் அடைய கவர்னரின் மனைவி ‘ழான்’-ஐ நாடுவதையும், கனக ராயரின் தம்பி தானப்ப முதலி, தனக்கே அந்த சொத்துக்கள் வந்தடைய வேண்டும் என்ற நோக்கில் ஆனந்த ரங்கரை நாடுவதையும், ‘வானம் வசப்படும்’ நாவலில் படிக்க முடியும்.

கனக ராயரின் இறப்பும், அதைத் தொடர்ந்து அவரது சொத்துக்களுக்காக நடக்கும் பேரங்கள், வழக்குகள் ஆகியவை ‘வானம் வசப்படும்’ நாவலின் ஆரம்பப் பகுதிகளில் கணிசமான அளவிற்கு வருகின்றன. பாவம் அந்த மனிதர். அவரது துயரம் மறைந்துவிடவில்லை. ஆலய வடிவில் இன்றும் நின்றுகொண்டிருக்கிறது.

ஆலயத்தின் உள்ளே அமர்ந்து புதுச்சேரி மியூசியத்தில் பார்த்த சிவகாமி அம்மன் சிலையை நினைவில் கொண்டு வந்து வரைந்தேன். எங்கும் ரம்மியமான அமைதி.

வரைந்து முடித்ததும் ஆலயத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள வலது பக்க சுவற்றில் ‘சகாய மாதாவின்’ படம் இருந்தது. ஆங்கிலத்தில் ‘The mother of God of the Passion’ எனச் சொல்வார்கள். ‘Icon’ ஓவிய வகையைச் சேர்ந்தது அந்த ஓவியம். தன் மகன் அனுபவிக்கப்போகும் பாடுகளை நினைத்து மேரி மாதா அடையும் துயரமே இந்த ஓவியத்தின் சாராம்சம். அந்தப் படத்தில் உள்ள குறியீடுகளின் அர்த்தங்களும் அந்தப் படத்தில் எழுதப்பட்டிருந்தது.
கத்தோலிக்கத்தில் மிகப் பிரபலமடைந்த ஒரே ‘Icon’ ஓவியம் இதுவே.

‘Icon’ ஓவியம் என்பது கிறித்தவத்தில் மிகப் பழமையான மரபு ஓவிய வகை. தற்கால இந்திய கிறித்தவர்களுக்கு இப்படி ஒரு அரிய மரபான கிறித்தவக் கலை உள்ளதென்பதே தெரியாது. மேலை நாட்டுக் கிறித்தவர்கள் பலர் இக்கலையை முறைப்படி கற்கிறார்கள். ‘ஆகம நெறிகள்’ என இந்தியாவில் நாம் சொல்கிறோமே, அது போலவே இந்த ஓவியக் கலைக்கும் மிகக் கண்டிப்பான விதிகள் உள்ளன. ஒவ்வொரு உருவங்களும் குறிப்பிட்ட வடிவத்தில், குறிப்பிட்ட பாணியில், குறிப்பிட்ட நிறத்தில் வரையப்பட வேண்டுமென்ற விதிகள் உள்ளன. பாரம்பரியமாக, குறிப்பிட்ட விவிலிய சம்பவங்களே வரையப்பட்டு வருகின்றன. மிக முக்கியமான, அற்புதமான ஓவியக் கலை இது. கடினமானதும் கூட.

அந்த வரிசையில் அமைந்த இந்த ‘சகாய மாதா’ ஓவியத்திற்கு பக்தி என்பதைத் தாண்டி கலை நோக்கில் விளக்கங்கள் எழுதப்பட்டு இருந்ததைப் பார்த்து மிகச் சந்தோஷமாக இருந்தது. எனக்குத் தெரிந்த அளவில் ரெட்டியார்பாளையத்தின் ‘புனித அந்திரேயா’ ஆலயத்தைத் தவிர வேறெந்த கிறித்தவ ஆலயத்திலும் விளக்கத்துடன் அமைந்த ‘icon’ஓவியத்தை நான் பார்த்ததில்லை.

சகாய மாதா ஓவியமும் , கனகராய முதலியார் கட்டிய இந்த ஆலயமும் நமக்குச் சொல்லும் ஒரே விஷயம் – புத்திர சோகம்.

Advertisements
 

6 responses to “வேதபுரம்: ‘ரெட்டியார்’பாளையத்தில் ‘முதலியார்’ கட்டிய ‘கிறித்தவ’ ஆலயம்

 1. சட்டநாதன்

  13/09/2012 at 6:35 முப

  ” பாவம் அந்த மனிதர். அவரது துயரம் மறைந்துவிடவில்லை. ஆலய வடிவில் இன்றும் நின்றுகொண்டிருக்கிறது.”

  – கோவிலின் நிலைமை மோசமாக உள்ளதா ? ….அப்படி இல்லை தானே.

  அந்த ஓவியத்தின் புகைப்படம் இருந்தால் போடுங்களேன் ….

   
  • vidhaanam

   13/09/2012 at 8:42 முப

   ஆலயம் நல்ல நிலையிலேயே உள்ளது.

   ‘மகனை இழந்த துயரத்தின் அடையாளம்’ என்ற sense-ல்தான் அந்த வரியை எழுதினேன்.

   ஆலயத்தின் விக்கி புகைப்படம்: http://upload.wikimedia.org/wikipedia/commons/0/01/Andrews_Church_Reddiarpalayam_Pondicherry_Front_View.jpg

    
  • vidhaanam

   13/09/2012 at 12:17 பிப

   சட்டநாதன்,

   ஆலயத்தில் எடுத்த சகாய மாதாவின் படம் சற்று தெளிவாக இல்லை. அவர்கள் வைத்திருந்தது சகாய மாதா ஓவியத்தின் நகல் அச்சுதான். சிறிய வடிவில் சட்டம்கட்டித்தான் வைத்திருந்தார்கள்.

   அந்த ஓவியத்தின் விளக்கங்கள் பற்றியும் ‘Icon’ ஓவியம் பற்றியும் முடிந்தால் ஒரு பதிவு எழுதுகிறேன்.

   இப்போதைக்கு சகாய மாதா ஓவியத்தின் இணைப்பு ஒன்றைத் தருகிறேன்:

    
 2. சட்டநாதன்

  13/09/2012 at 5:11 பிப

  அந்த ” Sense ” இல் தான் நானும் படித்தேன் . சும்மா கலாய்க்கிறதுக்காக அப்படி சொன்னேன் .

  ” மாதா ” பட இணைப்புக்கு நன்றி . இப்போது தான் இது ஒரு தனி Tradition என்பதை அறிந்து கொண்டேன் . தனிப் பதிவு போடுவதற்கு நன்றி

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: