RSS

நினைவுகள் சொல்லும் நீதி மன்றங்கள்

11 செப்

‘கழுகுமலை’ மா.சட்டநாதன், மும்பை.

பிரிட்டிஷ் பேரரசு 1861 இல் Indian High Court Act ஐ தனது பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து கல்கத்தா, பாம்பே, மெட்ராஸ் ஆகிய மூன்று நகரங்களில் உயர்நீதி மன்றங்கள் நிறுவப்பட்டன. 150 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பாம்பே உயர்நீதி மன்றத்தில் ஒரு சிறு கண்காட்சி செப்டம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. பார்வை நேரம்: காலை 10.30 மணி முதல் மாலை 5.30 வரை. அதைப் பார்த்து வந்த மகிழ்வோடு சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

தேவகிரியைச் சேர்ந்த ராஜா பிம்ப் (Bimb) 1296 இல் மஹிகவதித் தீவிற்கு (தற்போது மாஹிம்) வந்து நியாய்காவ்ன் (Nyay Gaon) என்ற சட்ட மன்றத்தை நிறுவினார். 1347 இல் குஜராத் ஆட்சியாளர்கள் கைக்கு மாறிய பாம்பே, 1534 இல் போர்துக்கீசிய அரசுடன் ஓர் ஒப்பந்தம் மூலம் இணைந்தது. ஆனால் 1661 வரை இருந்த போர்த்துக்கீசியர்கள் நீதி மன்றங்கள் எவற்றையும் அமைக்கவில்லை.

இதே நேரம் 1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, இங்கிலாந்தில் அரசி முதலாம் எலிசபெத்தினால் கிழக்கிந்தியக் கம்பனிக்கு இந்தியாவில் வணிகம் செய்ய உரிமை வழங்கப்பட்டது. சூரத்தில் ஒரு நிறுவனம் தொடங்கிய கம்பனிக்கு, தொடர்ந்து பிரான்ஸ், டச்சு, போர்துக்கீசியர்களால் ஏற்பட்ட இடைஞ்சலால் வேறு இடம் தேட வேண்டிய தேவை முற்றியது.

1662 இல் இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ், போர்த்துக்கீசிய அரசர் நான்காம் அல்போன்சாவின் தங்கை Catharine of Braganza வை மணமுடித்தார். இதன்படி இங்கிலாந்து 2000 பேர் கொண்ட காலாட்படை, 1000 பேர் கொண்ட குதிரைப் படை மற்றும் 10 போர்க் கப்பல்களை போர்ச்சுக்கலிற்கு வழங்கியது. இளவரசி சீதனமாக 20 லட்சம் க்ருசடொக்களும் (அப்போதைய கரன்சி), மும்பையின் ஏழு தீவுகளையும், வடக்கு மொராக்கோவின் டேஞ்சியர் (Tangier) நகரத்தையும் கொண்டு வந்தார். 1665 இல் அதிகாரப் பூர்வமாக கையகப்படுத்திய பின், இங்கிலாந்து அரசு பாம்பே தீவுகளை கிழக்கிந்தியக் கம்பனிக்கு வருடத்திற்கு பத்து பவுண்டுகள் பணத்திற்காக வாடகைக்குக் கொடுத்தது.

1658 லேயே இரண்டாம் சார்லஸ், கிழக்கிந்தியக் கம்பனிக்கு தனக்குத் தேவையான சட்டங்களை ஏற்படுத்திக் கொள்ள உரிமை வழங்கினார். 1670 இல் சூரத் கம்பனியின் கவர்னராக இருந்த ஜெரால்ட் ஆன்ஜியர் பாம்பே தீவுகளை, இரண்டாகப் பிரித்து நீதித் திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்தினார். 150 ரூபாய் பெறுமான சிறு குற்றங்கள் வழக்குத் தீர்க்கப்பட்டன. சுங்க அதிகாரிகளும், வியாபரிகளுமே இவற்றை செய்ததால் நீதி பரிபாலனம் என ஒன்று இல்லை.

1672 இல் தான் கம்பனி நீதி மன்றத்தை ஏற்படுத்தியது. கவர்னரே தனது நீதிபதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளப் பணிக்கப் பட்டார். இதன்படி நீதிபதி ஜார்ஜ் வில்காக்சும் கவர்னர் ஜெரால்ட் ஆண்ஜியரும் விமரிசையான கொண்டாட்டங்களுடன் 1672 ஆகஸ்ட் 8 ஆம் தேதி நீதிமன்றத்தை முறையாக அமைத்தனர்.

வழக்குத் தொகையில் 5% நீதி மன்றத்தால் வசூலிக்கப்பட்டது. 1683 இல் Admiralty கோர்ட் ஏற்படுத்தப் பட்டது. சித்தி யாகுப்பின் படையெடுப்பின் காரணமாக கோர்ட் 1691 லிருந்து 1718 வரை மூடப்பட்டது. மேயர் கோர்ட், ரெகார்டர் கோர்ட் எல்லாம் ஏற்படுத்தப் பட்டாலும், நீதிபதிகள் கம்பனியின் ஊழியர்கள் என்பதால் கம்பனியோ, கவர்னரோ வழக்கிற்கு வரும் சூழ்நிலையில் பாரபட்சம் காட்டுவது தவிர்க்க இயலாததாகியது. ஓர் இந்துப் பண்டிதரும், இஸ்லாமிய காஜியாரும் சமூக விஷயங்களிற்காக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

1773 இல் வாரன் ஹஸ்டிங்க்ஸ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக கல்கத்தாவில் பதவியேற்றார். இதற்கு முன்னால் இருந்த குறைபாடுகள் அனைத்தையும் களையும் பொருட்டு, உச்ச நீதிமன்றம் (Supreme Court) அப்போதைய இந்தியத் தலைநகரான கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஒவ்வொரு பிரசிடேன்சியும் பழைய முகலாய கால, Suddar Adalet பலவற்றை கொண்டிருந்தன. Suddar – முக்கியமான Chief ; Adalet – நீதிவழங்கும் அமைப்பு.

1823 இல் பாம்பேயில் ஏற்கனவே இருந்த ரெகார்டர் கோர்ட்டை உச்ச நீதிமன்றமாக மாற்றினார்கள். இது பின்னர் கல்கத்தாவில் இருந்த உச்ச நீதி மன்றத்திற்கு இணையாக அதிகாரம் தரப்பட்டு 1824 இல் முறையாக இயங்கத் தொடங்கியது. இந்த பாம்பே உச்ச நீதி மன்றமும் தனக்கே உரிய குறைபாடுகளுடன் தான் இயங்கியது. போகவும் Suddar அதாலத்துக்களுக்கும் உச்ச நீதி மன்றத்திற்கும் இடையேயான உரசல்கள் அதிகமாகிக் கொண்டே சென்றன.

1852 இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் கிழக்கிந்திய விவகாரக்குழு, அனைத்து நீதி அமைப்புகளையும் ஒருங்கிணைக்கச் சொல்லி பரிந்துரைத்தது. இந்நிலையில் 1857 இல் வெடித்த முதல் சுதந்திரப் போர், கிழக்கிந்தியக் கம்பனியை வெளியேற்றி இந்தியாவை நேரடியாக பிரிட்டிஷ் அரசிற்குக் கீழ் கொண்டு வந்தது. இப்போது முறையான, முழுமையான நீதி அமைப்பை தனது ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கு வழங்குவது பிரிட்டனின் கடமையானது.

1861 ஆம் ஆண்டு இந்திய உயர்நீதிமன்றங்கள் சட்டம் ( Indian High Court Act), பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கல்கத்தா, பாம்பே மற்றும் மெட்ராஸ் ஆகிய மூன்று இடங்களில் உயர் நீதி மன்றங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டது. 1862 ஜூன் 26 ஆம் தேதி விக்டோரியா மகாராணியின் Letter Patent மூலம் பாம்பே உயர் நீதி மன்றம் நிறுவப்பட்டது.

இப்போது ஒன்றை நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம், அதாவது 1861 ஆம் ஆண்டின் சட்டம் மூலம் உயர்நீதி மன்றங்கள் புதிதாக உருவாக்கப்படவில்லை, ஏற்கனவே இருந்த Supreme Court மற்றும் Suddar Adalet கள் இணைக்கப்பட்டன. இந்த 150 ஆண்டுகள் நிறைவைத்தான் இப்போது கொண்டாடுகிறோம்.

இப்போது இருக்கும் பாம்பே உயர் நீதி மன்றக் கட்டடம் 1871 இல் ஆரம்பிக்கப்பட்டு 1878 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதற்காக முதலில் திட்டமிட்ட தொகை Rs.16,47,196. உண்மையில் செலவான தொகை Rs.16,44,528. அதாவது 2668 ரூபாய் குறைவு.

சரி, இப்போது கண்காட்சியைப் பார்ப்போம்.

1908 ஆம் ஆண்டு பால கங்காதர திலகரின் தேசத் துரோக குற்றச்சாட்டு விசாரணை நடைபெற்ற புகழ் பெற்ற அறையில் தான் இந்த சிறிய கண்காட்சி நடைபெறுகின்றது.

கண்காட்சி என்றால் இடம் பெறக்கூடிய வழக்கறிஞர் உடைகள், விக்குகள், கைத்தடிகள், ஜூரி பாக்ஸ் போன்றவை உண்டு என்றாலும் Mignon 1905 என்ற பழைய காலத்து Type Writing Machine என்னை வெகுவாகக் கவர்ந்தது. (உள்ளே Photo எடுக்க அனுமதியில்லை) .

நான் முக்கியமாக நினைப்பது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், முஹம்மது அலி ஜின்னா மற்றும் Dr.B.R. அம்பேத்கர் ஆகியோர் தங்களை Advocate ஆக பதிவு செய்ய எழுதிய விண்ணப்பக் கடிதங்களையும், அவர்களின் பாரிஸ்டர் பட்டத்தின் Original சான்றிதழ்களையும் தான். காந்தியை Advocate கவுன்சிலில் இருந்து நீக்க உத்தரவிட்ட ஆணையும் காட்சிக்கு உண்டு. இந்த நான்கு பேர் இரண்டு நாடுகளின் தலையெழுத்தை மாற்றியவர்கள் அல்லவா?

1860 இல் தான் நீதித் துறை அல்லாத விவகாரங்களுக்காக Stamp Duty போடப்பட்டது, 1870 இல் நீதி துறை விவகாரங்களுக்காக Court Fee ஏற்படுத்தப் பட்டது. இந்த வருமானங்கள் சம்பந்தப்பட்ட அலுவலக மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப் பட்டன. இவற்றின் ஏராளமான அரிய பிரதிகள் வைக்கப்பட்டுள்ளன.

விக்டோரியா மகாராணியின் Letter Patent ஆணைச் சுருள்கள், அப்போதைய இந்தியாவின் ஒவ்வொரு சமஸ்தானங்களும் வெளியிட்ட ரூபாய்கள், பத்திரங்கள், சின்ன போஸ்ட் கார்டு அளவிலான அந்தக் கால மக்கள், இடங்களின் புகைப்படங்கள் என அறிவை வளர்க்கும் நல்ல விஷயங்களை இந்த கண்காட்சி நமக்கு வழங்குகிறது.

குடும்பத்தோடு சென்று பார்த்து வாருங்கள்.

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: