RSS

வேதபுரம்: ‘சம்பா’ கோவில்

10 செப்

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

ஆனந்த ரங்கர் அடிக்கடி நாட்குறிப்பில் குறிப்பிடும் சம்பா கோவில் இன்று ‘ஜென்ம ராக்கினி மாதா தேவாலயம்’ (immaculate conception cathedral) என்ற பெயரில் புதுச்சேரியில் உள்ளது.

ரங்கப் பிள்ளை வீதியிலிருந்து நேரே நடந்து வலது பக்கம் திரும்பினால் கொஞ்ச தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

‘சம்பா’ என்பது போர்ச்சுகீசிய சொல் எனச் சொல்லப்படுகிறது. அதன் அர்த்தம் church எனபதாகும். சம்பா கோவில் என அழைக்கப்படுவதற்கு இன்னொரு விளக்கமும் சொல்லப்படுகிறது. அந்தக் கோவிலின் நிஜப் பெயர் ‘செயின்ட் பால் தேவாலயம்’. ‘செயின்ட் பால்’ என்பதன் தமிழின் திரிந்த வடிவமே ‘சம்பா’ எனவும் சொல்லப்படுகிறது.

கிறித்தவம் தமிழ்ச் சூழலில் நுழைந்ததும் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. பழக்கப்படாத உணவு உடல் ஒவ்வாமையை உருவாக்குவதைப் போல, பழக்கப்படாத கிறித்தவப் பண்பாட்டுச் சூழல் ஆரம்பத்தில் கிறித்தவர்களாய் மாறியவர்களிடம் பல கலாச்சார ஒவ்வாமையை உருவாக்கியது.

தமிழகத்தில் பல இடங்களில் இது நிகழ்ந்தது. புதுச்சேரியும் விதிவிலக்கல்ல. அத்தகைய சில சம்பவங்களை ஆனந்த ரங்கர் தன் நாட்குறிப்பில் எழுதிவைத்துள்ளார். பிரபஞ்சனும் ‘வானம் வசப்படும்’ நாவலில் கதையோட்டத்துடன் அதே சம்பவங்களை தெளிவாய் கோர்த்துள்ளார்.

கிறித்தவம் முதலில் கைவைத்தது சாதிய படி நிலையில்தான். சம உரிமை என்ற உத்திரவாதத்துடன் மதம் மாறியவர்கள், கிறித்தவத்திலும் அதே சாதிய அடக்குமுறைகளை சந்திக்கவே செய்தனர். வெவ்வேறு வடிவங்களில், மறைமுகமாக இன்றளவும் சாதியப் பிரச்சினைகள் கிறித்தவத்தில் இருக்கவே செய்கின்றன. பெரிய ஓட்டை விழுந்த படகிலிருந்து தப்பிக்க சின்ன ஓட்டை விழுந்த படகிற்கு தாவும் நிலைதான் இது. இதற்கு ஆனந்த ரங்கர் குறித்து வைத்துள்ள சம்பவமே சாட்சி.

சம்பா கோவிலில் உயர் சாதியினர் என நினைத்த கிறித்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட சாதியினர் என ஒதுக்கப்பட்ட கிறித்தவர்களுக்கும் இடையே ஆலயத்தில் ஒரு சுவர் எழுப்பப்பட்டது. இதனால் மனத் துன்பம் அனுபவித்தவர்கள் பாதிரியாரின் முயற்சியால் அந்தச் சுவரை இடிக்கிறார்கள். கோபம் கொள்ளும் ‘சாதி’ கிறித்தவர்கள்(!?) சுவர் இருந்த இடத்தில் நாற்காலிகளைப் போட்டு மீண்டும் செயற்கையாய் ஒரு சுவரை எழுப்புகிறார்கள். இந்தச் சம்பவத்தை 1745, அக்டோபர் 17 அன்று ஆனந்த ரங்கப் பிள்ளை தன் நாட்குறிப்பில் எழுதி வைக்கிறார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு உயர் வகுப்பு கிறித்தவர்களுக்கும் பாதிரியாருக்கும் கலகம் மூழ்கிறது. அவர்களனைவரும் இனி ஆலயத்திற்கு வருவதில்லை என வெளியேறுகின்றனர். அப்படி வெளியேறினாலும், அவர்கள் கோபத்தை விட்டபாடில்லை. ஒவ்வொரு முறையும் கோவில் அருகில் நின்று கொண்டு பிரச்சினையை வளர்க்கின்றனர். இந்த விஷயம் ‘பெத்ரோ கனக ராய முதலியார்’ மூலம் சிரேஷ்ட சாமியாருக்கும், அவரிடமிருந்து கவர்னர் துய்ப்ளெக்சின் மனைவி ‘ழானுக்கும்’ செல்கிறது.

‘ழான்’ கத்தோலிக்க கிறித்தவ நம்பிக்கையில் தீவிரம் காட்டியவர். இந்து மத துவேஷ எண்ணங்களையும் தீவிரமாகக் கொண்டிருந்தவர். ஆனந்த ரங்கப் பிள்ளைக்கு சுத்தமாகப் பிடிக்காத இருவரில் ‘ழானும்’ ஒருத்தி. மற்றவர் ‘பெத்ரோ கனக ராய முதலியார்’. ‘ழான்’ தன் கணவன் துய்ப்ளெக்சை தூண்டி உயர் வகுப்பு கிறித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைக்கிறார். ஆலயத்திற்கு அருகில் இருந்து கொண்டு கலகம் செய்பவர்களுக்கு சவுக்கடியும், சிறை தண்டனையும் வழங்கப்படும் என பயமுறுத்தப்படுகிறார்கள். தண்டனைக்கு பயந்து அமைதியாக ஆலயத்திற்குள் நுழைகிறார்கள் ‘சாதி’ கிறித்தவர்கள்.

கிறித்தவத்தில் தீவிரமாய் இருந்த சாதிய அடக்குமுறையையும், உயர் வகுப்பு கிறித்தவர்களை தக்க வைக்க அதிகாரத்திலிருந்தவர்கள் செய்த அடக்குமுறையையும் ஆனந்த ரங்கர் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற பல விஷயங்களைக் கொண்டு மிகப் பெரும் சமூக ஆவணமாக உள்ளது அவரது நாட்குறிப்புகள்.

ரங்கப் பிள்ளை காலத்து ஆலயம் எப்படி இருந்திருக்கும் என ஊகித்தபடியே தற்போதைய சம்பா கோவிலின் அழகை ரசித்தபடி கோவில் முற்றத்தில் நடந்து கொண்டிருந்தேன். அங்கு பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிலைகள் உண்டு. ஒன்று மேரியினுடையது. மற்றது சூசையினுடையது.

வழக்கமான அருள்பாலிக்கும் வடிவத்தில் அவை இல்லை. சூசை தன் தோளில் ஏசுவை சுமந்த நிலையில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகை பரிமாறிக் கொள்வதாக இருக்கும். தந்தை மகன் இடையிலான உணர்ச்சி வெளிப்பாடாக அது இருக்கும். அந்த உருவங்கள் நம்மை பார்ப்பது போலவோ, ஆசீர்வதிப்பது போலவோ அமைக்கப்படவில்லை. அடுத்த சிலையில் மேரி தன் மைந்தனை தலைக்குமேல் தூக்கிப்பிடித்து, தன் குழந்தையோடு விளையாடும் மனநிலையை காண்பிப்பதாக செய்யப்பட்டிருக்கும். ‘நாங்கள் ஆசீர் அளிப்பதை விட உங்கள் உறவுகளோடு அன்பைப் பரிமாறிக் கொள்வதே உண்மை ஆசீர்வாதம்’ என உணர்த்துவது போல இருக்கும் அந்த சிலைகள்.

ஆலயத்தினுள்ளே சென்று கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். கூன் விழத் தொடங்கியிருந்த வயதான ஒருவர் பீடத்தின் முன் நின்று கைகளை தலைக்கு மேல் கஷ்டப்பட்டு உயர்த்தி கும்பிட்டார். இது போன்ற காட்சியை பல முறை கிறித்தவ ஆலயங்களில் பார்த்ததுண்டு. அன்று இருந்த மன அமைதியில் அந்தக் காட்சியில் ஒழிந்திருந்த விஷயங்களை முதன் முறையாக கவனிக்க முடிந்தது. நம்மை அறியாமலேயே எத்தனை இந்து மத பழக்கங்கள் கிறித்தவத்தில் பின்னிப் பிணைந்துள்ளன. நினைத்துப் பார்க்க ரொம்பச் சுவாரசியமாக இருந்தது.

பிரபஞ்சன் ‘மானுடம் வெல்லும்’-ல் ஒரு கிறித்தவ திருமணத்தைப் பற்றி மிக அழகான ஒரு காட்சியை காட்டுகிறார்.

ராகு காலம் முடிந்ததும், யாக்கோபு மகள் லேனாளுக்கும், யோசேப்பு மகன் எலியாசுக்கும் மண ஓலை எழுதப்படுகிறது. பிள்ளையார் சுழி போட்டு அதற்குக் கீழே ‘ஶ்ரீ சேசு மரி சூசை துணை’ என எழுதப்படுகிறது. சுபயோக சுபதினமெல்லாம் எழுதப்பட்டு மண ஓலை மஞ்சள் குங்குமப் பொட்டிடப்படுகிறது. மாப்பிள்ளை கருநீல ‘கோட்’ அணிந்து வேஷ்டி கட்டி கழுத்தில் சிலுவை தொங்க பெண்ணருகில் நிற்கிறான். கிறித்தவத்திற்கு மாறிய சீனிவாச ஐயர் என்ற சீமோன் ஐயர் தன் புரோகிதத் தொழிலை தொடர்ந்து செய்கிறார் – கிறித்தவ திருமணங்களுக்கு மட்டும். மாப்பிள்ளை, பெண்ணிற்கு மோதிரம் அணிவிக்கிறார். அட்சதைத் தட்டில் மாங்கல்யம் வலம் வந்தபின், அத்தாலியை அட்சதை பொலிய மாப்பிள்ளை பெண்ணிற்கு கட்டுகிறான். இதை விட மிக விவரமாக அந்தத் திருமணக் காட்சி நாவலில் விவரிக்கப்படுகிறது.

தாய் கலாச்சாரத்தை முழுவதும் உதறிவிட மனமின்றி அதை ‘ஏற்றுக்கொண்ட’ கலாச்சாரத்துடன் கலந்து கடைபிடிக்கும் மனது பெரும்பாலும் எல்லா கத்தோலிக்க கிறித்தவத்தினருக்கும் உண்டு.

தமிழகத்தின் பல இடங்களிலும் உள்ள கத்தோலிக்கர்கள் வாழ்வில் நடக்கும் அத்தனை சுப/சோக காரியங்களிலும் இந்து மத சம்பிரதாயங்கள் கலந்திருப்பதை காணமுடியும். அதிலொன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு சம்பிரதாயமும் வாழ்வை ஒவ்வொரு கோணத்தில் புரிந்து கொள்ள உதவுகிறது. பல சம்பிரதாய பழக்கம் வாழ்வை பல கோணங்களில் பார்க்க உதவுமே. அதிருக்கட்டும். கொஞ்சமும் கலப்படமில்லாமல் அக்மார்க் சம்பிரதாயம் என்று ஒன்று உலகில் உண்டா என்ன? ஏதொ வகையில் காலந்தோறும் மாறிக்கொண்டும், மற்றதிலிருந்து பெற்றுக்கொண்டும் வளர்வதுதானே சம்பிரதாயங்கள்.

‘சம்பிரதாயத்துக்கு’ ஒரு செபம் செய்து விட்டு சம்பா கோவிலை விட்டு வெளியே வந்தேன்.

Advertisements
 

3 responses to “வேதபுரம்: ‘சம்பா’ கோவில்

 1. சட்டநாதன்

  10/09/2012 at 4:36 பிப

  ஹி..ஹி..ஹி..அதனால தான் RSS தலைவர் மோகன் பகவத் , இந்தியாவில பிறந்த எல்லாரையும் இந்துக்கள்னு சொல்றாரு போல .

  நான் காலேஜ் படிக்கும் போது , ஊருக்குள்ளே வீடு எடுத்துத் தங்கிப் படித்தேன் . அந்த ஊர் பெயர் கொனலை ( சிரிப்பு வருதா..) 60% பேர் கிறிஸ்தவர்கள் ..ஆனால் யாருக்காவது அம்மை போட்டுவிட்டால் , உடனே சமயபுரம் மாரியாத்தாளை வேண்டிக் கொள்வார்கள் , அங்கே போய் வேண்டுதலை நிறைவேற்றி விட்டும் வருவார்கள் . பாவம் பங்குத் தந்தை , ஒன்றும் சொல்ல முடியாமல் பார்த்துக் கொண்டிருப்பார் .

   
 2. கார்த்திக்

  16/09/2012 at 5:13 முப

  உங்கள் முயற்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, தொடர்ந்து எழுதுங்கள். ஒவ்வொன்றாய் கடந்து அறிந்த பின் மீண்டும் சந்திக்கிறேன். நன்றி கார்த்திக்

   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: