RSS

வேதபுரம்: ஆனந்த ரங்கப் பிள்ளையின் வீடு

08 செப்

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

பாரதி வீட்டையும், வ.உ.சி வீட்டையும் பார்த்த எனக்கு, அதைப் போலவே ஒரு பிம்பம் ஆனந்த ரங்கர் வீட்டைப் பற்றியும் என் மனதில் உருவாகியிருந்தது. ஆனந்த ரங்கர் வீடும் அரசால் போர்டு வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் என நினைத்தேன். அங்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. பரபரப்பான மார்க்கெட் நடுவில் சிக்கிக் கொண்டிருந்தது ஆனந்த ரங்கரின் வீடு.

புதுச்சேரி வீடுகளைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். வீட்டிற்கு முன் பகுதியில் கொஞ்சம் இடம்விட்டு மரத்தினால் தூண்கள் வைத்து அதன் மீது சாய்ப்பு போடப்பட்டிருக்கும். ஆனந்த ரங்கர் வீட்டில் அப்படி இருந்த பகுதிகள் முழுதும் மளிகைக் கடைகள், எண்ணெய் மண்டி என நிறைந்திருந்தது.

வீட்டின் முன் முக்கோண முகப்பில் ரங்கப் பிள்ளை முகத்துடன் ‘ஸ்ரீஆனந்த ரங்கப் பிள்ளை மாளிகை’ என எழுதியிருந்தது. ‘மளிகை’ என்பதை’மாளிகை’ என தப்பாக எழுதிவிட்டார்களா என நினைக்குமளவுக்கு அவ்வளவு கடைகள். கண்டிப்பாக அரசாங்கத்தின் பார்வை அந்த வீட்டின் மேல் படவேயில்லை எனப் புரிந்தது.

‘அடுத்த தெருவுல வீட்டு ஓனர் இருக்காரு. போய் பார்த்தா இந்த வீட்டத் தெறந்து காமிப்பாரு’என்றார் அங்கு கடை வைத்திருந்தவர்.

அடுத்த தெருவில் ஆனந்த ரங்கர் வீட்டின் பின் வாசல் இருந்தது. அங்கிருந்த ஒருவரிடம் அந்தப் பின் வாசலைக் காண்பித்து ‘இந்த வீட்டோட ஓனர் வீடு எங்க’னு கேட்டேன். அவர் கைகாட்டிய இடத்தில் இருந்தது – அந்த பெரிய வீடு.

இன்றைய பாணி வீடு அது. அதன் வாசல் சட்டென என்னைக் கவர்ந்தது. பிரமாண்டமான மர வேலைப்படுகள் அமைந்த பெரிய கதவுகளோடு கூடிய வாசல். அழைப்பு மணியை அழுத்தாமல் பத்து நிமிடம் அந்த மரச் செதுக்கல்களை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

நிலையின் நடுவில் சின்னதாய் வேணுகோபாலர் இடுப்பை வளைத்து ‘திரிபங்கி’ நிலையில் நின்று புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருந்தார். பின்னணியில் இருந்த பசு தலை தாழ்த்தி வேணுகோபாலர் பாதங்களை தரிசித்தபடி இருந்தது. எவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள். எழுதினால் மறக்காது என்பார்களே, அது போல எனக்கு இது போன்ற வேலைப்படுகளை  வரைந்தால் அந்த நுணுக்கங்கள் அப்படியே மனதில் தங்கிவிடும். அங்கு அமர்ந்து வரைவது சாத்தியமாகப் படவில்லை. அதனால் என் கேமராவை எடுக்க நினைக்கும் போது, அந்த பெரிய கதவு திறந்தது.

உள்ளிருந்து வந்த நடுவயதுப் பெண் என்னை விசாரிக்க, நான் வந்த விஷயத்தைச் சொல்ல,

‘அவங்க மாநாட்டுக்காக வெளில போயிருக்காங்க. வர ரெண்டு நாளாகும்’ என்றார். ரெண்டு மூன்று தடவை அவரை வற்புறுத்தி வேறு சாத்தியக் கூறுகளை கேட்க, ‘அவங்கதான் வரணும்’ என உறுதியாகச் சொல்லி விட்டார்.

நன்றி சொல்லி முடித்துத் திரும்பும் போது, அந்த பெரிய கதவு மூடிக் கொண்டது. ஏமாற்றத்தில்,அந்தக் கதவை படமெடுக்க மறந்தே போனது.

வேறென்ன செய்வது, முடிந்த மட்டும் ஆனந்த ரங்கர் வீட்டின் வெளிப் புறத்தை மட்டும் திருப்திபடப் பார்த்தேன். முன் வாசல், மார்க்கெட் கடைகளால் சூழ்ந்திருக்க, பின் வாசல் அந்த தெருவின் குப்பைகள் கொட்டும் இடமாக மாறியிருந்தது.

விஸ்தாரமான அந்த வீடு தமிழ், ஃப்ரென்ச் கலவையிலானது. வீட்டின் உட்புறத் தோற்றங்களை வலையில் பார்க்க முடிந்தது. அடுத்தமுறை கண்டிப்பாக தவறவிடக்கூடாது.

சட்டென ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. பிரபஞ்சன் நாவலில் ஆனந்த ரங்கரின் வீட்டிற்கு எதிரில் ஒரு மாதாக் கோவில் இருப்பதாக வரும். ஒன்றிரண்டு இடங்களில் அதைப் பற்றிய குறிப்புகளும் வரும்.

திரும்பிப் பார்த்த போது, அங்கு மிகப் பெரிய மார்க்கெட் இருந்தது. தூரத்தில் அந்த மார்க்கெட்டின் மையப் பகுதியில் ஒரு மணிக்கூண்டு கோபுரம் இருந்தது. ஒரு வேளை அந்தக் கோபுரம் ரங்கப் பிள்ளை காலத்தில் இருந்த மாதாக் கோயிலின் ஒரு பகுதியாக இருக்குமோ என நினைத்து,மார்க்கெட்டினுள் நடக்க ஆரம்பித்தேன். குபேர் அங்காடி(goubert) என்பது அந்த மார்க்கெட்டின் பெயர்.’பெரிய மார்க்கெட்’ என்பது மக்கள் அழைக்கும் பெயர்.

சிறு வயதில் நான் தூத்துக்குடி செல்லும் போதெல்லாம் அங்குள்ள மார்க்கெட்டிற்குச் செல்வதுண்டு. குபேர் மார்க்கெட்டினுள் செல்லும் போது, அந்த நினைவுகள் மனதுக்குள் எழுவதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அது தூத்துக்குடியல்ல புதுச்சேரி என்பதை மார்க்கெட்டினுள் தென்பட்ட ஓரிரு ஃப்ரென்ச் முகங்கள்  அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. மேதைகள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, என்னைப் பொருத்தவரை இது போன்ற மார்க்கெட்டுகள்’கல்ச்சுரல் மியூசியம்’ என்றே சொல்வேன்.

மலர்கள், காய்கறிகள், இறைச்சிகள், மங்கலப் பொருட்கள், தகரச் சாமான்கள், தேங்காய்கள், பெயர் தெரியாத பல பொருட்கள் என வகைக்கு பத்திருபது கடைகள். தரையின் சாக்கு விரிப்பிலும், சில கட்டடத்திற்குள்ளும் என எக்கச்சக்கமான கடைகள். தொடர்ந்து விலையைக் கூவிக் கொண்டிருக்கும் குரல்கள் மார்க்கெட் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தக் கோபுரத்தை சென்றடைந்தேன்.

‘கலோனியல் எஞ்சினியர்கள் வேலை நடத்தி தியாகு முதலியார் கட்டிக் கொடுத்த கிடாராக் கூண்டு’ என்று சொன்னது அந்த மணிக்கூண்டு கல்வெட்டு. வருடம் 1852 என இருந்தது. ஆனந்த ரங்கப் பிள்ளையின் காலம் பதினெட்டாம் நுற்றாண்டு. கண்டிப்பாக அந்த மாதாக் கோயிலின்  பகுதியாக அது இருக்க முடியாது.

சரியாக, அந்த பெரிய மார்க்கெட்டின் மையத்தில் நின்றது அந்தக் கோபுரம். சுற்றி பரபரப்பான சத்தங்களுக்கிடையே மிக அமைதியாக பழைய மனிதர்களின் பெயர்களைத் தாங்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தது.

கொஞ்சமும் சலனமற்ற அந்த மணிக்கூண்டையும், எங்கும் பரபரப்பான அந்த மார்க்கெட்டையும் நினைக்கும் போது மனதிற்குள் பல எண்ணங்கள். ஒரு கணம் அந்த கோபுரத்திற்குள் சென்று கதவுகளை மூடிக்கொண்டு நின்றால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. சுற்றி எங்கும் இயக்கம், மையத்தில் மட்டும் அசைவற்ற பேரமைதி.

அந்தக் கூண்டுக் கடிகாரமும் இயக்கமின்றி நின்று போயிருந்தது. அதைச் செப்பனிடும் அவசியம் அங்கு யாருக்கும் ஏற்படவில்லை. வழியில் கடை விரித்திருந்த பெண் சாக்கினடியில் ஒரு செல்போன் வைத்திருந்தாள். அங்குள்ள எல்லா கடைகளிலும் அப்படி ஒரு செல்போன் கண்டிப்பாக இருக்கும். நேரத்தை அதிலேயே பார்த்துக்கொள்ளப்போகிறார்கள். 160 வயது கிழ மணிக்கூண்டுக்கு இதெல்லாம் எங்கே தெரியும்?

அந்த மணிக்கூண்டு எப்போதோ இறந்து விட்டது. அது இறந்த நேரம் 6:10

Advertisements
 

One response to “வேதபுரம்: ஆனந்த ரங்கப் பிள்ளையின் வீடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: