RSS

வேதபுரம்: ரங்கப் பிள்ளை வீதி

06 செப்

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ படித்ததும் இன்னொருமுறை புதுச்சேரிக்குப் போக நினைத்தேன். ஒரு நாள் அங்கு சென்று சுற்றிவிட்டு வந்தேன். சில ஓவியங்களையும் அங்கு வரைந்தேன். சில ஓவியங்களை அங்கு சென்று திரும்பியதும் வரைந்தேன். அந்த ஓவியங்களோடு எனது அனுபவத்தை இத்தளத்தில் எழுத நினைத்தேன். நான் எழுதப் போவதை பயணக்கட்டுரை எனச் சொல்ல முடியாது. பிரபஞ்சனின் நாவல் ஏற்படுத்திய மனப்பதிவுகள், ஆனந்த ரங்கர் பற்றிய குறிப்புகள், சில புதுச்சேரி அனுபவங்கள் என ஏதோ ஒரு கலவையில் இருக்கும்.

ஆனந்த ரங்கப் பிள்ளை இதே தினத்தில்தான் 1736ஆம் ஆண்டு தன் நாட்குறிப்பை எழுதத் தொடங்கினார். இன்றோடு கிட்டத்தட்ட 276 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மானுடவியல், வரலாறு, தமிழ் உரைநடை என பல துறைகளில் முக்கிய ஆவணமாக உள்ளது அவரது நாட்குறிப்புகள். முதல்முறையாக ஆனந்த ரங்கர் பெயரை கேள்விப்படுபவர்கள், அவரைப்பற்றியும் அவரது நாட்குறிப்புகள் பற்றியும் சுருக்கமாக அறிந்து கொள்ள கீழ்கண்ட இணைப்பை நாடவும்.

http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-/2009-06-12-09-19-29

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=9265&Itemid=139
(இந்த இணைப்பில் புதுச்சேரியின் இன்னும் சில நாட்குறிப்புகள் பற்றி அறிய முடியும்)

வழக்கம்போல விரிவான அறிவிற்கு ‘வலை’யை விட்டு வெளிவந்து புத்தகங்களை நாடுவதே சிறந்தது. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நாட்குறிப்பை 12 பாகங்களாக வெளியிட்டுள்ளனர். அவை தடையின்றி இன்று கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.

இந்த பதிப்புகளில் விடுபட்டவற்றை கண்டறிந்து மூன்று பாகங்களாக(1751-52, 52-53, 53-54) வெளியிட்டுள்ளார் கோபாலகிருஷ்ணன்.
அவை எளிதாக இன்று கிடைக்கின்றன. சென்னை நியூ புக் லேன்ட்ஸ்-ல் கிடைக்கிறது.

ஆங்கிலப் பதிப்பின் சில பாகங்கள் கீழ்கண்ட இணைப்பில் கிடைக்கின்றன:

http://archive.org/search.php?query=creator%3A%22Anantarankam+Pillai%2C+1709-1761%22

ஆனந்த ரங்கர் காலகட்டத்தை ஓரளவு புரிந்து கொள்ள பிரபஞ்சனின் நாவல்களான ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ ஆகியவற்றைப் படிக்கலாம். இலக்கியப் பயன் தாண்டி வரலாற்றை புரிந்து கொள்ளவும் மிகப் பயன்படும் நாவல்கள்.

அந்த ஊரைப் பற்றி நினைத்தாலே வெகு நேர்த்தியான வீதிகள்தாம் நம் கண்முன் விரிகின்றன.

பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ நாவலில் இப்படி ஒரு வர்ணனை உண்டு:

பெண்கள் எடுக்கும் வகிடு மாதிரி நேராகவும்நேர்த்தியாகவும் அமைந்திருந்தன புதுச்சேரிப் பட்டணத்து வீதிகள். ஒழுங்கான பல் வரிசை மாதிரி அமைந்திருந்தன வீடுகள்.

இன்றும் பெரிய மாற்றங்களின்றி அப்படியேதான் உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டை சுமந்து நிற்கும் பல கட்டடங்கள், கோவில்கள், சர்ச்சுகள் என மியூசியம் போன்றதோர் ஊர்.

எனது ஒரு நாள் ‘மினி’ பயணத்தில் அங்கு நான் பார்க்க விரும்பிய இடங்கள்:

1.       ஆனந்த ரங்கப் பிள்ளையின் வீடு

2.       வேதபுரீஸ்வரர் கோவில்

3.       ஆனந்த ரங்கப் பிள்ளைக்கு முன் தலைமை துபாஷியாக இருந்த கனகராய முதலியார், இறந்த தன் மகனின் நினைவாகக் கட்டிய தேவாலயம்.

4.       ஆனந்த ரங்கர் அடிக்கடி தன் நாட்குறிப்பில் குறிப்பிடும் ‘சம்பா கோவில்’

 

என்னிடம் மோட்டார் சைக்கிள் இருந்தது. இருந்தாலும் நகரத்திற்குள் இருக்கும் எல்லா இடத்திற்கும் நடந்தே செல்ல முடிவு செய்து கொண்டேன். அதிகம் பழக்கமில்லாத ஊருக்குள் நடப்பதை ரொம்ப முக்கியமானதாக நினைத்தேன். மிகத் தொலைவில் இருக்கும் கனகராய முதலியாரின் தேவாலயத்திற்கு மட்டும் வண்டியை பயன்படுத்திக் கொண்டேன்.

என்னதான் கூகுள் மேப் அற்புதமாக வழி சொன்னாலும், சாலைகளில் கிடைக்கும் வழிகாட்டி மனிதர்களுக்கு இணையாகுமா அவை? இத்தனைக்கும் பத்தில் ஐந்து பேர் தெரியாது என்றுதான் சொல்வார்கள். இருந்தாலும், கண நேரத்தில் அங்கு ஒரு புது மனிதர் நமக்கு அறிமுகமாகி மறைந்து விடுகிறார். எந்த ஊரிலும் எரிச்சலோடு வழிகாட்டும் மனிதர்களை நீங்கள் பார்க்கவே முடியாது. எவ்வளவு மோசமானவராக இருந்தாலும், ஒருவர் வழி கேட்கும்போது அன்பானவராக மாறிவிடும் அற்புதம் நிகழ்கிறது. நாம் வழிதவறக் கூடாதென்ற அக்கறை எப்படியோ அவர்களுக்கு வந்துவிடுகிறது.

பழ வண்டிக்காரப் பெண் ஒருவர் தன் வியாபாரத்தை தற்காலிகமாய் நிறுத்தி விட்டு ‘ரங்கப் பிள்ளை வீதின்னுதான் வடக்க ஒன்னு இருக்கு’ என நிதானமாக வழிகாட்டி விட்டு வியாபாரத்தை தொடர்ந்தார்.

‘ஆனந்த’மாய் ரங்கப் பிள்ளை வீதியில் நடந்தேன்.

Advertisements
 

One response to “வேதபுரம்: ரங்கப் பிள்ளை வீதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: