RSS

வேதபுரத்து வாழ்க்கை

01 செப்

ரஞ்சித் பரஞ்ஜோதி, பெங்களூர்.

ஆனந்த ரங்கப் பிள்ளையின் டைரிக் குறிப்புகளின் துணையுடன் கவர்னர் துய்மா மற்றும் கவர்னர் துய்ப்ளெக்ஸ் காலத்திய புதுச்சேரி வரலாற்றை புனைவு வடிவத்தில் ரொம்ப நேர்த்தியாகக் கொடுத்துள்ளார் பிரபஞ்சன். அந்த நாவல்கள் முறையே ‘மானுடம் வெல்லும்’ மற்றும் ‘வானம் வசப்படும்’. புதுச்சேரி வரலாற்றையும், வாழ்வையும் மையமாகக் கொண்டு மூன்று நாவல்கள் புனையும் திட்டமிருந்ததாக ‘மானுடம் வெல்லும்’ முன்னுரையில் பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிசையில் மூன்றாவதான நாவல் ‘கண்ணீரால் காப்போம்’ என எங்கோ படித்த ஞாபகம். அதை இன்னும் படிக்கவில்லை. நான் படித்த ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ நாவல்களைப் பற்றி எனக்குப் பட்ட மனப் பதிவுகளை சுருக்கமாகச் சொல்லவே இந்த வலைப் பதிவு.

என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு நாவல்களையும் தனித்தனியாக கட்டித் தைக்கப்பட்ட ஒரே நாவல் என்றுதான் சொல்வேன். படைப்பு ரீதியில் இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இருந்தாலும் சம்பவங்களின் கோர்வைப்படி பார்த்தால் ஒன்றின் தொடர்ச்சிதான் மற்றொரு நாவல்.

சாகித்ய அகாதமி பரிசு பெற்றது என்பதற்காக ‘வானம் வசப்படும்’ நாவலை முதலில் யாரும் வாசித்து விடாதீர்கள். ‘மானுடம் வெல்லும்’ நாவலை முடித்து விட்டு வானம் வசப்படும் வாசித்தால் இன்னும் கூடுதல் புரிதல் கிடைக்குமென்பது என் கருத்து. குறிப்பாக ‘சந்தா சாயிபு’ சம்பந்தமான செய்திகள் மற்றும் சில அரசியல் பின்னணிகள் ஆகியவற்றின் அடித்தளம் மானுடம் வெல்லுமில் அதிகம் உண்டு.  அதைப் படித்து விட்டு தொடர்ந்தால் ‘வானம் வசப்படும்’ இன்னும் வாசிக்க வசதியாக இருக்கும்.

கவர்னர் துய்மா காலத்தை பின்னணியாகக் கொண்டது ‘மானுடம் வெல்லும்’
கவர்னர் துய்ப்ளெக்ஸ் காலத்தை பின்னணியாகக் கொண்டது ‘வானம் வசப்படும்’

வரலாற்று காலகட்டத்தை ‘speia tone’-ல் சினிமாவில் காண்பிப்பார்களே, அது போல கிட்டத்தட்ட ஆனந்த ரங்கரின் ‘தமிழ் நடையிலேயே’ நாவலின் மொழி நடை உள்ளது. அந்த மொழிநடையே 18-ஆம் நூற்றாண்டு என்ற உணர்வைக் கொடுத்துவிடுகிறது.

மானுடம் வெல்லுமில் உள்ள கிளைக்கதைகளை நாவலின் பலவீனமாகச் சொல்லும் ஒரு விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. என்னைப் பொறுத்தவரை வானம் வசப்படும்-ஐ விட ஒரு படி மானுடம் வெல்லும் உயர்ந்து நிற்பதற்கு இந்த கிளைக் கதைகள்தான் காரணம் என்பேன். மல்லிகைப் பூவை கோர்க்கும் போது இடையிடையே கொஞ்சம் கனகாம்பரத்தைக் கோர்த்துக் கட்டுவது போல ஒரு மாற்று அழகு அது.

வரலாற்றைக் கோர்த்துக் கொண்டே வரும்போது இடையில் பிரபஞ்சன் தன் விமர்சனங்களை, வரலாற்று அபத்தங்களை பதியும் இடமாக அந்த கிளைக்கதைகளை நான் பார்க்கிறேன்.
விமர்சனங்கள் சொல்வது போல மையச் சரடிலிருந்து அந்த கிளைக்கதைகள் விலகி நிற்பதாக எனக்குப் படவேயில்லை. வாசகன் தரிசிக்க வேண்டிய மெல்லிய ஒரு நூலிழை அங்கு உண்டு. அதை தவறவிடுவது வாசிப்பின் பலவீனம்.

சரித்திரம் சாதாரண மக்களின் அவஸ்தைகளை கணக்கில் கொள்வதில்லை என்பதான கருத்தை முன்னுரையில் சொல்கிறார் பிரபஞ்சன். அப்படிப்பட்ட சாதாரண மக்களைப் பற்றி பேசுகிறது இந்த கிளைக்கதைகள். அதிகாரப் போட்டியும், அரசியல் தந்திரங்களும், துரோகங்களும் மையக்கதையில் நகர்ந்து கொண்டிருக்க, அதற்கிடையில் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை, கலாச்சார மாற்றங்கள் போன்ற விஷயங்கள் கிளைக்கதையில் இடம்பெற்று ஒரு முழுமையான வரலாற்று நாவல் என்ற பெயரை தக்கவைக்கிறது.

‘தண்டுக் கீரை’, ‘கொடுக்காப்புளி’, ‘கூடைக்காரி’, ‘பெரிய கிழக்கான்’, ‘சின்ன கிழக்கான்’, ‘வெள்ளைப் பூண்டு’, ‘சின்ன வண்டி’ இதெல்லாம் என்னவென்று ஊகிக்க முடிகிறதா?
இதெல்லாம் கிளைக்கதைகளில் வரும் சாதாரண மக்களின் பெயர்கள். இந்தப் பெயர்கள் கூட பல விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது.

தன் மகனுக்கு ‘சுப்ரமணிய சாமி’ நினைவாய் ‘சுப்பன்’ எனப் பெயர் வைக்க நினைக்கும் போது, அவனை ஆளும் அம்பலக்காரர், அவனுக்கு ‘கொடுக்காப்புளி’ என பெயர் வைக்குமாறு கண்டிக்கிறார். நாவலில் இன்னொரு இடத்தில் பெரிய கருப்பன் என்பவன் தன் மகன் ‘முருவன்’ என்பவனை பண்ணையில் வேலைக்குச் சேர்த்து விடுவதற்காக பண்ணை சேஷய்யரிடம் கூட்டி வருகிறான்.
பண்ணை இப்படிச் சொல்கிறார்: “அது என்னடா, சண்டாளப் பயலுவலுக்கு முருவன்னு பேர். கருப்பு, முனியாண்டி, காட்டேரின்னு உங்க சாமி இருக்கச்சே, என்னத்துக்கு எங்க சாமிப் பேர வச்சுக்கறேள்? சரிடா இன்னிலேர்ந்து ‘சின்னக் கருப்புன்’னுதான் அவன் பேர். பெரிய கருப்பன் பிள்ளை சின்ன கருப்பு!” என்கிறார்.

இப்படி தங்கள் சொந்த விஷயங்களை யாரோ தீர்மானிக்கும் அவல நிலையில் வாழும் சாதாரண மக்களும், சீரழியும் தேவரடியார்களும்தான் இந்த கிளைக்கதைகளின் நாயகர்கள். இந்த சாதாரண நாயகர்களின் வாழ்க்கையை, மையக் கதையின் அதிகார வர்க்க நாயகர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கொண்டே செல்ல வாய்ப்பளிக்கிறது இந்த நாவல்.

கவர்னர் துய்மாவுக்கு ‘பங்கா'(விசிறி) போடும் ‘குருசு’ என்பவனின் கதை என்னை மிக நெகிழச் செய்தது. அடிமையாய் வாங்கப்படும் அந்த அரைக்கிறுக்கன் எப்படியெல்லாமோ சீரழிந்து கடைசியில் தன்னை கண்டுகொள்கிறான். நம்பிக்கையற்ற இந்த வாழ்வில் ஏதோ அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதைச் சொல்லியது அந்தக் கதை.

ஆற்காட்டு நவாப், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், மராத்தியர்கள், பாளையக்காரர்கள், உள்ளூர் அதிகார மையங்கள் ஆகியோர் ஒருவரோடொருவர் சேர்ந்து கொண்டும் தனித்தும் நடத்தும் அதிகாரப் போட்டிக்கு நடுவில் ‘கொடுக்காப்புளியின்’ நிலம் பறிக்கப்படுகிறது. ‘வெள்ளைப் பூண்டு’வின் விளைந்த நிலம் படைகளால் நாசப்படுத்தப்படுகிறது. விளைச்சலை நம்பியிருந்த மகளின் திருமணம் கேள்விக்குள்ளாகிறது. தாசி கோகிலாம்பாள் கண்ணியமான வாழ்விற்காய் அலைந்து உழல்கிறாள். ஆட்கள் கடத்தப்பட்டு அடிமைகளாய் விற்கப்பட்டு கப்பலில் அனுப்பப்படுகிறார்கள். மோஹனாபாய் தன் கணவனான மராத்திய தளபதி ‘ராகுஜி போன்ஸ்லேயுடன்’ ஊடல் களியாட்டம் புரிவதாற்காக ‘விட்டல் பண்டிதன்’ கேவலமாக அலைக்கழிக்கப்படுகிறான்.

இன்னும் கணக்கற்ற அக்கிரமங்கள்.

‘எவனது ஆட்சிக்காலமும் சாதாரண மக்களுக்கு பொற்காலமாய் அமைந்ததில்லை’ என்பதை பிரச்சாரமின்றி கலை நேர்த்தியோடு அழுத்திச் சொல்கிறார் பிரபஞ்சன்.

‘வானம் வசப்படும்’ -ல் ஒன்றிரண்டு கிளைக்கதைகள்தான் உண்டு.

அவையும் நாவலுக்குள் புகுந்துகொண்ட சிறுகதைளே. நன்றாக மனதைத் தைக்கின்றன அக்கதைகள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பிரெஞ்சுப் படைகளால் உயிரையும், தங்கள் கனவுகளையும் இழக்கும் ஒரு நெசவுக் குடும்பத்தின் கதை. மாரியும் அவள் மகள் மரிக்கொழுந்துவும் அக்கதையின் மையப் பாத்திரங்கள். ஒரு சிறுகதையின் தன்மையில்தான் அந்தக் கதை முடிகிறது.

துய்ப்ளெக்ஸின் மனைவி ழானின் அக்கிரமங்கள், பிரதேசமெங்கும் சூழும் போர் மேகங்கள், வேத புரீஸ்வரர் கோயிலை இடித்தல், அதிகார மையத்தில் இருக்கும் கிறித்தவர்களின் மத துவேஷம், பதிவிக்காக தங்கள் மதங்களைத் துறந்து கிறித்தவத்திற்கு மாறி வேத புரீஸ்வரர் கோயிலை இடிக்க உதவ தயாராக இருக்கும் பிராமணர் மற்றும் உயர் சாதியினர் எனச் செல்கிறது ‘வானம் வசப்படும்’. சுருக்கமாகச் சொன்னால் நாடுபிடித்தலும், பேராசையும், பிரெஞ்சியர்களின்(குறிப்பாக ழானின்) மத துவேஷமுமே ரெண்டாவது நாவலின் முக்கிய அம்சங்கள். ஆனந்த ரங்கரின் அரசியல் தந்திரங்கள், சாமர்த்தியங்கள் அதிகமும் வெளிப்படும் நாவலும் கூட. அவரது சொந்த வாழ்க்கைச் சம்பவங்களும் முந்தைய நாவலைவிட இதில் கொஞ்சம் அதிகம்.

மற்ற நாவல்களை விட இந்த இரு நாவல்கள் வேறுபட்டு நிற்கும் இடம், அவை காட்டும் உண்மையான வரலாற்று பின்புலம். ஆனந்த ரங்கரின் 25 ஆண்டு கால அயராத உழைப்பில் உருவான அவரது ‘நாட்குறிப்புகள்’ எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவு முக்கியம் வாய்ந்தது பிரபஞ்சனின் இந்த நாவல்களும்.

 

2 responses to “வேதபுரத்து வாழ்க்கை

பின்னூட்டமொன்றை இடுக